September 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 213

                             வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    16-09-2016 — வெள்ளி.

    “திறந்துகொள்! தான், தனது என்று சொல்லும் சிற்றறையை! வெளியே வா! பழுக்கும் ஞானம்.”
                                                   . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இப் பொன்மொழியின் பொருள் என்ன?
    2) ஞானத்திற்கும் ‘தான், தனது’ என்பதற்கும் உள்ளத் தொடர்பு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-211

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

    15-09-2016 – வியாழன்

    சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • 226-பிறவிப் பயனை நல்கும்! 10/10

    வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்! 10/10

    அறிவிற்கு விருந்து—226

     14-09-2016—புதன்.

    perinbapppadikalum thunaipapadikalum

    குருவை மதித்து ஒழுகல்

    வாழ்க வளமுடன்!

                      மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து ஒன்பது விருந்துகளில் ‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.  குருவின் சேர்க்கையால் பிறவிப்பயனை எய்தமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  எப்படி? பிறவிப்பயனை அடைவதற்கு, அதற்குரிய பயிற்சிகளை(தவம், தற்சோதனை) செய்து வரவேண்டும்.   பிறவிப்பயன் என்பதில் பண்பேற்றத்தில் மிக உயர்ந்தநிலையை அடைய வேண்டியிருப்பதால், சிரத்தையோடு பயிற்சிகளை செய்வதோடு எளிதாகவும், விரைவிலும் அந்த உயர்ந்த நிலையை அடைய இரண்டு சிறந்த வழிகளை 15-08-1984  அன்று ‘குருவின் சேர்க்கை’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலில் தெரிவித்துள்ளார்.

         முதல் வழியான இயல்பூக்க நியதியின் பெருமையையும், அதனை எவ்வாறு பிறவிப்பயன் பெறுவதற்கான பண்பேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதனையும் நாம் ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.   இரண்டாவது வழியான ‘குருவை மதித்தொழுகல்’ பற்றி இன்று சிந்திக்க இருப்பதால்  அவ்வரிகளை மட்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

    குருவின் சேர்க்கை(15-08-1984)    

    FFC-75-எவரோருவா குரு வழ to post on 19-4-15.png-1

      இவ்வரிகளுக்குள் புகுவோம் சிந்தனையோடு சிந்தித்தலால்! முதலில் இவ்வரிகளில் உள்ள வார்த்தைகளை தனித்தனியாக எடுத்துக் கொண்டு உற்று நோக்குவோம்.

    1)   குரு

    2)   குருவின் சேர்க்கை

    3)   மதித்தல்

    4)   ஒழுகுதல்

    5)   தப்பாது

    6)   குருவுயர்வு

    7)   மதிப்பவரின் தரத்தை உயர்த்தி

    8)   பிறவிப்பயனை நல்கும்.

           ஒவ்வொரு வார்த்தைகளின் சூட்சுமத்தை (மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்; நுட்பம்—intricacy; subtlety)) அறிந்து கொள்வோம்.

     1)   குரு என்பவர் யார்?

      குரு என்பவர் மனிதஅறிவின் அறியாமையைப் போக்குபவர். ஏன் அறியாமையைப் போக்கிக் கொள்ள வேண்டும்?  அறியாமை என்பது என்ன? அறிவது அறிவு.  அறிவு அறியவேண்டியதை அறிய வேண்டும். அறிவு மற்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்வதாக இருந்துவிட்டு அது தன்னை மட்டும் அறியாதிருப்பது(நான் யார்?) அறியாமைதானே?! அது தன்னை அறியக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அறியக்கூடியதை அறியாதிருப்பது அறியாமைதானே?! அப்படியானால் அறிவிற்கு அறியாமை என்பது குறைதானே!  பொதுவாக எந்த ஒன்றிலும்  குறை இருந்தால் அதனால் வரும் பயன் எவ்வாறு  நன்மையாக  இருக்க முடியும் என்பதனை அறிவு அறியும். அப்படியிருக்கும்போது தன்னிலேயே(அறிவிலே) குறை இருந்தால் அறிவின் பயனில் எவ்வாறு நன்மை இருக்க முடியும்? நன்மையில்லை எனில் துன்பம்தான் விளையும்.  இன்றைய மனிதகுலத்தின் சிக்கல்களுக்கு காரணம்  அறிவை அறியாததுதான். எனவே எல்லா சிக்கல்களுக்கும்  அடிப்படைக் காரணமாக உள்ளது அறியாமையே.

         அறியாமையில் இருக்கும் அறிவு எவ்வாறு சிறப்பாக செயலாற்ற முடியும்? செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு. குறை உடைய அறிவு சிறப்பாக செயல் ஆற்ற முடியவில்லை எனில்  அது ஆற்றும் செயல்களினால் விளைவு துன்பமாகத்தானே இருக்குமன்றோ!  எனவே யார் இந்த  மனிதஅறிவின் அறியாமையைப் போக்க முடியும்?  ஏற்கனவே மனிதஅறிவின் இருப்பிடம் அறிந்து இன்புற்று வாழ்பவர்தான் மற்றொரு  மனிதஅறிவிற்கு வழியைக்காட்டி, அறிவின் இருப்பிடத்தைக் காண்பித்து, உணரச்செய்து அறியாமையைப் போக்க முடியும்.  எப்போதுமே இன்பம் விரும்பும் மனிதன் அறிவை(தன்னை யார் என அறியவேண்டும்) அறிந்ததால்தான்  இன்புற்று வாழ முடியும். அறிவை அறிந்து அறியைாமையைப்போக்கி அறிவை அறியச்செய்பவரே  குருவாக  அமைகிறார்.  அறியாமையைப் போக்கி வழிகாட்டுபவரே குரு எனப்படுகிறார் பயனாளிகளால்.  அப்படிப் பார்க்கும்போது 1970 ல் அழைப்பு விடுத்திருக்கிறார் ஒரு மகா புருஷர்.  அந்த அழைப்பினை என்ன என்று அறிவோம்.

    anbargale vaareer-THAI

    எனவே இந்த அழைப்பினை விடுத்துள்ள மகா புருஷர்தான் திருவேதாத்திரியம் அளித்துள்ள   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.   இந்த அறியாமையால் மிகுந்த சிக்கல்களுக்குள்ளாகித் தவிக்கும் மனித சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக திகழ இயற்கையால்/இறையால் அனுப்பப்பட்ட அவதாரமே வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        இந்த அவதாரப்புருஷரே  குருவானவர் யார் என்பதனை சூசகமாக குருவிற்கு வரையறை கூறுகிறார் தான் இயற்றிய குருவணக்கப்பாடலின் கடைசி வரிகளில்

      ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

        அதை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வோம்.’

          குருவின் சேர்க்கை ‘அறிவின் தன்மாற்றப் பயணத்தில் பரிபக்குவ நிலையை’ அடைந்தவருக்கு தானாகவே நிகழ்கின்றது.  அப்படி கிடைத்த பேறுதான் நாம் வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைந்தது.  இந்த பேற்றினை வீடுபேறாக உயர்த்த வேண்டும்.  அதற்கு  குருவை மதித்து ஒழுகினால், குருவின் உயர்வு தப்பாது நம்முடைய தரத்தை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்கிறார் நம்முடைய குருதேவர்.  இது வரை குரு என்பவர் யார் என அறிந்து கொண்டோம்.  அடுத்ததாக குருவின் சேர்க்கை என்பது என்ன, அந்த புனித நிகழ்வு என்ன செய்கின்றது குருவை அடைந்தவரிடம் எனவும் அறிந்து கொள்வோம்.. 

     2)   குருவின் சேர்க்கை:

      சிறப்பானச் சிந்தனை மூன்று வினாக்களை அடிப்படையாகக் கொண்டது.  என்ன? ஏன்? எப்படி? (What? Why? How?) என்பதே அம்மூன்று வினாக்களுமாகும்.

        குருவின் சேர்க்கை என்றால் என்ன?  ‘சேர்க்கை’ என்றால் தெரியும்.  சேரிடம் அறிந்து சேர் என்று கருணையால் எச்சரித்து அறிவுறுத்துகின்றனர்  ஆன்றோர் பெருமக்கள்.  ஏன்?  எந்த ஒரு செயலுக்கும் விளைவு இருப்பதால் சேர்க்கை என்கின்ற செயலுக்கும் பின்னர் விளைவு உண்டு. அந்த விளைவு என்ன? யாரிடம் சேர்கின்றோமே அவரின் தன்மையும் நமக்கும் வந்து சேரும்.  இங்கே குருவிடம் சேர்க்கை என்ன விளைவை ஏற்படுத்த இருக்கின்றது?   சுருங்கச் சொல்வதென்றால் (in a nut shell) தன்முனைப்பு நீங்கவே குருவின் சேர்க்கையை இயற்கை/இறை திருவுளம் கொண்டு அவரவர்கள் கருமையப் பதிவுகளுக்கேற்ப நடத்தி வைக்கின்றது.  இதனை ஞானக்களஞ்சியம் 1586 வது பாடலில்  ‘தன்முனைப்பு நீங்கஒரு குரு அடைந்து’ என்கின்ற முதல் வரியே தெரிவிக்கின்றது. 

    guru-disciple-relation

    3) மதித்தல்:

    மதித்தல் என்றால் என்ன என்று தெரியும். இருப்பினும் அதற்கான வார்த்தை விளக்கம் காண்போம். மதி என்பதற்கு அறிவு என்று பொருள். மதித்தல் என்றால், எண்ணுதல், கருதுதல் என்று பொருள். ஒருவரை உயர்வாகக் கருதும் நிலை. எப்போது ஒருவரை உயர்வாகக் கருதும் நிலை ஏற்படும்? அவர் எந்த அளவிற்கு அறிவின் நிலையில் உயர்ந்திருந்தால் அவரை அறிவு மதிப்பதும் அதிகமாக இருக்கும். எந்த ஒன்றிலுமே அறிவு பயனடையத்தான் எண்ணும். ஆகவே அவ்வாறு பயனடைதலில் சிறப்பானதாகக்கருதப்படக் கூடியது அறிவிற்குத் தேவையான தெளிவாகும். எனவே குருவின் சேர்க்கையில், குருவை மதித்தல் என்பது குருவால் சீடருக்கு அறிவு நிலையில் ஏற்படுகின்ற உயர்வைப் பொருத்து சிறப்புற்று விளங்கும். சீடர் அறிவு நிலையில் உயர்வதற்காகத்தான் குருவை அடைகிறான். எனவே ‘உயர்வு’ மற்றும் ‘மதிப்பது’ பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்வோம்.

    ‘தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது’ என்கிறார் மகரிஷி அவர்கள்.   இக்கூற்றின் உட்பொருளை அறிந்து கொள்வோம். அறிவு நிலையில் உயர்வதற்காகக் குருவை அடைகிறான் என்றால் குரு அறிவு நிலையில் உயர்ந்திருக்கிறார் என்றாகின்றது. அப்போது அந்த குரு-சீடர் உறவில் சீடர் குருவை மதிக்க வேண்டுமெனில் முதலில் குருவின் அறிவாற்றலைக் கண்டு ரசிக்க வேண்டும். ரசித்தல் இருந்தால் தானாகவே குருவை மதித்தல் ஆரம்பிக்கும். மதித்தலும், ரசித்தலும் ஒன்றிணைந்தால் சீடன் அறிவு நிலை உயர்ந்து வரும். இதைத்தான் மகரிஷி அவர்கள் ‘தான் உயராது மற்றவரது உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது’ என்கிறார். குருவை மதித்தலோ, அல்லது அதன் காரணமாக மரியாதை செலுத்துவதோ குருவுடன் சேர்ந்ததன் பயன் அடைந்ததாகிவிடாது. அதனால்தான் பாடல் வரி ‘எவரொருவர் குருவை மதித்தாலும்’ என்றிராமல் ‘எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும்’ என்று அமையப்பெற்றுள்ளது. அப்படியானால் ஒழுகுதல் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

    4) ஒழுகுதல்:

    ஒழுகுதல் என்றால் என்ன? ஒழுகுவது ஒழுகுதல்.  “ஒப்புர ஒழுகு” என்றும் “நேர்பட ஒழுகு” என்றும் அவ்வைத்தாய் கூறுவதனை அறிவோம். ஒழுகு என்றால் நட, நடந்துகொள் என்று பொருள். அறிவில் உயர்வது என்பது வேறொன்றுமில்லை. ஒழுங்காற்றலாய் விளங்கும் பேரறிவே மனிதஅறிவாக தன்மாற்றமடைந்து வந்துள்ளதால் மனிதஅறிவு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதே அறிவில் உயர்வதாகும். எனவே ஒழுக்கம் என்பது நெறியை ஒழுகி நடப்பது. நெறி என்பது ஒழுக்கத்திற்காக அமைந்துள்ள விதி. அதாவது இயற்கை விதி என்றே கொள்ளலாம். செயலுக்கு விளைவு உண்டு என்பது இயற்கை விதி.

       குருவை மதித்தொழுகல் என்பது குருவின் அறிவாற்றலை மதித்தலோடு நின்று விடாமல் அவ்வறிவாற்றல் கூறும் நெறிகளின்படி நடக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் அதற்குரிய பயன் தப்பாது கிடைக்கும் என்கிறார். எனவே தப்பாது என்றால் என்ன என்று அறிவோம்.

     5) தப்பாது என்றால் தவறாமல், நிச்சயமாக என்று பொருள்.

    பாடல் வரி ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் குருவுயர்வு மதிப்போர் தம்மை’ என்று அமையாமல் ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை’ என்று அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். ‘தப்பாது’ என்கின்ற சொல்லின் வாயிலாக பிறவிப்பயனை நல்கும் என்பது உறுதியாக்கப்படுகின்றது.

     6)  குருவுயர்வு:

    குருவின் உயர்வுதான் சீடனை, இயல்பூக்க நியதியின் படி சீடனை பண்பேற்றம்பெறச் செய்து பிறவிப்பயனை அடையச் செய்ய முடியம். எனவே தான் அறிஞர் திருமூலர் யாரை குருவாகக் கொள்ள வேண்டும் என்று சூசகமாக அபக்குவன் எவ்வாறு குருவைக் கொள்வான் என்று கூறுகிறார். அப்படியானால் பக்குவன் யாரை குருவாகக் கொள்ள வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். நடைமுறையில் யாரை குருவாக கொள்வது என்பது தெரியாமல் உள்ளது. தகுந்த குரு கிடைப்பது அவரவர் கருமையப்பதிவுகளைப் பொருத்து அமையும்.

                      அபக்குவன்

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

    குருடும் குருடும் குழி விழுமாறே.

    . . . திருமூலர்.

    பொருள்:

    குருட்டினை என்பது அறியாமை. அறியாமையைப் போக்கும் நல்லாசிரியரைத் தேடிப்போகாதஅபக்குவர்கள் அறியாமையை போக்க முடியாத ஒருவரை குருவாகக் கொண்டு அவரிடம் போவார் என்கிறார் திருமூலர். இவ்வாறாக அறிவில்லாதவரும், அறிவு புகுட்ட முடியாதவரும் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பது குருடுக்கு வழிகாட்டக் குருடு முற்பட்டு, இருவரும் துன்பக் குழியில் விழுந்து துயருறுவதைப் போன்றதே ஆகும் என்கிறார் திருமூலர். (அபக்குவன் என்றால் பரிபக்குவம் அடையாதவன் என்று பொருள். பக்குவன் என்றால் பரிபக்குவ நிலையை அடைந்தவர் என்று பொருள்)

    7) மதிப்பவரின் தரத்தை உயர்த்தி:

    பிறவிப்பயன் அடைவது என்பது அறிவு பண்பேற்றத்தின் உச்சத்தை அடைவது என்பதால் குருவின் உயர்வு இயல்பூக்க நியதியின்படி சீடனின் தரத்தை உயர்த்தி பண்பேற்றம் பெறச் செய்து அதன் பயனாம் பிறவிப்பயனான வீடுபேற்றினை அளித்திடும்.

     8) பிறவிப்பயனை நல்கும்:

    பிறவிப்பயன் என்ன என்பது பற்றி முன்னதாகவே ஒன்பது விருந்துகளில் விரிவாக அறிந்து கொண்டோம்.

       பிறவிப்பயன் அடைவதற்காகத்தான் ஆன்மா இந்த பிறவி எடுத்துள்ளது. இதனை அறியாமல்போனால் மீண்டும் பாவப்பதிவுகளைச் சேர்த்து சேர்த்து வம்சாவளிக்கு சொத்தாகக் கொடுத்து அவர்களையும் துன்பத்திற்கு ஆளாக்கி, மீண்டும் பிறவா வரத்தினை பெறமால் இப்பிறவித் தொடரை நீட்டித்துக் கொண்டே செல்ல நேரிடும்.

       எனவே, பிறவிப்பயனின் அருமை பெருமையை உணர்ந்து கொண்டு குருவின் உயிரை, குருவின் குணத்தை, குருவின் செயலை அடிக்கடி நினைந்து நினைந்து இயல்பூக்க நியதியின்படி அறிவினில் உயர்ந்து, குருவை மதித்து ஒழுகி அடுத்த பிறவிக்கு பிறவிப்பயனை அடைவதை தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவோம். உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என உத்திரவாதம் அளித்துள்ள நம் குருதேவரின் பாதாரவிந்தங்களில் நம் ஆத்மார்த்த நன்றியைச் சமர்ப்பிப்போம். வாழ்க வளமுடன். இத்துடன் பிறவிப்பயனை நல்கும் என்கின்ற சிந்தனையை நிறைவு செய்கிறோம். அடுத்த விருந்தில் வேறொரு தலைப்பில் விருந்து அருந்துவோம்.

    guru_paadham

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.

    Loading