இன்றைய விருந்து

  • C241-எல்லாப் புகழும் இறைக்கே!  –1/?

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    C241-எல்லாப் புகழும் இறைக்கே!  —

    1/?FFCR-அ.வி.C241               

                                                                                                                                             06-11-2016- ஞாயிறு

     

    FFC-137- new-எல்லாப்புகழும் இறைக்கே

    எல்லா சிறப்புகளும், பெருமைகளும் புகழும் இறைக்குத்தானே சொந்தம்?!  சந்தேகமா?!”

    ஐந்தறிவு வரை புகழ் யாருடையது என்கின்ற பிரச்சனை, அவற்றிற்கு எழவில்லை. இயற்கையின் சிறப்பும் புகழும் ஐந்தறிவு சீவ இனங்களுக்குத் தெரியாது. எதற்காக, தானே ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்ததோ, அது நிறைவேறுவதற்கு  வாய்ப்பு கிட்டாத நெடுங்கால நிலையில், ஆறாம் அறிவு, தன்னுடைய மூலம் தெரியாமல், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதால், ஐவகைப் பற்றுக்களில் ஒன்றாகிய  புகழ்-பற்றில் மூழ்கி, ‘‘புகழ் யாருடையது? என்னுடையதா, இறையினுடையதா?’ என்கின்ற   தன்முனைப்புச் சிக்கலில் அல்லலுருகின்றது.  தவிக்கின்றது.

    FFC-137-அவன் யார் நீ யார்- படம்

    என்கின்ற வேதாத்திரிய உண்மை சமுதாயத்திற்கு  ஞானத்தெளிவாகும் வரை புகழ் யாருடையது? என்கின்ற தன்முனைப்புப் பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே சமுதாயத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.

         இருப்பினும் இறை-உணர் ஆன்மீக சாதகர்களாவது இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்.  ஏனெனில் மெய்ப்பொருளை உணர்வதற்கான பயிற்சியினை செய்து கொண்டு வரும்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் மனதில் வாசம் செய்து கொண்டிருந்தால், கருத்தியலாக தெரிந்தது கருத்தியலாக இருக்குமேயன்றி, செய்முறையில் தோ்ச்சி பெறுவது இயலாததாகிவிடும்.

     அறிவியாலாளர்/விஞ்ஞானியைப் பற்றிய ஓரு ஆங்கிலக்கூற்று ஒன்று உண்டு. —

    ‘He who knows Science is not a Scientist; but person who knows Science and lives scientifically alone is a Scientist.’   Similarly a person who knows Spiritualism is not Spiritualist but a person who knows Spiritualism and lives spiritually alone is a True Spiritualist.

       What is required for the Society?  Spiritualism or Spiritual Evolution? Spiritual evolution is essential and required. Spiritual evolution is for harmonious living in Society. That is – manly living – finally Godly living is essential in order to enjoy hereditary wealth of Peace.

    Knowing Spiritualism alone will not be beneficial to life.  But being a True Spiritualist/Living spiritually is  certainly  a boon  to life.

       அறிவியல்/விஞ்ஞானம் தெரிந்தவர் அறிவியலாளர்/விஞ்ஞானி அல்ல. அறிவு பூர்வமாக வாழ்பவரே அறிவியலாளர்.  அதுபோல் ஆன்மீகம் தெரிந்தவர் ஆன்மீகவாதியல்ல.  ஆன்மீகம் தெரிந்து ஆன்மீகவாதியாக வாழ்பவரே  உண்மையான ஆன்மீகவாதி.  சமுதாயத்திற்கு என்ன தேவை?  ஆன்மீகம் தெரிந்திருத்தலா அல்லது ஆன்மஉணர்வு பரிணாமம் தேவையா?  ஆன்மஉணா்வு பரிணாமம் தான் அவசியமாகவும், தேவையுமாக உள்ளது. பரிணாமம் ஆன்மஉணர்வு நிலைக்கு எட்டவில்லை.  அதனால்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும்,  தத்துஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன்  “பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை” என்றார். ஆன்மஉணா்வு பரிணாமம் என்பது சமுதாயத்தில் இணக்க வாழ்விற்கு அவசியமாக உள்ளது.  அதாவது மனிதன் மனிதனாக வாழ ஆரம்பித்து, தெய்வமாக வாழ்வதாகும்.  இதன் மூலம்தான் மனித குலம் தனது  பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவிக்க முடியும்.

        ஆன்மீகம் தெரிந்திருப்பது மட்டுமே வாழ்க்கைக்கு பயன் தராது.  ஆனால் உண்மையாக ஆன்மீக வாழ்க்கை — மனிதனாக — நல்லவனாக வாழ்வதென்பதே  இறைவன் கொடுத்த வரமாகும்.

        வாழ்வியலுக்கு  வேண்டியதையெல்லாம் 133 அதிகாரங்களாக வகுத்து அவற்றில்  எடுத்து இயம்பியுள்ள திருவள்ளுவர், ‘தெரிந்து கொண்டதற்கு’ — கற்றதற்கு   சான்று என்ன என்று சொல்லாமலா இருப்பார்?!   என்ன சொல்லியிருக்கிறார் என்று ஆராய்வோம். ஆராய்ந்ததில் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களை எடுத்துக் காட்டுகிறார்.  முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இரண்டாவது குறளிலும். அடுத்து,  ‘கல்வி’ என்கின்ற அதிகாரத்தில் முதல் குறளிலும்  கூறியிருக்கிறார்.

    கற்றதனா லாய பனனென்கொல் வாலறிவன்

    நற்றால் தொழாஅர் எனின்.                  …. குறள் -2

    விளக்கம்:— தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்? எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.  தெளிவான ஆன்மீகம் தெரிந்து கொண்டு அதுபோல் வாழாமல் இருப்பதனால் என்ன பயன் எனக் கேட்கிறார்.

    கற்கக் கசடறக்  கற்பவை கற்ற பின்

    நிற்க அதற்குத் தக.                      …. குறள் 391

     விளக்கம்:– கற்கத்தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்றதற்கு-தெரிந்து கொண்டதற்கேற்ப நெறியில் வாழ வேண்டும்.  அந்த நெறிதான் ஆன்மீகம்.  ஆன்மீகத்தை சந்தேகமில்லாமல் கற்க வேண்டும்.  கற்ற பிறகு கற்றதற்கேற்ற நெறியில் வாழ்வதே சிறந்த ஆன்மீகமாகும். அவரே சிறந்த வாழ்வியலாளராவார் என்கிறார்.

        புகழ் யாருடையது பற்றி ஓர் உதாரணத்தின் மூலம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஒரு குடும்பத்திலுள்ள பெண்ணின் திருமணம் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகளின் சரீர ஒத்துழைப்பாலும்  மற்றும் அவா்கள் ஈட்டிய  பொருளைக் கொண்டும் மிகச்சிறப்பாக நடந்தேறியது என்று வைத்துக் கொள்வோம். உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள் எல்லோரும் என்ன கூறுவர்?  அக்குடும்பத்தலைவரின் பெயரைச் சொல்லி ‘அவர் தன் மகளுக்கு மிகச்சிறப்பாகத் திருமணம் நடத்தினார்’ என்று சொல்வதுதானே இயல்பு.  அதனை விட்டுவிட்டு தந்தை இருக்கும் போது, அந்த ஆண்பிள்ளைகளின் பெயர்களைச் சொல்லியா  ‘சகோதரர்கள் தங்களின் தங்கைக்கு மிகச்சிறப்பாகத் திருமணம் நடத்தினார்கள்’ என்றா சொல்வார்கள்! சகோதரர்கள்தான்  தங்களைப் பற்றி இவ்வாறு சொல்வதை விரும்புவார்களா?   அதுபோல் இயற்கையின்/இறையின் அரசாட்சி என்கின்ற தொடர் நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.  அதில் மனிதன் ஒருநீர்குமிழ் பாத்திரம் தான். இயற்கையின்/இறையின் கருவியாகத்தான் மனிதன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.  இது தெள்ளத்தெளிவாகி விட்டால் ‘புகழ் யாருடையது’ என்கின்ற தன்முனைப்புப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிடும்.

         ஒரு செயலால் வருகின்ற புகழை அது இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுவது சிறப்பா?  அல்லது அப்புகழ் தன்னுடையது என்பது சிறப்பா? இறைவனுக்கு கீழ்படிதலாக சொல்வதல்ல ‘புகழ் இறைவனுடையது’ என்று.  அப்புகழை ஏற்படுத்தக் கூடியச் செயலை செய்வதற்கான சந்தர்ப்பம் யார் ஏற்படுத்தியது?  தான்-நான் யார்? தான்- தனது எங்கிருந்து வந்தன?

        உடல் பலமும், அறிவுபலமும் யார் கொடுத்தது? யாருடையது? அப்புகழுக்கான செயலை சமுதாயத்திற்கு செய்வதற்காக இறை திட்டமிட்டு,  ‘அதன் பணியை நிறைவேற்றத் தன்னை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதே இறை’ என்று நினைப்பதில் பெருமையா, சிறப்பா, மகிழ்ச்சியா?

         புகழ் ஏற்படக்கூடிய சமுதாயத்திற்கானச் செயலை நிறைவேற்றுவதற்குக்  கருவியாக ஒர் ஆன்மாவை இறை  தேர்ந்தெடுக்கின்றது  என்றால் என்ன பொருள்?  அந்த ஆன்மா இறைக்கு நெருக்கமாகி வருகின்றது என்று பொருள்.  அல்லது நெருக்கமாகிவிட்டது என்று பொருள். அதாவது இறையும் அந்த ஆன்மாவும் ஒன்றாகிவிட்டது என்று பொருள்.  தந்தைக்கு புகழ் என்றால் நமக்கும் தானே.  பின்னர் ஏன் கவலை?  புகழ் எனும் மாய வலையில் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்?  எனவே இன்றையச்சிந்தனையில் ‘புகழ்—உயர்புகழ்’ பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

     புகழும் உயர்புகழும்:

      புகழ் என்பது எதனைக்குறிக்கின்ற சொல்? புகழ் என்பது பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலையைக்(fame, renown) குறிக்கும் சொல்.  பெருமை(glory, praise) என்றும் பொருள்.

       புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயா்ந்தது என்றால், எதனைச் சொல்ல முடியும்?   அதிகாரி, உயர் அதிகாரி என்கின்ற இருவரில் யார் உயர்ந்தவர் என்றால், உயர்அதிகாரி உயர்ந்தவர் என்று சொல்வோம். அதுபோல், புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயர்ந்தது,  என்றால் பொதுவாக, உயர்புகழ் உயர்ந்தது என்போம்.  எப்படி? ‘உயர்’ என்பது பல நிலைகளாகப் பகுக்கக்கூடியதில் மேலாக உள்ளதைக்(higher in grades or in hierarchical set up) குறிக்கும் பெயரைடைச் சொல்.  உதாரணத்திற்கு உயா்படிப்பு. அதுபோல்,  ஒன்றின் உயர்ந்த நிலையைத் தெரிவிக்க  ‘உயர்’ என்பதனைச் சேர்த்து சொல்வது போல் ‘புகழ்’ என்கின்ற சொல்லுடன் ‘உயர்’ என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ எனப்படுகின்றது வேதாத்திரியத்தில்.

       புகழ், உயர்புகழ் என்கின்ற இரண்டில் எது உயர்ந்தது என்கின்றபோது உயர்புகழ்தானே உயா்ந்தது என விடை வரும்.  ஆனால் புகழ் இறைக்குரியது, உயா்புகழ் மனிதனுக்குரியது என்கின்ற போது இறையைவிட மனிதன் உயர்ந்தவனா என்கின்ற ஐயம் வந்து வந்துவிடுகின்றதா? ஏன் இந்த குழப்பம்?

       ‘புகழ்’ என்கின்ற சொல், ஏற்கனவே உள்ளதை எல்லோருமே அறிவர். அதாவது, ‘உயர்புகழ்‘ எனும் சொல் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ‘புகழ்‘ எனும் சொல் உள்ளது. ‘புகழ்’ ‘உயா்புகழ்’ ஆகிய இரு சொற்களில் முதலில் தோன்றியது புகழ் எனும் சொல். எனவே முன்னரே இருந்த ‘புகழ்’ என்கின்ற சொல், மனிதனுக்கு முன்னரே  இருக்கின்ற  இறைக்குரியதாகிவிட்டது,  ஆனால் இறைக்குரிய புகழை மனிதன் அறியாமையில் தனதாக்கிக் கொள்கிறான்.  புகழ் என்பது எப்படி மனிதனுக்குரியதாகும்?

       பல பிறவிகளாக  அறிவு (ஆன்மா) தன் மூலத்தை மறந்திருக்கின்றது.

       தன்மூலத்தினுடான (இறையுடனான)  பிணைப்பை மீண்டும் நிரந்தர நினைப்பிற்கு கொண்டு வருவதற்காக எடுத்த  இந்தப்பிறவியிலும்,

       அறியாமையில் புகழை தனதாக்கிக் கொள்ளும்போது, அறிவு (ஆன்மா,) தன்னை இறையிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ளவே செய்கின்றது.

       இறையே நாமாக இருக்கின்றது என்கின்றபோது இறைக்கு புகழை உரித்ததாகக் கூறுவதில் நாம் குறைந்து விடப்போகிறோமா?  மாறாக பேரானந்த நிலைக்கு செல்வதற்கு அதுதான் திறவுகோல். (மனிதன் கூறினாலும் கூறாவிட்டாலும் புகழ் இறைக்குரியதுதான்.) ஆகவே சம்பிரதாயத்திற்காக புகழ் இறைக்குரியது என்று கூறப்படவில்லை.   இறையாகிய ஒன்றுதானே எல்லாமாக ஆகியுள்ளது. எனவே எல்லாப் புகழும் அந்த ஒன்றாகிய இறைவனுக்கேதான்   என்பதுதான் சரி.

       ஆகவே புகழ் என்கின்ற சொல் ஏற்கனவே உள்ள நிலையில், வேதாத்திரியத்தில் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது ‘உயர்புகழ்’ எனும் சொல்.

       நடைமுறையில், இறைக்குரிய புகழை, அறியாமையில் மனிதன் தனது என நினைத்துக் கொண்டிருப்பதாலும், இருப்பினும், திருவள்ளுவர் புகழ் மனிதனுக்கு அவசியம் என கருதியதுபோல், மனிதனுக்கென்று புகழும் அவசியம் எனக்கருதி, ‘புகழ்’ என்கின்ற சொல்லோடு “உயா்” என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது வேதாத்திரியத்தில்.

       உயா்புகழை, மனிதனுக்கு அவசியமான ஐந்து வளங்களில் ஒன்றாகக் கருதி நான்காவது வளமாகச் சோ்த்து  உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன் என்கின்ற  சங்கல்பத்தை தினந்தோறும் தவத்தின் முடிவில் இயற்றச் சொல்லியிருக்கிறார்  வாழ்வியலாளரும், மெய்ஞானியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       மெய்ஞானத்தில் ‘மெய்ப்பொருள்’ ‘பொருள்’ என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல் வேதாத்திரிய மெய்ஞானத்தில் ‘புகழ்’ ‘உயர்புகழ்’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  ‘புகழும் உயர்புகழும்’ என்கின்ற நம்சிந்தனையில் மெய்ப்பொருள், பொருள் ஆகிய இரண்டும் குறுக்கிட்டு விட்டதால்,  இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு இப்போது ‘பொருள்’ ‘மெய்பொருள்’ பற்றியும் சிறிதளவு சிந்தித்துவிடுவோம்.   பொருள், மெய்ப் பொருள் பற்றியத் தெளிவு மனிதனுக்கு மிக மிக அவசியம்.  அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் சிந்திப்போம்.

    வாழ்க அறிவுச்செல்வம்                                                வளர்க அறிவுச்செல்வம்

    lotus

    Loading

  • தன்முனைப்பினை நீக்குவோம்

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

    தன்முனைப்பினை நீக்குவோம்

    FFC- N240

    02-11-2016- புதன்

    adi-sankarar-ramakrishna-paramahamsar-vethathiri-maharishi

    மனிதர்களில் இருவகை ‘நான்’ உடையவர் உள்ளனர். தன்முனைப்புள்ள நான்-‘Egoist I’ மற்றும் ‘தன்முனைப்பில்லா நான்—‘Egoless I’ என்று. தன்முனைப்பினை நீக்காதவரிடம் இருப்பது ‘தன்முனைப்புள்ள நான்’. முறையான உளப்பயிற்சியினை மேற்கொண்டு தன்முனைப்பினை நீக்கியவரிடம் இருப்பது ‘தன்முனைப்பில்லா நான்’. இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தன்முனைப்பினை நீக்கியவர் ஞானியாவார். தன்முனைப்பினை நீக்காதவர் அஞ்ஞானியாவார். ஞானியார் பேரின்ப வாழ்வு வாழமுடியும். அஞ்ஞானி இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையை வாழ்பவர். அவற்றில் பெரும்பாலும் துன்பமே மிகுந்திருக்கும்.

    தன்முனைப்பு பாவங்களுக்கெல்லாம் ஆணிவேர்:

    எப்படி? தன்முனைப்பினை நீக்கியவர் ஞானி என்கின்றபோதே அவர் பாவங்களிலிருந்து/துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவராகிவிடுகிறார். தன்முனைப்பினை நீக்காத அஞ்ஞானி எல்லாத் துன்பங்களுக்கும் ஆளாகிறார். எனவே தன்முனைப்பு என்பது எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது. தன்முனைப்புதான் எல்லா பழிச்செயல்களுக்கும் ஆணிவேராக உள்ளது.

         எப்படி வேண்டாத களையை ஆணிவேரோடு பிடுங்கி எறிந்தால் மீண்டும் மீண்டும் முளைக்காதோ அதுபோல், பழிச்செயல்களில் மனிதன் மீண்டும் மீண்டும் ஈடுபடாமல் இருக்க ஆணிவேராக உள்ள தன்முனைப்பினை அறவே நீக்கிட வேண்டும். அதற்கான அருமருந்துதான் இறை-உணர் ஆன்மீகமான மனவளக்கலை. ஆன்மீகத்தின் நோக்கம் பழிச்செயல்களை நீக்கி ஆன்மாவை உணர்வது. இறை உணர் ஆன்மீகத்தில் பழிச்செயல்களுக்கு ஆணிவேரான தன்முனைப்பு நீங்கும் வரை பழிச்செயல்களை நீக்க வேண்டும். (Sublimation of ego is spirituality — the means of sure success and happiness.) இருப்பினும் இந்த முறையினை தெரியாமல்தான் மனிதகுலம் துன்பத்தில் வாழ்ந்து கொண்டு அல்லலுறுகின்றது. காரணம், தன்முனைப்பு காலங்காலமாக பிறவிகள்தோறும் இருந்து, அதனைப்பற்றிய கவலையே இல்லாமல் இருந்து வருவதே. தன்முனைப்பினை நீக்கும் கலையைக் கற்று பயில்வதற்குத் தேவையான அறிவான, ‘தன்னை அறியும் அறிவியல்’ இருபதாம் நூற்றாண்டு வரை ஆன்மீகத்தில் உருவாகாமல் இருந்தது மேலும் ஒரு காரணமாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

    மனிதனுக்கு மட்டும் தன்முனைப்பு ஏற்படக் காரணம்?

       எல்லா உயிரினங்களும் இயற்கையின்/இறையின் தன்மாற்றங்களே. அப்படியிருக்கும்போது இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் எல்லா உயிரினங்களிலேயே ஆறாம் அறிவுடைய மனித இனத்திற்கு மட்டும்தான் தன்முனைப்பு என்பது வந்துள்ளது. என்ன காரணம்? ஆறாம் அறிவு தன்னையே உணர்ந்து கொள்ள ஐந்தறிவிலிருந்து தன்மாற்றம் அடைந்தது. அறிவு தன்னை யார் என உணர்ந்து கொண்டால் தன்முனைப்பு கரைந்துபோகும். ஆனால் அறிவு தன்னை உணர்ந்து கொள்ளக் கூடிய பரிபக்குவ நிலை ஒரு சிலருக்குத் தவிர எல்லோருக்கும் கிட்டுவதில்லை. இதற்குக் காரணம் என்ன?

    அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியல்:

          ‘அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியல்’ இருபதாம் நூற்றாண்டு வரை கல்வியில் இணைக்கப்படவில்லை. இருப்பினும் சிந்தனையில் ஓங்கிய ஒரு சிலர் தானாகவே அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியலை அறிந்து கொள்கின்றனர். ‘அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தாகம் இயல்பாகவே ஆன்மாவில் உள்ளதால், அதாவது ‘நான் யார்?’ என அறிவுபூர்வமாக அறிந்து கொள்கின்றனர். அதனால் தன்முனைப்பு நீங்கியவர்களை நாம் மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம். அவர்களை வணங்குவது என்பது அவர்கள் அடிபின்பற்றி வாழ்வதே. இதனைத்தான் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்தில் ஏழாவது குறளில் கூறுகிறார்.

          தனிப்பட்ட இம்முயற்சியினை ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் மேற்கொள்வதில்லை. எனவே எல்லோரிடமே தன்முனைப்பு உள்ளது. இதனால் வாழ்க்கையில் தனக்கும் துன்பங்களை வரவழைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாது, பிறருக்கும் துன்பங்களைத் தருகிறான் மனிதன். ஆனால் இந்நிலை மாறி, இருபதாம்/இருபத்தோரம் நூற்றாண்டில் ‘அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியல்’ ஏற்பட்டு, அது இப்போது மனவளக்கலையாக்கப்பட்டு கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே தான் ‘தன்முனைப்பில்லா நான் என்கின்ற தலைப்பே நம் சிந்தனைக்கு வந்துள்ளது.

    ‘தான்’, ‘தனது’ என்கின்ற இரு அவலத் தம்பதிகள்:

         தன்முனைப்பு என்பது தன்னையே முன்னிலைப் படுத்திக் கொள்வது. இதனால், தான் இயற்கையிலிருந்து/இறையிலிருந்து வேறுபட்டவனாக, தனிப்பட்டவனாகக் கருதப்படும் சூழல் ஏற்படுகின்றது. எனவே இயற்கையின்/இறையின் சிறப்பை உணராமல், அனுபவிக்க முடியாமல் போகின்றது. இந்த எண்ணம் ‘தான்’ ‘தனது’ என்கின்ற இரு எண்ணக் கோடுகளை ஏற்படுத்திவிடுகின்றது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இந்த இரு எண்ணங்களை அவலத்தம்பதிகள் என்றே கூறுகிறார் மகரிஷி அவர்கள். ஏனெனில் இந்த இரு எண்ணங்களிலிருந்து பிறந்ததுதான் மனிதனிடம் உள்ள அவலக்குணங்களான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை மற்றும் வஞ்சம் என்கிறார். எனவே தன்முனைப்பை அகற்ற வேண்டும். தன்முனைப்பு கரைந்த ‘நான்’ தன்முனைப்பில்லா நான் எனப்படுகின்றது.

    ‘EGO’ என்கின்ற சொல் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது?

       ஆங்கில மொழியில் தன்முனைப்பு என்கின்ற சொல்லை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்வோம். ஆராய்ந்து பார்த்தால் தன்முனைப்பின் தன்மையினைக் கொண்டே அச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தன்முனைப்பு என்பது “Ego” என்கின்ற ஆங்கிலச் சொல்லின் பொருளாகும்(meaning). “Edging God out” என்கின்ற வாக்கியத்தில் உள்ள மூன்று சொற்களின் (words) ‘E’, ‘G’, ‘O’ என்கின்ற முதல் எழுத்துக்களை (letters) எடுத்து உருவாக்கப்பட்ட(coined) எழுத்துதான் “EGO” என்கின்ற எழுத்து. இறையை (இறைவனை, God) வெளியே ஓரம் தள்ளி விடுதல் என்பதாகும். தன்முனைப்பு என்பது இறையை மறந்த நிலை. மனிதனுக்கும் இறைக்கும் உள்ள திரையே தன்முனைப்பாகும். தன்னை இறையிடமிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ளும் நிலை. தன்னை முனைப்புடன் காட்டிக்கொள்வது தன்முனைப்பு.

    “தன்முனைப்பு கரைந்து போம், காணும் தெய்வம்”

    ‘நான்’ என்பது யார்? உயிர் இல்லை எனில் ‘நான்’ என சொல்ல முடியுமா? எது உயிராக இருக்கின்றது? இயற்கையே/இறையேதான் உயிராகவும் இருக்கின்றது. அறிவாகவும் இருக்கின்றது. அவ்வாறு இருக்க ‘நான்’ என்பது யார்? ‘நான்’ என்பது இறையே! இறையே நானாக இருக்கிறேன் என்கின்ற தெளிவு கிடைக்க வேண்டும். இந்த உண்மை இருக்கும்போது தன்னை முனைப்புடன் காட்டிக் கொள்வதில் பொருளில்லையே!
    எனவே இறையுணர் ஆன்மீகத்தில் இறை உணர்வு பெறுவதற்கு தன்முனைப்பு கரைய வேண்டும். தன்முனைப்பு கரைந்தால் இறையை அறிவு உணர்ந்து கொள்ளும்.
                                             “கரைந்து போம் தன்முனைப்பு; காணும் தெய்வம்”
    என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருட் செய்தியினை முழுவதுமாக அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

                                                      நிறைநிலை

    இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு
    ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
    நிறைநிலையே தானாக உணர்வதாகும்
    நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
    உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
    உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
    கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
    கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.”

     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

                             

    உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்ளுதல்:

          தன்முனைப்பு என்பது, அறிவு தன் மூலத்தை மறந்து தன்னை தவறாக உடலுடன் அடையாளம்(body consciousness—mistaken identity) கொண்டு முனைப்பு கொள்ளுதலாகும். எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இருக்கும்போது, மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது அல்லது ஏங்குவது அல்லது புகழ் மயக்கத்தில் இருப்பது ஆகியவற்றிக்கெல்லாம் காரணம் இறையிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் தன்முனைப்புதான். தன்முனைப்பே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேராக உள்ளதால், தன்முனைப்பு நீங்க அறிவு தன்னைப் பற்றி தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு தவமும் சுயசோதனையும் அவசியம்.
    தினந்தோறும் மனிதன் “நான்”, “எனது” என்கின்ற இரு சொற்களையும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தன்முனைப்பை வெளிபடுத்துகின்ற “நான்”, “எனது” என்கின்ற சொற்களை உபயோகிக்காமல் இருப்பது எங்ஙனம் சாத்தியம் என ஐயம் சாதகர்களுக்கு எழலாம். இந்த ஐயம் தீர்க்கவே இன்றைய சிந்தனை.

    தன்முனைப்பை வெளிப்படுத்துகின்ற ‘நான்’ என்கின்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாதா?

    அப்படியில்லை. தன்முனைப்பு நீக்கிக் கொண்ட ஞானியும் “நான்” என்கின்ற சொல்லை பயன்படுத்தினாலும், ஞானி பயன் படுத்துவதற்கும் சாதாரண மனிதன் பயன்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஞானி என்பவர் எப்போதும் அயரா விழிப்பு நிலையில் இறையே தானுமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்ற ஞாபகத்தில் இருப்பார். ஆனால் சாதாரண மனிதன் இவ்வுண்மையை தெரிந்திருந்தாலும் அந்நிலையை மறந்து தான் வேறு, இறை வேறு என்கின்ற உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பதுதான் அந்த வித்தியாசம்.   எனவே ஞானி பயன்படுத்துவது “Egoless I”. சாதாரண மனிதன் பயன்படுத்துவது “Egoist I ” ஞானியின் “நானை” சாதாரண மனிதன் புரிந்து கொள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளுவதைக் கவனிப்போம்.

    சீவன் முக்தனின் அடையாளம்:

    எரிந்து கருகிப்போன கயிறு தன் பழைய உருவத்தோடு இருந்தாலும் ஒன்றையும் கட்டுவதற்கு உதவாது. அதுபோல் பிரம்ம ஞானத்தால் எரிக்கப்பட்ட ஞானியின் அகங்காரமும்(தன்முனைப்பு) அப்படிப்பட்டதே என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    மேலும் விவேக சூடாமணி கூறுவதையும் கவனிப்போம். நிழலைப்போல் தொடர்ந்து தேகம்(உடல்) வந்து கொண்டிருந்தாலும் “நான்”, “என்னுடையது” என்கின்ற எண்ணமில்லாமை “சீவன் முக்தனின்” அடையாளம் என்கிறது.

    தன்முனைப்பு நீங்கவே குருவை அடைகிறான் சீடன்:

    குரு சீடர் உறவில், எதற்காக சீடர் குருவை அடைகிறான் என்று கூறும் போது ‘தன்முனைப்பு நீங்கவே குருவை அடைகிறான் மனிதன் என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் குரு சீடர் உறவு என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடல்களை நினைவு கூர்வோம்.

    குரு சீடர் உறவு

    முனைப்பை நீக்கு

    தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
    தவமாற்றும் சாதனையால் உயரும்போது
    நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
    நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்;
    உன்முனைப்பு நிலவு ஒளி ரவியால்போல
    உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு
    “என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
    எனக்கு?” என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்!”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    முனைப்பு நீங்கும்போது

    தன்முனைப்பு பாவப்பதிவு மயக்கம் மூன்றும்
    தழைப்பதுதான் மனிதனரிட வாழ்வியல்பு
    தன்முனைப்பை விழிப்புநிலை மெய்விளக்கம்
    தவவாழ்வு இவற்றாலே கரைக்க வேண்டும்
    தன்முனைப்புக் கரைந்து அறிவு முழுமை எய்த
    தக்கவொரு தவ ஆசான் தொடர்பு வேண்டும்
    தன்முனைப்பு முதல் மூன்று தளைகள் நீங்கத்
    தான் பரமாம், பிறப்பு இறப்புத்தாண்டும் ஆன்மா.”

    .. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

                                 

          இது வரை வேறெங்கும் ஆன்மீகத்தில் தன்முனைப்பு பற்றிய இத்தகைய விளக்கம் காணப்படவில்லை. எனவே ‘அறிவு தன்னை அறியும் அறிவியலை’ பெற்றுள்ள நாம் அதற்கேற்ப ‘அறிவு தன்னை அறியும் அறிவியலில்’ தேர்ச்சி பெற்று தன்முனைப்பில்லா நானாகத் திகழ்வோம். சிறப்பான வாழ்வு வாழ்வோம். மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் சந்திப்போம்.

    வாழ்க அறிவுச்செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    lotus

    Loading

  • வாழ்வில் தேறிடுவோம் – 2/2

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    வாழ்வில் தேறிடுவோம் – 2/2

    FFCR – 239

    30-10-2016 – ஞாயிறு

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

    அருட் பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தது.

    “இது வரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ……………………….
    ……………………………………………………………………..
    இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்தி விடுவோம். அஞ்சவேண்டாம்.” என்றார்.

    வள்ளலார். தன் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவிட்டதை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஊனுடம்பு ஆலயத்தில் பத்து வருடங்கள் தங்கி இருந்து முடித்துக் கொண்டார்.

        பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்து, நம்மிடையே அருட்தந்தையாக இருந்து உறவாடி, இன்றும் அவரது அறிவாற்றலின் வாயிலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற வேதாத்திரி மகரிஷி அவா்கள் என்ன கூறுகிறார் என்றும் பார்ப்போம். உலக மக்களுக்கு 1970 ஆண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பு விடுத்து நாற்பத்தாறு  ஆண்டுகள் ஆகின்றன. அந்த அழைப்பைப் பற்றி நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இருந்த நிலையிலே, நம்மெல்லோரையும் அவரிடம் கொண்டு வந்து சீடராக்கியுள்ளது இயற்கை/இறை. இது இறையின் புனித திட்டமும், ஏற்பாடும் ஆகும்.

    1823 ல் அவதரித்த அருளாளர் வள்ளலார் “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.” என்றார்.

    1911ல் அவதரித்த அருளாளர் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர் ! *” என்கிறார்.

    முதலில் அவதரித்த அருளாளர் கூறுவதை சற்று சிந்தித்து பார்ப்போம். ஒருவர் கூட தான் கூறுவதை நம்பி எழுந்து திறத்தில் திகழ்வதற்கு ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார்,

    எழுந்து என்றால் ‘விழித்தல்‘ என்று பொருள் கொள்ள வேண்டும்.
    திறம் என்பதற்கு பொருளாக “மனிதனில் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவது” என்று கொள்ள வேண்டும்.
    ‘திகழ்தல்’ என்றால் பிரகாசித்தல், பொலிவுடன் இருத்தல், சிறப்புடன் இருத்தல், விளங்குதல் என்று பொருள். விளங்குதல் என்றால் புரிதல். தெரிதல் என்று பொருள். ஆகவே “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்றால்
    மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றல் விழிப்புற்று சிறப்புடன் தெய்வீகத்தை விளங்கச் செய்பவர் யாரும் இல்லை என்று ஆதங்கப் பட்டார். ஆனால் அத்தோடு இருந்து “அஞ்ச வேண்டாம்” என சமாதானம் கூறி அனைவரையும் திருத்தி விடுவோம் என்கிறார்.
    அவ்வாறே 1911ல் அவதரித்த அருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற்றுய்வீர் ! ” என்கிறார்.
    “இன்றேனும் விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்” என்றால் “இதுவரை எழுச்சி இல்லாமல் மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் தெய்வீக ஆற்றல் இன்றாவது விழிப்பு பெற்று உய்வீர் என்கிறார்.

    anbargale vaareer-THAI

           1874 ல் வள்ளலார் எண்ணியது, 1953 ல்(1911+42=1953) நிறை வேறியது. இராமலிங்க சுவாமிகள் எண்ணிய, மக்களைத் திருத்தி விடும் படலத்தை, இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, அரியக்கலையாக இருந்து வந்து அகத்தவத்தை பரவலாக்கி, மனிதனை திருத்தும் முகமாகத்தான் அகத்தாய்வு பயிற்சியினையும் உருவாக்கி கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது.

    இராமலிங்க சுவாமிகள் எண்ணியது, இறை எண்ணியதுதானே!. ஆக மொத்தத்தில் அறிவை அறிந்தவர்கள் ‘இவ்வுலக மக்கள் திருந்தி உய்வதற்கு வழியே இல்லையா’ என எண்ணியதற்கிணங்க, “Fraction demands. Totality supplies” என்கின்ற தன்னுடைய நியதிப்படி, இயற்கை/இறை தன் திரு விளையாடலை வேதாத்திரியத்தின் வழியாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.  ஆகவே இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட மனிதகுலம் அறிவாகிய ஒழுங்காற்றலை பயன்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்நாளில் அறிய வேண்டியதை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிறவியினை அளிக்கின்றது இயற்கை.
    மனிதன் அறிய வேண்டியதை எல்லாம் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை கிடைக்கும் போது அறியப்பட்டுவிடும். அவையாவன:

    1) இறை அரூபம். அளப்பரிய ஆற்றல்
    2) இறை பேராற்றலாக, தூய அறிவாக(பேரறிவாக), வற்றா இருப்பாக, காலமாகவும்(Time), இருக்கின்றது.
    3) தன்முனைப்பில்லா நான் (Egoless I) அதாவது அறிவுடைமையுள்ள நான் கண்டுபிடிக்கப்படும். மனிதனிடமுள்ள (நானில்) உடல், உயிர், அறிவு ஆகிய மூன்றில் நானாக இருப்பது அறிவே என்றும், அதே அறிவு இறையாகும் என்றும், அறிவை அறிந்த நானே தன்முனைப்பு அற்ற நானாகும்.
    இந்தவிளக்கத்தைப் பெறாத, பெற்று நடைமுறைக்கு கொண்டு வராத நான்கள் தன் முனைப்புள்ள நான்களாகும்.
    4) பிற மனிதர்களிடமும் உள்ள அறிவும், இறையே, 720 கோடி உலகமக்களும் வெவ்வேறு நான்கள் இல்லை. ஒரே, ஆனால், உடலளவில் தனித்தனியாகவுள்ள நான்கள். உலக மக்கள்
    ஒரு மாபெரும் குடும்பம். ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிகளே.
    5) பிற உயிர்களிடம் உள்ள (தாவரங்கள் முதல் விலங்கினங்கள் வரை) உயிரும் சரி, அறிவும் சரி இறையே. இறையே உயிர்களுக்கெல்லாம் உயிராக திகழ்கிறான்.
    6) சடப் பொருட்களிலும் அணுவாக இருப்பதும், அணுவின் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதும் ஒழுங்காற்றலாகிய அறிவாகிய இறையே.
    7) அத்வைதம் தெளிவாக விளங்கிவிடும். ஒன்றே எவ்வாறு பலவாறாக இருக்கின்றது, இருக்க முடியும் என்கின்ற சந்தேகமும் விளங்கிவிடும்.
    8) வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பது அறியப்படும்.
    9) கோடனு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு அப்பால் எல்லையில்லாத அளவிற்கு விரிந்து உள்ள வெளியே (அப்பாலுக்கு அப்பாலாய்) இறையே என அறியப்படும். அது அறிவாக இருப்பதால்அது வெளியாகத் தெரிகின்றது என்கின்ற விளக்கமும் கிடைக்கப் பெறும்.
    10) ‘பிரக்ஞானம் பிரம்மம்’ ‘ அகம் பிரம்மாஸ்மி’ ‘தத்துவமஸி‘ ‘அயம் ஆத்மா பிரம்மம்‘ என்கின்ற மகா வாக்கியங்கள் விளங்கும்.
    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அறிவாக உள்ள அரூபமான இறையை, மனிதன் அறிவைக் கொண்டுதான் உணர முடியும். அறிவைக் கொண்டு பேரறிவை அறியும் பேற்றினையே தமிழ் இலக்கியங்களில் வீடுபேறு எனப்படுகின்றது.
    வீட்டிற்கெல்லாம் வீடு அது. அந்த வீட்டினை அடைவது பேறாகக் கருதப்படுகின்றது. எனவே வீடு பேறு எனப்படுகின்றது.
    அறம் காத்து, பொருள் ஈட்டி, அளவு முறையோடு இன்பம் துய்த்து, வீடு பேற்றை அடைவதே மனிதப்பிறவியின் நோக்கம் அல்லது பயன் என்கின்றது தமிழ் இலக்கியங்கள்.
    ஆறறிவாக வாழ்கின்ற மனிதர்களெல்லாம், அதற்கு ஏற்ப பொருத்தமாக, ‘உண்மைப் பொருளுணா்தல் பேறு’ என்றும், அதுவே பிறவிப்பயனைப் பெறுவதாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ஆகவே அருட்பிரகாச வள்ளலார் மற்றும் வேதாத்திரி மகரிஷி, மற்றும் பல மகான்களின் ஆதங்கங்களைப் பூர்த்தி செய்ய, ‘வீடு பேற்றில்’ தேறிடுவோம். தேறிடுவோம். தேறிடுவோம்.
    அந்தப் புனித ஆன்மாவின் ஆதங்கங்களுடன் நம்முடைய ஆதங்கத்தையும் சேர்த்துக் கொள்வோம்.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் வேறோரு தலைப்பில் சிந்திப்போம். 

    வாழ்க அறிவுச் செல்வம்                                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்வில் தேறிடுவோம்!(அவி-238)

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

     FFCR/அ.வி. 238

    26-10-2016 – புதன்

    வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியவை:

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

    பிறப்பு – இறப்பு என்கின்ற இரு நிகழ்சிகளுக்கு இடையில் அனுபவிப்பதுதான் வாழ்க்கை எனப்படுகின்றது. சிறுவனாக இருக்கும்போது பள்ளிப் படிப்பில் தேற்கிறோம். வாலிபனாக இருக்கும்போது கல்லூரிப் படிப்பில் தேற்கிறோம். பணிக்குச் சென்ற பின் அப்பணியிலும் தேற்கிறோம். ஆனால் வாழ்வில் தேறினோமா என்றால் சந்தேகமே. இல்லாவிட்டால் ‘ஒருவரேனும் தேறிலர்’ என்று ஆதங்கப்பட்டிருக்கமாட்டார் அருட்பிரகாச வள்ளலார். எனவே ‘அஞ்சவேண்டாம், திருத்திடுவோம்’ என்று பூதவுடலைவிட்டுச் சென்றபோது கூறிய அருட் செய்திக்கு இணங்க திருந்திடுவோம், தேறிடுவோம். இது காலத்தின் கட்டாயம்.

    வாழ்க்கை தோன்றி மறையும் ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. எனவே மனிதஅறிவு இக்குறுகிய காலத்தில், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டு இன்புற வேண்டும். இன்று உலக மக்கள் தொகை 740 கோடி. பத்து வருடங்களுக்கு முன்னர் உலக மக்கள் தொகை சுமார் 650 கோடி. பத்து வருடங்களில் மக்கள் தொகை 90 கோடி அதிகரித்துள்ளது. இந்த பத்து வருடங்களில் இறந்தவர்களைவிட பிறந்தவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் தொகை 90 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்தவர்கள் எத்தனை போ் என சொல்ல முடியுமா? புள்ளி விவரம் இல்லை. கடலிலுள்ள நீரில் எவ்வளவு நீர்த்துளிகள் இருக்கும் என்று சொல்ல முடியாதோ அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்துள்ள மக்கள் தொகை எண்ணிக்கையும்.
    ஒவ்வொரு ஆண்டும், பிறந்த நாள் வரும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று இருப்பவர் அடுத்த 100 ஆண்டுகளில் இருக்கப் போவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் இன்று இல்லை.(மனிதனின் ஆயுட்காலம் 100 என எடுத்துக் கொண்டு இது சொல்லப்படுகின்றது) நின்றால் ஒரு அடி சொந்தம். படுத்தால் ஆறடி சொந்தம். இது வேதாந்தமில்லை. தத்துவமில்லை, ஒதுக்கித் தள்ளுவதற்கு. இதுதான் எதார்த்தம்.FFC_46-geetha chaaram-
    இயற்கையாகிய–பேராற்றலிருந்து உருவானவர்கள்தான், இத்தனை கோடானுகோடி உலக மக்களும். அதே இயற்கை ஆற்றலிருந்துதான் மனிதன், நீர்க்குமிழ் போல், மறையக்கூடிய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். சூரிய ஆற்றல், வெப்ப ஆற்றல், காந்த ஆற்றல், மின் ஆற்றல், எரிசக்தி ஆற்றல், இயந்திர ஆற்றல், இரசாயன ஆற்றல், இவ்வாறாக பல்வேறு ஆற்றல்-வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி அனுபவித்துவிட்டு ஒரு நாள் மறைகிறான். நீர்க்குமிழியான உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியவைகளை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறான் மனிதன்.
    740 கோடி மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்றால் என்ன பொருள்? 740 கோடி மக்களும் 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்கள் (Treasure-House of Divine Energy). இவ்வாறாக 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்களாக இருந்தும், அதனை அறியாது அறியாமையில் வாழ்கின்றது உலக சமுதாயம். இத்தகைய தெய்வீக ஆற்றலை, ஒவ்வொரு மனிதனும் கொண்டிருந்தாலும், “விஞ்ஞானத்தை நோ்வழியில் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இணைந்த வாழ்வு மலர வேண்டும்”, என்று மகரிஷி அவா்கள் கூறுவது போல் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தெய்வீக ஆற்றலை நேர்வழியில் பயன்படுத்துகின்ற நெறிமுறைகளைக் கற்க வேண்டும். 740 கோடியில் ஒரு சிலரைத்தவிர மற்ற தெய்வீகக் கருவூலங்களின் ஆற்றல்களும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஆகவே தான் இன்னமும் மனித குலம் தன் பூர்விகச் சொத்தான(hereditary wealth) அமைதியினை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது.

    முதல் மனிதன் தோன்றி இன்று வரை எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?
    பல்லாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்.

    இன்னமும் மனித குலத்தில், தன்னுடைய பூர்வீக சொத்தான அமைதி எனும் (ஆதியில் இருப்பாக இருந்தது) சொத்தை மட்டும் எல்லோராலும் முழுவதுமாக அனுபவிக்க முடியவதில்லை. பூர்வீக சொத்தான அமைதியை மட்டும் ‘எல்லோராலும் முழுவதுமாக’ அனுபவிக்க முடியவில்லை என்றால் வெகு சிலரே தனது பூர்வீக சொத்தான அமைதியை முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று பொருளாகின்றது. ஆம். அப்படித்தான். முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று ஏன் கூறப்படுகின்றதென்றால் அந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்களில் ஒரு சிலர் பூர்வீக சொத்தை அனுபவித்தாலும், அவர்களும் குறைவாகவேதான் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கின்றனர் என்றாகின்றது. ஆம். மற்றவர்களில் உள்ள அந்த வெகு சிலரும் பூர்விக சொத்தான அமைதியை அனுபவித்தாலும் அவர்களும் அறிந்து அனுபவிப்பதில்லை. அறிந்து அனுபவிக்காததால் முழுவதுமாக அமைதியை அனுபவிக்க முடியவில்லை. குறைவாகவே தான் அனுபவிக்கின்றனர். பெரும்பாலோர் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமலேயே மடிந்து விடுகின்றனர். காரணம் என்ன? வாழ்வில் அறிய வேண்டியதை அறியவில்லை.

    தன் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்கின்ற அந்தவெகு சிலரின் எண்ணிக்கையை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது விரல் விட்டு எண்ணுகின்ற அளவிலேதான் இருக்கும். அவர்களால் மட்டும் எவ்வாறு தங்களது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க முடிகின்றது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் எதார்த்த வாழ்வு வாழ்பவர்கள்.

    எதார்த்தம் என்றால் என்ன?
    எதார்த்தம் என்றால் உள்ளது உள்ளபடி,
    நடைமுறைக்கு முரண்படாதது.
    அப்பட்டமான உண்மை (naked truth) என்று பொருள்.

    உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு நடைமுறைக்கு ஏற்றபடி வாழ்கின்றவர்கள் அந்த முதல் ரக வெகு சிலர். அந்த முதல் ரக வெகு சிலர் உலகநியதியையும், இயற்கையின் தன்மாற்றத்தின் சாராசாம்சத்தையும் விளங்கிக் கொண்டு வாழ்பவர்கள். கீதாசாரம் கூறும் இயற்கையியலாகிய வாழ்வியல் உண்மைகளை நினைவு கூர்வோம். இயற்கையியலாகிய வாழ்வியல் என்பதால் எல்லோருக்குமே பொதுவானதுதானே.
    சமுதாயம் இயற்கையின்/இறையின் மற்ற ஆற்றல்களையும், வளங்களையும் வாழ்வின் ஆற்றலாகவும், வளமாகவும் மாற்றி வாழத் தெரிந்து கொண்டதே தவிர, இயற்கையின்/இறையின் முதன்மையான ஆற்றலான ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இதுதான் இன்றைய, இதுவரை வந்துள்ள சமுதாயத்தின் குறை.
    காரணம், மனித அறிவு, இதுவரை வாழ்வின் நோக்கத்தை விஞ்ஞானப் பூர்வமாக அறியவில்லை.
    இதனால் அறிவிற்கு மூன்று குறைபாடுகள் வந்துவிட்டன. அவையாவன
    அறியாமை,
    அலட்சியம்,
    உணர்ச்சிவயம்.
    ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்ள,
    அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அறிவு மனிதனிடம் இருக்கின்றது. ஆனால் அந்த அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அதாவது
    அறிவின் பூர்வீகம் அறிய வேண்டும். அறிவின் பூர்வீகம் என்பது, மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு எங்கிருந்து வந்தது என அறிய வேண்டும்.
    “காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்கின்ற மகான் பாரதியின் கூற்று எவ்வாறு அறிவியல் உண்மையைக் கொண்டதாக உள்ளது என்று அறிய வேண்டும்.
    அதுபோல் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கின்ற திருமந்திரம் எவ்வாறு அறிவியலைக் கொண்டதாக உள்ளது என்றும் அறிய வேண்டும்.

    அறிவின் இருப்பிடம் அறிந்து கொண்டால், ஒழுங்காற்றலான அறிவாற்றலை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தலாம். ஒழுங்காற்றலான அறிவை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தினால்தான் அறிவின் இருப்பிடம் அறிய முடியும்.

    அறிவின் இருப்பிடம் அறியும் போது, மனிதஅறிவு வாழ்நாளில், தான் அறிய வேண்டியதை எல்லாம் அறிந்துவிடும். மகாவீரர் கூறுவதனை நினைவு கூர்வோம்.

    எவனொருவன் ஆன்மாவை அறிகிறானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.” – மகாவீரர்

    நான் யார் என அறியப்பட்டுவிடும். அறிவு என்றாலே, அதன் இயல்பு அறிதலாகும். அவ்வாறு இருக்கும் போது,
    அறிய வேண்டியதான, தன்னுடைய மூலத்தை, பூர்வீகத்தை அறியாது இருந்தால் அறிவு எவ்வாறு தன் பூர்விக சொத்தை அனுபவிக்க முடியும்? நான் யார் என அறிவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும். இப்போது சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளியுள்ளதை நினைவு கூர்தல் நலம் பயக்கும்.

    தன்னை உணராப்படிப்பு எதுவாயினும் பொருளற்றதே. தன்னை உணர, தன்னைத் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே, தன்னையறிவதே ஞானோதயம் – கைவல்யம்!! ”
                                      — சுவாமி சிவானந்த பரமஹம்சர்.

    மற்றொரு அறிஞரான டால்ஸ்டாய் கூறுவதையும் நினைவு கூர்வோம்.
    எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றதோ, அவன்தான் மிகச்சிறந்த கலைஞன் என்று கூற முடியும்”
                     — டால்ஸ்டாய்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்  வேதாத்திரி மகரிஷி அவர்களின் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்புக் கவியையும், அருட்சோதி வள்ளலார் அவா்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது மொழிந்ததையும், வாழ்வில் அறிய வேண்டியவைகளையும் அறிவோம்.

    வாழ்க மனித அறிவு!           வளர்க மனித அறிவு!!

    Loading

  • 237-பழக்கமும் விளக்கமும்-7/7

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    237-பழக்கமும் விளக்கமும்-7/7

    அறிவிற்கு விருந்து—237

    23-10-2016—ஞாயிறு

    வாழ்க வளமுடன்!

        ‘பழக்கமும், விளக்கமும்’ என்கின்ற தலைப்பில் ஆறு சத்சங்கங்களில் சிந்தித்து வருகிறோம்.  இன்று இச்சிந்தனையை நிறைவு செய்ய இருக்கிறோம்.

       இதுவரை பதிவு, பழக்கம், பழக்கப்பதிவு, பழக்கப்பதிவின் அழுத்தம், விளக்கம், விளக்கப்பதிவு, விளக்கப்பதிவின் அழுத்தம், பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டம் ஏன், பெரும்பாலும் ஏன் பழக்கப்பதிவே வெற்றி கொள்கின்றது, மனிதனிடம் உள்ள தீமை, ‘பழக்கம்’ என்ற மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பு எவ்வாறு சரியாக உள்ளது என அறிந்து கொண்டோம். எனவே இனிமேலும் தீமை தரும் பழக்கத்தினை பழகுவதில்லை என முடிவு செய்துள்ளோம். நமது வம்சாவளியும், சமுதாயத்தின் வருங்காலத் தூண்களான குழந்தைச் செல்வங்களுக்கு நற்பழக்கங்களைக் கற்றுக்கொடுத்தும், அவர்கள் நற்பழக்கங்களை பழகக்கூடிய சூழல்களையும் உருவாக்கித் தருவோம். அத்தகைய சூழல்களில் முதன்மையானதான நாமே முன் உதாரணமாகத் திகழ்வோம்.

       மனிதனின் நிலை நற்பழக்கம் பழகுவதில் போராட்டமாக இருப்பதால் என்ன செய்ய வேண்டும். இனிமேலும் துன்பம் வரக்கூடாது என்பதனை முடிவு செய்த பிறகு நற்பழக்கத்தை எப்பாடு பட்டாவது பழகித்தான் ஆகவேண்டும்.  இல்லை எனில் துன்பமே மிகும். விளக்கவழி பழகுவது/வாழ்வது எப்போது எளிதாக இருக்கும்? பழக்கப்பதிவின் அழுத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் விளக்கவழி பழகுவது/வாழ்வது எளிதாக இருக்கும். இது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்வோம்.

    வாழ்வில் நற்பழக்கம் எப்போதிலிருந்து பழக வேண்டும்?

        இந்த வினாவிற்கான பதில் அனைவரும் அறிந்ததே. இளமையில் நற்பழக்கம் பழக ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முறையான வாய்ப்பும் இருக்க வேண்டும். நற்பழக்கம் மனித வாழ்வில் எப்போதிலிருந்து பயில வேண்டும் என்பதனையும், அவ்வாறு உற்ற வயதில் தொடங்காவிட்டால் போராட்டம்தான் என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அவர் வாய்மொழியாகவே அறிந்து கொள்வோம்.

    நற்பழக்கம்(22.12.1959)

    பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
    பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்;
    பழக்கத்தை, வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்.
    பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைவிக்கும் எளிது”

                                                                          . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைவிப்பது எளிதாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். உண்மைதானே! ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ மற்றும் ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்’ என்கின்ற இரு பழமொழிகளும் இதனைத்தானே தெரிவிக்கின்றன.

    கல்வி எப்படி இருக்க வேண்டும்?

         எப்படி நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி சமநிலையாக (stable, equilibrium) இருக்கின்றதோ, அதுபோல், ஆனால் இரு கால்களைக் கொண்டே உடல் சமநிலையாக இருக்க முடிந்தாலும், அறிவு நிலையில் மனிதனை சமநிலைப்படுத்துகின்ற கல்விக்கும் நான்கு கால்கள் இருக்க வேண்டும் எனக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள். எனவே கல்வி எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கை தத்துவ அறிவு என்று நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். மனிதன் என்பவன் விலங்குத்தன்மை, மனிதத்தன்மை, தெய்வத்தன்மை ஆகிய மூன்று கலவையாக இருக்கிறான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். எனவே சுவாமி விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள முழுமையை-தெய்வத்தன்மையை (Education is the manifestation of perfection already present in man) வெளிக் கொணர்வதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த மூன்று கலவையில் விலங்குத்தன்மை நீங்கி, மனிதத்தன்மை வளர்ந்து தெய்வத்தன்மை ஓங்கவைக்கும் கல்வி, மகரிஷி அவர்கள் கூறியுள்ளதுபோல் எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத் தத்துவறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாகவே இருக்க வேண்டும் என நாமும் எண்ணுகிறோம். அந்த எண்ணத்தை உரமிட்டு வளர்ப்போம்.

    “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது”

         இவ்வாறு கூறுவது யார்? மகரிஷி அவர்கள். எது நமக்கும் உரியது என்கிறார்? ஆறாமறிவாக வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், அதற்கு ஏற்ப பொருத்தமாக பிறிவிப்பயனாகிய இறையை உணர்வது என்பது நமக்கும் உரியது என்கிறார். அதாவது சாத்தியம் என்கிறார். எப்படி தகவல் அறியும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளதோ அதுபோல், இயற்கையின் ஆட்சியின்றி ஆளுமையில் ஒவ்வொரு ஆறாம் அறிவைக் கொண்ட மனிதனுக்கும், ஆறாம் அறிவு தன்னைப்பற்றி–அறிவை அறியும் ஆற்றல் – உரிமை உண்டு என்கிறார்.

         அவ்வாறு இளமையில் கல்வியோடு வாழ்வியல்–ஆன்மீகக் கல்வி இல்லாத காலத்தில் பிறந்து இளமைப்பருவத்தை தாண்டியவர்களுக்கும் ஒழுக்கப்பழக்கத்தைக் கொண்ட இறைஉணர் ஆன்மீகக்கல்வி தனியாகப் பயின்று இப்பிறவியிலேயே வெற்றிபெற வழி இருக்கின்றது என்பதனை உறுதியோடு கூறுகிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள், தான் எய்திய நிலையை, நாமும் அடையமுடியும் என்பதற்கு “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று உத்திரவாதத்தை அளிக்கிறார். பிறவிக் கடல் நீந்தலாம் என்கிறார்.

    பிறவிக்கடல் நீந்தலாம்(26-10-1994)

    பல ஆயிரம் பிறவி எடுத்தேற்றப் பாவப்
    பதிவுகளை, ஒரு பிறவிக் காலத்துள் மாற்றி,
    நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
    நல்லவாய்ப்பு ஆற்றல்இவை நமக்களித்து, இயற்கை
    நிலஉலகில் மனிதரிடம் அமைந்துளது, உண்மை;
    நேர்முகமாய் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றிப்
    பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
    பாதையிலே ஒத்துதவி வாழும் முறை போதும்.”

                                                                         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        பாடலை அருளியதோடு மட்டுமில்லாது, அதற்கு முன்னதாகவே, பாடலில் கூறப்பட்டுள்ள வழிகளான தவமும், அறமும்(தற்சோதனை) பயில மனவளக்கலையை ஏற்படுத்திவிட்டு பின்னர் அதனால் கிடைத்த feedback ஆல் மனவளக்கலைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 1994 இல் ‘பிறவிக்கடல் நீந்தலாம்’ என்கின்ற பாடலை அருளியுள்ளதன் முக்கியத்துவத்தை உணர்வோமாக! எனவே நம் சுதந்திரமாகிய சுயமாய் சிந்திப்பதை நினைவில் கொண்டு ஆராய்ச்சி செய்து துன்பம் நீக்கி இன்பம் அனுபவித்து, பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவித்து பேரின்பத்தை அடைந்து, நிறைவு வாழ்க்கை வாழ்ந்து பிறவிக்கடல் நீந்தவேண்டும்.

    இப்போது என்ன செய்ய திட்டமிடல் வேண்டும்?

          துன்பமிலா வாழ்க்கைக்கு ஒழுக்க வாழ்வு வாழவேண்டும் என்பதால், குழந்தைகளை ஒழுக்கத்தில் வளர்ப்பதில் முதல் ஆசிரியராக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

    இங்கே அறிஞர் ஆர்னால்ட் பென்னெட் அவர்களின் அமுத மொழியினை நினைவிற்கொள்வோம்.

    “நல்ல குழந்தைகளை உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும். பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.” (சிந்திக்க அமுத மொழி – 86 —27-06-2015 சனிக்கிழமை அன்று சத்சங்கத்தில் பகிர்ந்து கொண்டது click here)
                                                                                      . . . அறிஞர் ஆர்னால்ட் பென்னெட்.

    மற்றொரு அறிஞர் எம். கோர்க்கி கூறுகின்ற அமுத மொழியினை நினைவு கூர்வோம்.
    “பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.” (சிந்திக்க அமுத மொழி – 86 —27-06-2015 சனிக்கிழமை அன்று சத்சங்கத்தில் பகிர்ந்து கொண்டது click here)

                                                                                                    . . . அறிஞர் எம். கோர்க்கி

         அறியாமையால் ஏற்படுத்திக் கொண்ட பெற்றோர்கள் அவர்கள் பெற்றோர்களின் முன்வினைப்பதிவுகளை ஏற்றுத்தான் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு நற்பழக்கங்களைக் கற்றுக் கொடுத்து, அதற்கேற்றால்போல் நாமும் நம் குழந்தைகளுக்கு முன்உதாரணமாக இருந்து, குடும்பத்திலேயே சத்சங்கத்தை ஏற்படுத்தி குழந்தைச் செல்வங்களை அறிவுச் செல்வங்களாக திகழச் செய்வோம். வாழ்க வளமுடன்.

    எவ்வாறு குழந்தைகளுக்கு முன்உதாரணமாக இருப்பது?

    கல்வியோடு இயற்கையியல் பாடம்(ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத்தத்துவறிவு—வாழ்வியல் கல்வி–ஆன்மீகக்கல்வி) இல்லாத காலத்தில் கல்வி கற்றவர்கள் செய்ய வேண்டியதைக் கவனிப்போம். தீயபழக்கம் எவ்வளவு ஆபத்தானது என்றும், இதுவரை விளக்கமே பெறாத நிலையில், விளக்கம் பெற்ற உடனே, தீயபழக்கத்தை மாற்றி நற்பழக்கத்திற்கு வருவதில் சாதாரண மனிதனுக்கு(கருவில் திருஉடையவர்கள் இதற்கு விதிவிலக்காகத் திகழலாம்) எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றது எனவும் அறிந்து கொண்டோம். சிறப்பாக வாழ்வதற்கான விளக்கங்களை திருவேதாத்திரியம் வழியாகத் தந்து கொண்டிருக்கும் மனவளக்கலை மன்றத்தின் வாயிலாக அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாகத் தொடர் விடா முயற்சியுடன் பயின்று பழக்கப்பதிவை வென்று விளக்க வழி வாழ வேண்டும். மேலும் பயிற்சிகளோடு சத்சங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சத்சங்கத்தைப் பற்றி ‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற அத்வைத உண்மையை எடுத்துரைத்த ஆதிசங்கரர் கூறுவதனை நினைவு கொள்வோம்.

    அறநெறி பிறழ்ந்த செயல்பதிவுகளே நன்மையளிக்காப் பழக்கப்பதிவுகளாக உள்ளன. எனவே விளக்கத்தினை சாதனை செய்துதான் விளக்கப்பதிவுகளுக்கு உரத்தை அளிக்க ஆதிசங்கரர் கூறும் சத்சங்கம் அவசியம்.

    Adi shankaracharya with his disciples

    Adi Shankaracharya with his disciples

    பஜகோவிந்தம்–9

    ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
    நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்!
    நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
    நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி!”

     . . . ஆதிசங்கரர்.

    வள்ளுவர் கூறும் சத்சங்கத்தையும் அறிந்து கொள்வோம்:

          சத்சங்கத்திற்கு சான்றோரைத் துணைக்கொள்ள அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் சான்றோரைத் துணைக்கொள்ளுதலின் அவசியத்தை உணர்ந்து அதற்கென தனியாக ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்கின்ற அதிகாரமே இயற்றியுள்ளார். பெரியாரைத் துணை கொள்ளுதல் என்பது என்ன, பெரியாரை எவ்வாறு துணை கொள்வது, பெரியாரைத் துணை கொள்வதால் என்ன தீமைகள் விலகி என்னென்ன நன்மைகள் ஏற்படும் என பத்துக் குறட்பாக்களில் எடுத்து இயம்பியுள்ளார். பொதுவாக, தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பினையும்(ஒன்றைப்பற்றிக்கூற) ஒரே ஒரு பாடலில் சொல்லாமல், மக்களுக்கு அதனை எளிதில் விளங்க வைக்க, பத்து கோணங்களில் எடுத்து இயம்புவது திருவள்ளுவரின் தனிச்சிறப்பாக உள்ளது. அச்சிறப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்புறுவோம்.

         பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் இரண்டு குறட்பாக்கள் அரசனுக்கு அறிவுரை கூறுவதாக இருந்தாலும், அரசனுக்கு மட்டுமே அறிவுறுத்துவதாகக் கொள்ளமுடியாது. ‘பெரியாரைத் துணைக்கொள்ளல் வேண்டும்’ என்கின்ற அறிவுரை தனியொருவருக்கும் பொருந்துமன்றோ! ஏனெனில், மனிதனில், அறிவு புலன்களுக்கு அடிமை ஆகாமல், அரசாட்சி செய்ய வேண்டும். அவ்வாறு அறிவு மனிதனில், புலன்களை வென்று (இன்பம் துய்த்தலில் அளவு, முறை காத்து) அரசாட்சி நடத்த வேண்டியிருப்பதால் தனிமனிதனைப் பொருத்தவரை அவனுக்கு அவனே ராஜா- அரசன் என்பதால் பெரியாரைத் துணைக்கோடல் அறிவுரை அரசன் உள்பட அனைவருக்குமே பொருந்தும்.

    திருவள்ளுவரின் தனிச்சிறப்பினை அறிந்து, மகிழ்ந்து திருக்குறளைப் போற்றுவோம்; திருவள்ளுவரை வணங்குவோம்.

    அறநூல்களை வாசித்தலும் சத்சங்கமே!

       சத்சங்கத்தில் நேரிடையாக கலந்து கொள்ளும் நிலை இல்லாத காலங்களிலும்/சமயத்திலும், அறிஞர்கள் அறநூல்களின் வாயிலாக சூக்குமமாக வாழ்ந்து கொண்டிருப்பதால், அறநூல்களை வாசிப்பதன் மூலம் அவர்களுடன் மனதளவில் தொடர்பு கொள்ளுதலால், பல்லாயிரம் பிறவிகளால் ஏற்பட்டுள்ள வலிமைப் பெற்றுள்ள பழக்கப்பதிவை வலிவிழக்கச் செய்யவும், விளக்கப்பதிவிற்கு உரம் ஊட்டி வலிமைப்படுத்தவும் முடியும். இதுபோன்ற நிகழ்வுகள் தவறாது நமது அன்றாட வாழ்வில் இடம் பெறுவதால் அதுவே நமது குழந்தைச் செல்வங்களுக்கு முன் உதாரணமாக அமைந்துவிடும்.

    முடிவாக அறிந்து கொள்ள வேண்டியது:

    பழக்கம், விளக்கம், அவற்றிற்கு இடையில் உள்ள போராட்டம் பற்றி மகரிஷி அவர்கள் உதிர்த்துள்ள பொன்மொழிகளைக் கவனத்தில் கொள்வோம்..

    பழக்கம் விளக்கம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

    1) பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும், தாழவும் முடியும்.

    2) வாழ்விற்கு உயர்வளிக்கும் எண்ணங்களே ஒழுக்கம் எனப்படும்.

    3) விளக்கம் ஒரு விதமாகவும், பழக்கம் வேறு விதமாகவும் இருந்தால் வாழ்வு அமைதியுடன் அமையாது.

    4) பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டு இருக்கக்கூடியவன் மனிதன்.

    5) பழக்கத்தை மாற்றிக் கொண்டு, விளக்கத்தின் வழியே வாழ்வதற்கு உரிய ஒரு முறையான பயிற்சிதான் ‘மனவளக்கலை’.

    6) ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று. (இதற்கான விளக்கம்—எண்ணுவதும் செயல்தானே. எனவே எண்ணியது பதிகின்றது. மீண்டும் அதனையே எண்ணி எண்ணி பழக்கப்பதிவு வலிவு பெறுகின்றது. எண்ணுவதும் பழக்கப்பதிவுதான். எனவே ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விடும்போது பதிவாகின்றது. அப்பதிவினால் மீண்டும் மீண்டும் அத்தீய எண்ணம் வரும். பிறகு அத்தீய எண்ணம் எழக்கூடாது என விளக்கம் பெற்றாலும் அத்தீய எண்ணத்தை எண்ணிய பழக்கப் பதிவுகளே வலிமை ஆகிவிடுவதால் மறுபடியும் அத்தீய எண்ணத்தை உதிக்காமல் செய்வது எளிதன்று எனக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.)

    1) பெற்றோர்கள் ஆவதற்கு முன்னர் அதாவது திருமணத்திற்கு முன்னரே பத்து வருட காலம் ஒழுக்கப்பழக்க வாழ்விற்கான வாழ்வியல் கல்வியான மனவளக்கலையை பயின்று தேர்ச்சி பெற்று நன்மக்களை பெற்றிடல் வேண்டும்.

    2) அவ்வாறு வாய்ப்பில்லாமல் போய்விட்ட பட்சத்தில் தனது குழந்தைகளுக்கு உரிய வயதிலிருந்தே ஒழுக்கப்பழக்க அறிவை ஊட்டி வளர்க்க வேண்டும்.

    3) அவ்வாறு குழுந்தைகளுக்கு ஒழுக்கப்பழக்க அறிவை ஊட்டி வளர்க்க ஏதுவாக தானும் ஒழுக்கப்பழக்க வாழ்விற்கான வாழ்வியல் கல்வியான மனவளக்கலையை ஏற்கனவே கூறியபடி தொடர்விடாமுயற்சியோடு பயின்று வந்து, அதில் தேர்ச்சி பெற்றிடல் வேண்டும். குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்திடல் வேண்டும். அதற்கு, நமக்குக் காலம் கடந்ததுபோல் இருந்தாலும், நாம் அறிவை அறிந்த அறிவினரைச் சார்ந்து அவரை வாழ்க்கை பயணத்திற்கு வழித்துணையாகக் கொண்டு வாழ வேண்டும்.

         மகரிஷி அவர்கள் கூறுவது போன்று சாதனை செய்வதுதான் அறநெறி மலர்வதற்கு வழியாகும்(கவி எண். 533- சாதனையே அறநெறி–21.12.1961). ஆகவே திருவள்ளுவர் அறிவுறுத்தியவாறும் அவ்வைத்தாய் அறிவுறுத்தியபடியும், சேரிடம் அறிந்து, சான்றோர்களிடம் சேர்ந்து, பெரியாரைத் துணை கொண்டு தீவினை அகற்றி, விளக்க வழியில் வாழ்வோம்.  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

    வாழ்க வேதாத்திரியம்       வளர்க வேதாத்திரியம்.

    வாழ்க மனவளக்கலை      வளர்க மனவளக்கலை.

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading