admin

Author Archives

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 8/?

     வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  192
    அறிவிற்கு விருந்து – அ.வி. – 192

    25-05-2016—புதன்

    பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவை விட மிகவும் வலுப்பெற்றவைகள்
     

     

    இன்று மனம் இயங்கும் பத்துப்படிகளை ஆராய்வோம். மனதின் பத்து படிகளாவன—

    10 stages of mind functioning

    Thanks : www.facebook.com/vethathirimaharishis.quotes             (இப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கும்)

    Thanks : www.facebook.com/vethathirimaharishis.quotes
    (இப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கும்)

    மனதிற்கான இத்தகையக் கண்டுபிடிப்புகள், இதுவரை வெளிவராத நிலையில் மகரிஷி அவர்கள் மனதை பற்றி வெகு நாள் ஆராய்ச்சி செய்து தந்துள்ளது இயற்கையின்/இறையின் அருட்கொடை. சென்னையில், ஆங்கிலத்தில் ஆசிரியர் பயிற்சி(Master course in English) நடத்துகின்றபோது, அருளுரையின் துவக்கத்தில் அவர் திருவாய் உதிர்த்த முத்தினை இப்போது நினைவிற்கு கொண்டு வந்து மகிழ்வோம், “I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind”, என்பதே அம்முத்தாகும்.

    உண்மைதானே! தன்முனைப்பின் அறிவியலைக் கூறி, சுத்த அத்வைதத்திற்கு மேலும் சிறப்பூட்டிய மனஇயல் வல்லுனருக்கு தன்முனைப்பு இருக்க வாய்ப்பேது? ‘தன்முனைப்பு கரைந்துபோம், காணும் தெய்வம்’ என்றும் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். ‘I am not telling out of ego – தன்முனைப்பின்றி நான் கூறுகிறேன்’ என்று மகரிஷி அவர்கள் கூறியிருப்பது அப்போதும் சரி, இப்போதும் சரி, அதே மகிழ்வைக் கொடுக்கின்றது. நீங்களும் அந்த மகிழ்வை அனுபவிக்கலாமே! குருவின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும். குருவின் உயர்வை புரிந்து கொண்டு ரசித்து, மதிக்க மதிக்க மனிதனின் தரமாற்றத்திற்கு இயல்பூக்க நியதியும் உறுதுணையாக இருக்கும். ரசித்தலும், மதித்தலும் இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றத்தின்(corollary) நிரூபணமாக இருக்கும்.
    மனதைப் பற்றிய, தெளிந்த, தெளிவு இருந்ததால்தான், மகரிஷி அவர்கள் மனதைப் பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் நூல்கள் இயற்ற முடிந்தது. மூன்று மறைந்து இருந்த மறைபொருட்களான இறை, உயிர், மனம் ஆகியவற்றை எளிமையாக, அறிவுப்பூர்வமாக வெளிப்படுத்தி வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் மகரிஷி அவர்கள்.

    மேலே உள்ள புகைப்படத்தில் மகரிஷி அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள சீடர்களுக்கு வகுப்பு எடுப்பதை காண்பதற்கு உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது. மனதை பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார் மகரிஷி அவர்கள். மனதின் பத்துப்படிகளை கரும்பலகையில் எழுதியிருக்கிறார்கள். 1980 களில் மகரிஷி அவர்களே பாடம் நடத்துவார்களாம். அப்போதெல்லாம் ஐந்து நாள் சிறப்புப் பயிற்சியாக நடத்துவாராம். பொதுவாக ஆன்மீக நிலையங்களில் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கரும்பலகை, மற்றும் chart ஆகியவற்றை வைத்து கல்லூரியிலே பாடம் நடத்துவதுபோல் மனவளக்கலையில் கருத்தியல் பாடங்கள் விரிவாக நடத்தப்படுகின்றது. செய்முறை பயிற்சிகளுக்குக் கூட கருத்தியல் விளங்கங்கள் உள்ளன. ஏன், எதற்காக செய்கிறோம் என்கின்ற விளக்கத்தோடுதான் ஒவ்வொரு பயிற்சியாளரும் செய்முறைப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

    மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்:

    மகரிஷி அவர்கள் மூன்றாம் வகுப்பு வரைதான் பள்ளிப்படிப்பு படித்திருக்கிறார். பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, பிறகு திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அந்த திண்ணைப்பள்ளிப்படிப்பு, பள்ளிப்படிப்பின் எட்டாம் வகுப்பு வரை சமம் என்று கூறுகிறார். ஆனால் அவரது மறைபொருள் கண்டுபிடிப்புகள், வாழ்வியல் உண்மைகள், சமுதாய அக்கறை சார்ந்த நலத்திட்டங்கள். உரைநடைகள், கவிகள் ஆகியவற்றை பாடங்களாக்கி பள்ளியிலிருந்து கல்லூரிகள் வரை முதுகலைப்பட்டப்படிப்புகளாக நடத்தப்படுகின்றன. மேலும் அவரது சிந்தனைகள் முனைவர் பட்டப்படிப்புக்கும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

    மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். அமெரிக்காவில், ஒரு நிகழ்ச்சியில் அன்பர்களால் கேட்கப்பட்ட எல்லா வினாக்களுக்கும் பதில்கள் அளித்த மகரிஷி அவர்களின் அருமையையும் பெருமையும் அறிந்து அதிசயத்தில் ஆழ்ந்துவிட்ட ஒரு அன்பர் மகரிஷி அவர்களை ‘In which University did you study Swamiji?| என்று கேட்டதற்கு ” I studied in the city of Universe) என்று பதிலளித்திருக்கிறார். உண்மைதானே அவர் கூறியது?! ‘அவனே அதுவானால் எல்லா உண்மைகளையும் அது சொல்லும்’ என்று கூறியுள்ளவராயிற்றே மகரிஷி அவர்கள். ஆகவே இத்தகைய மாமனிதரை நாம் குருவாக பெற்றது நம் ஆன்மா செய்த பூர்வபுண்ணியம்தான்.

    மனம் இயங்கும், இந்த பத்துப் படிகளில் முதல் ஏழு படிகள், அதாவது உணர்ச்சி முதல் அனுபவம் வரையில் நடைபெறுவற்கு உடற்கருவிகள் தேவைப்படுகின்றன. இந்த ஏழும், செயல்களால் நடைபெறுவதால் செயல் பதிவுகள் எனப்படுகின்றன. ஆராய்ச்சி, தெளிவு, முடிவு ஆகிய மற்ற மூன்றாலும் விளக்கங்கள் கிடைப்பதால் விளக்கப்பதிவுகள் எனப்படுகின்றது. எனவே பத்துப் படிகளில் முதல் ஏழு படிகள் பழக்கப்பதிவுகளாகவும், கடைசி மூன்று படிகள் விளக்கப்பதிவுகளாகவும் எடுத்துக் கொள்கிறோம்.

    இன்றைய மனிதகுலம் எங்கிருந்து வந்தது? ஆதி மனிதனிலிருந்து தொடங்கி பல லட்சம் தலைமுறைகளாகி இன்று வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய தலைமுறை. ஆகவே ஆதிமனிதனிலிருந்து கருத்தொடர் வழியாக வந்த பழக்கப்பதிவுகள் மிகவும் வலுப்பெற்றவைகளாக உள்ளன. ஆதிமனிதனுக்கு சிந்தனை கிடையாது. சிந்தனையில்லாமல் பல தலைமுறைகள் மனிதகுலம் வாழ்ந்திருக்கின்றது. பிறகுதான் மனிதன் சிந்தனை செய்ய ஆரம்பித்துள்ளான். ஆகவே சிந்தனை ஆற்றல் பெற்ற பிறகு, வந்த தலைமுறைகளைக் கணக்கில் கொண்டு சிந்தனையில்லாமல் மனிதன் வாழ்ந்த தலைமுறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே இருக்கும்.

    ஆகவே இதிலிருந்து அறிய வேண்டியது என்னவெனில் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே விளக்கப்பதிவைவிட பழக்கப்பதிவுகள் வலுப்பெற்றுள்ளதனை அறிய முடிகின்றது.

    மேலும் ஒரு தனிமனிதவாழ்க்கையை ஆராய்ச்சி செய்யும்போது, அவன் குழந்தையாகப் பிறந்தது முதல் விளக்கப் பதிவுகளை வெளியே கொண்டு வர வாய்ப்பில்லை. குழந்தையிடம், புலன்கள் மூலமும், உடலுறுப்புகள் மூலமும் தான் பழக்கப்பதிவுகள் செயல்படுகின்றன. அவனது சஞ்சித கா்மம் முடிந்து பிராரப்தம் ஆரம்பிக்கின்ற வயதான 12 லிருந்துதான் சிறிது சிறிதாக விளக்கப் பதிவுகள் செயல்பட ஆரம்பிக்கின்றன.

    இந்த இரண்டு பதிவுகளுமே செயலாவது என்பது சீவகாந்த ஆற்றலால்தான்.
    ஆகவே, புலன்கள் அல்லது உடல் உறுப்புகள் இயங்கும்போது, அவற்றிலுள்ள செல்கள்(cells) வழியாக சீவகாந்த ஆற்றல் ஓடி செல்களுடைய இணைப்பை சீரமைக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு அசைவிலும்(movement), செயலிலும்(action) சீவகாந்தம் ஓடி ஒரு வழித்தடம் அமைகின்றது. உடலில் சீவகாந்தம் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும் சீவகாந்தம், எவ்வாறு மழைநீர் முன்னர் ஓடிய பாதையிலேயே ஓடுகின்றதோ, அதுபோல் முன்னர் ஓடிய அதே பாதையிலேயே ஓடும். அவ்வாறு ஓடுகின்றபோது, அதே செயலைச் செய்ய மனதுக்கு செயலார்வம் ஏற்படுகின்றது. செயலில் ஆர்வம் ஏற்படுவதால், பழைய செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து வருகிறான். இதுதான் பழக்கப்பதிவு.
    மீண்டும் மீண்டும் அச்செயல் எந்த அளவிற்கு ஆர்வமிகுதியோடு செய்யப்பட்டு வருகின்றதோ, அந்த அளவிற்கு, அச்செயல்பதிவின் அழுத்தம் மிகவும் வலிமையாகிவிடும். அச்செயல் நற்செயலாக இருந்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அச்செயல் புலன்மயக்கத்தால் தூண்டப்பட்டதாக இருந்தால் அது தீயசெயலாகத்தான் இருக்கும். அவ்வாறிருக்கும் போது, விளக்கம் கிடைத்த பிறகு அத்தீயசெயலிருந்து விடுபட வேண்டும் என அறிவு விரும்பினாலும் மனதுடன் போராட வேண்டியிருக்கும்.
    மனதிற்கு மீண்டும், மீண்டும் சமாதானம் சொல்லித்தான்–தீவிர அகத்தாய்வு பயிற்சியால்தான் மெல்ல மெல்ல அத்தீயபழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அதுவரை மனதுடன் போராடத்தான் வேண்டியிருக்கும். தீயபழக்கத்திலிருந்து இவ்வாறாக வெளிவருவதில் 51 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டால்(மனதளவில் தெரிகின்ற அளவு) பிறகு 100 சதவிகிதம் வெற்றி என்பது நிச்சயம். தீயபழக்கத்திலிருந்து நற்பழக்கத்திற்கு மாற்றம் பெற்று வரும்போது சறுக்காமல் இருக்க மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    சறுக்கல்கள் ஒரு முறை அல்லது இரண்டு முறை என்றாலும் பரவாயில்லை. அதற்கு மேலும், மூன்று அல்லது அதற்கு மேல் சறுக்கி விழுவது நடந்துவிட்டால் பிறகு நற்பழக்கத்திற்கு மாற்றம் என்பது மிக மிக கடினமாகவே இருக்கும். இது எதிர்மறையாகக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, நெருப்பு என்பதால் நாக்கு சுட்டுவிடாது. எனவே நற்பழக்கத்திற்கான மனப்போராட்டத்தில் முனைப்பாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கடமையோடும் கருணையோடும் கூறும் வாழ்வியல் உண்மையாகும் இது. ஜாண் ஏறி முழம் சறுக்கினால் முன்னேற்றமே கிடையாது என்கிற எச்சரிக்கையுணர்வு எப்பொழுதும் இருக்கவேண்டும்.
    பழக்கப்பதிவு மிகவும் வலிமையாகி விட்டால் விளக்க வழியே வாழவேண்டும் என மனம் விரும்பினாலும், அதனால் முடிவதில்லை. மனம் போராடுகின்றது. தளர்வுறுகின்றது. விளக்கவழியே செல்வதற்கோ, வாழ்வதற்கோ, உடல்செல்களும், மனமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பதில்லை. முடிவில் பழக்க வழியே சென்று செயலாற்றுகிறான் மனிதன். இந்த பழக்கப்பதிவு, விளக்கப்பதிவை வெல்வதுதான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். அதனால் தான் ஆன்மீக பயிற்சியினை தொடர முடியாமல் பலா் கைவிட்டு விடுகின்றனா்.
    மனிதனால், விளக்கப்பதிவை விட்டுவிடவும் முடிவதில்லை. அதுவும் குறிப்பாக ஆன்மீக பயிற்சியில் ஆர்வம் கொண்டு, விளக்கங்கள் பெற்று வரும்போது. அவ்விளக்கங்களை விட்டு விடுவது என்பது முடியாது. ஏன்?
    காரணம், அறிவு தன்னை அறிவதற்காகவே மனித உடல் எடுத்து வந்துள்ளது. நல்ல கருமையப்பதிவுகளின் விளைவாக இந்த பிறவியில் தன்னை தூய்மை செய்துகொள்வதற்காகவே ஆன்மீக பயிற்சி செய்வதற்கு வந்துள்ளது.

     ஆகவே தூயவாழ்வு வாழ்வதற்கான விளக்கங்களை விட்டு விடவும் முடிவதில்லை. இருப்பினும் பழைய–விளக்கமில்லாப் பழக்கப்பதிவுகளே பெரும்பாலோர்களிடம் வெற்றி பெறுகின்றன. சிலரே போராட்டத்தில் வெற்றி பெறுகின்றனர். பழைய விளக்கமிலாப்–பழக்கப் பதிவுகளை தோல்வி அடையச்செய்து விளக்கப்பதிவில் வெற்றியடையதலே ஞானம் பெறுதலாகும்.
    விளக்க வழியே வாழ்வதற்கான பயிற்சியில், ஆரம்பத்தில் ஏற்படும் சிரமங்களைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். போராட்டம் என்பதில் வெற்றியும், தோல்வியும் உண்டு என்பதால், விளக்கப்பதிவு தோல்வி அடைகின்றது. பழக்கப்பதிவு வெற்றி கொள்கின்றது.
    மூளையிலுள்ள செல்களில், விளக்கப்பதிவுகள் ஏற்பட்டாலும் அது தொடர்ந்து செயல்படுவதற்கும் நிலைக்கவும் மன அலை நுண்ணியதாக அமைய வேண்டும். அது எப்போது, எவ்வாறு சாத்தியமாகும்?
    விளக்கப்பதிவுகளுக்கு வலுவேற்ற வேண்டும். அதுவரை உடல்செல்களின் இயக்கத்திற்கு மூளையில் உள்ள செல்களின் ஆற்றல் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உடல் மற்றும் புலன்களிலுள்ள செல்களின் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறாக மாற்றியமைக்கும் பயிற்சிதான் தவம் எனப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். தவத்தின் வழியாக, இறை உணர்வும், அறநெறியும் வாழ்வில் செயலாகும்போது விளக்கத்தின் வழியே பழக்கத்தைக் கொண்டு வந்து உய்வு பெறலாம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    திளைக்கும் விளைகடல் தீர்வுறு தோணி
    இளைப்பினை நீக்க இருவழி உண்டு
    கிளைக்கும் தனக்கும் அக்கேடில் முதல்வன்
    விளைக்கும் தவம், அறம் மேற்றுணையாமே
                           என்பது திருமூலர் வாக்கு.

         எனவே இதனை நினைவில் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தவம், அகத்தாய்வு, குணநலப்பேறு ஆகியவற்றால் தவமும், அறமும் சித்தியாகும் என்கிறார் மகரிஷி அவா்கள். விழிப்பும், சிந்தனையும், முயற்சியும், திட்டமும், இவற்றிற்கேற்ப செயலும் பின்பற்றி ‘பழக்கத்தை வெல்வோம். விளக்கத்தில் வாழ்வோம்’ என்று 21-12-1988 அன்று மௌனத்தில் மகரிஷி அவர்கள் கூறியதை, இப்போது நமக்குள் இருந்து சொல்வதுபோல் ஏற்றுக் கொண்டு ‘விளங்கிய வாழ்வில் செயல்படுவோம்.’ என உறுதி எடுத்துக் கொள்வோம்.

    அடுத்த விருந்தில், ஆன்மா எடுத்துள்ள பல்லாயிரம் பிறவிகளில், குறைந்தபட்சம், தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில், மனிதன் எத்தனை ஆயிரம் ஆன்மாக்களுடன் தொடர்பு கொண்டுள்ளான் என்பதனை அட்டவணையின் வாயிலாக அறிய இருக்கிறோம். அதனை அறிவதன் மூலம் அறிவின் முழுமைக்காக, முழு-ஒழுக்க வாழ்க்கை வாழ்வதில் ஏற்படும் போராட்டத்திற்குக் காரணமான பழக்கப்பதிவின் அழுத்தத்தை உணர்ந்து கொண்டு அதனை வெற்றி கொள்வதற்கு மகரிஷி அவர்கள் கூறும் வழியில் சத்சங்கம் உள்பட பயிற்சிகளை செய்து வெற்றி பெறுவோம். அதற்கு குருவருளும் திருவருளும் துணை நிற்குமாக.

    வாழ்க வளமுடன்.   தொடரும் 29-05-2016.

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-179

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    23-05-2016 – திங்கள்

    மனிதர்களுக்கு உள்ளத்தில் தெரிந்தோ, தெரியாமலோ கடவுள் மேல் விருப்பம் உண்டாவதற்கு மகரிஷி அவர்கள் கூறும் காரணம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? – 7/?

     வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    FFC_185-திருவள்ளுவர் படம்-Untitled

                “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்துஓம்பித்

    தேரினும் அஃதே துணை ” குறள் எண். 132.

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  191
    அறிவிற்கு விருந்து – அ.வி. – 191

     22-05-2016—ஞாயிறு

    வருந்தியும் ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

         தற்போது சத்சங்கத்தில் ஒழுக்கம் பற்றி சிந்தித்து வருவதால், திருவள்ளுவர், ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் அருளியுள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்றினை சத்சங்கத்தில் நினைவு கூர்ந்து வருகிறோம். அறிஞர் திருவள்ளுவர். இதுவரை ஒழுக்கம் உடமை அதிகாரத்தில் 131, 132, 136, 137,138 ஆகிய ஐந்து குறட்பாக்களை நினைவு படுத்திக் கொண்டோம். இன்று குறள் எண் 132-ஐ மீண்டும் எடுத்திக் கொண்டு, விரிவாக அதன் உட்பொருளை அறிவோம்.

    “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்துஓம்பித்
    தேரினும் அஃதே துணை ” குறள் எண். 132.

    பொருள்: வருந்தியும் ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்; அறங்கள் பலவற்றையும்(32 அறங்கள்) ஆராய்ந்து, இஃது இல்லாமல் முடியுமாவென்று கழித்துக் கழித்துப் பார்த்தாலும் ஒழுக்கமானது இன்றியமையாத துணையாகவே தெரிகின்றது.

    ஒழுக்கம் பற்றிய கண்டுபிடிப்பு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒழுக்கம், ‘ஒ, ழு, க், க, ம்’ என்கின்ற ஐந்தெழுத்தைக் கொண்டதாகவே மட்டும் உள்ளது. இந்த ஒழுக்கத்திலிருந்து சிறிதளவில் கூடத் (‘நூல் பிடித்துப் பார்க்க வேண்டுமா?) தவறிவிடக்கூடாதா என ஐயம் எழலாம்? நடைமுறையில் சாத்தியமா என்றும் மேலும் ஒரு ஐயமும் இருக்கலாம்! ஒழுக்கம் அவ்வளவு அவசியமா? இந்த ‘ஒழுக்கம்’ என்பது என்பது என்ன?
        ஒழுக்கம் என்பது வேறு ஒன்று அல்ல; மனிதனுக்கு அது புதிதும் அல்ல. ஒழுங்காற்றலாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற இயற்கையின்/இறையின் அம்சமாகவே மனிதன் இருப்பதால், இயற்கையின்/இறையின் நீதியை மதித்து நடத்தலே ஒழுக்கம் ஆகும்.

         இயற்கையின்/இறையின் தன்மாற்ற பூங்காவிலே கடைசியாக மலர்ந்த ‘பூ’ தான் மனிதன். இனிமேல் வேறு எந்தப் பூவும் மலர்வதற்கில்லை. எனவே எந்தப்பொருளிலிருந்து வந்தானோ மனிதன் அந்தப் பொருளின் தன்மையை வெளிப்படுத்துவதுதானே சரியாக இருக்கும்! இல்லை எனில் அது குறைதானே!

         ஒழுங்காற்றலாய் திகழ்கின்ற .இயற்கையின்/இறையின் கடைசி அம்சமான மனிதனிடம் ஒழுக்கம் வெளிப்படவில்லை எனில் இயற்கையின்/இறையின் தன்மாற்ற சுழற்சி முடிவுபெறாமல் தேக்கம்தான் ஏற்படும். அந்த தேக்கமேதான் இன்று உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் அமைதியற்ற நிலை.

    செயலுக்கேற்ற விளைவு உண்டு என்பது இயற்கை/இறை நீதி. எனவே சிறிதளவு ஒழுக்கம் தவறிவிட்டால் கூட அதற்கேற்ற விளைவு துன்பமாக வரத்தானே செய்யும்! இந்த சிறிதளவு துன்பத்தையும் ஏற்கத் தயாரா மனிதன்? சில நேரங்களில் இப்போது செய்யும் சிறு தவறுகூட பெரிய விளைவுகளைத் தந்துவிடுகின்றது. ஏற்கனவே மனிதனுக்குத் தெரியாமல், அறியாமையிலோ, உணர்ச்சிவசத்தாலோ, அலட்சியத்தாலோ பல்வேறு சமயங்களில் இந்தப் பிறவியிலோ முற்பிறவிகளிலோ செய்துள்ள சிறு சிறு தவறுகளுக்கு, ஒட்டுமொத்தமாக விளைவைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்ற தீயவினைப்பதிவுகள், இப்போது செய்யும் சிறு தவற்றால் அப்பதிவு தூண்டப்பட்டு(trigger) வாழ்க்கையையே பாதிக்கக் கூடிய பெரிய விளைவுகளை கூட ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் வாழ்க்கை முழுவதுமே பாதிப்பு நீடிப்பதாகக் கூட இருக்கலாம். எனவே  வாழ்க்கைப் பயணம் எனும் தொடர்வண்டி(Rail-–Life train) தடத்தைவிட்டு புரண்டு விடாமல் சீராக ஓடுவதற்கு ஒழுக்கம் எனும் தண்டவாளம்(rail track) எப்போதும் அவசியமே.

    வருந்தியும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கின்றது குறளின் பொருள். மேலும் அறங்கள் பலவற்றுள்ளும் இருமைக்குந் துணையாவது ஒழுக்கமே என்பதால், அவ்வொழுக்கத்தை விருப்பம் கொண்டு வருந்தியுங் காக்க வேண்டும் என்கின்றது குறளின் பொருள்.
    ‘அறங்கள் பலவற்றுள்’ எனப்படுகின்றது? ‘அறங்கள் பலவற்றுள்’ என்றால் என்னென்ன அவை என்கின்ற அவா எழுகின்றது. அறம் மனித வாழ்க்கைக்கு அவசியமாக உள்ளது என்றாலும், அறம் இதுவரை என்ன என்பதனை திட்டவட்டமாக சுருக்கமாக மனதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் எளிமையாக வரையறுக்கப்படவில்லை என்பதால் ‘அறங்கள் பலவற்றுள்’ எனப்படுகின்றது.

    ஆனால் ஆதிமனிதனிலிருந்து வளர்ந்து வருகின்ற மனிதஇனப் பரிணாமத்தில், முதன்முதலில் அறம் தோன்றிய அந்த நாளில், தான் அந்நிகழ்ச்சியினை நேரில் கண்டதுபோல் மனக்கண்களால் கண்டு அதனை வெளிப்படுத்த ஒரு கவியையே (ஞா.க. பாடல் எண். 494) இயற்றியுள்ளார் அருட்பாகவிஞரும் நமது அருட்குருவான வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதோடு அறத்தைப்பற்றித் தெரிவிப்பதனை நிறுத்திவிடவில்லை. மேலும் உரைநடையில் தொடர்கிறார். அறம் என்பதனை உரைநடையில் இறை உணர்வுடன் இணைத்து வரையறுக்கிறார். “அறத்தின் மாண்பு உணர்ந்து அறம் ஊக்கி அறம் காக்கும் தகைமையே இறை உணர்வு” என்கிறார். அறம் ஒழுகுதல் என்பது மனிதனுக்கு அவசியமாகின்றது. பிறஉயிர் படும் இன்பதுன்ப உணர்வுகளை தன்னுணர்வுபோல் உணர்ந்து இரக்கத்தோடு உதவி செய்தலே அறம் என்கிறார் வேதாத்திரிய அறவியல் ஏற்படுத்திய மகரிஷி அவர்கள்.

    அவ்வாறிருக்கும் போது அவ் இரக்கச்செயலில் என்னென்ன அடங்கியுள்ளன?
    அன்பும் கருணையும் அடங்கியுள்ளது.
    அன்பும், கருணையும் என்பவை எதனைச்சார்ந்தது? ஒழுக்கத்தைச் சார்ந்தது.
    மேலும் உதவி செய்வது எதனைச் சார்ந்தது? ஈகையை சார்ந்தது.
    அவ்வாறு ஈகை புரிவது எதனைச் சார்ந்தது? கடமையைச் சார்ந்தது.

    மனிதஇன அறம்தோன்றிய முதல் நாளைக் கண்டுபிடித்து, பலலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சியினை. நம்மையும் மனக்கண்களால் பார்க்கச் செய்த அறவியலாளர் எம்பெருமான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறத்தை வரையறுத்தபோது, ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று செம்மைகளையும் இணைத்து அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஒழுக்கமே கடமையாகவும், ஈகையாகவும் மலர்கின்றதைக் கவனிக்க வேண்டும். ஒழுக்கமில்லையானால் கடமையும் மலராது. ஈகையும் மலராது.

    மனிதகுலத்தில் அறம் தழைக்க வேண்டும். அதற்கு இறைஉணர்வு அவசியம். இறை உணர்வு என்பது ஆறாம் அறிவின் பேறு. எனவே இறை உணர்வு பேற்றினை விளக்குவதற்காக இறைஉணர்வும் அறநெறியும் என்கின்ற நூலை இயற்றியுள்ளார். இப்போது இன்றைய தலைப்பிற்குள் செல்வோம்.

    ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் இருப்பதில் உள்ள அறிவியல் உண்மையை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து சிந்திப்போம்.
    மகரிஷி அவர்கள் நவம்பா்-டிசம்பர் மாதங்களில் ஒரு மாதகாலம் அறிவுத்திருக்கோயில் ஆழியாரில் மௌன விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். அப்போது அவரது சீடர்களும் அதில் பங்கு கொள்ளலாம். மகரிஷி அவர்கள், மௌன நோன்பு ஏற்றுக்கொண்ட சீடர்களின் நன்மையைக் கருதி, தினந்தோறும் சிந்தனை விருந்திற்காக ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு பக்க அளவிலே, சிந்திக்க வேண்டியதை எழுதி, அதனை சீடர்களிடம் வழங்குவது வழக்கம். அவ்வாறாக தந்த ஞானமுத்துக்களில் ஒன்றுதான் 21-12-1988 அன்று (21-12-03 –உ.ச.ஆ) அருளிய “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?” என்பது.
    இதனைக் கூறுவதற்கானக் காரணம் இந்த தலைப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மற்றும் மௌன காலத்தில் சிந்திப்பதற்கு மகரிஷி அவர்கள் அத்தகையதொரு தலைப்பை சிந்திக்க அருளியதுமாகும். ஆன்மீக சாதனையாளர்களுக்கு ஏற்படுகின்ற சங்கடத்தைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அதே நேரத்தில், சங்கடமாக வரும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான உறுதியையும் அளிக்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வுறுதி யாதெனில்—

    வெற்றி பெறுவதற்கான மூன்று உறுதிகள்

    “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது”         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “பல ஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி   காலத்திலே மாற்றலாம், நலமடைந்து மனிதனாகி தெய்வமாக  உயரலாம்.”                                                             .  . .   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருஉயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்”                          . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    என்பதேயாகும்.

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டம் ஏன்” என்கின்ற ஆய்விற்கு, மனம் போராட்டம் செய்வதால் மனதை பற்றி ஏற்கனவே அறிந்து வைத்துள்ள உண்மையினை நினைவு படுத்திக் கொள்வோம். மனம் என்பது என்ன? மனம் என்பதனை உயிரின் படர்க்கை நிலை-–mind is the extended activity of life force என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே மனதை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால். உயிரைப்பற்றியும், அது படர்க்கை(extended activity) எய்துதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

    மனம் என்பது என்ன? படர்க்கைநிலை என்றால் என்ன?

    மனதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் உயிரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உயிருடன் மனம் தொடர்புடையது. உயிர் இருக்கும் வரைதான் மனம் இயங்கும். உயிர் என்பது என்ன? உயிர் என்பது, உடலில், நுண்ணிய துகள்களான விண்கள் சுழன்று ஓடிக் கொண்டிருப்பதேயாகும். சுழன்று கொண்டிருக்கின்ற துகளின் மையத்தில் சுழலா நிலை உள்ளது. அந்த சுழலாநிலையாகிய இருப்பு நிலைதான் அறிவு. அதாவது உயிர்த்துகளின் மையத்தில் இருப்பது அறிவு. உயிர்த்துகள்கள் சுழல்வதால் விரிவலை உருவாகின்றது. அந்த விரிவலைதான் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவனிலிருந்து காந்தம் உருவாவதால் அது சீவகாந்தம் எனப்படுகின்றது.

        ஆகவே உயிர்த்துகளின் மையத்தில் இருக்கின்ற அறிவு. உயிர்த்துகளிலிருந்து எழும், விரிகின்ற அலையாகிய சீவகாந்தத்தின் வழியாக, (அவரைச் செடியில், தண்டிலிருந்து கொடி படர்வதுபோல்) படர்க்கைநிலை எய்தி உடலுக்குள்ளாகவும் புலன்களுக்கு வெளியேயும் விரிந்து இயங்கும் நிலையான படர்க்கைநிலையை மனம் என்கிறார் மகரிஷி அவா்கள்.
    இப்படியான மனம் பத்து படிநிலைகளில் இயங்குகின்றது. அவற்றினை அடுத்த அறிவிற்கு விருந்தில்(25-05-2016-புதன்) அறிவோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவச் செல்வம்.

     

    Loading