2015

Yearly Archives

  • இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 9/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 9/?

    FFC – 77

    26-04-2015—ஞாயிறு.

    சென்ற விருந்தில், திருவேதாத்திரியத்தின் 1849 ஆம் மந்திரமான ‘இன்பம் இன்பம் இன்பம் இன்பம்’ என்கின்ற தலைப்பின் கீழுள்ள பாடலின் முதல் நான்கு வரிகளில், மகரிஷி அவர்கள், தான் இறைமையை அடைவதற்கானத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்தார் என்று கூறியுள்ளதனை அறிந்து கொண்டோம். இன்றைய விருந்தில்,

    உலக மக்கள் வாழும் இப்போதைய நிலையில், உலகமக்களுக்கு, இறைமைக்கு வழிகாட்டவும்,

    அதன் விளைவாக உலக சமாதானத்தை, மக்கள் மனங்களிலே வித்திடச் செய்யவும்,

    மகரிஷி அவர்களை கருவியாக்கி, உயர்த்தி, அவருள் இறை/இயற்கை அன்னை, ஏற்படுத்திய புரிதல் அனுபவங்களை அடுத்த நான்கு வரிகளின் வாயிலாக அறிவோம்.
    பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது. அதற்கு மனத்தூய்மை அவசியம். எனவே
    இறை உணர்வு பெறுவதற்கான உளப்பயிற்சியும்,
    மனம் தூய்மை பெற அறநெறியில் விழிப்புடனும், பொறுப்புடனும் செயல்களாற்றி மனம் தூய்மையானபோது பேரானந்தம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் முதல் நான்கு வரிகளில்.
    மனம் தூய்மையாவதால் பெறும் பேறு இறை உணர்வு. மனம் தூய்மை அடைந்துவிட்டது, விளைவாக இறை உணர்வு பெற்றாகிவிட்டது. பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டது. பிறவியின் நோக்கத்தை அறிந்த போது என்று ஆரம்பித்த பாடல் அந்த நான்கு வரிகளோடு, பாடலை முடித்திருக்கலாமே இறை/இயற்கை. அப்பாடலை முடிக்காமல், மேலும் நான்கு வரிகளை இயற்றச்செய்துள்ளது இறை/இயற்கை. எனவே மகரிஷி அவர்கள் அடுத்த நான்கு வரிகளை இயற்றியுள்ளார்.
    ஆகவே இறை உணர்வு பெற்றது/பெறுவது என்பது அறநெறியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளை உள்ளடக்கிய அறநெறி வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை எனத்தெளிவாகத் தெரிகின்றது.
    அந்தக் கடைசி நான்கு வரிகள் கூறுவதென்ன?

    POST 26-04-2015-FFC-77 இ இ உறவுகளில்
    கடைசி நான்கு வரிகளில் உறவு, துறவு பற்றி கூறுகிறார். வாழ்க்கை உறவு இல்லாமல் நடைபெறாது. உறவிற்கு எதிர் சொல்போல் இருக்கின்ற துறவைப் பற்றிக் கூறுகின்றார். ஆனால் மகரிஷி அவர்கள், சமுதாயம் கொண்டுள்ள பொருளில் துறவினை ஆதரிக்கவில்லை. ஆனால் மகரிஷி அவா்கள்,
    “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்” என்று திருவள்ளுவர் கூறுகின்ற நிலையில் துறவு பற்றி கூறுகிறார்.

    மகரிஷி அவர்கள் துறவை, பொதுவாக சமுதாயம் கொண்டுள்ள பொருளில் ஆதரிக்க வில்லையாயினும், பிறவியின் நோக்கத்தை அடைந்த தன் அனுபவத்தைக் கூற வந்த மகரிஷி அவா்கள்,
    உறவையும் துறவையும் இணைத்தும்,

    சரியானத் துறவுநிலை என்ன என்று அறிந்து, அதனை உயர்வானதாக உணர்ந்ததை மூன்றாவது நிலையாகவும்,
    முடிவாக அத்துறவு நிலையினை அடைந்ததை நான்காவதும், இறுதியுமான பேரானந்த நிலைகளாகக் கூறி அப்பாடலை முடித்து வைக்கிறார் ஆன்மீக விஞ்ஞானத்தின் சிகரத்திற்கேச் சென்றுள்ள மகரிஷி அவர்கள்.

    அப்படியானால் துறவு பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன என்று ஆராய்வோம்.
    துறவு பற்றி மகரிஷி அவர்கள் பல்வேறு இடங்களில் கூறியுள்ளதை கவனத்திற்கு கொண்டு வருவோம்.

    1) உறவிலே கண்ட உண்மை நிலை துறவு என்கிறார். இதற்கு அவா் கூறும் உதாரணமாவது:- தூங்கும் வரை தலையணை தேவையாய் இருக்கின்றது. விழித்த பிறகு தலையணைத் தேவையில்லை. விழித்த பிறகு யாரும் தலையணையைத் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. என்கின்ற உதாரணத்தைக் கூறுவார். தேவையிருக்கும்போது அப்பொருளின் நினைவு இருக்கலாம். தேவையை முடித்துக் கொண்ட பிறகு அப்பொருளை மறந்துவிடவேண்டும். பசி உணர்வு ஏற்படும்போது உணவின் மீது எண்ணம் செல்லலாம். ஆனால் பசி உணர்வு தீர்ந்த பிறகு உணவின் மீது எண்ணம் அவசியமில்லை. உணவின் மீது எண்ணம் கொண்டிருப்பதே வாழ்க்கையாகிவிடக் கூடாது. அன்பர்களை அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அழைப்பு விடுக்கும்போது ”தின்றுத் திரிந்து உறங்கவாப் பிறந்தோம்” என்று கூறி அறிவுறுத்துவதனை நினைவில் கொள்ள வேண்டும்..

    2) “பற்று அற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
    நிலையாமை காணப்படும்.” ……………………………………. என்கிறார் வாசுகி என்கின்ற மாதர்குல ரத்தினத்தை இல்லத்தரசியாக்கிக் கொண்டு வாழ்ந்த, இல்லறத்து ஞானியான திருவள்ளுவர். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டுடன் இன்பத்துப்பாலையும் சேர்த்தவர், அறத்துப்பாலில் துறவறவியலில் பத்துக் குறட்பாக்களையும் எழுதியுள்ளார். திருவள்ளுவர் காலத்திற்குப் பிறகு, 19 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருவள்ளுவருக்கு மானசீகச் சீடராகிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் இல்லறத்தை வலியுறுத்தியும் அதே நேரத்தில் இல்லறத்திலேயே துறவு பற்றியும் கூறியிருக்கிறார். மகரிஷி அவர்கள் கூறும் துறவறம் என்பது என்ன? எப்படி இல்லறமும், இல்லறத்தைத் துறந்து துறவறமும் ஒன்று சோ்ந்து இருக்க முடியும் என ஐயம் எழலாம். என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள் என ஆராய்வோம்.

    ஆங்கிலத்திலே சொல்லும் போது “Detached attachment” தேவை என்பார் மகரிஷி அவர்கள். ‘Detachment’, ‘attachment’ ஆகிய இரண்டு எதிர்ச் எதிர்சொற்கள் இணைந்த “Detached attachment” சொற்றொடரை (phrase) உருவாக்கியிருக்கிறார். தமிழில் கூறும்போது ‘பற்றற்ற பற்று’ வேண்டும் என்பார். அப்படியானால் பற்று இல்லாமல் இருக்க முடியாது என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்த பற்று பற்றற்றதாக இருக்க வேண்டும் என்றல்லவா பொருளாகின்றது. எப்படி?

    அதாவது உணவில் உப்பும் தேவை. ஆனாலும் உப்பு மிகுந்து விடக் கூடாது. உப்பில்லா பண்டம் குப்பையிலே. உப்பு அவசியம் என்றாலும், உப்பு அதிகமாகிவிட்டாலும் உணவு, உண்ணப்படுவதற்கானத் தகுதியை இழந்துவிடும். எனவே உணவிற்கு உப்பைச் சேர்க்கும் போது எவ்வளவு கவனம் தேவையோ அதேபோல் இல்லறத்திலேயே துறவறம் நடத்த வேண்டும். அந்த துறவறம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் தாமரை இலை போல் வாழ்க்கை வாழ வேண்டும். அதாவது தாமரை இலை தண்ணீரிலேயே வாழ்ந்தாலும், தண்ணீரைத் தன் மீது ஒட்டிக் கொள்ளாமல் வாழ்கின்றது. அதுபோல் மனித வாழ்க்கை என்பது உறவில்லாமலும் வாழ முடியாது. அந்த உறவே சிக்கலை ஏற்படுத்திவிடும்படியும் ஆகிவிடக்கூடாது. உறவு என்றால் மனிதர்களோடு தொடா்பு கொள்வது மட்டுமல்ல. பொருட்களோடு தொடர்பு கொள்வதும் அடங்கும். ஒருவரை சார்ந்திருக்கும் மனிதா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கு மேல் பொருட்கள் அதிகமாக அதிகமாக  ஒருவரின் சுதந்திரம் பறிபோகும் என்பார் மகரிஷி அவர்கள். சுதந்திரம் பறிபோவது என்பது துன்பம்தானே? இதனையே திருவள்ளுவர்

     “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.”                                 என்கிறார்.

    இதற்கு என்ன பொருள்? ஒருவா் எந்தெந்தப் பொருள்களிலிருந்து பற்று நீங்கி இருக்கின்றாரோ, அந்தப் பொருள்களிலிருந்து அவருக்குத் துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர், துறவு என்கின்ற அதிகாரத்தின் முதல் குறளிலேயே. இது உண்மைதானே! திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவா்கள் வகுத்துக் கொடுத்துள்ள தற்சோதனைப் பயிற்சியின் இரண்டாவது அங்கமான ஆசை சீரமைத்தலில் வெற்றி அடைந்தவர் வள்ளுவர் கூறும் துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தவர்தானே?

    வள்ளுவர் கூறுவதிலுள்ள நியாயத்தை–தர்க்க சாஸ்திரத்தைப் ‘logic—the Science of reasoning’ ஐ பார்ப்போம். பொருட்கள் நிலையில்லாதது. மாறக்கூடியது. அழியக் கூடியது. ‘நான் யார்–தத்துவ–-உண்மை’ யின் படி, மனிதன் அழியக் கூடிய உடலல்ல. அழியாத ஆன்மாதான் மனிதன். பிறவிச் சுழற்சியை முடித்துக் கொள்ள, அழியாததிலிருந்து (மெய்ப்பொருள்) வந்த, அழியாதது (ஆன்மா) எதனுடன் பிணைப்பை வைத்துக்கொள்ள வேண்டும்? அழியாததுடன்தானே பிணைப்பை வைத்துக் கொள்ள வேண்டும்.
    அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த பிணைப்பை ஏற்படுத்தித் தருபவர் தான் அறிவை அறிந்த அறிவாளி. அழியும் பொருட்களோடு பிணைப்பை வைத்துக் கொண்டு என்ன செய்துவிடப் போகிறான் மனிதன்? கீதாசாரக் கருத்தை நினைவிற்கு கொண்டு வாருங்கள். வந்த நோக்கம் அழியாத பொருளைப் பற்றிக் கொண்டு அழியாத பொருளாக மாற வேண்டும், அதனைத் தவிர்த்துவிட்டு, அறவே அதனை மறந்துவிட்டு, அழியும் பொருட்களோடு அளவும் முறையும் இன்றி உறவு வைத்துக் கொண்டால் விளைவு துன்பம்தானே வரும். மீண்டும் மீண்டும் அழிகின்ற பொருட்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வள்ளுவப் பெருந்தகை கூறும் பிறவிப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் உருவாகும்.

    ‘இல்லறம் துறவறவம்’ என்கின்ற தலைப்பில்(560—581) 22 பாக்களை இயற்றியுள்ளார் மகரிஷி அவர்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

    POST 26-04-2015-FFC-77-இ இ இல்லறமும்

    கருத்துரை: துறவறம் என்பது எண்ணத்தில் இருக்க வேண்டும் என்கிறார். அகம் துறவறத்தை ஏற்க வேண்டும். அகமாக உள்ளது இறைதானே?! அதாவது இயற்கையின் எதார்த்தம் விளங்கியத் தெளிந்த தெளிவு வேண்டும். எண்ணமே இயற்கையின்/இறையின் சிகரம், எண்ணம் இயற்கையின்/இறையின் சிறப்பு, இயற்கைக்கோ/இறைக்கோ, பற்று தான் இருக்கின்றதா? இல்லையே! ஆகவேதான் இயற்கையாகிய/இறையாகிய எண்ணத்தில் துறவு வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஜீவாத்மா இறைமையை எய்துவதற்கு எண்ணத்தில்தானே துறவு இருக்க வேண்டும். புற வேடங்களிலும், சொல்லிலும் துறவு இருந்து என்ன பயன்? எண்ணத்தில் துறவு இருந்தால்தானே,

    “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி” என்று திருவேதாத்திரியம் தனது முதல் மந்திரத்திலேயே இயம்பியுள்ளது சாத்தியமாகும். மேலும் துறவு பற்றி மகரிஷி அவர்கள் கவிகள், உரைநடைகள் வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார் என்று அடுத்த விருந்தில் பார்ப்போம்.
    தொடரும் 29-04-2015.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 68

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    25-04-2015— சனி

    gnbw

    பகைமையுணர்வை வைக்காதே. கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார். மன்னிப்பது என்பது அன்பின் உயர்ந்த சக்தியாகும். எங்கெல்லாம் மன்னிப்பு இருக்கின்றதோ அங்கெல்லாம் கடவுள் குடிகொண்டிருக்கிறார்.

    ….. குருநானக்

    பயிற்சி—
    1) மன்னிப்பில் அடங்கியுள்ள உட்கருத்துக்கள் என்னென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 67

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                     24-04-2015— வெள்ளி

    மனித சமுதாயத்தை நேசிப்பதைவிட சிறந்த ஞானம் உலகில் வேறெதுவும் இல்லை.

                                                 … ஆதிசங்கரர்.

                       

    பயிற்சி—

    1)   இது சரிதானே!

    2)   எவ்வாறு சரி?

    3)   எது  “ஞானம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதில், ஆதி சங்கரருடன் எவ்வாறு ஒன்றுபடுகிறார்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading