FFC – 271- செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 6/?
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
FFC – 271
அ.வி. 271
29-11-2017-புதன்
செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்- 6/?
கருமையம் –(பாகம்-1)
வாழ்க வளமுடன்!
இதுவரை ஐந்து சத்சங்கங்களில், ‘செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்’ என்கின்ற தலைப்பில். தத்துவம் மற்றும் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல், அவற்றின் விளைவு ஆகியவற்றைப் பற்றி, அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் ஆசிகளுடன், சிந்தனை செய்து, அறிவிற்கு விருந்து படைத்து அருந்தினோம். இன்று கருமையம் என்கின்ற தலைப்பில் சிந்தனை செய்து அறிவிற்கு விருந்து படைத்து அருந்த இருக்கிறோம். அதற்கு நவயுக வியாசரான நம் குருநாதரின் ஆசியும், மற்றும் வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் வந்த, வருகின்ற அருளாளர்களின் ஆசிகளும் வேண்டி இச் சத்சங்கத்தை தொடங்குகிறோம். வாழ்க வளமுடன்.
இயற்கையில் பதிதல் அதி அற்புதமான நிகழ்வு:
இப்பிரபஞ்ச நிகழ்ச்சிகளில் அதி அற்புதமான நிகழ்வு ‘பதிதல்’ ‘பதிதல்’ என்றால் என்ன? ஆங்கிலத்தில் registry, imprint எனலாம். இயற்கையின் சிகரமே எண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள். பதிதல் என்கின்ற அற்புதமான Phenomenon இயற்கைக்கு இல்லை எனில்(அப்படி நினைத்துப் பார்க்கவே முடியாது. இருந்தாலும் தெளிவு பெறுவதற்காக அவ்வாறு நினைக்க வேண்டியிருக்கின்றது) எண்ணத்திற்கு சிறப்பே இருந்திருக்காது. ஏன் எண்ணுதலே இருந்திருக்காது! எண்ணுதல் இல்லையெனில் உயிரினமே தோன்றியிருக்க முடியாது. முதல் முறை ஒன்றை எண்ணுவது வேண்டுமானால் நடக்கும். முதல் முறை எண்ணியது பதிதல் என்கின்ற Phenomenon இல்லை எனில் அந்த எண்ணம் பதியாது. எனவே எண்ணம் மீண்டும் பிரதிபலிக்காது. அந்த ஒரு எண்ணத்தையே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையாக, புதிதாக, எண்ண வேண்டியிருக்கும். எண்ணம் பதியவில்லை எனில் அது அழுத்தம் பெற வாய்ப்பில்லை. ஒரு முறை எண்ணியது பதிந்தால்தான் அடுத்த முறை எண்ணும்போது அது மீண்டும் பதிந்து அழுத்தம் பெறும். எண்ணம் பதியவில்லை எனில் ஒரே எண்ணத்தை பல முறை எண்ணினாலும் அது புதிய எண்ணமாகத்தான் இருக்கும் அறிவிற்கு. எண்ணம் பதிந்தால்தான் அதற்கு பின்னர் விளைவும் வரமுடியும்.
ஒருவரையொருவர் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது!!
‘நினைத்தல்’, (நினைத்தலும் எண்ணுதல்தான்) ‘நினைவு கொள்ளுதல்’, ‘ஞாபகம் வைத்தல்’ போன்ற எதுவுமே இயலாதுபோயிருக்கும். அப்படி ஒரு நிலை இருந்திருந்தால், அதனை கற்பனை செய்து பார்ப்போம். எப்படியிருக்கும்? இப்பிரபஞ்சமே உருவாகியிருக்காது. தாய் தன் குழந்தையை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. குழந்தை தாயை நினைவு வைத்துக்கொள்ள முடியாது. படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. உயிரினமே தோன்றியிருக்க முடியாது. ஒருவரையொருவர் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் முடியாது.
எண்ணுவது செயல். எது எண்ணுகின்றது? அறிவு எண்ணுகின்றது. செயல் ஒன்று இருந்தால் அதற்கான விளைவும் உண்டு என்பதால் எண்ணுகின்ற செயலுக்கான முதல்–விளைவு பதிதல். எண்ணியது சொல்லாக, விளைவாக வருகின்றது என்று சென்ற விருந்தில் பார்த்தோம். எனினும் எண்ணிய உடனே சொல்லாக வரவேண்டும் என்பதில்லை. எண்ணியதையே மீண்டும், மீண்டும் எண்ணி எண்ணி பதிந்து, பதிந்து அழுத்தம் பெற்று பிறகு சொல்லாகவும் வரலாம். வந்த சொல்லும் ‘என்ன சொன்னோம்’ என்று நினைவில் இருக்கின்றது அப்போது. எண்ணுகின்ற செயலுக்கான முதல்-விளைவு பதிதல் என்றால், எண்ணியது சொல்லாக வருவது இரண்டாவது விளைவு எனக்கொள்ளலாம். அல்லது தொடர் விளைவு என்றும் கொள்ளலாம்.
பதிதல் என்கின்ற அதி அற்புத நிகழ்வு பற்றி மேலும் அறிவோம்:
‘பதிதல்’ என்கின்ற இயற்கையின் அதி அற்புத நிகழ்ச்சி(Phenomenon) பற்றி மேலும் தெளிவு பெற இயற்கையின் ஆதிநிலையாகிய வெட்டவெளியிலிருந்து வருவோம்.
வெட்டவெளி(Eternal Space) நொறுங்கியதற்கான காரணம் எது?
- வெட்டவெளியின்(Eternal Space) தன்னிறுக்கஆற்றல்(self compressive force).
- வெட்டவெளி துகளானது நிகழ்வு. இந்த நிகழ்வில் செயலும் உள்ளது. விளைவும் உள்ளது.
- துகள் உருவானதில் எது செயல்? இறுக்கியது/நொறுக்கியது செயல் எனக்கொள்ளலாம்.
- விளைவு துகள்.
- துகள் தன்னைத்தானே ஏன் சுற்றவேண்டும்? நொறுங்கிய துகள் சும்மா இருந்திருக்கலாமே!
- ஏன் சுழன்றது?
- ‘சுழன்ற’ நிகழ்வில் எது செயல்? எது விளைவு என்று சிந்தித்தோமேயானால்
- சூழ்ந்தழுத்தியது செயல் என்றும்
- சுழன்றது விளைவு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
எனவே ஒவ்வொரு பிரபஞ்ச நிகழ்விலும் செயலும் உள்ளது, விளைவும் உள்ளது. ஒரு செயலுக்கு விளைவு ஒன்று என்றும், ஒரு முறைதான் அவ்விளைவு வரும் என்றும் சொல்ல முடியாது.
ஒரு உண்மையினை அறிந்து கொள்ள வேண்டும்.
நொறுக்கியது. துகளாகியது.
துகள் சுழன்றது.
காந்தம் உருவாகியது.
காந்தம் தன்மாற்றமாகியது.
எனவே ஒவ்வொரு பிரபஞ்ச நிகழ்விலும் செயல், அதற்கான முதல் விளைவு பதிதல், அதற்குப்பிறகு
தொடர் விளைவு உள்ளது.
எந்த ஒரு பிரபஞ்ச நிகழ்ச்சியும் பதிதல் இல்லாமல் நிகழ்வதில்லை.
உயிராற்றல் என்பது என்ன?
அணுவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அண்டமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கத்திலே பரமாணு முதல் விண், காற்று, நீர், நெருப்பு, கெட்டிப்பொருள் ஆகிய பஞ்சபூதங்கள் தோன்றின. பஞ்சபூதங்களிலிருந்து உலகம் தோன்றிய எல்லா இயக்கங்களும், அலையின் மூலமாக பரமாணுவில் பதிந்து விடுகின்றது. இவ்வாறு பரமாணுவில் பதிந்த பதிவுகள், கூட்டாக சேர்ந்து சேர்ந்து அணுவாகின பதிவுகள், அதற்கு மேலாக பேரணு என்ற பதிவுகள், உருவமான பதிவுகள், உயிர் என்ற நிலைக்கு வந்த பிறகு ஏற்பட்ட பதிவுகள், அவ்வளவும் சேர்ந்து மனிதனிடம் உள்ளன. இந்த பிரபஞ்சம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவாகக் கொண்ட ஒரு சிறு நுண் துகள்தான் மனிதனிடம் இயங்கிக் கொண்டுள்ள உயிராற்றல். அது அவ்வளவு காலம் பழமையானது. அவ்வளவு ஆற்றல் உடையது.
பிரபஞ்ச தோற்ற நிகழ்வுகளின் அகக்காட்சி எப்போது?
உயிராற்றல் அவ்வளவு காலம் பழமையானது என்பதாலும், அவ்வளவு ஆற்றல் உடையதாலும் மனிதனுக்கு என்ன பயன்? மனிதனுக்கு பயனில்லாமல் ஒன்றின் பெருமையை எடுத்துரைக்க அவனுக்கு அவசியமில்லையே! உயிராற்றல் அவ்வளவு காலம் பழமையானதால், பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பதிந்துள்ளதால், அனைத்தும் அகக்காட்சியாகும். இப்போது பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகளை மனவளக்கலைஞர்கள் அறிவரே! அது போதுமானதாகாதா? அகக்காட்சி அவசியமில்லையா? இப்போது தெரிந்து வைத்திருப்பது கருத்தியல்தான்.மகரிஷி அவர்கள் கண்டுபிடித்ததை கேட்டுவிட்டு அதனைக் கூறுவது கருத்தியல் ரீதியாக தெரிந்து கொண்டது. கருத்தியலே பயன்தராது. கருத்தியலே தெளிவினைத் தராது! கருத்தியலாக அறிந்தது செய்முறையாக உறுதிபடுத்த வேண்டும். அதாவது மீ்ண்டும் கருத்தியலாக அறிந்தது நம்முடைய கண்டுபிடிப்பாக வேண்டும். பிரபஞ்ச நிகழ்ச்சிகளின் அகக்காட்சி எவ்வாறு சாத்தியமாகின்றது? உயிர் பழமையானதால் பரமாணுவில் துகள் உருவானதிலிருந்து மனிதன் உருவானது வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பதிவாகி உள்ளன. மன அலை அந்த அளவிற்கு நுணுகி வந்தால் பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகள் அத்துனையும் அகத்தே காட்சியாக தோற்றமளிக்கின்றது என்கிறார்இயற்கை இயலை உருவாக்கித்தந்த அருட்தந்தையான நம்குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
எனவே கருத்தியலாக அறிவதோடு, செய்முறையாக அறிந்து உறுதிபடுத்தினால்தான் பண்பேற்றம் ஏற்படும். தனிமனிதனின் பண்பேற்றம்தான் தனிமனிதனுக்கும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயத்திற்கும் அவசியமாகின்றது. அப்போதுதான் தீமை தரக்கூடிய பழக்கப்பதிவுகள் தோற்று அருள்வழி விளக்கப்பதிவுகள் வெற்றி பெரும். அதற்கு கருத்தியலாக அறிந்ததை அகத்தே காணவேண்டும்.
இது எப்போது சாத்தியம்?
மனவளக்கலையின் இரண்டு பயிற்சிகளில் முதலாவதான தவத்தால் மன அலைச்சுழலை குறைத்து வருவதில் (1 cps delta frequency) வெற்றி காணவேண்டும். அதே நேரத்தில் மனவளக்கலையின் இரண்டாவது பயிற்சியான அகத்தாய்வினை செய்து அறுகுணசீரமைப்பில் முழுமையான வெற்றி அடைய வேண்டும்.
கண்டவர் ஏன் விண்டதில்லை?
இதற்கானக் காரணத்தை இப்போது ஆராய்வோம். இக்கூற்று ஆன்மீகத்தில் சொல்லப்படுவது ஒன்று. ஏன் அவ்வாறு சொல்லப்படுகின்றது? கடவுள் நிலையை விளக்க முடியாது என்று கருத்து இருந்து வருகின்றது(Brahmam cannot be comprehended). அப்படி யாராவது கடவுள் நிலையைக் கூறினால் அவர் கடவுள் நிலையை உள்ளவாறு உணரவில்லை என்று பொருள் கொள்ளப்படுகின்றது. கடவுள் நிலையை உள்ளதை உள்ளவாறு உணர்ந்திருந்தால் கடவுள் நிலையைக் கூறமுடியாது என்கின்ற கருத்தும் நிலவி வருகின்றது இதுவரை ஆன்மீகத்தில். ஆமாம் அது உண்மைதான்.
நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்’
நிலையை எவ்வாறு வாய்மொழியினால் கூறமுடியும்.
மேலும்,
தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கிச்சை வைத்து உயிர்க்குயிராய்த்
தழைத்ததெது மன வாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெல்லாம்
தம் தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதனை’
அறிந்தாலும் வார்த்தைகளால் பிறர்க்கு எவ்வாறு உவமைகாட்டி எடுத்துக் கூறமுடியும்?
ஆனால் இந்தநாள் விண்ஞானம் ஏற்றம் பெற்றதால் ….
இறைநிலை இவ்வாறிருக்க முந்தையோர்கள் அகத்தவத்தால் உணர்ந்ததை ஏன் அவர்களால் கூறமுடியவில்லை என்பதனை மகரிஷி அவர்கள் எடுத்துரைக்கிறார்.
முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்
மொழிவதற்கு உவமையின்றி முட்டி மோதி நின்றனர்
இந்த நாள் விண்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை
இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்.’ (ஞா.க:1661)
என்கிறார் காந்த தத்துவஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடவுள் நிலையை எவ்வாறு கூறமுடிகின்றது?
இறையை தெளிவாக அறிந்தவரும், அதனை தனது மாணாக்கர்களுக்குத் தெளிவாக கருத்தியலாக உணர்த்துகின்றவரும், வெறும் போதனை மட்டுமன்றி சாதிக்கக்கூடிய செய்முறைப்பயிற்சியாகிய தவம் மற்றும் அகத்தாய்வு பயிற்சியினை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘கண்டவர் விண்டதில்லை’ என்கின்ற கூற்றினை உடைத்திருக்கிறார். அது எவ்வாறு என்று அவர் வாய்மொழியாகவே அறிவோம்.
கண்டவர் ஏன் விண்டதில்லை?
ஆதியென்ற வெளியினிலே அணு எவ்வாறு
அவதரித்தது என்றறியப் போனார் எல்லாம்
ஆதியாம் நிலை அடைந்தார் அறிவு அங்கேது?
அறிவுநிலை அடைந்தபின்னர் அதை யூகிப்பார்
ஆதியே அணுவான காரணத்தை
அறிஞரெலாம் விளக்காதது இதனால் என்று
ஆதிநிலை, அணுநிலை இவ்விரண்டு மாகி
அறிந்தநிலையில் விளக்கம் பெற்று விட்டேன். (ஞா.க:1374)
என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
அணுநிலையில் உள்ள பிரபஞ்ச இரகசியப் பதிவுகளை உணர்கின்ற அளவிற்கு அவரது மனஅலைச்சுழல் நுணுகிவந்ததால் துகள்களிலிருந்து மனிதன் வரை உள்ள பிரபஞ்ச இரகசியங்களை யெல்லாம் வெட்டவெளிச்சம் ஆக்கிவிட்டார் மகரிஷி அவர்கள். இத்தகைய அருமை பெருமைகளை உடையது பதிதல் என்பது!
கருமையம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து அச்சிந்தனையில் பதிதலின் அருமை பெருமை பற்றி இது வரை ஆராய்ந்தோம். ஏன் பதிதலின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டியதாயிற்று? பதிதல் கருமையத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. அது பதிதலின் இயல்பு. ஆகவே பதிதலைப் பற்றி ஆராய வேண்டியிருந்தது. மனிதன் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கருமையத்தில் பதிவாகின்றது என்பதனைஅறிவு, தெளிவாக, முழுவதுமாக, பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவு தனது முத்தொழில்களைப் புரிவதில் விழிப்புணர்வோடு செயல்பட முடியும்.
கருமையத்தில் மனிதனுடைய செயல்கள் பதிகின்றது என்பதில் தெளிவு ஏற்படுவதற்கு, இயற்கையின் ‘பதிதல்’ என்கின்ற அதி அற்புத நிகழ்வு பற்றி கருமையம் முதற்பாகத்தில் அறிந்து கொண்டோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் (03-12-2017-ஞாயிறு) கருமையத்தின் இரண்டாம் பாகத்தில்
பதிதல் மனிதனிடம் எங்கு பதிவாகின்றது/நடக்கின்றது?
கருமையம் என்பது என்ன?
மனிதனின் இனிமையாக வாழ்விற்கு வேண்டிய பதிவுகள் எவை?
கருமையத்தூய்மையைக் கெடுக்கின்ற செயல்கள் யாவை?
மேலும் கருமையத்தை தூய்மை செய்வது எவ்வாறு?
ஆகிய வினாக்களுக்கு விடைளைத் தேடுவோம். வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
![]()







Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.