2014

Yearly Archives

  • வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்1/2

    வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்1/2

    FFC 7

    03-11-2014

    மலரை நாடி தேனீக்கள் வரும். ஏன்? மலரில் தேன் உள்ளதால் தேனீக்கள் மலரை நாடிச் வருகின்றன.. மலர்களில் பல உள்ளன. அதில் பாரிஜாத மலரும் ஒன்று தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
    ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’ என்கிறோம். ஏன்? இது ஒரு வார்த்தை ஜாலமா? அல்லது உண்மையில் வேதாத்திரியம் பாரிஜாத மலர் தானா? ஆம். பாரிஜாத மலர்தான். எவ்வாறு வேதாத்திரியம் பாரிஜாத மலரின் தன்மையாக உள்ளது என்பதனை அறிந்து கொண்டு பயன் பெறுவோமே. பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் தரும் என்று சொல்லப்படுவதைப் போல் வேதாத்திரியம் விரும்பியதை எல்லாம் தரும். மனிதன் எதனை விரும்ப வேண்டும்? சிந்திப்போம்.
    மனிதன் தனக்கு வேண்டியதை விரும்புகிறான். அவ்வாறு மனிதன் விரும்புவது அல்லது விரும்ப வேண்டியது என்ன? நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைவான செல்வம், உயர்ந்த புகழ் ஆகியவைகள் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இந்த நான்கிற்கும் மேலாக, மனிதன் வாழ்வதற்கு அவசியமானவை ஏதாவது உள்ளதா? உண்டு.
    இந்த வாழ்க்கை எதற்காக மனிதன் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டதோ, அந்த காரணத்தை அறிந்து
    அதனை அடைய வேண்டும்.
    இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவுதான் தன்னை அறிய வேண்டி மனித அறிவாக தன்மாற்றமடைந்துள்ளது. [The premordial state of Nature, the Consciousness, Almighty the God itself has transformed into human consciousness]
    கடலிலிருந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, குளிர்ந்த பின்னர் மழையாகப் பொழிந்து, ஆறாகி, நதியாகி, நிலப்பரப்பில் ஆர்பரித்து ஒடி, கடலில் கலந்து தன் சுழற்சியை முடித்துக்கொண்டதும் ஆர்பரிப்பு நின்று அமைதி கொள்கின்றது. அது போல்,
    பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (fractioned) மனித அறிவு,
    மீண்டும் பேரறிவுடன் கலந்து,
    தன்னை அறிந்து கொண்டு,
    தன் சுழற்சியை முடித்துக் கொள்ளும் போதுதான் பேரமைதி உண்டாகும் அதற்கு.
    அதாவது ஆறாம் அறிவு தன்னை அறிந்;து கொண்டு இன்பமுறவே, இந்த மனிதவாழ்க்கை. இவ்வாறு வந்த அறிவின் பயணத்தில், அறிவு ஒரு பிறவியிலேயே அதனை அடைய முடியாது. பல கோடிப் பிறவிகள் எடுத்து,
    அப்பிறவிகளிலெல்லாம், மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள நோக்கம் அறியாத அறியாமையால்;
    புலன்வழி வாழ்க்கையையே வாழ்ந்து, மயக்கம் கொண்டு,
    அளவு மீறியும், முறை மாறியும் வாழ்ந்து
    ஏற்படுத்திக் கொண்ட வேண்டாத துன்பப்பதிவுகளைத் தன்
    ஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,
    அவற்றின் விளைவுகளை அனுபவிக்கவே வந்த பிறவிதான், தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பிறவி. ஆகவே மனித வாழ்;க்கைக்கு அவசியமான உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ் ஆகிய வளங்களுடன் மெய்ஞ்ஞானம் என்கின்ற ஐந்தாவது வளமும் அவசியமாகின்றது. இந்த மெய்ஞ்ஞான வளத்துடன் மனித வாழ்வு முழுமை அடைகின்றது.

    …… நாளைத் தொடரும்

    Loading

  • ஐவகை மயக்கம் (நேற்றையத் தொடர்ச்சி)

    ஐவகை மயக்கம் (நேற்றையத் தொடர்ச்சி)

    1-FFC-NEW-8

     

     03-11-2014

    வேதங்கள் ”இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?“ என்கின்ற ஒரு கேள்வி அமைந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
    உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதையே அறிவு இன்பமாக உணர்கின்றது. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.
    அப்படி ஒரு ‘ஐவகை மயக்கம்’ உள்ளதா உண்மையில்? இது ஒரு அச்சுறுத்தலா? வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களால். கோழைகளால் கூறப்படும் தவறான செய்தியா? அறிஞரான திருவள்ளுவர் ஐவகை மயக்கம் பற்றி கூறியுள்ளாரே! ஆகவே, வாசுகி என்கின்ற மாதர்குல மாணிக்கத்தை வாழ்க்கைத் துணைவியாகப்; பெற்ற திருவள்ளுவரா வாழ்க்கையில் விரக்தி அடைந்தவராக இருக்க முடியும்? திருவள்ளுவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவரல்லர். விரக்தி அடைந்தவரா இரண்டாயிரத்து நாற்பது ஆண்டுகளாகியும் இன்னமும் நம்மிடமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
    ‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்குமே வாழ்க்கையே மயக்கத்தில்;தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்கள் வரையிலும், புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக
    “ பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. என்று கூறுகிறார்.
    இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும். அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்;க வேண்டும். இக்குறளில் உள்ள பொறி, அவித்தான், ஒழுக்க நெறி மற்றும் நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும். வெவ்;வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.
    1) “ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்;கை வாழ்வர்.” என்பது ஒருபொருள். மற்றொரு பொருள்
    2) “மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர். மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.
    3) இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.
    ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.
    அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.
    ”நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.
    ஆகவே கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டு கடவுள் வணக்கம் செய்பவர்களுக்கு மட்டுமே இக்குறளில்; திருவள்ளுவர் கூறிய உண்மை பொருந்துமா? கடவுள் வணக்கம் செய்யாத கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களுக்கு இது பொருந்தாதா? கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களுக்கு புலன்கள் இல்லையா? புலன் ஒழுக்கம் என்பது எல்லோருக்குமே பொருந்தும். எந்த மதத்தினருக்குப் பொருந்தும்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதால் எழுநூற்று இருபது கோடி உலகமக்கள் அனைவருக்குமே புலன் ஒழுக்கம் பொருந்தும்.
    *****

    Loading

  • ஐவகை மயக்கம்

    ஐவகை மயக்கம்

    1- FFC-NEW-7

    02-11-2014

    இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம். மயக்கம் என்றால் என்ன என்று தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும்;. உறவினர் யாராவது மயக்கம், அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

    மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

    எண்ணிக்கையில் இந்த மயக்கம் ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

    அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கும் கருவிகள் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன் இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்கள்ளாக நேரிடும்.

    எனவே அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி (பிரம்ம பிரயத்தனம்) செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

    இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

    •  இனிமேலாவது, தீய பழக்கங்களை புதிதாக பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
    • ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்

    ”பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார் இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதே நேரத்தில்

                           ” பல்லாயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்
                                பதிவுகளை ஒரு பிறவி காலத்திலேயே மாற்றலாம்.
                             நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்
                                நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை
                             நிலஉலகில்.மனிதருக்கு அளித்துள்ளது இயல்பென
                                நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்
                             பலனைடய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்
                                பாதையிலே விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி.
                                                           ….. வேதாத்திரி மகரிஷி

    என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    தொடரும் நாளை…..

    Loading