தலைப்பு எதனைத் தெரிவிக்கின்றது? இயற்கை அன்னைக்கு/இறைக்கு நன்றியோடு தெரிவிக்கும் கருத்துரைத்தலாகும்(Feedback). மனவளக்கலை ஏன் சுரங்கத்தோடு ஒப்பிடப்படுகின்றது? சுரங்கம் என்பது என்ன என்று யாவரும் அறிவர். நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. தங்கச்சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகின்றது. அதுபோன்றா அறிவுச்சுரங்கத்தில் அறிவு எடுக்கப்படும்? தங்கமும், நிலக்கரியும் பருப்பொருளாக உள்ளதால் அவற்றை பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும். ஆனால் அறிவு அரூபமாயிற்றே! ஆனால் அறிவின் இருப்பிடம் அறிந்து கொள்ளமுடியும். அறிவை அறிய நினைந்துவிட்டால் அறிவை அறியும் வரை அறிவிற்கு ஓய்வு கிடையாது என்பார் அறிவின் அறிவியலில் முதல் அறிவியலாளரான வேதாத்திரி மகிரிஷி அவர்கள். அறிவு தன்னைப் பற்றி அறிய வேண்டிய அனைத்து வளங்களையும் உடையது மனவளக்கலை.
அறிவு முந்தையதா? அல்லது மனம் முந்தையதா? அறிவுதான் முந்தையது. மனதை வளமாக்கும் கலைக்கு மனவளக்கலை என பெயர் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். அறிவுவளம் இயற்கையின் முதன்மை வளம். மனவளக்கலையில் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற முடியும் என்பதால் மனவளக்கலை என்பது அறிவுச்சுரங்கம் ஆகின்றது. மனவளக்கலை அறிவுச்சுரங்கம் என்பதற்கு சான்று அறிவின் அறிவியலில் முதல் அறிவியலாளரைத் தந்துள்ளதே இதற்குச் சான்று. யார் அந்த முதல் அறிவியலாளர்? நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களே. மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனவளக்கலை உருவாக்கியவரே வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனவளக்கலையின் தந்தையாக இருக்கும்போது வேதாத்திரி மகரிஷி அவர்களை மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் என்று எவ்வாறு கூறமுடியும் என்கின்ற ஐயம் எழலாம். தான் வழிமுறையாகச்(process) சென்று இறைஉணர்வு பெற்றதால் அதே வழிமுறையை அவ்வாறே நமக்கு சொல்லித் தரமுடிகின்றது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அந்த வழிமுறைக்கு மகரிஷி அவர்கள் கொடுத்த பெயர்தான் மனவளக்கலை என்கின்ற அரிய கலை.
எனவே மனவளக்கலையின் முதல் வெற்றியாளர் மகரிஷி அவர்கள் என்பது சரிதானே?
மேலும் மகரிஷி அவர்கள் கூறுவது, இயற்கை தனக்குத் தெரிவிக்கின்றது. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, தனக்கு தெரிவித்ததை உலகநலன் கருதி சமுதாயத்திற்குத் தெரிவிக்கும் கருவியாக செயல்படுவதாகக் கூறுவார். ஆகவே, பொறுப்பாலும், கடமையாலும் உந்தப்பட்டு தனக்கு இயற்கை தெரிவித்ததை எல்லாம் ஒன்று விடாமல் இந்த சமுதாயத்திற்கு அவர் தெரிவித்ததுதான் திருவேதாத்திரியம். பூதஉடலை உதிர்ப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும்கூட நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.
உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று பல நாள் உணர்ந்திருந்ததை மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு முன்னர் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும் இறையின் திருநிலையும் அறிவே என உணர்ந்ததாகக் கூறுகிறார். அறிவின் செயல்பாடுகளை ஏழாகக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்புதான் திருவேதாத்திரிய அறிவின் அறிவியலுக்கு மகுடம் சூட்டுகின்றது.அறிவே தெய்வம் என்று பல அருளாளர்கள் கூறியிருந்தாலும், அறிவே தெய்வம் என்கின்ற உண்மை வெட்டவெளிச்சமாகியது இருபதாம் நூற்றாண்டில்தான்(1911). அறிவு எவ்வாறு தெய்வம் என்பதனையும், அறிவின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சரித்திரத்தையும் (past, present and future history of Nature/God) தெரிவிக்கின்றது திருவேதாத்திரியம்.அறிவின் இருப்பிடத்தைத் தெரிவிக்கின்றது. அதுவே இறைநிலை என்றும், அறிவின் இருப்பிடம் அறிந்தால் இன்பமுறலாம் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
ஆகவே அவரது அழைப்பை ஏற்று மனவளக்கலை பயில்வோம். மனவளக்கலை அறிவுச்சுரங்கத்தில் அறிவு அறிய வேண்டியதை எல்லாம் கருத்தியலாகவும், செயல்முறையாகவும் பெற்று ‘அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி’ என்பதற்கினங்க அறிவு முழுமை பெறுவோம்.
சென்ற நான்கு சத்சங்கங்களில் வேதாத்திரியார்-ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய சத்சங்கத்திலும் அச்சிந்தனையைத் தொடர்கிறோம். இதுவரை 45 துணைத் தலைப்புகளில் சிந்தித்துள்ளோம். நான்காவது(சென்ற) சத்சங்கத்தில் சிந்தித்த துணைத்தலைப்புகளை நினைவு படுத்திக் கொள்வோம்.
1) சிந்தனை வளம் பெருகும்; அகம் மகிழுங்களேன்! 2) வேதாத்திரிய அறிவியல் அகராதியினைப் புரட்டுவோம். 3) கௌதமபுத்தரின் பொன்மொழியில் சிந்திக்க வைப்பது என்னென்ன? 4) புத்தரின் கூற்று சிந்திக்க வைக்கின்றது. 5) உருவமில்லாமலும் ஒன்று இருக்கின்றது என்கின்ற கோட்பாடு. 6) வறுமை என்றால் என்ன? 7) அறிவின் வறுமை என்றால் என்ன? 8) அறிவின் அடிப்படைத் தேவை என்பது என்ன? 9) எப்போது அறிவு வறுமையில் உள்ளதாகிவிடும்?
‘வேதாத்திரியம் எவ்வாறு அகராதியாகத் திகழ்கின்றது என்பதனை இன்று மேலும் அறிந்து கொள்வோம். இதுவரை சிந்தித்ததில் எவ்வாறு வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது என்பதனை ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஏன், வேதாத்திரியத்தை திருவேதாத்திரியம் என்றும், வேதாத்திரியார் ஓர் அகராதி அதாவது திருவேதாத்திரியம் ஓர் அகராதி என்றும், வேதாத்திரி மகரிஷி அவர்களை, நவயுகவியாசர் என்றும், வேதாத்திரி மகரிஷி அவர்களை முதல் அறிவின் அறிவியலாளர்(The first Scientist of Consciousness) என்றும் போற்றுகிறோம்?
வள்ளுவரைப் போற்றுவதுபோல் போற்றுகிறோம்.
வள்ளுவரை ஏன் திருவள்ளுவர் என்கிறோம்? வள்ளுவரை ஏன் தெய்வப்புலவர், செந்நாப்போதார், நாயனார், நான்முகனார், பெருநாவலர் என்றும் பல சிறப்புப் பெயர்களால் அழைக்கிறோம்? திருமூலர் அருளிய மந்திரம் என்று சொல்லாமல் திருமந்திரம் என்று சிறப்புடன் அழைக்கிறோம். அவர்கள் சிறப்புடையவர்கள் ஆகவே சிறப்புப் பெயர்களால் அழைக்கிறோம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் ஆற்றாத சேவையினை, அருளாளர்கள் ஆற்றியுள்ள அருட்சேவை சிறப்பிற்கும். போற்றுதற்கும் உரியது. அவர்களின் அருட்சேவையால் பயன் பெற்ற மக்கள் நன்றியுணர்வாக பல சிறப்புப் பெயர்களால் அழைக்கின்றனர்.
அறிவில் தெளிவு பெறவே ஆன்மீகப் பயிற்சி:
அறிவில் தெளிவு பெறவே பல ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு வழிகாட்டியாக குருமார்கள் தேடப்படுகின்றனர். அவ்வாறு குருவைத் தேடுபவர்கள் மிகச் சிலரே. குருவைத் தேடாமலேயே சிலருக்கு சஞ்சித கர்மாவின் பயனாகவே குரு தானாகவே வருவார்.
எது எப்படி இருந்தாலும்,
குருவைக் காட்டிக்கொடுக்கும் வைபவம் சமுதாயத்தில் மறைந்துவிட்ட சூழ்நிலையில், மனவளக்கலைஞர்களுக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த நம் குருவை மதித்து ஒழுகி நன்முறையில் பயன்படுத்தி பிறவிப்பயனை அடைந்து வாழ்க்கையை வாழ்வாங்கு வாழவேண்டும்.
அவரவர்கள் கருமையத்தில் உள்ள ஆன்மீகத் தாகத்தின் அழுத்தத்திற்கு ஏற்றாற்போல் குருமார்களை அமைத்துக்கொடுக்கின்றது இயற்கை/இறை. அல்லது அவர்களே குருமார்களை தேடிக்கொள்கின்றனர். விளைவறிந்து அல்லது நோக்கத்தோடு எந்த செயலையும் செய்வதுதான் சாலச் சிறந்தது. ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் முடிவான பயனை(End result) அடைய வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம். அதற்கு பயிற்சியுடன் அறிவிற்கு தெளிவும் அவசியம்.
தெளிவு என்பது என்ன?
சுருங்கச் சொல்வதென்றால் அறிவிற்கு விளக்கம் வேண்டும். பல்லாயிரம் பிறவிகளாக அறிவிற்கு விளக்கமில்லாமல் வாழ்ந்துவிட்டது ஆன்மா.
என்ன விளக்கம் அறிய வேண்டும்?
மனிதப்பிறவியின் நோக்கம் என்ன? பிறந்துவிட்டோம், அதனால் வாழ்கிறோம். ஒரு நாள் மடியப்போகிறோம். இது நிச்சயம்.
ஏன் பிறந்தோம்? தெரியுமா? தெரியாது.
எங்கிருந்து வந்தோம்? தெரியாது! (எங்கிருந்து வந்தோம் என்றால் தாய், தந்தையிடமிருந்து வந்தோம் என்பது விடை அல்ல.)
எங்கு செல்ல இருக்கிறோம்? தெரியாது.
எப்போது செல்ல இருக்கிறோம்? தெரியாது!
இதற்கிடையில் துன்பத்தையும், இன்பத்தையும் கலந்துதான் அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. ஏன் துன்பம் வருகின்றது? தெரியாது!
ஒருசிலருக்கு துன்பம் அதிகமாக இருக்கும். வேறு சிலருக்கு துன்பம் குறைவாக இருக்கும். ஏன் இந்த வேறுபாடு? தெரியாது!
எந்த கேள்விக்கும் விடைதெரியாது? இத்தனை ‘தெரியாதுகள்’ அறிவிற்கு இருந்தால் எப்படி? என்ன நியாயம் உள்ளது?! அறிவு அறிவொளியாகத் திகழவேண்டாமா?! ஆறாம் அறிவிற்கு இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தெரிவதுதான் ஆறாம் அறிவின் சிறப்பு.
இவற்றிற்கெல்லாம் விடை தெரிந்திருந்தால் அறிவிற்கு தெளிவு உள்ளது என்று பொருள். விடை தெரிந்துகொள்வது மட்டுமல்ல தெளிந்த வழியில் வாழ்வதே தெளிவு பெற்றதற்கானப் பயன். கருத்தியலாக மட்டும் தெரிந்து கொண்டிருப்பது மட்டுமே தெளிவாகாது, செயல்முறையில் தெளிவடைய வேண்டும். அப்போதுதான் நல்லோர்களாகத் திகழமுடியும். நல்லோர்களின் இயல்பு பற்றி நம் ஆசான் கூறுவதனை நினைவு கூர்வது நலம் பயக்கும்.
நல்லோர்களின் இயல்பு:
தெளிவு சிந்தனையால் பெறுவது. சிந்தனை செயலுடன் பந்தித்து நிற்கவேண்டும், அது நல்லோர்களின் இயல்பு என்கிறார் நம் குருநாதர். நல்லோர்களாக ஆவதற்காகத்தானே ஆன்மீகப்பயிற்சி.
குருவின் வழியாகவும், சத்சங்கத்தாலும், மூச்சு போன்று இடைவிடாது தொடர் சிந்தனையாலும், விழிப்புணர்வோடு இருத்தலாலும், இவற்றிற்கெல்லாம் மேலாக அகமே விரும்பி விரும்புவதாலும்(inner quest) தெளிவு பெறலாம்.
இடைவிடாது தொடர் சிந்தனை என்பதால், மற்ற கடமைகளை தவிர்த்துவிடவேண்டும் என்பது பொருளல்ல. ‘ஒன்றால் மற்றொன்று கெடக்கூடாது’ என்று மகரிஷி அவர்கள் கூறியுள்ளதனை நினைவிற்கொண்டே ‘இடைவிடாத தொடர் சிந்தனை அவசியம்’ என வலியுறுத்தப்படுகின்றது. பரம்பொருள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாலும், எல்லா நிகழ்ச்சிகளும் இறையால் நடைபெறுவதாலும் யார் எங்கு, எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும், செய்யும் பணிக்கு குந்தகம் ஏற்படாமல்,எவ்வாறு சுவாசித்தல் அனிச்சையாக நடைபெறுகின்றதோ, அதுபோல், சிந்தனையும் அனிச்சையாக செயல்படுவதற்குப் பழகவேண்டும்.
பயிற்சி வேறு, தெளிவு வேறு:
பயில்வது பயிற்சி. விளங்கிக்கொள்வது தெளிவு. எவ்வளவு காலம் பயிற்சி செய்தாலும் தெளிவில்லாமல் இருப்பது, பயிற்சியின் இறுதிப்பயனை அடைவதனை காலதாமதம் ஆக்கிக்கொண்டே இருக்கும். பல்லாயிரம் பிறவிகளாக அறிவு இருட்டில்(அறியாமையில்) உள்ளதால், அறிவு வெளிச்சத்திற்கு வரவேண்டும் (அறியாமை நீங்கி அறிவுடைமையாக வேண்டும்). அறிவு ஒளி பெறவேண்டும். அறிவொளியாகத் திகழ்தல் வேண்டும். அதற்கு அறிவிற்கு தெளிவு அவசியம். தெளிவை நோக்கித்தான் பயிற்சி. பயிற்சியும், தெளிவுமே ஆன்மீகப்பயிற்சியின் இலக்கை(End result) அடையச்செய்ய முடியும். தெளிவு பற்றி அறிந்துகொள்ள ‘பட்டினத்தார்’ அவர்களின் சீடரான, அரசராக இருந்து ஞானியான ‘பத்திரகிரியாரை’ வணங்கி நமது சத்சங்கத்தில் எழுந்தருளுமாறு வேண்டுவோம்.
எவ்வாறு அழைப்பது?
அருளாளர் பத்திரகிரியார் இப்போது இல்லையே! அருளாளர்கள் என்றோ பூதவுடலை உதிர்த்தாலும் அவர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். எப்படி அவ்வாறு கூறமுடியும் என்கின்ற ஐயம் எழலாம்! பூதஉடல்தான் இல்லை. அவர்களின் ஆன்மா இருக்கின்றதே! அருளாளர்கள் எண்ணிய எண்ணங்கள் உள்ளனவே! எண்ணங்களுக்கு மரணம் என்பதில்லை. எண்ணுவதற்கு காரணமாக இருந்த உடல் மறைந்துவிடலாம். ஆனால் எண்ணங்கள் மறைந்துவிடுவதில்லை. சுருங்கச் சொல்வதென்றால் அருளாளர்கள் தாங்கள் எண்ணிய எண்ணங்கள் அறநூல்களாக மலர்ந்துள்ளன. அவற்றின் வாயிலாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். திருவள்ளுவர் சுமார் இரண்டாயிரத்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பூதவுடலோடு வாழ்ந்தவர். திருவள்ளுவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? 1330 திருக்குறட்பாக்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவர் எண்ணிய எண்ணங்கள்தானே குறட்பாக்களாக மலர்ந்துள்ளன இன்று. உலகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
இதேபோன்றுதான் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகம் உள்ளவரை 1854 கவிகள் வழியாக வாழ்ந்து கொண்டிருப்பார்.
மறைந்த பிறகும் எவ்வாறு மானசீகக் குருவானார்?
பூதவுடல் தான் மறைந்தது. திருவள்ளுவர் மறையவில்லை. திருவள்ளுவர் எப்போதும் 1330 திருக்குறட்பாக்களில் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் அவருக்குப் பின்னர் கி.பி. 1911 இல் அவதரித்த அருளாரான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு மானசீகக் குருவாக அமைந்தார். அமைந்ததோடு மட்டுமல்லாமல் ‘அகத்ததுதான் மெய்ப்பொருள்’ என்று எடுத்துக்காட்டி வேதாத்திரியை வேதாத்திரி மகரிஷி ஆக்கினார். இதேபோன்றுதான் அருளாளர்களான தாயுமானவரும், திருமூலரும் வேதாத்திரி மகரிஷிக்கு மானசீக குருவாக இயற்கை/இறை அமைத்துக் கொடுத்தது. மேலும் வள்ளலார் ஆன்மாவையும் மகரிஷி அவர்களுடன் இணைத்து, வள்ளலாரின் இறுதி சங்கல்பாமான(எண்ணமான) “அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.” என்பதனைப் பூர்த்தி செய்து தெய்வீக நாடகம் நடத்தியது இயற்கை/இறை. அத்துடன் இல்லாமல் தனது சாதுரியத்தால் அனைத்து அருளாளர்களையும் நினைந்து அவர்களின் நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். நல் வாய்ப்புகளையெல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்து, வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற அருளாளர்கள் வரிசையில் இடம் பெற்று, உலக மக்களையே நெறிபடுத்திக் கொண்டிருக்கின்றார்.
மகரிஷி அவர்களைப்போன்றே அருள்துறையில் அனைவரின் துணையை நாடும் யுக்தியினைக் கடைபிடிக்க ஏதுவாக குருவணக்கம் பாடலை அருளியுள்ளார்.
. . . ஞா.க. பாடல் எண். 7
அருளாளர் பத்திரகிரியார் பருகிய சிவானந்தத்தேன்:
தெளிவு பற்றி அருளார்கள் அனுபவித்த ஆனந்த அனுபவத்தை அறிந்துகொள்வோம். அரசராக இருந்து பின்னாளில் அருளாளரான பத்திரகிரியார் நமது சத்சங்கத்தில் எழுந்தருளி தெளிவைத் தெளிவு படுத்தட்டும். பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் பகுதியில் 65 வது செய்யுளில் கூறுவதனைக் காண்போம்.
‘தெளிய’ என்றால் என்ன? அறிவு தெளிவு பெறுவது. விளக்கம் பெறுவது. ஒரே நாளில் அறிவு தெளிவு பெற்றுவிடமுடியாது. கருவில் திருஉடையவர்களுக்கு வேண்டுமென்றால் அது சாத்தியமாகும்.
ஆனால் கருவில் திரு அல்லாதவர்களுக்கு மெல்ல மெல்ல தான் தெளிவு ஏற்படும்.அது பற்றி கவலைப்படத் தேவையில்லை.அகமே விரும்பினால் போதும்.
தெளிவு பெறுவது அவரவர்களின் அகம் கொண்டுள்ள ஆர்வத்தைப் பொறுத்தது. அவ்வாறு அறிவிற்கு தெளிவு பிறக்கப் பிறக்கத் தெளிந்த சிவானந்தத் தேனானது பொழியும் என்கிறார் அருளாளர் பத்திரகிரியார்.
அரசராக இருந்தபோது கிடைக்காத அந்தத் தேன், ஞானப்பாதையில் அடி எடுத்து நடந்து வரும்போது கிடைப்பதனை அறிந்து கொண்டார் அருளாளர் பத்திரகிரியார்.
தேனானது பொழியப் பொழிய, அதனை ஏற்கும் மனத்தைப் பெறுவது எப்பொழுது என்று நம்மையெல்லாம் தூண்டுகிறார் அருளாளர் பத்திரகிரியார்.
சிவானந்தத்தேன்(அறிந்தது சிவம். மலர்ந்தது அன்பு. துரியாதீதம் கைவல்யமான நிலை) என்பது பேரின்பநிலை. தெளிவு இருந்தால்தான் பேரின்ப நிலையை அனுபவிக்க முடியும்.
சிவானந்தத்தேனை அருந்த ‘செயலிலே இறைவனைக் காணலாம்’ என்கின்ற நிதர்சன உண்மையின் படி இரண்டொழுக்கப்பண்பாட்டின் நெறியில் செய்யப்படும் நல்ல செயல்களின் மூலம் அந்தத் தேனை அருந்தலாம்.
அறிஞர் திருமூலரை எழுந்தருள வேண்டுவோம்:
அறிஞர் திருமூலர் வாழ்ந்த காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை. இருப்பினும் அறிஞர் திருமூலரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார் மகரிஷி அவர்கள். அவ்வாறே நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக குருவணக்கம் பாடலை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அறிஞர் திருமூலர் எழுந்தருளி, அவர் தெளிவில் தெளிவடைந்தவாறு (தெளிவு பற்றி மிகத்தெளிவாக அறிந்ததுபோல்) நமக்கும் தெளிவுபடுத்தட்டும். தெளிவினை அறிஞர் திருமூலர் வாய்மொழியாகவே அறிந்துகொள்வோம்.
போற்றுவதால் யாருக்கு என்ன பயன்?
போற்றுபவருக்கே பயன்!! இறைவா போற்றி! என்கின்றனர் பக்திமான்கள். போற்று என்றால் என்ன பொருள்? போற்று என்றால் பாராட்டுதல், புகழ்தல் என்று பெயர். புகழ் மேலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாத்தல்(preserve with adoration). கடவுள், மகான் போன்றவர்களை புகழ்ந்து துதித்தல், வணங்குதல். இஃதெல்லாம் எதற்காக? சுயநலம்தான்!! பண்பேற்றத்தில் ஏற்றம் பெற்று துன்பமில்லாத இன்பவாழ்வு வாழ ஆரம்பித்து பேரின்ப வாழ்வில் திளைப்பதற்காகும். இதில் சுயநலம் மட்டுமில்லை. பிறர் நலமும் இருக்கின்றது பேரின்ப வாழ்வில். பேரின்ப நிலை இரண்டொழுக்கப் பண்பாட்டினால் கிட்டும். இரண்டொழுக்கப் பண்பாடு எதனை வெளிப்படுத்துகின்றது? அன்பையும் கருணையையும். அன்பும் கருணையும் வெளிப்படுமானால் யார் பயனாளி? முதலில் தானும் பிறகு பிறரும், சமுதாயமும். அன்பினாலும், கருணையினாலும் பிறர் பயன்பெறுவது சரி. தான் பயன் பெறுவது என்பது எவ்வாறு?
பாவங்கள் அகன்று புண்ணியங்கள் சேரும்:
ஒழுக்கத்தின் வெளிப்பாடே அன்பும், கருணையும். ஒழுங்காற்றலாக இருந்த அறிவு நம்மிடம் ஒழுக்க நெறியாக நடப்பது பேரின்பம்தானே! பாவங்கள் அகலுகின்றன. புண்ணியங்கள் சேர்கின்றன.
ஆகவே திருவேதாத்திரியத்தைப் போற்றி மகிழ்கிறோம். மனிதர்கள் முகஸ்துதிக்காக மற்றவர்களை போற்றுவது வழக்கம். அதுபோன்று அல்ல, திருவேதாத்திரியத்தைப் போற்றுவது. போற்றுவதால் இயல்பூக்க நியதிப்படி போற்றப்படுகின்ற பொருளின் தன்மையில் ஏற்றம் பெறுவார் போற்றுகின்றவர். பேரின்பநிலையில் திளைக்க பண்பேற்றம் பெறவேண்டும். பண்பேற்றம் பெற இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்த வேண்டும். இயல்பூக்கம் என்ன என்பதனை அறிவோம். உயர்வு பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.
இயல்பூக்க நியதி என்பது என்ன?
இயல்பூக்க நியதி என்ன கூறுகின்றது? எந்த ஒரு பொருளையோ, செயலையோ, குணத்தையோ, எவ்வுயிரையோ அடிக்கடி நினைத்து வந்தால், அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றம் காணும் என்பது இயல்பூக்க நியதி.
அடிக்கடி நினைப்பது எப்போது நடக்கும்? அகம் பயன் பெறும்போது அடிக்கடி நினைப்பது நடக்கும். அகம் பயன்பெற்று வருவதைப் பொருத்து அடிக்கடி நினைப்பது இயல்பாகும். ஒரு பொருளின் தன்மையையோ அல்லது ஒருவரைப் பற்றியோ அடிக்கடி நினைப்பது எப்போது சாத்தியமாகும்? அதில் ஈர்ப்பு இருக்கும்போது சாத்தியமாகும். அத்தன்மையை மதிக்கும்போதும் அதனை அடிக்கடி நினைக்க வேண்டியிருக்கும். அப்பொருளின் தன்மை எவ்வாறு இருக்கும்? உயர்வாக இருக்கும்? உயர்விற்கு ஏதேனும் ஒப்பீடு இருக்குமா? இருக்கும். யாருடைய உயர்வுடன் ஒப்பீ்டு இருக்கும்? தன்னுடைய நிலையுடன் ஒப்பீடு இருக்கும். விளைவு அந்த பொருளின் அல்லது அந்த ஒருவரின் தன்மையாக அடிக்கடி நினைப்பவரின் ஆற்றல் உடலிலும், அறிவிலும் மாற்றம் காணும்.
மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.
தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.”
என்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? மற்றவரது உயர்வை மதிப்பதும் ரசிப்பதும் எப்போது சாத்தியம்? மற்றவரது உயர்வைக் கவனிப்பவரின் அகம் அதனைப் போற்றுகின்றது. புறமும் அகமும் போற்றினால் போற்றுபவரும் உயர்ந்து வருகிறார் என்றுதான் பொருள்.புறம் மட்டும் போற்றி அகம் போற்றவில்லை எனில் அதனால் பயன் பெறுவது கடினம்.
தெளிவே வினைப்பதிவில் தூய்மை பெறச் செய்யும்:
மனவளக்கலைஞர்கள் பூர்வ புண்ணியத்தால், அதாவது பெற்றொர்கள் செய்த புண்ணியத்தால் அரிதினும் அரிதான நவயுக வியாசரான, நவயுக ராஜரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்களை குருநாதராகப் பெற்றுள்ளோம். “உத்தம நண்பர்காள்! எனக்கு கிடைத்த பேறு உங்கட்கும் உரியது” என்கின்ற உண்மையினை நமக்கெல்லாம் ஆசிர்வாதமாகத் தந்துள்ளார் என்பதனை எப்போதும் நினைவில் கொள்வோம். “நீ எனினும் நான் எனினும் நிறை அறிவில் ஒன்று. வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்” என்கின்ற உண்மையினை வெளிப்படுத்தி அவர் நிலைக்கு உயர்ந்துவரத் தூண்டி அழைக்கிறார். நம் குருநாதர் அவர்கள். ஆகவே ‘வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளதை’ அவர்நிலைக்கு வினைப்பதிவில் தூய்மை பெறுவதற்கு பயிற்சியோடு, தெளிவு இருந்தால்தான், பண்பில் ஏற்றம் பெறமுடியும். அதற்கு இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்துவோம்.
குருவின் சேர்க்கை சீடரிடத்தில் என்ன செய்ய வேண்டும்?
குருவணக்கம் பகுதியில் குருவின் சேர்க்கை சீடரிடத்தில் என்ன செய்ய வேண்டும் என குருவணக்கம் பாடலில் கூறியுள்ளார். பண்பேற்றம் பெறுவதற்கு சீடர் என்ன செய்ய வேண்டும் என்பதனைக் கூறுகிறார். அப்பாடலை நினைவிற்கொள்வோம்.
. . . ஞா.க. பா.எண். 10
‘வேதாத்தரியார் ஓர் அகராதி’ என்கின்ற தலைப்பின் சிந்தனை நிறைவு செய்துகொள்ளும் தருவாயில் இருக்கிறோம். வேதாத்திரியார் ஓர் அகராதியாகத்(lived as Dictionary/Encyclopedia and continued to be a living Dictionary/Encyclopedia) திகழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாதிரிக்காக ஒரு பட்டியலைத் தயாரிப்போம்.
13 இயல்களைப் பட்டியலிட்டுள்ளோம். இவ்வளவு இயல்களா உள்ளன திருவேதாத்திரியத்தில் என ஐயம் எழலாம். இன்னும் உள்ளன. சுருக்கி பதிமூன்றாக பட்டியலிட்டுள்ளோம். இயல் என்பது பெரிய புத்தகமாக இருக்க வேண்டும் என்பதல்ல. எனவே இயல் என்பது பற்றி சற்று விளங்கிக்கொள்வோம்.
இயல் என்றால் என்ன?ஆங்கிலத்தில் ‘Science’ எனப்படுகின்றது. ‘இயல்’ என்கின்ற சொல் ‘ஒன்று நடந்துவரும் முறை அல்லது ஒன்றன் இயல்பு’ என்பதனைக் குறிக்கும் விகுதி. உதாரணங்கள், உலகியல். இல்லறவியல் போன்றவையாகும். இயல் பற்றி கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் கூறுவதனைக் கவனிப்போம். இயல் வழியாக அறிவை புகட்டுவதால் அது அறிவியல் எனப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி எனக் கூறுவது இயல் என்கிறார் அறிஞர் சாக்ரடீஸ். ஆகவே நல்வாழ்விற்கு அறிய வேண்டிய பல்வேறு துறைகளைப் பற்றிக் கூறுவதால் திருவேதாத்திரியம் பல இயல்களை உள்ளடக்கியது என்கிறோம்.
அறிவின் மலர்ச்சியில் எழுச்சி!
அன்று(என்றோ! காலம் சொல்ல முடியுமா?!)ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சி பெற்று அணு என்ற உயிராகி, பிரபஞ்சமாகி உயிரினங்களாகி, நீதிநெறி உணர்கின்ற மாந்தராகியது. அந்த எழுச்சியின் பயன் முழுவதுமாக மாந்தரிடம் வெளிப்பட பலகோடி ஆண்டுகள் தேவையிருந்ததால், எழுச்சி அடங்கி இருந்ததுபோல் இருந்தது. இருந்தாலும் அந்த எழுச்சியின் நோக்கம்/பயன் முழுவதுமாக இருபதாம் நூற்றாண்டில்( 1911 ற்கு பிறகு) வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அந்த மெய் எழுச்சியின் பயன் பரவலாக மாந்தரிடம் ஆறாம் அறிவில் இப்போது திருவேதாத்திரியத்தின் வாயிலாக மலர ஆரம்பித்துள்ளது.
ஆகவே வேதாத்திரியார் ஓர் அகராதி என்று கூறி அகம் மகிழ்வது வேதாத்திரியத்தால் நாம் பெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவுவொளியையே எடுத்துக் காட்டுகின்றது.
எவ்வாறு ஒரு மொழியிலுள்ள புதிய, புதிய வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்து கொள்ள அகராதியை பயன்படுத்துகிறோமோ, அதுபோல் வாழ்வாங்கு வாழ அறிவிற்கு வேண்டிய தெளிவினைப் பெற திருவேதாத்திரியம் அகராதியாக விளங்குகின்றது. எனவே வேதாத்திரியார் ஓர் அகராதி என்பது சாலப் பொருந்தும். Vethathiri Maharishi was a Living Dictionary/Encylopedia and continues to be so.
வேதாத்திரிய ஆன்மீக பொது மொழி:
அன்னிய நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டின் மொழி தெரிந்திருந்தால், அங்குள்ள மக்களிடம் அந்த மொழியில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். அந்நாட்டின் மொழி தெரியாதிருந்தால், உலகப்பொது மொழியான ஆங்கிலத்தில் பேசி கருத்துக்கனைப் பரிமாறிக்கொள்ளலாம். அதே போன்று ஆன்மீக வளர்ச்சி என்பது நேற்று, இன்றிலிருந்து ஆரம்பிக்கவில்லை. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு அருளாளர்களால் ஆன்மீகம் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. வெவ்வேறு சிந்தனாப்பள்ளிகள் ஏற்பட்டுள்ளன(various schools of thought). ஒருநாட்டின் மொழி தெரியாதிருந்தால் உலகப்பொது மொழியான ஆங்கிலம் உதவுவதுபோல் பொதுவான ஆன்மீக மொழி இல்லாமையால் எல்லா சிந்தனாப்பள்ளியின் கருத்துக்களையும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலை இருந்து வந்தது, அந்த நிலையினை மாற்றி அமைத்துள்ளது வேதாத்திரிய ஆன்மீக மொழி. ‘வேதத்தை யான் படித்ததில்லை, ஆனால் வேதத்தின் உட்பொருளாய் என்னைக் கண்டேன்’ என்கிறார். அவரைப்போன்றே, வேதங்களை நாம் படிக்காவிட்டாலும் வேதத்தின் மகா வாக்கியங்களான
பிரக்ஞானம் பிரம்மம்” —– அறிகின்ற அறிவு எதுவோ அது பிரம்மம்.
அஹம் பிரஹ்மாஸ்மி” —- நான் பிரம்மமாய் இருக்கிறேன்.
தத்துவமஸி” —- அது நீயாக இருக்கிறாய்
அயம் ஆத்மா பிரம்மம்” —- இந்த ஆத்மா பிரம்மம்.
ஆகியவற்றின் உட்பொருளை நமக்கும் விளங்கச் செய்திருக்கின்றது வேதாத்திரியம் என்று கூறுவது அகம் மகிழ்ந்து உரைக்கும் வார்த்தை..
வேதங்கள் பற்றி வேதாத்திரியக் கவிகள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றினை மட்டும் இப்போது நினைவுகூர்வோம்.
வேதத்தின் நோக்கம்.
அறிவொடுஐம்புலன்கள் தமைப்பண் படுத்தி அனைவருக்கும் நலம்விளைக்கும் வேத நூல்கள் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் செல்வந்தர், ஏழைஎனும் எல்லோர்க் கும்நந் நெறியுணர்த்தும் போதனைகள் என்று கண்டோம்; நிலஉலகில் இன்றுஉள்ள வேதங்கள் எல்லாம் குறியொன்றே கொண்டுளது; கூர்ந்தா ராய்ந்தால் கொள்கைஎலாம் மனித இனப் பண்பா டாகும்!
. . . ஞா.க. ப. எண். 515
நம் குருநாதருக்கு இயற்கை/இறை என்னென்ன விளக்கியதோ, அவற்றை எல்லாமல் ஒன்று விடாமல் திருவேதாத்திரியம் நமக்கு விளக்கித் தெளிய வைக்கின்றது. ஆகவே நாமும், இவ்வுலகமும் உய்வதற்காக மலர்ந்துள்ள திருவேதாத்திரியத்தை போற்றி, போற்றி, உளமாற வாழ்த்துவோம்.
வாழ்க திருவேதாத்தரியம்! வளர்க திருவேதாத்திரியம்.
அதே நேரத்தில் மனித அறிவையும் வாழ்த்துவோம்.
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!! வாழ்க அறிவுச்செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
வேதாத்திரியார் ஓர் அகராதி என்கின்ற தலைப்பில் இதுவரை 63 துணைத்தலைப்புகளில் சிந்தித்து இருக்கிறோம் என்பதனை நினைவிற்கொள்வோம்.
காலங்கருதி வேதாத்திரியார் ஓர் அகராதி என்கின்ற சிந்தனையை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம்.இயற்கையின்/இறையின், நம் குருநாதரின் திருவுளப்படி வேறொரு தலைப்பில் அறிவிற்கு விருந்து படைத்து அருந்துவோம். காத்திருப்போம். வாழ்க வளமுடன்.
பயிற்சியால் பெற்றுக்கொண்டிருக்கின்ற பயன் அறிந்திருத்தல் நலம்:
மகரிஷி அவர்கள் கூறும் பல அறிவுரைகளில் ஒன்றினை இப்போது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். மகரிஷி அவர்கள் கூறுவதனை உற்று நோக்குவோம். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அன்பர்கள். அவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறுவதாவது:-
‘சில அன்பர்களுக்கு நாம் எந்த அளவில் பயிற்சியால் நன்மை அடைந்து வருகிறோம் என ஐயம் எழலாம். சிலர் நம்மிடமே கூட எந்த அளவில் பயன் பெற்றிருக்கீறிர்கள் ஆன்மீகப்பயிற்சியால்’ என்று கூடக்கேட்கலாம். ஆகவேநாம் முதலில் ஆன்மீகப் பயிற்சியால் என்ன பயன் அடைந்து வருகிறோம் எனத்தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அப்போதுதான் பிறர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவான பதிலைத் தந்து மனநிறைவு பெறமுடியம்.’ என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனை மிகவும் கவனிக்கத் தக்கது. அவர் கூறுவதாவது:-
‘திருப்தியான பதிலை அறிவுபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லை எனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும்.இதனால் நட்டமும், குழப்பமும் வந்துவிடாமல் இருக்கவும் கேள்விக் கேட்போருக்குத் தெளிவோடும், உறுதியோடும் பதிலளிக்க வேண்டும். ஆகவே ஆன்மீகப்யிற்சியின் பயன்களை அறிந்திருக்க வேண்டும் பயிற்சியாளர்கள்.’ என்று வலியுறுத்துகிறார் அருட்தந்தை அவர்கள்.
ஆகவே அவர் அறிவுரையை நிறைவேற்றும் வகையில் திருவேதாத்தரியம் ஓர் அகராதி என்கின்ற தலைப்பில் சிந்தித்தது நிறைவளிக்கின்றது. வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
உன் பாதாரவிந்தங்களில் சரணடைகிறோம்!
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.
குருஸ்லோகத்தில் முதல் இரண்டு வரிகள் குருவேபிரம்மா, குருவேவிஷ்ணு, குருவேதேவன், குருவே மகேஸ்வரன் என கடவுளின் பல பெயர்களைச் சொல்லி, குருயார் என உணர்த்துகின்றது.மேலும் அழுத்தமாக சொல்வதற்கு, மூன்றாவது வரியில் ‘குருசாட்சாத் பரப்ரம்மா’ என ஐயமின்றி உறுதிபடுத்தப்படுகின்றது.
எனவே நிச்சயமாக குருவாகிய நீங்களே இறைவன் என அறிந்துகொண்டோம். மேலும் தங்கள் மானசீகக் குருவாகிய அறிஞர் திருவள்ளுவர் கூறியதையும் இவ்விடத்தில் நினைவு கூர்கிறோம்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.