admin

Author Archives

  • இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

    FFC – 72

    08-04-2015—புதன்

    சென்ற அறிவிற்கு விருந்தில் திருமூலர் கூறும் முதல் இரண்டு முறைகளில் தெளிவு பற்றி அறிந்தோம். இன்றைய அறிவிற்கு விருந்தில் மற்ற இரண்டு முறைகளில் தெளிவு பற்றி ஆராய்வோம்.

    3) தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்:

    இது எவ்வாறு சாத்தியம் என்று காண்போம். திருவள்ளுவர் கேள்விச் செல்வத்தை அறிவுறுத்துவதற்காகவே ஒரு அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார். அதில் முதலாவதாக இடம் பெறும் குறளைக் கவனிப்போம்.

    ” செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை” ….குறள் எண் 411

    “ எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்” … குறள் எண் 416

     

    மனிதனுக்கு பல செல்வங்கள் அவசியமாகின்றது. அவற்றில் செவியால் கேட்டறியும் கேள்விச் செல்வமே தலைமையானது என்கிறார். கேட்டறிவதைச் செல்வமாகக் கருதுகிறார்.

    துன்பத்திற்குக் காரணமாக உள்ளது அறியாமைதான். எதையும் அறிந்து கொள்வதற்கு நம் உள்ளத்திற்கு இரண்டு தேவைகள் அவசியமாகின்றன. அவையான ஒன்று தேடல், மற்றொன்று ஆர்வம். தேடுபவருக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். சலிப்பிருக்காது. மாறாக சுவையிருக்கும். தேடுதலில் பலபடிகள் உள்ளதால், அவற்றினை வரிசையாகக் கூறுவதென்றால் இவ்வாறாகக் கூறலாம். –

    1) பார்த்தல்,
    2) படித்தல்,
    3) கேட்டல்,
    4) தெரிந்து கொள்ளுதல்,
    5) புரிந்து கொள்ளுதல்,
    6) அறிந்து கொள்ளுதல்,
    7) தெளிவு பெறுதுல்,
    8) நிறைவு பெறுதல்.

    அறிவை உடைமையாக, அதாவது செல்வமாகக் கருதி, அறிவுடைமை என்கின்ற ஒரு அதிகாரத்தை இயற்றியவர், கேட்டறிவதனையும் செல்வமாகக் கருதுவதில் நியாம்தானே. ஆகவே திருவள்ளுவர் கூறும் அறிவுடைமை அதிகாரத்தில் உள்ள அறிவிற்கான வரையறையின்படி அறிவைத் தெளிவாக்குவதற்கு அறிவை அறிந்த குருவின் வார்த்தையை கேட்பது அவசியமாகின்றது. எனவேதான் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்கிறார் திருமூலர்.

    செவிச் செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர் கூறுவதாவது:

    1) செவிகளுக்கு உணவாகிய கேள்விச்செல்வத்தை உடையவர், பூலோகத்தில் வாழ்ந்தாலும் தேவர்களுக்கு ஒப்பாவார்.
    2) தான் கற்காவிட்டாலும், கற்றவர் கூறுவதைக் கேட்க வேண்டும்.. அது வாழ்க்கையில் தளர்ச்சி(சூழ்நிலை) ஏற்படும்போது துணை இருக்கும்.
    3) சேற்று நிலத்தில் நடந்தால் வழுக்கும். அப்போது ஊன்றுகோல் நடப்பவர்க்கு உதவுவது போல ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் உதவும்.
    4) ஒருவன், சிறியதாயினும் நல்லவைகளைக் கேட்டால், அவை அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
    5) கேள்வி அறிவினை உடையவர்கள் பிறழ உணர்ந்த வழியும் பேதமை தரும் சொற்களைச்
    சொல்ல மாட்டார்கள்.
    6) கேள்வியால் துளைக்கப்படாத செவிகள் செவிடாம் தன்மை உள்ளன.
    7) கேள்விச்சுவை அறியாத மனிதர் இறந்தாலும், இருந்தாலும் பயன் என்ன?

    அறிவு மேம்படுவதற்கு தெளிவு அவசியமாக உள்ளதால், குருவின் திரு வார்த்தையைச் செவிமடுத்துக் கேட்டுப்பெறும் செவிச் செல்வத்தை வலியுறுத்துகிறார் திருமூலர்.

    4  தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

    குருவின் திருஉருவத்தைச் சிந்தித்தால் அறிவிற்குத் தெளிவு ஏற்படும் என்கிறார் திருமூலர். இது எவ்வாறு நடக்கின்றது? முதலில் கூறிய மூன்றையும் விட அந்த ஞானாசிரியருடைய திருஉருவை மனதில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே நினைவால் தொழுவதும் அறிவிற்கு விளக்கம் தரும் எனப்படுகின்றது. தியானத்திற்கு ஒரு பொருள் தேவைப்படுகின்றது. தியானத்திற்குரிய பொருள், நமக்கு என்ன வேண்டுமோ, அதனை தன்மையாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சிலர் சிலைகளை வைத்து தியானிப்பது வழக்கம். உதாரணத்திற்கு புத்தர் சிலையை வைத்து தியானம் செய்யும் பழக்கமும் உண்டு. மனம் ஒருமைப்படும். புத்தா் கூறிய அறிவுரைகளின் தன்மையாய் தியானிப்பவர் ஆவார். அதுபோல் குருவின் திருஉருவத்தை சிந்தித்து வந்தால் குரு கூறும் தன்மைகள் சீடனுக்கு வந்து சேரும் இறை அருளைப் பெறுவதற்கு குருவருள் துணை செய்யும் என்பதால் குருவருளின் பெருமை பற்றி திருமூலர் கூறுகின்றார், அவ்வையார் மற்றும் அறிஞர் திருமூலர் ஆகிய இருவரும் கூறியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். இவ்விரு அருளார்களின் அறிவுரைகள் எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டு, நம்பப்பட்டு பயன் படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது, மகரிஷி அவர்கள் இயற்றிய குருவணக்கப் பாடலில் வாயிலாகத் தெரிய வருகின்றது.

    மேலும் பஞ்சபூத தத்துவத்தைப்பற்றி கூறும் போது, வெளி மற்றும் விண்ணின் விகிதாசாரத்தை விளக்க வந்த மகரிஷி அவா்கள் அவ்வையார் கூறும் பாடலை சான்றாக எடுத்துக் கொண்டுள்ளார், ஞானக்குறளில் உள்ள சில வரிகளைக் கவனிப்போம்.

    ” பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
    தரம் மாறித் தோன்றும் பிறப்பு.”

    ”நிலம் ஐந்து, நீர் நான்கு, நீடங்கி மூன்று,
    உலவை இரண்டு, ஒன்று விண்”

    இதிலிருந்து என்ன தெரிகின்றது? அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்த காட்டியவர்களை நினைவுகூர்ந்ததால், அவர்களின் அறிவாற்றல் எவ்வாறு உதவியாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது.

    இத்தருணத்தில், கூடுதலாக விநாயகர் அகவலிருந்து அவ்வையார் கூறும் சிலவரிகளைக் கவனிப்போம்.
    ”மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக்
    காலாலெழுப்புங் கருத்தறிவித்தே” என்கின்ற வரிகள் மகரிஷி அவர்கள் இன்று எளிமையாக்கிக் கொடுத்துள்ள குண்டலினி யோகத்தைக் குறிப்பிடுகின்றன. காலால் என்பது மூச்சுக் காற்றினால் குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து உயரே கொண்டுவருவதைக் குறிப்பிடுகிறார் அவ்வையார்.

    மேலும் மகரிஷி அவர்கள் கூறும் இறைவெளியையும், அதன் தன்மாற்றத்ததைப் பற்றிக் கூறும் வரிகளைக் கவனிப்போம்.

    ” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
    சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி
    அணுவிற்கணுவா யப்பாலுக்கப்பாலாய்ச்
    கணுமுற்றிநின்ற கரும்புள்ளேகாட்டி”

    “அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்” என்கின்ற வரி இறைவெளி அணுவிற்குள்ளும் இருக்கின்றது அதற்கு அப்பாலும், பிரபஞ்சத்தைத் தாண்டி எல்லையில்லாததாக(அப்பாலுக்கு அப்பாலாய்) உள்ளது என்கின்ற இறைவெளித்தத்துவத்தைக் கூறுகிறார், அந்த வெளியைப் பற்றி கூறவந்த அவ்வையார்,

    ” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
    சித்தத்தினுள்ளே சிவலிங்கக்காட்டி” என்கிறார் அவ்வையார்.

    ஒலி எவ்வாறு வருகின்றது? காற்றிலிருந்து வருகின்றது. காற்று பஞ்சபூதங்களில் ஒன்று. பஞ்சபூதங்கள் வெளியிலிருந்து உண்டாகின. வெளி அமைதியானதால், அதனை அமைதியைக் குறிக்கின்ற ‘சிவம்’ என்கின்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஒலி வருவதற்குக் காரணம் காற்று, காற்றிற்கு மூலம் வெளி. வெளி எப்போதும் சதா(எப்போதும், தொடர்ந்து), அதாவது எப்போதும் மௌனமாக உள்ளதால். சப்பதத்திற்கு மூலம் காற்று, காற்றிற்கு மூலம் பெருவெளியாகிய சதாசிவம் என்கிறார்,

    சித்தம் என்றால் மனம், அறிவு என்று பொருள். இறைவெளியே எல்லா உயிர்களிலும் அறிவாக இருக்கின்றதை ”சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி” என்கிறார். அவ்வையார் ஒரு ஞானப்புலவர் ஆகவேதான் ஞானக்குறள் என்கின்ற தலைப்பில் 310 குறட்பாக்களை அருளியுள்ளார்,

    அறிவினரைச் சோ்தல் இனிது, அதனினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பது என அவ்வையார் கூறியுள்ளதையே, அறிஞர் திருமூலரும் குருவின் பெருமைகளாகக் கூறியுள்ளார். அருளாளர்களின் கூற்றுக்கள் கவனிக்கப்படாமலும், நம்பப்படாமலும் இருக்கின்ற நிலையை மாற்றி, அறிவுபூர்வமாகவும், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது என எடுத்துக் கூறும் பட்சத்தில் அவை சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளும் நிலை விரைவில் ஏற்படும். ஆகவே அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிவோம்.  தொடரும் 12-04-2015

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 61

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

    06-04-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்.

    மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள ”எல்லாம் வல்ல தெய்வமது” எனத் தொடங்கும், இறைவணக்கப் பாடலில்,

    “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
                    காணும் இன்ப துன்பமவன்”                                என்கின்ற வரிகளின் பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    FFC – 71

    05-04-2015—ஞாயிறு

    ‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே’ என்பது எவ்வாறு நடைபெறுகின்றது என ஆராய்ந்து வருகிறோம். இந்த தலைப்பைக் கொடுத்தது அவ்வையாரே என்பதால் அவர் அருளிய பாடல்கள் வழியாகவே ஆராய்ந்தோம். இருப்பினும், அறிவை அறிந்த அறிவினர், வேறு யாராவது இது பற்றிக் கூறியிருக்கின்றார்களா என்று ஆராய்ந்ததில் நம்மிடையே எழுந்தருளுபவர் அறிஞர் திருமூலர். எனவே, இப்போது அறிஞர் திருமூலர் கூறுவதையும் நினைவு கூர்வோம். அறிஞர் திருமூலர் அறிவினரைச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

    FFC-71-தெளிவு குருவின்- to post on 4-4-15

    இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே! ஆனால் அவ்வையார் அறிவினரைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். இந்த இரண்டு மகான்களின் கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது. அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. இரண்டு ஐயங்கள் எழலாம்.

    1) அறிவினரும் குருவும் ஒரே தன்மையானவரா? அதாவது ஒரே ஆளுமையுடையவரா?

    2) தெளிவும், இனிதினும் இனிதும் ஒன்றா?

    அறிவுடையோர், குரு ஆகிய இருவரும் ஒரே இனத்தவரா, அதாவது ஒரே தன்மையானவரா என சற்று விரிவாகப் பார்ப்போம்.

    அவ்வையார் மூன்றாவது இனிதாக அறிவினரைச் சேர்தல் என்கிறார். நான்காவது இனிதாக அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே என்று ஆச்சரியத்துடன் நம்மிடமே வினவுகிறார். நாம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நாம் சொல்லாமல் வேறு யார் பதில் சொல்ல முடியும்? பயனாளியைத் தவிர வேறு யார் உண்மையைச் சொல்ல முடியும்?

    அறிவினர் என்பவர் யார்? அறிவுடையவரா? மனிதன் என்றாலே எல்லோரிடமேதான் அறிவு உள்ளது. அப்படியானால் எல்லோருமே அறிவினரா? இருக்க முடியாது. அறிவை அறிந்தவர், அறிவினர். ‘அறிவு’ மற்றும் ‘இனம்’ என்கின்ற இரு சொற்களும் சேர்ந்து வந்ததுதான் அறிவினர் என்கின்ற சொல். இனம் என்றால் பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவு என்று பொருள். அறிவு இனர் என்றால் அறிவின் இருப்பிடம், இயக்கம், பூரணம், சிறப்பு, முழுமை ஆகியவைகளை அறிந்தவர் அறிவினர் ஆவார். அறிவை விட பெரும் பிரிவு வேறு ஏது? எனவே இனம் என்கின்ற சொல்லின் பொருளான ‘பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவாகிய’ அறிவை அறிந்தவர் அறிவினர். அந்த அறிவினரைச் சோ்தல் மூன்றாவது இனிதாகக் கூறுகிறார்.

    நான்காவது இனிதைக் கூறும்போது, ‘அறிவுடையோரைக் கனவிலும் நனைவிலும் காண்பது தானே’ என்கிறார். அங்கே அறிவினர் என்கிறார். இங்கே அறிவுடையோர் என்கிறார். இவர் வேறா? அறிவினர்தான் அறிவுடையோர். எல்லோருக்கும் ஆறாம் அறிவிருந்தும், அது புலனளவிலே மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாறாக புலன்களைக் கடந்து, அறிவு நிலையிலே அறிவை செயல்பட வைத்துக் கொண்டிருப்பவர்களே அறிவுடையராவார். புலன்களுக்கும் அப்பாலும் அறிவை செயல்படுத்துபவர்களே அறிவை உடையவர்களாகக் கருத முடியும் என்பதால் அறிவுடையோர் என்கிறார், அறிவினர் மற்றும் அறிவுடையோர் ஆகிய இருவருமே ஒருவா்தான்.

    திருமூலர் கூறுகின்ற குரு என்பவர் யார்? குரு என்கின்ற சொல்லுக்கு ஆசிரியர், ஆசான், முன்னுதாரணமாக இருப்பவர் என்று பெயர். ஆசிரியர் என்பவர் எதற்காகத் தேவைப்படுகிறார்? அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல், அறியாமையில் இருக்கும் போது தேவைப்படுகிறார். எனவே குரு என்பவர் அறியாமையைப் போக்குபவர். மேலும் பண்டைய ஆன்மீக நூல்கள் குருவைப்பற்றிக் கூறுவதனைக் கவனத்தில் கொள்வோம். ‘குரு’ என்கின்ற சொல்லில் கு – ரு என்கின்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளன. ‘கு’ என்கின்ற சொல் அறியாமை அல்லது ஞானமடையாத அஞ்ஞான நிலையைக் குறிக்கின்றது. ‘ரு’ என்கின்ற எழுத்து, அருள் அல்லது கருணை என்கின்ற சொல்லில் வரும் இரண்டாவது எழுத்து, ஆகவே ஒருவரின் அறியாமையை எவர் ஒருவர் தனது அருளால் போக்குகின்றாரோ அவரே குரு எனப் போற்றப்படுவர்.

    மனிதனின் அடிப்படைத்தன்மையை, அதாவது சுயத்தை தெரிந்து கொள்ளாது இருக்கும் நிலையை நீக்கி, அருள்பவா் ஆன்மீகக் குருவாவார். அதாவது அறிவுநிலையில் குன்றியவரை, தனது அருளால் அறிவுநிலையில் உயர்த்துபவரை, ‘குன்றியதிலிருந்து’ என்கின்ற சொல்லிருந்து முதல் எழுத்தாகிய ‘கு’ வை எடுத்துக் கொண்டும், அருள் என்கின்ற சொல்லில் உள்ள ‘ரு’ என்கின்ற இரண்டாவது எழுத்தையும் எடுத்துக்கொண்டு ஒரே சொல்லாக்கியது தான் ‘குரு’ என்கின்ற காரணப் பெயர். குரு என்பவருக்கு விளக்கம் பார்த்தோம். குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒருவரா என அறிய வேண்டும். குரு என்பவர் அறியாமையை நீக்குகிறார். அறிவினரோடு சோ்வதாலும் அறியாமை நீங்குகின்றது. எனவே திருமூலர் கூறும் குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒரே தன்மையைக் கொண்டவரே (same personlity). ஆகவே முதல் ஐயத்திற்கு விளக்கம் கண்டாகிவிட்டது. இரண்டாவது ஐயமான ‘இனிதினும் இனிதும்’, ‘தெளிவும்’ ஒன்றா என்கின்ற ஐயத்தைப் போக்கிக் கொண்டால் திருமூலர் கூறும் நான்கு வழிகளில் எவ்வாறு தெளிவு கிடைக்கின்றது என அறிவோம்.
    தெளிவு என்பது அறிவு மேம்பட உதவும். அறிவை விசாலமடையச் செய்யும். அறிவுக்கு விளக்கம் கிடைக்கும். தெளிவு என்பது அறிதல், விளக்கமுறல். அறிவு தெளிந்தால்தான் நல்லறிவாக இருக்கும். தெளிந்த அறிவு பாவங்களைச் (தீயவைகளைச்) செய்யாது. எனவே சமுதாயத்தை, ‘தெளிந்த நல்லறிவு வேண்டும்’, என இறைவனை வேண்டச் சொல்கிறார் மகாகவி பாரதியார் ஒரு பாடலில்.

    தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதினும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். திருமூலர் கூறும் முதல் வழி என்ன?

    1) தெளிவு குருவின் திருமேனி காண்டல்:
    இந்த வரி கூறுவதென்ன? குருவினுடைய திருமேனியைக் காண்பது தெளிவைக் கொடுக்கும் என்கிறார் அறிஞர் திருமூலர். இது எப்படி சாத்தியமாகின்றது? தெளிவு அறிவிற்குரியது. அப்படியிருக்கும்போது, அறிவிற்குரியது எப்படி திருமேனியைக் கண்டால் ஏற்படுகின்றது? அது அவருடைய அனுபவமோ?! அது அவருடைய அனுபவமாக இருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவானது என்பதால்தான் அதனை பாடல் வாயிலாக சமுதாயம் பயன்பெறுவதற்காகக் கூறியுள்ளார். திருமூலர் வாழ்ந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அன்று சொன்னதை இன்று, அதனைப் பயன் பெறும் வகையில் நாம் சிந்திக்கவில்லையா? பண்டைக் காலத்தில் குருகுலக் கல்வி முறையிலே, குருவின் நடை, உடை, பாவனையிலிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்டனர்.

    குரு என்பவர் அகம் தூய்மையானவர். அகத்தினை உணர்ந்தவர். எனவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால், குருவினது பார்வை என்பது அருள் பார்வை. அகத்தில் உள்ளதைத்தான் முகமும், உடலும் எடுத்துக் காட்டும். மேலும் உடலுக்குள்ளே இருக்கும் தூய்மையான அகம், முகம், உடல் மூலம் பிரதிபலிக்கும். நாம் பார்ப்பது அவரது உடலை என்றாலும் அவர்கண்களும் எண்ணமும் நம்மீது அருளைப் பாய்ச்சுமல்லவா? அந்த புனித நிகழ்வால் சீடனின் தெளிவில்லாத அறிவு தெளிவு பெருகின்றது. எனவே குருவின் திருமேனி காண்டல் தெளிவைத் தரும் என்கிறார் திருமூலர்.

    2) தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:

    இது எவ்வாறு சாத்தியமாகின்றது. திரு நாமம் என்பது குருவினுடைய பெயர். குருவின் பெயர் அவரது உடலைக் குறிக்கின்றதா? அல்லது அவரது அறிவைக் குறிக்கின்றதா? குருவின் பெயர் அவரது அறிவாற்றலைக் குறிக்கின்றது. அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டுகின்றவர் குருவாக உள்ளதால் அவரது அறிவாற்றல் முழுமை அடைந்துவிடுகின்றது. அவரது அறிவின் முழுமையைச் சொல்வதென்றால் அது ஒன்றா, இரண்டா? ஆனால் அவ்வளவையும் ஒரு சொல்லால் சொல்வது எளிது. எனவே குருவின் பெயர் என்பது அவரது அறிவின் முழுமையெல்லாம் ஒன்றடக்கிய சுருக்கிய புனிதச் சொல்(abbreviated divine word). மேலும் குருவின் பெயர் மந்திரம் போன்றது. குருவின் பெயர்கள் நாமவளி போன்றது.

    நாமவளி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் வரிசையாகும்(string of names of a deity for chanting). அதுபோல் குருவினுடைய பூரணத்துவத்தை அறிந்து பயனடையும் சீடன், அவரை வெவ்வேறு பெயா்களால் அழைத்து இன்பம் காண்பான். இது குருவிற்காக செய்யப்படுவதில்லை இது, சீடன் பயன்பெற வேண்டி இயற்கையில் அமைந்துள்ள யுக்தி என்றே சொல்லலாம். ஆகவே குருவின் பெயரைச் சொல்லும் போது அவருடைய அறிவின் முழுமை அவன் மனக் கண்முன்னே வந்து நிற்கும். அந்நிலை உருவானால் மெல்ல, மெல்ல சீடனின் அறிவினில் ஞானத் தெளிவு ஏற்படத்தானே செய்யும். இதனைத்தான் திருமூலர் “தெளிவு குருவின் திருநாமம் செப்பல்” என்கிறார்.
    அடுத்ததாக திருமூலர் கூறும் மூன்றாவது வழிக்குள் செல்வோம்.

    அடுத்த விருந்தில் (08.04.2015) தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருஉரு சிந்தித்தல் ஆகிய இரண்டைப்பற்றியும் அறிவோம். தொடரும்.

    Loading