சிந்திக்கக் கவிகள்-5

வாழ்க மனித அறிவு!                                                              வளர்க மனித அறிவு!!

சிந்திக்கக் கவிகள் – 5

lotus

சிறப்புடைய கவிகள்

10-04-2018-செவ்வாய்

உ.ச.ஆ.10-04-33

Vethathiri_a_Living_Dictionary (2)

தியாகத்தை அடிக்கல்லாகவும்,  திறமையைப் படிக்கல்லாகவும்,  பொறுமையைக் கலசமாகவும் கொண்டு எழுப்பப்பட்ட கோபுரமே வேதாத்திரி மகரிஷியின் படைப்புகள். அவரின் ஆன்மிகத் தேடலும் பாதையும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தற்கரிய வெளிச்சம்.

  • மனித நேயத்தில் அவர் ஓர் இமயம்.
  • தன் ஆற்றலைப் பிறருக்குக் கொடுப்பதில் அவர் வற்றாத நீருற்று.
  • நேர்மையான கடுமுயற்சிக்கு வழிகாட்டி.
  • அரசியல் அறிவுக்கூர்மையர்.
  • வேதாத்திரியக் கவிதைகள் வேதாத்திரியின் இதயத் துடிப்புகள். அவருடைய கவிதைகளைப் பார்த்தால், படித்தால் கேட்டால், சுவைத்தால், உள்ளத்தில் பதிய வைத்தால் தெவிட்டாத இன்பம் பயக்கும்.
  • மகரிசியின் கவிதைகளும் வார்த்தைகளும் வீணை நாதங்கள்.
  • வெள்ளம் வந்தால் அமுங்கிவிடும் நிலத்துச் செடிகள் போலன்றி அழுத்தும் பெருவெள்ளத்திலும் எதிர்த்து மேலே மிதக்கும் குவளை மலர்கள் போன்றன வேதாத்திரியக் கவிதைகள்.

kavi2(ஓரிரு முறை வாசிக்கவும்)

kavi3

பொருள்:
அறிவு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் இவற்றால் இயற்கை தன் வினோதத்தை வெளிப்படுத்துகின்றது. வினோதச் செயல்பாட்டின்போது மனித வாழ்விற்கு இயற்கை சில சந்தர்ப்பங்களைத் தோற்றுவிக்கின்றது. சந்தர்ப்பப் பயன்பாட்டின்போது மனிதனின் வினைப்பதிவுகளுக்கேற்ப வாழ்க்கைச் சிக்கல்கள் சிறிது பெரிதாய்த் தோன்றுகின்றன. சிந்தனையாளர்களின் நுணுகிய அறிவு அச்சிக்கல்களை நீக்கும் தன்மையது. இயற்கை வினோதமும் சந்தர்ப்ப விளைவும், சிக்கல்களைவும் உட்கருத்தாய்ப் பொதிந்துள்ள கவிதைகளே சிறப்புடைய கவிதைகளாகும் என்கிறார் மகரிசி.

இயற்கையின் வினோதம்:
இயற்கை என்பது இயல்பாக மலர்ந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் செயல்கள் இயற்கையின் இயல்பின. அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்னும் மூலதனத்தைக் கொண்டது. பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்க நியதிகளால் இயற்கையினின்று வானகமும் வையகமும் எழுச்சி பெற்றன. இயற்கையின் அதிசயங்களையும், வளங்களையும் பெறுவதற்கு இயற்கையே மனிதனாகித் தன்னுள்ளே வாழவைத்து வினோதம் காட்டுகிறது.

இயற்கை வளங்களை வாழ்வின் வளமாக உருமாற்றியும் அழகுபடுத்தியும் வாழும் இனம் இயற்கையின் வினோதமாகும். மனித இனத்திற்கு வாழ்க்கை அறிவும் செயல்திறமையும்தான் செல்வங்கள். அச்செல்வங்களைப் பெருக்க அறிவு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் ஐந்தும் கருவிகள். இயற்கை ஆற்றலைக் கொண்டே மனிதன் இயந்திரங்களை உருவாக்கினான்.

“அழுத்தமெனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே
அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி”
என்ற மகரிசியின் கூற்று இயற்கையின் விந்தையாகும்.

தான், குடும்பம், சமுதாயம், உலகம் என்ற கூட்டு வாழ்க்கைக்கு அறிவாற்றலும், சுகாதார நலனும், பொருளாதார வளமும், அரசியல் ஞானமும், விஞ்ஞான அறிவும் அவசியமாகின்றது. இவற்றை இயற்கையே மனிதனுக்குக் கற்றுத் தருகிறது. இதையே
“ஐந்தைக் கொண்டு நெறியாக இயற்கையின் வினோதங்காட்டி” (ஞா.க.483) என மொழிந்துள்ளார் மகரிசி.

சந்தர்ப்பங்கள்:
வாழ்வின் நோக்கத்தையும் விளைவுகளையும் அறிய இயற்கை மனிதனுக்குச் சந்தர்ப்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் நான்கு வளங்களில் ஒன்று காலம். செயல்விளைவுத் தத்துவம் காலத்தின் அடிநாதம். இரண்டு அதிர்வுகளுக்கு இடையே அமையும் நீளமே காலம். காலத்தின் அளவினை,

“காலத்தின் நுண்ணலகு கண்சிமிட்டும் நேரம்” – ஞா.க.1789
என மொழிந்துள்ளார் மகரிசி. கண்சிமிட்டும் நேரத்தில் கிடைக்கும் சந்தர்ப்பமே மனிதனை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

“விஞ்ஞான படைப்பெல்லாம் இயற்கையின் முன்உள
ஏதோஓர் நிகழ்ச்சி அதில் சந்தர்ப்ப வசமாய்
விஞ்ஞானி என்போர்க்குக் காணக் கிடைத்தது”
– ஞா.க.1049

என்ற வேதாத்திரி மகரிசியின் கூற்று, சந்தர்ப்பமே விஞ்ஞானி வாழ்வின் திருப்பு முனையாக மாறியுள்ளதைச் சுட்டுகின்றது.
திருவள்ளுவர் சந்தர்ப்பத்தின் தன்மையைக் காலம் அறிதல் என்னும் அதிகாரத்தில்,

“கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து” – (குறள் 490)
என்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் நிலையினை வெளிப்படுத்துவார்.

கொக்கு மீன் வரும்வரைக் காத்திருந்து உரிய மீனையே பயன்கொள்ளுதலை ஔவையார்,
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடியி ருக்குமாம் கொக்கு (மூதுரை 16)
என்ற தொடராட்சியால் புலப்படுத்தியுள்ளார்.

“காலமும் காலம் பார்க்கும்” என்ற தொடர் சந்தர்ப்பத்தின் இன்றியமையாமையை உரைக்கும். சந்தர்ப்பத்தின் மாட்சியினை ஔவையார்,
“……………………….. கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக் கோல்ஒக்குமே”
– (நல்வழி – 4)
எனக் குறிப்பார்.

வேதாத்திரியப் பயிற்சிப் பயனீடுகள் கண்ணில்லாதவன் மாமரத்தில் எறிந்த மாத்திரைக் கோலினால் மாங்காய் விழுதல் ஒப்பன. மனிதகுலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தவமும் அகத்தாய்வும் உடற்பயிற்சிகளும் செய்து வாழ்வின் நோக்கினை நிறைவு செய்தல் வேண்டும் என்பதற்காகவே மகரிசி,
“……………………………. நேரிடும் சந்தர்ப்பங்கள் காலம் ஒப்பச்
சிறிதுபெரி தாய்த்தோன்றும்” – ஞா.க.483
என மொழிந்துள்ளார்.

வாழ்வின் நோக்கம் அறிய இறை உணர்வும் அறநெறியும் பெறுதல் வேண்டும். இதற்கு இறைநிலை தந்த சந்தர்ப்பமே வேதாத்திரி என்ற மகானின் வழிகாட்டல்கள். அவரைத் தொடர்ந்தால் இறைஞானம் இயல்பாகப் பெற இயலும் என்பதை இக்கவி இயல்பாக்கியுள்ளது.

வாழ்க்கைச் சிக்கல்:
அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் இயற்கையை மதிக்காமையும் சிக்கல் தோன்றுவதற்கான காரணங்களாகும். சிக்கல்களைக் களைய கவிதைகள் கலங்கரை விளக்கங்களாக வேண்டும்.
“எண்ணித் துணிக கருமம்”
“நேர்பட வொழுகு” – ஆத்திசூடி 72
“பழிப்பன பகரேல்” – ஆத்திசூடி 76
“பெருமையும் சிறுமையும் தான்தர வருமே” – நறுந்தொகை 30

போன்ற அறக்கருத்துக்கள் மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைக் களையும் வழிகால்கள்.

இயற்கையின் வினோதமாக மலர்ந்த பொருளாதாரம், அரசியல், அறிவியல், சுகாதாரம், மனோதத்துவம் என்ற துறைகள் சில நேரங்களில் செயல் நெறியில் மக்களுக்குச் சிக்கல்களாய்த் தோன்றும். அச்சிக்கல்களை நீக்க வேதாத்திரி,

“சீர்திருத்த முறையினிலே காலத்திற் கேற்பச்
சிக்கனத்தை வாழ்க்கையிலே செயலாக்கி உய்ய
சிந்தனையைப் பேரியக்கத் தொடர்களத்தில் செலுத்திச்
சிக்கல்களை அகற்றி மெய்யறிவு பெறச் செய்வோம்”
– ஞா.க.287
எனச் சிக்கல் களையும் விதம் உரைப்பார்.

எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு இயற்கையிலேயே உள்ளன. ஒவ்வொரு சிக்கலையும் வெற்றிகொள்ள அறிவே ஆதாரமாகும். ஏனெனில் இயற்கை என்ற பேரறிவே சிற்றறிவாக மனிதனிடம் உள்ளது. ஆதலால்தான் அறிவு, சிக்கல்களையும் கருவியாக்குகிறது. பஞ்சபூதக் கூட்டான உடலை மதித்து அறவழியில் வாழும்போது சிக்கல்கள் நீங்கும்.

சிந்தனை:
கவிஞனுக்கு மூலப்பொருள் சிந்தனை. “எண்ணமே வாழ்க்கையின் சிற்பி” என்பார் வேதாத்திரி. “சிந்தனை செய்மனமே” எனும் தொடர் சிந்தனையின் மாட்சியைப் பேசும். 120 கோடி மக்களிடம் உள்ள கருத்துக்களையும் சிந்தனையால் ஒன்றுபடுத்த முடியும். இதனையே,
“முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள் – இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்”
– பாரதியார் கவிதைகள் 16

சிந்தனையே வாழ்க்கை. சிந்தனை இல்லாத வாழ்க்கை நீரில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது. வற்றா இருப்பினதான இயற்கை வளருவதுமில்லை, குறைவதுமில்லை. அது பேராற்றலானது. அவ்வாற்றலைத் தன்னகத்துக் கொண்டே மனிதன் சிந்திக்கவில்லை என்றால் வாழ்க்கையில் வளர்ச்சியில்லை.

கவிஞர்கள் தங்களது அனுபவங்களையும் சிந்தனைகளையும் கற்பனைகளையும் கவிதைகளில் வெளிப்படுத்துவார். தான் அடைந்த துன்பங்களையும் இன்பங்களையும் கண்ட நிகழ்வுகளையும் உலக மக்களுக்காகப் பதிவு செய்வர். அப்பதிவுகளை வாசகர் பெறும்போது தானும் அவற்றைப் பெற விழைவர். மகரிசியின் கவிதைகள் அத்தகையனவே.

சங்க இலக்கியத்தில், “பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு” என்ற தொடரும் அஃறிணை உயிர்களின் அன்புக் காட்சிகள். இக்காட்சிகள் கவிஞனின் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி.

இராவணனின் துன்பத்தினைக் கவிஞன்,
“கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கைவேந்தன்”
எனப்பதிவு செய்துள்ளார். இங்கு கடன்பட்டவரின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டும் கவிஞரின் சிந்தனை போற்றுதற்குரியது.

“கடன் என்ற புண்ணாகி
வட்டி எனும் சீழ்பிடித்துப் புரையும் ஓடி” – (ஞா.க.80)

“வாங்கும் கடனும் தேங்கும் பணமும்
வளர வளர வாழ்வைக் கெடுக்கும்”. – (ஞா.க.81)

என்பன பாமரரும் எளிதில் புரியும் படியாக எழுதிய பாமர ஞானியின் வைர வரிகள். இவ்வரிகள் மக்கள் விழிப்பு நிலையிலிருந்து தன் வாழ்வைச் செம்மைப்படுத்த செதுக்கிய கவிதை உளி.

கவிஞனின் சிந்தனை என்பது சமுதாயம் நோக்கிய பார்வையாக அமைதல் வேண்டும். அது சமுதாயம் நோக்கிய செறிவுள்ள கருத்துக்களாக அமையும்போது கவிஞனை உலக அரங்கில் மாட்சிமைப்படுத்தும் அத்தகு கவி வலவனே வேதாத்திரி மகரிசி எனின் மிகையன்று.

இயற்கை என்ற தத்துவத்திலிருந்து எந்த ஒரு பொருளையோ இயக்கத்தையோ காட்சியையோ பிரிக்க இயலாது. உலகில் இயற்கைக்கு அப்பாற்பட்டது என எதையும் கூற இயலாது. இயற்கையிலிருந்து கவிஞன் விசுவரூப தரிசனத்தைக் காண்கிறான். தன்னை பிரபஞ்சமாக உணருகிறான். அதனால் அவன் உணருபவன், உற்பத்தி செய்பவன், நுகர்பவன், பெறுபவன், அறிவுறுத்துபவன், வழங்குபவன், செயல்படுபவன், என அனைத்துமாகத் திகழ்கிறான். இத்தகு சிறந்த தன்மைகள் அனைத்தையும் கொண்ட கவிஞனே வேதாத்திரிய கவிஞன். இக்கவிஞனின் தன்மையே ஆன்மிகக் கல்வியின் களஞ்சியமாக உள்ளது.

வாழ்க வேதாத்திரியம்.                                    வளர்க மானுடம்.

வினாக்கள்:
1. இயற்கையின் வினோதம் என்பது என்ன?
2. மனிதனுக்குச் சந்தர்ப்பங்களைத் தருவது எது-
3. சிக்கல்களைக் களைய எது ஆதாரம்?
4. வாழ்க்கையின் சிற்பியாக மகரிசி எதனைக் குறிப்பிடுகிறார்?
5. விஞ்ஞானியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைவது எது?
6. கவிஞனின் சிந்தனை எதனை நோக்கியப் பார்வையாக அமைதல் வேண்டும்?

வாழ்க அறிவுச் செல்வம்!                                          வளர்க அறிவுச் செல்வம்!!