FFC – 275 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 10/?

          வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

 lotus

செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 10/?

 FFC – 275 

அ.வி. 275   

                                                             13.12.2017- புதன்

கருமையம்

(பாகம்-5)

[rev_slider home-slider-1]

 வாழ்க வளமுடன்!

               சென்ற அறிவிற்கு விருந்தில் கவிகளின் சிறப்பை அறிந்து, கருமையத் தூய்மை பற்றி மகரிஷி அவர்கள் அருளிய பாடலின் உட்பொருளை விரிவாக அறிந்து கொள்ளத் தொடங்கி, கருமையத்தூய்மையைக் கெடுக்கும் செயல்களான

  1. கறை படுத்தும் எண்ணம்
  2. நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்.
  3. நெஞ்சம் மனம் பேச்சு இடை பிணக்காகும் பொய்கள்.
  4. மறைமுகமாய் நேர்முகமாய் பிறர்உளம் வருத்தல் ஆகிய நான்கு காரணிகளை ஆராய்ந்தோம்.

இன்று

5. மற்ற உயிர் சுதந்திரமும் வாழ்வின் வளம் பறித்தல்,

6. நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல்,

7. மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு,

ஆகிய மூன்று காரணிகளையும் ஆராய்வோம்.

                          5. மற்ற உயிரின் சுதந்திரமும், வாழ்வின் வளமும் பறித்தல்

விலங்கினப்பண்பு செயலற்றுவிட வேண்டும்:

         விலங்கினத்திலிருந்து இயற்கை/இறை, தன்னை (இறையை) உணர்ந்து கொள்வதற்காக மனித இனமாக, தன்மாற்றம் அடைந்துள்ளது. இறையை உணரவேண்டுமெனில் கருமையத்தில் உள்ள விலங்கினப்பண்பு மறைய வேண்டும். விலங்கினப் பண்பு மறையவில்லை எனில் மனிதனின் கருமையம் தூய்மை அடையவில்லை என்றுதானே பொருள்? எந்த ஒரு பதிவும் கருமையத்தை தூய்மை செய்கின்றது என்றால் அது இறைஉணர்வை ஏற்படுத்துவதாகவும், இறைஉணர்வை தாமதப்படுத்தாமலும், இறை உணர்வை துரிதப்படுத்துவதாகவும் அல்லவா இருக்க வேண்டும்? இறை உணர்வு பெறுவதனை தாமதப்படுத்துவதாகவும் அல்லது தடுப்பதாகவும் இருந்தால் அது கருமையத்தூய்மையைக் கெடுக்கின்றது என்று தானே பொருள் கொள்ள வேண்டும்?

6.  நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல்

நிறைமனம் அயரா விழிப்புணர்வோடு இருக்க. . . :

        நிறை பொருளே மனமாக இருப்பதால்கருமையத் தூய்மை அடைந்து வர வர குறுகிய நிலையில் சுருங்கி இருந்த மனம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவினை எய்தி வரும். இறைஉணர்வின் அடையாளமாக மனம் நிறைபொருளாகி நிறைமனமாக ஆக வேண்டும். ‘தான்’, ‘தனது’ நீங்கிய மனம்தான் நிறைமனமாக இருக்க முடியும். அப்போதுதான் நிறைமனம் விழிப்போடு இருந்து கொண்டு எந்த வகையிலும் துன்பம் தரக்கூடிய செயல்கள் புரியாமல் இருக்கும். அவ்வாறிருக்கையில், சினம், வஞ்சம் ஆகியவை ‘தான்’, ‘தனது’ என்கின்ற இருதம்பதிகளுக்கு பிறந்த அவலக்குழந்தைகள் என்கின்றபோது சினமும், வஞ்சமும் நிறைவை அளிக்கக் கூடிய கருமையத்தூய்மையை அல்லவா கெடுக்கும்? நிறை பொருளே மனமாகியும், மனதை நிறைபொருளால் நிரப்பமுடியவில்லை. இதுவும் விந்தையிலும் விந்தையாகவே உள்ளது.

7. மேலும் நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு 

இன்பதுன்ப அறிவியலின் சாம்யம்:

    மகரிஷி அவர்களை பின்னாளில் மகானாக்கிய நான்கு மகோன்னத வினாக்களில் ஒன்று ‘இன்பதுன்பம் ஏன் வருகின்றது’ என்பதுவும் ஒன்று. இன்பதுன்பத்தைப்பற்றி அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுக்கமுடிந்ததால்தான் ‘ஆன்மிகத்திற்கு ஆசை கூடாது’ என்று இருந்து வந்த தவறான கருத்தில் தெளிவினை ஏற்படுத்துமாறு இச்சையைப்பற்றி 1957 ஆம் ஆண்டே எண்பது வரிகளைக் கொண்ட பாடல் இயற்றமுடிந்தது. ஞானக்களஞ்சியம்- கவி எண் 493 ல் கூறப்பட்டுள்ளதுபடி இறை மகரிஷி அவர்களின் உள்ளத்தில் இச்சையைப் பற்றிய உண்மை-கருத்தாய் மாறி உருண்டுருண்டு வார்த்தைகளாய்க் கவிகளாகி, எண்பது வரிகளில் பாடலை இயற்ற வைத்துள்ளது. இன்பமே துன்பமாக மாறுகின்றது என்கின்ற உண்மையைக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள்.

   ‘இன்பம் புறப்பொருட்களில் இல்லை’ என்கின்றன வேதங்கள். ஆனால் அதனை அறிவியல் ரீதியாகக் கூறவில்லை. ஏனெனில் அறிவியல் வளராத காலத்தில் எழுதப்பட்டன வேதங்கள். அறிவியல் வளர்ந்த காலத்தில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் இன்பதுன்ப நிகழ்வை அறிவியலாக்கியுள்ளார். இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்று அறிவியல் ரீதியாக எடுத்துரைக்கின்றார் மகரிஷி அவர்கள்.

 அந்த அறிவியல் கண்டுபிடிப்பில் உருவானதுதான் ‘அளவும், முறையும்-Limit and Method’ என்கின்ற சாம்யம்(Formula). இந்த கண்டுபிடிப்பினைக் கருத்தில் கொண்டுதான் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தும் அளவோடும், முறையோடும், காலத்தோடும் இருக்க வேண்டும் என்கிறார்.   அளவும், முறையும், காலமும் நெறி தவறினால் அங்கே ஒழுக்கம் கெடும். ஒழுக்கம் கெடும் செயல்கள் கருமையத்தூய்மைக்கு பங்கம் விளைவிக்கும். ஆகவே நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு ஆகியவை கருமையத்தூய்மைக் கெடுக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

 கருத்தொடு சீர்செய்வோம்:

     கருமையத்தூய்மை என்கின்ற பாடலிருந்து கருமையத் தூய்மையைக் கெடுக்கும் செயல்களை அறிந்து கொண்டோம். பாடலில் கருமையத்தைக் களங்கப்படுத்தி விடும் செயல்களை எடுத்துரைத்ததோடு, அவற்றை எவ்வாறு ‘கருத்தொடு சீர் செய்வது’ என்றும் கடைசி வரியில் கூறுகிறார் மகரிஷி அவர்கள். சீர் செய்வது என்று கூறியிருக்கலாம், ஆனால் ‘கருத்தொடு சீர்செய்வோம்’ என்கிறார். ‘கருத்தொடு’ என்றால் என்ன பொருள்? கருத்தொடு என்றால் ஒரு பொருள் பற்றி முறைபடுத்தப்பட்ட சிந்தனை என்று பொருள். மேலும் மிகவும் கவனத்துடன்(serious attention) என்றும் பொருள். ‘சீர்செய்வோம்’ என்கிறார். ‘சீர்’ என்றால் என்ன பொருள் என்பதனையும் அறிந்து கொண்டு அவ்வாறே கருமையத்தூய்மை செய்வதில் அக்கறை கொள்ள வேண்டும். ‘சீர்’ என்றால் இயல்பான தன்மை, ஒழுங்கு(regularity, orderliness) என்று பொருள். இயல்பான தன்மை, ஒழுங்கு என்றால் என்ன என்று அறிந்து கொண்டு நம்மை சீர் செய்து கொள்ள வேண்டும். இறையே தன்மாற்றம் அடைந்து மனிதனாக வந்துள்ளது.   அவ்வாறிருக்க மனிதனின் இயல்பான தன்மை என்பது அமைதி, தெய்வீகம். ஒழுங்கு என்பதுதான். ஆதிநிலையில் பேரறிவாக இருந்தது உயிரற்ற சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாக திகழ்ந்தது.ஒழுங்காற்றலாய் திகழ்ந்த பேரறிவேதான் மனிதனிடம் ஆறாம் அறிவாகத் திகழ்கின்றது. எனவே மனிதன் தன்னை சீர் செய்து கொள்ள வேண்டும் என்றால் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பொருள்.

இறையைத் துன்படுத்துவற்கு ஒப்பான செயல்:

  ‘கல்லார் கற்றார் செயல் விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்று மகரிஷி அவர்கள் கூறுவது போன்று நமது அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய மூன்று அறிவின் ஏழ்மைகளால் இறையேதான் துன்பப்படுகின்றது.  அத்வைதியாக வேண்டுமென்றாலும் கூட  இறைமீது காதல் கொள்ள வேண்டும்.  பக்திமான்கள் தெய்வத்தின் மீது காதல் கொள்வதில்லையா? 

    அதனை இங்கே அத்வைத பயிற்சியில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றபோது, மனிதனின் தவறான செயல்களால் தன்னையும், பிறரையும் துன்பப்படுத்துவது என்பது,  தன்னுள்ளும், பிறருள்ளும் வீற்றிருக்கின்ற உத்தமனை(இறையை)  அல்லவா துன்பப்பட வைப்பதற்கு ஒப்பாகிவிடும்?  இறைவன் மீது அன்பு உள்ளவர்கள் அச்செயலை செய்யமாட்டார்கள் அல்லவா?

 அறிவின் ஏழ்மையை சரிசெய்து கொண்டு அறிவுச் செல்வத்தை வளர்த்துக் கொண்டு நாமும் பயன் பெற்று சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்பதே மனவளக்கலையை அமைத்துக்கொடுத்த இயற்கையின்/இறை நோக்கம்.

   கருமையத்தூய்மை என்கின்ற தலைப்பில் உள்ள பாடல் எட்டு வரிகள்தான். ஆனால் அதன் உட்பொருள் எத்தனை வரிகளாக பரிணமித்துள்ளது?  உட்பொருள்  எவ்வாறு இத்தனை வரிகளானது? காரணம் கவிகள் அருளாளர்களின் அனுபவ-உண்மைக் கண்டுபிடிப்பின் சுருக்கிய வடிவம்(CONDENSED FORM). எனவே ‘கவிகளின் வரிக்கு வரி பொருள் காண்பதைத் தவிர்த்து வரிகளுக்கு இடையேயும்(in between lines) உள்ள பொருளையும் அறிந்து கொள்வதால் எட்டு வரிகள் கொண்ட கவியின் பொருள் அதனைவிட பன்மடங்கு வரிகளைக் கொண்டதாக அமைந்துவிட்டது. அறிஞர்களின் அமுத மொழிகள்(golden sayings) அபயம் தரக்கூடியவை என்கிறார் ஓர் அறிஞர்.  அமுத மொழிகள் என்றால் ஓரிரு வரிகள் தான் இருக்க வேண்டும் என்பது  கிடையாது.  அறிஞர்கள் தான் கண்டுபிடித்ததை சமுதாய நலன் கருதி அறிவிப்பது (மொழிவது) அனைத்துமே அமுத மொழிகள் தான்.  அப்படிக் கருதும்போது கவிகளும் அமுத மொழிகள்தான்.

 ஐயம் எழலாம்!  

                பல்லாயிரம் பிறவிகளில் ஏற்ற பழிச்சுமைகளை இந்த ஒரு பிறவியிலேயே மாற்றி தெய்வநிலையை உணர்ந்து கொள்ள முடியுமா என்கின்ற ஐயம் எழலாம்.  இந்த ஐயம் கொண்ட எண்ணம் இயற்கையின்/இறையின் காதுகளுக்கு எட்டியிருக்கின்றது. எனவே அந்த நியாமான ஐயத்தைப் போக்கும் முகத்தான் மகரிஷி அவர்களின் வாயிலாக வினைப்பதிவுகள் தூய்மை என்கின்ற தலைப்பில் பாடலை அருளியுள்ளது.  அப்பாடலை நினைவுகூர்வோம்.

Scientist of Consciousness

this_birth_is_enough_for_liberation

      இப்பாடலின் வாயிலாக இயற்கையே/இறையே மனிதசமுதாயம் தனது பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவித்து வாழ்வதற்கான நம்பிக்கையையும்,  ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது.

 இப்பிறவியிலேயே முடியுமா என்கின்ற ஐயம் எழக்காரணம் என்ன?

    பழக்கப் பதிவின் காரணமாக விளக்கப்பதிவை நடைமுறைக்கு கொண்டுவரமுடிவதில்லை.  பழக்கப்பதிவே விளக்கப்பதிவினை வெற்றி கொள்கின்றது. ஏனெனில் பல ஆயிரம் பிறவிகள் ஏற்ற பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலேயே மாற்றி அமைக்கலாம் என்று மகரிஷி அவர்களின் வாயிலாக அறிவித்த பேரறிவே பழக்கப்பதிவு விளக்கப்பதிவை வெற்றி கொள்கின்ற அறிவியலையும் கூறியிருக்கின்றது.  அது என்ன? ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன் என்கின்றது’ அந்த அமுத மொழி. 

   ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன்‘ என்பதனைக் கண்டுபிடித்த பிறகே,  அதற்கானத் தீர்வாக வினைப்பதிவுகள் தூய்மை என்கின்ற பாடல் அருளப்பட்டுள்ளது.

 அழுகணி சித்தரில் விளக்கப்பதிவே வென்றது: 

      அருளார்களுக்கும்  ஆன்மிகத்தில் வெற்றி பெறுவதில் சிரமங்கள் இருந்திருக்கின்றன.  1911 பிறகு ஆன்மிகத்தில் ஒரு திருப்புனை ஏற்படும்போது வருங்கால சமுதாயத்திற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின்  வாயிலாக எடுத்துக்காட்டுவதற்கு  அழுகணி சித்தரின் அனுபவத்தை அவர் தம்  திருக்கரங்களாலேயே கவி ஒன்றின் மூலம் அருளியுள்ளது இறை என்றால் மிகையாகாது.  அப்பாடலை இப்போது நினைவு கூர்வோம்.

     கருவில் திருஉடையவர்களுக்கு கருமையத்தை தூய்மை செய்வது எளிமையானதுதான்.  ஆனால்  கருவில் திரு அல்லாதவர்கள்  கருமையத்தூய்மையை எய்துவதற்கு பழக்கம் ஒருவேளை  எதிரியாகவும், தடையாகவும் இருக்கலாம். ஆனாலும் அழுகணிசித்தரைப் போன்று  பழக்கப்பதிவை விளக்கப்பதிவைக் கொண்டு வென்றெடுக்க வேண்டும்.  ஞா.க. க.எண். 493 ல் உள்ள உண்மை, வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் மகரிஷி அவர்களின் மூத்தவரான அழுகணிச்சித்தருக்கும் பொருந்துமன்றோ!  எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு கவி மின்னல்போன்று வெளிப்படுத்துகின்றதோ, அதுபோல் அழுகணி சித்தருக்கும், அவர் வழியாக வருங்கால சமுதாயத்திற்கும்  ஒரு பாடலை அறிவித்திருக்கின்றது. அதனை நாம் நினைவு கூர்வோம்.  இப்பாடலை மகரிஷி அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டி நினைவுகூர்வது வழக்கம்.  எனவே நாமும் அழுகணி சித்தரின் பாடலை நினைவு கூர்வோம்.

 காட்டானை மேலேறிக் கடைதெருவிலே போகையிலே

    நாட்டார் நமை மரித்து  நகைபுரியப் பார்ப்பரன்றோ

  நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்

காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிர காண்பேனோ? 

      இப்பாடலுக்கான விளக்கத்தையும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் ஏன் என்பதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(17-12-2017-ஞாயிறு) அறிந்து கொள்வோம்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்