admin

Author Archives

  • அயரா விழிப்புணர்வு

    Constant Awareness

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு

    அ.வி. (FFC) – 121

    23-09-2015-புதன்

    poRi Vayilஇப்போது திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆறாவது குறளாக மொழிந்துள்ளதை கவனத்திற்குக் கொண்டு வருவோம். இக்குறள் அனைவருக்குமே தெரிந்ததுதான். பள்ளியில் படித்திருப்போம். ஆனால் இன்று இக்குறளின் உட்பொருளை உணர்வோம்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
             நெறிநின்றார் நீடுவாழ்வார்.”

    புலன்களைப் பொறி – வாயில் என்கிறார். திருவள்ளுவர் புலன்களைக் கருவிகள் என்று கூறவில்லை. பொறிகளை, அகப்படுத்தும் (trap) கருவியாகத்தான் கூறுகிறார். பொறி என்று மட்டும் கூறவில்லை. பொறி+வாயில்= பொறிவாயில் என்கிறார். எலிப்பொறி வைத்து எலி பிடிக்கப்படுகின்றது. சிறிய மசால் வடைத் துண்டிற்கு ஆசைப்பட்டு எலி உயிரையே இழக்கின்றது. ஐம்பொறியினுடைய வாயில் சிக்காமல் ஒழுக்க நெறி நின்றவர் நீடு வாழ்வார் என்கிறார்.

    இக்குறளை கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகாரத்தில் வைத்துள்ளதன் பொருளை அறிய வேண்டும். இறையுணர்விற்கும் புலன்வழி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது. புலன்கள் மனிதனின் ஆசைகளை அனுபவிக்கும் கருவிகள்தான். ஆனால் மனித சமுதாயம், இன்பம் அனுப்பவிப்பது புலன்கள் வழியாக மட்டுமேதான் முடியும் எனக் கருதுகின்றது. தனது புலன் வழி ஆசையிலேயே மனிதன் மூழ்கி இருந்தால் அவனுக்கு புலன் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய இறைமீது எவ்வாறு ஆசை தோன்றும்? ஆகவேதான் இறைக்கும் நமக்கும் உள்ள தூரம் நாம் கொண்டிருக்கும் ஆசைகளே எனப்படுகின்றது.

    எனவே அயராவிழிப்புணர்வில் அறிவு இருக்க வேண்டும் எனில் உணர்வதற்கு கருவிகளாக உள்ள புலன்களை, எலியைப்பிடிக்கும் எலிப்பொறிபோல்(trap), ஆக்கிவிடக்கூடாது. புலன்கள் ‘உணர்கின்ற கருவிகளாக’ இல்லாமல் ‘மனிதனை அகப்படுத்தும்(trap) கருவிகளாகி’ விட்டால் அங்கே விழிப்புணர்வு இல்லை என்றாகின்றது.

    அயரா விழிப்புணர்வு என்றால் என்ன பொருள்? விழித்தல் என்றால் என்ன பொருள்? உறக்கம் கலைந்து எழுந்திருத்தல் விழித்தல் எனப்படுகின்றது. அப்போது உறக்கத்தில் இல்லாதிருந்த உணர்வுகள் அறிவிற்கு வந்துவிடுகின்றது. இந்த விழித்தலை அயரா விழிப்புணர்வு என்று நாம் கூறவில்லை. ‘விழிப்பில் விழிப்பு நிலையை அயரா விழிப்புணர்வு’ என்கிறோம். அதாவது உறக்கம் கலைந்து விழித்துக் கொண்டிருக்கும்போதுதான் மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் நடைபெறுகின்றன. அப்போது

    • எதனை எண்ணலாம்–எதனை எண்ணக்கூடாது,
    • எதனைப் பேசலாம்–எதனைப் பேசக்கூடாது,
    • எதனைச் செய்யலாம்–எதனைச் செய்யக்கூடாது’,

    என்பதில் கவனம் தேவை.

    ‘தான் யார்?’, ‘வாழ்வின் நோக்கம் என்ன?’, என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவின் நுண்மாண் நுழைபுலன் திறன் வேலை செய்யும். இந்த நுண்மாண் நுழைபுலன் திறனுடன் இருக்கின்ற அறிவின் நிலையை அயராவிழிப்புணர்வு நிலை என்கிறோம்.
    மனிதனுக்கு எப்போதும் இன்பம் வேண்டுமென்றால் அவன் செயல்கள் எப்போதுமே நல்லவையாக இருக்க வேண்டும். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் போது கவனம் வேண்டும். எதில் கவனம் வேண்டும்? செய்யும் செயல்களுக்கான விளைவு அறிந்து செயல் புரிவதில் கவனம் வேண்டும். இந்த கவனமே விழிப்புடன் இருத்தலாகும். இதனையே விளைவறிந்த விழிப்பு நிலை என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அயரா விழிப்புணர்வு தேவை என்கின்ற அறவுரையான அறிவுரை ஏன் தோன்றியது? காரணம் என்ன? இதுவரை மனிதன் அயரா விழிப்புணா்வில் வாழவில்லை எனத் தெரிகின்றது.

    குருவை அடைவதற்கு முன்னர் “அயரா விழிப்புணர்வு” என்கின்றச் சொற்றொடர் கேள்விப்படவில்லை. இப்போது இச்சொற்றொடர் அறியப்படுகின்றது. இச்சொற்றொடரில் உள்ள அறமான அறிவுரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    பேரறிவே பின்னப்பட்டு (fractionated consciousness) ஒரறிவு உயரினங்களிலிருந்து ஐயறிவு வரை பயணித்துவிட்டு, கடைசியாக மனித அறிவாக வந்துள்ளது. பேரறிவிற்கு ஆதிநிலையில் உணர்வு இல்லை. ஆதிநிலையில், அதாவது இயங்காநிலையில் பேரறிவிற்கு உணர்வதற்கு அங்கு ஏதும் நிகழ்ச்சி இல்லை. ஆனால் பின்னப்பட்டு பஞ்சபூதங்களாகி, உயிரினங்களாகியபோது அதற்கு உணர்வு வந்து விட்டது. ஐயறிவு வரை பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவைகளை படிப்படியாக உணர்ந்து வந்தது. அதாவது இருந்ததை உணர்ந்தது. அதுதான் ஐந்தறிவு வரையுள்ள திறன்.

    தன்மாற்றத்தில், பின்னப்பட்ட பேரறிவு, ஆறாம் அறிவாக வந்தபோது அது ஏற்கனவே உணர்ந்த ஐந்து உணர்வுகளைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் உணர்வதற்கென்று இல்லை. ஆகவேதான் பேரறிவு ஆறாம் அறிவாக மலரும்போது ஆறாம் அறிவிற்கெனத் தனியாக புலனை ஏதும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆறாம் அறிவாக வந்த போது புலன்கள் ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவின் பணி சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும். அதில் தவறிவிட்டது. இயற்கையில் தவறு ஏற்பட்டது என்று நாம் யார் சொல்வதற்கு? தவறில்லை. தாய் தன்குழந்தையை ஒரு வயதில் விளையாட்டுப் பள்ளிக்கு(play school) அனுப்ப முடியுமா? ஒன்றாம் வகுப்பில் சோ்வதற்கு ஐந்து வயது ஆகியிருக்க வேண்டுமல்லவா? அதுபோல்தான் இயற்கையும் நினைத்த மாத்திரத்தில் ஏதும் செய்துவிட முடியாது. மனிதன் யார்? இயற்கை யார்? இருவருமே வேறு வேறுகிடையாது. இயற்கையின் குழந்தைதான் மனிதன்.

    அதனால்தான் ஆதங்கப்பட்டு இப்போது அந்த பின்னப்பட்ட பேரறிவு சொல்கின்றது” சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும்” என்று. இவ்வாறாக ஆதங்கப்பட்டு மனிதன் எண்ணினால்தான் “எண்ணமே பரிணாமத்தின் வாகனம்” ஆக உள்ளதால் பரிணாமம் முழுமை அடைய முடியும். அவ்வாறு இருக்கும் போது அறிவு, “நிகழ்ச்சிகளை உணரும் நான் யார்?” என விழா எழுந்துத் தன்னை அறிவதைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்று முடிவுக்கு வரும். நிகழ்ச்சிகளையெல்லாம் உணரும் “நான் யார்?’” என உணர்வதற்கு விரும்பும் நிலைக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். இயற்கை பரிணாமத்தில் அந்நிலையை மனவளக்கலை வாயிலாக உருவாக்கி வருகின்றது.

    இங்கே ஓர் உண்மையினை அறிந்து கொள்ள வேண்டும். தன்னை உணர்வதற்குப் புலன்கள் தேவையில்லை. தன்னை உணர்ந்தால் கடவுளை உணரலாம். ஆகவே கடவுளை உணர்வதற்குப் புலன்கள் அவசியமில்லை. ஆகவே கடந்து உள்ளே சென்றால் கடவுளை உணரமுடியும் என்பதால்தான் உணரப்படுகின்ற அந்த ஒன்றிற்கு கட+உள்= கடவுள் எனப்பெயரிட்டான் மனிதன். மேலும் சிந்தனையை ஞாயிறன்று (27-09-2015) தொடா்வோம்.

    வாழ்க வளமுடன். வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம். வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-109

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    21-09-2015 – திங்கள்

    1) தெளிவு என்று எதனைக் குறிப்பிடுகிறார் அறிஞர் திருமூலர்?
    2) தெளிவு எந்தெந்த வழிகளில் பெறலாம் என்கிறார் அறிஞர் திருமூலர்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • அயரா விழிப்புணர்வு

    Constant Awareness

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு

    FFC -120

    20-09-2015—ஞாயிறு

    FFC-120-அயரா விழிப்புணர்வு

     

    மேலே நினைவுகூர்ந்த இரண்டு பாடல்களில் விழிப்புநிலையின் மேன்மையைப் பற்றி அருட்தந்தை அவர்கள் கூறியுள்ளார்கள். விழிப்பு நிலை பண்பை வளர்க்கும். ‘மீண்டும் பிறவா’ வரத்தை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே இன்றைய சிந்தனையாக ‘அயரா விழிப்புணர்வு’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். ‘விழிப்புணர்வு’ என்று மட்டும் தலைப்பாக எடுத்துக் கொள்ளாமல், அதனுடன் ‘அயரா’ என்கின்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டு ‘அயரா விழிப்புணர்வு’ என்று எடுத்துக் கொண்டுள்ளோம். காரணம் விழிப்புநிலை அயர்ந்து விடக்கூடாது என்பதற்காக.

    விழிப்பு நிலையில் விழித்துக் கொண்டிருத்தலே அயரா விழிப்புணர்வு என்கிறோம் நாம் இங்கு.

    அதாவது விழிப்பில் விழிப்பாக இருத்தலே விழிப்புணர்வு என்கிறோம் நாம்.

    அயரா விழிப்புணர்வு ஆங்கிலத்தில் “Constant awareness” எனப்படும். அயரா விழிப்புணர்வு என்றால் என்ன? அயரா, விழிப்பு, உணர்வு ஆகிய மூன்று சொற்களைக் கொண்டிருக்கின்றது “அயரா விழிப்புணர்வு” என்கின்ற சொற்றொடா்.

    யாருக்கு அயரா விழிப்புணர்வு தேவை?  அறிவிற்கு அயரா விழிப்புணர்வு தேவை.
    ஏன் தேவை?   மனித அறிவு இன்பத்தையே எப்போதும் விரும்புகின்றது. இதில் தவறில்லை. ஏன் அறிவு துன்பப்படவேண்டும்? அறிவு எப்போதும் இன்பத்தையே விரும்புவதால், அறிவிற்கு எப்போதும் விழிப்புணர்வு தேவை. எப்போதும் தேவையாக இருக்கின்ற விழிப்புணர்வைத்தான் “அயரா விழிப்புணர்வு” என்கிறோம். அயரா விழிப்புணர்வு எவ்வாறு எப்போதும் இன்பத்தைத் தரும் என்று இன்று சிந்திக்க உள்ளோம்.

    முதலில் ஒரு சிறு உதாரணத்தின் மூலம் அயரா விழிப்புணர்வின் பயனை இப்போதே புரிந்து கொண்டுவிட்டு விரிவாக சிந்திப்பதற்கு நம் சிந்தனையைத் தொடர்வோம். ஐநூறு கிலோ மீட்டர் கடப்பதற்காகும் பத்து மணிநேரமும் தூங்காமல் விழித்துக்கொண்டுதான் மகிழுந்தை (Car) ஒட்ட வேண்டும். சேர வேண்டிய இடத்தை நெருங்கும் கடைசி இரண்டு நிமிடங்களில், ஒரு சில நொடிகள் அயர்ந்து விட்டால் கூட விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் விபத்தைச் சந்திக்கின்றனர்.

    ஆகவே ஒன்பது மணி, ஐம்பத்தெட்டு நிமிடங்கள் விழிப்புடன் இருந்து விட்டு கடைசி இரண்டு நிமிடங்களில் ஒரு சில வினாடி விழிப்புநிலைத் தவறியதால் அதற்குரிய விளைவு வருகின்றது. ஆகவேதான் பத்து மணிநேரமும் விழிப்புடன் உறங்காமல் மகிழுந்தை ஓட்டியிருக்க வேண்டும் ஓட்டுனா். இதுதான் அந்தப் பணியில் ஒட்டுனருக்கு இருக்க வேண்டிய அயரா விழிப்புணர்வாகும்.(அதோடு மட்டுமில்லை வாழ்விலும் அயரா விழிப்புணர்வு தேவை அவருக்கு) விழிப்புணர்வு அயர்ந்ததால் விபத்து நேரிட்டது. இதுபோல் உயிர் உடலில் இருக்கின்ற வரை, வாழ்க்கை என்கின்ற பேரின்ப உந்தை இங்கே ஒட்ட வேண்டியிருப்பதால் வாழ்க்கையில், யாராக இருந்தாலும், உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் அயரா விழிப்புணர்வு அவசியமாகின்றது.

    விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவ்வாறு அயா்ந்து விட்ட எல்லா ஓட்டுனர்களும் விபத்தைச் சந்திப்பதில்லை. ஒரு சில சமயங்களில் ஒரு சிலருக்கு விபத்து நடக்கின்றது. இங்கே தான் தீயவினைப்பதிவுகளின் விளைவுகளை வெளிக் கொண்டு வர உகந்த நேரமாக செயல்விளைவு நீதி முடிவு செய்துவிட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒட்டுனரின் செயலான அயர்ந்து விட்டமையின் விளைவு உடனே வந்து விட்டதாகவும் கருதலாம். இதில் எது சரி என ஆராயப்போனால் இன்றைய சிந்தனைக்கான தலைப்பை விட்டு வெளியே செல்வதாகிவிடும். ஆகவே இதே உதாரணத்தை வேறொரு சமயத்தில் வேறொரு தலைப்பில் சிந்திக்கலாம். தலைப்பிற்குள் செல்வோம்.

    “அயர்ந்து” என்றால் “தன்னை மறந்து” என்று பொருள். பிரயாணக் களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறோம். என்ன அர்த்தம்? தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். “அயரா” என்றால் “தன்னை மறவாத நிலை” என்று பொருளாகின்றது. அறிவிற்கு வேண்டிய “தன்னை மறவாத நிலையை” அயரா விழிப்புணர்வு என்கிறோம்.

    “விழி” என்றால் “சுய உணர்வுடன் இருத்தல்” என்று பொருள். அறிவு விழித்திருத்தல் என்றால் அது தன்னுடைய சுய உணர்வுடன் இருத்தலாகும். “சுய உணர்வு” என்றால் தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வு என்று பொருள். “விழிப்பு” என்றால் மயக்கம் நீங்கிய நிலை என்று பொருள். அதாவது விழிப்பு நிலை என்றால் மயக்கம் நீங்கி சுய உணர்வுடன் இருத்தல் என்பதாகின்றது.
    ‘உணர்வு’ என்றால் ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற மனநிலை என்று பொருள்.

    ‘அயரா விழிப்புணர்வு’ என்றால் மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை என்று பொருளாகின்றது. இந்நிலை மனிதஅறிவிற்கு அவசியமாகின்றது. ஏன் அவசியமாகின்றது? எப்போது மனிதனுக்கு ஒன்று அவசியமாக இருக்கும்? எந்த ஒன்று, மனிதன் சிக்கலற்று, துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்கு தேவையாக இருக்கின்றதோ அந்த ஒன்று மனிதனுக்கு அவசியமாகின்றது.
    மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை அவசியமாகின்றது என்றால், மனிதஅறிவு தன்னுடைய மூலநிலையை (source, origin), மறந்து மயக்கத்தில் உள்ளது என்று பொருள். ஐயறிவு சீவனுக்கு இந்த நிலை அறிய வேண்டியதில்லை. ஏனெனில் ஐயறிவு சீவன்கள் ஒவ்வொரு புலனும் உணர வேண்டிய உணர்வை உணர்ந்து கொண்டு நிறைவு பெற்றுக் கொண்டுதான் உள்ளன.

    ஆறாம் அறிவுள்ள மனிதன் ஐயறிவு சீவன்கள் உணா்ந்து வந்த அதே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன மட்டும் உணர்வதைத் தவிர ஆறாம் அறிவிற்கான பிரத்யேக உணர்வினை பெறாமல் இருக்கிறான்.

    ஆகவே மனிதனுக்கு நிறைவு ஏற்படாமல் புலன் வழி வாழ்க்கையிலேயே மூழ்கி அதனையே பிரதானமாக நினைக்கிறான். மனம் நிறைவு பெறாத போது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று, என்றும் அழியாப் பொருளின் மீது மனம் திரும்பாமல், அழியும் பொருட்களின் மீது மோகம் கொள்கிறான். விளைவு, அளவும் மீறியும், முறை மாறியும் அனுபவித்து இயற்கை நீதியான இன்பமே துன்பமாக மாறும் என்பதனை அறியாமல் மயக்கத்தில் வாழ்கிறான்.

    இதனையே மெய்ஞானிகள் புலன்மயக்கம் என்கின்றனா். புலன்கள் உணரும் கருவிகளாகவே(பொறிகளாக) மட்டும், இருக்க வேண்டுமே ஒழிய புலன்களைச்  சிறைப்படுத்தும் பொறிகளாக(trap) ஆக்கி விடக்கூடாது மனிதன்.

    அப்படி ஆகிவிட்டால் அந்தப் புலனுக்கு அடிமை ஆகிவிடுகின்றது அறிவு. இதுதான் பழக்கம் எனப்படுகின்றது.

    இறைக்கு அடியராக இருப்பதைத்தவிர, பெரும்பாலும் புலன்களுக்கு அடிமையாகின்ற பழக்கம் தீய பழக்கங்களாகவே இருக்கும். ராஜ வாழ்க்கை வாழ வேண்டிய அறிவு அடிமை வாழ்க்கை வாழ்கின்றது.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-09-2015–புதன்) திருவள்ளுவரின் துணைகொண்டு சிந்திப்போம்..

    Loading