October 2015

Monthly Archives

  • FFC – 127-அறிவிற்கு விருந்து

    வாழ்க மனித அறிவு                                                                                                                          வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து

    FFC – 127

    14-10-2015—புதன்

    sindhanai_vilakkam       அறிவிற்கு எது விருந்து, விருந்தின் அவசியம் என்ன, விருந்தின் பயன்கள் என்ன என்று சிந்திக்க இருக்கிறோம்.       முதலில் தலைப்பிற்கு வார்த்தை விளக்கம் காண்போம். தலைப்பில் ‘அறிவு’, ‘விருந்து’ என்கின்ற இரு வார்த்தைகள் உள்ளன. அறிவு என்பது எது என்று எல்லோரும் அறிவர். எது உணர்வதற்கு காரணமாக உள்ளதோஉயிரில் எது உணர்கின்றதோ அது அறிவு.

    ஆனால் அறிவு அரூபமானது. உருவமற்றது. ஆனால் உள்ளது. இது விந்தை.

    அடுத்த வார்த்தையான விருந்திற்கு வருவோம். விருந்து என்றால் என்ன? விருந்து என்பது சிறப்பான உணவு. ஒருவரை அல்லது பலரை அழைத்து வழங்கும் சிறப்பான உணவை விருந்து என்கிறோம். ஐம்புலன்களில் ஒன்றான ‘நா’ என்கின்ற புலனை மகிழ்விக்கக் கூடியதாக அமையும் உணவு விருந்தாகும். பொதுவாக புலன்களுக்கு பேருவகையூட்டும் ஒன்றாகவும் கொள்ளலாம் விருந்தை. உதாரணத்திற்கு நல்ல இன்னிசையை ‘செவிக்கு விருந்து’ என்றும் ரம்யமான இயற்கைக் காட்சிகளை கண்களுக்கு விருந்து’ என்றும் கூறுகிறோம். நாவிற்கு (வயிற்றுக்கு) விருந்தாக இருந்தாலும் சரி, செவிக்கு விருந்தாக இருந்தாலும் சரி, கண்களுக்கு விருந்தாக இருந்தாலும் சரி அனுபவிப்பது பொதுவான ஒன்றுதான். அதுதான் அறிவு. உணவு என்பது என்ன? உண்ணுவது உணவு? எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக உண்ணுகிறோம். உடல் வளர்ச்சிக்கு, உடல் இயக்கத்திற்கு வேண்டிய ஆற்றலை, சக்தியைப் பெறுவதற்காக உண்கிறோம். உணவும் விருந்துதான். நல்ல இன்னிசையும் விருந்துதான், ரம்மியமான இயற்கைக் காட்சிகளும் விருந்துதான் அறிவிற்கு. அவை புலன்களுக்கு விருந்து இல்லை என்பதனைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் புலன்கள் அனுபவிப்பதில்லை. அறிவுதான் அனுபவிக்கின்றது. புலன்கள் கருவிகளாக இருக்கின்றதே தவிர புலன்களுக்கு விருந்து இல்லை. இந்த நிலையில் ‘அறிவிற்கு விருந்து’ என்பது எதனைக் குறிக்கின்றது? ‘வயிற்றுப்பசி’ என்கின்ற துன்ப உணர்வை போக்குவதற்காக உணவு உண்கிறோம். அதுபோல் ‘அறிவுப்பசி’ என்கின்ற துன்ப உணர்விற்கான உணவு அறிவிற்கு விருந்தாகின்றது. மற்ற விருந்துகளில் அறிவிற்கு புலன்கள் தேவைப்படுகின்றது. ஆனால் அறிவிற்கு–விருந்தில் புலன்கள் ஏதும் அவசியமில்லை. மற்ற விருந்துகளில், அதாவது புலன் இன்பத்திற்கு, கருவிகளாக இருக்க புலன்கள் அவசியமாக இருப்பதால், புலன்கள் தாங்கும் அளவிற்கு மேல் விருந்து இருக்குமானால் புலன்கள் துன்புறும், சலிப்படையும். ஆனால் அறிவிற்கு – விருந்தில் புலன்கள் அவசியமில்லையாதலால் இங்கே அறிவிற்கு சலிப்பு என்பதே கிடையாது. அத்தகையை அறிவிற்கு–விருந்து எது? அதுதான் சிந்தனை. சிந்தனைதான் அறிவிற்கான விருந்தாக உள்ளது. இன்னிசை விருந்து என்பதுபோல, சிந்தனை விருந்து என்கிறோம். சிந்தனை விருந்தை அனுபவிப்பது அறிவுதான். அறிவுதான் சிந்தனை செய்கின்றது. அறிவிற்கு-–விருந்தில் சலிப்பு இல்லாமையால் அறிவிற்கு விருந்து பேரின்பமாக உள்ளது. இங்கே வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பேரின்பத்தைப் பற்றி அறிவுப்பூர்வமாகக் கூறுவதனைக் கவனிப்போம். இறைநிலையான மன அலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றினைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே ‘பேரின்பம்’ ஆகும் என்கிறார் மகரிஷி அவர்கள். (சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் என்கின்ற நூலில் பக்கம் 23 இல்) ஆங்கிலத்தில், “Rarely, when the mental wave expands and merges with the Gravity to realize its own potentials and functions in everything and everywhere, it is felt as the culmination of pleasure and satisfaction –ecstasy ” (In the book ‘Logical solutions for the problems of Humanity’ — page No.30) எனவே உயிர் வாழ்வதற்காக, உடல் வளர்ச்சிக்காக, உடல் இயக்கத்திற்காக வேண்டிய ஆற்றலை, சக்தியை பெறுவதற்காக உணவை உண்பதுபோல், • மனிதனாக உயிர் வாழ்வதற்கு, • அறிவு வளர்ச்சி அடைய, • அறிவு முழுமையடைய, • அறிவு சீர்மையில் இயங்க தேவையான ஆற்றலை – சக்தியைப் பெறுவதற்காக, • பேரின்பம் அனுபவிக்க, விருந்து தேவை என்கிறோம். அவ்விருந்தை அறிவிற்கு விருந்து என்கிறோம்.

    இந்த அறிவிற்கு விருந்தை அருந்தவே, தனது ஆதிநிலையில் இயலாததை, பேரறிவு, தனது தன்மாற்ற நிகழ்ச்சியில் ஆறாம் அறிவாக மலர்ச்சி அடைந்துள்ளது. மனிதனிடம் இயற்கை/இறை தனது முழு சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது. ஆகவே அறிவு சிந்திக்க வேண்டும். சிந்திக்க பயிற்சியும் அவசியம். இந்த நோக்கத்தில்தான் இந்த இணையதள சத்சங்கம், இறையருளாலும், அருட்குரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் திருவருளாலும், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்கள் துணையுடன் நடைபெற்று வருகின்றது. தலைப்பிற்குள் செல்வோம். அறிவைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், பொருட்பாலில் அறிவுடைமை என்கின்ற ஒர் அதிகாரத்தையே ஒதுக்கி, பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதிகாரத்திற்கு “அறிவு” என்று பெயர் வைத்திருக்கலாம் திருவள்ளுவர். ஆனால்  “அறிவுடைமை” எனப் பெயர் வைத்துள்ளார். காரணத்தோடுதான் அறிவுடைமை எனப் பெயா் வைத்துள்ளார். அதனை அடுத்த விருந்தில் 18-10-2015 ஞாயிறன்று சிந்திப்போம்.

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன் உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.   நன்றி, வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-115

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    12-10-2015 – திங்கள்

    (அ) ‘மனிதன் வாழ்கிறான்’ என்பதனை ‘வினை வாழ்கின்றது’ எனலாமா?
    (ஆ) இது எவ்வாறு சரியாக இருக்கும்?

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக

    ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here) பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 126-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                                                      வளர்க மனித அறிவு

     

    (Constant Awareness)

    அயரா விழிப்புணர்வு
    FFC – 126

    11-10-2015—ஞாயிறு

    அயரா விழிப்புணர்வு பற்றி சிந்தித்து வருகிறோம். அவ்வையார் ‘அறிவினரோடு சோ்ந்திருத்தலும், அறிவினரைக் கனவிலும், நினைவிலும் காண்பதும் இனிதிலும் இனிது’ என்கிறார். காரணம் அது அயரா விழிப்புணர்வில் இருக்க உதவும். அயரா விழிப்புணர்வில் இருப்பது இனிமையாகத்தானே இருக்கும்.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் வள்ளலாரின் அருளைப் பெற்றதை நமக்குத் தெரிவிக்க அருளியுள்ள பாடலுடன் அயரா விழிப்பு நிலைச் சிந்தனையை நிறைவு செய்வோம்.

    FFC-126- வள்ளல் பெருமானார்

     

    அருட்சோதி இராமலிங்க வள்ளலார், தேடி வந்து கூடுவாஞ்சேரியை அடைந்து, தன்னுடைய ஆன்மாவை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்க வைத்துக் கொண்டு 1953 லிருந்து பத்து ஆண்டுகள் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வழிகாட்டி வந்தார். அப்போது மகரிஷி அவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயமாக இருந்தன என அருட்தந்தை அவா்கள் கூறுகிறார்கள். இராமலிங்க வள்ளலார், அவர் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தனது உடலை ஆட்கொண்டு முடித்தார் என எண்ணுவதாக அருட்தந்தை அவர்கள் தன்னுடைய வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் கூறுகிறார்,

    இந்த நிகழ்வு நடந்து முடிந்து சுமார் 33 வருடங்கள் கழித்து மேலே கூறிய கவியினை அருட்தந்தை அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ளார். 1981 ஆம் வருடம் எழுதிய “எனது வாழ்க்கை விளக்கம்” எனும் நூலில் இராமலிங்க வள்ளலார் தனக்கு அருட்பாலித்த நிகழ்ச்சியினையும் அதனால் தான் அடைந்த அருட்பயனைக் கூறியுள்ளார். இருப்பினும் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிகழ்ச்சியினைக் கவிதையாக்கி நமக்குத் தெரிவதற்காக அருளியுள்ளார். காரணம் என்ன? அன்பா்களின் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

    வேதாத்திரி மகரிஷி நமக்கெல்லாம் தந்தை என்றால் (அருட்தந்தை) வள்ளலார் நமக்கெல்லாம் தாத்தா தானே? அருட்தாத்தாதானே! எனவே அருட்தாத்தா – திரு அருட் பிரகாச வள்ளலார் 30-01-1874 அன்று வெள்ளியன்று இரவு 12 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தருளியதை இப்போது நினைகூர்வது பெரும் பயன் அளிக்கும்.

    “இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்து திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அக்கங்கு இருப்போம். திருத்திடுவோம். அஞ்ச வேண்டாம்” என்பதே அன்று திருவாய் மலர்ந்தது.

    ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளலார் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும், வேறு பல மகான்கள் கூறியதும்? ஆகவேதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குருவணக்கப் பாடலில் மானசீக நான்கு குருமார்களின் பெயர்களை மட்டும் கூறாமல், மிகவும் அறிவுக்கூர்மை உடைய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிகவும் நன்றியுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், நாமும் ஐயமின்றி உணரவேண்டும் என்கின்ற அருள் வேட்கையுடனும் இது வரை அறிவையறிந்த அறிஞா்களின் அறிவாற்றல்கள் துணை செய்யுமாறு வேண்டுகின்றார். இதுதானே உண்மை !

    உடலளவில் அடையாளம் கொண்டு ”அந்த மகான் சொன்னார். இந்த மகான் சொன்னார்” என்று சொல்வதைத் தவிர்த்து பேரறிவேதான் அந்த மகான் வடிவிலும், இந்தமகான் வடிவிலும் கூறியிருக்கின்றது என்று அறிந்துணரப்படவேண்டியதே ஆன்மீக உண்மை! மனிதகுலப் பரிணாமத்தில், அறிஞர்களின் அவ்வப்போது தோற்றம் என்பது முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஓட்டம்(Unending Divine Relay Race)

    எனவே அருட்தாத்தா வள்ளலார் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என் ஆணித்தரமாக மொழிந்துள்ளதை எப்போதும் நினைவில் கொள்வோம். நாம் திருந்துவதற்காகப் பிறந்துள்ளோம். எனவே “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்கின்ற வள்ளாரின் அருட்செய்திற்கிணங்க திருந்திடுவோம் அதி விரைவில். வள்ளாலாரின் ஆன்மாவின் ஏக்கத்தையும், சமுதாய நல அக்கறையையும் கவனிக்க வேண்டும். ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளார் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும்?

    இறை வெட்டவெளியாக அறிவாக உள்ளது என்று அறிந்து விட்டு வேறு எந்த உருவக் கடவுள் வந்து நமக்கு நேரிடையாக நற்கதியை அடையச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டவா்களாக இருந்துதான் நாம் இந்த இறையின் உண்மைநிலையை அறிந்து கொண்டோம். அப்படியானால் மகான்கள் கூறுவது போல் அறநெறி வாழ்க்கை வாழ்வதற்கு என்ன தயக்கம்? எது குறுக்கீடாக உள்ளது? சிந்தனை செய்வோம்.

    ”எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் குரு உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்” என்கின்ற வேதாத்திரி மகரிஷியின் உறுதி மொழியினை

    சிரமேற்கொண்டு செயல்கள் ஆற்றுவோம்.

    திட்டமிடுவோம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே அடைவதற்கு.

    பேரின்பம் முக்கியமா அல்லது புலனின்பமே முக்கியமா என முடிவு செய்வோம்.

    இயல்பூக்க நியதியைத் தரமாற்றத்திற்குப் பயன்படுத்துவோம்.

    தடங்கல்களைச் சத்சங்கம் மூலம் சரி செய்து கொள்வோம்.

    விரைவில் இறையின் அருளுக்குப் பாத்திரமாகி, இறைஉணர்வு பெற்று நாமும் சுகம் அடைந்து மற்றவா்களுக்கும், சமுதாயத்திற்கும் பேருதவியாக இருப்போம். ‘சாதனைதான் அறநெறி’ என்று அருளியுள்ள அருட்தந்தையின் கவியுடன் சிந்தனையை நிறைவு செய்வோம்.

    FFC-126-அறநெறி

    இவ்வுலகம் உய்ய, உலக மக்களைத் திருத்தி அறம் மலர திருவுளம் கொண்ட இது வரை வந்துள்ள அனைத்து மகான்களின் அறிவாற்றலின் துணை கொண்டு அறிவுத் தொண்டு செய்து மகிழ்வோம். அதற்கு நமக்கெல்லாம் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்று அருளிய அருட்பிராகாச வள்ளலாரின் அருள் துணை செய்யட்டும்.

    அயரா விழிப்பு நிலையோடு இருப்பதும் இறை-நினைவோடு(இறை உணர்வோடு) இருப்பதும் வேறு வேறன்று. இரண்டும் ஒன்றே. ஆகவே விழிப்பு நிலை என்கின்ற அருள்வெளிச்சத்தில் மகிழ்வோடு வாழ்வோம்.

    வருகின்ற புதன்கிழமையன்று(14-10-2015) வேறொரு தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திப்போம். வாழ்க வளமுடன்

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள்

    கருத்துக்கள்’ (Click Here) பகுதியில் பதிவு செய்யவும். 

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    Loading