இன்றைய விருந்து

  • FFC—157-‘வள்ளலார் கடைவிரித்தது விரித்ததுதான்’

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    ‘வள்ளலார் கடைவிரித்தது விரித்ததுதான்’

    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     FFC—157

    24-01-2015—ஞாயிறு

    vallalar_thirukkappu-PNG_Thai

     

    இன்று தைப்பூசத் திருநாள். வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட நாள். திருக்காப்பிட்டுக் கொண்டு நூற்று நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சிரம் தாழ்த்தி உடலாலும், உள்ளத்தாலும் ஆர்வத்தோடும் அருட்பிரகாச வள்ளலாரை வணங்குவோம். ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ வழங்கிக் கொண்டிருக்கின்ற அருட்பிராகாச வள்ளலாரின் அருளால் சாகா வரம் பெறுவோம்.  வள்ளலார் அவர்கள் சத்ய வாக்கு கொடுத்துள்ளதால், இந்நன்னாளில் அருட்பிரகாச வள்ளாரிடம் இறைமையை/அருளை இறைஞ்சி வேண்டி நிற்போம்.

    வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வேதாத்திரி மகரிஷியின் உடலில் பத்து வருடங்கள் இருந்து கொண்டு, வள்ளலாரின் ஆன்மா மகரிஷி அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதனை வேதாத்திரி மகரிஷி அவர்களே தனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் கூறியுள்ளார்கள்.

    மகரிஷி அவர்களுக்குள் இருந்து கொண்டு வள்ளலார் அவர்கள் வழிகாட்டியாக இருந்து அருள் புரிந்த புனித நிகழ்வால், வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக்கொண்ட அன்று தமது திருவாயால் மலர்ந்தருளிய சத்திய வாக்கு ஒருவரிடம்(மகரிஷியிடம்) நிறைவேறியதை நாம் அறிய முடிகின்றது. இன்னும் எத்தனை அருள்துறை அன்பர்களுக்கு இது போன்று அருள் பாலித்தார் என்பது தெரியவில்லை.

    வேறு எந்த அருளாளரின் பூதஉடலுக்குள் இருந்து கொண்டு செயல்பட்டாரோ அல்லது இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாரோ என்பது தெரியாது. எனினும் இன்று நாம் வள்ளலார் அவர்களிடமிருந்து அருள் பெற தயாராக உள்ளோம்.

     அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது திருவாய் மலர்ந்தருளியது என்ன என்பதனை நினைவு கூர்வோம்.

    30-01-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம், தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக் கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்டார். அப்போது அவர் அளித்த அருட்செய்தியினை கூர்ந்து கவனிப்போம். (வடலூர் சித்தி வளாகத்தில் இன்றும் அந்த அருட்செய்தியினைக் காணலாம்.) அந்த அருட்செய்தி கூறுவது என்ன?
    இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்? கேட்டு, திருந்தி எழுச்சி பெற்று, திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.
    • இப்போது இந்தவுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்பொம், திருத்திவிடுவோம். அஞ்சவேண்டா.
    • சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.”
                                                                                            –வள்ளலார் அவர்கள்.

    வள்ளலார் அவர்களின் மற்றொரு ஆதங்கம் என்ன?

    “கடைவிரித்தேன். கொள்வாரில்லை”

    அவர் பூதவுடலில் இருந்து கொண்டு நேரிடையாகவே அருட்செய்திகளையெல்லாம் சொல்லியும், அதனைக் கேட்டு, எழுச்சி பெற்று, திருந்தி பிறவிப்பயனை அடைகின்ற திறமையில் ஒருவா்கூடத் திகழவில்லை என்கிறார்.
    எனவே அவர் பூதவுடலை விட்டுப் பிரிந்தாலும், அவரது சூக்கும உடல் எல்லோரிடமும் புகுந்து கொண்டு திருத்திவிடும்” என்கிறார். அகவினத்தார்க்கு சாகா வரமும், ஏனையோர்க்கு பரிபக்குவ நிலையையும் அளிப்பதாக வாக்களித்துள்ளார். இது ‘உடலே நான்’ என பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், வள்ளலார் என்கின்ற பூதவுடல் சொன்னதா? இல்லை!
    “ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலர் வாக்கிற்கிணங்க,
    வள்ளலாரின் பூதஉடலில் பேரறிவாகிய இறையே, ஆலயம் கொண்டு,
    ‘வேதங்கள் இறைவனால் சொல்லப்பட்டன’ என்று சொல்லப்படுவதுபோல், சாட்சாத் இறைவனே வள்ளலாரின் திருவாய் வழியாக அருளிய திருவார்த்தைகளாகும்.
    பின்னர் வேறு எந்த வழியில் அரூபமான இறையால் மனித சமுதாயத்திற்கு சொல்ல முடியும்? இறை அரூபமாக உள்ளது என்று விளங்கிய பிறகு, ஐயப்படாது அகத்தை உணா்ந்தவர் வழியாக இறை சொல்கின்றது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்காது. அதனால்தான் மூத்தோர் வார்த்தை அமிர்தம் என்கிறார் அவ்வையார். மூத்தோர் என்பது அறிவை அறிந்த பெரியவர்கள் என்று கொள்ளலாம். வயதில் மூத்தவர்கள் அனுபவத்தால் சொல்வதனையும் கேட்க வேண்டும். அறிவை அறிந்த பெரியோர்கள் வழியாக சொல்வது இறையே என்பதால் அது அமிர்தமாகத்தானே இருக்கும். இயற்கை–இறை/இறைவன் ஆனந்தமயமானது/ஆனந்தமயமானவன் என்பதால் இயற்கையால்–இறையால்/இறைவனால் சொல்வது ஆனந்தமாகத்தானே இருக்கும்!
    வள்ளலார் திருவாக்களித்தபடி, ஓயாமல் அவரது திரு எய்திய ஆன்மாவே (இறைவனே), ஆன்மீகத் துறையில் பயிற்சி செய்யும் சாதகர்களுடனே இருந்து கொண்டு உறுதுணையாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆன்மீக சாதகர்களுக்கு இரண்டு வழிகளில் துணைபுரிவேன் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். முதல்தர சாதகர்களுக்கு ‘சாகா வரமே தருவேன்’ என்கிறார். மற்றவா்களுக்கு ’பரிபக்குவ நிலையைத் தருவேன்’ என்கிறார்.
    ஆன்மீகத்தில் ’பரிபக்குவ நிலை’ என்பது மிக மிக முக்கியமானது. பரிபக்குவ நிலையில் பிறவி எடுத்தவர்களே, கருவில் திருவுடையவர்களாவார்கள். பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறியவாறு கோடியில் ஒருவரே கருவில் திருவுடையவா்களாக இருப்பர். அவர்களே தன்னை வந்து அடைவதாக கூறுகிறார் கண்ணபரமாத்மா. மற்றவர்கள் வழுக்கி விழுந்து, விழுந்து, முயற்சி மேல் முயற்சி செய்து, ஆன்மீக இலக்கை அடைய வேண்டும். எனவே ‘சாகா வரம்’ வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பரிபக்குவ நிலையைத் தருவதாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். பரிபக்குவ நிலை வந்த பிறகுதான் குரு-சீடர் உறவில் அலை இயக்க ஐந்து பண்புகளும் முழுவதுமாக வேலை செய்து, குறிப்பாக அலை இயக்கப்பண்பில் கடைசியும், அதிமுக்கியதுமானதுமான ‘ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்–inter-action’ என்பது குரு-சீடா் உறவின் முழுப்பயனையும் தரும்.
    இயற்கையின்/இறையின் மனிதர்களாகிய—தன்மாற்ற(self–transformation into human beings) சரித்திரத்தில் மனிதர்களை திருத்தும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி திருவாய் மொழியிலிருந்து.
    வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளும்போது அறிவித்த அருட்செய்தியின்படி, நமக்குத் தெரிந்த வரை, வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது (1911-1874) + 42 = 37+42= 79 or 80) ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வள்ளலார் அருட்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் மகரிஷி அவர்கள் தான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார். மேலும், இராமலிங்க வள்ளலார் அவர்கள் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தன் வழியாக முடித்தார் என எண்ணுவதாகவும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
    வள்ளலாரின் அருள் தனக்கு கிடைத்த பாக்கியத்தை, நம்குருதேவர், பேரருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்திக் கொண்டதை, அவரே கூறுவதை அறிந்து மகிழ்வோம். ஏனெனில் நம் தாய், தந்தையர் செய்த புண்ணியத்தால் நமக்கு குருவாக குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களை இயற்கை/இறை அருளியுள்ளது. மகரிஷி அவர்களின் பூதஉடலில் வள்ளலார் அவர்கள் பத்துவருடங்கள் தங்கியிருந்து அருள்பாலித்திலிருக்கிறார். அது நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதாக உள்ளது என்கிறோம். காரணம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தெரிவித்த உண்மைகளுக்கு பலமும், தெளிவும், எளிமையும் கிடைத்திருக்கிறது அல்லவா? மகிழ்ச்சி மட்டுமல்ல, அது நமக்கு கூடுதல் பயன்தானே(additional benefit) உண்மையைப்பற்றி அறிந்து கொள்வதில். வள்ளலார் அவர்கள், பல சந்தா்ப்பங்களில் தன்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றுவதை அனுபவமாகக் கண்டதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-157-வள்ளலார் அருள்
    மகரிஷி அல்லாது இன்னும் எத்தனை அருளாளர்களுக்கு வள்ளலார் அவர்கள் சாகா வரம் தந்துள்ளார் என்பது தெரியாது. வெளியே தெரியவில்லை. ஆனால் பரிபக்குவ நிலையைத் தந்து கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதனை மட்டும் அறிய முடிகின்றது. ‘வேதாத்திரியம்’ கல்வி நிலையங்களுக்குச் சென்று மாணவர்களை ஒழுக்கத்திற்கு திருத்தி ஒழுங்கு படுத்தும் சீரிய பணியைத் துவங்கி விட்டதே இதற்குச் சான்றாகக் கொள்ள முடிகின்றது. பேரறிவின் தன்மாற்றத்தில் அவ்வப்போது மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடா் ஓட்டம் (Never ending–Continuous Divine Relay Race).
    அதனால்தான் மகரிஷி அவர்கள் “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” எனத்துவங்கும் குருவணக்கப் பாடலில், தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் என பெயரிட்டு நான்கு அருளாளர்களை நினைவு கூர்வதோடுமட்டுமல்லாமல், இது வரை இறைவெளியின் தன்மாற்றத்தில், ஆன்மீக வரலாற்றில் தொடராக வந்துள்ள அனைத்து அருளாளர்களையும் நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். அப்படியானால் மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டம் தானே!

    வள்ளலார் “திருத்திடுவோம்” என்று கூறியது இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக நடைபெறவில்லையா? மனவளக்கலை ஒரு சாதனை மார்க்கம் என்பதே, திருந்துவதைத்தானே குறிக்கின்றது. சாதனை என்பது என்ன? பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் மனிதன் பழைய தீய பழக்கங்களுக்கும் இப்போது கிடைக்கும் நல்விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் சாதனை என்பது. எனவே தான் தற்சோதனைப் பயிற்சியை தெய்வீகப் பயிற்சி என்கிறார் மகரிஷி அவர்கள்.
    மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். தன் பிணக்குகளை முறையாகக் களைவதும் ஒரு போராட்டம்தான் என்கிறார். எனவே தன் பிணக்குகளை முறையாகக் களைவதற்கு மகரிஷி அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், உயர்வையும் கவனிக்க வேண்டும். தன் பிணக்குகளை முறையாகக் களைவதை, உயிரைத் தூய்மையாக்கவல்ல ’அறிவுப்போர்’ என்கிறார். ஆகவே வாழ்வில், மகிழ்ச்சியும், நிறைவும். அமைதியும் அளிக்கும் அந்த அறிவுப்போர் ஒரு தெய்வீகப் போர் என்கிறார்.

    அன்பொளி ஜுலை 1985 இல் ‘வள்ளலார் விரித்த கடை’ என்கின்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் முடிவுப்பகுதியில் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்:–
    “கடைவிரித்தேன். கொள்வாரில்லை” என்றார் வள்ளலார் அவர்கள். ஆனால் மகரிஷி அவர்களோ, வடலூர் மேட்டுக் குப்பத்தில் ஓங்கார மண்டப திறப்பு விழாவில்(05-02-1985) ஆற்றிய உரையில் முடிவில் கூறியது “எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாக உள்ள, சேர வேண்டிய இடமாக, கடைத்தேற வேண்டும் என்ற எண்ணத்தோடு ”கடைவிரித்தேன்” என்று சொன்னார் வள்ளலார் அவர்கள். ஆனால் கடையை மூடிவிட்டாரா? இல்லை. திறந்தே வைத்தார். இன்றும் அது திறந்தே உள்ளது.” என்றார். அதற்கு சாட்சியாகக் அவ்விழாவில் குழுமியிருந்த அன்பர்களே எனக் கருதி, ”அப்படி இல்லையானால் இவ்வளவு பேர் கூடி அனுபவிக்க முடியாது.” என்று அன்று குழுமியிருந்த அன்பர்களிடமே கூறினார் மகரிஷி அவர்கள்.
    மேலும் மகரிஷி அவர்கள் அன்று கூறியதாவது:– “

    விரித்தது, விரித்ததுதான்.  அவரவர்கள் வேண்டும் அளவுக்கு அள்ளிக் கொண்டு போகலாம். விரித்தது அத்தனையும்* செய்யுட்களாக வந்துவிட்டன. ஒவ்வொரு செய்யுளிலும் வரக்கூடிய ஒரு உண்மைப் பொருள், இறைவனே நேரடியாக எடுத்துக் காட்டியதை, உணர்ந்தது உணர்ந்தவாறு கூறுகின்றார் வள்ளலார்.இதைச் சாதாரண வார்த்தைகளில் கூறும்போது அது விளங்காது. ஆனால் அது அனுபவத்திலே அனுபவித்தவர்கள் கூறும்போது அந்த ஒளிக்கே ஓரு ஆற்றல் உண்டு”

    *திருஅருட்பா

    ஆகவே தெய்வீகப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், நாம் இந்த தைப்பூசத் திருநாள்–வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட நாளில் அருளை வேண்டி அருட்பிரகாச வள்ளலாராகிய அருட்தாத்தாவை வணங்கி நிற்போம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்) அருட்பிரகாசவள்ளலார் அவர்களிடம் இறைமையை வேண்டி இறைஞ்சுகின்ற மடலை வரைவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • FFC – 156-வினா விடை 8

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    வினா விடை 8

    FFC – 156

    20-01-2016–புதன்

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 120
    (24-10-2015—சனி)

    முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.                   …ஸ்பானியப் பழமொழி.

    பயிற்சி—
    1) இப்பழமொழி எச்சரிப்பது என்ன?
    2) நம்மை ஏற்கனவே இது பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எச்சரித்திருப்பது என்ன?
    3) எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன?

    விடை:-

    வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பே ஆகும். அனுபவங்கள் என்பது மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்களாகும். இந்த ஸ்பானியப் பழமொழியின் வாயிலாக வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள பழக்கங்களின் தன்மையைப் பற்றி அறிய இருக்கிறோம். பழக்கங்கள் பற்றி … ஸ்பானியப் பழமொழி இரண்டு உவமானங்களைக் கொண்டு புரியவைக்க விரும்புவது என்ன? சாதாரணமாக தெரியாத ஒன்று, தெரிந்த ஒன்றுடன் உவமானம் காட்டி விளக்கப்படுகின்றது. ஆனால் இரண்டு உவமானங்கள் காட்டப்பட்டுள்ளன இங்கே. எனவே இப்பழமொழி சொல்கின்ற அறிவுரை மிக முக்கியமானது எனத் தெரிகின்றது. ஏனெனில் பழக்கங்களின் இரு நிலைகளை அறிவுறுத்தி எச்சரிக்க வேண்டியிருப்பதால், வலிமையற்ற சிலந்தி வலையையும், வலிமையில் அதற்கு நேர் எதிரான தேர்வடத்தையும் உவமானங்களாக சொல்ல வேண்டியுள்ளது.
    முதலில் பழக்கம்(Habit) என்பது என்ன என்று பார்ப்போம். பொதுவாக எந்த ஒன்றிலும் திறமை பெற அதனை முதல் முறையிலேயே செய்து அதில் திறமை பெறமுடியாது. பலமுறை செய்துதான் திறமை அடையமுடியும். ஆர்வத்திற்கேற்ப தொடர்ந்து பலமுறை செய்யப்படுவதும் உண்டு. இங்கேதான் பழக்கம் உள்ளே நுழைகின்றது. இந்த பழக்கத்தின் இருநிலைகளை பற்றி ஸ்பானியப் பழமொழி எச்சரிக்கின்றது.
    ‘எந்த ஒன்று’ நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அது தீயதாக இருந்தால் எச்சரிக்கை வேண்டும். அதனை ஆரம்பிக்கவே கூடாது. நல்லது, தீயது என்பது அந்த ஒன்றை ஆரம்பிக்கும் முன் எவ்வாறு முடிவு செய்வது? அதுதான் ஆறாம் அறிவின் சிறப்பாயிற்றே!

    1) ஒன்று, ‘மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்’ என்பதால் மூத்தோர்கள் ஏற்கனவே சொல்லியுள்ளதை மதித்து, கவனத்தில் கொண்டு நடப்பதனை வழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.
    2) திருவள்ளுவர் கூறுவதுபோல் பெரியோரை துணை கொள்ளல் வேண்டும்.
    3) புத்தர் கூறுவதுபோல் எப்படி பிணத்தை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல் கடல் தள்ளி கரையோரம் தள்ளிவிடுகின்றதோ அதுபோல் தீயநட்பை தள்ளிவிடவேண்டும்.
    4) ஆதிசங்கரர் பஜகோவிந்த்தில் அறிவுறுத்துவதுபோல் சத்சங்கத்தில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
    5) தினந்தோறும் அறிஞர்களின் அறவுரைகளை தாங்கிய நன்னூல்களை வாசிக்க வேண்டும்.
    6) விழிப்புணர்வை வளர்த்து அதனை அயராத விழிப்புணர்வாக்கிக் கொள்ள வேண்டும்.
    7) அறிவினரோடு சேர்வதில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
    8) அறிவினர்களை கனவிலும், நனவிலும் கண்டு இன்பம் காணப் பழகிக் கொள்ள வேண்டும்.
    9) நேரிடையாக அறிவினரின் தொடர்பு கிடைக்கவில்லை எனில் அவர்கள் அருளிய நூல்கள் வாயிலாக அவர்களுடன் தொடர்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இராமலிங்க வள்ளலாரைத் தவிர மற்ற அருளாளர்களான தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகியவா்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யுக்தி நாம் அறியாததா என்ன?
    ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்கின்றது தமிழ்ப் பழமொழி ஒன்று. ஏனெனில் பழக்கம் ஆரம்பத்தில் சிலந்தி வலைபோல் வலியமையற்று இருக்கும். அதனால் பழக்கம் தீயபழக்கமாக இருந்தால் அதனை அழித்துவிடுவது எளிது. ஆனால் பழக்கங்கள் நாளாக நாளாக வழக்கமாகி அது வலிமையுற்று தேர்வடமாக ஆகிவிடும் என்கிறது ஸ்பானியப் பழமொழி. சிலந்தி வலையை ஒரு சுண்டு விரலாலேயே அழித்துவிடலாம் ஆனால் தேரை இழுக்கும் கயிறு(தேர்வடம்) எவ்வளவு வலிமையாக இருக்கும். அதை இரண்டு கைகளால் அறுக்க முடியுமா?

    பழக்கம் என்பது என்ன? எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது கருமையத்தில் பதிகின்றது. இன்று ஒரு செயல் முதல் முறையாக செய்யப்படுகின்றது. அது இயற்கையின்/இறையின் அருமையான, மிக, மிகச்சிறந்த பதிவுசெய்யும் ஏற்பாடான(Excellent Recording System) கருமையத்தில் பதிவு செய்யப்படுகின்றது. நாளை அச்செயல் மீண்டும் இரண்டாவது முறையாக செய்யப்படுகின்றது. இதற்கிடையில் அச்செயலின் பதிவு, செயல் செய்யாத போதும் எண்ணங்களாக வந்து அச்செயலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும், அச்செயலை செய்ய ஆர்வத்தை தூண்டுகின்றது.
    இவ்வாறு அந்த ஒரு செயல் பலநாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள், பல வருடங்கள் ரசித்து, ருசித்து, ஈடுபாட்டுடன் செய்யப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் அச்செயல் பதிவு, பதிவு மேல் பதிந்து, பதிந்து அழுத்தம் பெறுகின்றது. அந்த ஒன்று நல்ல செயலாக இருந்தால் வரவேற்கத்தக்கது, ஆனால்

    அந்த ஒன்று தீயதாக இருந்து, பிறகு நமக்கே தெரிந்து,
    அல்லது ‘அது தீயது’, என பெரியோர்களின் இணைப்பு ஏற்பட்டு அவர்கள் வழியாக
    விளக்கம் கிடைக்கப்பெற,
    இறை அருளால் ஏற்பாடு செய்யப்பட்டாலும்,
    அப்பழக்கத்திலிருந்து விடுபட போராட வேண்டியிருக்கும்.

    இருந்தாலும் அத்தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு விளக்க வழியே வாழ்ந்து வெற்றிகண்டவர்களும் உண்டு. ஆனால் கடுமையாக தொடர் விடாமுயற்சி செய்ய வேண்டும் அதற்கு நாம் இந்த சத்சங்கத்தில்(Click here) ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’– என்கின்ற தலைப்பில் 27-05-2015—புதன்று சிந்திக்க ஆரம்பித்து 17-06-2015—புதனன்று (FFC – 86 — FFC-92) சிந்தனையை விரிவாக முடித்திருக்கிறோம். அதில் கருப்பொருளாக அறிஞர் ரூஸோ அவர்களின் “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கின்ற அமுத மொழியை எடுத்துக் கொண்டோம். அது பெட்டகத்தில்தான் உள்ளது. அதனை மீண்டும் பெட்டகத்திலிருந்து எடுத்து வாசித்துப்பார்க்கலாம்.

    நம்முடைய குருதேவர் அவர்கள் “பழக்கத்தி்ற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். இவ்வாறு மனிதனின் எதார்த்த நிலையைப்பற்றி கூறினாலும் பல்லாயிரம் பிறவிகளில் பழகிக் கொண்ட பழிச்செயல்பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே கருமையத்தூய்மையால் செயலிழக்கச் செய்யலாம் எனவும் உறுதி அளிக்கின்றார். அதற்காக, .இயற்கை/இறை கருணையோடு வடிவமைத்துக் கொடுத்ததே இறையுணர் பாதையிலே விழிப்புடனே வாழ்வதற்கான அகத்தவம், அகத்தாய்வு ஆகியவற்றைக் கொண்ட தெய்வீகப்பயிற்சியாகிய மனவளக்கலை என்கிறார்.

    அடுத்த வினாவான ‘எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன? என்பதற்கு வருவோம்.

    ஏற்கனவே சத்சங்கத்தில் (Click here) அமுத மொழிகள் 86 இல் இதுபற்றி 27-06-2015 அன்று சிந்தித்திருக்கிறோம். அதனை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். அதில் இரண்டு அறிஞர்களின் அமுத மொழிகளை எடுத்துக்கொண்டோம்.

    “நல்ல குழந்தைகளாக உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
    பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.
    ……. ஆர்னால்ட் பென்னட்.

    “பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.“
    ……எம் கோர்க்கி.
    அதில் பயிற்சிக்காக கேட்கப்பட்ட கேள்விகளாவன.
    பயிற்சி— 1) இவ்விரண்டு அறிஞர்கள் ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு உதவக்கூடியக் கலை எது?
    2) எப்போது அக்கலையை பயில ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்?
    3) குழந்தைகளின் முதல் ஆசிரியர் யார்?

    ஆகவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு முன், பத்து வருடங்களாக பண்பேற்றத்தை கொடுக்கக் கூடிய மனவளக்கலை பயிற்சியினை பயின்று செயல்படுத்திக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது. மற்றும் அதுவே ஞானபரம்பரை உருவாவதை ஏற்படுத்தும். இது குழந்தை பெறுவதற்கு முன் செய்ய வேண்டியது. பெற்றோர்களே முதல் ஆசிரியர் என்பதால் பெற்றோர்கள் ஆவதற்கு முன்னரே வாழ்வியல் கற்று, பின்பற்றுகின்ற மனவளக்கலைஞர்கள்–பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்துவர். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்.

    அறிவிப்பு—

     வாழ்க வளமுடன்.

    23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள்.   வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.

    மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்)  வள்ளலார் அவர்களிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • FFC – 155-வினா விடை 7

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    வினா விடை 7

    FFC – 155

    17-01-2016–ஞாயிறு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 119
    (23-10-2015—வெள்ளி)

    “செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

     

    விடை:-

    செழிப்பான வாழ்விற்கு செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தும், அவசியம் என வாழ்வியல் அறிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். எல்லோருமே வாழ்வு செழிப்பானதாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர். அதற்கு வேண்டிய செயல்களை செய்துதான் செழிப்பான வாழ்வு வாழமுடியும். அதாவது மகரிஷி அவர்கள் கூறுவதுபோல். ‘செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தையும் வாழ்வில் கொண்டு வந்தால்தான் வாழ்வு செழிப்பானதாக அமையும். எனவே ஐந்தைப்பற்றியும் விரிவாக அறிய வேண்டியுள்ளதால் அவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். எனவே இன்று சீர்திருத்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். ஐந்தில் செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சிக்னம் ஆகிய நான்கைப் பற்றியும் தனித்தனியாக வேறொரு நாள் அறியலாம்.
    செழிப்பு என்பது வளமுடன் காணப்படும் நிலை; வளத்துடனும், வளர்ச்சியுடனும் அமைந்த நிலை. வாழ்வு என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட கால அனுபவங்கள். சீர்திருத்தம் செழிப்பான வாழ்க்கையை அளிக்கவல்லது என்றால் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நடைபெறும் அனுபவங்கள் வளத்துடனும், வளர்ச்சியுடனும் இருக்கும் என்று பொருளாகின்றது. அதாவது வாழ்க்கை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.
    அப்படியானால் சீர்திருத்தம் என்பது என்ன? சீர்திருத்தம் என்பது வாழ்வின் இனிமைக்கு வேண்டிய தகுந்த திருத்தங்களை செய்து கொள்வது. ‘சீர்திருத்தம்’ என்கின்ற வார்த்தை இரண்டு சொற்களைக் கொண்டது. ஒன்று ‘சீர்’. மற்றொன்று ‘திருத்தம்’. சீர் என்கின்ற சொல்லுக்கு ஒழுங்கு என்று பொருள். எனவே ஒழுங்குபடுத்துவதற்காக(சீர்) செய்யும் திருத்தம் சீர்திருத்தம். சீர்படுத்துவதற்காக செய்யும் திருத்தம் சீர்திருத்தம் எனப்படுகின்றது.
    நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முறையிலா (way of living) மனித குலம் இப்போது வாழ்ந்து வருகின்றது? இல்லையே விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்ப இப்போது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லையா? அவ்வப்போது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. விஞ்ஞனாம் என்பது .என்ன? இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றிக் கொள்ளும் கலை விஞ்ஞானம். இயற்கையில் மறைந்துள்ள வளங்களை(ஆற்றல்களை) கண்டுபிடித்து அதனை வாழ்வின் வளமாக மாற்றிக் கொடுக்கின்றது விஞ்ஞானம். அவ்வப்போது அவற்றை மனிதகுலம் அனுபவித்து வருகின்றது. புலன்களின் திறமையை விஞ்ஞானத்தால் அதிகரித்துக் கொள்கின்றது. உதாரணத்திற்கு, ஆரம்பத்தில், மனிதன் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதென்றால், அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நடந்தேதான் சென்றான். பிறகு மாட்டு வண்டியில் சென்றான். பிறகு மிதி வண்டியில் சென்றான். பிறகு வாகனங்களில் சென்றான். அதுபோல் அந்தந்த காலத்தில் ஒரு பழக்க வழக்கம் அறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அது அந்த காலத்தில் பொருந்தியிருந்திருக்கும், அதுவே எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆகவே பழைய பழக்க வழக்கம் இக்காலத்திற்கு பொருந்தி வரவில்லை எனில் அதனை யாருக்கும் துன்பம் தராத வகையில் ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் அதுதான் சீர்திருத்தம் எனப்படுகின்றது.

    சீர்திருத்தம் பற்றி சீர்திருத்தச் செம்மல் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிவோம். ஒன்பது பாடல்களில் சீர்திருத்தம் என்பதற்கு ஒரு பகுதியே ஒதுக்கி அதில் சீர்திருத்தம் என்பது என்ன, சீர்திருத்தத்தின் அவசியம் பற்றியும் விளக்கியுள்ளார். அவைகளாவன:

    1) சீர்திருத்தத்திற்கு முறை,
    2) சன்மார்க்க சங்கம் (03-07-1992),
    3) 15.09.1992 அன்று சீர்திருத்தம் சீர்பெருமை என்றும்,
    4) வயது வந்தவர்களிடம் சீர்திருத்தம் அரிது என்பது எதார்த்தம் என்றும்,
    5) ‘துயர்கலைய தூய்மைபெற நலம் காண்பீரே’ என்றும்,
    6) பண்பாடு என்பது என்ன என்றும்,
    7) விழிப்பு நிலை சீவன்முக்தி என்றும்,
    8) பண்பில் உயர்ந்த நாடு எது என்றும்,
    9) எந்த ஒர் மனவளக்கலை மூலம் பழிச்செயல் பதிவுகள் போகுமோ, அதனை அகத்தவம் என்று

    இவ்வாறாக ஒன்பது தலைப்புகளில் சீர்திருத்தம் பற்றி விளக்கியுள்ளார். (ஞ.க. பாடல் எண்642—650) . அவற்றில்  இரண்டு பாடல்களை மட்டும் இப்போது அறிவோம்.

    FFC-155-சீர்திருத்தத்திற்கு முறை-விவிடை

    சீர்திருத்தம் வாழ்வின் செழிப்பை அளிக்க வல்லது என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிடாமல், அந்த சீர்திருத்தம் என்பது என்ன, அந்த சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கே, சீர்திருத்த முறையைக் கூறுகிறார். என்னே அவரின் ஞானநிலை! என்னே அவரின் சமுதாய அக்கறை!

    ஏன் சீர்திருத்தங்களை சொல்லுகிறேன் என்று மற்றுமொரு பாடலில் 05.04.1988 அன்று கூறியுள்ளதையும் அறிவோம்.

    FFC-155-எந்எந்தக் காலத்தோ

    மற்ற பாடல்களை நேரம் கிடைக்கும்போது, வீட்டு அலமாரியில் அலங்கரித்துள்ள மகரிஷி அவர்களின் மூல நூல்களில் ஒன்றான ஞானக்களஞ்சியம்—1 இல் உள்ள அப்பாடல்களை கட்டாயம் ஓரிரு முறை வாசித்து இன்புறலாம். முடிந்தவரை மனனம் செய்யலாம். இதுவே அறிவினரை கனவிலும், நனவிலும் கண்டு இன்புறுவதாகும். இதன் வாயிலாக அவ்வையாரை நினைவு கூர்கிறோம்
    வேறொரு சமயத்தில் சீர்திருத்தம் பற்றி இன்னும் சற்று விரிவாக அறியலாம். கட்டுரை நீண்டு கொண்டே போவதால், இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொண்டு. அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-01-2016) ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்’ என்கின்றஸ்பானியப் பழமொழியில் உள்ள பொருளை அறிந்து கொள்வோம்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 154-வினா விடை 6

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    வினா விடை 6

     FFC – 154

    13-01-2016–புதன்

    சிந்திக்க வினாக்கள்-117
    (19-10-2015 – திங்கள்)

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!

    சொல்லாத முன் இருந்த ——— ப்போல
    சொரூபமெல்லாம் பூரிக்குமுன் ——– .

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விடை:-

     

    குறிப்பு:-

    சிந்திக்க வினாக்கள் பகுதியில், நேரடி வினாவாக மட்டும் இல்லாமல் , ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சற்று அறிந்து கொள்ளலாமே.

    பெரும்பாலும் ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற பகுதியில், உள்ள வினாக்கள் மகரிஷி அவர்களின் சிந்தனாப் பள்ளியிலிருந்துதான் கேட்கப்படுகின்றன. மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் மாணவர்களாக இருப்பவர்கள் அவருடைய வரையறைகள்(definitions) மற்றும் பொன்மொழிகளை நினைவில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அவற்றை நினைவில் கொள்வதோ அல்லது சொல்லிப்பார்ப்பதோ மனதிற்கு இதமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். மேலும் மனவளக்கலைஞர்கள் இறைத்தூதுவர்களாக இருப்பதால் அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பில் உள்ளதால் மகரிஷி அவர்களின் வரையறைகள், மற்றும் பொன் மொழிகளை நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியமாகின்றது.
    உதாரணத்திற்கு மனதிற்கான வரையறை — ‘உயிரின் படர்க்கை நிலையே மனம்’ இதனை அவ்வாறே நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். ‘மாறாக உயிரிலிருந்து வெளிவருவது மனம்’ என்று சொல்வது மனதின் சரியான வரையறை கிடையாது. ஏனெனில் ‘படர்க்கை நிலை’ என்பதில் பொருள் மிகுந்துள்ளது. எனவே படர்க்கை நிலை என்று கூறும்போதே மனதைப் பற்றிய விளக்கம் மனதில் படம்போட்டுக் காட்டும். ஏனெனில் Definition is to be said as defined by the Inventor. Who is the inventor and why is he called as inventor? MAHARISHI is the Inventor of Mind, which so far has no definition. Definitions cannot be said by using one’s words or jumbling the words found in the definition given by the Inventor. விஞ்ஞானத்திலும் சரி கணிதத்திலும் சரி வரையறைகள் அவை உருவாக்கப்பட்ட சொற்களாலேயே, சொற்களை இடம் மாற்றி அமைக்காமலும் கூறப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டுதான் ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற முறை சிந்திக்க வினாக்கள் பகுதியில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இப்போது விடைக்கு வருவோம்.

    சொல்லாத முன் இருந்த சொல்லை ப்போல

    சொரூபமெல்லாம் பூரிக்குமுன்    அரூபம்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்போது மேலே குறிப்பில் சொல்லப்பட்டுள்ளதற்கும், பூர்த்தி செய்த பிறகு வாசிப்பதில் வரும் ஆனந்தத்திற்கும் உள்ள தொடர்பினை உணர்ந்து கொள்ள வேண்டும்.
    இப்பிரபஞ்சமே தோன்றா முன்னர், என்னவாக இருந்திருக்கும் இயற்கையின் நிலை என்பதனை உவமானத்துடன் கூறுகின்றது இந்த அமுதமொழி.. உருவம் ஒன்றிருந்தால் அது இல்லாத நிலையும் உண்டு. அதுபோல் துகள்களால் உருவாவதற்கு(manifested) முன்னர் இருந்த நிலை unmanifested. Unmanifested என்பது அரூபமாகத்தான் இருக்கும். ஒன்றுமில்லாதது இல்லை. இருக்கும் என்றாலே அது இருக்கின்றது என்றுதானே பொருளாகின்றது.
    ஒரு சொல்லை சொல்லும்போது அது ஒலியாக காதுகளில் ஒலிக்கின்றது. அதற்கு முன்னர் அது என்னவாக இருந்தது? Unmanifested காந்தமாக இருந்தது. ஒரு சொல்லை சொல்லும்போது அரூபமாக இருந்து காந்தம் சொல்லின் ஒலியாக வருகின்றது. அது போல் உருவங்கள் தோன்றாமுன்னர் அதன் மூலநிலை அரூபம். இந்த முதல் நிலை உண்மை எந்த அளவிற்கு ஐயமின்றி விளங்கிக் கொள்ளப்படுகின்றதோ அந்த அளவிற்கு வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் நாளடைவில் மிக மிகத் தெளிவாகிவிடும்.

    சிந்திக்க வினாக்கள்-118
    (22-10-2015 – வியாழன்)

    (அ) நிறை மனம் என்றால் என்ன?
    (ஆ) அது எப்போது வரும்?

    விடை:-

    மனமோ அரூபம். உருவமில்லாதது. உருவமில்லாததில் எதனைக் கொண்டு எவ்வாறு நிரப்புவது?
    உருவமில்லாததை உருவமில்லாததைக் கொண்டுதான் நிரப்ப முடியும் அல்லவா!

    இயற்கையின்/இறையின் ஆதிநிலையே அறிவாகவும், மனமாகவும் இருப்பதால் அதனைக் கொண்டு நிரப்புவதுதான் எளிதாக இருக்க முடியும். இந்த நுட்பத்தை கைக் கொள்ளும் பயிற்சியினை மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவர். மனதை துரீயாதீத தவத்தில் கொண்டு நிறுத்தி நிறுத்தி பழகப்பழக மனம் அதோடு ஒன்றி இரண்டறக்கலந்துவிடும் நுட்பம் தான் அது.

    இவ்வாறு பழக்கப்பட்ட மனம் தான் நிறை மனம் எனக் கொள்ளப்படும்.

    இஃதல்லாது நீள்சக்தியுடைய மனம்(mind is an elastic bag) எல்லையுடைய, தேவைக்கு மிஞ்சிய வேறு உலகியல் பொருட்களை போட்டுக் கொண்டே இருந்தால் மனம் நிறைவு பெறாது. மனதின் ஆசைகள் பெருகிக் கொண்டேதான் போகும். ஆசைகள் பெருகுவது என்பது, அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வழிகளில் அறிவைக் குறைவுடையதாக்கிக் கொள்கின்ற செயலாகும். இறையே நமக்குள்ளே அகமாக இருந்தும் அதனை அறியமுடியாமல், இரு பொருட்கள் தள்ளி இருந்தால் தூரம் வந்து விடுவதுபோல் அதற்கும் நமக்கும் உள்ள தூரத்தை அதிகரித்துக் கொண்டே போவது விந்தையிலும் விந்தையாகத்தான் இருக்கும். இதுவரை விந்தையாக இருந்துவந்த இறை மிக மிக எளிதான(Truth is Simple) ஒன்றாக விளங்கியபிறகு அதனை நம்முள் வைத்தும்; ஏற்றியும்; போற்றியும், வர, நம்மை அவன் இணைத்துக் கொள்ளும் அருள் வாய்ப்பை பெறுவோம். இதற்கு திருவருளும், நம் நேரிடை குருஉள்பட, அறிவை அறிந்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. வாழ்க திருவேதாத்திரியம் வளர்க திருவேதாத்திரியம்.

    மகரிஷி அவர்களின் நிறை மனதை நாம் அவர் கூற அறிவோம்.

    FFC-154-நிறை உணர்வு

    இந்நிலையை தனது எழுபத்தைந்தாவது வயதில், அதாவது 1986 இல் (World Peace Year-1) அவர் கூறினாலும்,

    அவரை முடிவில்லா தெய்வீக தொடர் ஒட்டத்தில்(Endless Divine Relay Race),

    இப்பூவுலகம் உய்வதற்கு, வழிகாட்டி, அறிவொளியை வீசச்செய்துள்ள அறிவுப்பகலவனாக அனுப்பிவைத்த இயற்கை/இறை

    இருபது வருடங்கள் கழித்தே அவரின் வயது மூப்பின் காரணமாகவும்,

    மனவளக்கலை-இறைத்தூதுவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க எண்ணி,

    அவரை மீண்டும் அவரின் 95 வது வயதில் தன்னிடம் இணைத்துக் கொண்டது.

    அந்த இருபது ஆண்டுகளில் இயற்கை/இறை நிர்குணமானது என்று கருதப்பட்டாலும், ‘இச்சை இன்றி ஏது இப்பிரபஞ்சம்’ என்பதுபோல் தன்னுடைய நோக்கமான ‘தன்னைப் பற்றி தன் மக்களுக்கு விரைவில் விளங்க வைப்பதற்கு’ மனவளக்கலை மன்றங்களின் அதீத வளர்ச்சியின் வாயிலாக சாதித்துக் கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    வாழ்க மனவளக்கலை மன்றங்கள்.     வளர்க மனவளக்கலை மன்றங்கள்.

    வாழ்க வேதாத்திரியம்.   வளர்க வேதாத்திரியம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                  வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு:-

    வாழ்க வளமுடன்.

        அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்

    (17-01-2016 ஞாயிறு)

    1)   சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,

     

    2)   ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற …ஸ்பானியப் பழமொழியின் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • FFC – 153-வினா விடை – 5

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

                                                                                 வினா விடை – 5

                                                                                                             FFC – 153

    10-01-2016–ஞாயிறு

    சிந்திக்க வினாக்கள்-112
    (01-10-2015 – வியாழன்)

    1) செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
    2) செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்.

    இவ்விரு கூற்றுக்களில் எது சரியாக இருக்கும், ஏன்?

    விடை:-

    பாவம் என்பது, தீமையைத் தரும் ‘செயல். செயலுக்கு விளைவு உண்டு’ என்பது நியதியாக இருப்பதால் பாவச் செயலுக்கு விளைவாக தண்டனை வருகின்றது. ஆகவே ‘செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்’ என்றால் மனிதன் செய்கின்ற பாவச் செயலுக்கு தண்டனை யாரோ ஒருவர் தனியாக இருந்து கொண்டு வழங்குவதாக பொருள்படுகின்றது.
    அவ்வாறு கூறுவதனைவிட ‘செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்’ என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் செயலுடன் விளைவு தொக்கி நிற்கின்றது. அதனால்தான் ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்கின்றது திருவேதாத்திரியம்.


     சிந்திக்க வினாக்கள்-113
    (05-10-2015 – திங்கள்)

    (அ) எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகின்றது?
    (ஆ) இயற்கையின் சிகரமாகிய எண்ணத்தைக் கொண்ட மனிதகுலம் எவ்வாறு இருக்க வேண்டும்? ஏன்  அல்லலுறுகின்றது?

    விடை:-

    அ) இயற்கையின் ஆதிநிலை/ஆரம்ப நிலை எது? இயற்கையின் ஆதிநிலை வெட்டவெளி, இறைவெளி. இறை வெளி பேரறிவையுடையது. அந்த பேரறிவுதான் மனிதனிடம் ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எண்ணம் என்பது ஆறாம் அறிவு தான் எண்ணுகின்றது.
    சிகரம் என்பது என்ன? மலையின் உயர்ந்த பகுதியினை சிகரம் என்போம். இந்தப் பொருளை வைத்துக் கொண்டு ஒன்றின் உயர்ந்த நிலையான சிறப்பையோ, உன்னதத்தையோ குறிப்பதற்கு சிகரம் என்போம்.
    ஆகவே இயற்கையாகிய பேரறிவே ஆறாம் அறிவாக உள்ளதால், ஆறாம் அறிவு எண்ணுகின்ற எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது.
    ஆ) இயற்கையே/இறையே மனிதனாக தன்மாற்றமடைந்து ஆறாம் அறிவாக வந்துள்ள மனிதனின் எண்ணம் என்பது வேறுயாருடையதுமல்ல. எண்ணம் என்பது இயற்கையே/இறையே எண்ணுவதுதான். அவ்வாறிருக்கும்போது இயற்கையோ/இறையோ எதனை எண்ணும்? நல்லதையேதான் எண்ணும். ஆனால் மனிதன் என்னவெல்லாம் எண்ணுகிறான்?! அல்லலுறவேண்டிய தீய எண்ணங்களையும் எண்ணுகிறான். எனவே செயல் விளைவுத் தத்துவப்படி தீய எண்ணங்களுக்கு விளைவாக துன்பம் வருகின்றது. . இறையருள் இழக்கப்படுகின்றது, எனவே மனிதன் அல்லலுறுகிறான்.
    தெய்வமே மனிதனாகியும், அந்த தன்மாற்றத்தில் விலங்கினங்களாகி மனிதனாக வந்துள்ளதால், மனித ஆன்மா அதனை நீக்க பலபிறவிகளாக முயற்சி செய்யப்படாத, அழுத்தம் பெற்றுள்ள விலங்கினப்பண்பு வலிமையாக உள்ளது. ஆகவே மனிதன் முழுமையாக தெய்வீகத்தை வெளிப்படுத்த முடிவதில்லை. இதனையே சுவாமி விவேகானந்தர் மனிதன் என்பவன், விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய மூன்றினையும் கொண்ட கலவை என்கிறார்.
    ஆகவேதான் மனவளக்கலையில் முதல் தற்சோதனை—செயல்முறை பாடமாக ‘எண்ணம் ஆராய்தல் வைக்கப்பட்டுள்ளது.
    மகான் மகா கவி பாரதியார் ‘எண்ணிய முடிதல் வேண்டும், அதே நேரத்தில் நல்லவை எண்ணுதல் வேண்டும்’ எனவும் இறைவியை வேண்டச் சொல்கிறார்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 113
    (02-10-2015—வெள்ளி)

    குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
    ….. ஸ்ரீ ரமண மகரிஷி

    பயிற்சி—
    1) “உனக்குள் இருக்கும் குரு என்பவர்” என்பவர் யார்?
    2) இக்கூற்றின் வாயிலாக பகவான் ரமணர் என்ன கூறுகிறார்?

    விடை:-

    1) வேதாத்திரிய இறையியல் என்ன கூறுகின்றது? அந்த இறையியல் அறிவைப்பற்றிய புதிய அறிவியலை Science of Consciousness) உருவாக்கியுள்ளது. வேதாத்திரிய—இறையியல்–அறிவியல், இறை எது என்றும், இறையேதான் உயிராகவும், அறிவாகவும், ஆன்மாவாகவும் உள்ளது என்கின்றது. அறிவு மனமாக இயங்குகின்றது. எவ்வாறு இயங்குகின்றது? உயிரின் படர்க்கை நிலையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது மனம் காந்த அலையாக உள்ளது.
    பொதுவாக அலை என்றால் அதற்கு இரு முனைகள் உண்டு. எங்கிருந்து அலை புறப்படுகின்றதோ அந்த முனை ஒன்று, மற்றொன்று எங்கு சென்றடைகிறதோ அது ஒரு முனை. உயிரின் படர்க்கை நிலையாகவும், மனம் காந்த அலையாக உள்ளதால், மனஅலைக்கும் இருமுனைகள் உண்டு. மனம் கருமையப் பதிவுகளிலிருந்து புறப்படுவதால் அது ஒரு முனையாகவும், எங்கு சென்று முடிவடைகின்றதோ/எந்த புறப்பொருட்களோடு தொடர்பு கொள்கின்றதோ அது ஒரு முனை.
    இந்த இரண்டு முனைகளில் புறப்படுகின்ற முனையை ‘மறுமுனை’ என்கின்றார் மகரிஷி அவர்கள். அந்த மறுமுனை புறப்படுகின்ற இடம்தான் தெய்வமே வீற்றிருக்கும் அகம். ஆகவே மனதின் மறுமுனை தெய்வம் என்கிறார் மகரிஷி அவர்கள்(The other end of mind is God). எனவே அகத்தே–உள்ளே, மனிதனுக்குள்ளும் இருப்பது தெய்வமேதான். அகத்தே தெய்வம் இருக்க, அகத்தை தூய்மை செய்து வர வர அதுவே உள்ளொளியாகி ஆன்மஒளியை வீசி வழிகாட்ட ஆரம்பிக்கின்றது. திக்குத் தெரிய இருண்ட காட்டில் வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவருக்கு இருளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி மெல்ல மெல்ல வழி காட்டுகின்றது. அப்படியானால் வழிகாட்டுபவருக்கு என்ன பெயர்? என்ன பெயர் வைக்கலாம்? குரு என்றுதான் பெயர்.
    அறிவை அறிந்த அருளாரிடம் தீட்சை பெறும்போது, உயிரிலிருந்து புறத்தே ஓடிக்கொண்டிருக்கின்ற மனம் உயிர் மீதே வைக்கப்படுகின்றது அருளாரின் கருணைச்செயலால் மனம் உள்ளே திருப்பி விடப்படுகின்றது. எனவே இதனைத்தான் குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
    2) இக்கூற்றின் வாயிலாக தெய்வம் வீற்றிருக்கும் அகத்தை தூய்மை செய்து வரும்போது அகமாகிய தெய்வமே குருவாக வழிகாட்டிவரும் என்கிறார் பகவான் ஸ்ரீ ரமணர்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 114
    (03-10-2015—சனி)

    “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்”

    …. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) .இது எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?
    2) இந்த விதியைச் சுட்டிக்காட்டும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறவும்.

    விடை:-

    1) இயல்பூக்க நியதியின் கீழ் நடைபெறுகின்றது.
    2)
    குருவின் சேர்க்கை(15-08-1984)
    “எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்;
    இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்;
    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்,”
    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அவ்வையார் கூறும் ‘அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும், இனிது’ என்கின்ற எளிதான ஆன்மீகத் தொழில் நுட்பத்தை(Simple Spiritual Technique) அறிந்து அதனை பயன்படுத்த வேண்டும்.
    ஐயன் திருவள்ளுவர் ‘பெரியாரைத் துணைகோடல்’ என்கின்ற அதிகாரத்தில் பத்து வெவ்வேறு கோணங்களில் கூறியுள்ளதில், எது தனக்கு உகந்ததாக உள்ளதோ அதனைக் கண்டறிந்து அல்லது இயன்றால் எல்லாவற்றின் வழியாகவும், நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு திருவள்ளுவர் அவதரித்து 20 நூற்றாண்டுகள் கழிந்தும், திருவள்ளுவரையும் மானசீக குருவாக்கிக் கொண்டாரோ அதுபோல் அவருடைய சீடர்களாகிய நாமும் திருவள்ளுவரையும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு, ‘தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்––Inforamation. Confirmation. Transformation’ என்கின்ற தாரக மந்திரப்படி ஆட்சேபமில்லாது உறுதிபடுத்திய பிறகு, பின்வாங்காமல் பூரண முழுமனத்தோடு (in implicit obediience) தன்னை மாற்றிக் கொள்ள செயலில் இறங்க வேண்டும். இந்த ஆண்டு 2016 ஐ இறையுணர் ஆண்டாக மலரச்செய்வோம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading