admin

Author Archives

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 6/?

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு
    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 190
    அறிவிற்கு விருந்து – அ.வி. –   190
                                                               18-05-2016—புதன்
     ffc-190-titlekural_137 

     பொருள்:  ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத்தகாத பெரும் பழியை அடைவர்.

             ‘மேம்பாடு’ மற்றும் ‘பெரும் பழி’ என்பது பற்றி,

             அறிஞர் திருவள்ளுவர் நாமெல்லாம் உய்ய வேண்டும் என்று விரும்பி,

             மீண்டும் பூவுலகிற்கு வந்து, நேரிடையாகவே நமக்கெல்லாம், ‘ஒழுக்கம்’ என்கின்ற பொருள் பற்றி கூற விரும்பினால்,

             எவ்வளவுத் தெளிவாகவும், எவ்வளவு அக்கறையுடனும் இப்போதுள்ள சமுதாயச் சூழலில் விளக்குவாரோ,

             அதில் எள்ளளவும்(சிறிதும்) குறையாமல்,

             இப்போது நாம் அறிந்து கொள்ள திருவள்ளுவர் சூக்குமமாக எழுந்தருளி சத்தசங்கத்தை நடத்தித்தருமாறு அவரை இறைஞ்சுகிறோம்.

            இந்தக் குறளின் பொருளை அறிந்து திருவள்ளுவரை போற்றி மகிழ்வோம். அதே நேரத்தில் திருவள்ளுவரின் கீழ்படிதலுள்ள மாணவர்களாகத் திகழ்ந்து ஒழுக்கச்சீலர்களாக வாழ்ந்து, மகரிஷி அவர்கள் விரும்புகின்றவாறு இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவோமாக!

        மேம்பாடு என்றால் என்ன? இருக்கும் நிலையிலிருந்து அடையும் உயர்வான நிலை(upliftment; betterment). அப்படியானால் எது மேம்பாடு அடைய வேண்டும்? யாருக்கு மேம்பாடு தேவை? அறிவு மேம்பாடு அடைய வேண்டும். ஆன்மாவிற்கு மேம்பாடு தேவை.   ஆன்மா எதற்காக மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டிருக்கின்றது என்பதனை, அனைவருமே, வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே அறிந்ததன் மூலம் அறிவர். ஆன்மா தன்னைத் தூய்மை செய்துகொண்டு பிறவிப்பயனை அடைய வேண்டும்.

       ஆன்மா, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம்(3,25,000) பிறவிகளாக ஒழுக்கமின்மையால் வந்துள்ள தன்முனைப்பு, பாவப்பதிவு, மாயை ஆகிய களங்கங்களை ஏற்று பிறவித்துன்பத்தை அனுபவித்து வருகின்றது. எனவே, இப்பிறவியிலாவது, ஆன்மா பல லட்சம் பிறவிகளாக ஏற்றி வந்துள்ள பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொண்டு மனவளக்கலையின் இறுதிப்பயனான ‘அறிவு முழுமை’ அடைதலையே ‘மேம்பாடு’ என்றும் அதனை ஒழுக்கத்தால்தான் அடையலாம் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.

           மனிதன் ஒழுக்கம் தவறும்போது, எப்போதுமே விழிப்புடன் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற  இறைக்கும், மனிதனுக்கும் இடையே, திரையை விரித்துவிடும் தன்முனைப்பு.      

            அடுத்ததாக பொய், களவு, சூது, கற்பழிப்பு, கொலை போன்ற பஞ்சமகா பாதகங்கள் செய்ய நேரிடலாம்.

        அடுத்ததாக, எதனை அறிவதற்காக ஆன்மா பிறவி எடுத்ததோ, அதனை மறந்து மாயையில் சிக்கித் தவிக்கலாம் அன்றோ!

       இதனைத்தான் திருவள்ளுவர் ‘ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் ‘பெரும் பழியை’ அடைவர்’ என்கிறார். ஏனெனில் ஒழுக்கம் என்பது என்பது என்ன? ஒழுக்கம் என்பது ‘ஒ, ழு, க், க, ம்’ என்கின்ற வெறும் ஐந்தெழுத்துக்களால் ஆனதல்லவே! மேலானதான நெறியைப்பின்பற்றி ஒழுகுவதனை, ஒழுக்கம் என்றும், அதனை உயிரைவிட மேலானதாகக் கருதப்படவேண்டும் என்றும் கூறுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.  எனவே அனைவருமே ஒழுக்க வாழ்வு வாழ்ந்திடல் அவசியம். வேதாத்திரிய உலக சமாதானத் திட்டங்கள் அமுல் படுத்திய நிலையில் எல்லோரையும் ஒழுக்கத்துடன் வாழ இயற்கை/இறை வழி செய்யும்.

       வேதாத்திரிய ‘ஒழுக்கத்தின்’ வரையறையின்படி ஒழுக்கம் என்பது புண்ணியம் என்றும், ஒழுக்கமின்மை புண்ணியத்திற்கு எதிரான பாவம் என்பதனை அறிவோம்.   இருப்பினும் எண்ணிறந்த அருளாளர்களின் வாயிலாகக் இவ்வளவு விளக்கங்கள்  கிடைத்திருந்தாலும், சமுதாயம், ஒழுக்கம் என்கின்ற ரயில் தண்டவாளப் பாதையில்(rail track), வாழ்க்கை எனும் ரயிலை(Life train) ஓட்டமுடியாமல் தவிக்கின்றது.

        ஒழுக்கத்தை உடமை என்று திருவள்ளுவர் இரண்டாயிரத்து நாற்பத்தோரு வருடங்கள் முன்னரே அறிவுறுத்தியும், இன்னமும் ஒழுக்கத்தை தனது சொத்தாக, உடமையாக ஆக்கிக் கொள்ளாமல் ஏழ்மையிலேயே வாழ்ந்து வருகின்றது சமுதாயம். விளைவாக, மனிதகுலம் தனது பூர்வீக சொத்தான அமைதியினை(Peace is the hereditary wealth of entire Humanity. Everyman is the legal heir to enjoy the precious wealth of Peace) அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது. காரணம், மகரிஷி அவர்கள் கூறுகின்ற ‘மனிதனிடம் உள்ள தீமை பழக்கம்’ என்பதே.   எந்தப் பழக்கத்தையும் மனிதன் பழகி, அது வழக்கமாகி விட்டால், அதனை ஒரு பிறவி காலத்திலே கிடைக்கின்ற விளக்கப்பதிவால் போக்கிக் கொள்வது அரிதாக இருக்கின்றது.

       இருந்தாலும், பல்லாயிரம் பிறவிகளாக ஏற்றப் பழிச்சுமைப் பதிவுகளை, ஒரு பிறவி காலத்திலே மாற்றி அமைக்கலாம், அதற்கு இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் அகத்தவமும், தற்சோதனையும் என்று கூறி, நமக்கெல்லாம் தைரியத்தையும், உற்சாகத்தையும், அளித்துக் கொண்டு, உற்றதுணையாக மகரிஷி அவர்கள் இருப்பதனை அனுபவப் பூர்வமாக விளங்கிக் கொள்வோமாக!

       ‘வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுதல்’ என்று எல்லா அருளாளர்களும் கூறுகின்றனர். அதனை ஒவ்வொரு இறை உணர் ஆன்மீக சாதகர்களும்  உறுதிபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை அம்முறையில் செவ்வனே வாழ்வது ஒன்றே இயற்கையின் எதார்த்தத்தை அறிந்த அறிவின் உயர்ந்த நிலையை காட்டுவதாகும்.

       வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே கண்டுபிடிக்க வேண்டும். அறிவின் ஏழாவது செயல்பாடு என்ன என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ‘தன்னிலை உணர்வது’ என்பது இயற்கையின் வளங்களில் சிகரமானது என்பதனை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ‘தன்னிலை உணர்வது’ என்பது இயற்கையின் வளங்களில் சிகரமானது என்பதனை ஏற்க அறிவு மறுக்கலாம். சிந்தித்துப்பார்த்தால் தன்னிலை உணர்தல் என்பது ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதர்களுக்கு ஏற்ப பொருத்தமானப் பேறாகும்.   வாழ்வின் நோக்கம் என்ன என்பதனை மகரிஷி அவர்கள், ‘வாழ்வின் நோக்கம் என்ன’ என்று கண்டுபிடித்த   அனுபவத்தை, அவர் அருளியுள்ள இன்பம், இன்பம், இன்பம், இன்பம்(ஞா.க. எண். 1849 ) என்கின்ற பாடல் வழியாக விளங்கிக்கொள்வது வாழ்வின் நோக்கம் என்ன என்கின்ற ஆராய்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். ஏதாவது ஐயங்கள் இருப்பின், அவை நீங்கி, வாழ்வின் நோக்கம் இறைஉணர்வு பெறுவதன் மனவுரு-மனத்தோற்றம் (mental picture — Concept of Realisation is to be understood first) ஏற்படும். முயற்சி செய்வோம்.

    தெளிவு பிறக்கட்டும்! தெளிவு பிறக்கட்டும்!! தெளிவு பிறக்கட்டும்!!!வாழ்க வளமுடன்.

    எனவே இச்சூழலில்தான் ழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்று அறிஞர் ரூஸோ கூறியதை அறிந்து சத்சங்கத்தில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்’ என்கின்ற தலைப்பில் ஆறாவது நாளாக சிந்தித்து வருகிறோம். இப்போது தலைப்பை ஒட்டிய சிந்தனைக்குள் செல்வோம்.

    ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம் என்ன? முதன் அறிவின்—அறியவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராட வேண்டியிருக்கின்றது என்கின்ற எதார்த்தத்தை கூறுவதோடு நின்று விடாமல் அதற்கான அறிவியல் விளக்கமும் தருகிறார். எதார்த்தத்தை மட்டும் கூறியிருக்கலாம். ஆனால் அதனுள் மறைந்துள்ள அறிவியல் உண்மையையும் கூறுகிறார். ஏன்? எந்த ஒரு குறைபாட்டையும், அதனை சரி செய்வதில் உள்ள சிரமங்களை கூறுவதோடு மட்டும் இருந்துவிடாமல்,

       அந்தக் குறைபாடுகள் ஏன் வந்தன,

       அதனைச் சரிசெய்வதில் என்னென்ன சிரமங்கள் ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்கின்ற விளக்கங்களையும் கூறுவதால், தனிமனிதன் நிலையில், மனிதன் தனது குறைபாட்டினை சரி செய்துகொள்ளும் பயிற்சியில் உறுதியும், வெற்றி அடைவோம் என்கின்ற நம்பிக்கையும் ஏற்பட்டு தன்னைத்திருத்திக் கொள்வதில் தளராது விடாமுயற்சி செய்து வெற்றி கொள்ள முடியும்.

        குறைபாடு என்பது ஒரு தனிமனிதனிடம் மட்டும் இல்லை. பல கோடி தனிமனிதர்களைக் கொண்டதுதான் இந்த சமுதாயம். ஆகவே ஒரு தனிமனிதன் திருந்தியதால் வரும் பயன் மட்டுமே போதாது இந்த சமுதாயத்திற்கு.   சமுதாயத்தில் திருந்திய நல்வாழ்வு வாழாத அனைவருமே திருந்தி, நல்வழியில் வாழ வேண்டும்.

       ஆகவே சமுதாய அளவில் குறைபாடுகளைத் திருத்துவதற்கு, சமுதாயப் பொறுப்பாளர்கள்

    • சரியான நடவடிக்கைகளையும் எடுக்கவும்,
    • அதற்கான சீரான திட்டங்களையும்,
    • எவ்விடத்தில்,
    • எப்போது அத்திட்டங்களை
    • எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்று முயலும்போது,
    • ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம்’ கவனத்தில் கொண்டால் சிறப்பாக அமைய உதவியாக இருக்கும்.

        உதாரணத்திற்கு ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ போன்ற ஆன்றோர்கள் மொழிந்துள்ளதை கவனத்தில் கொண்டால், “ஆளும் வளரனும், அறிவும் வளரனும்” என்கின்ற திரைப்படப் பாடல் ஒன்று கூறுவதுபோல் குழந்தையிலிருந்து உடல் வளர்ந்து வருவதுபோல், அறிவும் வளரவேண்டியிருப்பதால், மாணவர்களிடையே ஒழுக்கத்தை இயல்பாக மலரச் செய்வதற்கு, பள்ளிக்கல்வியிலே ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை(ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள்) வாழ்க்கையில் மிக மிக அவசியமான, ஒழுக்கத்திற்கு முதல் கவனம் கொடுக்க வேண்டியிருப்பதால், மற்ற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியம்போல் கூடுதலாகவே  முக்கியத்துவம் கொடுத்து, ஒழுக்கத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும்.

         ஒழுக்கத்தை இயலாக்கிடவேண்டும். மற்ற பாடங்களில் காட்டும் ஆர்வத்தைவிட மாணவர்கள் இளம் வயதில் ஒழுக்கவியல் பாடத்தில் அதிக கவனமும், ஆர்வமும் காட்டுவர். ஏனெனில் ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக திகழ்வதால், அது ஒழுக்கத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருக்கின்றது. அதற்கு, இளம்வயது, பிராரப்த கர்மா சோ்த்துக் கொள்ளாத  பருவம் சரியானது. ஆகவே மற்ற பாடங்களில் உள்ள ஆர்வத்தைவிட ஒழுக்கவியல் பாடம் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் மாணவர்கள்.

       ஒழுக்கம் என்பது மரபணுவுடன் தொடர்புடையதால், தொடர்ந்த முறையான, பன்னிரண்டு வருட கருத்தியல் மற்றும் செய்முறைப் பயிற்சியாலன்றி ஒழுக்கப்பண்பை, மரபணுவில் பதிய வைக்க இயலாது. மரபணுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு நூறு ஆண்டுகள் கூட ஆகும் எனக்கூறப்படுகின்றது. ஆகவே மரபணுத் தொடர்புடைய ஒழுக்கப்பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு மாணவப் பருவத்திலேயே ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள் ஒழுக்கவியல் கல்வியினைக் கற்றுக் கொடுக்க  வேண்டும்.

         ஐந்து வயதிற்கு முன்னரும் தாய், தந்தையர்கள் குழந்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி அடிப்படை ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு முதல் ஆசிரியா்களான பெற்றோர்களும், ஒழுக்கத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்து, தங்களின் செராக்ஸ் நகல்களான குழந்தைகளுக்கு ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க, செராக்ஸ் நகலின் மூலமான(original)தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உதவுவதற்காகவே வேதாத்திரி மகரிஷி என்கின்ற கருணாமூர்த்தி மூலம் இயற்கை/இறை அருளியதுதான் மனவளக்கலை.

    இத்தருணத்தில் தினமலா் 06-02-2011 அன்று வெளிவந்த தினமலர், சென்னை நாளிதழில் வந்துள்ள “நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கின்றது” என்கின்ற செய்தியினை பகிர்ந்து கொள்வோம். அச் செய்தி வந்ததை ஒட்டி, அன்று, ஆன்ம செழிப்புறு இணையதள ஆசிரியா், 11-02-2011 அன்று அன்பர்களுடன் இ-மெயிலில் பகிர்ந்து கொண்ட சிந்தனை விருந்து இப்போது இணையதள சத்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது, வாழ்க வளமுடன்.

    gene_dinamar_news

    dinamalar_news_06.02.2011

        அறிவின்–அறிவியாளர், மனிதகுல விடிவெள்ளியான, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள், கல்வி என்பது

    1)   எழுத்தறிவு,

    2)   தொழிலறிவு,

    3)   ஒழுக்கப்பழக்கறிவு,

    4)   இயற்கைத்தத்துவறிவு

    ஆகிய நான்கு அங்கங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள முழுமையை வெளிக் கொண்டுவரவேண்டும் என்கிறார். ஆகவே கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால், முதல் வகுப்புக்குக் கல்வியிலேயே ஒழுக்கவியல் பாடத்தை மற்ற பாடங்களுடன் கட்டாயப்பாடமாக்கி கற்றுத்தரப்பட வேண்டும்.

       வாழ்க திருவேதாத்திரியம், வளர்க திருவேதாத்திரியம், வாழ்க மனிதகுலம். வளர்க மனித குலம். வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம் என்கின்ற எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்பியும், நிரப்பியும் வருவோமாக.  

    அடுத்த விருந்தில் (22-05-2016—ஞாயிறு), பழக்கத்திற்கு விளக்கத்திற்கும் இடையே போராட்டமாக உள்ளதில் உள்ள அறிவியல் உண்மையை மெய்ஞான அறிவியலாளர் கூறுவதனை மேலும் அறிவோம். தொடரும்

     

         வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-177

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

                                              16-05-2016 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    ——– நிலை உணர்வும், அதில் அடங்கி ————– நிலைபெறும் பேறும்
    கிடைக்காதபோது, அறிவு ——— , ———  என்னும் ————-  உணர்ச்சிவயமாகி ———-  மூலமே அளவு ———– கடந்து செயல்புரிந்து துன்பங்களையும், சிக்கல்களையும் பெருக்கிக்கொள்ளும்.

                                                                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 5/?

     

    வாழ்க மனித அறிவு                                         வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  189
    அறிவிற்கு விருந்து – அ.வி. –  189
     
                                                                                                            15-05-2016—ஞாயிறு

          தற்போது சத்சங்கத்தில் ஒழுக்கம் பற்றி சிந்தித்து வருவதால், திருவள்ளுவர், ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் அருளியுள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்றினை சத்சங்கத்தில் நினைவு கூர்ந்து வருகிறோம். அந்த வகையில் இன்று குறள் எண்.136 ஐ நினைவு கூர்வோம்.

    FFC-189-குறள்-ஒழுக்கத்தின் ஒல்கார்-

    பொருள்: அறிஞர் ஒழுக்கக் குறைவினால் துன்பம் வருவதை அறிந்து, செய்யுங் கடமை அரிதாயினும், அதனைச் செவ்வையாகச் செய்யாது சுருக்கமாட்டார்.

    இக்குறள் என்ன தெரிவிக்கின்றது? இது ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் 136 வது குறள். ஒவ்வொரு பொருள் பற்றி கூறும்போதும், அதனை பத்துக் கோணங்களில் கூறுவதனை வழக்கமாகக் கொண்ட திருவள்ளுவர், ஒழுக்கத்தை ஆறாவது கோணத்தில் விளக்குகிறார். ஒழுக்கம் என்பது வெறும் நடத்தையில் மட்டும்(conduct and character) நடந்து கொள்வதல்ல.  ஒரு பணியை(கடமை) அதற்குரிய முறையில் சரியாகச் செய்வதும், நடத்தையில் சேர்ந்ததே.  எனவே பணியை(கடமை) அதற்குரிய முறையில் சரியாகச் செய்யவில்லை என்றாலும் அது ஒழுக்கமின்மையையேச் சாரும்.

    முறையாக, சரியாகச் செய்யவில்லை எனில் விளைவு இடராகத்தானே இருக்கும். எப்போது விளைவு இடராக வருகின்றதோ விளைவின் செயல் தவறானதாக இருக்கும். செயல் தவறானதாக இருக்குமானால் அங்கே ஒழுங்கில்லை என்றுதானே பொருள். எங்கும் ஒழுங்காற்றலாய் திகழும் பேரறிவின் ஆட்சியில் மனிதனுடைய செயலில் ஒழுங்கில்லையானால் அங்கே இடர்தான் வரும்.  செய்யும் கடமை அரிதாயினும் அதனை சுருக்கி சீர்மையின்றி செய்யமாட்டார்கள் அறிஞர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

    ஏன்?

    அறிஞர்கள் யார்? எந்த ஒரு கலையிலும் மிகச் சிறப்புடன் தேர்ச்சி பெற்று விளங்குபவர் அக்கலையின் கலைஞராகிறார். அக்கலையின் பெயரைச் சொல்லி அக்கலையின் கலைஞர் என்போம். ஆகவே அறிவை அறியும் கலையில் சிறப்புடன் தேர்ச்சி பெற்று விளங்குபவர் அறிவை அறியும் கலையில் கலைஞராகிறார். எனவே ‘அறிவை அறியும் கலை’ மற்றும் அதில் அவர் கலைஞரானதால், ‘கலைஞர்’ ஆகிய இரண்டையும் சேர்த்து சுருக்கி, ‘அறிஞர்’ என்கிறோம். எனவே ஒவ்வொரு பிரம்ம ஞானியும் அறிவை அறிந்த அறிஞரே.
    அறிவை அறியும் கலையில் வெற்றி பெற்றவர்கள், ஒழுங்காற்றலாக திகழும் அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம் அறிந்து ஒழுகுபவர்களான அறிஞர்கள்! இப்போது அறிஞர்கள் பற்றி திருவள்ளுவரை மானசீகக் குருவாகக் கொண்ட மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்வோம்.

                அறிஞர்(17-12-1953)

     அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்
    அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்.
                                 …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மேலும் மகரிஷி அவர்கள் கடவுளையும், கடமையையும் இணைத்துச் சொல்வதனை நினைவு கூர்வோம். ஏன் இரண்டையும் இணைத்துச் சொல்கிறார்? இரண்டும் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால், கடமையைச் செய்வது மனிதனின் கடமை என்பதனையும், அதனையும் ஒழுங்குடன் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும் என அறிவுருத்த விரும்பி கடவுளையும், கடைமையையும் சமன்பாடாக இணைக்கிறார் அறிவை அறிந்த அறிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எவ்வாறு இரண்டிலும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டுள்ளது? கடவுள் ஒழுங்காற்றலாய் திகழ்பவர். ஒழுங்குடன், ஒழுக்கத்தோடு மனிதன் ஆற்ற வேண்டிய செயல்களே கடமை ஆவதால், இரண்டிலும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்கிறோம்.

    மேலும் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில் இறை உணர்வும் அற உணர்வும் ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்துள்ளது. இறை உணர்வில்லாமல் அற உணர்வு இல்லை, அற உணர்வு இல்லாமல் இறை உணர்வில்லை என்பதால் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களில் ஒன்றான கடமையைப் பொறுப்புடனும் தன்முனைப்பின்றியும்மிகச்சிறப்பாகப் செய்வது இறைஉணர்வு ஓங்கி ஒளிதர்லாகவேக் கொள்ள வேண்டும். அதுவே மிகச்சிறப்பு.

    ஆகவே

    ஒழுக்கமே  எங்கும் எப்போதும் காப்பாக அமையும்.
    ஒழுக்கமே மனிதனையும் இறையையும் இணைக்கும் பாலம்.

    ஒழுங்கோ, ஒழுக்கமோ தவறும்போது, செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற நியதியே கடவுளாக இருக்கும்போது, அந்தக் கடவுளிடமிருந்து விலகிச் செல்கிறோம் என்று பொருள். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

       ஒழுங்கோ, ஒழுக்கமோ தவறும்போது, கடவுள் நம் உள்ளத்திலேயே வீற்றிருந்தாலும், கடவுளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி அதிகரிகத்துக் கொண்டிருக்கின்ற விந்தையான ஆபத்தினை, ஒவ்வொரு இறை உணர் ஆன்மீக சாதனையாளர்கள் அவசியமாகக் கவனிக்க வேண்டும்.

    எனவே அயரா விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அயரா விழிப்பாகிய பேரறிவு(Awareness) அறிய இருக்கின்ற பயிற்சியில் சாதனை செய்கின்றவரும் அயரா விழிப்போடுதான் இருக்கப் பழக வேண்டும். அயரா விழிப்போடு இருக்கும்போது ஒழுக்கமின்மைக்கே இடமே இல்லை.

    கடவுளும் கடமையும்(17-12-1954)

    கடவுளை உணர்ந்தோர்,
    கடவுளை நாடுவார்
    கடவுளை அறிந்தோர்
    கடமையில் வாழுவார்.

    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவதுபோல, கடவுளை அறிந்த அறிஞர்(அறிவின் இருப்பிடம்) கடமையில் வாழ்வார் என்பதால், அவர்கள் கடமையைச் செவ்வனே செய்வர்.  அறஉணர்வை வரையறுக்கும்போது இறைஉணர்வின் மலர்ச்சியின் வெளிப்பாடாக விளங்குகின்ற  அறஉணர்வில் ஒழுக்கத்திற்கு, அடுத்ததாக கடமைக்கு இரண்டாவது இடம் வழங்கியுள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில், ஆறாவது கோணத்தில் ஒழுக்கத்தைப் பற்றி கூறிய திருவள்ளுவர் கடவுளை(அறிவு) அறிவது மற்றும் அறிவை(கடவுளை) அறிந்த அறிஞரைப்பற்றியும், கூறியுள்ளதனையும் அறிந்து மகிழ்வோம்.

    ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை கடந்த அத்தியாயங்களில் சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.
    1) ஒழுங்காற்றலாகிய இயற்கை/இறை மனித உடலில் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனித மனதிலும், சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு வழிவிட வேண்டும் என்பது பற்றியும்,
    2) வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும் மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

    3) எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும். விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும் என்றும் அறிந்தோம்.

    4) கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டியிருக்கின்றது,

    என்றும் அறிந்து கொண்டோம். மேலும் சிந்திப்போம்.

    ஔவையார், மூதுரையில் நான்கு நல்லவைகளைக் கூறுவதனைக் கவனிப்போம். மற்றும் கல்வியின் நான்கு அங்கங்களையும், நம் கருமையத்தின் அறிவியலையும் அறிவோம்.
    ஒழுக்கமின்மையில் பல காலம் பழகிவிட்டு, ஒழுக்கம் கடைபிடிப்பிடிக்கும் மாற்றத்திற்கு திடீரென வருவதென்பது போராட்டமாக இருக்கும் என்பதால், ஒழுக்கம் கடைபிடிப்பதை விட்டுவிடலாம் என்று சௌகரியமாக எடுத்துக் எடுத்துக்கொள்ளமுடியாது. ஒழுக்கமற்ற வாழ்க்கை ஒரு வேளை, ஆரம்பத்தில் சுகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், முடிவில் துன்பத்தையே நிச்சயமாக, தனக்கோ, அல்லது தன் வம்சாவளிக்கோ கொடுக்கும். அப்போது யார் அந்த துன்பத்தை அனுபவிப்பது? முதலில் இன்பம் அனுபவித்த அறிவுதான் அந்த துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அல்லது தனது வம்சாவளியான மகனோ அல்லது மகளோ, அல்லது அவர்களையும் கடந்து, பேரனோ, பேத்தியோ அனுபவிக்க வேண்டியிருக்கும். அல்லது அவரது ஏழாவது தலைமுறையிலும் அனுபவிக்கலாம்.
    ஒழுக்கமின்மையின் விளைவாகத் துன்பம் வரும்போது ‘ஒழுக்க வாழ்வில் இருந்து பிறழாமல் இருந்திருந்திருந்தால் இப்போது இத்துன்பம் வந்திருக்காதே’ என்று வருந்தி என்ன பயன்? ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்’ என்பது போல்தான் அது. நல்லொழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள எதார்த்த–சிரமத்தை எடுத்துக் கூறுவது எதற்காகவெனில்,
    1) உலகநாதர் உலக நீதியில் அறிவுறுத்தியதுபோல் மனம் போன போக்கெல்லாம் போகாமல் இருக்கவும்,
    2) ஒழுக்கம் கெட்ட பிறகு திருந்துவதற்கு முயற்சி செய்வதில் உள்ள சிரமத்தை எடுத்துக் கூறி எச்சரிக்கவும்,
    3) மனிதன் ஒழுக்கம் கடைபிடிப்பதில் ஓயாது, தளரா விடா முயற்சியுடன் தற்சோதனைப் பயிற்சியினை செய்து வருவதற்கும்,
    4) ஒழுக்கத்தின் அவசியம் மனப்பூர்வமாக அறிந்து. அதனை கடைபிடித்து வரும் வேளையில் எதிர்பாராமல் வரும் சிரமங்களை கையாள்வதற்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து மனம் தளராமல் இருந்து பிறவிப்பயனை எய்துவதற்காகவும்,
    5) ஒழுக்கம் என்பது உயிரைவிட சிறந்தது என்பதால், உயிர் வாழ்வதற்கு, மூச்சுக்காற்றை சுவாசிப்பது போல், ஒழுக்கம் என்கின்ற காற்றினை, எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்க, நல்லோர்களின் இணைப்பைத் தேடி அவா்களுடன் சத்சங்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.
    என்று அறிவுறுத்துவதற்காகவேதான்.
    இப்போதும் ஔவையார் கூறும் மூதுரையைக் கவனத்தில் கொள்வோம்.

    moodhurai-ovvaiyar

     நான்கு ‘நன்றுகளை’க் கூறுகிறார் அவ்வையார். ‘நன்று’ என்பது என்ன?
     நல்லது என்று பொருள். பாராட்டைத் தெரிவிக்கும் சொல்.
     எது நல்லதாக அமையும்? எதற்காக நல்லோரைக் காண விழைகிறோமே அது நல்லதாக அமையும் என்று பொருள்.
     அதாவது அடிப்படையில் நல்லொழுக்கத்தை கற்று அதன் வழி நிற்பதற்காகவே நல்லாரைக் காண விழைவதால் அது நல்லதாகவே அமையும் என்று பொருள்.
     ‘நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே’ என்பது எதற்காக?
     நல்லார் குணங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே!
     எப்போது நல்லவருடைய குணங்களை ஒரு மனிதன் பாராட்டுவான்? எடுத்துரைப்பான்?
     அவனுக்கு நல்லாரின் குணங்கள் மிகவும் பிடித்திருந்தால் அக்குணங்களின் தன்மை தானாகவே, மீண்டும், மீண்டும் நினைவிற்கு அடிக்கடி வந்துபோகும். இவனும் விரும்பி நினைவிற்கு கொண்டு வருவதோடு, அதனை பிறர்க்கும் எடுத்துச் சொல்வான்.
     அவ்வையார் கூறுவதில் உள்ள அறிவியல் என்ன?
     திருவேதாத்திரிய மந்திரம் 10 உரைப்பதுபோல், இயல்பூக்க நியதிதான் அந்த அறிவியல்.
     ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது.’ என்பது இயல்பூக்கத் தேற்றத்தின்(theorem) கிளைத்தேற்றம்(Corollary). என்பதால், நல்லாரின் குணத்தைப் பெறுவதற்காக, நல்லாரைச்சந்தித்து அவரது குணங்களில் உயர்ந்து வருகிறான் என்று பொருள்.
     ஆகவே ‘நன்று’ என்று அவ்வையார் கூறுவது, நல்லொழுக்கனாக மாறுவதேயாகும்.

    சிறப்புக்களையும், பெருமையையும் உடைய ஒழுக்கம் கடைபிடிப்பதை மனிதன் ஏன் விரும்புவதில்லை? பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதேயாகும். அதாவது நல்லொழுக்க விளக்கப்பதிவு, நல்லொழுக்கமில்லாப் பழக்கப்பதிவிடம்(தீயொழுக்கப்பதிவு), தோற்கின்றது. இந்நிகழ்விற்குப் பின்னால் உள்ள அறிவியலை(Science hidden in the defeat of Wisdom by the habits) ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கின்ற பொன் மொழியை உதிர்த்து, அதற்கான அறிவியல் விளக்கமும் அளித்துள்ளார் முதன் அறிவியல்-அறிவியலாளர். அதுதான் திருவேதாத்திரியத்தின் மகிமையிலும் மகிமை. நேர சுருக்கம் கருதி இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்18-05-2016 புதன்கிழமையன்று தொடர்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளர்க அறிவுச் செல்வம்.

    Loading