2017

Yearly Archives

  • FFC – 269 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 4/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 269
    அ.வி. 269

    22-11-2017-புதன்

    gurudevar

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 4/?

    செயல்

        இதுவரை எண்ணம், சொல் ஆகிய இரண்டைப்பற்றி சிந்தித்தோம்.  இன்று ‘நேரிடைச் செயல்’(எண்ணம், சொல் ஆகிய இரண்டையும் கடந்து, பிறர் அறிய நேரிடையாகச் செயல்புரிவது அல்லது மறைமுகமாகச் செய்வதும்) பற்றி அறிந்து கொள்வோம்.

         மனிதன் என்ன சடப்பொருளா, செயல் புரியாமல் இருப்பதற்கு? செயல் புரியாது மனிதன் வாழ முடியாது.  ஆனால் அச்செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில்தான் விழிப்போடு  கவனம் செலுத்த  வேண்டும்.  இதில் தான் குறைபாடு உள்ளது மனிதனிடம்.  மேலும் அறிவு விரைந்துணர் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு செயலின் விளைவை முன்னரே அறிந்து செயல்படவேண்டும். விரைந்துணர் அறிவாற்றலை நுண்மாண்நுழைபுலன்(perspicacity) என்றும் சொல்லலாம். மனிதன் தனித்து வாழமுடியாது.  மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பார்கள். மனிதன் சமுதாயத்தில்தான் வாழவேண்டும்.  அப்போது வாழ்க்கை வளம் உயரவேண்டுமெனில் மகரிஷி அவர்கள் கூறும் வாழ்க்கை வள  உயர்வுப் படிகளில் மூன்றாவதான நட்பு நலம் அவசியமாகின்றது.  நற்செயல்களின் மூலம் தான் வாழ்க்கை வள உயர்வுப்படியான நட்புநலத்தைப்  பெறமுடியும்.  இவற்றிற்கெல்லாம் காரணமாக உள்ளது செயல். அதுவும் அச்செயல் நற்செயலாக இருக்கவேண்டும்.

     செயலின் வித்து எண்ணம்:

         செயல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.  மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவது, ‘செயல்’. எண்ணம் சொல்லாக வருவதற்கு  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனில், ஆனால் எண்ணம் மீண்டும் மீண்டும் எண்ணி அழுத்தம் பெற்றுக் கொண்டே இருந்தால் எண்ணத்தின் தன்மையைப் பொருத்து முன்றாவதான  செயலாகவே வந்துவிடும். ஆகவே எண்ணமில்லாது சொல்லும்  இல்லை, செயலும் இல்லை. செயலுக்கு முன்னே எண்ணமாக இருந்து, எண்ணி, எண்ணி அழுத்தம் பெறும்போது எண்ணம் சொல்லையும் தாண்டி செயலுக்கு வரும்.  செயலின் வித்து எண்ணம்.  விதைக்கின்ற  விதைக்கேற்ற செடியே முளைக்கும். அதுபோல் எண்ணமாகிய வித்திற்கேற்பச்  செடியாகிய செயல் முளைக்கும்.  அதாவது எண்ணம் நல்லதாக இருந்தால், செயலும் நல்லதாக இருந்து செயலின் விளைவும் நன்மையாகவே இருக்கும்.  எண்ணம் தீயதாக இருந்தால், செயலும் தீயதாகி விளைவும் தீமையையே அளிக்கும்.  அத்தீமை பிறர்க்குமட்டுமல்லாது எண்ணுகின்றவருக்கே தீமையை அளிக்கும்.  

     செயலுக்கான வரையறை:

         செய்வது செயல் எனப்படுகின்றது. அவ்வளவுதானே! இதற்குக்கூடவா   வரையறை தேவையாக உள்ளது என  ஆச்சரியமாக இருக்கலாம்!  ஒன்றைப் பற்றி தெளிவாகவும், துல்லியமாகவும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அதனைப்பற்றிய வரையறை(definition) தேவைதான். அதனால்தான் திருவேதாத்திரியம் மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான செயல் பற்றிய வரையறையைக் கூறுகின்றது.  ‘ஒன்றேதான் பலவாகியது’ என்பது உண்மையாக இருந்தாலும்,   எவ்வாறு பொருள், மெய்ப்பொருள் என்று இரண்டாக வழங்கப்படுகின்றனவோ, அதுபோல், செயலை,  ‘செயல்’   ‘சிறந்த செயல்’ என்று இரண்டாகப் பிரிக்கிறார் மகரிஷி அவர்கள். காரணம், நற்செயல்கள் சமுதாயத்தில் பலரிடம் ஏதோ ஒருவகையில் அருகி வருவதால், செயலை இரண்டாகப் பிரித்து ‘செயல்’,  ‘சிறந்த செயல்’ என்கிறார். செயலை இரண்டாகப் பிரித்ததோடு இல்லாமல் சிறந்த செயலுக்கான வரையறையையும்(definition for deed to be good) கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  அதனை நினைவு கூர்வோம்.

     சிறந்த செயல்(06.01.1957)

    வாழ்வுக்கு ஆதரவும்,

              வளமும் தரும்செயலை

    தாழ்வெனக் கொள்ளுவது

              தருக்காகும் – ஆழ்ந்தறிந்து

    பிறருடைய நலம் காத்துத்

              தான் நலத்தைப்பெறுகின்ற

    திறமைதான் அறம் என்னும்

              சிறந்த செயல்.

                                                  . . . வேதாத்திரி மகரிஷி.

         தனது துணைவியார் அன்னை லோகாம்பாள் அம்மையார் மார்கழி மாதத்தில் கோலமிடும்போது, அதைச்சுற்றிலும்  ஏதேனும் ஒரு அருளுரையை மகரிஷி அவர்கள் எழுதுவது வழக்கம்.   அவ்வாறு 1957ஆம் வருடம் சனவரி மாதம், ஆறாம் நாளன்று ‘சிறந்த செயல்’ என்கின்ற தலைப்பில் இப்பாடலை அருளியிருக்கிறார்.  

     இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக்கொள்ளும் யுக்தி:

    [rev_slider home-slider-1]

          மேலும் மற்றும் ஒரு உண்மையினை தெரிந்து கொள்வோம். அருட்பிரகாச வள்ளார் அவர்களின் சூட்சும சரீரம் மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடகாலம் தங்கியிருந்தபோது  எழுதிய பாடல்கள் எல்லாம் ஞானப்பாடல்கள் என்பதனை மகரிஷி அவர்களே கூறியது நினைவிற் கொள்ளத்தக்கது.  அத்தகைய பாடல்களில் ஒன்றுதான் இப்போது நாம் சிந்தனைக்குத் துணை செய்ய எடுத்துக் கொண்டது. இங்கே வள்ளலாரையும் வணங்கி மானசீகக் குருவாக ஏற்றுக்கொள்வோம்.  மேலும் ஒரு இயல்பூக்க நியதியினைப் பயன்கொள்ளும் யுக்தியினையும் அறிந்து கொள்வோம். 06-01-1957 முன்னர்  நம்மில் பலர் பிறந்திருக்கமாட்டோம்.   அதற்கு முன்னரே பிறந்திருந்தாலும் சிலருக்கு இச்செய்யுள் இது வரை அறியப்படாமல்  இருந்து இறையருளால்  இன்று  அறியும்  வாய்ப்பு  கிட்டியிருக்கலாம்.   எனவே  பின்னோக்கி 06—01-1957 நாளிற்கு சென்று,  அன்று மகரிஷி அவர்கள் அருளிய அருளுரைக் காட்சியினை மனக்கண்களில்  கொண்டு வந்து(Visualise the event) மகிழ்ந்து இப்பாடலை அவர் என்ன ஞானோதயத்தில் அருளினாரோ அந்த ஞானோதயம் நமக்கும் உதிக்குமாறு விரும்பி எண்ணி இப்பாடலின் பொருளை விளங்கிக் கொள்வோம். இப்பாடல் வரிகள் சரித்திரம் படைத்துவிட்டன. இப்பாடலின் பொருளை விளங்கிக் கொண்டு அவ்வாறே நடந்துகொள்ள   இறையருளும், குருவருளும் நமக்கு துணை நிற்குமாக.

     செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

     இந்தவினாவிற்கு விடை ஏற்கனவே அறிந்திருந்தாலும், ‘வசிஷ்டர் வாயால் வந்தால் அது  வேதவாக்கு     என்பதற்கிணங்க இருபதாம் நூற்றாண்டின் வசிஷ்டரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாய் மொழியாகவே அறிவோம்.  அதற்கு பாடலின் பொருளுக்குள் செல்வோம்.  பாடலின் முதல் இரண்டு வரிகள் என்ன தெரிவிக்கின்றன? மனிதனின் வாழ்விற்கு ஆதரவாகவும், வளமாகவும் அமைவது அவனுடைய செயல்களே அன்றி வேறு எதுவுமில்லை. அப்படியானால் ஆதரவும் வளமும் அளிக்கின்ற மனிதனின் செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? இந்த கோணத்தில் இதுவரை சமுதாயம் சிந்தித்துள்ளதா? என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்?  ‘மனம்போல் வாழ்வு’ என்கின்ற ஆன்றோர் மொழியினையே இவ்வாறாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  எப்படி? ‘மனம்போல் வாழ்வு’ என்றால் மனதில் எழும் எண்ணங்களுக்கேற்ப வாழ்வு அமையும் என்று  பொருள். மனதில் எழும் எண்ணங்களே செயல்களாகவும் மலர்கின்றன.  ஆகவே ‘மனம்போல் வாழ்வு’ என்றால் மனதில் எழும் எண்ணங்களே செயல்களாக மலர்வதால், செயல்களுக்கேற்ப வாழ்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அமையும் என்கின்ற பொருளை  உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஆதரவு என்பது என்ன?

           பாடலின் முதல் வரியில்  மனித வாழ்விற்கு ஆதரவு வேண்டும், வளமும் வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  ஆதரவு என்பது என்ன? ஏன் அது வாழ்க்கைக்கு அவசியமாகின்றது?  ‘ஆதரவு’ என்பது

    •          ‘துணை நிற்கும் ஒத்துழைப்பு’,
    •          அன்பான துணை,
    •          பக்க பலம்

    என்றெல்லாம் பொருள்.  ‘ஆதரவு’ என்பது என்ன என்று அறிந்துகொண்டோம்.  ஆகவே மனிதவாழ்விற்கு ஆதரவு என்பது அவசியமா, இல்லையா என்பதனை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஆதரவு எங்கிருந்து வரும்/வருகின்றது?  நம்முள்ளே கோயில்கொண்டிருக்கும் உத்தமனிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் வரும்/வருகின்றது. ஆகவே

             நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமனும், சமுதாயமும்  நமக்கு துணையாக இருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமல்லவா?

             நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமன் மற்றும் சமுதாயத்தின்  துணை, அதுவும் அன்பான துணை வேண்டுமல்லவா?       

            நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமன் மற்றும் சமுதாயத்தின்  பக்கபலம் நமக்கு அவசியமில்லையா? 

              இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது முழுவதும் தேவையில்லை என்று யாராவது கூறமுடியுமா?  உடலில் உள்ள உறுப்புகள் போன்று வாழவைக்கின்ற சமுதாயத்தின் உறுப்புதானே தனிமனிதனும்.  எனவே  சமுதாயம் நலமுடன் வாழ்வதற்கு சமுதாயத்தின் உறுப்பான மனிதனின் ஒத்துழைப்பும், செயல்களும் அமைய வேண்டாம்?

     ஆதரவு எங்கிருந்து வரவேண்டும்?

         மீன் நீரில் வாழ்கின்றது. அதற்கு வேண்டிய ஆக்ஸிஜன் எங்கிருந்து கிடைக்கின்றது? தான் வாழும் நீரிலிருந்துதான் கிடைக்கின்றது. அதுபோல் தான் வாழும் சமுதாயத்திலிருந்துதான் மனிதனுக்கு ஆதரவு தேவையாக இருக்கின்றது.  ஆதரவு இல்லாமல் போனால் என்னவாகும்? ஆதரவு இல்லாமல் போனால், நம்முள் வீற்றிருக்கும் உத்தமனிடமிருந்தும் அருளையும், சமுதாயத்திலிருந்து அன்பையும் இழக்க வேண்டியிருக்கும்.

     பரிணாம வாகனத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளாள் இயற்கை அன்னை?

        இயற்கை/இறை வைத்திருந்த பரிணாம வாகனம் தற்போது யாரிடம் உள்ளது என வினா எழுகின்றது.  ஐந்தாம் அறிவு சீவன்கள் வரை தானாகவே ஓட்டி வந்த பரிணாம வாகனத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளாள் என்பது கேள்வி. யாரிடம் ஒப்படைக்க முடியும்?  ஆறாம் அறிவு சீவஇனத்திடம்தான் ஒப்படைக்க முடியும். ஆகவே இயற்கை அன்னை பரிணாம வாகனத்தை ஓட்டும் பொறுப்பை ஆறாமறிவு சீவனான மனிதனிடம்தான்  ஒப்படைத்துவிட்டாள். எனவே பரிணாம வாகனத்தை நிதானமாக, விபத்து இல்லாமல் ஓட்டி, சேருமிடம் சேரவேண்டும் மனிதன்.  அதனை இருபதாம் நூற்றாண்டிலிருந்து  செய்து கொண்டிருப்பதுதான் திருவேதாத்திரியம். மேலும் ஆழ்ந்து சிந்திப்போம்.

         உயிரினங்கள் வாழ்வதற்கு இப்புவியில் ஏற்ற சூழல் இருந்ததால் தான் இயற்கை அன்னை இப்புவியைத் தேர்ந்தெடுத்தாள். தேர்ந்தெடுத்து, பல்வேறு உயிரினங்களாகும் வரை பரிணாம வாகனத்தை தானே ஓட்டி வந்தவள்,  அறிவின் உச்ச நிலையான ஆறாம் அறிவுடைய மனிதகுல மாந்தர்களை ஈன்றெடுத்த பிறகு (மாந்தர்களாக தன்மாற்றம் அடைந்த பிறகு), பரிணாம வாகனத்தை ஓட்டும் பொறுப்பை மனிதர்களிடமே ஒப்படைத்துவிட்டாள்.   ஆகவே மனிதகுலம் இப்புவியில் அமைதியாக வாழ்வதற்கேற்ற சூழலை மனிதர்கள்தான் ஆறாம் அறிவைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழலுக்கு  ஆக்ஸிஜன் உள்ள காற்று மண்டலம் அவசியமாவதுபோல், மனிதன்  அமைதியாக உயிர் வாழ்வதற்கு அன்பும், கருணையுமாகிய சூழல் அவசியம்.  மனிதன் வாழ்வதற்கு அன்பை அளிக்கக் கூடிய ஆதரவு அவசியம்.  அதாவது இரண்டொழுக்கப் பண்பாடு மலர்வது அவசியம்.

     வளம் என்பது என்ன?

         பொருட் செல்வம் மட்டுமேவா வளம் எனக் கூறமுடியும்? வளம் என்பது நிறைவு என்று பொருள்.  பொருள் இருந்தாலும் நிறைவு வேண்டாமா? மேலும் வளர்ச்சிக்குரிய அம்சங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் அல்லது சிறந்த பயனைத் தரும் வகையிலான தன்மை என்றும் பொருள். ஆங்கிலத்தில் ‘prosperity’ என்று பொருள்.  எல்லாச் சிறப்புகளும், வசதிகளும் பெற்றுள்ள மேம்பட்ட நிலை வளம் என்பது.

        இத்தகைய ஆதரவும், வளமும் தருவது எது?  மனிதனுடைய செயல்கள்தான்.  அத்தகைய நன்மையைத் தரும் ‘செயலை’ உயர்வாகக் கருதி அயரா விழிப்பு   நிலையோடு செயல் புரியவேண்டும் மனிதன். செயலின் உன்னதத்தைக் கவனத்தில் கொள்ளாமல், அதனை தாழ்வாகக் கருதுவது தருக்காகும் என்கிறார் மகரிஷி அவர்கள். 

     தருக்கு’ என்றால் என்ன?

         தருக்கு என்பது உயர்வழக்குச்சொல்.  அதற்கான பொருள் அகங்காரம், கர்வம் என்று பொருள்.  ஆங்கிலத்தில் ‘arrogance’, ‘haughtiness’ என்று பொருள். தன்முனைப்பு (EGO) என்று கூட பொருள்.  எல்லா பாவங்களுக்கும் தலையாயது தன்முனைப்பு(EGOEdging God Out).  இறைவனைக் கண்டு கொள்வது எப்போது சாத்தியம்?  தன்முனைப்பு என்னும் திரையை விலக்கினால்தான் இறைவனை அறிவால் உணரமுடியும். அதுவரை கருத்தியலாக இறைவனை உணர்ந்ததாகக் கொண்டிருக்கலாம்.  ஆனால் செய்முறையாக இறைவனை அறிவால் உணரவேண்டுமெனில் தன்முனைப்பு என்கின்ற திரை விலக வேண்டும்.  ‘தன்முனைப்பு கரைந்துபோம்! காணும் தெய்வம்’ என்னும் மகரிஷி அவர்களின் பாடல் வரிகளை எப்போதும் நினைவில் கொள்வது ‘அயராவிழிப்புணர்வு பயிற்சியில்’ விரைவில் வெற்றி கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

     ஆழ்ந்தறிந்து …….

        ஆழ்ந்தறிந்து என்றால் என்ன?  ஆழ்ந்து+அறிந்து=ஆழ்ந்தறிந்து.  எதனையும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளாமல் சுயமாக சிந்தித்து  தெளிவு பெறவேண்டும். ‘To advise not to survive at the expense of others’ என்கின்ற அறிவுரையை வலியுறுத்தவே ‘பிறர்க்கு நலம் அளித்து தனக்கு நலம் அளிக்கின்ற செயல்புரியும் திறமைதான் அறம்’ என்கிறார்.  எனவே அறம் என்பது மனிதனின் மனிதத்தின் திறமையாகின்றது.  அறம் காக்கும் அறத்திறமை  இல்லாதுபோனால் மனிதன் மிருகமாகி விடுவான் என்று எச்சரிக்கிறார்.  மனிதர்கள் நான்கு வகையினராக உள்ளனர்  என்று கூறி அந்நிலையைப்  போக்கி உயர்நிலையான மாமனிதனை உருவாக்க மனவளக்கலையை அருளியுள்ளார் அருட்தந்தை அவர்கள்.   மனிதருள் யார் உயர்ந்தோர் என அவர் வாய்மொழியாகவே அறிந்து கொண்டு பயன் பெறுவோம்.

     மனிதருள் உயர்ந்தோர்(03-01-1959)

     மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

    மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

    மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன். 

                                                                    . . . மாக்கோலம்.

    makkaolamai vandha madhivirundhu

       எல்லோருமேதான் செயல்கள் புரிகின்றனர். ஆனால்  செயல்கள் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

       மனிதனுடைய செயல்(வினை) பதிவுகளை மூன்றாகப் பிரித்துள்ளனர் ஆன்றோர் பெருமக்கள். சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்பனவே அவை.  அவை என்னென்ன என்று மகரிஷி அவர்களின் வாய்மொழியாகவே அறிந்து கொள்வோம்.

     வினைகளில் மூன்று வகை(18-12-69)

    கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்

    உருவெடுத்த பின்கொண்ட வினைப்பதிவு பிராரப்தம்

    இருவகையும் கூடிஎழும் புகுவினையே ஆகாம்யம்

     ஒருவினையும் வீண்போகா உள்ளடங்கிப்பின் விளைவாம்.

                                                                  . . .  வேதாத்திரி மகரிஷி.

    ஒருவினையும் வீண்போகா உள்ளடங்கிப்பின் விளைவாம்.’ என்பதனை எப்போதும் நினைவிற் கொண்டு செயல்கள் ஆற்றுவோம். அயராவிழிப்புணர்வில் இருப்போம். பிரம்ஞானியின் லட்சணமே அயராவிழிப்புணர்வே.  விழிப்புணர்வே கடவுள், தெய்வம், இறை(Awareness is God).  தீயவினைகளை செய்வதற்கு அஞ்சவேண்டும் என்பதனை அறிவுறுத்த அறிஞர் திருவள்ளுவர் தீவினை அச்சம் என்கின்ற அதிகாரத்தை பயனில சொல்லாமைக்குப்பின் வைத்துள்ளார்.  ‘அச்சம் தவிர்’ என்பது ஏற்புடையதுதான் என்றாலும் தீயவினைகளுக்கு அஞ்ச வேண்டும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘தீவினைகளுக்கு அஞ்சுதல்’ என்பது  ‘செயலுக்கேற்ற விளைவு உண்டு’ என்னும் இயற்கை நீதியை மதித்தலேயாகும்(It is respecting the Law of Nature.  It is not to be taken as fear). பண்பின் உன்னதத்தைப் பற்றிய ஆங்கிலத்திலுள்ள பழமொழியினை நினைவு படுத்திக் கொள்வோம்.

     1)  Virtue is its own reward. –  நற்பண்பு தனக்குத்தானே பரிசாகும்.

     2)  Virtue is one and only nobility. நற்பண்பு ஒன்று மட்டுமே மேன்மக்களின் குணம். 

     அயரா விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஒர் யுக்தியைக் கடைபிடிப்போம். வாய்ப்பிருந்தால், யார் எங்கிருந்தாலும், எந்த பணியைச் செய்து கொண்டிருந்தாலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை முப்பது வினாடிகள் செலவு செய்தால் போதுமானது இப்பயிற்சிக்கு. இது அகத்தாய்வின் உயர்ந்த நிலை என்றே சொல்லாம்.  ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ‘யான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டேனா?’ என நம்மை நாமே கேட்டுக் கொள்வது.  அப்படி ஒரு வேளை இறையருளுக்கு பாத்திரமாகாத  செயல் புரிந்திருப்பின் அதனை மனதில் இருத்திக் கொண்டு, செய்யும் பணிக்கு குந்தகம் ஏற்படாமல், பணியைத் தொடரலாம். அடுத்த ஒரு மணிநேரம் வரும்போது அந்த ஒரு மணிநேரத்தில் இது போன்ற சோதனையைச் செய்யலாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டிருக்கலாம்.  இது அயரா விழிப்புணைர்வை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். ஆயுள் முழுவதும் இதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.  பழகப்பழக அயராவிழிப்புநிலை தானாகவே வந்துவிடும்.  ஒரு வேளை அடிக்கடி இறையருளுக்கு பாத்திரமாகாத நிலை ஏற்படாதாயின், அதற்கான வருத்தத்தையும் மன்னிப்பையும் இரவில் உறங்கும் முன் இறையிடமே ஒப்படைக்கலாம்.

    நற்செயல்களை தொய்வில்லாமல் செய்வதற்கு தினந்தோறும்  நாம் மேற்கொள்ளும் சத்சங்கம்  மேலும் உறுதுணையாக திகழும். வாழ்க வளமுடன்.

        செயல் விளைவுத் தத்துவமும், கருமையமும் என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.  முதல் நாளன்று தத்துவம் என்பது என்ன என்று அறிந்து கொண்டோம். அடுத்த  மூன்று சத்சங்கங்களில்,  மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு சிந்தித்து அறிவிற்கு விருந்து படைத்து உண்டோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(26-11-2017 ஞாயிறு) முத்தொழில்களுக்கும் விளைவு உண்டா, இல்லையா, விளைவு நிச்சயம் உண்டு எனில் விளைவு எவ்வாறு வருகின்றது என்பது பற்றியும் அறிவோம்.  

    வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!     வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-262

    வாழ்க மனித அறிவு                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-262

    20-11-2017 – திங்கள்

    விளக்கப்பதிவு என்றால் என்ன? அது எப்போது எதனிடம் ஏன் தோற்றுப் போகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                     வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • TP-801-FFC – 268செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 268
    அ.வி. 268

    19-11-2017-ஞாயிறு

    அறிவுத்தேனீக்கள்

     

    செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

    சொல்

    நன்முத்துக்கள்:

    நற்சொற்கள் நன்முத்துக்கள் போன்றவை. மனிதனின் முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ என்பது பற்றி ஆராய்வோம். சொல் வருவதற்கு முன்னர் அது எண்ணமாக உருவெடுத்த பிறகுதான் வரும். எனவே எண்ணம் வரும்போதே ஆராய்ந்து அவ்வெண்ணம் நல்லதாக இருந்தால் அதனை மனதில் வளர விடலாம். இல்லை எனில் துன்பம் விளைவிக்கும் என்று கருதினால், வேண்டாத செடியினை முளையிலேயே கிள்ளி எறிவதுபோல் தீய எண்ணங்களை முதன் முறையாகக்கூட உள்ளே விடக்கூடாது. ஒரு முறை விட்டுவிட்டாலே அந்த எண்ணம், அந்த மனஅலைச்சுழல் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அடுத்த கட்டமான (next stage) சொல்லாக வெளியே வந்துவிடும். அல்லது எண்ணம் அழுத்தம் அழுத்தமாகவும். தீவிரத்துடன் இருந்தால் சொல்லாக வராமல், மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான நேரிடை செயலாகவே வந்துவிடும்.

    எது இறைவழிபாடு?

    ‘சொல்லாகிய’ செயலுக்கும்  விளைவு நிச்சயம் உண்டு. நல்ல சொற்கள் இனியவையாக இருக்கும். நல்ல சொற்கள் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துபவையாக இருக்கும். ‘மனிதன்’ என்கின்ற சொல்லிற்கு இலக்கணமாக (மனம்+இதம்=மனிதன்) நல்ல சொற்கள் இதமாக இருக்கும். நல்ல சொற்களைப் பேசுபவருக்கும் இதமாக இருக்கும். யாரிடம் நல்ல சொற்கள் பேசப்படுகின்றனவோ அவருக்கும் இதமாக இருந்து இன்பத்தை அளிக்கும். எண்ணம் தீயதாக இருந்தால் அதனால் வரும் சொல்லும் தீயதாக இருக்கும்.

    மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் யாதெனில், பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து மதித்து இரங்கி உதவி செய்வதாகும். பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. புலிக்கு மானின் உணர்வு தெரியாது. தெரிந்தால் பாம்பிற்கும், புலிக்கும் உணவு இல்லை. பட்டினியால்  இறக்க வேண்டியதுதான். ஆனால் மனிதன் அப்படியல்லவே! இனியவை கூறாமல் துன்பம் தரும் சொற்களைக் கூறினால் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் இல்லையா? அதனால் நட்பு நலம் கெடும் இல்லையா? பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து இரக்கம் கொண்டு உதவி செய்வதில்தான் அறவுணர்வு மலர்கின்றது. ‘இறைவழி வாழும் அறவாழ்க்கையே இறைவழிபாடு’ என்றிருக்கும்போது இனிய (அன்பான) சொற்களைப் பேசுவதுதானே இறைவழி வாழும் இறைவழிபாடு.

    இறை உணர்வின் பிரதிபலிப்பே அறவுணர்வு:

    அறவுணர்வு என்பது இறைவுணர்வின் பிரதிபலிப்பே ஆகும் இல்லையா? இந்த உண்மையைக் கண்டுபிடித்த திருவள்ளுவர் 2048 வருடங்களுக்கு முன்னரே ‘இனியவை கூறல்’ என்கின்ற அதிகாரத்தை(எண் 10) வைத்து அதில் பத்து கோணங்களில் ‘இனியவை கூறலின்’ பயன்களை எடுத்துரைக்கிறார். மேலும் ‘புறங்கூறாமை’ பற்றி எடுத்துரைக்க ஒரு அதிகாரத்தையே(எண் 19) வைத்து அதில் வழக்கம் போல் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார் அறிவை அறிந்த அறிஞர் திருவள்ளுவர்.

    மேலும் இறையின் பிரதிநிதியான மனிதன் எப்போதும் தனக்கும் சமுதாயத்திற்கும் அவனது முத்தொழில்களில் அதிகமாக பயன்படுத்தும் சொற்கள் பயனுள்ளனவாகவே அமைய வேண்டும் என்பதனை அறிவுறுத்த ‘பயனில சொல்லாமை’ (அதிகாரம் எண் 20) என்கின்ற அதிகாரத்தையும் இயற்றியுள்ளார்.

    திருவள்ளுவரை நம்முடைய மானசீகக் குருவாக வணங்குவோம்:

    dheaivappulavar

    ‘இனியவை கூறல்’ மட்டுமே ‘சொல்’ வகையில் சேர்ந்ததல்ல, ‘புறங்கூறாமையும்’, ‘பயனில சொல்லாமையும்’ ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே என்பதனை அறிந்து ‘பேசும் சொல்லிலும், சொல்லை பயன் படுத்துவதிலும்’ விழிப்போடு இருக்க வேண்டும்.

      அறிவின் முழுமைப்பேற்றினை (முக்தி) அடைய அகத்தை ஆய்வு செய்து கொண்டுவரும் அகத்தாய்வாளர்களாகிய நாம், குருநாதரின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவரை நாமும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு திருவள்ளுவரின் அருளையும் பெறுவோம்.

        திருவள்ளுவர் அருளியுள்ள அந்த அந்த முப்பது குறட்பாக்களையும் ஒரு முறை வாசித்து பயன் பெறலாமே! மனனம் செய்து கூட பயன் பெறலாமே! பெறுவோமா? வாழ்க வளமுடன்.

         நேரம் கிடைக்கும்போது புனித நூலான திருக்குறள் நூலைத் திறந்து பார்த்து, அன்றைக்கு என்ன இயற்கை/இறை ஆன்மசாதகனுக்கு அறிவுறுத்த நினைக்கின்றதோ அதனை வாசித்து அப்போதே இன்புற்று, அந்த இன்புறுதல் தொடர, ‘இன்புறுதலாகவே’ மாற அதனை நடைமுறைக்கு கொண்டுவராலாமே!

    அந்த முப்பது குறட்பாக்களில் ஒரு சில குறட்பாக்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.

    இனியவை கூறல் – அதிகாரம் 10

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்.”                                             . . .  குறள் எண் 96

    பொருள்: ஒருவன் இன்சொற் சொல்லுவானாகில் பாவம் தேய்ந்து புண்ணியம் வளரும்.

    ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்று பட்டிணத்தடிகள் கூறியதுபோல் வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆன்மா உடலெடுத்துள்ளது. எனவே ஆன்ம-தூய்மை சாதகர்கள் சொல்லைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சொல்தானே என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

    புறங்கூறாமை அதிகாரம் – 19

    அறம்கூறான் அல்ல செயினும், ஒருவன்
    ‘புறம்கூறான்’ என்றல் இனிது                                         . . .  குறள் எண் 181

    பொருள்: அறநெறிகளைப் போற்றாதவனாகவும். அறச்செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறங்கூறாதிருத்தல் நன்று என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். இவ்வாறு கூறுவதால்  பாவங்களைச் செய்வது பரவாயில்லை என்று பொருள் அல்ல. மனிதன் வாழ்க்கையில் புறங்கூறாமையை பாவமாகக் கருதுவதில்லை என்பதனை மனிதன் உணரவேண்டும் என்பதனை திருவள்ளுவர் வலியுறுத்த விரும்புகிறார். பாவமாக கருதுவதையே பழக்க தோஷத்தால்(பழக்கப்பதிவின் அழுத்தத்தால்) மறந்து பாவங்களைச் தொடர்ந்து செய்து வருகிறான் மனிதன். அப்படியிருக்கும்போது இதுவரை பாவம் என்று கருதாத ‘புறங்கூறுதலை’ இனிமேலும் செய்து விடக்கூடாது எனக் கருதி புறங்கூறாமை அதிகாரத்தில் இக்குறளை முதலாவதாக வைத்துள்ளார். புறங்கூறுவதால் என்ன பாவம் நடக்கின்றது?

        ஒருவரின் image கெடுகின்றது.

        புறங்கூறப்படுவதால் இருவருக்கும் பகைமை ஏற்படலாம்.

       பகைமை ஏற்படின் துன்பங்கள் வரலாம்.

      இவ்வளவு துல்லியமாகவா மனிதன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கலாம். உயிரற்ற சடப்பொருட்களில் மிக மிக துல்லியமாக இயங்குகின்ற ஒழுங்காற்றலே மனிதனிடம் ஆறாம் அறிவாகத் திகழ்கின்றது என்பதனை நினைவிற் கொள்க.

     இவ்விடத்தில் மகரிஷியின் கண்டுபிடிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதை அவர் வாய் மொழியாகவே அறிவோம்.

    உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
    உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
    உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்,
    உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்.’

    சடப்பொருட்கள் அணுக்களாக கலைந்துவிடும்:

    சடப்பொருட்களில் துல்லியமாக ஒழுங்காற்றல் செயல்படவில்லையானால் அந்த சடப்பொருட்கள் சடப்பொருட்களாக காட்சியளிக்க முடியாது. அணுக்களாக கலைந்துவிடும்.

        சாலையில் மகிழுந்து ஓட்டுனர் மற்றொரு வாகனத்தின் மோதாது விபத்து நடக்காமல் இருக்க துல்லியமாகத்தான் ஓட்டிச் செல்ல வேண்டும். விபத்து நடந்தபோது ‘மயிர் இழையில்’ உயிர் தப்பினார் என்கிறோமே! அது என்ன? அவ்வாறிருக்கையில் மனிதனும் துல்லியமாகத்தான் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். அயராவிழிப்போடு வாழக்கற்றுக் கொண்டால் துல்லியமாக நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. இறையேதான் மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது, இறையிடம் உள்ள தன்மையைத்தானே மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இறையிடம் இல்லாத தன்மையையா எதிர்பார்க்கப்படுகின்றது? இறையிடம் இல்லாத தன்மை என்றே சொல்ல முடியாது. சொல்லால் நன்மையே விளைய வேண்டும் என்று சிந்தித்து வந்தோம். எப்போதும் இனியவை கூறுதலாலும், எப்போதும் புறங்கூறாதிருத்தலாலும் புண்ணியக்கணக்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாம் என்றும் அதனால் இறை அருள் பெருகிவரும் எனவும் சிந்தித்தோம். சொல்லின் மூன்றாவது வகையான ‘பயன் இல சொல்லாமை’யைப்பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிவோம்.

    பயன் இல சொல்லாமை:

    பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கள் பதடி எனல்.                                                             . . . குறள் எண் 196

    பொருள்: பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும்ப பல முறை சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க. மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

    திருவள்ளுவர் ‘பதர்’(பதடி) என்று சொல்கிறாரே என்ன அர்த்தம்? ஏன் பதருடன் ஒப்பிட்டு சொல்கிறார் என்பதனை கவனிப்போம். பதர் என்றால் உள்ளீடற்ற நெல்(empty ears of grain, chaff) மற்றும் உபயோகமற்ற நபர் (worthless person)என்று பொருள். சொல் எப்படி உருவாகிறது? சொல்லை வெளிப்படுத்துவதற்கு நாக்குதான் கருவி. இருப்பினும் அதற்கான ஆற்றல் சீவகாந்தம். சீவகாந்தம் என்பது என்ன? இறையின் ஆற்றல்தானே சீவகாந்தமாக செயலாற்றுகின்றது. சீவகாந்தத்தைப் பயன்படுத்தி பயனில்லாத சொற்களைப் பேசுவதால் இறை ஆற்றலான சீவகாந்தம் தான் வீணாகின்றது. எனவே யாருக்கும் பயனில்லாத சொல் பேசுதலை நெல்மணிகளுடன் பயன்படாது இருக்கும் பதருடன் ஒப்பிடுகிறார். பயன் படாது போனாலும் பரவாயில்லை. பேசுவரின் சீவ காந்தமும் விரயம் ஆகின்றது. கேட்பவரின் சீவகாந்தமும், நேரமும்(இறை ஆற்றல்) விரயமாகின்றது.

    மேலும் சொல் வகையைச் சார்ந்தவை எவை எவை?

    மேலும் அறிய வேண்டியது யாதெனில் நன்றியுணர்வும், பாராட்டுதலும் கூட ‘சொல் வகையை’ச் சார்ந்ததே. எப்படி? ஒருவர் செய்த உதவிக்கு பயன் பெற்றவர் நன்றி கூறுதல் அவசியம். ‘நன்றி’ என்று கூறுவது நாவினால் சொல்கின்ற சொல்தானே! இனியவை கூறல் அதிகாரத்திற்கு பின்னர் செய்நன்றி அறிதல் அதிகாரத்தை வைத்துள்ள காரணத்தை அறிய வேண்டும். ‘நன்றி’ என்று கூறுவது இனியவை கூறல்தானே! நன்றி கூறுதலோடு நின்றுவிடக்கூடாது. அதனை நினைவில் கொண்டு அவருக்கு ஏதாவது தேவை ஏற்படுகின்ற சூழல் வந்தால் திருப்பி உதவி செய்ய(reciprocation) வேண்டும்.

    செய்ந்நன்றி அறிதல்:

    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு”                                  . . . குறள் எண்-107

    பொருள்: துன்பத்தைப் போக்கினவரின் நட்பை ஏழுபிறப்பிலும் நினைப்பர் பெரியோர்.

    (எழுமை வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினைக் குறிக்கின்றது)

    பாராட்டு:

    பாராட்டு என்பதும் ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே. பாராட்டு என்பது உயர்வாகக் கூறுதல், மெச்சிப் புகழ்தல் என பொருளாகின்றது. ஒருவர் செய்த செயலால் பயன் வருகின்றபோது அச்செயலை பாராட்ட வேண்டும்.  ‘மிகைபடச் சொல்லேல்’ என அவ்வைத்தாய் ஆத்திச் சூடியில்(89) அறிவுரை கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

       பாராட்டு என்கின்ற சொல்லிற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கத்தினை நினைவு படுத்திக் கொள்வோம்.  பாராட்டு என்பது இரண்டு சொற்களைக் கொண்டது, பார்+ஆடு=பாராட்டு. ஒருவர் செய்த செயலால் உலகமே(பார்) பயனடைந்து அதனால் மகிழ்ச்சி பொங்கி ஆடுதலால் வரும் சொற்களே பாராட்டு எனப்படுகின்றது என்பார் மகரிஷி அவர்கள்.

    அவ்வைத்தாய் எவ்வாறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆத்திச்சூடியில் அமுதமொழிகளால் அறிவுரைகளை கூறுவதனை நினைவு கூர்வோம்.

     

    அவ்வையின் ‘சொல்வகை’யைச் சார்ந்த அமுதமொழிகள்:

    FFC-268-ஆத்திச்சூடி-image.jpg-3

     

    இவ்வாறாக ஆத்திச்சூடியில் 108 ஒரு வரி அறிவுரைகளில் சொல்லை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று, திருவள்ளுவர் ஒரு அறிவுரையை ஒரு அதிகாரத்தில் பத்து கோணங்களில் அறிவுறுத்துவதுபோல் அவரது சகோதரியும் நம்முடைய அருட் தாயுமான அவ்வை ‘பேசுவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பத்திற்கும் மேலான கோணங்களில் அறிவுறுத்துகிறார். அல்லது கற்றுத்தருகிறார் என்பதனை அறிந்து மகிழ்வோம். ஆத்திச்சூடி குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆன்மீகத்தில் வெற்றி பெரும் வரை அனைவருமே ஒரு வகையில் குழந்தைகள்தான். எனவே ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை படித்து அவ்வைத்தாய் கூறியுள்ளதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

    விரும்பும் இனியவை ஈடேற …. ?

    avvai-ffc-261

    எல்லோரும் இனியவையே விரும்புவர். ‘அறிவினர் சேர்தல், இனிது என்றும், அதனினும் இனிது, அவரை கனவிலும் நனவிலும் காண்பது தானே’ என்கின்ற அவ்வைத்தாய் ஆத்திச்சூடியில் ‘சான்றோர் இனத்திரு’ என்று ஒரு வரியில் கூறுகிறார். அதாவது சான்றோர்களிடம் சேர்ந்து இரு என்கிறார். இனியதை அனுபவிக்க சான்றோர்களிடம் சேர்ந்திருப்பவர் எவ்வாறு இருக்க வேண்டும்?

    சான்றோர்களிடம் சேர்ந்திருக்க …..?

    சான்றோர்களிடம் சேர்ந்திருப்பதற்கு என்ன சான்று? சான்றோர்களிடம் சார்ந்திருப்பவர் நல்ல சொற்களையே பேசாமல் இருந்தால் சான்றோரைச் சேர்ந்திருப்பதற்கு சான்றாகுமா? சான்றோர்களிடம் சேர்ந்திருத்தலின் பயனை அனுபவிக்க முடியுமா?

    எனவே சொற்களைப் பயன்படுத்துவதில் ‘மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்’ என்கின்ற அறிவுரையை நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும் என்பதே இதுவரை ‘சொல்’ பற்றி சிந்தித்ததின் பயன் என அறிந்து கொள்வோம்.

    நல்லதையே எண்ணுவோம். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். .

    எப்போதும் விழிப்புணர்வோடு இருப்போம்.

     இது வரை மனிதனின் முத்தொழில்களான சொல் பற்றி அறிந்து கொண்டோம். அடுத்ததாக ‘நேரிடை செயல்’(Direct action) பற்றி அடுத்த அறிவிற்கு விருந்தில்(22-11-2017-புதன்)

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்


     

    Loading