சிந்திக்க அமுத மொழிகள் – 341-இணையதள பதிவேற்றம் – 1015

வாழ்க வையகம்!                                                                               வாழ்க வளமுடன்!

 

சிந்திக்க அமுத மொழிகள் – 341

இணையதள பதிவேற்றம் – 1015

                                                                                                                                                 நாள்:  23-04-2025                                                                                                                               உ.ச.ஆண்டு:  23-04-0040

                            வள்ளலாரின் கடைசிச் செய்தி — உலக சமுதாயத்திற்கு

                               நேற்றைய (22-04-2025) சிந்தனையின் தொடர்ச்சி…

 

வாழ்க வளமுடன்!   

சிந்தனையைத் தொடர்வோம்.  வள்ளலார் அவர்கள் தனது பூதல உடலின்   மறைவிற்குப்(1874  ஆம் வருடம்) பிறகு நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, அவர் சுமாா் 42 வயது இருக்கும் போது அருள்பாலித்தார். அதாவது 1953(1911+42=1953) ஆண்டில் அருள்பாலித்துள்ளார் என அறியமுடிகின்றது. அருள்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் தான் எழுதியக் கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார் மகரிஷி அவர்கள்.  வள்ளலார் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம், தனது உடலைக் கொண்டு வள்ளலார் முடித்துக் கொண்டார் என மகரிஷி அவர்கள் ‘எனது வாழ்க்கை விளக்கம்’  எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.   வள்ளலார் பல சந்தர்ப்பங்களில் தன்னோடு  இருந்து வழிகாட்டி, செயலாற்றியிருக்கிறார் என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்.  

                 மகரிஷி அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ள கவியினை இங்கே நினைவு கூர்வோம்.

   வள்ளலார் அருள்(05-12-1986)

                             “என்று என்னை இராமலிங்க வள்ளற்பெரு மானார்

                                  எதிர் நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ

                              அன்றுமுதல், உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே

                                  அர்ப்பணித்து விட்டேன்என் வினைத் தூய்மை யாச்சு

                              இன்றுஎந்தன் மனநிலையோ, வள்ளற் பெருமானார்

                                  எந்தச்செயல் செய்யென்று உணர்த்து வாரோ, அதுவே

                             நன்றுஎனக் கொண்டவற்றை, நான்முடிக்கும் பேற்றால்

                                நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்.”  (ஞா.க.க.எண் 711)

                                                                                                             …   வேதாத்திரி மகரிஷி.

           அதாவது   வள்ளல் பெருமகனார் தனது பூதஉடலின் மறைவிற்குப் பிறகு சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு  (1953-1874=79)    தனது கடைசிச் செய்தியின்படி   மகரிஷி அவர்களுக்கு  அருள்பாலித்துள்ளார்.   

            இதிலிருந்து அறியவேண்டியது யாதெனில் மரணத்திற்குப் பின் உயிரின் நிலை பற்றி அறிய முடிகின்றது.     மகரிஷி அவர்களின் மற்றோர் கவியினையும்  நினைவு கூர்வோம்.

                                           பேரறிஞர் வழி செல்வோம்(10.08.1981)   

                                  “அருவுருவாம் அகத்ததனை விளக்கி வாழ்வில்

                                       அல்லல் கலைந்து அமைதிபெற்று  மக்கள்உய்யக்

                                    கருவிளக்கி மனவளத்தைப் பெருக்கிக் காக்கும்

                                       கலையதனைக் கவி மூலம் விரித்துரைத்த

                                   திருமூலர், வள்ளுவனார், இராம லிங்கர்

                                      திருவருளார், மணிமொழியார், தாயு மானார்,

                                   பெருநோக்கப் பயன்விளக்கி உலகம் உய்யப்

                         பேரறமாம் அருட்தொண்டில் பங்கு கொள்வோம்.”…(ஞா.க.க.எண் 13)

                                                                                                             … வேதாத்திரி மகரிஷி.

         அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய  பேரறிஞர்கள் வழி சென்று அருட்தொண்டில் பங்கு கொள்வோம் என்கிறார் மகரிஷி அவர்கள். நாமும் அவ்வகையில் வள்ளல் பெருமகனார் கூறிய கடைசிச் செய்தியை நினைவில் கொள்வோம்.  ‘ தானே தனது செயல்களைச் சோதனை செய்து விளைவைக் கணித்து  திருத்தம் பெறும் வெற்றியே  அகத்தாய்வு’ என்கிறார் மகரிஷி அவர்கள். அதுபோன்று நம்மையும் திருத்திக் கொண்டு, அதே  வேளையில்  உலக சகோதர – மக்களையும் திருத்துவதற்கு அறிவுத்தொண்டு செய்து வாழ்வோம்.

         இதுமட்டுமின்றி மேலும்  சிந்தித்து  செயல்பட வேண்டியதை அவரவர் நிலைக்கேற்ப அவரவர் சிந்தித்துப் பயன்பெறுவோமாக!

                      வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

                                        வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

                                    வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!

 

 

 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments