admin

Author Archives

  • அறிவிற்கு விருந்து 2 / 3

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து 2 / 3

    FFC – 42

    31-12-2014—புதன்

    அறிவிற்கு எவையெல்லாம் விருந்தாக இருக்க முடியும்?

     அறிவு எதனை அறிவதற்காக இந்தப் பிறவி எடுத்ததோ அதுபற்றிய உண்மை விளக்கங்கள்,
     தன்னுடைய பூா்வீகம் பற்றிய உண்மைகள்,
     வாழ்க்கையைப் பற்றிய எதார்த்தம் புரிதல்,
     துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகள்,
     அதற்கு மேலும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்தல்
     பேரின்பத்தில் திளைத்தல்,
     சமுதாய அக்கறை ஏற்படுதல்,
     சலிப்பில்லா பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்,

    சுருங்கச் சொல்வதெனில் சிந்தனைச் செல்வத்தை அறிவின் உச்சத்திற்கு வளர்ப்பது போன்ற அறிவுப்பூர்வமான உண்மைகள் எல்லாம் அறிவிற்கு விருந்தாக இருக்கும்.

    அவ்வையார் கூறும் அறிவினர் யாராக இருக்க முடியும்? எவருடன் சேர்வதால், அறிவிற்கு தேவையான மேலே கூறப்பட்ட இனியவைகள் கிடைக்குமோ அவரை அறிவினர் ஆவர்.

    அவ்வையார் கூறும் அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 ஆம் ஆண்டு, அன்பர்களுக்கு அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை நினைவு படுத்திக் கொள்வோமே.
    அழைப்புக் கவி (1970)
    அன்பர்களே! வாரீர்!
    அறிவின் இருப்பிடம்,
    அறிந்து இன்பமுற,
    அன்பர்களே! வாரீர்!
    இன்ப நிலையதை, ஏக நிலையதை,
    அன்பு நிலையதை
    அறிந்திடலாம் இன்று.
    அன்பர்களே! வாரீர்!
    “தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்?”
    என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
    அன்றாட வாழ்க்கை அறிந் தனுபவிக்க
    இன்றேனும் விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்!
    அன்பர்களே! வாரீர்! …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஆகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் “அறிவினரைச் சேர்வது இனியது” என்று கூறியதை இப்போது, இந்த நூற்றாண்டில், அறிவை அறிந்து அனுபவித்து, “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, அன்பர்களே வாரீர்” என உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நடத்திக் கொண்டிருக்கின்றது. வாழ்க வேதாத்திரி மகரிஷியின் அறிவாற்றல். வேதாத்திரியம் என்ன விருந்து படைக்கின்றது? ஒரு புராணக்கதையில் வரும் பாரிஜாத மரம் போன்றது வேதாத்திரியம்.

    அந்தப் புராணக்கதைக் கூறுவது: தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அம்மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்றும் கூறப்படுகின்றது. மகரிஷியின் அறிவாற்றல், அதாவது வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலரைப் போன்றது. அப்பாரிஜாத மலரில் அறிவுத் தேன் நிரம்பி வழிகின்றது. அறிவிற்கு வேண்டிய விருந்தைத் தரும் மகரிஷியின் அறிவாற்றல். அறிவுத் தேனீக்களாகிய நாமெல்லோரும் தேனைப் பருகிக் கொண்டு தெய்வீக போதையில் உள்ளோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, அவ்வறிவுத் தேனை மற்றவர்களும் பருகி ஆனந்தமடைய வழிகாட்டும் அறிவுத் தொண்டாற்றி, மகிழ்ந்து, எப்போதும் இறை அருளுக்குப் பாத்திரமாகி, அதே நேரத்தில் இப்பிறவிப் பயனை அடுத்தப் பிறவிக்கு தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயே பெற்றிடுவோம்.

    அறிவிற்கு விருந்தை எவ்வாறு தயார் செய்து அருந்த வேண்டும் எனத் தோன்றும். அவ்வையார் கூறுவது போன்று மூன்றாம் நிலை இனியதைக் கொடுக்கக் கூடியதான அறிவினரைச் சேர்ந்து, நான்காம் நிலையும் இறுதியானதுமான அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பதாலும் அறிவிற்கான விருந்தை அருந்த முடியும். வயிற்றுக்கு விருந்து நாவிற்கு மிகுந்த சுவையைத் தரும். வயிற்றுப் பசியினைப் போக்கும். வயிறு, உணவிலுள்ள சாறை உடல் வளர்ச்சி்க்காக எடுத்துக் கொண்டு, சக்கையை மலமாக வெளியே அனுப்பிவிடுகின்றது. இப்படியாக வளர்ந்து வந்த உடல் மீண்டும் பஞ்ச பூதங்களாகி மறைந்து விடுகின்றது (மரணம்).

    ஆனால் அறிவிற்கு அளித்த விருந்து அப்படியாவதில்லை. உடல் அழிந்தாலும் அறிவிற்கு அளித்த விருந்து வம்சாவளி வம்சாவளியாகச் சென்று கொண்டிருக்கின்றது. எப்படி? கருமையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிவிற்கு விருந்து அளிப்பதால், அளிக்கும் ஒவ்வொரு விருந்தும் அதற்குரிய தரமாற்றத்தை அளிக்கின்றது. அந்த தரமாற்றம் என்றுமே அழியாத ஆன்மாவாகிய கருமையத்தில் பதிவதால், அந்த கருமையத்தின் செராக்ஸ் நகலே ஒருவரின் அடுத்த வம்சாவளி என்பதால் அறிவிற்கு அளிக்கும் விருந்தால் ஏற்படும் தரஉயர்வு தன்னுடைய வம்சாவளிக்குச் சென்றடைகிறது.. இவ்வாறாகத்தான், நல்ல தரமுள்ள வம்சாவளியை உருவாக்குவதன் மூலம் மனித குலத்தை உய்யச் செய்ய முடியும். இஃதன்றி மனித குலத்தை எவ்வாறு உய்வடையச் செய்யமுடியும்? இது இயற்கையின் புனித ஏற்பாடு.
    அறிவிற்கு விருந்து தெளிவினைத் தரும். அது அறிவிற்கு ஆனந்தத்தைத் தரும். அதனால் தான் அவ்வையார் அறிவினரைச் சேர்ந்திருக்கச் சொல்கிறார். அறிவினர் என்று அவ்வை கூறுவது, அறிவையறிந்த குருவையே. அறிவையறிந்த குருவை அடைதலின் பயனை, திருமூலர் அருளிச்செய்துள்ள பாடலின் மூலம் நினைவிற்குக் கொண்டு வருவோம்.

    குரு அருளே திருவருள்
    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. ….என்கிறார் திருமூலர்.
    ,அவ்வைத்தாய் கூறுவதனையும் நினைவு படுத்திக் கொள்வோம். அவை தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நீதிகளாக உள்ளன.
    ஆத்திச்சூடி
    1) சான்றோர் இனத்து இரு. (சான்றோர்களிடம் சேர்ந்திரு)
    2) பெரியாரைத் துணைக் கொள். (அறிவிற்சிறந்த பெரியவா்களை உனக்குத் துணையாக வைத்துக்கொள்)
    3) மேன்மக்கள் சொல் கேள். (உயர்ந்தவர்களுடைய சொல்லைக் கேட்டு நட)
    4) மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம். (பெரியவர்கள் சொன்ன வார்த்தை தேவாமிர்தம் போல் இன்பம் செய்யும்)
    மூதுரை?
    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே – நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று.
    பொருள்: நல்லாரைக் காண்பதும், அவர் சொல்லைக் கேட்பதும், அவர் குணங்களைப் பேசுவதும், அவரோடு கூடியிருப்பதுவும், நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் உண்டாக்கும்.
    உலக நீதி
    “மூத்தோர் சொன்ன வார்த்தைகளை மறக்க வேண்டாம்” …..என்கிறார் உலகநாதர்.
    அடுத்த விருந்தில்,
    1) மனிதனுக்கு வேண்டிய 133 தேவைகளைப்பற்றியும்,
    2) வெறும் பிறப்பு – இறப்பு சுழற்சியை ரசிப்பதற்காகவா இறையோ அல்லது இயற்கையோ தன்மாற்றம் அடைந்து இருக்கும்.
    என்பதனையும் சிந்திப்போம்.

    04-01-2015 ஞாயிறன்று தொடர்வோம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 34

    வாழ்க மனித அறிவு                                                                                                                                 வளர்க மனித அறிவு

    29-12-2014-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    ”எண்ணமே இயற்கையின் சிகரம்” என்று எதனால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?  அடுத்த  வினா:–ஏன் இதனைத் தெரிவிக்கிறார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • அறிவிற்கு விருந்து 1 / 3

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து 1 / 3FFC – 41

    28-12-2014—ஞாயிறு

    அறிவைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், பொருட்பாலில் அறிவுடைமை என்கின்ற ஒர் அதிகாரத்தையே ஒதுக்கி, பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதிகாரத்திற்கு “அறிவு” என்று பெயர் வைத்திருக்கலாம் திருவள்ளுவர். ஆனால் அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளார். காரணத்தோடுதான் அறிவுடைமை எனப் பெயா் வைத்துள்ளார். உடைமை என்றால் செல்வம் என்று பொருள். ஆகவே அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளதால், அறிவை செல்வத்திற்கெல்லாம் மேலானச் செல்வமாகக் கருதி, அறிவை அறிவுச் செல்வமாக்கிக் கொள்ள வேண்டுகிறார் நம்மையெல்லாம்.
    அறிவைப்பற்றிக் கூற வேண்டியதையெல்லாம் ஒன்பது குறட்பாக்களில் கூறிவிட்டு நிறைவாக அறிவைப்பற்றி ஒட்டு மொத்தமாக இரத்தினச் சுருக்கமாக (to sum up) கடைசிக் குறட்பாவில் மொழிவதைக் கவனிப்போம்.
    “அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.”
    வேறொன்றும் இல்லாது இருந்தாலும் அறிவுடையவர் எல்லாம் உடையவரே ஆகிறார் என அழுத்தமாகக் கூறுகிறார். வேறு என்ன இருப்பினும், அறிவில்லாதவர், ஒன்றும் இல்லாதவர் ஆவார் என ஆதங்கத்தோடு கூறுகிறார். வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற எல்லா வளங்கள் இல்லாவிடினும், அறிவுவளம் இருப்பவர் எல்லாம் உடையவராகிறார் என்கிறார்; அறிவு வளமில்லாமல் வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற வளங்களைப் பெற்றிருப்பவரை ஒன்றும் இல்லாதவர் என்கிறார்.
    அறிவுடையவர், அறிவில்லாதவர் என்று பிரித்து, இருதரப்பினராகக் கூறியிருப்பதால் அறிவுடைய மனிதன், அறிவில்லாத மனிதன் என்று பொருளல்ல. உயிரினம் என்றாலே அறிவு உண்டு. மனித உயிரினத்திற்கு பிரத்தியேகமாக ஆறாவது அறிவு உள்ளது என மனிதன் கூறுகிறான். உண்மைதான். ஆறாவது அறிவை சரியாக, முறையாகப் பயன்படுத்தத் தெரியாது அறியாமையில் உள்ளவனுக்கு ஆறாம் அறிவு இருந்து என்ன பயன் என்று கருதிதான், அம்மனிதரை அறிவில்லாதவர் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.
    ஒரு “மனிதனை எல்லாம் உடையவர்” என்பது பற்றிய சமுதாயக் கருத்து என்ன? முதலில் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வவளத்திலிருந்து எல்லாவளங்களும் பெற்று, பிறகு, துன்பமிலா இன்பவாழ்வு வாழ்ந்து, எல்லோராலும் மதிக்கத்தக்க பெருவாழ்வு வாழ்பவரை, ‘எல்லாம் உடையவர்’ என்று சமுதாயம் கூறும். இஃதெல்லாம் மனிதனுக்கு எவ்வாறு, எப்போது கிட்டும்?
    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான் அறவழியில் செல்வம் ஈட்ட முடியும்,
    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான் துன்பமிலா இன்பவாழ்வு வாழ முடியும்,
    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான் பெருவாழ்வு வாழமுடியும்.
    வேறு வழியில்லாமல் பேரறிவு, விலங்கினங்களாகத் தன்மாற்றம் அடைந்து வந்து, கடைசியாகத்தான், மனித இனமாக வந்துள்ளது. ஆகவே அறிவுடன் சேர்ந்து விட்ட விலங்கினப் பண்பான பரிணாமக் கசடை(animal imprint as evolutionary effluent that has come out during the process of transformation of Consciousness from fifth sense living beings to sixth sense living beings) நீக்கினால்தான் திருவள்ளுவர் கூறும் அறிவிற்கான வரையறையை(definition of consciousness) மனித அறிவால் எய்த முடியும்.
    விலங்கினங்களின் அறிவு, ஐந்து கோசங்களில், அன்னமய கோசம், மனோ மயகோசத்தைத் தவிர மற்ற கோசங்களில் இயங்கத் தேவையில்லை, அவசியமும் இல்லை. ஆனால் மனிதன் அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரண்டை மட்டுமே முக்கியம் எனக் கருதாமல், மற்ற கோசங்களுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்து, பிராணமய கோசம், விஞ்ஞானமன கோசம், ஆனந்தமய கோசத்திற்கு உயர்ந்து வர வேண்டும். விஞ்ஞான மய கோசத்தில் அறிவு சிந்திக்கின்றது. சிந்தித்தலின் விளைவாக அடுத்த கட்டமான ஆனந்தமய கோசத்திற்கு வருகின்றது.
    ஆனந்த மயகோசத்தில்தான் ஒருமனிதர் எல்லாம் உடையவராகிறார். எல்லாம் இருந்தும் ஆனந்தம் இல்லையென்றால் என்ன பயன்? தேங்காயை உடைத்து சாப்பிடத் தெரியாத நாயிடம் தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும்? உருட்டிக் கொண்டேதான் இருக்கும் என்று ஆன்மீக நூல்கள் எடுத்து இயம்புகின்றன. ‘கோசம்’ என்பது ஆன்மாவின் இயக்க நிலையையும் எல்லை விரிவையும் குறிக்கும் சொல்லாகும்.
    ஆகவே அறிவு பிராணமய கோசத்திற்கு வந்து, விஞ்ஞான மயகோசத்திற்கு வருவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும். அதாவது சிந்திக்க வேண்டும். சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிந்தனா பள்ளியில் சேர்ந்து (School of Thoughts) பண்பேற்றக் கல்வி பயில வேண்டும். அப்படி ஒரு பள்ளி உள்ளதா? உள்ளது. அதுதான் அவ்வைத்தாய் கூறும் இனியதை அனுபவிக்க அறிவினருடன் சேர்ந்திருத்தலும், மேலும்மேலும் இனியதை அனுபவிக்க, அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பிக்க வைப்பதும் தான் அந்த சிந்தனா பள்ளி.
    மேலும் அறிவினருடன் சேர்ந்து, இனிய பயனை அனுபவிக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், அறிவினரை மதித்து நடந்து இயற்கையின் திறனான இயல்பூக்க நியதிப்படி தரத்தில் உயரவேண்டும். அவ்வை கூறும் நான்கு இனியவைகளில் கடைசி இரண்டையும் பெற்று விட்டால் அறிவு ஆனந்தமயகோசத்திற்கு வந்து விட்டது என்று பொருள். அவ்வையார் கூறும் நான்கு இனியவைகள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.

    இனியது எது?
    இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
    இனிது ! இனிது ! ஏகாந்தம் இனிது !
    அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்;
    அதனினும் இனிது ! அறிவினர்ச் சேர்தல்;
    அதனினும் இனிது ! அறிவுள்ளோரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே ! ………அவ்வையார்.

    இதற்கெல்லாம் அறிவிற்குப் பசி வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு உணவு தரப்படுகின்றது. உணவால் உடல் மட்டுமே வளர்கின்றது. உடல் மட்டும் வளர்ந்து பயனில்லை. அறிவும் வளர வேண்டும்.(ஆளும் வளரனும். அறிவும் வளரனும் – திரைப்படப்பாடல் வரி) அறிவு வளர்வதற்கு உணவு அவசியம். அதுவும் விருந்தாக இருக்க வேண்டும். ஏன்? விருந்து என்றால் பல உணவு வகைகள் இருக்கும். ருசி ஊட்டப்பட்டிருக்கும். நாவிற்கு மிகச்சுவையாக இருக்கும். ஆனால் தினந்தோறும் வயிற்றுக்கு விருந்து அவசியமில்லை. ஒரு காரணம், எல்லோருக்கும் தினந்தோறும் விருந்து அருந்த வசதி இருக்காது. மற்றொரு காரணம், தினந்தோறும் விருந்து அருந்தினாலும் வயிற்றுக்கு உபாதைகள் வரும். சலிப்பும் வரும்.
    அறிவிற்கு அளிக்கும் உணவு விருந்தாகவே இருக்க வேண்டும். விருந்து சாப்பிடுவதில் அறிவிற்கு சலிப்பே வராது. வயிற்றுக்கு அதிக உணவு அளித்தால் அசீரணம் வருவது போல் அறிவிற்கு விருந்து அளிப்பதில் எந்தவித கெடுதலும் வர வாய்ப்பில்லை. மாறாக அறிவு மேம்பட்டுக் கொண்டே வரும். பல்லாயிரம் பிறவிகள் தோறும் அறிவிற்கு விருந்தில்லாமல் அறிவு இளைத்து மனிதத்தில் பலவீனப்பட்டுள்ளது. ஆகவேதான் பரிணாமக்கசடான விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது மனித அறிவு.
    ஆகவே சரியான அறிவினரைச் சோ்ந்து மதித்து நடந்தால், அறிவிற்கு எப்போதும் விருந்தையே அருந்துவதில் பஞ்சம் இராது. அட்சய பாத்திரம் போல் அறிவிற்கு விருந்து தடையின்றி எந்நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது நிச்சயம். அறிவினரைச் சோ்தலால் அறிவிற்கு விருந்து கிடைப்பதால் அது இனிதாகத்தானே இருக்கும். அறிவினரைச் சேர்தலால் எவ்வகையான விருந்து அறிவிற்கு கிடைக்கும்? அறிவிற்கு எதெல்லாம் விருந்தாக இருக்க முடியும் என்பதனை 31-12-2014 புதனன்று அறிவோம்.

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    Loading