December 2014

Monthly Archives

  • அறிவிற்கு விருந்து 2 / 3

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து 2 / 3

    FFC – 42

    31-12-2014—புதன்

    அறிவிற்கு எவையெல்லாம் விருந்தாக இருக்க முடியும்?

     அறிவு எதனை அறிவதற்காக இந்தப் பிறவி எடுத்ததோ அதுபற்றிய உண்மை விளக்கங்கள்,
     தன்னுடைய பூா்வீகம் பற்றிய உண்மைகள்,
     வாழ்க்கையைப் பற்றிய எதார்த்தம் புரிதல்,
     துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகள்,
     அதற்கு மேலும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்தல்
     பேரின்பத்தில் திளைத்தல்,
     சமுதாய அக்கறை ஏற்படுதல்,
     சலிப்பில்லா பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்,

    சுருங்கச் சொல்வதெனில் சிந்தனைச் செல்வத்தை அறிவின் உச்சத்திற்கு வளர்ப்பது போன்ற அறிவுப்பூர்வமான உண்மைகள் எல்லாம் அறிவிற்கு விருந்தாக இருக்கும்.

    அவ்வையார் கூறும் அறிவினர் யாராக இருக்க முடியும்? எவருடன் சேர்வதால், அறிவிற்கு தேவையான மேலே கூறப்பட்ட இனியவைகள் கிடைக்குமோ அவரை அறிவினர் ஆவர்.

    அவ்வையார் கூறும் அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 ஆம் ஆண்டு, அன்பர்களுக்கு அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை நினைவு படுத்திக் கொள்வோமே.
    அழைப்புக் கவி (1970)
    அன்பர்களே! வாரீர்!
    அறிவின் இருப்பிடம்,
    அறிந்து இன்பமுற,
    அன்பர்களே! வாரீர்!
    இன்ப நிலையதை, ஏக நிலையதை,
    அன்பு நிலையதை
    அறிந்திடலாம் இன்று.
    அன்பர்களே! வாரீர்!
    “தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்?”
    என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
    அன்றாட வாழ்க்கை அறிந் தனுபவிக்க
    இன்றேனும் விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்!
    அன்பர்களே! வாரீர்! …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஆகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் “அறிவினரைச் சேர்வது இனியது” என்று கூறியதை இப்போது, இந்த நூற்றாண்டில், அறிவை அறிந்து அனுபவித்து, “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, அன்பர்களே வாரீர்” என உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நடத்திக் கொண்டிருக்கின்றது. வாழ்க வேதாத்திரி மகரிஷியின் அறிவாற்றல். வேதாத்திரியம் என்ன விருந்து படைக்கின்றது? ஒரு புராணக்கதையில் வரும் பாரிஜாத மரம் போன்றது வேதாத்திரியம்.

    அந்தப் புராணக்கதைக் கூறுவது: தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அம்மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்றும் கூறப்படுகின்றது. மகரிஷியின் அறிவாற்றல், அதாவது வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலரைப் போன்றது. அப்பாரிஜாத மலரில் அறிவுத் தேன் நிரம்பி வழிகின்றது. அறிவிற்கு வேண்டிய விருந்தைத் தரும் மகரிஷியின் அறிவாற்றல். அறிவுத் தேனீக்களாகிய நாமெல்லோரும் தேனைப் பருகிக் கொண்டு தெய்வீக போதையில் உள்ளோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, அவ்வறிவுத் தேனை மற்றவர்களும் பருகி ஆனந்தமடைய வழிகாட்டும் அறிவுத் தொண்டாற்றி, மகிழ்ந்து, எப்போதும் இறை அருளுக்குப் பாத்திரமாகி, அதே நேரத்தில் இப்பிறவிப் பயனை அடுத்தப் பிறவிக்கு தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயே பெற்றிடுவோம்.

    அறிவிற்கு விருந்தை எவ்வாறு தயார் செய்து அருந்த வேண்டும் எனத் தோன்றும். அவ்வையார் கூறுவது போன்று மூன்றாம் நிலை இனியதைக் கொடுக்கக் கூடியதான அறிவினரைச் சேர்ந்து, நான்காம் நிலையும் இறுதியானதுமான அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பதாலும் அறிவிற்கான விருந்தை அருந்த முடியும். வயிற்றுக்கு விருந்து நாவிற்கு மிகுந்த சுவையைத் தரும். வயிற்றுப் பசியினைப் போக்கும். வயிறு, உணவிலுள்ள சாறை உடல் வளர்ச்சி்க்காக எடுத்துக் கொண்டு, சக்கையை மலமாக வெளியே அனுப்பிவிடுகின்றது. இப்படியாக வளர்ந்து வந்த உடல் மீண்டும் பஞ்ச பூதங்களாகி மறைந்து விடுகின்றது (மரணம்).

    ஆனால் அறிவிற்கு அளித்த விருந்து அப்படியாவதில்லை. உடல் அழிந்தாலும் அறிவிற்கு அளித்த விருந்து வம்சாவளி வம்சாவளியாகச் சென்று கொண்டிருக்கின்றது. எப்படி? கருமையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிவிற்கு விருந்து அளிப்பதால், அளிக்கும் ஒவ்வொரு விருந்தும் அதற்குரிய தரமாற்றத்தை அளிக்கின்றது. அந்த தரமாற்றம் என்றுமே அழியாத ஆன்மாவாகிய கருமையத்தில் பதிவதால், அந்த கருமையத்தின் செராக்ஸ் நகலே ஒருவரின் அடுத்த வம்சாவளி என்பதால் அறிவிற்கு அளிக்கும் விருந்தால் ஏற்படும் தரஉயர்வு தன்னுடைய வம்சாவளிக்குச் சென்றடைகிறது.. இவ்வாறாகத்தான், நல்ல தரமுள்ள வம்சாவளியை உருவாக்குவதன் மூலம் மனித குலத்தை உய்யச் செய்ய முடியும். இஃதன்றி மனித குலத்தை எவ்வாறு உய்வடையச் செய்யமுடியும்? இது இயற்கையின் புனித ஏற்பாடு.
    அறிவிற்கு விருந்து தெளிவினைத் தரும். அது அறிவிற்கு ஆனந்தத்தைத் தரும். அதனால் தான் அவ்வையார் அறிவினரைச் சேர்ந்திருக்கச் சொல்கிறார். அறிவினர் என்று அவ்வை கூறுவது, அறிவையறிந்த குருவையே. அறிவையறிந்த குருவை அடைதலின் பயனை, திருமூலர் அருளிச்செய்துள்ள பாடலின் மூலம் நினைவிற்குக் கொண்டு வருவோம்.

    குரு அருளே திருவருள்
    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. ….என்கிறார் திருமூலர்.
    ,அவ்வைத்தாய் கூறுவதனையும் நினைவு படுத்திக் கொள்வோம். அவை தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நீதிகளாக உள்ளன.
    ஆத்திச்சூடி
    1) சான்றோர் இனத்து இரு. (சான்றோர்களிடம் சேர்ந்திரு)
    2) பெரியாரைத் துணைக் கொள். (அறிவிற்சிறந்த பெரியவா்களை உனக்குத் துணையாக வைத்துக்கொள்)
    3) மேன்மக்கள் சொல் கேள். (உயர்ந்தவர்களுடைய சொல்லைக் கேட்டு நட)
    4) மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம். (பெரியவர்கள் சொன்ன வார்த்தை தேவாமிர்தம் போல் இன்பம் செய்யும்)
    மூதுரை?
    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே – நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று.
    பொருள்: நல்லாரைக் காண்பதும், அவர் சொல்லைக் கேட்பதும், அவர் குணங்களைப் பேசுவதும், அவரோடு கூடியிருப்பதுவும், நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் உண்டாக்கும்.
    உலக நீதி
    “மூத்தோர் சொன்ன வார்த்தைகளை மறக்க வேண்டாம்” …..என்கிறார் உலகநாதர்.
    அடுத்த விருந்தில்,
    1) மனிதனுக்கு வேண்டிய 133 தேவைகளைப்பற்றியும்,
    2) வெறும் பிறப்பு – இறப்பு சுழற்சியை ரசிப்பதற்காகவா இறையோ அல்லது இயற்கையோ தன்மாற்றம் அடைந்து இருக்கும்.
    என்பதனையும் சிந்திப்போம்.

    04-01-2015 ஞாயிறன்று தொடர்வோம்.

  • சிந்திக்க வினாக்கள்- 34

    வாழ்க மனித அறிவு                                                                                                                                 வளர்க மனித அறிவு

    29-12-2014-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    ”எண்ணமே இயற்கையின் சிகரம்” என்று எதனால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?  அடுத்த  வினா:–ஏன் இதனைத் தெரிவிக்கிறார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளா்க அறிவுச் செல்வம்