சிந்திக்க அமுத மொழிகள் – 332-சுயமாய் சிந்தி!

வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

 

சிந்திக்க அமுத மொழிகள் – 332

 

    02-04-2022 — சனி

சுயமாய் சிந்தி!

எல்லாம் வல்ல தெய்வமது.  எங்கும் உள்ளது நீக்க மற.  சொல்லால் மட்டும் நம்பாதே. சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!”

                                                             — வேதாத்திரி மகரிஷி

பயிற்சி—

1. தெய்வம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அப்படியே நம்புவது சரியில்லையா?

2. மகரிஷி அவர்கள் கூறுவதை நம்பவேண்டாம் என்று அவரே எச்சரிப்பது வியப்பாக இருக்கின்றதல்லவா? ஏன் அவ்வாறு கூறுகின்றார்? 

3. காரணம் இல்லாமலா இருக்கும், சிந்திப்போம்.  அந்தக் காரணத்தை  அறிவதற்கும்  சிந்திப்போம் என்றுதான் கூறுகிறோம்!  ஆறாம் அறிவின் உச்சமான சிறப்பான சிந்தனை ஆற்றல்  தடத்தை(pondering channel) திறக்கச் சொல்கிறாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?!

4. தெய்வம் பற்றி கூறிவிட்டு ஏன் சுயமாக சிந்தித்துத் தெளிவு பெறச்சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

5. சிந்தித்தல் என்றால்  எவ்வாறு சிந்திக்க வேண்டும்?  அதனைக் கூறவில்லையே! எங்கிருந்து சிந்தித்தலை ஆரம்பிக்க வேண்டும்?  எங்கு முடிக்க வேண்டும்?

6. முதலில் சிந்தித்தல் மீது தீராத ஆர்வம் கொள்ள வேண்டுமல்லவா?

7. அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய இரண்டில் மட்டுமே இயங்கும் எண்ணத்தை பிராணமயகோசத்திற்கு கொண்டு வந்து பிறகு விஞ்ஞாணமயகோசத்திற்கு கொண்டு வருவதற்கு  சுயமாய்ச் சிந்திக்கச் சொல்கிறாரா? 

7. சிந்தித்தலை அவர் எவ்வாறு ஆரம்பித்தார் என்பதனைக் கவனித்தால் நாமும் சிந்தித்தலை அவ்வாறே ஆரம்பிக்கலாம் அல்லவா?

8. சிறு வயதிலேயே அவருக்குள் எழுந்த மகானாக்கிய நான்கு மகோன்னத கேள்விகள் இருக்கின்றனவே. அவற்றையே நாம் சிந்தித்தலுக்கு ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாமன்றோ?

9. சிந்தித்தலால் தெளிவு பெறச்சொல்கிறார். நம்பிக்கை வேறு,  தெளிவு வேறா?  தெளிவு என்றால் என்ன?  தெளிவின் பயன் என்ன?

10. தெய்வம் பற்றி அறிவதற்கு மட்டுமா சிந்தித்தலை பயன்படுத்த வேண்டும்? மானுடவியலைப் பற்றி அவர் கூறியவற்றை உறுதிபடுத்துவதற்கும் பயன் படுத்தவேண்டுமா?

11. சிந்தித்தலை எவ்வாறு அவரிடமிருந்து கற்றுக்கொள்வது? அவருடன் இணைந்தால் கற்றுக்கொள்ள முடியுமா?

12. இப்போது அவர் இல்லையே இப்புவியில்! எவ்வாறு அவருடன் இணைந்துகொள்வது?

13. அவருடைய சிந்தனை ஆற்றலைப் போற்றி, மகிழ்வுற்றால் அவருடன் இணைப்பு கிடைத்துவிடுமா?

14. தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் வாழ்ந்த காலத்தில் பிறவாத மகரிஷி அவர்கள் எப்படி அம் மூவரையும் குருமார்களாகக் கொண்டார்?

15. அதே யுக்தியை நாமும் பயன்படுத்தலாமன்றோ?!

16.எவ்வளவு காலம் தேவை தெய்வத்தைப் பற்றி சுயமாய்ச் சிந்திக்க ஆரம்பித்து சிந்தித்தல் முடிந்து தெளிவு பெறுவதற்கு? சிந்தித்தலுக்கு முடிவு என்று ஒன்று இருக்கின்றதா?

      16.1.ஒரு நொடி போதுமா? 

     16.2. ஒரு மணித்துளி போதுமா?

     16.3. ஒரு வாரம் போதுமா? 

    16.4. ஒரு மாதம் போதுமா? 

    16.5. ஒரு வருடம் போதுமா? 

    16.6. இந்தப்பிறவிக்காலம் போதுமா? 

     16.7. செயலற்று/உறங்குகின்ற(dormant) சிந்தினை  ஆற்றல் தூண்டப்பட்டு விழித்தெழுவதைப் பொருத்து கால அவகாசம் மாறுபடுமா?

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!


வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

 

வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!