இன்றைய விருந்து

  • பழக்கமும் விளக்கமும்-6/?

     

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     
    பழக்கமும் விளக்கமும்-6/?

    அறிவிற்கு விருந்து—236

    19-10-2016—புதன்

    வாழ்க வளமுடன்.

                சென்ற விருந்திலிருந்து விளக்கப்பதிவுகளுக்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி சிந்தித்து வருகிறோம். மேலும் அதற்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி இன்றும் சிந்திப்போம். விளக்கப்பதிவுகளே இல்லாமையாலும் அல்லது விளக்கப்பதிவுகள் இருந்தாலும் அதற்குபோதிய வலிவு/அழுத்தம் இல்லாமையாலும் பழக்கப்பதிவுகள் மனிதனை மனக்கவலையில் தள்ளிவிடுகின்றது. அதாவது மனக்கவலை எதனால் வந்தது/வருகின்றது என்று ஆராயும்போது, மனமேதான் காரணமாகத் தெரிகின்றது.  மனம் தடம் மாறி செய்த/செய்கின்ற செயல்களால் மனக்கவலை வந்தது/வருகின்றது. எனவே மனஓட்டத்தை நேர்மையான இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்..

    தடம் மாறிய மன ஒட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வர. . .

    வெவ்வேறு சூழல்களில் மனிதர்கள் வாழ்ந்து வந்தாலும், எல்லோருக்கும் பொதுவாக, இருபதாம் நூற்றாண்டில் வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வழிகளை இயலாக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது”

    என்று திருவள்ளுவர் இருபதுநூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளவாறு, இருபதாம் நூற்றாண்டில்  மனக்கவலையை மாற்ற அருமருந்தாக, மனவளக்கலையை இயற்கை கருணையோடு அருளியுள்ளது.

    மனக்கவலை அகற்ற புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆன்மீகம் அவசியம்:

         புனருத்தாரணம்(revive) செய்யப்பட்ட ஆன்மீகம் இனிமேல்தான் வரவேண்டுமா? இல்லை. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டாகிவிட்டது. மனவளக்கலைதான் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆன்மீகம். எட்டிக்காயாக இருந்து வந்த ஆன்மீகத்தை, ஆழ்ந்த-ஆன்மீகத்தில் உள்ள பயத்தையும் நீக்கி, மிகுந்த விருப்பத்தை ஏற்படுத்தி, இறைஉணர் ஆன்மீகமாக புனருத்தாரணம் செய்யப்பட்டுவிட்டது.

           இங்கே ஒன்றை கவனிக்க வேண்டியது மிக மிக அவசியமானதாக உள்ளது. ‘தாள்சேர்வது’ என்பதற்கு பொதுவான விளக்கம் ‘இறைவனது அடிகளைப்பற்றுவது’ எனப்படுகின்றது. ஆனால் மகரிஷி அவர்களின் உட்பொருள் விளக்கத்தை அவர் இயற்றியுள்ள நூலில் பக்கம் 20-21 இல் காணவும். மெய்யுணர்வு அடைந்த குருவழியாக ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று கண்களை உடைய அறத்தைப் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய மன ஒட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும், துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியுமே இல்லை விமோசனம் பெறுவதற்கு என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

          இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனக்கவலையை மாற்றுவதற்கான வழி எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும், அதனை சமுதாயம் பின்பற்றத் தவறிவிட்டது. அல்லது மெய்யுணர்வு அடைந்த குருவழியாக கல்வி கற்கும் நிலை தடைபட்டுபோய்விட்டது எனலாம். ஆனால் இருபது நூற்றாண்டுகள் கழித்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு குரு-குலக் கல்வி என்பது தற்போது சாத்தியமில்லாவிட்டாலும், நவீன-விஞ்ஞான காலத்திற்கேற்ப குருவும், மாணவனும் தொலைவில் இருந்தாலும் குரு-சீடர் உறவு என்கின்ற முறையில் ஆன்மீகம் மனவளக்கலை எனும் வாழ்வியல் கலையாக அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும்படியாக புனருத்தாரணம்(revive) செய்யப்பட்டுள்ளது. இதுவரை விளக்கப்பதிவிற்கு வலிவு சேர்ப்பது பற்றி சிந்தித்தோம். வாழ்க்கையில், விளக்கங்கள் எப்போதிலிருந்து பெறப்பட்டு அதனை பயிற்சி செய்து பழக்கமாக கொண்டுவருவது பற்றி இனி சிந்திப்போம். பழக்கத்தைப் பற்றிய பழமொழிகளை நினைவு கூர்வோம்.

    பழக்கத்தைப் பற்றி பழமொழிகள் கூறுவதென்ன?

          தமிழ் மொழியில் ஆயிரமாயிரம் பழமொழிகள் உள்ளன? பழமொழிகள் என்பது என்ன? மக்களிடையே நீண்ட காலமாக வழங்கி வருவது பழமொழி. பேசும்போது, தான் கூறும் கருத்திற்கு ஆதாரமாகவும், உதாரணமாகவும் காட்டப்படுவதுமான கருத்துத்தொடர்தான் பழமொழி.

          நாம் இப்போது விளக்கப்பதிவு பழக்கப்பதிவிடம் ஏன் தோற்றுப்போகின்றது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அச்சிந்தனையில் உண்மையை அறிகிறோம். உண்மையை அறிந்தாலும், உண்மை செயலுக்கு வரும்வரை ஆதாரம் தேடும் அறிவு. அந்த ஆதாரத்தைத் தரும் பழமொழி ஏதேனும் உள்ளதா என்றால் உடனே நமக்குத் தெரியவருவது இரண்டு பழமொழிகள். அவை:

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

    தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்.”

    எனவே இவ்விரண்டும் என்ன கூறுகின்றன என்பதனை எல்லோருமே அறிவோம்.

    மனிதனுக்கு அறஉணர்வு அவசியம். ‘வித்தை என்றால் பிரம்ம வித்தை, வேதாந்தம் பேசுவதால் மட்டும் கிட்டிடாது’ என்று மகரிஷி அவர்கள் அறிவுறுத்துகிறார். அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

    பிரம்ம வித்தை

    வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
    வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது
    அத்து விதமாகி அவன் எங்கு மாகி
    அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
    சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
    சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
    தத்துவத்தின் முடிவான, தானேயான
    தனையறிந்த வித்தை அது. தர்க்கம் வேண்டாம்.”

                                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

          எனவே பேசுவதால் மட்டுமே, அற உணர்வு கிட்டிடாது. அற உணர்விற்கு பிரம்ம வித்தையான இறை உணர்வு அவசியம். இதனை ஆன்மீகம் என்று கருதாமல் வாழ்வியல் கல்வியாகக் கருதுகிறார் மகரிஷி அவர்கள்.

          எனவே அரிச்சுவடி பள்ளியில் ஆரம்பத்திலேயே ஆரம்பிப்பதுபோல், ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றினைக் கொண்ட அறம் மனிதர்களிடையே மலர்ந்திட ஒழுக்கவியல் பாடம் கல்வியில் இணைக்கப்பட வேண்டும் என்கிறார். ‘இளமையில் கல்’ என்று அவ்வைத்தாய் இயம்பியுள்ளதுபோல் கல்வி ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால் ஒழுக்கவியல் என்னும் புதிய பாடத்தை ஏற்படுத்தி அதனை மாற்ற பாடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை போன்று, கட்டயாயப்பாடமாக்கி பள்ளிக் கல்வியில் முதல் வகுப்பிலிருந்தே ஆரம்பித்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடத்தப்பட வேண்டும்.

    நீதி வெண்பா கூறுவது என்ன?

    ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்கின்ற பழமொழியை விளக்கும் வகையில் நீதி வெண்பாவில் உள்ள ஒரு பாடலை நினைவு கூர்வோம்.

    கல்விக்கு இளமையே காலம்

    வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்
    வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
    வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
    தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”

                                                                                  . . .  நீதி வெண்பா – 7

    பாடலின் பொருள்:

         கோவிலிலிருந்து சுவாமியை தூக்கிவரும் வளைந்த பல்லக்குத் தண்டு எங்கே விளைகிறது? எங்கேயும் பல்லக்குத் தண்டு வளைந்திருப்பதுபோல் மூங்கில் வளர்வதில்லை. மூங்கில் வளர்கின்ற காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடப்படும். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம். இக்கருத்தை வலியுறுத்துகின்றது நீதிவெண்பாவில் உள்ள பாடல்.

    ffc-236-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81

                                               நன்றி: http://sathyasenthil77.blogspot.in/2014_01_01_archive.html

           மூங்கில் வளரும்போதே, அதாவது இளமையாக இருக்கும்போதே, பல்லக்குத் தண்டு போல் வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் கோவிலில் சுவாமியைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயர்கின்றது. அவ்வாறு வளைத்து விடாத மூங்கிலின் கதியை பரிதாபமானது என்கின்றது பாடல்.  ஏன்? அவ்வாறு இளமையில் வளைத்துவிடப்படாத மூங்கில் கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத்திரியும் என்கின்றது. இதுபோல், அவ்வையார் இயம்பியுள்ளதுபோல் இளமையில் கற்கின்றவர்கள் மேல்நிலையையும்(இன்பத்தையும்), அவ்வாறு கல்லாதவர்கள் கீழ் நிலையையும்(துன்பத்தையும்) அடைகின்றனர் என்று எச்சரிக்கின்றது பாடல்.  எனவே இளமையில் கல் என்பதற்கேற்ப இனிவரும் சமுதாயத்திற்கு, இளமையிலேயே கல்வியோடு வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல்-ஆன்மீகக் கல்வியினை அமுல் படுத்துவோம்.

          அவ்வாறு இளமையில் கல்வியோடு ஆன்மீகக் கல்வி இல்லாத காலத்தில் பிறந்து இளமைப்பருவத்தை தாண்டியவர்களுக்கும் இறைஉணர் ஆன்மீகக்கல்வி பயின்று இப்பிறவியிலேயே வெற்றிபெற வழி இருக்கின்றது என்பதனை உறுதியோடு கூறுகிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள், தான் எய்திய நிலையை, நாமும் அடையமுடியும் என்பதற்கு “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று உத்திரவாதத்தை அளிக்கிறார். பிறவிக் கடல் நீந்தலாம் என்கிறார். அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • 235-பழக்கமும் விளக்கமும்-5/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     அறிவிற்கு விருந்து—235

    16-10-2016—ஞாயிறு

    வாழ்க வளமுடன்!

         இன்றைய விருந்தில் எப்போது விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளை வெற்றிகொள்ளும் அளவிற்கு வலிமை பெறும் என்பதனை அறிய இருக்கிறோம்.

    எப்போது விளக்கப்பதிவுகள் வலிவு பெறும்?

    விளக்கப்பதிவுகளும் செயல்பதிவுகளைப் போன்றே மூளைச் செல்களிலும், கருமையத்திலும் ஏற்படுகின்றன. அவ்வாறு விளக்கப்பதிவுகள் ஏற்பட்டாலும், அது தொடர்ந்து செயல்படுவதற்கும், நிலைக்கவும், மன அலை நுண்ணியதாக அமைய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இடைவிடாத ஆராய்ச்சியாலும்(மிகவும் கவனிக்கத்தக்கது) ஆதிநிலையான அறிவை அறிந்து விரிந்த மன நிலையில் பழக்கப்பதிவுகளின் விளைவையும், வலுவையும் உணரவேண்டும். பழக்கப்பதிவுகளை வேறு நல்ல உரிய பதிவுகளைக் கொண்டு மாற்றியமைக்கும் திட்டமிட்டு செயல்புரிந்துதான் விளக்கப்பதிவுகளுக்கு வலிவினைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். இப்படி உடல் செல்களின் இயக்கத்திற்கு(பழக்கப்பதிவுகள்) மூளைச் செல்களின் ஆற்றல் அதிகரிக்கும்போதுதான் உடல், புலன்கள் செல்களுடைய இயக்கங்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியும். இப்படி மாற்றியமைக்கும் திட்டமிட்ட பயிற்சிதான் தவம் எனப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். தவத்தின் மூலம் இறை உணர்வும், அற உணர்வும் செயலாகும்போது விளக்கத்தின் வழியே பழக்கத்தை கொண்டுவந்து உய்வு பெறலாம் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    எனவே தவம், அகத்தாய்வு, குணநலப்பேறு, உடற்பயிற்சி மூலம் தவமும், அறமும் சித்தியாகும் என்கிறார். விழிப்பும், சிந்தனையும் முயற்சியும், திட்டமும் இவற்றிற்கு ஒப்ப செயலும் பின்பற்றி பழக்கத்தை வென்று விளக்கத்தில் வாழ்வோம் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    victory-for-prudence

    இதற்கு மேலும் விளக்கப்பதிவை வெற்றிப் பெறச்செய்ய என்ன செய்யலாம்?

        இதற்கு மேலும் என்பது தவம், அகத்தாய்வு செய்வதுடன் வேறு என்ன செய்து ‘விளக்கப்பதிவு பழக்கப்பதிவை வெற்றி அடையச் செய்யமுடியும்’ என்றால் சிந்தித்தே செயல்படவேண்டும். அறிவினரோடு சேர்ந்திருக்கச் சொல்கிறாள் அவ்வைத்தாய். சேர்ந்திருப்பது என்பதோடு, அறிவினரின் பிணைப்பை வலிமையாக்க அறிவினரை கனவிலும், நனவிலும் நினைக்கச் சொல்கிறாள். அவ்வைத்தாய் கூறுவதனை நினைவில் கொள்வோம்.

    FFC-127-அவ்வையார்- இனிது

    அறிவை அறிந்த அறிவினரைச் சேர்ந்திருப்பதும், அவரை கனவிலும் நனவிலும் காண்பது அவரது குணங்களைப்பற்றி அடிக்கடி நினைக்கச் செய்யுமாதலால், அது இயல்பூக்க நியதியின்படி நினைப்பவரின் ஆற்றல் அறிவினிலும் உடலினிலும் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் குணநலன்களில் மேம்படச் செய்யும்(METAMORPHOSIS OF CHARACTER). எனவே இவ்வாறாகத்தான் பழக்கப்பதிவுகளை செயலிழக்கச் செய்து விளக்கப்பதிவுகளுக்கு வலிமை சேர்த்து, பழக்கப்பதிவுகளிடம் விளக்கப்பதிவுகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இந்த நல்லுரையில் கூறப்படுவது நடைமுறையில் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. எனவே பழக்கப்பதிவிடம் விளக்கப்பதிவு தோற்றுப்போவதனால் மனம் சோர்ந்து விளக்கப்பதிவை விட்டுவிட்டு பழைய பழக்கப் பதிவின் வழியே சென்று மனிதன் மேலும் மேலும் துன்பமடைகிறான்.

    வறுமை ஒரு சமுதாய நோய்:

    வறுமையைப்பற்றி அவ்வைத்தாய் கூறுவதனை கவனிப்போம்.

    கொடிது! கொடிது! வறுமை கொடிது
    அதனினும் கொடிது இளமையில் வறுமை”     . . . அவ்வையார்.

    முதலில் வறுமையை ஒழிக்க வேண்டும். இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் போதிய அளவிற்கு பூர்த்தியாக வேண்டும். வறுமை கொடுமையிலும் கொடியது. இவர்களின் துன்பத்தை அளக்கவே முடியாது. இது ஒரு சமுதாய நோய். சமுதாயம்தான் தீர்வு காணவேண்டும். ஆனால் தனிப்பட்ட ‘மனிதன் வறுமை ஒழிய வேண்டும்’ என்கின்ற நல்லெண்ணத்தை வலுவாக மௌனமாக பரப்பலாம்.

    வியப்பைத்தரும் வினா:

    என்ன வினா அது? வறுமையில் இருப்பவர்களையும் தாண்டி, மூன்று தேவைகளும்(உணவு, உடை, உறைவிடம்) பூர்த்தியானவர்கள் ஏன் துன்பத்திற்குள்ளாகின்றனர் என்பது வியப்பைத்தரும் வினாவாக உள்ளது. வியப்பில்லை! நடைமுறையில் அவ்வாறுதான் உள்ளது. இத்தகைய துன்பத்தில் இருப்பவர்கள் பலவிதமாகக் காணப்படுகின்றனர். சிலர் வாழ்க்கை எனும் ஐம்புலன்-வணிகத்தில் பெரும்பாலும் நஷ்டமாகிய துன்பத்தையே (உடலில் நோய், அமைதியின்மை) மனக்கவலை வடிவில் அனுபவிக்கின்றனர். காரணம் சிந்திக்கத் தெரியவில்லை. எனவே சிந்தித்து செயல்படுவதில்லை.

    என்ன சிந்திக்க வேண்டும்?

    ஏன் நமக்கு மட்டும் துன்பம் வருகின்றது என சிந்திக்க வேண்டும்?

    துன்பம் அதுவாக வருகின்றதா? அல்லது நாமாக வரவழைத்துக் கொள்கின்றோமா?

    பிறவித்தொடராக வந்த நமக்கு யார் வழியாக வந்தது இந்த துன்பம் என சிந்திக்க வேண்டும்?

    வாழ்க்கை எனும் ஐம்புலன்-வியாபாரத்தை/வணிகத்தை சரிவர நடத்தத் தெரியாமல் நஷ்டமாகிய துன்பத்தில்
    இருக்கின்றோமா என்பதை சிந்திக்காமல் அறியாமையில் உள்ளனர்.
    வாழ்வே துன்பமாக இருந்து விடுகின்றது அத்தகையவர்களுக்கு.

    வாழ்க்கை என்பது எவ்வாறு வியாபாரம்/வணிகமாக உள்ளது?

                     வாழ்க்கை என்பது ஒரு வியாபாரத்தோடு ஒப்பிட்டு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளலாம். அதுவும் ஐம்புலன்-வியாபாரம் எனப்படுகின்றது, ஏன்? வணிகம் என்பது என்ன என்று அனைவரும் அறிவர். வணிகம் எதற்காக செய்யப்படுகின்றது? வியாரம்/வணிகம் என்பது பொருட்களை வாங்கி விற்று பணம் சம்பாதிப்பது. அவ்வாறு பொருட்களை வாங்கி விற்பதில் வாங்கிய விலையைவிட விற்கும் விலை அதிகமாக இருந்தால்தான் லாபம் ஈட்ட முடியும். வாழ்க்கை என்பது ஐம்புலன்- வியாபாரம்/வணிகம் என்று சொல்வதற்குக் காரணம் என்ன?

    மனிதனின் முத்தொழில்கள் என்னென்ன?

            எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று முத்தொழில்கள். முதலில் எண்ணமாக வருகின்றது. எண்ணமாக வருவது, தான் எண்ணியதாகவும் இருக்கலாம். அல்லது பிறருடைய எண்ணமும் நம்மிடம் வரலாம். எப்படி இருந்தாலும் அந்த எண்ணம் நல்ல எண்ணமாக இருந்து விளைவை எப்போதும் நன்மையையே அளிப்பதாக இருந்தால் அதனை நம்முள்ளே விடலாம். இல்லை எனில் அவ்வெண்ணத்தை உள்ளேவிடக்கூடாது. ‘ஒருமுறைதானே என்று தீய எண்ணத்தை உள்ளே விட்டுவிட்டால் மீண்டும் அத்தீய எண்ணத்தை வராமல் தடுப்பது அவ்வளவு எளிதன்று’ என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே ஐம்புலன்-வியாபாரத்தில்/வணிகத்தில் எண்ணம் என்பது வணிகத்தில் பொருளை வாங்குவதற்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளலாம்

    எண்ணம் வந்த பிறகு அது வலிவு பெறுமானால் அது சொல்லாகவும், இன்னும் அதிகமாக வலிவு பெறுமானால் செயலாகவும் மாறும். இதனை வணிகத்தில் பொருட்களை விற்பதற்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளலாம். வணிகத்தில் பொருளை விற்கும் விலை வாங்கிய விலையை விட அதிகமாக இருந்தால் லாபமும், விற்கும் விலை வாங்கிய விலையை விட குறைவாக இருந்தால் நட்டமும் ஏற்படும். இதனை வாழ்கை எனும் ஐம்புலன்-வணிகத்தில் இன்பமாகவும், துன்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

    இன்பம்-லாபம்; துன்பம்-நட்டம்:

          மனிதன் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை இன்பத்தையும்(லாபம்) துன்பத்தையும்(நஷ்டம்) அனுபவிக்கிறான். விளைவுகள் இன்பமாக இருந்தால் அது லாபம் எனவும், துன்பமாக இருந்தால் அது நட்டம் எனவும் கொள்ளப்படுகின்றது. மனிதன் ஐம்புலன்களின் வாயிலாகத்தான் செயல்களைச் செய்கிறான். எனவே வாழ்க்கையில் ஐம்புலன்கள் வழியாக செயல்கள் புரிந்து இன்பதுன்ப அனுபவங்களைப் பெறுவதால் மனிதனின் வாழ்க்கை ஐம்புலன்-வணிகம் எனக்கொள்ளப்படுகின்றது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும் நிலையில் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்காக கூறுவதே ‘வாழ்க்கை என்பது ஐம்புலன்-வியாபாரம்/வணிகம்’ என்பது. வியாபாரத்தில்/வணிகத்தில் பொருள் வாங்கி விற்று(பொருள்-பணம் பரிமாற்றம்) லாபம் சம்பாதிப்பதுபோல் மனிதன் வினைகளை செய்து(பொருட்களை வாங்குவது) அதன் விளைவாக வரும் விளைவு(பொருட்களை விற்பது) இன்பத்தையும்(லாபத்தையும்) துன்பத்தையும்(நஷ்டத்தையும்) வினை-விளைவு பரிமாற்றம் நடப்பது வணிகத்திற்கு ஒப்பாக இருப்பதால் வாழ்க்கையை புரிந்து தெளிவுடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ்க்கை ஐம்புலன்-வணிகம் எனப்படுகின்றது.

    வணிகவியல்(Commerce)போல் வாழ்வியல்(Science of Living):

         வணிகத்திற்கு ஒரு இயலை ஏற்படுத்தியுள்ளது போல், ஐம்புலன்-வணிகமான வாழ்க்கைக்கும் இயல் அவசியமாகின்றது. அது ஏற்கனவே ஏற்படுத்தியாகிவிட்டது இயற்கையால்/இறையால். வணிகம் முறையாக நடத்தி லாபம் சம்பாதிப்பதற்கு தனியாக இயல் ஏற்படுத்தப்பட்டு அதற்கு வணிகஇயல் (Commerce) என பெயரிடப்பட்டுள்ளது. பொருட்களின் பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பவனற்றை நீக்குவதற்கான வழிகளைப்பற்றியும் நிர்வாக வரவு-செலவு பற்றியும் மேற்கொள்ளும் படிப்பே வணிகவியல். அதுபோல் வாழ்க்கை என்கின்ற ஐம்புலன்-வணிகத்தில் இடையூறுகளை நீக்கி, எவ்வாறு நஷ்டத்தை தவிர்த்து லாபத்தை மட்டுமே ஈட்டுவதற்கான ஒரு படிப்பு அவசியம். அதனை இயலாக்கி வாழ்வியல்(Science of Living) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதுவே இருபதாம் நூற்றாண்டில் இயற்கை அளித்துள்ள மனவளக்கலையாகும்.

    மூன்று தேவைகள் பூர்த்தியாகியும் துன்பத்திலுள்ளவர்களின் பல நிலைகள்;

    1) மூன்று இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் கிடைத்து சிறிதளவு  சிந்திப்பவர்கள் துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து விடுபட செய்வதறியாது தவிக்கின்றனர்.

    2) சிறிதளவைவிட சற்று அதிகமாக சிந்திப்பவர்களுக்கு, துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து  விடுபட அவ்வையாரின் நல்லுரை எட்டி, அறிவினரைச் சேர்ந்திருந்தாலும் அறிவினரைக் கனவிலும், நனவிலும் தொடர்ந்து நினைக்க முடிவதில்லை.

    3) சிறிதளவைவிட சற்று அதிகமாக சிந்திப்பவர்களைவிட மேலும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு, துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து விடுபட அவ்வையாரின் நல்லுரை எட்டி, அதனை பின்பற்றி  வாழ்ந்தாலும் பழக்கப்பதிவு அவர்கள் மேற்கொண்டுவரும் விளக்கப்பதிவை சாய்த்து  விடுகின்றது.

    துன்பம் இல்லாதவர்கள் யார் உளர் இவ்வுலகில்?

         துன்பமே இல்லாதவர்கள் யாரும் இல்லை இவ்வுலகில்? ஞானிக்கும் துன்பம் உள்ளது முன்வினையின் காரணமாக. ஆனால் அத்துன்பத்தை எதிர்கொள்ளத் தெரிகின்றது அவருக்கு அறிவின் நிலை ஞானத்திற்கு உயர்ந்ததால். இதுவரை பெரும்பாலும் துன்பத்தை அனுபவிப்பதைப்பற்றியே வகைப்படுத்தி அவர்களின் நிலையை ஆராய்ந்தோம்.

    அடுத்ததாக துன்பம் குறைவாகவும், இன்பமே அதிகமாகவும் அனுபவிப்பவர்கள் பற்றிய நிலையை சற்று அறிந்துகொள்வோம்.

    இன்பமே உள்ளது வாழ்க்கையில், எனினும் அவ்வப்போது சிறிதளவு துன்பம் தலையைக்காட்டிவிட்டு போகின்ற ஒரு நிலையும் சமுதாயத்தில் காணப்படுகின்றது ஒருசிலருக்கு. எனவே அதனை அவர்கள் துன்பத்தில் இருப்பதாகக் கொள்வதில்லை. அதாவது வாழ்க்கையாகிய ஐம்புலன்-வணிகத்தில் அவர்களுக்கு நிகர லாபம்(Net gain) இன்பம் என வைத்துக் கொள்ளலாம்.
    எனவே துன்பம் அதிகம் இல்லாதவர்களைப் பொருத்த வரையில் வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க அவசியமில்லாமல் போகின்றது.

    சிந்திக்க அவசியமில்லை என்பதால் அது சரியாகிவிடுமா?

         ‘அவசியம்’, ‘அவசியமில்லை’ என்பதே சிந்திப்பதற்குக் கிடையாது. வாழ்வதற்கு மூச்சு அவசியமா அல்லது அவசியமில்லையா எனக் கேட்க முடியுமா? முடியாது. எனவே உயிர் இருக்கும் வரை மூச்சு அவசியமாக இருக்கின்றதோ அதுபோல் உயிர் உள்ள வரை சிந்தனையும் அவசியம். சிந்தித்தால்தான் மனிதன். இயற்கையைப் பொருத்த வரையில் யாவருமே சிந்திக்க வேண்டும். இறப்பு எப்போது வரும் என யாருக்கும் தெரியாதது போல் வினைப்பயனை அனுபவிக்க ஆன்மா பிறவி எடுத்துள்ளதால் கருமையப் பதிவுகளுக்கேற்ப துன்பமும் வரலாம்.

       உலகியல் வாழ்க்கைக்கு பொருளைச் சேர்த்து வைப்பதுபோல், அருள் துறை வாழ்க்கைக்கு ஒழுக்கமாகிய புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். “வினைப்பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப் போக்க ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும்” என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும். அதற்கு சிந்தித்துச் செயல்படவேண்டும். சிந்தித்து செயல்படும் செயல்கள் புண்ணியமானதாகவே இருக்கும். இத்துடன் இன்றைய அறிவிற்கு விருந்தை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த விருந்தில்(19-10-2016-புதன்) மனக்கவலையை அகற்ற புனருத்தாரணம் செய்யப்பட்ட எளிய அணுகுமுறை ஆன்மீகமே அவசியம்; அது மனவளக்கலையே என்பதனை அறிந்து கொள்வோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • பழக்கமும் விளக்கமும்-4/?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    பழக்கமும் விளக்கமும்-4/?

     
    அறிவிற்கு விருந்து—234

    12-10-2016—புதன்.

    வாழ்க வளமுடன்.

    இப்போது அழுகணிச்சித்தரின் பாடலுக்கு மகரிஷி அவர்கள் கூறியுள்ள விளக்கத்தை அறிய இருப்பதால் மீண்டும் அப்பாடலை நினைவு கூர்வோம்.

    காட்டானை மேலேறிக் கடைத்தெருவில் போகையிலே
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ?
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
    காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிரப்பாரேனோ?”

    . . . அழுகணிச்சித்தர்.

    “கண்ணம்மா” என்பதனை அறிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ‘காட்டானை’ என்பதற்கு ‘காட்டுயானை’ என்பது பொருளல்ல. ‘காட்டானை’ என்கின்ற சொல் ‘காட்டமாட்டான்’ என்கின்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். அதாவது இறைவன் இருக்கிறான். மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு அவன் இருக்கவில்லை என்கிறார். மேலும் விளக்குகிறார். அதாவது புலன்களாலே பார்க்கும் அளவிற்கு அவன் இருக்கவில்லை என்று பொருள்.

    காட்டான் = அரூபியாக உள்ள அறிவு.

    “ஐ” மேலேறி = ஐந்து புலன் உணர்ச்ச்சிகளையும் தாண்டி,

    கடைத்தெருவில் போகையிலே = கெட்டிப்பொருள், நீர், நெருப்பு, காற்று. விண் ஆகிய ஐம்பூதங்களிலிருந்து எழுச்சி பெறக்கூடிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் அல்லது உருவமாக ஐந்து நிகழ்ச்சிகளையும் தாண்டிக் கடைசியிலே உள்ளது எது என வினவுகிறார். பிரம்மம்; சுத்த வெளி என்கிறார், அதுதான் கடைசி நிலை. கடைநிலை என்றால் கடைசி நிலை என்று பொருள்.

    அந்தக் காலத்தில் கிராமங்களிலே மற்ற எல்லாத் தெருக்களையும் தாண்டி கடைசியிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அவரவர்களுக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பொருட்களை விற்றுக்கொள்வதற்காகவும் கிராமங்களிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அது கடைசியிலே இருப்பதினால் கடைத் தெரு என்று பெயர்.

    பிரம்மத்தினையும் ‘கடை’ என்று சொல்வது அறிஞர்களின் வழக்கு என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே இராமலிங்கர் கூறியதனையும் நினைவு கூற விரும்பி, ‘கடைவிரித்தேன்; கொள்வாரில்லை.’ என்று சொன்னதை நமக்கு நினைவு படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.

    அந்தக் ‘கடை’ என்று சொல்லக் கூடிய மறைபொருள் என்பது ‘பிரம்மம்’. பிரம்மத்தின் நிலையை நல்ல முறையிலே தெளிவாக விரித்துக் கூறிவிட்டேன்; எடுத்துக் காட்டிவிட்டேன்; ஆனால் அதை விளங்கிக் கொண்டு பின்பற்ற யாருமே வரவில்லை!’ என்று வள்ளலார் ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்கின்ற வள்ளாலாரின் வரிகள் சொல்வதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    இறைஉணர் ஆன்மீகப்பயிற்சி என்பது என்ன?

    பிரம்மத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம். அறிவு தனது முழுமையை நோக்கிய பயணம். ஐந்தறிவு வரை உயிரினங்கள் அனுபவித்தது என்ன? காந்த தன்மாற்றங்களான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை ஐந்து புலன்களின் வாயிலாக அனுபவித்ததேயாகும். அப்படியானால் ஆறாம் அறிவாக மனிதன் வந்தபோது அவன் அனுபவிக்க வேண்டியது என்ன? வாழ்வில் ஐந்து புலன்களின் வழியாக அனுபவிப்பதோடு நின்றுவிடாமல், அதனையும் தாண்டி,

    பிரத்யேகமாக புலன் ஏதும் உருவாகாமல், பேரறிவிலிருந்து வந்துள்ள மனிதஅறிவு

    அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய நிகழ்ச்சிகள் என்பது என்ன,

    அந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்டாகின்றன,

    அந்நிகழ்ச்சிகளை உணர்கின்ற நான் யார்

    என்பதற்கான விளக்கத்தினை அறியவேண்டும்.

    அவ்விளக்கங்களை அறியும்போது முடிவாக இப்பிரபஞ்சத்தின் மூலம் எது என்பதையும், அதுவே பிரம்மம்-கடவுள் என்று கூறப்படுகின்றது என்பதும் அறியப்படும்.

    இந்தக் கருத்தினைத்தான் திருவள்ளுவர்,

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு”

    என்கின்ற குறளின் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்துள்ளார். அதாவது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன உருவான வகையை தெரிந்துகொள்ள வேண்டும். ஐந்தின் வகை தெரியும்போது பிரம்மமே தான் எல்லாமாக ஆகியுள்ளது என்பது அறியப்படும். அதாவது இறைஉணர்வினைப் பெறமுடியும். இதற்காகப் பிறந்தவன்தான் மனிதன் என்கிறார் திருவள்ளுவர். அப்படி இல்லாவிடில் உயிரினப்பரிணாமத்தில் வேறு எதற்காக மனித இனம் தோன்றிற்று?

    எனவே வாழ்க்கைப் பயணம் என்பதே பிரம்மத்தை நோக்கிய பயணமேதான்! இந்த உண்மையினை அறியாமல்தான் மனித குலம் உள்ளது. இதனை இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருவேதாத்திரியம் எடுத்துக் கூறி வருகின்றது.

    எனவே

    1) ‘காட்டான் ‘ஐ’ மேலேறி கடைத்தெருவில் போகையிலே’ என்பது அந்த பிரம்மத்தை நாடி அங்கேயே போய் அடக்கம் பெற்று இந்தத் தன்முனைப்பை நீக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இறைநிலைக்குப் போய் நிலைத்து வரவேண்டும் என்று போகும்போது;

    2) நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்ரோ’ என்றால் இந்த உலகிலே வாழ்ந்து பதிவுகளைக் கொண்டு, அந்த எண்ணங்களெல்லாம், அந்தப் பதிவுகளெல்லாம் இருக்கின்றனவே, அவைகளெல்லாம், ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போலல்லாவா இருக்கின்றது என பாடலில் அழுகணிச்சித்தர் தெரிவிக்கிறார் என்கிறார் மகரிஷி அவர்கள். அழுகணிச்சித்தரின் இந்த அனுபவத்தை இயற்கை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகத் தெரிவித்து சிந்திக்க வைப்பது என்ன?

    அஞ்ஞானிக்கு மட்டும் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல.

    அஞ்ஞானிக்கு மட்டும் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல. ஞானிக்கும் பழக்கப்பதிவுள் உண்டு. எனவே ஞானி பழக்கப்பதிவை வென்று விளக்கப்பதிவில் வாழ்வதுபோல், ஒவ்வொரு அஞ்ஞானியும் பழக்கப்பதிவை வென்று விளக்கத்தில் வாழவேண்டும். ‘Every Saint has a past and every sinner has a future.’ இங்கே மற்றொன்றை அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

    முந்தைய பழக்கப்பதிவுகள் ஒன்று சேர்ந்து ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போன்று அழுகணிச்சித்தருக்கு இருந்ததாக அவரே பாடலின் வாயிலாகத் தெரிவிக்கிறார். இதுபோன்று அவருக்கு மட்டுமா இத்தகைய அனுபவம்/உணர்வு ஏற்படும்? திருந்த வேண்டும் என்கின்ற ஆழ்மன எண்ணத்தோடு ஆன்மீகப் பயிற்சியினைச் செய்கின்ற அனைவருக்கும் ஏற்படும், ஏற்படவேண்டும். அது என்ன என்று அறிவோம்.  விளக்கத்திற்கு முன்னர் பழகிய பழக்கப்பதிவுகள் எவ்வாறு விளக்கப்பதிவுகளில் மனிதன் வாழ்வதற்கு இடையூறுகள் செய்கின்றன என்று பார்ப்போம்.

    2.1. விளக்கம் பெற்றதும், அதுவரை சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தவன் ‘சூதாட்டக் கூட்டத்திலிருந்து விலகிவிடுவோம்’ எனத் தீர்மானித்தாலும், அவனது சூதாட்ட சகாக்கள் சும்மா இராமல், அவனை நல்வழியில் போகவிடாமல் ‘இவன் யோக்கியனாகப்போகிறானாம். என்று எள்ளி நகையாடி அவனை மீ்ண்டும் சூதாட்டத்தில் ஈடுபடத்தூண்டச் செய்யும் நிகழ்வு போலல்லவா உள்ளது அழுகணிச்சித்தரின் இறைவனை அறியமுயற்சிக்கும்போது உண்டாகின்ற பழையபழக்கப்பதிவுகளின் இடையூறுகள்.

    2.2. இதே போன்றுதான் புகைபிடிப்பவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் அப்பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என நினைத்தாலும் பழைய பழக்கப்பதிவுகள் இடையூறுகள் செய்வதும்  பரிதாபத்திற்குரியதாக உள்ளது என்பதனைக் கவனிக்க வேண்டும்.

    2.3. இவர்கள் நிலை மட்டும் இவ்வாறு இல்லை. மற்றவர்களின் நிலையும் இது போன்றதுதான். காரணம் எந்த செயலானாலும் அது பதிந்து பழக்கப்பதிவாகிவிடுகின்றது. எனவே பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணப்பதிவுகளில் சிக்கித்தவிக்கின்றவர்கள் நிலையும் இதுபோன்றதுதான்.

    2.4. மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதுபோல் பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்தழுந்திப் புண்ணாகி வருந்துவோர்களின் நிலையும்  பழக்கப்பதிவுகளின் ஆதிக்கம் செலுத்துவதுதான்.

    விளக்கம் பெற்று விளக்க வழியே வாழ வேண்டும்  என முயற்சி செய்பவர்கள் யாராக இருப்பினும், பழக்கப்பதிவுகளின் இடையூறுகள் இருந்தால் அவற்றை அழுகணிச்சித்தரை நினைவில் கொண்டு அவர் மன உறுதியோடு எதிர்த்துப் போராடியதுபோல், போராடித்தான் விளக்கப்பதிவில் வாழவேண்டும்.

    விளக்கத்தை விட முடியவில்லை. ஏன்?

    ஏனெனில் பரிணாமத்தில் விளக்கம் பெறுகின்ற நிலைக்கு அறிவு வரும்போதுதான், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் விளக்கமாக கிடைக்க ஆரம்பிக்கும். அறிவு என்பதே அறிவதற்காகத்தானே உள்ளது. ஆகவே அறிகின்ற நிலைக்கு வந்த அறிவிற்கு விளக்கத்தைவிட்டு விட மனமுமில்லை; அதே நேரத்தில் இதுவரையுள்ள பழக்கப்பதிவுகளாகிய பேய்களின் ஆதிக்கமோ மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. வள்ளலார் ‘பெருநெறி பிடித்தொழுக வேண்டும் என்றும் மதமான(செருக்கு, ஆணவம்) பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுவதை நினைவு கொள்வோம்.

    கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்ய முடியாது:

    எந்த தரப்பினராக இருந்தாலும் தீயபழக்கப்பதிவுகளால் துன்பமே என்பதனை கவனத்தில் கொண்டு பழக்கப்பதிவின் போராட்டத்தில் வெற்றி பெற்றிடவேண்டும். அதனால்தான் ‘ஒழுக்கப்பழக்க அறிவு’, எனும் பாடத்தை கல்வியில் சேர்க்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே நற்பழக்கம் என்பது குழந்தைகளிடம் கொண்டு வருவது எளிது என பாடல் வாயிலாகக் கூறுவதனை நினைவு கூர்வோம்.

    நற்பழக்கம்(22.12.1959)

    பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
    பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்;
    பழக்கத்தை, வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்.
    பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைவிக்கும் எளிது.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால் அங்கிருந்தே ஒழுக்கவியல் பாடத்தைத் தொடங்க வேண்டும். ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது’ என்று பழமொழி எச்சரிப்பதால் ஒழுக்கம் தவறினால், ஒழுக்கவாழ்வு வாழ ஒழுங்குக்கு ஈனம் விளைவித்த ஒழுங்கீனப்பதிவுகளே ஒழுக்க விளக்கப்பதிவுகளை எளிதில் வெற்றி கொள்ளும். இருந்தாலும் ஒழுக்க வாழ்வைத்தானே வாழ்ந்தாக வேண்டும். அதனால்தான் ஒழுக்கப்பழக்க அறிவை பாடமாகச்சேர்க்கச் சொல்கிறார். இதனையே சுவாமி விவேகானந்தர் ‘Education is the manifestation of perfection already present in man’ என்கிறார்.

    education-swami-vevekananda

    3. ‘நாட்டார் நமை மறித்து நகைபுரியப் பார்த்தாலும்’ என்பது அப்படியெல்லாம் எத்தனையோ கோடி எண்ணங்கள்(பழக்கப்பதிவுகள்) குறுக்கிட்டபோதிலும் மன உறுதியோடு, பயிற்சியினாலே,

    4. ‘காட்டானை மேலேறிக் கண்குளிரப்பாரேனோ’ என்றால் ஐம்புலன் அனுபவப்பதிவுகளையும் தாண்டி மேல் ஏறி கடைசியிலே உள்ள பிரம்மத்தை, அந்த அரூபமான நிலையிலே உள்ள பிரம்மத்தைக் கண்குளிர, நான் அறிவு பூர்வமாக, மனநிறைவு பெறுமளவிற்குப் பார்க்க மாட்டேனோ, உணர மாட்டேனோ’ என்று தனது உறுதியினை சமுதாயத்திற்குத் தெரிவிக்கிறார் அழுகணிச்சித்தர்
    என்பது செய்யுளின் சாரம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இதுவரை அழுகணிச்சித்தரின் பழக்கப்பதிவிற்கும் விளக்கப்பதிவிற்கும் ஏற்பட்ட போராட்ட அனுபவத்தை அழுகணிச்சித்தர் அருளிய பாடலிருந்து, மகரிஷி அவர்கள் கூற அறிந்து கொண்டோம்.

    அஞ்ஞானிக்குமட்டுமே பழக்கப்பதிவுகள் உண்டு என்பதில்லை; ஞானிக்கும் பழக்கப்பதிவு இருந்து, அதனை விளக்கப்பதிவால் வென்றுதான் ஞானியாகிறார் என்று அறிந்து கொண்டோம். அறிவிற்கு முழுமையான தெளிவு ஏற்பட்டதுமே(ENLIGHTENMENT) பழக்கப்பதிவுகளாகிய தீயவினைப்பதிவுகள் செயலிழந்துவிடும். முழுமையாக வினைப்பதிவுகள் செயலிழந்த பிறகுதான் தெளிவு/இறை உணர்வு ஏற்படும் என்பதில்லை. பெற்ற தெளிவின் அடிப்படையில் இறை உணர்வு என்பது எதிர்பார்க்காத சமயங்களிலும் நடைபெறும். எதிர்பார்த்து நடப்பதன்று இறை உணர்வு. ஆனால் இறைஉணர்வு ஏற்பட்டதும் அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வந்த வினைகள் முழுவதுமாக செயலிழந்து விடுகின்றன.

    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்  (16-10-16-ஞாயிறு) பழக்கப்பதிவுகள் வலிமை உடையதாக இருந்தாலும் இப்பிறவியில் ஏற்பட்டுள்ள விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவினை வெற்றி கொள்ளும் அளவிற்கு எப்போது வலிமை பெறும் என்பதனை அறிந்து கொள்வோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    Loading

  • பழக்கமும் விளக்கமும்-3/?

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

                                                                 அறிவிற்கு விருந்து—233

    09-10-2016—ஞாயிறு.

    ஏன் விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளிடம் தோற்றுப் போகின்றன?

    மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்கின்றனர். ஆதிமனிதனிலிருந்து கருத்தொடராக வந்துள்ள பழக்கப்பதிவுகள் மிகவும் வலிமை உடையவைகளாக உள்ளன. ஆதிமனிதன் பிறக்கும்போது அவனுக்கு சிந்தனை ஆற்றல் இல்லை. மனிதஇன பரிணாமத்தில் சிந்தனை ஆற்றல் பெற்ற பிறகு ஏற்பட்டுள்ள தலைமுறைகளைக் கணக்கில் கொண்டு, ஆதிமனிதன் தோன்றி, சிந்தனை ஆற்றல் வளரும் வரையான காலத்தோடு ஒப்பிடும்போது, அது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகவேதான் உள்ளது. ஆகவே இயற்கையாகவே ஒவ்வொருவரிடமும் விளக்கப்பதிவுகளைவிட பழக்கப்பதிவுகளே வலிமை உடையவைகளாகத்தான் இருக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ffc-124-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-1-2-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95

    மேலும் ஒரு குழந்தை பிறந்தது முதல் விளக்கப்பதிவுகளை வெளிக் கொண்டுவர வாய்ப்பே இல்லை. புலன்களின் மூலம் உடல் உறுப்புகளின் மூலம் பழக்கப்பதிவுகள்தான் செயல்படுகின்றன. பன்னிரண்டு வயதிற்குமேல்தான் விளக்கப்பதிவுகள் சிறிது சிறிதாக செயல்படத் தொடங்குகின்றன.
    பழக்கப்பதிவாகவோ அல்லது விளக்கப்பதிவாகவோ இருந்தாலும் அவை சீவகாந்த ஆற்றலால்தான் செயல்படமுடியும். புலன்களும் உடல் உறுப்புகளும் இயங்கும்போது அவற்றின் செல்கள் வழியாக சீவகாந்த ஆற்றல் ஓடி செல்களுடைய இணைப்புகளை சீரமைக்கின்றது. அவ்வாறு சீவகாந்த ஆற்றல் ஓடும்போது, எவ்வாறு மழைபெய்யும்போது மழைநீர் பூமியின் மீது ஓடி ஒரு வழித்தடம்(path, ஆறாக) அமைகின்றதோ அதுபோல் சீவகாந்த வழித்தடம் அமைகின்றது. எப்போது மழை பெய்தாலும். மழைநீர் முன்பு ஓடிய பாதையிலேயே ஓடும். அதுபோல் உடலில் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும் சீவகாந்தம் மீண்டும் ஓடும்போது முன் ஓடிய பாதையிலேயே ஓடும். அப்போது அதே வேலையைச் செய்ய மனதுக்கு செயலில் ஆர்வமோ, உணர்ச்சி வேகமோ அல்லது தடையற்ற கட்டாயமோ உண்டாகி, செயலாவிடுகின்றது.

    பிரம்மப்பிரயத்தனம்(untiring effort) வேண்டும்:
    எதற்கு பிரம்மப்பிரயத்தனம் தேவை?
    பிரயத்தனம் என்றால் என்ன? ஒன்றைச் செய்வதற்காக சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சி.

    ‘பிரம்மப்பிரயத்தனம்’ என்றால் என்ன? ஒரு சிலருக்கு இவ்வார்த்தை பரிச்சயமானதாக இருக்கலாம். பிரம்மத்தை அறிவதற்காக பிரயத்தனம் செய்வது (மேற்கொள்ளும் முயற்சி) பிரம்மப்பிரயத்தனம். முயற்சியின் அளவே ஞானம் என்பார் அருட்தந்தை அவர்கள்.
    பொதுவாகவும் ‘பிரம்மப்பிரயத்தனம்’ என்கின்ற வார்த்தைப் பயன்படுத்துவதைக் கவனித்திருக்கலாம். அப்போது அதன் பொருள் என்ன? கடும் முயற்சியின் தன்மையைப் பற்றி விவரிக்கும்போது ‘பிரம்மப்பிரயத்தனம்’ என்கின்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஏன்? ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கின்ற முறையில் மேற்கொள்ளும் கடும் முயற்சி பிரம்மப்பிரயத்தனம் என்கின்ற சொல்லால் விவரிக்கப்படுகின்றது. மனிதன் நூற்றுக் கணக்கில் செயல்கள் புரிகிறான் வாழ்நாளில். அவற்றில் கடும்முயற்சி செய்து வெற்றி பெற வேண்டிய ஒரு காரியம் உள்ளது என்றால் அது பிரம்மத்தை உணர்வது. பிரயத்தனம்(கடும்முயற்சி) செய்து தான் பிரம்மத்தை உணரவேண்டியுள்ளது. காரணம் பல்லாயிரம் பிறவிகளாக செய்துள்ள, பிரம்மத்தை உணர்வதற்கு எதிர்மறைச்செயல் பதிவுகள் வலிமையானவை என்பதால் பிரம்மத்தை உணர விளக்கப்பதிவு கடும்முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. பழக்கப்பதிவுகள் மிகவும் வலிமை உடையன.(எனினும் மனவளக்கலையால் பிரம்மத்தை உணர்வதற்கான கடும் முயற்சி எளிமையாக்கப்பட்டு வாழ்வியலாக மாற்றப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மனக்கவலைக்கும், துன்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பிரம்மத்தை உணர்ந்தே ஆக வேண்டும்.)

    எனவே எந்த ஒரு புதிய பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நுண்மாண்நுழைபுலனோடு அச்செயல் புரிய இறங்க வேண்டும். நுண்மாண்நுழைபுலன் அறிவு இல்லாமல் ஒரு செயலை செய்து, பழக்கமாகி, ஒரு வேளை அந்தப் பழக்கம் நல்லதல்ல என பின்னர் தெரிய வரும்போது அதனைப் போக்கிக் கொள்வதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும். எனவே பழைய வேண்டாப் பழக்கப்பதிவைப் போக்கிக் கொள்ள பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். வேண்டாதப் பழக்கத்தை எதற்காக போக்க வேண்டும்? முதல் காரணம் அதனால் வருகின்ற துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அடுத்த காரணம், துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற பிரம்மத்தை நோக்கிய பயணத்தில் உள்ள தடைக்கற்களே வேண்டாத பழைய பழக்கப்பதிவுகள்.

    பிரம்மத்தை உணர அல்லவைகளை நீக்க பிரயத்தனம்(கடுமையான முயற்சிகள்) செய்ய வேண்டியிருப்பதால் அந்த கடுமையான முயற்சி பிரம்மப்பிரயத்தனம்தானே! இங்கே பிரம்மத்தை உணர்வதற்காக இந்தச் செயல் அமைவதால் இச்செயல் பிரம்மப்பிரயத்தனம் எனப்படும். பிரம்மத்தை உணர எடுக்கும் கடுமையான முயற்சியின் அளவை வைத்து உலகியல் வாழ்க்கையில் ஒரு கடினமாக செயலை செய்து முடிப்பதற்குத் தேவையான தொடர்விடாமுயற்சி பிரம்மப்பிரயத்தனம் எனப்படுகின்றது.

    பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவுகளை செயலாக்கவிடாமல் செய்கின்ற அனுபவம்:

    இந்த அனுபவ உணர்வு யாருக்கு ஏற்படும்? இந்த அனுபவ உணர்வு ஆழ்மன – ஏக்கத்தோடு, ‘விளங்கிய வழியே’ வாழ விரும்பும் அனைவருக்கும் (அவர்கள் ஆன்மீகப்பயிற்சியாளர்களாக இருக்கலாம் அல்லது ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்ளாதவர்களாகவும் இருக்கலாம்) ஏற்படும். ஏற்படவேண்டும். இது போன்ற அனுபவத்தை உணர்ந்த ஒர் அருளாளர் சமுதாயத்திற்கு உதவட்டும் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாடலாக இயற்றியுள்ளார். அந்த அருளாளர்தான் அழுகணிச்சித்தர். அந்த அருளாளரை வணங்கி அருளாரின் அனுபவத்தை, ‘அருளாளர்கள் அனைவரையும் மானசீகக் குருவாக’ வணங்கிய நம் குருதேவர் வழியாக அறிந்து கொள்வோம்.
    அழுகணிச்சித்தர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு பாடல் வழியாகக் கூறுவதனை நினைவு கூர்வோம்.

    காட்டானை மேலேறிக் கடைத்தெருவில் போகையிலே
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ?
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
    காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிரப்பாரேனோ?”

    . . . அழுகணிச்சித்தர்.

    பின்னாளில் அருளாளராகிய  அழுகணிச்சித்தருக்கேஆரம்பத்தில் பழக்கப் பதிவுகள்(ஐம்புலன்களின்- அனுபவப்பதிவுகள்) ஆன்மீக முன்னேற்றத்தில் முன்னேற விடாமல் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இருந்தாலும், பின்னர் அருளாளராக ஆக வேண்டிய கருமையப்பதிவுகள் அவரிடம் இருந்ததால் அவர் தடைகளைக் கண்டு அஞ்சாமல், துவண்டு விடாமல் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற்று அருளாளராகினார். அதனை தனக்குப்பின்னர் வரும் சமுதாயத்திற்கு உதவுகின்ற வகையில் பாடலாக இயற்றியுள்ளார். இந்த அனுபவப் பாடலை கண்ணுற்ற சித்தர்கள் வழிவந்த நம்முடைய குருதேவர் அவர்கள் அதனை ஆராய்ந்து ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கின்ற மானுட இயல்பினை/உண்மையினை கண்டுபிடித்துள்ளார்.

    இந்தப் பாடலின் ஆழ்ந்த உட்பொருளை உணர்ந்து, பின்னர் அருளாராகியவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கும்போது சாதாரண நிலையிலிருந்து ஆன்மீகப் பயிற்சியினை மேற்கொள்பவர்களுக்கும் ஐம்புலன்-அனுபவப் பதிவுகளின்(பழக்கப்பதிவுகள்) இடையூறுகள்/குறிக்கீடுகள் கட்டாயம் ஏற்படும் என்று கருதி பழக்கப்பதிவுகளிடம் வெற்றி கண்ட அழுகணிச்சித்தரின் அனுபவப்பாடலின் உட்பொருளை தனது மாணவர்களும் அறிந்து கொண்டு பயனடைய வேண்டும் எனக் கருதி, மனதில் நிற்குமாறு விவரிக்கிறார் மகரிஷி அவர்கள்.

    அழுகணிச்சித்தரின் இப்பாடலுக்கு வேறு எவ்வாறு விளக்கம் இதுவரை கூறப்பட்டுள்ளதோ தெரியாது. ஆனால் மகரிஷி அவர்கள் இப்பாடலுக்கு அருளியுள்ள விளக்கம் அழுகணிச்சித்தரே வந்து நமக்கு விளக்கம் அளித்ததாக உள்ளது. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

    இப்போது, இப்பாடலுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்ற விளக்கத்தினை அறிவோம்.

    மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பு தன்முனைப்பு கரைந்துபோம், காணும் தெய்வம் என்பது. தன்முனைப்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே திரையாக இருந்து கொண்டு இறைவனைக் காணவொட்டாமல் செய்கின்றது என ஆன்மீகத்தில் பெரியவர்கள் கூறுகின்றனர். எனவே அழுகணிச்சித்தருக்கும் ‘தன்முனைப்பு கரைந்த பிறகுதான் இறையை கண்குளிர காண முடியும்’ என்கின்ற நியதி பொருந்துமல்லவா? எனவே அழுகணிச்சித்தரின் தன்முனைப்பைக் கரைத்ததில் அடைந்த அனுபவத்தைத் தெரிவிக்கும் அழுகணிச்சித்தரின் பாடலுக்கு விளக்கம் கூற வந்த அருட்தந்தை அவர்கள் தன்முனைப்பிலிருந்து ஆரம்பிக்கிறார்.
    தன்முனைப்பு கரைய முதலில் செய்ய வேண்டியது என்ன?

    தன்முனைப்பு கரைந்த பிறகுதான் இறையை உணரமுடியும் என்பதால் தன்முனைப்பு கரைவதற்கு என்ன செய்வது? தன்முனைப்பின் விஞ்ஞானத்தை(Science of Ego) முதலில் அறிய வேண்டும். அப்போதுதான் தன்முனைப்பு என்பது என்ன என்கின்ற புரிதலில் ஆழ்ந்த நிலையினை அடைய முடியும். அதற்கு அரிஸ்டாடில் கூறுவதுபோல், எங்கு, எப்போது, எவ்வாறு, எப்படி, ஏன் ஆகிய வினாக்களை எழுப்பி விடைகள் காண வேண்டும். வேதாத்திரிய மானுடவியலில், ‘தன்முனைப்பின் அறிவியல்’ உருவாகியுள்ளது. வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் ஒன்றாகும்.

    தன்முனைப்பு என்பது என்ன? திரையாக இருந்து கொண்டு இறைவனை மறைக்கின்றது என்றால் என்ன பொருள்? தன்முனைப்பு எங்கிருந்து உண்டாயிற்று/எழுகின்றது? தன்முனைப்பு என்பது ஒரு தவறான எண்ணம். அதாவது தான் யார் என்று தெரியாமல் இருக்கின்ற எண்ணம். ‘உடலே நான்’ என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற எண்ணம். ‘நான் உடலல்ல, அறிவே(ஆத்மா) நான்’ என அறியாதிருத்தல். எல்லாம் வல்ல இறைநிலையிலிருந்து வந்த இந்த உடல் தனித்து இயங்குவதான எண்ணம் இந்த எண்ணம் எப்போது ஏற்பட்டது? ‘இறைநிலையிலிருந்து விடுபட்டு தனியாக துகள்களாக இயங்குவதே முனைப்புதானே! என்பார் மகரிஷி அவர்கள். எனவே அங்கேயே தன்முனைப்பு தோன்றிவிட்டதாக தன்முனைப்பின் அறிவியலைக் கூறுகிறார்.

    நீண்ட நாட்களாக உயிர் முனைப்போடு தனித்து இயங்குகின்றது:

    நெடுநாட்களாக, உயிர்களாக, உணர்ச்சி நிலை உயிர்களாகத் தோன்றியதிலிருந்து பரிணாமத்திலே தொடர்ந்து ‘இறைநிலையை மறந்து, உடல் தனித்து இயங்குகின்றது’ என்கின்ற எண்ணம் இருந்து கொண்டேதான் வந்து கொண்டிருக்கின்றது. மனிதனிடம் வரும்போது அது ‘தன்முனைப்பு’ என்பதாகத் தெரிகின்றது. எனவே தன்முனைப்பு எண்ணப்பதிவுகள் எவ்வளவு வலிமை உடையதாக இருக்குமன்றோ? எனவே இறைநிலைக்கு போக முயற்சிக்கும்போது எத்தனை கோடி எண்ணங்கள் பதிவாகி இருக்கின்றனவோ வினைப்பயனாக, அவைகளெல்லாம் இறைநிலைக்கு போகவிடாமல் தடுக்கின்றன. தன்முனைப்பு நீங்கிப் பரம்பொருளோடு பரம் பொருளாகவே இருக்க வேண்டிய அறிவு, அந்தப்பரம்பொருளிலேயே லயமாவதற்காக விரும்பும்போது அந்தப்பாதையிலே போக விடாமல் தடுத்துத் தூக்கித் தூக்கி வெளிப்புறம் எறிகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். ‘தடுத்துத் தூக்கித் தூக்கி’ என்று அழுத்தமாகக் கூறுவதனை மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இதனால் அறிய வேண்டியது யாதெனில் பழக்கப்பதிவுகள் மிகவும் வலிமை உடையன. இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அழுகணிச் சித்தரின் பாடலுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கத்தை அடுத்த அறிவிற்கு விருந்தில் (12-10-2016- புதன்) நிகழ்ச்சியில் அறிந்து கொள்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • பழக்கமும் விளக்கமும்- 2/?

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     
    அறிவிற்கு விருந்து—232

    05-10-2016—புதன்.

     வாழ்க வளமுடன்.
    இன்றைய விருந்தில் சிந்திக்க இருக்கின்ற உட்தலைப்புகளாவன(sub headings):
    1) அறநூல்களின் தற்போதைய பயன்பாட்டு நிலை என்ன?
    2) சாதனையே அறநெறி(21-12-1961)
    3) அறநெறிகள் பின்பற்றப்படுவதில்லை:
    4) வீடு கட்டுவதற்கு வரைபடம் மட்டுமே போதுமா?
    5) பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?
    6) மனம் என்பது என்ன?
    7) மனிதனிடம் உள்ள தீமை பழக்கம்.

    சென்ற அறிவிற்கு விருந்தில் பதிதல், பழக்கம், விளக்கம் பற்றி அறிந்து கொண்டோம். சிறப்பாக வாழ்வதில் வெற்றி கண்ட நெறியைச் சார்ந்து நிற்கும் சான்றோர்கள் மற்றும் அறிவை அறிந்த அறிஞர்களிடமிருந்து நேரிடையாகவோ அல்லது அவர்கள் அனுபவத்தால் கண்டுபிடித்து மனிதகுலத்திற்குத் தெரிவிக்க அருளிய அறநூல்களிலிருந்து அறநெறி விளக்கத்தை அறிந்து கொண்டு, உறுதிபடுத்தி, அது சரி என அறிந்து கொண்டு பிறகு அவற்றை திட்டமிட்டு, அறநெறிகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

    அறநூல்களின் தற்போதைய பயன்பாட்டு நிலை என்ன?

          திருவள்ளுவர் திருக்குறளை அருளியுள்ளார். ‘ஒழுக்கத்தைப் பற்றி பத்து குறட்பாக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் அருளியுள்ளார். இதுபோன்று பல அறிஞர் பெருமக்கள் அறநூல்களை அருளியுள்ளனர். அவற்றின் பயன்கள் என்னவாயிற்று? எந்த அறிவுரையாக இருந்தாலும் சரி, ஆலோசனையாக இருந்தாலும் சிந்தித்து, அது சரியா என்று உறுதிபடுத்த வேண்டும். பிறகு அதனை சாதனைக்கு கொண்டு வரவேண்டும். ஆனால் தற்போது அறநூல்களின் பயன்பாட்டு நிலை என்ன? அறநூல்கள் கூறுவதனை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இத்தருணத்தில் அறிஞர் திருவள்ளுவர் நம்சிந்தனைக்குள் பிரசன்னமாகிறார். நம் சிந்தனைக்குப் பொருத்தமாக திருவள்ளுவர் கூறியுள்ளதை அறிவோம். என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். கல்வி எனும் அதிகாரத்தில் முதல் குறட்பாவிலேயே கல்வி எவ்வாறு கற்க வேண்டும், எதற்காக கற்க வேண்டும் என்று கூறுகிறார்.

    கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
    நிற்க அதற்குத் தக.”                                   குறள் எண் – 391

    பொருள்:

    கற்கத் தகுந்த நூல்களை நம்மிடம் உள்ள குற்றம் நீங்க கற்க வேண்டும். அங்ஙனம் கற்றதற்கேற்ப நிற்க வேண்டும். அதுவே நெறியுடன் வாழ்வதாகும்.

    மனிதன் சிந்திக்க உரிமை உண்டு. அறிஞர் கூறுவது சரி எனத் தெரிந்தால் அதனை பின்பற்ற வேண்டும்.
           அவ்வாறு சரி என தெரிந்தும் பின்பற்றமால் இருப்பது பற்றி சீன அறிஞர் கன்பூசியஸ் கூறுவதனைக்(சிந்திக்க அமுத மொழிகள் 208 – 27-08-2016 – சனிக்கிழமை)கவனிப்போம்.

    “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்”

    . . . கன்பூசியஸ்.

    சுவாமி விவேகானந்தர் அவர்கள் வாழ்க்கை எப்படியிருக்கின்றது அதனை எவ்வாறு வாழ்வது என்பதுபற்றிக் கூறுவதனையும் அறிந்துகொள்வோம்.

    “வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.” (சிந்திக்க அமுத மொழிகள் 201—05-08-2016-வெள்ளிக்கிழமை)

    … சுவாமி விவேகானந்தர்.

    சுவாமி விவேகானந்தரின் இந்த கண்டுபிடிப்பைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. என்ன கவனிக்க வேண்டியுள்ளது?

    1) ஏன் வாழ்க்கை போர்க்களமாக இருக்கின்றது என்கிறார்?
    2) யாருக்கு? வாழ்கின்ற அனைவருக்குமே வாழ்க்கை போர்க்களமாக இருக்குமா?
    3) யாருடன் போராட வேண்டும்? பிறரிடமா?
    4) அதில் வெற்றி கொள்ள கோழைத்தனம் இல்லாது அஞ்சாது நிற்க வேண்டிய மனநிலை தேவை என்பதால் வாழ்க்கை எனும் போராட்டத்தில் வெற்றி கொள்வது அவ்வளவு கடினமா?

    இக்கேள்விகளுக்கெல்லாம் பின்னர் (சிந்தனையின் முடிவில்) விடை காண்போம்.
    பொதுவாக சிந்திப்பது எதற்காக? சிந்தித்து செயல்படும்போது விளைவு நன்மையாக இருக்கும். அதுவும் அருள்துறையில் சிந்திப்பது என்பது, தானும், சமுதாயமும் எவ்வாறு நலமுடன் வாழமுடியும் என்பதனைக் கண்டுபிடிக்கவேதான்.

    இன்றைய சிந்தனையில் இதுவரை மூன்று அறிஞர்கள் திருவள்ளுவர், கன்பூசியஸ் மற்றும் சுவாமி விவேகானந்தர் கூறுவதனை நினைவு கூர்ந்தோம். இவ்வாறு அறிவிற்கு விருந்து படைக்கும் நம் சிந்தனையைத் தூண்டியுள்ள அருளாளர் நம் குருபிரான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனையும் அறிவோம். ஒரே உண்மையைப்பற்றி அறிஞர்கள் பலர் கூறுவதனை அறிந்து, அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து அதனைப் பின்பற்றி நடப்பதற்கானத் தெளிவிற்கு வருவோம்.
    வேதாத்திரி மகரிஷி அவர்கள் சாதனையே அறநெறி என்கிறார். இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும் என்கிறார். சாதனைதான் அறநூல்களின் பயனை ஏற்படுத்த முடியும். போதனை சாதனையாக வேண்டும் என்கிறார். அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

    FFC-88-3-6-15-சாதனையே அறநெறி-கவி

    அறம்பிறழாமல் இருக்க அதற்கு ஏற்ற கல்வி அவசியம் என்கிறார். தேவையானதெல்லாம் அறம் வளரவேண்டும். அதற்கு அறத்தை மலர்த்தும் கல்வி வேண்டும் என்கிறார். கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிறார். கல்வியின் அங்கம் நான்காக இருக்க வேண்டும் என்கிறார். எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கையை அறிந்த அறிவு(இயற்கைத்தத்துவ அறிவு)

    அருளாளர்களின் அறம் சார்ந்த ஆலோசனைகள், அறிவுரைகள் அறநூல்களில் எழுத்தளவிலேதான் உள்ளது. அல்லது தெரிந்து வைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தெரிந்து வைத்துக் கொள்ளப்படுவதால் எவ்வாறு நன்மை உண்டாகும்?

    வீடு கட்டுவதற்கு வரைபடம் மட்டுமே போதுமா?

             வீடு கட்ட முடிவு செய்துவிட்டோம். அதற்கு என்ன செய்யவேண்டும்?
    வீடு கட்டுவதற்கு வீட்டின் வரைபடம் (blue print) தயாரித்து, அதற்குரிய அங்கீகாரம்(approval) வாங்க வேண்டும். அங்கீகாரம் வாங்கி வைத்துவிட்டால் வீடு கட்டியதாகிவிடுமா? அங்கீகாரம் குறிப்பிட்ட கால கெடுவை தாண்டினால் அங்கீகாரம் செயலிழந்துவிடும். அதற்குள் வீடு கட்டி முடிக்க வேண்டும். அதுபோல் அறம் பற்றி தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே பலனளிக்காது. அறத்தால் பழிச்செயல்பதிவுகளைப் போக்கி இன்பம், அமைதி அனுபவிப்பது என்பது அறத்தை பின்பற்றினால் மட்டுமே சாத்தியமாகும். எனவே அறநூல்கள் தெரிவிப்பவனற்றை சாதனை ஆக்கினால் மட்டுமே நன்மை உண்டாகும். அதனால்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறநெறியைப் போதிக்க இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும், இனிமேலும் அறநூல்கள் புதிதாக அவசியமில்லை எனத் தைரியமாக, நாமும் சிந்தித்து அவர் கண்டுபிடிப்பை நாமும் மற்றொருமுறை கண்டுபிடிக்கும் வகையில் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ஆனால் அவற்றை சாதனையாக்க பின்பற்றக்கூடிய கல்விமுறை வேண்டும் என்கிறார். இவ்வாறு கூறுவதற்கானக் காரணம் என்ன?

    அறநெறிகள் பின்பற்றப்படுவதில்லை:

    ஏன் அறநெறிகள் பின்பற்றப்படுவதில்லை? அறம் என்பது என்ன? ஒழுக்கம்தானே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் உயிரைவிட மேலானது ஒழுக்கம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் ஒழுக்கம் என்பது மனித வாழ்வில் இயல்பாகவில்லை. காரணத்தை அறிஞர் ரூஸோ கூறுவதிலிருந்து அறிந்து கொள்வோம். அறிஞர் ரூஸோ என்ன கூறுகிறார்? அறிஞர் ரூஸோ ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” (ஏற்கனவே சிந்திக்க அமுத மொழி பயிற்சியில் இதனை அறிந்திருக்கிறோம்) என்று கூறுகிறார். எனவே ஒழுக்கத்தைவிட்டுவிட முடியுமா? ஒழுக்கத்தில் வாழ்வதற்கு ஏன் போராடவேண்டும் என்கிறார்? ஒழுக்கத்தில் வாழ்வது அவ்வளவு கடினமா? ஒழுக்கத்தைப் பற்றி திருவள்ளுவர் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளது அனைத்தும் சிறப்புடைய ஆறாம் அறிவிற்கான விளக்கங்களாகும்.

    அவ்விளக்கங்கள் ஏன் செயலுக்கு வரமுடிவதில்லை?

    1) அறநெறி விளக்கம் விளங்காமல் உள்ளதா?
    2) அறநெறி விளக்கத்தின் பயன் தெரியவில்லையா?
    3) அல்லது அறநெறி விளக்கம் விளங்கியும் அதனை சாதனைக்கு கொண்டு வருவதில் விருப்பம்
    இல்லையா?
    4) விருப்பம் இருந்து சாதனைக்கு கொண்டு வருவது கடினமாக உள்ளதா?
    5) அறநெறி விளக்கம் பற்றிய விளக்கக்கல்வி தற்போதைய கல்வி முறையில் இருக்க வேண்டுமா?

    மேலே கூறப்பட்டுள்ள காரணங்களில் முதல் இரண்டு காரணநிலையில் மனித சமுதாயத்தில் பெரும்பாலோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
    மூன்றாவது காரணநிலையில் ஒரு சிலர் இருக்கின்றனர்.
    நான்காவது காரணநிலையைில் வெகுசிலர் இருக்கின்றனர். அந்த வெகுசிலரிலும் அநேகர் ஒழுக்க வாழ்வு வாழ்வது கடினமாக உள்ளதால் அதனை கைவிட்டுவிடுகின்றனர்.

    இந்த நான்கு நலைகளிலும் மனிதர்கள் உள்ளதால், ஐந்தாவதாக கூறப்பட்டுள்ள ‘விளக்கக் கல்வி’ கல்வி முறையில் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய மகரிஷி அவர்களின் அவா.

    ஏன் ஆறாம் அறிவு ஒழுங்காற்றலிருந்து வந்தும்/பிறந்தும், ஒழுக்க வாழ்வு வாழ்வதில் அதற்கு ஏன் கடினமாக உள்ளது என்பதனை மகரிஷி அவர்கள் கூறுவதனையும், அதற்கானத் தீர்வாக, அவ்வைத்தாய் “இளமையில் கல்” என்று கூறியபடி இளமையிலிருந்தே கற்க வேண்டிய கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்று அருளார்கள் வரிசையில் வந்துள்ள அவ்வையாரின் இளவல் மகரிஷி அவர்கள் கூறுவதனையும் விளங்கிக் கொண்டு பயன் பெறுவோம். மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?

           இந்தக் கேள்வியினைக் கேட்டுத்தான் அதற்கான விடையை விளக்கமாகக் கூறுகிறார். இக்கேள்வியில் உள்ள பழக்கம், விளக்கம் பற்றி சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம். இப்போது ஒழுக்க வாழ்வு வாழ ஏன் அறிவு போராட வேண்டியுள்ளது என்பதனை அறிந்து கொள்வோம். அறிவு விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் மனம் அதற்கு ஒத்துழைப்பது இல்லை. எனவே விளக்கம் என்பது என்ன என்கின்ற விளக்கத்தை மனம் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-124-படம் 1-1-பழக்கத்திற்கும் வினக்கத்திற்கும்

    மனம் என்பது என்ன?

    உயிரின் படர்க்கை நிலையே மனம் என்கிறார் மகரிஷி அவர்கள். மனம் பத்து படிகளில் இயங்குவதைக் கண்டுபிடித்திருக்கிறார். உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம். ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்பனவாகும் அவை. இவற்றில் முதல் ஏழும் மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் பொது. முதல் ஏழும் உடற்கருவிகளைக் கொண்டே நடைபெறுவதால் அவை செயல்பதிவுகளாகின்றன. மற்ற மூன்றுமாகிய ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்பன மூளைச்செல்கள் மற்றும் கருமையத்தைக் கொண்டு நடைபெற வேண்டியுள்ளது. விளக்கத்தை விளங்கிக் கொள்ளவதால் இது விளக்கப்பதிவுகளாகின்றன. பெரும்பாலும் மனிதமனம் மனதின் கடைசி மூன்று படிகளான விளக்கப்படிகளுக்கு வருவதில்லை. அதாவது மனிதன் எப்போதும் விழிப்போடு சிந்தித்து செயல்படுவதில்லை. எனவே நெடுங்காலமாக பழகி வந்த பழக்கப்பதிவுகள் மற்றும் இப்போது பெறுகின்ற விளக்கத்தால் ஏற்படுகின்ற விளக்கப்பதிவுகளின் அழுத்த வித்தியாசத்தால் முரண்பாடு வருகின்றது. அதுவே போராட்டமாகத் தெரிகின்றது. சிலர் தொடர்விடாமுயற்சியுடன் விளக்கப்பதிவிற்கு வலிவு சேர்த்து வெற்றி பெறுகின்றனர். பலர் தொடர்விடாமுயற்சி செய்வதில்லை. எனவே பழக்கப்பதிவே வெற்றி பெறுகின்றது. இருப்பினும், பல்லாயிரம் பிறவிகள் ஏற்ற பழிச்செயல்பதிவுகளை ஒரு பிறவியிலே மாற்றி அமைக்க முடியும் என்கிறார் மகரிஷி அவர்கள். (கவி எண். 1743)

    piRavipperunkadal

    மனிதனிடம் உள்ள தீமை பழக்கம்:

            ‘மனிதனிடம் உள்ள தீமை, பழக்கம்’ என்பது யார் கூறியது? மகரிஷி அவர்கள். எப்படி அவ்வாறு கூறுகிறார்? மனிதனின் வாழ்வில் பெரும்பாலும் துன்பங்களே காணப்படுகின்றன. துன்பங்கள் வருகின்றது என்றால் அது மனிதன் கொண்டிருக்கின்ற பழக்கத்தால்(நடவடிக்கைகளால்) வருகின்றது. துன்பம் வந்தால் அது மனிதனுக்குத் தீமைதானே. எனவே ஒரு பழக்கம் துன்பத்தை தருகின்றது என்றால் அப்பழக்கத்தை நீக்குவதற்கான விளக்கம் பெற்று மாற்றாக நன்மை தரும் பழக்கத்திற்கு வரவேண்டும்.
    மனிதவாழ்வில் துன்பத்தை அனுபவிப்பதற்கு ஒரே காரணம் பழக்கம்தானா? ஆம்! ஆன்மா இப்பிறவி எடுத்ததற்குக் காரணம் முற்பிறவிகளில் செய்துள்ள வினைப்பயனை அனுபவிக்கவே! இதனை ஒரு பெரியவர் ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார். அவ்வாறிருக்கும்போது எண்ணிலடங்கா முற்பிறவிகளில் செய்துள்ள வினைகளின் கணக்கு எங்குள்ளன? கருமையத்தில் பதிவுகளாக உள்ளன. அப்பதிவுகளே பிறவி எடுத்து வாழ்வதற்கு அடிப்படையாக உள்ளன. கருமையப்பதிவுகளே மனிதனின் தன்மையாக உள்ளன. மீண்டும் பிறவி எடுப்பதற்காக மனிதன் பிறப்பதில்லை. மீண்டும் பிறவாதிருக்கவே இப்பிறவி எடுத்துள்ளான். எனவே கருமையப்பதிவுகளை தூய்மை செய்து கொண்டு பிறப்பு-இறப்பு சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அறிவை அறிந்த குருவை தரிசித்து அவரது சத்சங்கத்தில் இணைந்து கொண்டு தெளிவு பெற விளக்கம் பெற வேண்டும். அவ்விளக்கத்தை செயலுக்கு கொண்டு வருவதன் மூலம் பழைய தீய பழக்கங்களை செயலிழக்கச் செய்ய வேண்டும்.
    ஆனால் நடைமுறையில் நிலைமை அவ்வாறு இல்லை. பழக்கங்கள் தீயபழக்கமாக இருந்து துன்பம் அனுபவிக்கும் பட்சத்தில், இன்பம் அனுபவிக்க அத்தீயபழக்கத்தை நற்பழக்கமாக மாற்றுவதற்கு விளக்கம் பெற்று அதனை வாழ்வில் பழகவேண்டும். அவ்வாறு நற்பழக்கமாக மாற்றுகின்றபோது பெரும்பாலும் தீமை தரும் பழைய பழக்கப்பதிவுகளே வெற்றி கொள்வதாக உள்ளன. எனவேதான் மனிதனிடம் உள்ள தீமை, பழக்கம் என்கிறார். மேலும் மனிதனை ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
    இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம். அடுத்த விருந்தில் (09-10-2016—ஞாயிறு) அன்று ஏன் விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளிடம் தோற்றுப் போகின்றன என்பது பற்றி ஆராய்வோம்.   வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading