235-பழக்கமும் விளக்கமும்-5/?
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
அறிவிற்கு விருந்து—235
16-10-2016—ஞாயிறு
வாழ்க வளமுடன்!
இன்றைய விருந்தில் எப்போது விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளை வெற்றிகொள்ளும் அளவிற்கு வலிமை பெறும் என்பதனை அறிய இருக்கிறோம்.
எப்போது விளக்கப்பதிவுகள் வலிவு பெறும்?
விளக்கப்பதிவுகளும் செயல்பதிவுகளைப் போன்றே மூளைச் செல்களிலும், கருமையத்திலும் ஏற்படுகின்றன. அவ்வாறு விளக்கப்பதிவுகள் ஏற்பட்டாலும், அது தொடர்ந்து செயல்படுவதற்கும், நிலைக்கவும், மன அலை நுண்ணியதாக அமைய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இடைவிடாத ஆராய்ச்சியாலும்(மிகவும் கவனிக்கத்தக்கது) ஆதிநிலையான அறிவை அறிந்து விரிந்த மன நிலையில் பழக்கப்பதிவுகளின் விளைவையும், வலுவையும் உணரவேண்டும். பழக்கப்பதிவுகளை வேறு நல்ல உரிய பதிவுகளைக் கொண்டு மாற்றியமைக்கும் திட்டமிட்டு செயல்புரிந்துதான் விளக்கப்பதிவுகளுக்கு வலிவினைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். இப்படி உடல் செல்களின் இயக்கத்திற்கு(பழக்கப்பதிவுகள்) மூளைச் செல்களின் ஆற்றல் அதிகரிக்கும்போதுதான் உடல், புலன்கள் செல்களுடைய இயக்கங்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியும். இப்படி மாற்றியமைக்கும் திட்டமிட்ட பயிற்சிதான் தவம் எனப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். தவத்தின் மூலம் இறை உணர்வும், அற உணர்வும் செயலாகும்போது விளக்கத்தின் வழியே பழக்கத்தை கொண்டுவந்து உய்வு பெறலாம் என்கிறார் மகரிஷி அவர்கள்.
எனவே தவம், அகத்தாய்வு, குணநலப்பேறு, உடற்பயிற்சி மூலம் தவமும், அறமும் சித்தியாகும் என்கிறார். விழிப்பும், சிந்தனையும் முயற்சியும், திட்டமும் இவற்றிற்கு ஒப்ப செயலும் பின்பற்றி பழக்கத்தை வென்று விளக்கத்தில் வாழ்வோம் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இதற்கு மேலும் விளக்கப்பதிவை வெற்றிப் பெறச்செய்ய என்ன செய்யலாம்?
இதற்கு மேலும் என்பது தவம், அகத்தாய்வு செய்வதுடன் வேறு என்ன செய்து ‘விளக்கப்பதிவு பழக்கப்பதிவை வெற்றி அடையச் செய்யமுடியும்’ என்றால் சிந்தித்தே செயல்படவேண்டும். அறிவினரோடு சேர்ந்திருக்கச் சொல்கிறாள் அவ்வைத்தாய். சேர்ந்திருப்பது என்பதோடு, அறிவினரின் பிணைப்பை வலிமையாக்க அறிவினரை கனவிலும், நனவிலும் நினைக்கச் சொல்கிறாள். அவ்வைத்தாய் கூறுவதனை நினைவில் கொள்வோம்.
அறிவை அறிந்த அறிவினரைச் சேர்ந்திருப்பதும், அவரை கனவிலும் நனவிலும் காண்பது அவரது குணங்களைப்பற்றி அடிக்கடி நினைக்கச் செய்யுமாதலால், அது இயல்பூக்க நியதியின்படி நினைப்பவரின் ஆற்றல் அறிவினிலும் உடலினிலும் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் குணநலன்களில் மேம்படச் செய்யும்(METAMORPHOSIS OF CHARACTER). எனவே இவ்வாறாகத்தான் பழக்கப்பதிவுகளை செயலிழக்கச் செய்து விளக்கப்பதிவுகளுக்கு வலிமை சேர்த்து, பழக்கப்பதிவுகளிடம் விளக்கப்பதிவுகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்த நல்லுரையில் கூறப்படுவது நடைமுறையில் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. எனவே பழக்கப்பதிவிடம் விளக்கப்பதிவு தோற்றுப்போவதனால் மனம் சோர்ந்து விளக்கப்பதிவை விட்டுவிட்டு பழைய பழக்கப் பதிவின் வழியே சென்று மனிதன் மேலும் மேலும் துன்பமடைகிறான்.
வறுமை ஒரு சமுதாய நோய்:
வறுமையைப்பற்றி அவ்வைத்தாய் கூறுவதனை கவனிப்போம்.
கொடிது! கொடிது! வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை” . . . அவ்வையார்.
முதலில் வறுமையை ஒழிக்க வேண்டும். இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் போதிய அளவிற்கு பூர்த்தியாக வேண்டும். வறுமை கொடுமையிலும் கொடியது. இவர்களின் துன்பத்தை அளக்கவே முடியாது. இது ஒரு சமுதாய நோய். சமுதாயம்தான் தீர்வு காணவேண்டும். ஆனால் தனிப்பட்ட ‘மனிதன் வறுமை ஒழிய வேண்டும்’ என்கின்ற நல்லெண்ணத்தை வலுவாக மௌனமாக பரப்பலாம்.
வியப்பைத்தரும் வினா:
என்ன வினா அது? வறுமையில் இருப்பவர்களையும் தாண்டி, மூன்று தேவைகளும்(உணவு, உடை, உறைவிடம்) பூர்த்தியானவர்கள் ஏன் துன்பத்திற்குள்ளாகின்றனர் என்பது வியப்பைத்தரும் வினாவாக உள்ளது. வியப்பில்லை! நடைமுறையில் அவ்வாறுதான் உள்ளது. இத்தகைய துன்பத்தில் இருப்பவர்கள் பலவிதமாகக் காணப்படுகின்றனர். சிலர் வாழ்க்கை எனும் ஐம்புலன்-வணிகத்தில் பெரும்பாலும் நஷ்டமாகிய துன்பத்தையே (உடலில் நோய், அமைதியின்மை) மனக்கவலை வடிவில் அனுபவிக்கின்றனர். காரணம் சிந்திக்கத் தெரியவில்லை. எனவே சிந்தித்து செயல்படுவதில்லை.
என்ன சிந்திக்க வேண்டும்?
ஏன் நமக்கு மட்டும் துன்பம் வருகின்றது என சிந்திக்க வேண்டும்?
துன்பம் அதுவாக வருகின்றதா? அல்லது நாமாக வரவழைத்துக் கொள்கின்றோமா?
பிறவித்தொடராக வந்த நமக்கு யார் வழியாக வந்தது இந்த துன்பம் என சிந்திக்க வேண்டும்?
வாழ்க்கை எனும் ஐம்புலன்-வியாபாரத்தை/வணிகத்தை சரிவர நடத்தத் தெரியாமல் நஷ்டமாகிய துன்பத்தில்
இருக்கின்றோமா என்பதை சிந்திக்காமல் அறியாமையில் உள்ளனர்.
வாழ்வே துன்பமாக இருந்து விடுகின்றது அத்தகையவர்களுக்கு.
வாழ்க்கை என்பது எவ்வாறு வியாபாரம்/வணிகமாக உள்ளது?
வாழ்க்கை என்பது ஒரு வியாபாரத்தோடு ஒப்பிட்டு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளலாம். அதுவும் ஐம்புலன்-வியாபாரம் எனப்படுகின்றது, ஏன்? வணிகம் என்பது என்ன என்று அனைவரும் அறிவர். வணிகம் எதற்காக செய்யப்படுகின்றது? வியாரம்/வணிகம் என்பது பொருட்களை வாங்கி விற்று பணம் சம்பாதிப்பது. அவ்வாறு பொருட்களை வாங்கி விற்பதில் வாங்கிய விலையைவிட விற்கும் விலை அதிகமாக இருந்தால்தான் லாபம் ஈட்ட முடியும். வாழ்க்கை என்பது ஐம்புலன்- வியாபாரம்/வணிகம் என்று சொல்வதற்குக் காரணம் என்ன?
மனிதனின் முத்தொழில்கள் என்னென்ன?
எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று முத்தொழில்கள். முதலில் எண்ணமாக வருகின்றது. எண்ணமாக வருவது, தான் எண்ணியதாகவும் இருக்கலாம். அல்லது பிறருடைய எண்ணமும் நம்மிடம் வரலாம். எப்படி இருந்தாலும் அந்த எண்ணம் நல்ல எண்ணமாக இருந்து விளைவை எப்போதும் நன்மையையே அளிப்பதாக இருந்தால் அதனை நம்முள்ளே விடலாம். இல்லை எனில் அவ்வெண்ணத்தை உள்ளேவிடக்கூடாது. ‘ஒருமுறைதானே என்று தீய எண்ணத்தை உள்ளே விட்டுவிட்டால் மீண்டும் அத்தீய எண்ணத்தை வராமல் தடுப்பது அவ்வளவு எளிதன்று’ என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே ஐம்புலன்-வியாபாரத்தில்/வணிகத்தில் எண்ணம் என்பது வணிகத்தில் பொருளை வாங்குவதற்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளலாம்
எண்ணம் வந்த பிறகு அது வலிவு பெறுமானால் அது சொல்லாகவும், இன்னும் அதிகமாக வலிவு பெறுமானால் செயலாகவும் மாறும். இதனை வணிகத்தில் பொருட்களை விற்பதற்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளலாம். வணிகத்தில் பொருளை விற்கும் விலை வாங்கிய விலையை விட அதிகமாக இருந்தால் லாபமும், விற்கும் விலை வாங்கிய விலையை விட குறைவாக இருந்தால் நட்டமும் ஏற்படும். இதனை வாழ்கை எனும் ஐம்புலன்-வணிகத்தில் இன்பமாகவும், துன்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இன்பம்-லாபம்; துன்பம்-நட்டம்:
மனிதன் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை இன்பத்தையும்(லாபம்) துன்பத்தையும்(நஷ்டம்) அனுபவிக்கிறான். விளைவுகள் இன்பமாக இருந்தால் அது லாபம் எனவும், துன்பமாக இருந்தால் அது நட்டம் எனவும் கொள்ளப்படுகின்றது. மனிதன் ஐம்புலன்களின் வாயிலாகத்தான் செயல்களைச் செய்கிறான். எனவே வாழ்க்கையில் ஐம்புலன்கள் வழியாக செயல்கள் புரிந்து இன்பதுன்ப அனுபவங்களைப் பெறுவதால் மனிதனின் வாழ்க்கை ஐம்புலன்-வணிகம் எனக்கொள்ளப்படுகின்றது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும் நிலையில் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்காக கூறுவதே ‘வாழ்க்கை என்பது ஐம்புலன்-வியாபாரம்/வணிகம்’ என்பது. வியாபாரத்தில்/வணிகத்தில் பொருள் வாங்கி விற்று(பொருள்-பணம் பரிமாற்றம்) லாபம் சம்பாதிப்பதுபோல் மனிதன் வினைகளை செய்து(பொருட்களை வாங்குவது) அதன் விளைவாக வரும் விளைவு(பொருட்களை விற்பது) இன்பத்தையும்(லாபத்தையும்) துன்பத்தையும்(நஷ்டத்தையும்) வினை-விளைவு பரிமாற்றம் நடப்பது வணிகத்திற்கு ஒப்பாக இருப்பதால் வாழ்க்கையை புரிந்து தெளிவுடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ்க்கை ஐம்புலன்-வணிகம் எனப்படுகின்றது.
வணிகவியல்(Commerce)போல் வாழ்வியல்(Science of Living):
வணிகத்திற்கு ஒரு இயலை ஏற்படுத்தியுள்ளது போல், ஐம்புலன்-வணிகமான வாழ்க்கைக்கும் இயல் அவசியமாகின்றது. அது ஏற்கனவே ஏற்படுத்தியாகிவிட்டது இயற்கையால்/இறையால். வணிகம் முறையாக நடத்தி லாபம் சம்பாதிப்பதற்கு தனியாக இயல் ஏற்படுத்தப்பட்டு அதற்கு வணிகஇயல் (Commerce) என பெயரிடப்பட்டுள்ளது. பொருட்களின் பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பவனற்றை நீக்குவதற்கான வழிகளைப்பற்றியும் நிர்வாக வரவு-செலவு பற்றியும் மேற்கொள்ளும் படிப்பே வணிகவியல். அதுபோல் வாழ்க்கை என்கின்ற ஐம்புலன்-வணிகத்தில் இடையூறுகளை நீக்கி, எவ்வாறு நஷ்டத்தை தவிர்த்து லாபத்தை மட்டுமே ஈட்டுவதற்கான ஒரு படிப்பு அவசியம். அதனை இயலாக்கி வாழ்வியல்(Science of Living) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதுவே இருபதாம் நூற்றாண்டில் இயற்கை அளித்துள்ள மனவளக்கலையாகும்.
மூன்று தேவைகள் பூர்த்தியாகியும் துன்பத்திலுள்ளவர்களின் பல நிலைகள்;
1) மூன்று இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் கிடைத்து சிறிதளவு சிந்திப்பவர்கள் துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து விடுபட செய்வதறியாது தவிக்கின்றனர்.
2) சிறிதளவைவிட சற்று அதிகமாக சிந்திப்பவர்களுக்கு, துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து விடுபட அவ்வையாரின் நல்லுரை எட்டி, அறிவினரைச் சேர்ந்திருந்தாலும் அறிவினரைக் கனவிலும், நனவிலும் தொடர்ந்து நினைக்க முடிவதில்லை.
3) சிறிதளவைவிட சற்று அதிகமாக சிந்திப்பவர்களைவிட மேலும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு, துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து விடுபட அவ்வையாரின் நல்லுரை எட்டி, அதனை பின்பற்றி வாழ்ந்தாலும் பழக்கப்பதிவு அவர்கள் மேற்கொண்டுவரும் விளக்கப்பதிவை சாய்த்து விடுகின்றது.
துன்பம் இல்லாதவர்கள் யார் உளர் இவ்வுலகில்?
துன்பமே இல்லாதவர்கள் யாரும் இல்லை இவ்வுலகில்? ஞானிக்கும் துன்பம் உள்ளது முன்வினையின் காரணமாக. ஆனால் அத்துன்பத்தை எதிர்கொள்ளத் தெரிகின்றது அவருக்கு அறிவின் நிலை ஞானத்திற்கு உயர்ந்ததால். இதுவரை பெரும்பாலும் துன்பத்தை அனுபவிப்பதைப்பற்றியே வகைப்படுத்தி அவர்களின் நிலையை ஆராய்ந்தோம்.
அடுத்ததாக துன்பம் குறைவாகவும், இன்பமே அதிகமாகவும் அனுபவிப்பவர்கள் பற்றிய நிலையை சற்று அறிந்துகொள்வோம்.
இன்பமே உள்ளது வாழ்க்கையில், எனினும் அவ்வப்போது சிறிதளவு துன்பம் தலையைக்காட்டிவிட்டு போகின்ற ஒரு நிலையும் சமுதாயத்தில் காணப்படுகின்றது ஒருசிலருக்கு. எனவே அதனை அவர்கள் துன்பத்தில் இருப்பதாகக் கொள்வதில்லை. அதாவது வாழ்க்கையாகிய ஐம்புலன்-வணிகத்தில் அவர்களுக்கு நிகர லாபம்(Net gain) இன்பம் என வைத்துக் கொள்ளலாம்.
எனவே துன்பம் அதிகம் இல்லாதவர்களைப் பொருத்த வரையில் வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க அவசியமில்லாமல் போகின்றது.
சிந்திக்க அவசியமில்லை என்பதால் அது சரியாகிவிடுமா?
‘அவசியம்’, ‘அவசியமில்லை’ என்பதே சிந்திப்பதற்குக் கிடையாது. வாழ்வதற்கு மூச்சு அவசியமா அல்லது அவசியமில்லையா எனக் கேட்க முடியுமா? முடியாது. எனவே உயிர் இருக்கும் வரை மூச்சு அவசியமாக இருக்கின்றதோ அதுபோல் உயிர் உள்ள வரை சிந்தனையும் அவசியம். சிந்தித்தால்தான் மனிதன். இயற்கையைப் பொருத்த வரையில் யாவருமே சிந்திக்க வேண்டும். இறப்பு எப்போது வரும் என யாருக்கும் தெரியாதது போல் வினைப்பயனை அனுபவிக்க ஆன்மா பிறவி எடுத்துள்ளதால் கருமையப் பதிவுகளுக்கேற்ப துன்பமும் வரலாம்.
உலகியல் வாழ்க்கைக்கு பொருளைச் சேர்த்து வைப்பதுபோல், அருள் துறை வாழ்க்கைக்கு ஒழுக்கமாகிய புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். “வினைப்பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப் போக்க ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும்” என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும். அதற்கு சிந்தித்துச் செயல்படவேண்டும். சிந்தித்து செயல்படும் செயல்கள் புண்ணியமானதாகவே இருக்கும். இத்துடன் இன்றைய அறிவிற்கு விருந்தை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த விருந்தில்(19-10-2016-புதன்) மனக்கவலையை அகற்ற புனருத்தாரணம் செய்யப்பட்ட எளிய அணுகுமுறை ஆன்மீகமே அவசியம்; அது மனவளக்கலையே என்பதனை அறிந்து கொள்வோம். வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
![]()



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.