October 2014

Monthly Archives

  • சி.ப. (த) – எண்.1- 01

    28-Oct-2014

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    இப்பயிற்சியின் நோக்கம்

    “அறிவிற்கு விருந்து” ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இது அறிவிற்கு விருந்தாகவும் மட்டுமல்லாது, சிந்தனையையும் மேலும் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு அவற்றிற்கான விடைகளைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினா (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளது.

    இந்த வினாவையே சிந்தனையாகக் கொண்டு விடையைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்வியினைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். பயிற்சிக்குள் செல்வோம்.

    பயிற்சிக்குள் செல்வோம்: நாள் – 28-10-2014

    சி.ப. (த) – எண்.1- 01

    சிந்திக்க — வினாக்கள்
    1. இறை(இறைவன்) எங்கும் நிறைந்துள்ளது. அப்படியானால் மனிதனிடம் இறை எவ்வாறு இருக்கின்றது?
    2. எல்லா ஆன்மாக்களுமே தெய்வீகமானது? எப்படி?
    3. இறை வழிபாடு மனிதனுக்கு அவசியமா? ஏன்? இறைவழிபாட்டில் விஞ்ஞானம் ஏதும் உள்ளதா?
    4. இறையை நேசித்தல் மனிதனுக்கு அவசியமா? உருவமில்லாத இறையயை எப்படி நேசிப்பது? ஒரு வேளை நீங்கள் இறை உருவமுள்ளது என நம்பினால் நீங்கள் உண்மையாக இறையை நேசிக்கிறீர்களா? அப்படியானால் எப்படி ? இல்லையென்றால் ஏன்?
    5. உயிர் அழிக்க முடியாததா? ஆம் என்றால் ஏன் உயிர் அழிக்க முடியாததாக உள்ளது? எது மனிதனிடம் உயிராக உள்ளது? QTP (E) – NO.1- 01
    QUESTIONS TO PONDER
    1. God is omnipresent (present everywhere). If so how is God present in human beings?
    2. Every soul is Divine. How ?
    3. Is worship necessary for man? Why? Is there any scientific basis?
    4. Is loving God necessary for man? How can formless God be loved? In case if you believe God having form do you really love God? If so how ? If not why ?
    5. Is life force in man not destructible? If yes, why is it not destructible and what is life force in man?
  • சிந்திக்கக் கவிகள்- பயிற்சி-1

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்கக் கவிகள்- பயிற்சி–1

    நாள்: — 28-10-2014

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி, மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள். ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள் இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள். மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

    கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம். கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள். எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்.

    கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது, அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி என்றால் வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப்பெருங்கடலை நீந்தி பிறவிப்பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

    நல்ல கவி, கவியின் சிறப்பு, சிறப்புடைய கவிகள், கவியின் பெருமதிப்பு, கவியின் ஆயுளும் எண்ணிக்கையும், கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல், கவியின் ஆற்றல், அருட்பா, பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும். கவிகள் எவ்வாறு வருகின்றன?. கீழ்த்தரமான கவிகள், கவிகள் பொதுச் சொத்து. நிறைவாய் இருக்க ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார்.
    கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.
    பேச்சினைப் பெய்கின்ற மழையோடும், எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும், கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார், இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.
    கவியின் பெருமதிப்பு (1954)

    ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய
    ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி
    பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம்
    பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம்
    உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை
    ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம்
    பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும்
    பேரோட்ட முடை சீவநதி போலாகும்

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும். கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும். . கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும். அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள்.. மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேலாகக் கவிகள் எழுதியுள்ளார்.

    கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.
    கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெருவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

    அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார். அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு, அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும், மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனைஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும். அவர்களின் கவிகளை வாசிப்பதும், நினைவில் கொள்வதும், உட்பொருளை நினைவில் கொள்ளுதலும் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.

    இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே ”அங்கிங்கெனாதபடி” எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.
    திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்? அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன, எனவேதான் மகரிஷி அவர்கள், அவர்களது சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார், ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அவா்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

    கவிகளால் சிந்தனை வளம் பெருகும். ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில் ”சிந்திக்கக் கவிகள்“ என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    *****

    பயிற்சிக்குள் செல்வோம். நாள்: — 28-10-2014
    சிந்திக்கக் கவிகள்
    சி.க.எண்- 03-01
    இன்றையக் கவி – இனியது எது?

    சிந்தனைப் பயிற்சியில் மூன்றாம் பயிற்சியான ”சிந்திக்கக் கவிகள்” பயிற்சிக்கு இன்று எடுத்துக் கொள்ளும் கவி அவ்வையார் இயற்றிய கவி. ”சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ” என மாடு மேய்க்கும் இடையனாக வந்து முருகன் அவ்வையை நோக்கி கேட்டார் என்கின்ற கதையில் முருகன் ”உலகில் கொடியது எது? இனியது எது? பெரியது எது? அரியது எது? என்று பல கேள்விகள் கேட்டார் என்கின்ற சம்பவம் வருகின்றது. அதற்கு விடைகளாகப் பாடல்களை அவ்வையார் பாடினார் என்பது கதை. அதில் ”இனியது எது” என்கின்ற பாடலை இன்றையச் சிந்திக்கக் கவிகள் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வோம்.

    இனியது எது?
    இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
    இனிது ! இனிது ! ஏகாந்தம் இனிது !
    அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்;
    அதனினும் இனிது ! அறிவினர்ச் சேர்தல்;
    அதனினும் இனிது ! அறிவுள்ளோரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே !

    பொருள்: முருகன் கேட்டது இனியது எது என்கின்ற ஒரு கேள்விக்குப் பதிலாக நான்கு இனியவைகளை கூறுகிறார் அவ்வையார். அவ்வையார் கூறும் இனியவைகளை அதன் அளவிற்கேற்றவாறு வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

    1) ஏகாந்தம் இனிது.
    2) அதனினும் இனிது ஆதியைத் தொழுவது.
    3) அதனினும் இனிது அறிவினரைச் சோ்ந்திருத்தல்.
    4) அதனினும் இனிது அந்த அறிவுள்ளோரைக் கனவிலும், நினைவிலும் காண்பது தான்.

    இந்த நான்கு இனியவைகளையும் வரிசையாக ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.

    1) ஏகாந்தம் இனிது:

    இனிது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இனிது என்றால் மனத்துக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சியைத் தருவது என்று பொருள். துன்பமும் சலிப்பும் இல்லாத நிலை. எல்லோரும் விரும்புவது இன்பம். ஆனால் வாழ்க்கையில் துன்பமும் வந்து விடுகின்றது. சலிப்பும் வருகின்றது. சலிப்பு என்பது என்ன? சலிப்பு என்பது ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வது ஆகியவற்றால் அல்லது துன்பம் மிகுதியால் வரும் சோர்வு அல்லது வெறுப்பு ஆகும்.

    இன்பமே அனுபவிக்க விரும்பும் மனிதனுக்குத் துன்பம் வருகின்றது என்றால் எப்படி இருக்கும் அவன் மனம்? துன்பம் மிக மிக சலிப்பும், வாழ்க்கையின் மீது வெறுப்பும் உண்டாகும். மனிதன் விரும்புகின்ற இன்பத்தைப் புலன்களின் வழியாக மட்டுமேதான் அடைவதற்குத் தெரிந்து வைத்திருக்கிறான் மனிதன். புலன் வழி இன்பம் ஒரு அளவிற்கு மேல் சென்றால் இன்பமே துன்பமாக மாறிவிடும்.

    இது வரை விஞ்ஞானம் கூட எடுத்துரைக்காத இன்ப துன்ப விஞ்ஞானத்தை(Science of Enjoyment) மகரிஷி அவர்கள் காந்தத் தத்துவம்(Philosophy of Magnetism) வழியாக அழகாக எளிமையாக எடுத்து இயம்புகிறார். ”இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறப்படுகின்ற ஆன்மீகத் தத்துவத்தை மகரிஷி அவர்கள் விஞ்ஞானமாக்கியுள்ளார்.

    அவ்வையாரின் கூற்றிற்குச் செல்வோம். அவர் கூறும் ஏகாந்தம்(solitude) என்பது தனிமையும், அமைதியும் நிறைந்தது. தனிமையும் அமைதியும் புலன்கள் இயங்காத நிலை. அதாவது புலன்களைத் தேவையில்லாது அதிகமாகப் பயன்படுத்தினால் துன்பமும் சலிப்பும் வரும் என்பதால் இன்பத்தை அனுபவிக்க முறையை மாற்றி தனிமையையும் நாடினால் இன்பம் இருக்கும் என்கிறார் அவ்வையார்.

    2) அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்:

    ஏகாந்தத்தைவிட இனியது ஆதியைத் தொழுதல் என்கிறார், தொழுதல் என்றால் என்ன என்று யாவரும் அறிந்ததே. தொழுதல் என்றால் வணங்குதல், வழிபடுதல் என்று பொருள். பொதுவாக வழிபடுதல் என்றால் கடவுளை வழிபடுவதாகும். எனவே அவ்வையார் ஆதியைத் தொழுதல் என்கிறார் என்றால் ஆதி கடவுளாகின்றது. ஆதியைத் தொழு என்று பொதுவாக கூறவில்லை அவ்வையார். ஆதியைத் தொழு என்று குறிப்பிட்டுத்தான் சொல்கிறார்.
    யார் இந்த ஆதி? முருகன், விநாயகர் போன்ற உருவகக் கடவுளா அவ்வையார் கூறும் ஆதி?. திருவள்ளுவர் கூறும் ஆதிபகவன் (ஆதியாகிய பகவன்) தான் அவ்வையார் கூறும் ஆதி. ஆதி எனும் இறைவன் உருவகக் கடவுள் இல்லை. அப்படியானால் அவ்வையார் குறிப்பிடும் இந்தக் கடவுள் எப்படி ஆதி எனும் பெயர் பெற்றார். ஆதி என்கின்ற சொல்லின் பொருளைக் கொண்டே ஆதி என அழைக்கப்படுகின்றார் கடவுள்.
    ஆதி என்கின்ற சொல்லிற்கானப் பொருட்கள்

    1. முதல்
    2.  தொடக்க காலம்
    3.  தொடக்கம் அறியப்பட முடியாத பழமை
    4.   அடிப்படை

    ஏதோ ஒன்றுதான், துகள்கள்(particle in science) முதல், அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள், அதனைத் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சம், அதனைத் தொடர்ந்து ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான மனித இனமாக தன்மாற்றம் (self transformation) அடைந்துள்ளது. அந்தப் பொருள்தான்

    • காணுகின்ற பிரபஞ்சம் முதல் உயிர்கள் வரை எல்லாத் தோற்றங்களுக்கும் முதலாகி தன்மாற்றம் அடைந்துள்ளதாலும்,
    •   முதல் துகள் உருவாகிய காலத்திலிருந்தும் அதாவது, தொடக்க காலத்திலிருந்தும்,
    •   அதனுடைய தொடக்கம் அறிய முடியாத பழமையானதாகவும்,
    •   எல்வாவற்றிற்கும் அடிப்படையானதாகவும் இருந்தது.

    எனவே, அந்த ஒன்று ”ஆதி” என்கின்ற சொல்லிற்கான பொருள் அனைத்தையும் கொண்டிருந்ததால் அவ்வையார் அதனை ”ஆதி“ என்று அழைக்கிறார். கடவுளுக்கு ஆதிமூலம் என்கின்ற பெயரும் உண்டு. அதாவாது மூலத்திற்கும் ஆரம்பமாக ஆதியாக உள்ளது ஆதிமூலம் என்று அழைக்கப்படுகின்றது. விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சத்திற்கு மூலம் துகள்கள். அந்த மூலமான துகள்களுக்கு ஆரம்பமாக இருந்தது என்பதால் மூலத்திற்கு ஆதி என்பதால் அது ஆதி மூலம் என அழைக்கப்படுகின்றது.

    ஆதி என்று மட்டும் சொல்லவில்லை, அதனையே இறைவன் என்கிறார். எது இறைவனாக இருக்க முடியும்? இறைவனுக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு ஆறாம் அறிவு இறைவனைத் தேடினால் இந்த ஒன்றினைத் தானே இறைவன் என ஏற்றுக் கொள்ளும். எது அல்லது யார் அந்த ஆதி? அதுதான் தன்னில் மறைந்திருந்த ஆற்றலை இப்பிரபஞ்சமாகவும் உயிரினங்களாகவும் வெளிப்படுத்திய ஒன்றே ஒன்று. அது வெளிப்படுத்தியதால் அது ”வெட்டவெளி” (Eternal Space)என்கின்றக் காரணப் பெயரை அதுவே எடுத்துக் கொண்டது.

    அது(அந்த ஒன்று) தற்போது, தானே ஆறாம் அறிவாகிய நிலையிலும்,
    ”வெளி(vacuum) என்றால் வெற்றிடம்,
    ஒன்றுமில்லாதது” என பொருள் கொண்டு,
    அதுவே இறைவன் என்றும்,
    இறைவனின் உண்மைநிலை அருவம் என மனித அறிவால் ஏற்றுக்கொள்ளத் தயக்கப்பட்டு இருந்து வருகின்றது,
    இப்பிரபஞ்சத்தின் ஆதி நிலைதான் இறைவன் என்பதால், அந்த ஆதியைத் தொழுதல் இனிது என்கிறார் அவ்வையார். தொழுதல் இனிது என்று கூறுவதயும் கவனிக்க வேண்டும். நடைமுறையில் இறைவனைத் தொழுவது எல்லோருக்கும் இனிதாக உள்ளதா என்பதனையும் கவனிக்க வேண்டும்.

    உருவமில்லா இறையை எவ்வாறு தொழுவது? அருவமான இறைதான்(பரமாத்மா) அறிவாகவும்(சீவாத்மா) மனமாகவும் வந்துள்ளது. எனவே மீண்டும் பரமாத்மாவுடன் சீவாத்மாவை இணைப்பது தான் இறைக்கு இணக்கமான இறைவணக்கமாக இருக்க முடியும். அப்படியானால் அதனை எவ்வாறு தொழுவது எனில் அருவவழிபாட்டின் மூலமாகத்தான் தொழ முடியும். அதுதான் விஞ்ஞான காலத்திற்கேற்ற அகவழிபாடாகும். மனவளக்கலை யோகாவில் அதுதான் துரியாதீத தவமாகும். ஆகவே துரியாதீத தவத்தை இயற்றுவது இரண்டாவது இனிதாக அவ்வையார் கூறுகிறார். அடுத்ததாக மூன்றாவது இனிதிற்குச் செல்வோம்.

    3) அதனினும் இனிது அறிவினரைச் சேர்தல்:

    ஆதியைத் தொழுவது என்பது ஒரு குருவின் வழியாகத்தான் சாத்தியமாகும். உதாரணத்திற்கு மனவளக்கலை யோகிகள் துரியாதீத தவத்தை இயற்றுவதே வேதாத்திரி மகரிஷி அவா்களைக் குருவாக ஏற்றுக் கொண்டததால் தானே சாத்தியமாயிற்று. ”குரு இல்லாத வித்தை பாழ்” மற்றும் ”குருவருள் இன்றேல் திருவருள் இல்லை” என்பதால், அகத்தவம் இயற்றுவதற்கு அறிவினர்ச் சேர்க்கை, வழிகாட்டியாக இருக்கும், அறிவை அறிந்த அறிஞராகிய ஒருவரைத்தான் அவ்வையார் அறிவினர் என்கிறார். அவரைச் சேர்ந்திருத்தல் அதனினும் இனிது என்று இனியவையின் அதிகப்படி வரிசையில்(increasing order of ecstasy) மூன்றாவதாகக் கூறுகிறார்.

    அறிவினரைச் சோ்தல் என்பதற்கு இலக்கணம் வைத்துள்ளார் அவ்வையார். அறிவினரைச் சோ்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது, ஆனால் அறிவினரைப் பார்த்தோம், சேர்ந்தோம் என்றிருப்பது மட்டும் அவ்வையார் கூறும் அறிவினரைச் சோ்தல் அல்ல. பின்னா் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை நான்காவது இனியதாகக் கூறுகிறார் அவ்வையார்,

    4) அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது அதனினும் இனிது:

    இனியவைகளில் நான்காவதும் அதிகமானதுமான இனிது அறிவுள்ளோரைக் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் போதும், தூங்கும் போதும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார். இந்த இரண்டும் எவ்வாறு சாத்தியமாகுமும்? விழித்துக்கொண்டிருக்கும் போது அறிவுள்ளோரை காண்பது சாத்தியம். அறிவினர்களை நேரில் சந்திப்பதால் அவர்களைக் காண்பது சாத்தியமாகும். அறிவினர்களைச் சந்திக்காத போதும் அவர்களை நினைவில் கொண்டு வந்து பார்க்கலாம். இது சாத்தியமென்றாலும் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.

    அவா்களின் கருமையத்திற்கும் அறிவினரின் கருமையத்திற்கும் ஈர்ப்பு இல்லாததே காரணம். காதலர்கள் காதலிக்கும் காலத்தில் நேரில் சந்திக்காவிட்டாலும் ஒருவரையொருவர் எப்போதும் நினைந்து கொள்வது சாத்தியமாகவில்லையா?. ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவா் காதலிக்கின்றனர். அதுபோல் அறிவினரைக் காதலிக்க வேண்டும். காதலர்கள் சிலர் உடலளவில் காதலிப்பது போன்று அன்று குரு-சீடர் காதல். குருவிற்குக் கீழ்படிதலும் அவரின் போதனைகளையும் விரும்புவதாகவும் இருக்க வேண்டும் குரு-சீடல் காதல்.
    தூங்காமல் இருக்கும் போது அறிவினர்களைக் காண்பதிலேயே சிரமமான நிலை உள்ளதால், கனவிலும் அறிவினரைக் காண்பது எவ்வாறு சாத்தியம்? சீடனுக்கும் அறிவினரான குருவிற்கும் இடையில்.கருமைய ஈர்ப்பு ஏற்பட்டு காதல் இருந்தால் இது சாத்தியமாகும். எவ்வாறு காதலர்கள் காதலிக்கும் காலத்தில் இரவிலும் தூக்கத்திலும் நினைந்து கொள்வதும், கனவிலும் ஒருவரை ஒருவா் காண்பது சாத்தியமாகின்றதோ அது போல் குரு-சீடர் காதல் மலர்ந்து விட்டால் கனவிலும் குருவைக் காண்பது சாத்தியமே.

    கனவிலும் நனவிலும் அறிவுடையோரைக் காண்பது இனிது என்கிறாரே இது எப்படி சாத்தியம்? இங்கே அறிஞர் திருமூலர் அறிவினைரச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

    குரு அருளே திருவருள்
    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

    …..திருமூலர்.

    இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே. ஆனால் அவ்வையார் அறிவினராகிய குருவைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். தெளிவும், இனிதிலும் இனிதும் ஒன்றா? ஆம் ஒன்றுதான். மகா கவி பாரதியாரும் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவனை வேண்டச் சொல்கிறார் ஒரு பாடலில். தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதிலும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். இப்போது அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதையும் நினைவில் கொள்வோம். பிறவிப்பயனை எய்துவது இனிதிலிலும் இனிதுதானே! அது தானே பேரின்பம்?

    குருவின் சேர்க்கை (15.08.1984)
    எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பபொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்
    இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்
    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திதப் பிவிப்பனை நல்கும்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவா்கள்.

    மூன்று அறிஞர்களின் கருத்தும் ஒன்றாகத் தானே உள்ளது. மூன்று அறிஞர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவா்கள் வற்றாத சீவநதியான கவிகளை அருளியதால்தான் இன்று நாமும் இனிவரும் சமுதாயமும் அந்நதியில் குளித்து மன அழுக்கைப் போக்கிப் புத்துணர்வு பெற முடிகின்றது,

    ”சிந்திக்கக் கவி” பயிற்சியில் இன்று எடுத்துக்கொண்ட கவியின் உட்பொருளைத் தெரிந்து கொண்டோம். தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது சிந்திக்கவும் செய்யும் கவிகள். ஆகவேதான் சிந்தனைப் பயிற்சியில் மூன்றாம் பயிற்சியாக ”சிந்திக்கக் கவிகள்” என்கின்ற பயிற்சியை வைத்துள்ளோம். வாழ்க வளமுடன் வேறொரு நாள் வேறொரு கவியை எடுத்துக் கொண்டு சிந்தனைப் பயிற்சி செய்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் ்செல்வம்

  • இப்பயிற்சியின் நோக்கம்

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அதனை ஏன் அமுத மொழிகள் என நாம் கூறுகிறோம்?
    அமுதம் என்கின்ற சொல்லுக்ககு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.

    வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் இரண்டு இன்பங்கள் கிடைக்கின்றது. ஒன்று தாகம் தீர்கின்றது. மற்றொன்று நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது. உணவாகவும் அமைந்தது. நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தனிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்னொரு சுவை இன்பம் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

    இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும். தெளிவானால் அறிவு அறிஞர்களின் மொழிகளைக் கேட்பதற்கு விழையும். விழைந்தால் அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். இருட்டில் இருந்த அறிவு ஒளியை வீசும். அறிவொளியாகத் திகழும்.

    வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு? அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

    வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது மலமாகி வெளியேறிவிடும். ஆனால் அறிஞர்களின் அமுத மொழிகள் அறிவிற்கு என்றென்றும் அமுதமாக கருமையத்தில் பதிந்து தங்கிவிடும். ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும். கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும். இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும். மன தைரியத்தை ஊட்டும். நம்பிக்கையை வளர்க்கும்.

    எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையை தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல் ) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

     அறிவிற்கு இனிமையாக இருக்கும்.

     வாழ்வியலைப்பற்றிய உண்மைகளைக் கூறும்.

     பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.

     அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.

     ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.

     ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.

     ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.

     கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.

     இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.

     மன தைரியத்தை ஊட்டும்.

     நம்பிக்கையை வளர்க்கும்.

    பத்திற்கு மேற்பட்ட இவ்வளவு பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால் ஏன் அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக .இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறியவில்லை.

    இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனிமேலாவது அறிஞர்களின்மொழிகளை அமுதமாக அருந்துவோம். அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடுங்கள். சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தொரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பாருங்கள். அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும். சலிப்பே இராது, நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள். வாழ்க வளமுடன்.
    பயிற்சிக்குள் செல்வோம் நாள் 29-10-2014

    சி.ப. (த) – எண். 2- 02
    சிந்திக்க அமுத மொழிகள்

    1) எண்ணுவதே நடப்பதும், நடப்பதே எண்ணுவதும் என்ற அனுபவம் கிட்டியவர்களுக்கு எண்ணத்தின் ஆற்றலைப் பற்றிச் சந்தேகம் எழுமா?

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    2) மக்கள் பசியுடன் வருந்தினால் அது இறைவன் பசியுடன் இருப்பதற்கு நிகர் ஆகும்.

    ….. வள்ளலார்.

    3) மகத்தான செயல்கள் செய்யவே கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார்.

    ….. சுவாமி விவேகானந்தர்.

    4) வெற்றியாளர்கள் அனைவருக்கும் பொதுவானது அவர்களின் கனவுகளே!

    …..ஜஸ்டின் ஹெரால்டு.

    5) பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்க உறுதியும் அதுவே.

    …..புத்தர்.

    *****