இன்றைய விருந்து

  • FFc 307-வேதாத்திரியார் – ஓர் அகராதி-1/5

     

     


     

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

     

    வேதாத்திரியார் – ஓர் அகராதி-1/?

    FFC-307                                              

                                                                                                                                                                                               17-03-2022 –வியாழன்

     உலக சமய ஆண்டு 17-03-37

    maharishi lighting a new year lamp

     

    வாழ்க வளமுடன்!

         இன்று வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டும் முகத்தான் குழுமி உள்ளோம்.  எனவே இன்றைய அறிவிற்கு விருந்தாக எடுத்துக் கொண்ட தலைப்பு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பதாகும்.  இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். அன்பர்களே!

    மகரிஷியின் கும்பகோணம் நிகழ்ச்சி:

        பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கினில் புகுந்து அழுந்தி மனதைப் புண்ணாக்கிக் கொள்வதில் உள்ள அறிவியலை உணர்த்திய வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கா  புகழ் தேவை?!  அல்ல. அவர்  வகுத்த  உயர்புகழ் இலக்கணத்திற்கேற்ப அவரே வாழ்ந்தவராயிற்றே! அவரா புகழை எதிர்பார்ப்பார்?  அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவருக்கும் நமக்கும் ஏற்பட்ட புனித உறவில் நடந்த  ஒரு நிகழ்ச்சியினை நினைவு கொள்வோம்.  கும்பகோணத்தில் மூன்று நாட்கள் சிறப்புக் கூட்டம் நடத்தினார் மகரிஷி அவர்கள். அப்போது நிறைவு நாளன்று கூறியதை நினைவு கூர்வோம். ஆன்மிகத் துறையில் சீடர்கள் குருவிற்கு காணிக்கைக் கொடுப்பது வழக்கம். ஆனால் அவ்வாறாக மகரிஷி அவர்கள் குருகாணிக்கை ஏதும் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக அவர் சீடர்களை நோக்கி  “குருகாணிக்கையாக உங்களிடம் உள்ள  அறுகுணங்களை இன்றிலிருந்து என்னிடம் கொடுத்துவிடுங்கள்” என்று வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.    அது இப்போதும் பொருந்தும் அல்லவா?

    இயற்கை/இறை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? 

        மூத்தோர் சொல் வார்த்தை  அமிர்தம் என அவ்வைத்தாய் மொழிந்துள்ளதற்கேற்ப, மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கேட்டு, ஆராய்ந்த பிறகு திருத்த-மாற்றத்திற்கு(information, confirmation, transformation) முயன்று வெற்றி பெற வேண்டும் என்பதே மகரிஷி அவர்கள் எதிர்பார்ப்பது.  அவர்மட்டுமல்ல. இயற்கையே/இறையே அதைத்தான் எதிர்பார்த்து இருபதாம் நூற்றாண்டில் திருவேதாத்திரியத்தை அருளியுள்ளது.

    வான் காந்தத்தில் பரவவிட குழுமியிருக்கிறோம்:

        வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டுகிறோம்  என்று சொல்வதைவிட, வேதாத்திரியத்தின்  அருமை, பெருமை, அரும்பயன்களை உணர்ந்து கொண்டு அனுபவித்து வருவதற்கு மனிதஅறிவு அவரை வணங்கி கூறுகின்ற நன்றி வார்த்தைகளே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பது.அப்படியானால்  நாம் செலுத்தும் புகழாரம்  திருவேதாத்திரியத்திற்கே.  திருவேதாத்திரியத்தின் அருமை, பெருமைகள் சக நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த சமுதாயத்தின் 1590 கோடி(790×2=1590) காதுகளுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற அடிப்படை நோக்கத்தில் திருவேதாத்திரியத்திற்கு புகழார எண்ண அலைகளை  வான்காந்தக் களத்தில் பரவவிட  குழுமி இருக்கிறோம். ‘Fraction demands Totality supplies’ என்ற அடிப்படையில் தன்மாற்றம்/பரிணாமம்  நடைபெற்று வருவதால் அதனை நினைவில் கொண்டு உலகம் முழுவதும் திருவேதாத்திரியம் பரவ வேண்டும் என்கின்ற எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரவ விடுவோம்.  

    ஆனந்தத்தைத் தருகின்றது:

        எது ஆனந்தத்தைத் தருகின்றது?   ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று சொல்லக் கேட்பதற்கே மனதிற்கு  ஆனந்தத்தைத் தருகின்றது. எவ்வாறு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஓர் அகராதியாகத் திகழ்கின்றார் என்று ஆராய்ந்து அறியும்போது, நாம் அடைந்திருக்கும் மற்றும் இன்னும் அடைய இருக்கும் பயனை எண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது. எப்படி? பயன்கள் அடைகிறோம்; பயன்கள் அடைவதில் மகிழ்ச்சிதானே இருக்க முடியும்?

          என்ன பயன்கள்? ‘மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது’ என்று வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது. எவ்வாறு எல்லையில்லா மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் திருவேதாத்திரியம் காரணமாக உள்ளது என்பதனையும் அறிந்துகொள்ள வேண்டும். மகிழ்ச்சி மற்றும் பெருமை ஆகிய   சொற்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இருப்பினும் மகிழ்ச்சியும், பெருமையும் என்ன என்பதனை ஆழ்ந்து  சிந்தித்து அறிந்து கொள்வோம்.

    மகிழ்ச்சி என்பது என்ன?

         அனைவரும் அறிந்ததே!  மகிழ்ச்சி என்றால் இன்பம், உவகை, சந்தோஷம் என்று பொருள்.

    இன்பம் எப்போது ஏற்படும்?

         விரும்புகின்ற அல்லது மனதிற்கு நிறைவு தருகின்ற அனுபவத்தினால் மனதிற்கு ஏற்படுகின்ற இதமான உணர்வே இன்பம் என்பதாகும்.

         மேலும் மகிழ்ச்சி என்பது பணிவுடன் நன்றியைத் தெரிவிக்கும் போது கூறுகின்ற சொல் ஆகும்.  உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் கொள்வோம்.

    நன்றி தெரிவித்தல்:

         நூல் வெளியீட்டு விழா நடக்கின்றது. ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் பதிப்பகத்தார்.அப்போது பதிப்பகத்தார், ‘தங்கள் நூலை வெளியிடுவதில்  நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்’ என்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? இங்கே ‘மகிழ்ச்சி’ என்கின்ற சொல், பணிவுடன் நன்றியினை தெரிவிக்கப் பயன்படுகின்றது.

       தான்  எழுதிய  நூலை பதிப்பதற்கு இசைவு தந்தமையால், அந்த சிறந்த நூலை வெளியிடுவதில் தங்களுக்கு ஏற்படவிட இருக்கின்ற  உயர்வு கருதி, பதிப்பகத்தார் தங்களது உளமார்ந்த நன்றியினை  பணிவோடு தெரிவிப்பதற்கு,  ‘பெரும் மகிழ்ச்சி’ அடைகிறோம்’ என்று கூறும்போது மகிழ்ச்சி என்கின்ற சொல் பயன்படுகின்றது.

    நன்றி உணர்வே ஆகும்:

        ஏன் நன்றி உணர்வாகின்றது?  மாதா, பிதா செய்த புண்ணியத்தால், ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பதற்கேற்ப குருவை காண்பித்துக் கொடுக்கும் நிகழ்வே மறைந்து விட்ட  சூழலில் பிறந்த நாம்  வேதாத்திரி மகரிஷி அவர்களை தரிசித்து அவரை ஆழ்மனதுடன்  குருவாக ஏற்றுக்கொள்ளச் செய்த  இயற்கைக்கும்/இறைக்கும் தெரிவிக்கும் நன்றி உணர்வே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிப்பது. அடுத்ததாக பெருமை என்று கூறுவதற்கானக் காரணம் என்ன?

    பெருமை என்றால் என்ன?    

     பெருமை என்பதும்  மன உணர்வினை வெளிப்படுத்துகின்ற சொல்.

    உயர்ந்த நிலையினை அல்லது தகுதியினை அடைய இருக்கும்போதோ

    அல்லது அடைந்தபோதோ,

    அல்லது அதுபோன்று  வெற்றியினை அடைய இருக்கும்போதா

    அல்லது அடைந்தபோதோ,

    மனம் அடையும் இதமான உணர்வினை அனுபவிப்பதோ அல்லது நமக்கு நாமே தெரிவித்துக்கொள்வதோ   பெருமை எனக்கொள்ளப்படுகின்றது.

    அவ்வைத்தாயும் அறிஞர் திருவள்ளுவரும் மொழிவது என்ன?

    அவ்வைத்தாய்

    சான்றோர் இனத்திரு,                    (ஆத்திச்சூடி-44)

    சேரிடம் அறிந்து சேர்,                     (.. ” ….    49)

    செய்வனத்திருந்தச் செய்           ( …  ” …   50)

    நேர்பட ஒழுகு                                        ( …  ” …   72)

    புகழ்ந்தாரைப் போற்றி வாழ்   ( …  ” …  80)

    பெரியாரைத் துணைக்கொள் ( …  ” …  82)

    என மக்களுக்கு அறிவுரைக் கூறுகின்றாள்.

         திருவள்ளுவரோ ‘பெரியாரைத்துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்தையே ஒதுக்கி பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். இவ்வதிகாரம் அரசனுக்காக அருளியதுபோல் தோன்றினாலும் இது அனைவருக்குமே பொருந்தும்.  எப்படி?  அரசன் நாட்டை ஆள்கின்றவன்.  ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கின்றது.  வருங்கால வலிமையுள்ள சமுதாயத் தூண்களை(pillars of Society) உருவாக்குகின்ற பொறுப்பில், குடும்பத்தை நல்முறையில் நிர்வாகம் செய்ய கணவன், மனைவி தலைவன், தலைவியாக இருக்கின்றனர்.  எனவே அரசனுக்கு கூறும் அறிவுரை எல்லோருக்குமே அந்தந்த நிலையில் பொருந்தும்.

    ஏன் சான்றோர்களைத் துணைக் கொள்ள வேண்டும்?

           விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்துள்ள மனித இனம்  மனிதப்பண்பில் ஏற்றம் பெறுவது இன்ப வாழ்விற்கு நிச்சயமாக அவசியம். ஆகவே பண்பேற்றத்திற்கு  சான்றோர்களின் துணை அவசியம்.  எவ்வாறு சான்றோர்களின்  துணை பண்பேற்றத்திற்கு உதவுகின்றது என அறிந்துகொள்வோம்.  இயல்பூக்க நியதி அங்கும் செயல்படுகின்றது. அதாவது இயல்பூக்க நியதி கூறுவது யாதெனில்,  ‘எந்த  ஒரு பொருளை, எந்த ஒரு செயலை, எந்த ஒரு குணத்தை, எந்த ஒரு உயிரையும் அடிக்கடி ஒருவர் நினைந்து வர, வர  அப்பொருளின் தன்மையாக அவரது  ஆற்றல் அறிவினிலும், உடலினிலும் மாற்றம் காண்கின்ற பெருமையை அடையச்செய்யும் என்பதே.  அதேபோன்று அறிவினரைச் சேர்ந்திருப்பதும் இன்பம் என்றும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பது அதனைவிட இன்பம் என்றும் அவ்வைத்தாய் கூறியுள்ளதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.  ஒருவருக்கு பெருமை உணர்வு எப்போது ஏற்படும்?  சற்று முன்னர் ‘பெருமை’ என்கின்ற சொல்லுக்கான பொருள் கண்டோம்.  ஒருவர் உயர்ந்த நிலையினை, தகுதியினை அடைய இருக்கும் போது, அது இன்பமாகவும், அது பெருமைபடக்கூடிய உணர்வாகவும் அல்லவா இருக்கும்?  அதற்கேற்ப இன்பம்  ஏற்படும்.  ஆகவே .சான்றோர்களின்  உயர்ந்த நிலையை அறியும் போது, மனம் தனக்குள் பெருமை கொள்வது இயல்பு (தற்பெருமை கொள்வது தன்முனைப்பு போன்று ஆகாது இங்கு).  சார்ந்திருக்கின்ற சான்றோரின் உயர்ந்த நிலையை நினைக்க நினைக்க மனதிற்கு ஏற்படும் இதமான உணர்வும் பெருமைதான்.

    இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது உலக மக்கள் உய்ய மனவளக்கலை: 

    கடந்தது கடந்து போகட்டும்.  இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது,  

    இப்பூவுலக மக்கள் உய்வதற்கான நிரந்தர தீர்விற்காக(உலக சமாதானம்), திருவேதாத்திரியத்தை அருளுவதற்கு,

    இயற்கை/இறை அன்று(இருபதாம் நூற்றாண்டில்) வாழ்ந்த ஆன்மாக்களில்  ஒரு ஆன்மாவைத்  தேர்ந்தெடுத்த, பெருமைக்குரிய உத்தமர்  ஒருவரான

    வேதாத்திரியாரை குருநாதராக  அடைந்திருப்பதால்,

    ஏற்படுகின்ற நிறைவால் மனம் வளம் அடைந்து கொண்டு, முழுமையை நோக்கி அறிவு பயணித்துக்கொண்டிருப்பது   பெருமை கொள்ளக்கூடிய  நிகழ்வுதானே?!

    எனவேதான், நாம் அடைந்து கொண்டிருக்கும், இன்னும் முழுமையாக அடைய இருக்கின்ற பயன்களை எண்ணி, அவர் எவ்வாறு பயனடைய உதவியாக இருக்கின்றார் என்பதனை நன்றியோடு தெரிவிக்கும் முகத்தான்  ‘வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதியாகத் திகழ்கின்றார் என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:

         எதனால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை?  எல்லையில்லா பெருவெளியை நோக்கிய பயணத்தில் அடையும் மகிழ்ச்சியும் எல்லையில்லாமல் இருக்கும் என்பது உண்மைதானே? பேரறிவே ஆறாம் அறிவாகியும், பல லட்சம் ஆண்டுகளாகத் திக்குத் தெரியாத இருண்ட காட்டில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த நிலையில்  அறிவொளியைத் தந்து வழிகாட்டுகின்றது  திருவேதாத்திரியம்.

           எனவே பேரறிவு இதுவரை தனது பயணத்தில்/தன்மாற்றத்தில் ஆறாம் அறிவாகி, பல்லாயிரம் ஆண்டுகளாகியும், தெரிந்து கொள்ளாதிருந்த,  ஆனால் ‘அறிவின் இலக்கணத்திற்கேற்ப’ அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை அறிந்து  கொள்வதால் ஏற்படும்  பேரின்ப வார்த்தைகளே  ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற புகழாரமாக அமைகின்றன.

    மகரிஷி அவர்களை எதற்காக  அகராதி என்று கூறி மகிழ்கிறோம்?  

        அகராதி என்றால் என்ன என்றும், அகராதியின் பயன் என்ன என்றும் தெரியும். எனவே அதே ஒப்புவமையில் (analogy) அகராதியால் பெறும் பயன்களைப்போன்றே,  ஆறாம் அறிவின் பயன்களை திருவேதாத்திரியத்தால் நாம் பெறுவதால்  திருவேதாத்திரியத்தை இயற்றிய மகரிஷி அவர்களை அகராதி என்று கூறி மகிழ்கிறோம்.  அகராதியின் பயன்களை நினைவு கூர்ந்தால் மகரிஷி அவர்களை அகராதி என்று கூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பது விளங்கிவிடும்.

    அகராதி என்பது என்ன?

        அகராதி என்பது ஒரு நூல். சொற்களை அகர வரிசையில் அமைத்துப் பொருள் முதலியவற்றைத்  தருகின்ற நூல்.  ஒவ்வொரு மொழிக்கும் அகராதி உண்டு. உதாரணத்திற்கு, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு அகராதிகள் இருக்கின்றன.  தமிழ்-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் என்று பலவகை அகராதிகள் இருக்கின்றன.  அகராதி எதற்கு, எப்போது பயன்படுகின்றது? ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லையெனில் அகராதியை நாடுகின்றோம். மேலும் பொருள் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அச்சொல்லைப்பற்றி இலக்கணமும் அறியப்படுகின்றது. அச்சொல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கின்ற புரிதலும் ஏற்படுகின்றது. ஆகவே  மொழிவளத்தைப் பெருக்கிக் கொள்ள புதிய புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதற்கு (vocabulary) அகராதியை நாடுகிறோம்.

    மொழி வளம் என்றால் என்ன?

       மொழிவளம் என்பது பற்றி அறிந்து கொள்ள மொழி, மற்றும் வளம் என்பது என்ன என்று  தனித்தனியே அறிந்து கொள்ள வேண்டும். மொழி என்பது கருத்தையும், உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக்குறியீட்டுத் தொகுதி.  வளம் என்பது நிறைவு மற்றும் மேம்பட்ட நிலை ஆகும்.  மொழி வளம் என்பது மொழியின் மேம்பட்ட நிலை ஆகும். மொழி என்பது எப்போது மேம்பட்ட நிலையில் இருக்க முடியம்? மொழிவளம் என்பது ஒரு மொழியில் சொற்கள் அதிகமாகவும் இருந்து கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் எளிதாக வெளிப்படுத்துவதற்கு பயன்படுபவையாகவும், பிறருக்கும் எளிதாகப் புரியவைப்பதாகவும் இருப்பதாகும். மொழி,  ‘வளமாக’ இருந்தால் ஒருவரின் மொழி ஆளுமையும் அதிகமாக இருக்க முடியும்.  மொழி ஆளுமை அதிகமாக இருந்தால் தான் எண்ணியதை பிறருக்கு தெரிவிக்க விரும்பும்போது தங்கு தடையின்றியும் சரளமாக பேசவும், எழுதவும் முடியும்.

     ‘DICTIONARY’ என்றால் என்ன?

        அகராதி  ஆங்கிலத்தில் ‘DICTIONARY’ எனப்படுகின்றது.  ஆங்கிலத்தில் அறிவாளியை  (knowledgeable person)  ‘He is walking or living Dictionary’ என்கிறோம்.அப்படி என்றால் ‘well informed person’ என்று பொருள். அருளாளரான வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதி- ‘well informed person’ என்றால் என்ன பொருள்?  அவர் யாரால் அறிவிக்கப்பட்டவர்(informed by whom?) யார் அந்த அறிவித்தவர்  (Who  had informed him?)இயற்கையே/இறையேதான்   (Nature/God).  ஆகவே அருளாளரான  வேதாத்திரி மகரிஷியை அகராதி  என்கின்றபோது அவர் இயற்கையால்/இறையால் தெரிவிக்கப்பட்டவர்.  அறிவுறுத்தப்பட்டவர்  மட்டுமல்ல. சமுதாயத்திற்கு  இருபதாம் நூற்றாண்டின் உலகிற்கு அறிவிப்பாளராகவும்(informer) இயற்கையால்/இறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனவளக்கலையின் முதல் இறைத்தூதுவர் அவர்.  அவரை மனவளக்கலைக்கு முதல் வித்தாக்கி அவர் வழியாக  பல்லாயிரக் கணக்கில் இறைத் தூதுவர்களை உருவாக்கி வருகின்றது இயற்கை/இறை என்றால் அது மிகையாகாது.  எனவே மனவளக்கலைஞர்கள் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பினை பாக்கியமாகக் கருதி நன்முறையில் பயன்படுத்துவதே நாம் மேற்கொள்ளும் சாலச்சிறந்த இறைவழிபாடாகும்.

    Scientist of Consciousness

    வாழ்வாங்கு வாழ . . .    

        ஒரு மொழியில்  தெரியாத, புரியாத புதிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள உதவுவது அகராதி.

    அகராதி பயன்படுவதுபோல் திருவேதாத்திரியம் ஒருவர் ஆறாமறிவின் திறனையும், திறமையும் வளர்த்துக்கொண்டு வாழ்வாங்கு(வாழ்வு ஆங்கு-இல்லறத்தோடு கூட) வாழ்வதற்குப் பயன்படுவதால் திருவேதாத்திரியத்தின் பயனாளிகளான நாம் அவரை ஓர் அகராதி என்று கூறி மகிழ்கிறோம். வாழ்வாங்கு வாழ்வது என்பது எப்படிவேண்டுமானாலும் மனம்போன போக்கில் வாழ்வதைத் தவிர்த்து ‘வாழும் இயல்பை’க் கொண்டு வாழ வேண்டும்.  அப்படிப்பட்டவன்தான் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்கிறார் அறத்துப்பாலில் இல்லறத்திற்கென்று தனியாக ஓர் இயலை(science of living) ஏற்படுத்திக் கொடுத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

                இல்லறவியல்

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்.                                      . . . குறள் எண் 50

    பொருள்:

       இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் விண்ணிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான் என்கிறார்.

        மேலும், ஒன்றே பலவாகியது என்கின்ற வோதாத்திரிய சுத்த அத்வைத தத்துவத்தின்படி(Vethathric Pure Advaidic Science) இறையே மனிதனாக தன்மாற்றம் அடைந்திருந்தாலும் அவன் எப்போது தெய்வத்திற்கு ஒப்பாகிறான்  என்பதனை மற்றொரு குறட்பாவில் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதனை இங்கு நினைவுகூர்வதும் நலம் பயக்கும்.

     நீத்தார் பெருமை

    சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்

    வகைதெரிவான் கட்டே உலகு.

                                                          குறள் எண். 27

     

    இன்று இத்துடன் நிறைவு செய்துகொள்வோம்.  இதன் தொடர்ச்சியை நாளை சிந்திப்போம்.   வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!             வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • FFC – 306 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

    வாழ்க மனித அறிவு!                                      வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC – 306

    அ.வி. 306

    16-08-2020-ஞாயிறு

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

    விளைவு

    FFC-270_Fish_bone_cause_and_effect

        

    இதுவரை ‘செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்’ என்கின்ற தலைப்பில் நான்கு நாட்களாக சத்சங்கத்தில் சிந்தித்து வருகிறோம்.  தத்துவம் மற்றும் மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் தனித்தனியாகச் சிந்தித்தோம்.  இன்று செயலுக்கான விளைவு பற்றி, அதாவது மனிதனின் முத்தொழில்களின் விளைவு பற்றி  சிந்திக்க குழுமி இருக்கிறோம்.   

         ஒவ்வொரு மனிதனும் செயல் புரியாமல் இருக்க முடியாது.

       இருப்பினும்  விழிப்புணர்வோடு இருந்து செயல் புரிவதில் பெரும்பாலோர் தவறிவிடுகின்றனர்.

       அவ்வாறு  சமுதாயத்தில் ‘செயல் புரிவதற்கு  முன்னரே அதற்கான விளைவை அறியாமலும்

                                அல்லது

        விளைவை சரியாக கணிக்காமலும்

                      அல்லது

      விளைவறிந்து ஆனால் அலட்சியத்தால் செய்கின்ற  செயல்களால் ஏற்படும் குழப்பங்கள்/துன்பங்கள் சமுதாயத்தில் மல்கிவிட்டன.

       எனவே ‘செயலுக்கு விளைவு’ பற்றிய ஏராளமான ஐயங்கள்  கீழே குறிப்பிடப்பட்ட வினாக்களாக உருவெடுத்துள்ளன. அவற்றிற்கெல்லாம் இன்றைய சிந்தனையில் விடை காண்போம்.

    இன்றைய சிந்தனையில்

    1. விளைவு என்றால் என்ன?
    2. மனிதனின் செயலுக்கு விளைவு உண்டா இல்லையா?
    3. மனிதனின் செயலுக்கு விளைவு இருப்பின் அந்த விளைவினைத் தருவது யார்?
    4. மனிதனின் செயலுக்கு விளைவு வந்தேதான் தீருமா?
    5. செயலை செய்துவிட்டு விளைவைத் தவிர்க்க முடியாதா மனிதன்?
    6. தீயவினையைத் தவிர்ப்பதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
    7. செயல் புரிவதில் மனிதன் விழிப்புணர்வோடு துல்லியமாக இருந்தே ஆக வேண்டுமா?
    8. செயலுக்கு விளைவு உண்டு என்பது எந்த நியதியின் கீழ் வருகின்றது?
    9. இந்த வினாக்களுக்கு விடை காண்கின்ற பொறுப்பு ஆன்மீகப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு  மட்டுமேவா உள்ளது?  மற்றவர்களுக்கு இல்லையா?
    10. மற்றவர்கள் ‘செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற நியதிக்கு உட்பட்டவர்கள்  இல்லையா?
    11. செயலை செய்வதற்கு முன்னர் விளைவை எவ்வாறு அறிவது?
    12. செயலுக்கான விளைவைத் தரும் அறிவியல் என்ன?

    என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் இன்று விடை காணவே வேண்டும். அதற்கு நம் குருநாதரும், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் ஆசிகளும் நமக்குத் துணை நிற்குமாக.

    1. விளைவு என்றால் என்ன?

          முதலில் விளைவு என்றால் என்ன என்று அறிவோம்.  

       ‘விளைவி’ என்பது வினைச்சொல்.  விளைவு என்பது அதன் பெயர்ச்சொல். 

     ‘விளைவி’ என்றால் நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை ஏற்படுத்துதல்; உண்டாக்குதல்(cause, produce, bring about) என்று பொருள்.

    ‘செயல்’ என்கின்ற சொல்லும், ‘விளைவு’ என்கின்ற சொல்லும் பந்தம் உடையன.

       விளைவை இப்போது காண்கிறோம்/அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு   பந்தமான செயல் முன்னர் நடந்திருக்கும். 

        இன்று செயலை செய்கிறோம் என்றால் என்றால் அதற்கான விளைவும் உண்டு; வந்தே தீரும். 

       உதாரணத்திற்கு மாணவன் இன்று தேர்வு எழுதுகிறான்.  அது செயல்.  அதற்கான விளைவுதான் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ‘தேர்ச்சி பெற்றான்(pass) அல்லது தோல்வி அடைந்தான்(Fail) என்பதனை அறிவிக்கும் தேர்வின் முடிவு.  கடல் இருந்தால் அலையும் இருக்கும்.  

        எனவே செயலுக்கு விளைவு உண்டு என்பதில்  எந்தவித சிறு ஐயப்பாடும்  இருக்கக் கூடாது. Every action having  its own result is quite logic.  In Physics what does Newton third law of motion say?  For every action there is equal and opposite reaction.

    ‘விளைவு’ என்றால் விளைவது(result of action). செயலின் மூலமாக விளைவது. ஒன்றைச் செய்ததற்கு பலனாகத் திரும்பிக் (consequence, result, effect) கிடைப்பது.

    செயலிலிருந்து  வெளிப்படுவது  விளைவு. விளைவு இல்லாத செயல் இல்லை. செயல் இல்லாத விளைவு இல்லை.

    செயல் மனிதனுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ தருவதில்லை. அதன் விளைவுதான் மனிதனுக்கு இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தருகின்றது.

    எனவே என்ன விளைவு வேண்டுமோ, அதற்குரிய செயலைச் செய்து விளைவை அனுபவிக்க வேண்டும். மனிதன் விரும்புவது  இன்பமே.  எனவே இன்பம் தரும் செயலையே மனிதன் தேர்வு செய்ய வேண்டும் என்றாகின்றது.

     2. ஆன்ம சாதகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது:

    மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும்  விளைவு இல்லாமல் நடப்பதில்லை.  ‘No action will go waste’ என்பார் மகரிஷி அவர்கள். அதேபோல் ‘Nobody can hurt you unless there is an imprint in you’ என்பார் மகரிஷி அவர்கள்.   இதன் நேரிடையானப்  பொருள் என்ன? 

      ‘உன்னிடம் தவறு செய்த பதிவு இருந்தாலொழிய யாரும் உன்னைத் துன்புறுத்த முடியாது’ என்பது பொருள்.  அதாவது  ‘இப்போது துன்பமாக வருவது ஒருவர்  முன்னர் செய்த செயலின் விளைவே’ என்பதனை அவ்வாறு கூறுகிறார்.  துன்பம் வரும்போது மற்றவர்களைக் காரணம் காட்டுவதில் பொருள் இல்லை.  குறிப்பாக ஆன்ம சாதகர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       ‘ஒருவர் ஆன்ம சாதகம் பல வருடங்களாக  செய்து வருபவராகக்கூட இருக்கலாம்.   ஆனால் தனக்குத் துன்பம் வரும்போது அதற்குக் காரணம் பிறர் என்று கூறுவாரேயானால்  அவர் இன்னமும் ஆன்மீக பயிற்சியில்  ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் பொருள்’ என்கிறார் ஓர் அறிஞர்.   அது எவ்வாறு சரியாக இருக்க முடியும் என்கின்ற ஐயம் எழலாம் ஒரு சிலருக்கு.  சிந்திப்போம்.

     3. ஆன்மக சாதகம் எதற்காக செய்யப்படுகின்றது?

     ஆன்மாவை உணர்வதற்காகத்தான் ஆன்ம சாதகம் செய்யப்படுகின்றது.  ஆன்மாவை உணர்வது என்பது என்ன? இறையேதான் தனது ஆன்மாவாகவும் 760 கோடி ஆன்மாக்களாகவும்(மற்றவர்களது ஆன்மாவாகவும்) உள்ளது என்கின்ற உண்மையை உணர்வதுதான் ஆன்மஉணர்வு.  அதாவது ஆன்மஉணர்வேதான் இறை உணர்வு.  இறைஉணர்விற்காக ஆன்ம சாதகம் செய்து வரும்போது ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இறைநீதியினை அறியாமல் இருந்தால் ‘இறைவன் இருக்கின்றான்’ என்கின்ற இறைநம்பிக்கை இல்லாததாக அல்லவா பொருளாகின்றது?!

       நம்பிக்கையில் ஆரம்பிப்பதுதான் இறைஉணர்வு அப்பியாசம்(பயிற்சி).  இறை நம்பிக்கையில்லாமல் இறைஉணர்வு அப்பியாசம் பலன் தராது.

     இறைநம்பிக்கை இல்லாமல் இறைஉணர்வு அப்பியாசமும் செய்ய முடியாது.

      ஆர்வமும் இருக்காது. தொய்வு ஏற்படும். 

      ஆகவே தனக்கு ஒரு வேளை துன்பம் வந்தால், அது, தான் இப்பிறவியில் செய்த  செயலுக்கான விளைவோ, அல்லது பிறக்கும்போது தான் கொண்டு வந்த ‘சஞ்சிதகர்மா’ (சஞ்சி — Sanchi என்றால் மூட்டை என்று பொருள்) என்னும் வினைமூட்டையிலிருந்து வெளிவந்ததுதான்  என்கின்ற புரிதல் வேண்டும். 

      அப்படியொரு  புரிதல் ஏற்படுமாயின், அறிவு,  தனக்கு வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு கவலையுறாமல், துன்பத்திலிருந்து விடுபட ஆவன செய்ய முடியும். 

      தீயவினைப்பதிவுகள் சஞ்சிதகர்மா என்கின்ற வினைமூட்டையில் ஒரு வேளை இருப்பின்   அதனை வினைமூட்டையிலிருந்து நீக்குவதிலும்  அக்கறை கொள்ளுதல் வேண்டும்.   

       மேலும் எதிரியையும் வாழ்த்தக் கூடியவர்கள் தனக்கு வரும் துன்பங்கள் பிறரால்தான் வந்தது என்கின்ற    தவறான புரிதல்   கொண்டிருந்தால் அவர்களால்  எப்படி எதிரியை வாழ்த்த முடியும்?

     4. மனவளக்கலை பிறவிப்பிணியைப் போக்கும் அருமருந்து:

       பெற்றோர்களாவதற்கு  முன்னரே இளைஞர்கள் தங்கள்  சஞ்சிதகர்மா எனும் வினை மூட்டையில் தீயவினைப்பதிவுகள் இருப்பின் அதனை வினைமூட்டையிலிருந்து காலி செய்துவிடவேண்டும்.

    அப்போதுதான் குழந்தைகளுக்கு கொடுக்கவிருக்கும்   ‘சஞ்சிதகர்மா’ எனும் வினைமூட்டையில் நல்ல வினைவுப்பதிவுகளையே நிரப்பிக்   கொடுக்க முடியும்.  அதற்கு துணைபுரிவதுதான் மனவளக்கலை எனும் அருமருந்து. 

     அருமருந்து என்பதால் அது மருந்தல்ல. ஆனாலும் ஒருவகையில் மருந்தில்லா மருந்து மனவளக்கலை.

    பொதுவாக மருந்து எதற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது? நோயினால் வரும் துன்பத்தைப் போக்குவதற்கு மருந்து அவசியமாகின்றது.

         துன்பமில்லாமல் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு வாழ்வதற்கும்,

       ஒரு வேளை துன்பம் வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான பயிற்சியை  உடல், உயிர், மனம் ஆகிய மூன்றிற்கும் அளிப்பதால் மனவளக்கலை  அருமருந்து எனப்படுகின்றது.

      மேலும் பிறவிப்பிணியினைப் போக்கும் மருந்தாகவும் மனவளக்கலை இருப்பதால் அது அருமருந்து எனப்படுகின்றது, மனவளக்கலை பயிற்சியினை ஆணும், பெண்ணும் 15 வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 

    திருமணத்திற்கு முன்னர்  பத்து வருடத்திலிருந்து பதினைந்து வருடம் செய்த மனவளக்கலை பயிற்சியின் பயன் அவர்களுக்கும் அவர்களது  வம்சாவளிக்கும் போய்ச் சேரும்.

     5. செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு  நிரூபணம் அவசியமா?

        செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு என்ன நிரூபணம் தேவை?  நிரூபணம் என்றாலே அது அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு அறிவியல் நிரூபணம் தேவையா? 

       கைப்புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி அவசியமா?  அவசியமே இல்லை. அதுபோல்தானே மனிதனின் செயலுக்கு விளைவு நிச்சயமாக உண்டு என்பதற்கு நிரூபணம் அவசியமில்லை.

    ‘Good is ever good; But bad is never good.

    நல்லது எப்போதுமே நல்லது; தீயது எப்போதுமே நல்லதல்ல’ என்கின்ற கோட்பாட்டில் ஆறாம் அறிவிற்கு உடன்பாடு இல்லையா?

    ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற உண்மையினை  கணிதத்திற்கு உட்படுத்தியோ, அல்லது கருவிகளுக்கு உட்படுத்தியோ, அல்லது சாம்யத்திற்கு உட்படுத்தியோ அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் தான், ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற    இயற்கைநீதியினை/இறைநீதியினை  அறிவு மதித்து நடக்குமா? 

    அறிவியலாக  இருந்தால்தான் அறிவு ஏற்றுக்கொள்ளுமா?  அறிவுப்பூர்வமாக இருந்தால் அறிவு ஏற்றுக்கொள்ளாதா? அறிவிற்கே அது தெரியாதா? தெரியவில்லை எனில் அறிவிற்கு யார் தெரிவிப்பது? 

                             அறிவிற்கு அறிவே தெரிவிப்பதுதான் சிறப்பு.

       அதாவது சுயமாக சிந்திக்க வேண்டும்.

    தவறிழைப்பது மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே.  மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்ல  எப்படி முடியும்?  முடியாது; தொடர்ந்து செல்ல முடியாது.” என்கிறார் மகரிஷி அவர்கள்.

     6. செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் ஏன் (dilemma)?

     தடுமாற்றம் என்பது என்ன?  செயலுக்கு விளைவு உண்டா அல்லது இல்லையா என்பதில் தெளிவின்மை.   தான் ஆற்றும் செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் (dilemma)உள்ளது. ஏன்? 

       தடுமாற்றம் இல்லை என்றாலும் அலட்சியம் உள்ளது மனிதனிடம்.   

                           அல்லது அறியாமை உள்ளது. 

                   அல்லது உணர்ச்சிவயம் உள்ளது.

    செயலுக்கான விளைவு உண்டு என்பதனை  மனிதன் மறந்துவிடுகின்றானா?

    அல்லது செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தாலும் விளைவைக் கணிக்காமல் ஏன் செயலைச் செய்கின்றான்?

    விளைவைக் கணிக்கின்ற திறமை இல்லையா மனிதனிடம்?

    செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தும்,  விளைவைக் கணிக்கின்ற திறமை இருந்தும் விளைவைக்கணிக்காமல்(யோசனை செய்யாமல்) செயல் புரிந்து விட்டு பின்னர் துன்பம் வரும்போது கவலையுறுகின்றான் மனிதன். இதற்கு காரணம் வினைப்பதிவுகளின் அழுத்தமே.

     7. செயலுக்கான விளைவு எப்போது வரும்?    

    விளைவு என்றால் என்ன என்று பார்த்தோம்.  செயலுடனே விளைவும் தொக்கி நிற்பதால், விளைவு,

      செயல் செய்கின்றபோதே வரலாம்.

      செயலுக்குப்பின் உடனேயும் வரலாம்.

      அல்லது பிறகும் வரலாம்.

      ‘பிறகும்’ என்பது

    செயலின் தன்மை, நோக்கம் பொறுத்து,

    அடுத்த நிமிடமும் வரலாம். அல்லது

    அடுத்த நாள் வரலாம். அல்லது

    அடுத்த வாரமும் வரலாம். அல்லது அடுத்த மாதமும் வரலாம்.

    அல்லது அடுத்த வருடமும் வரலாம்.

    அல்லது சில ஆண்டுகளோ பல ஆண்டுகள் கழித்தோ,

    ஏன் நூற்றாண்டு கழித்தும் வரலாம்.

    ஏழ் பிறவிக்குள்ளும் வரலாம்.

     8. இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா?

    சிலருக்கு ஐயம் எழுகின்றது.    

    என்ன ஐயம் அது? 

    செயலுக்கான விளைவு  துல்லியமாகவா(precisely) வரும்?!

    பேரறிவின் தன்மாற்ற பயணத்தில்தான் (Journey of Transformation of Consciousness) மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்(வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்) 

    ஆரம்ப நிலையைில் வெட்டவெளி நொறுங்கி துகள்களாகி பஞ்சபூதங்களானது பேரறிவின் அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்றின் செயல்பாடுகளினாலும் தான் சாத்தியமாகியது என்பதனை அறிவோம். 

      ஆகவே உயிரற்ற சடப்பொருள்கள் உருவானதற்கு காரணமான அறிவின் மூன்று செயல்பாடுகளில்   ஒன்றான ‘துல்லியமும்’   மனிதனிடம் ஆறாம் அறிவாக வந்த போதும் செயல்படவேண்டுமல்லவா? ஆறாம் அறிவுதான் தனது  ‘விரைந்துணர் அறிவாற்றலை’க் கொண்டு (நுண்மாண்நுழைபுலன்-Prespicacity) ‘செயலுக்கு விளைவு என்ன’ என்று அறிந்து துல்லியமாக மனிதன் செயல் புரிய வேண்டும் என்பதில் இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா? எதிர்பார்ப்பது என்பதனைவிட செயலுக்கு விளைவு உண்டு என்பது இயற்கைஅமைப்பின்/இறையின் inbuilt mechanism என்று பகர்வதே மிகப்பொருத்தமாக இருக்கும்.

     செயலுக்கு விளைவு உண்டு என்பதனை நினைவில் கொண்டு, விளைவினை முன்யோசனையுடன் (முன்னரே) கணித்து, நல்விளைவுகளை தரும் செயல்கள் புரிவதில் ஆரம்பத்தில் சிரமம் இருப்பது போல் தெரியலாம்.   ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.  ஆறாம் அறிவு விரைந்துணர் ஆற்றல் பெற்றது. இதுவரை பழக்கமில்லாது இருந்ததினால் அது சிரமமாக இருப்பதாக தெரிகின்றது.  பழகப்பழக இயல்பாகிவிடும்.

     9. விளைவு வரும்போது செயல் புரிந்தவர் இல்லாதுபோனால். . . ? 

     எந்த ஒரு செயலும்(மனிதன்) விளைவிலிருந்து தப்பவே முடியாது(No action will go waste). 

       பல ஆண்டுகள் கழித்து வரும்போதோ,

      நூற்றாண்டு கழித்து வரும்போதோ,

     ஏழ் பிறவிக்குள்ளும் வரும்போதோ

    செயல்புரிந்தவர் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  செயல்புரிந்தவர் இல்லாமல் இருக்கும்போது அந்த விளைவு யாரைத் தாக்கும்?  தன் வழியாக வந்த வம்சாவளியைத் தாக்கும்.  உயிர்த் தொடர்தானே வம்சாவளி.

      இங்கே அநேகருக்கு ஐயம் எழுகின்றது. ஒருவன் செய்த தவறுக்கு தண்டனை(விளைவு) அவனது மகனோ/மகளோ, அல்லது பேரன்/பேத்தியோ அனுபவிக்க வேண்டிவரும் என்பதில் என்ன நியாயம் உள்ளது என்கின்ற ஐயம்தான் அது. 

    வம்சாவளி என்பதற்கு உயிர்த் தொடர்பு என்பது  மட்டுமே பொருளாகுமா? சிந்திக்கவும்!

     10. மாதா பிதா செய்தது மக்களுக்கு:

    ஒருவன் உலகியல் வாழ்க்கையில் சேர்த்து வைத்த சொத்து மகனுக்கோ/மகளுக்கோ, தாத்தா சொத்து பேரனுக்கோ உரிமை இருப்பதுபோல், செயலின் விளைவையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். 

     பின்னர்   தவறான செயலின் தீய விளைவை செய்தவர் இல்லாதுபோது வேறுயார் அனுபவிப்பது?  இதனைக் கருத்தில் கொண்டுதான் குடும்பங்களில் பெரியவர்கள் ‘மாதா பிதா செய்தது மக்களுக்கு’ என்பர்.

       ஒரு நடைமுறை உதாரணத்தின் மூலம்  ஒருவர் செய்த செயலின் விளைவு அவரது வம்சாவளிக்கும் சேரலாம் என்பதனை அறிவு ஏற்றுக்கொள்ளட்டும்.

       தந்தை வீட்டினை அடமானம் வைத்து கடன் வாங்கி திருப்பி செலுத்துவதற்கு முன்னர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  அவருக்கு மகன்கள் இருக்கின்றனர்.  தந்தை வாங்கிய கடனை மகன்கள் திருப்பி செலுத்திய பிறகுதான் மகன்கள் அந்த வீட்டினை விற்க முடியும்.  ‘எங்களது தந்தை வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை’ என்று சொல்ல முடியுமா?  அதுபோல்தான் ஒருவன் செய்த  செயலிற்கான விளைவினை அனுபவிக்க முடியாமல்போனால்  அவன் சந்ததி அனுபவிக்க வேண்டியிருக்கும்.   இங்கே மகரிஷி அவர்கள்,  பாபம் எது புண்ணியம் எது என்று கூறுவதனை அறிந்துகொள்வோம்.

     11. பாபமும் புண்ணியமும்:

     இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாபம், புண்ணியம் பற்றி தெரிந்திருக்கின்றது.  ஆனால் அவற்றின் வரையறை(defintion) முழுவதுமாக தெரியவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான்  அந்த வரையறையை மனதில் இருத்திக்கொண்டு மனிதன் செயல்கள் புரிய வேண்டும் என எண்ணி 1955 ஆம் வருடம் பாபம் புண்ணியம் என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் பாடலை அருளியுள்ளார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    Scientist of Consciousness

     பாபம் புண்ணியம்(1955)

     எண்ணம் சொல் செயல்என்ற மூன்றினாலும்,

    எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ,

    மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ,

    மாசுஎனும் துன்பம்எழா வகையினோடும்,

    உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே,

    உலக இயல்பொடு ஒட்டிவாழும் செய்கை

    புண்ணியமாம்; இதற்கு முரணான எல்லாம்

    புத்திமிக்கோர் பாபம் என விளங்கிக் கொள்வார்.

    . . . வேதாத்திரி மகரிஷி.

    மிக எளிமையாக பாபம் புண்ணியம் என்பது பற்றி கூறியுள்ளார்.  இதற்கான அறிவியல் வார்த்தை முறையே தீயொழுக்கம், நல்லொழுக்கம் என்பதாகும்.  நல்ல செயல்களெல்லாம் புண்ணியம் — நல்லொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  தீய செயல்களெல்லாம் பாபம் — தீயொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  பாடலை முடிக்கும் போது ‘புத்திமிக்கோர்’ என கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். என்ன பொருள் எடுத்துக் கொள்வது?  சமுதாயத்தில் பெரும்பாலோர், அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய அறிவின் குறைபாடுகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  அறிவின் குறைபாடுகளோடு வாழ்ந்தால் அறிவு துன்பத்தைத்தான் அனுபவிக்க முடியும் அல்லவா?  ஆகவே அறிவு முழுமை அடையவேண்டும்(perfection of consciousness) என்பதனை கருத்தில் கொண்டு மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார் மகரிஷி அவர்கள்.  இதுவே தமிழ் கூறும்  அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதுமாகும்.

     Check list ஐ சரி பார்ப்போமா!

         சிந்தனையின் தொடக்கத்தில் பன்னிரண்டு  ஐய-வினாக்களை எழுப்பியுள்ளோம். அவற்றிற்கான விடைகளை இன்றைய சிந்தனையில் கண்டுபிடித்துவிட்டோமா எனப் பார்ப்போம்.

     FFC-270_table

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில்(check list) வினாக்களுக்கான விடைகள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் வினாக்கள் இருக்குமானால் அவ்வினாக்களுக்கு விடைகளை தாங்களாகவே சிந்தித்து பயன் பெறவும்.  இத்துடன் ‘விளைவு’ பற்றிய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  இதன் தொடர்ச்சியாக அடுத்த அறிவிற்கு விருந்தில் (19-08-2020 புதன்)  கருமையம் பற்றி சிந்தனை செய்வோம்.  வாழ்க வளமுடன்.

    வாழ்க வையகம்!                                   வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!                வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • FFC – 305(269) செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 4/?

    வாழ்க மனித அறிவு!                                      வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC – 305(269)
    அ.வி. 305(269)

    12-08-2020-புதன்

    gurudevar

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 4/?

    செயல்

        இதுவரை எண்ணம், சொல் ஆகிய இரண்டைப்பற்றி சிந்தித்தோம்.  இன்று ‘நேரிடைச் செயல்’(எண்ணம், சொல் ஆகிய இரண்டையும் கடந்து, பிறர் அறிய நேரிடையாகச் செயல்புரிவது அல்லது மறைமுகமாகச் செய்வதும்) பற்றி அறிந்து கொள்வோம்.

         மனிதன் என்ன சடப்பொருளா, செயல் புரியாமல் இருப்பதற்கு? செயல் புரியாது மனிதன் வாழ முடியாது.  ஆனால் அச்செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில்தான் விழிப்போடு  கவனம் செலுத்த  வேண்டும்.  இதில் தான் குறைபாடு உள்ளது மனிதனிடம்.  மேலும் அறிவு விரைந்துணர் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு செயலின் விளைவை முன்னரே அறிந்து செயல்படவேண்டும். விரைந்துணர் அறிவாற்றலை நுண்மாண்நுழைபுலன்(perspicacity) என்றும் சொல்லலாம். மனிதன் தனித்து வாழமுடியாது.  மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பார்கள். மனிதன் சமுதாயத்தில்தான் வாழவேண்டும்.  அப்போது வாழ்க்கை வளம் உயரவேண்டுமெனில் மகரிஷி அவர்கள் கூறும் வாழ்க்கைவள  உயர்வுப் படிகளில் மூன்றாவதான நட்பு நலம் அவசியமாகின்றது.  நற்செயல்களின் மூலம் தான் வாழ்க்கைவள உயர்வுப்படியான நட்புநலத்தைப்  பெறமுடியும்.  இவற்றிற்கெல்லாம் காரணமாக உள்ளது செயல். அதுவும் அச்செயல் நற்செயலாக இருக்கவேண்டும்.

     செயலின் வித்து எண்ணம்:

         செயல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.  மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவது, ‘செயல்’. எண்ணம் சொல்லாக வருவதற்கு  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனில், ஆனால் எண்ணம் மீண்டும் மீண்டும் எண்ணி அழுத்தம் பெற்றுக் கொண்டே இருந்தால் எண்ணத்தின் தன்மையைப் பொருத்து முன்றாவதான  செயலாகவே வந்துவிடும். ஆகவே எண்ணமில்லாது சொல்லும்  இல்லை, செயலும் இல்லை. செயலுக்கு முன்னே எண்ணமாக இருந்து, எண்ணி, எண்ணி அழுத்தம் பெறும்போது எண்ணம் சொல்லையும் தாண்டி செயலுக்கு வரும்.  செயலின் வித்து எண்ணம்.  விதைக்கின்ற  விதைக்கேற்ற செடியே முளைக்கும். அதுபோல் எண்ணமாகிய வித்திற்கேற்பச்  செடியாகிய செயல் முளைக்கும்.  அதாவது எண்ணம் நல்லதாக இருந்தால், செயலும் நல்லதாக இருந்து செயலின் விளைவும் நன்மையாகவே இருக்கும்.  எண்ணம் தீயதாக இருந்தால், செயலும் தீயதாகி விளைவும் தீமையையே அளிக்கும்.  அத்தீமை பிறர்க்குமட்டுமல்லாது எண்ணுகின்றவருக்கே தீமையை அளிக்கும்.  

     செயலுக்கான வரையறை:

         செய்வது செயல் எனப்படுகின்றது. அவ்வளவுதானே! இதற்குக்கூடவா  வரையறை தேவையாக உள்ளது என  ஆச்சரியமாக இருக்கலாம்! ஒன்றைப் பற்றி தெளிவாகவும், துல்லியமாகவும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அதனைப்பற்றிய வரையறை(definition) தேவைதான். அதனால்தான் திருவேதாத்திரியம் மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான செயல் பற்றிய வரையறையைக் கூறுகின்றது.  ‘ஒன்றேதான் பலவாகியது’ என்பது உண்மையாக இருந்தாலும்,   எவ்வாறு பொருள், மெய்ப்பொருள் என்று இரண்டாக வழங்கப்படுகின்றனவோ, அதுபோல், செயலை,  ‘செயல்’   ‘சிறந்த செயல்’ என்று இரண்டாகப் பிரிக்கிறார் மகரிஷி அவர்கள். காரணம், நற்செயல்கள் சமுதாயத்தில் பலரிடம் ஏதோ ஒருவகையில் அருகி வருவதால், செயலை இரண்டாகப் பிரித்து ‘செயல்’,  ‘சிறந்த செயல்’ என்கிறார். செயலை இரண்டாகப் பிரித்ததோடு இல்லாமல் சிறந்த செயலுக்கான வரையறையையும்(definition for deed to be good) கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  அதனை நினைவு கூர்வோம்.

     சிறந்த செயல்(06.01.1957)

    வாழ்வுக்கு ஆதரவும்,

              வளமும் தரும்செயலை

    தாழ்வெனக் கொள்ளுவது

              தருக்காகும் – ஆழ்ந்தறிந்து

    பிறருடைய நலம் காத்துத்

              தான் நலத்தைப்பெறுகின்ற

    திறமைதான் அறம் என்னும்

              சிறந்த செயல்.

                                                  . . . வேதாத்திரி மகரிஷி.

         தனது துணைவியார் அன்னை லோகாம்பாள் அம்மையார் மார்கழி மாதத்தில் கோலமிடும்போது, அதைச்சுற்றிலும்  ஏதேனும் ஒரு அருளுரையை மகரிஷி அவர்கள் எழுதுவது வழக்கம்.   அவ்வாறு 1957ஆம் வருடம் சனவரி மாதம், ஆறாம் நாளன்று ‘சிறந்த செயல்’ என்கின்ற தலைப்பில் இப்பாடலை அருளியிருக்கிறார்.  

     இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக்கொள்ளும் யுக்தி:

          மேலும் மற்றும் ஒரு உண்மையினை தெரிந்து கொள்வோம். அருட்பிரகாச வள்ளார் அவர்களின் சூட்சும சரீரம் மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடகாலம் தங்கியிருந்தபோது  எழுதிய பாடல்கள் எல்லாம் ஞானப்பாடல்கள் என்பதனை மகரிஷி அவர்களே கூறியது நினைவிற் கொள்ளத்தக்கது.  அத்தகைய பாடல்களில் ஒன்றுதான் இப்போது நாம் சிந்தனைக்குத் துணை செய்ய எடுத்துக் கொண்டது. இங்கே வள்ளலாரையும் வணங்கி மானசீகக் குருவாக ஏற்றுக்கொள்வோம்.  மேலும் ஒரு இயல்பூக்க நியதியினைப் பயன்கொள்ளும் யுக்தியினையும் அறிந்து கொள்வோம். 06-01-1957 முன்னர்  நம்மில் பலர் பிறந்திருக்கமாட்டோம்.   அதற்கு முன்னரே பிறந்திருந்தாலும் சிலருக்கு இச்செய்யுள் இது வரை அறியப்படாமல்  இருந்து இறையருளால்  இன்று  அறியும்  வாய்ப்பு  கிட்டியிருக்கலாம்.   எனவே  பின்னோக்கி 06-01-1957 நாளிற்கு சென்று,  அன்று மகரிஷி அவர்கள் அருளிய அருளுரைக் காட்சியினை மனக்கண்களில்  கொண்டு வந்து(Visualise the event) மகிழ்ந்து இப்பாடலை அவர் என்ன ஞானோதயத்தில் அருளினாரோ அந்த ஞானோதயம் நமக்கும் உதிக்குமாறு விரும்பி எண்ணி இப்பாடலின் பொருளை விளங்கிக் கொள்வோம். இப்பாடல் வரிகள் சரித்திரம் படைத்துவிட்டன. இப்பாடலின் பொருளை விளங்கிக் கொண்டு அவ்வாறே நடந்துகொள்ள   இறையருளும், குருவருளும் நமக்கு துணை நிற்குமாக.

     செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

     இந்தவினாவிற்கு விடையை ஏற்கனவே அறிந்திருந்தாலும், ‘வசிஷ்டர் வாயால் வந்தால் அது  வேதவாக்கு     என்பதற்கிணங்க இருபதாம் நூற்றாண்டின் வசிஷ்டரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாய் மொழியாகவே அறிவோம்.  அதற்கு பாடலின் பொருளுக்குள் செல்வோம்.  பாடலின் முதல் இரண்டு வரிகள் என்ன தெரிவிக்கின்றன? மனிதனின் வாழ்விற்கு ஆதரவாகவும், வளமாகவும் அமைவது அவனுடைய செயல்களே அன்றி வேறு எதுவுமில்லை. அப்படியானால் ஆதரவும் வளமும் அளிக்கின்ற மனிதனின் செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? இந்த கோணத்தில் இதுவரை சமுதாயம் சிந்தித்துள்ளதா? என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்?  ‘மனம்போல் வாழ்வு’ என்கின்ற ஆன்றோர் மொழியினையே இவ்வாறாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  எப்படி?

        ‘மனம்போல் வாழ்வு’ என்றால் மனதில் எழும் எண்ணங்களுக்கேற்ப வாழ்வு அமையும் என்று  பொருள். மனதில் எழும் எண்ணங்களே செயல்களாகவும் மலர்கின்றன.  ஆகவே ‘மனம்போல் வாழ்வு’ என்றால் மனதில் எழும் எண்ணங்களே செயல்களாக மலர்வதால், செயல்களுக்கேற்ப வாழ்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அமையும் என்கின்ற பொருளை  உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஆதரவு என்பது என்ன?

           பாடலின் முதல் வரியில்  மனித வாழ்விற்கு ஆதரவு வேண்டும், வளமும் வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  ஆதரவு என்பது என்ன? ஏன் அது வாழ்க்கைக்கு அவசியமாகின்றது?  ‘ஆதரவு’ என்பது

    •          ‘துணை நிற்கும் ஒத்துழைப்பு’,
    •          அன்பான துணை,
    •          பக்க பலம்

    என்றெல்லாம் பொருள்.  ‘ஆதரவு’ என்பது என்ன என்று அறிந்துகொண்டோம்.  ஆகவே மனிதவாழ்விற்கு ஆதரவு என்பது அவசியமா, இல்லையா என்பதனை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஆதரவு எங்கிருந்து வரும்/வருகின்றது?  நம்முள்ளே கோயில்கொண்டிருக்கும் உத்தமனிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் வரும்/வருகின்றது. ஆகவே

            நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமனும், சமுதாயமும்  நமக்கு துணையாக இருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமல்லவா?

       நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமன் மற்றும் சமுதாயத்தின்  துணை, அதுவும் அன்பான துணை வேண்டுமல்லவா?       

            நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமன் மற்றும் சமுதாயத்தின்  பக்கபலம் நமக்கு அவசியமில்லையா? 

              இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது முழுவதும் தேவையில்லை என்று யாராவது கூறமுடியுமா?  உடலில் உள்ள உறுப்புகள் போன்று வாழவைக்கின்ற சமுதாயத்தின் உறுப்புதானே தனிமனிதனும்.  எனவே சமுதாயம் நலமுடன் வாழ்வதற்கு சமுதாயத்தின் உறுப்பான மனிதனின் ஒத்துழைப்பும், செயல்களும் அமைய வேண்டாம்?

     ஆதரவு எங்கிருந்து வரவேண்டும்?

         மீன் நீரில் வாழ்கின்றது. அதற்கு வேண்டிய ஆக்ஸிஜன் எங்கிருந்து கிடைக்கின்றது? தான் வாழும் நீரிலிருந்துதான் கிடைக்கின்றது. அதுபோல் தான் வாழும் சமுதாயத்திலிருந்துதான் மனிதனுக்கு ஆதரவு தேவையாக இருக்கின்றது.  ஆதரவு இல்லாமல் போனால் என்னவாகும்? ஆதரவு இல்லாமல் போனால், நம்முள் வீற்றிருக்கும் உத்தமனிடமிருந்தும் அருளையும், சமுதாயத்திலிருந்து அன்பையும் இழக்க வேண்டியிருக்கும்.

     பரிணாம வாகனத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளாள் இயற்கை அன்னை?

        இயற்கை/இறை வைத்திருந்த பரிணாம வாகனம் தற்போது யாரிடம் உள்ளது என வினா எழுகின்றது.  ஐந்தாம் அறிவு சீவன்கள் வரை தானாகவே ஓட்டி வந்த பரிணாம வாகனத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளாள் என்பது கேள்வி.

       யாரிடம் ஒப்படைக்க முடியும்?  ஆறாம் அறிவு சீவஇனத்திடம்தான் ஒப்படைக்க முடியும். ஆகவே இயற்கை அன்னை பரிணாம வாகனத்தை ஓட்டும் பொறுப்பை ஆறாமறிவு சீவனான மனிதனிடம்தான் ஒப்படைத்துவிட்டாள். எனவே பரிணாம வாகனத்தை நிதானமாக, விபத்து இல்லாமல் ஓட்டி, சேருமிடம் சேரவேண்டும் மனிதன்.  அதனை இருபதாம் நூற்றாண்டிலிருந்து  செய்து கொண்டிருப்பதுதான் திருவேதாத்திரியம். மேலும் ஆழ்ந்து சிந்திப்போம்.

         உயிரினங்கள் வாழ்வதற்கு இப்புவியில் ஏற்ற சூழல் இருந்ததால் தான் இயற்கை அன்னை இப்புவியைத் தேர்ந்தெடுத்தாள். தேர்ந்தெடுத்து, பல்வேறு உயிரினங்களாகும் வரை பரிணாம வாகனத்தை தானே ஓட்டி வந்தவள்,  அறிவின் உச்ச நிலையான ஆறாம் அறிவுடைய மனிதகுல மாந்தர்களை ஈன்றெடுத்த பிறகு (மாந்தர்களாக தன்மாற்றம் அடைந்த பிறகு), பரிணாம வாகனத்தை ஓட்டும் பொறுப்பை மனிதர்களிடமே ஒப்படைத்துவிட்டாள்.   ஆகவே மனிதகுலம் இப்புவியில் அமைதியாக வாழ்வதற்கேற்ற சூழலை மனிதர்கள்தான் ஆறாம் அறிவைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

         மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழலுக்கு  ஆக்ஸிஜன் உள்ள காற்று மண்டலம் அவசியமாவதுபோல், மனிதன்  அமைதியாக உயிர் வாழ்வதற்கு அன்பும், கருணையுமாகிய சூழல் அவசியம்.  மனிதன் வாழ்வதற்கு அன்பை அளிக்கக் கூடிய ஆதரவு அவசியம்.  அதாவது இரண்டொழுக்கப் பண்பாடு மலர்வது அவசியம்.

     வளம் என்பது என்ன?

         பொருட் செல்வத்தை மட்டுமேவா வளம் எனக் கூறமுடியும்? வளம் என்பது நிறைவு என்று பொருள்.  பொருள் இருந்தாலும் நிறைவு வேண்டாமா? மேலும் வளர்ச்சிக்குரிய அம்சங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் அல்லது சிறந்த பயனைத் தரும் வகையிலான தன்மை என்றும் பொருள். ஆங்கிலத்தில் ‘prosperity’ என்று பொருள்.  எல்லாச் சிறப்புகளும், வசதிகளும் பெற்றுள்ள மேம்பட்ட நிலை வளம் என்பது.

        இத்தகைய ஆதரவும், வளமும் தருவது எது?  மனிதனுடைய செயல்கள்தான்.  அத்தகைய நன்மையைத் தரும் ‘செயலை’ உயர்வாகக் கருதி அயரா விழிப்பு   நிலையோடு செயல் புரியவேண்டும் மனிதன். செயலின் உன்னதத்தைக் கவனத்தில் கொள்ளாமல், அதனை தாழ்வாகக் கருதுவது தருக்காகும் என்கிறார் மகரிஷி அவர்கள். 

     தருக்கு’ என்றால் என்ன?

         தருக்கு என்பது உயர்வழக்குச்சொல்.  அதற்கான பொருள் அகங்காரம், கர்வம் என்று பொருள்.  ஆங்கிலத்தில் ‘arrogance’, ‘haughtiness’ என்று பொருள். தன்முனைப்பு (EGO) என்று கூட பொருள்.  எல்லா பாவங்களுக்கும் தலையாயது தன்முனைப்பு(EGOEdging God Out). 

        இறைவனைக் கண்டு கொள்வது எப்போது சாத்தியம்?  தன்முனைப்பு என்னும் திரையை விலக்கினால்தான் இறைவனை அறிவால் உணரமுடியும். அதுவரை கருத்தியலாக இறைவனை உணர்ந்ததாகக் கொண்டிருக்கலாம்.  ஆனால் செய்முறையாக இறைவனை அறிவால் உணரவேண்டுமெனில் தன்முனைப்பு என்கின்ற திரை விலக வேண்டும்.  ‘தன்முனைப்பு கரைந்துபோம்! காணும் தெய்வம்’ என்னும் மகரிஷி அவர்களின் பாடல் வரிகளை எப்போதும் நினைவில் கொள்வது ‘அயராவிழிப்புணர்வு பயிற்சியில்’ விரைவில் வெற்றி கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

     ஆழ்ந்தறிந்து …….

        ஆழ்ந்தறிந்து என்றால் என்ன?  ஆழ்ந்து+அறிந்து=ஆழ்ந்தறிந்து.  எதனையும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளாமல் சுயமாக சிந்தித்து  தெளிவு பெறவேண்டும். ‘To advise not to survive at the expense of others’ என்கின்ற அறிவுரையை வலியுறுத்தவே ‘பிறர்க்கு நலம் அளித்து தனக்கு நலம் அளிக்கின்ற செயல்புரியும் திறமைதான் அறம்’ என்கிறார்.  எனவே அறம் என்பது மனிதனின் மனிதத்தின் திறமையாகின்றது.  அறம் காக்கும் அறத்திறமை இல்லாதுபோனால் மனிதன் மிருகமாகி விடுவான் என்று எச்சரிக்கிறார். மனிதர்கள் நான்கு வகையினராக உள்ளனர்  என்று கூறி அந்நிலையைப் போக்கி உயர்நிலையான மாமனிதனை உருவாக்க மனவளக்கலையை அருளியுள்ளார் அருட்தந்தை அவர்கள்.   மனிதருள் யார் உயர்ந்தோர் என அவர் வாய்மொழியாகவே அறிந்து கொண்டு பயன் பெறுவோம்.

                மனிதருள் உயர்ந்தோர்(03-01-1959)

    மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

    மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

    மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன். 

                                                                    . . . மாக்கோலம்.

    makkaolamai vandha madhivirundhu

       எல்லோருமேதான் செயல்கள் புரிகின்றனர். ஆனால்  செயல்கள் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

       மனிதனுடைய செயல்(வினை) பதிவுகளை மூன்றாகப் பிரித்துள்ளனர் ஆன்றோர் பெருமக்கள். சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்பனவே அவை.  அவை என்னென்ன என்று மகரிஷி அவர்களின் வாய்மொழியாகவே அறிந்து கொள்வோம்.

     வினைகளில் மூன்று வகை(18-12-69)

    கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்

    உருவெடுத்த பின்கொண்ட வினைப்பதிவு பிராரப்தம்

    இருவகையும் கூடிஎழும் புகுவினையே ஆகாம்யம்

    ஒருவினையும் வீண்போகா உள்ளடங்கிப்பின் விளைவாம்.

                                                                  . . .  வேதாத்திரி மகரிஷி.

    ஒருவினையும் வீண்போகா உள்ளடங்கிப்பின் விளைவாம்.’ என்பதனை எப்போதும் நினைவிற் கொண்டு செயல்கள் ஆற்றுவோம். அயராவிழிப்புணர்வில் இருப்போம். பிரம்ஞானியின் லட்சணமே அயராவிழிப்புணர்வே.  விழிப்புணர்வே கடவுள், தெய்வம், இறை(Awareness is God).  தீயவினைகளை செய்வதற்கு அஞ்சவேண்டும் என்பதனை அறிவுறுத்த அறிஞர் திருவள்ளுவர் தீவினை அச்சம் என்கின்ற அதிகாரத்தை பயனில சொல்லாமைக்குப்பின் வைத்துள்ளார்.  ‘அச்சம் தவிர்’ என்பது ஏற்புடையதுதான் என்றாலும் தீயவினைகளுக்கு அஞ்ச வேண்டும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘தீவினைகளுக்கு அஞ்சுதல்’ என்பது  ‘செயலுக்கேற்ற விளைவு உண்டு’ என்னும் இயற்கை நீதியை மதித்தலேயாகும்(It is respecting the Law of Nature.  It is not to be taken as fear). பண்பின் உன்னதத்தைப் பற்றிய ஆங்கிலத்திலுள்ள பழமொழியினை நினைவு படுத்திக் கொள்வோம்.

     1)  Virtue is its own reward. –  நற்பண்பு தனக்குத்தானே பரிசாகும்.

     2)  Virtue is one and only nobility. நற்பண்பு ஒன்று மட்டுமே மேன்மக்களின் குணம். 

     அயரா விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஒர் யுக்தியைக் கடைபிடிப்போம்.

    வாய்ப்பிருந்தால், யார் எங்கிருந்தாலும், எந்த பணியைச் செய்து கொண்டிருந்தாலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை முப்பது வினாடிகள் செலவு செய்தால் போதுமானது இப்பயிற்சிக்கு.

    இது அகத்தாய்வின் உயர்ந்த நிலை என்றே சொல்லாம். 

    ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ‘யான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டேனா?’ என நம்மை நாமே கேட்டுக் கொள்வது. 

    அப்படி ஒரு வேளை இறையருளுக்கு பாத்திரமாகாத  செயல் புரிந்திருப்பின் அதனை மனதில் இருத்திக் கொண்டு, செய்யும் பணிக்கு குந்தகம் ஏற்படாமல், பணியைத் தொடரலாம்.

    அடுத்த ஒரு மணிநேரம் வரும்போது அந்த ஒரு மணிநேரத்தில் இது போன்ற சோதனையைச் செய்யலாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டிருக்கலாம்.  இது அயரா விழிப்புணைர்வை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

    ஆயுள் முழுவதும் இதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. 

    பழகப்பழக அயராவிழிப்புநிலை தானாகவே வந்துவிடும். 

    ஒரு வேளை அடிக்கடி இறையருளுக்கு பாத்திரமாகாத நிலை ஏற்படாதாயின், அதற்கான வருத்தத்தையும் மன்னிப்பையும் இரவில் உறங்கும் முன் இறையிடமே ஒப்படைக்கலாம்.

    நற்செயல்களை தொய்வில்லாமல் செய்வதற்கு தினந்தோறும்  நாம் மேற்கொள்ளும் சத்சங்கம்  மேலும் உறுதுணையாக திகழும். வாழ்க வளமுடன்.

        செயல் விளைவுத் தத்துவமும், கருமையமும் என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.  முதல் நாளன்று தத்துவம் என்பது என்ன என்று அறிந்து கொண்டோம். அடுத்த  மூன்று சத்சங்கங்களில்,  மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு சிந்தித்து அறிவிற்கு விருந்து படைத்து உண்டோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(16-08-2020 ஞாயிறு)

    முத்தொழில்களுக்கும் விளைவு உண்டா, இல்லையா,

    விளைவு நிச்சயம் உண்டு எனில் விளைவு எவ்வாறு வருகின்றது

    என்பது பற்றியும் அறிவோம்.  

    வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!     வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • FFC – 304(268)செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 304(268)
    அ.வி. 304(268)

    09-08-2020-ஞாயிறு

    செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

    சொல்

    நன்முத்துக்கள்:

    நற்சொற்கள் நன்முத்துக்கள் போன்றவை. மனிதனின் முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ என்பது பற்றி ஆராய்வோம். சொல் வருவதற்கு முன்னர் அது எண்ணமாக உருவெடுத்த பிறகுதான் வரும். எனவே எண்ணம் வரும்போதே ஆராய்ந்து அவ்வெண்ணம் நல்லதாக இருந்தால் அதனை மனதில் வளர விடலாம். இல்லை எனில் துன்பம் விளைவிக்கும் என்று கருதினால், வேண்டாத செடியினை முளையிலேயே கிள்ளி எறிவதுபோல் தீய எண்ணங்களை முதன் முறையாகக்கூட உள்ளே விடக்கூடாது. ஒரு முறை விட்டுவிட்டாலே அந்த எண்ணம், அந்த மனஅலைச்சுழல் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அடுத்த கட்டமான (next stage) சொல்லாக வெளியே வந்துவிடும். அல்லது எண்ணம் அழுத்தம் அழுத்தமாகவும். தீவிரத்துடன் இருந்தால் சொல்லாக வராமல், மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான நேரிடை செயலாகவே வந்துவிடும்.

    எது இறைவழிபாடு?

    ‘சொல்லாகிய’ செயலுக்கும்  விளைவு நிச்சயம் உண்டு. நல்ல சொற்கள் இனியவையாக இருக்கும். நல்ல சொற்கள் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துபவையாக இருக்கும். ‘மனிதன்’ என்கின்ற சொல்லிற்கு இலக்கணமாக (மனம்+இதம்=மனிதன்) நல்ல சொற்கள் இதமாக இருக்கும். நல்ல சொற்களைப் பேசுபவருக்கும் இதமாக இருக்கும். யாரிடம் நல்ல சொற்கள் பேசப்படுகின்றனவோ அவருக்கும் இதமாக இருந்து இன்பத்தை அளிக்கும். எண்ணம் தீயதாக இருந்தால் அதனால் வரும் சொல்லும் தீயதாக இருக்கும்.

    மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் யாதெனில், பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து மதித்து இரங்கி உதவி செய்வதாகும்.

         பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. புலிக்கு மானின் உணர்வு தெரியாது. தெரிந்தால் பாம்பிற்கும், புலிக்கும் உணவு இல்லை. பட்டினியால்  இறக்க வேண்டியதுதான். ஆனால் மனிதன் அப்படியல்லவே! இனியவை கூறாமல் துன்பம் தரும் சொற்களைக் கூறினால் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் இல்லையா? அதனால் நட்பு நலம் கெடும் இல்லையா? பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து இரக்கம் கொண்டு உதவி செய்வதில்தான் அறவுணர்வு மலர்கின்றது.

          ‘இறைவழி வாழும் அறவாழ்க்கையே இறைவழிபாடு’ என்றிருக்கும்போது இனிய (அன்பான) சொற்களைப் பேசுவதுதானே இறைவழி வாழும் இறைவழிபாடு.

    இறை உணர்வின் பிரதிபலிப்பே அறவுணர்வு:

         அறவுணர்வு என்பது இறைவுணர்வின் பிரதிபலிப்பே ஆகும் இல்லையா? இந்த உண்மையைக் கண்டுபிடித்த திருவள்ளுவர் 2051 வருடங்களுக்கு முன்னரே ‘இனியவை கூறல்’ என்கின்ற அதிகாரத்தை(எண் 10) வைத்து அதில் பத்து கோணங்களில் ‘இனியவை கூறலின்’ பயன்களை எடுத்துரைக்கிறார். மேலும் ‘புறங்கூறாமை’ பற்றி எடுத்துரைக்க ஒரு அதிகாரத்தையே(எண் 19) வைத்து அதில் வழக்கம் போல் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார் அறிவை அறிந்த அறிஞர் திருவள்ளுவர்.

       மேலும் இறையின் பிரதிநிதியான மனிதன் எப்போதும் தனக்கும் சமுதாயத்திற்கும் அவனது முத்தொழில்களில் அதிகமாக பயன்படுத்தும் சொற்கள் பயனுள்ளனவாகவே அமைய வேண்டும் என்பதனை அறிவுறுத்த ‘பயனில சொல்லாமை’ (அதிகாரம் எண் 20) என்கின்ற அதிகாரத்தையும் இயற்றியுள்ளார்.

    திருவள்ளுவரை நம்முடைய மானசீகக் குருவாக வணங்குவோம்:

    dheaivappulavar

    ‘இனியவை கூறல்’ மட்டுமே ‘சொல்’ வகையில் சேர்ந்ததல்ல, ‘புறங்கூறாமையும்’, ‘பயனில சொல்லாமையும்’ ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே என்பதனை அறிந்து ‘பேசும் சொல்லிலும், சொல்லை பயன் படுத்துவதிலும்’ விழிப்போடு இருக்க வேண்டும்.

         அறிவின் முழுமைப்பேற்றினை (முக்தி) அடைய அகத்தை ஆய்வு செய்து கொண்டுவரும் அகத்தாய்வாளர்களாகிய நாம், குருநாதரின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவரை நாமும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு திருவள்ளுவரின் அருளையும் பெறுவோம்.

        திருவள்ளுவர் அருளியுள்ள அந்த அந்த முப்பது குறட்பாக்களையும் ஒரு முறை வாசித்து பயன் பெறலாமே! மனனம் செய்து கூட பயன் பெறலாமே! பெறுவோமா? வாழ்க வளமுடன்.

         நேரம் கிடைக்கும்போது புனித நூலான திருக்குறள் நூலைத் திறந்து பார்த்து, அன்றைக்கு என்ன இயற்கை/இறை ஆன்மசாதகனுக்கு அறிவுறுத்த நினைக்கின்றதோ அதனை வாசித்து அப்போதே இன்புற்று, அந்த இன்புறுதல் தொடர, ‘இன்புறுதலாகவே’ மாற அதனை நடைமுறைக்கு கொண்டுவராலாமே!

    அந்த முப்பது குறட்பாக்களில் ஒரு சில குறட்பாக்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.

    இனியவை கூறல் – அதிகாரம் 10

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்.”                                             . . .  குறள் எண் 96

    பொருள்: ஒருவன் இன்சொற் சொல்லுவானாகில் பாவம் தேய்ந்து புண்ணியம் வளரும்.

    ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்று பட்டிணத்தடிகள் கூறியதுபோல் வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆன்மா உடலெடுத்துள்ளது. எனவே ஆன்ம-தூய்மை சாதகர்கள் சொல்லைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சொல்தானே என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

    புறங்கூறாமை அதிகாரம் – 19

    அறம்கூறான் அல்ல செயினும், ஒருவன்
    ‘புறம்கூறான்’ என்றல் இனிது                                         . . .  குறள் எண் 181

    பொருள்: அறநெறிகளைப் போற்றாதவனாகவும். அறச்செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறங்கூறாதிருத்தல் நன்று என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். இவ்வாறு கூறுவதால்  பாவங்களைச் செய்வது பரவாயில்லை என்று பொருள் அல்ல. மனிதன் வாழ்க்கையில் புறங்கூறாமையை பாவமாகக் கருதுவதில்லை என்பதனை மனிதன் உணரவேண்டும் என்பதனை திருவள்ளுவர் வலியுறுத்த விரும்புகிறார். பாவமாக கருதுவதையே பழக்க தோஷத்தால்(பழக்கப்பதிவின் அழுத்தத்தால்) மறந்து பாவங்களைச் தொடர்ந்து செய்து வருகிறான் மனிதன். அப்படியிருக்கும்போது இதுவரை பாவம் என்று கருதாத ‘புறங்கூறுதலை’ இனிமேலும் செய்து விடக்கூடாது எனக் கருதி புறங்கூறாமை அதிகாரத்தில் இக்குறளை முதலாவதாக வைத்துள்ளார். புறங்கூறுவதால் என்ன பாவம் நடக்கின்றது?

        ஒருவரின் image கெடுகின்றது.

        புறங்கூறப்படுவதால் இருவருக்கும் பகைமை ஏற்படலாம்.

       பகைமை ஏற்படின் துன்பங்கள் வரலாம்.

      இவ்வளவு துல்லியமாகவா மனிதன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கலாம். உயிரற்ற சடப்பொருட்களில் மிக மிக துல்லியமாக இயங்குகின்ற ஒழுங்காற்றலே மனிதனிடம் ஆறாம் அறிவாகத் திகழ்கின்றது என்பதனை நினைவிற் கொள்க.

     இவ்விடத்தில் மகரிஷியின் கண்டுபிடிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதை அவர் வாய் மொழியாகவே அறிவோம்.

    உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
    உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
    உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்,
    உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்.’

    சடப்பொருட்கள் அணுக்களாக கலைந்துவிடும்:

    சடப்பொருட்களில் துல்லியமாக ஒழுங்காற்றல் செயல்படவில்லையானால் அந்த சடப்பொருட்கள் சடப்பொருட்களாக காட்சியளிக்க முடியாது. அணுக்களாக கலைந்துவிடும்.

        சாலையில் மகிழுந்து ஓட்டுனர் மற்றொரு வாகனத்தின் மோதாது விபத்து நடக்காமல் இருக்க துல்லியமாகத்தான் ஓட்டிச் செல்ல வேண்டும். விபத்து நடந்தபோது ‘மயிர் இழையில்’ உயிர் தப்பினார் என்கிறோமே! அது என்ன? அவ்வாறிருக்கையில் மனிதனும் துல்லியமாகத்தான் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். அயராவிழிப்போடு வாழக்கற்றுக் கொண்டால் துல்லியமாக நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது.

         இறையேதான் மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது, இறையிடம் உள்ள தன்மையைத்தானே மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இறையிடம் இல்லாத தன்மையையா எதிர்பார்க்கப்படுகின்றது? இறையிடம் இல்லாத தன்மை என்றே சொல்ல முடியாது.

        சொல்லால் நன்மையே விளைய வேண்டும் என்று சிந்தித்து வந்தோம். எப்போதும் இனியவை கூறுதலாலும், எப்போதும் புறங்கூறாதிருத்தலாலும் புண்ணியக்கணக்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாம் என்றும் அதனால் இறை அருள் பெருகிவரும் எனவும் சிந்தித்தோம். சொல்லின் மூன்றாவது வகையான ‘பயன் இல சொல்லாமை’யைப்பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிவோம்.

    பயன் இல சொல்லாமை:

    பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கள் பதடி எனல்.                                                             . . . குறள் எண் 196

    பொருள்: பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும்ப பல முறை சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க. மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

         திருவள்ளுவர் ‘பதர்’(பதடி) என்று சொல்கிறாரே என்ன அர்த்தம்? ஏன் பதருடன் ஒப்பிட்டு சொல்கிறார் என்பதனை கவனிப்போம்.

        பதர் என்றால் உள்ளீடற்ற நெல்(empty ears of grain, chaff) மற்றும் உபயோகமற்ற நபர் (worthless person)என்று பொருள்.

        சொல் எப்படி உருவாகிறது? சொல்லை வெளிப்படுத்துவதற்கு நாக்குதான் கருவி. இருப்பினும் அதற்கான ஆற்றல் சீவகாந்தம். சீவகாந்தம் என்பது என்ன? இறையின் ஆற்றல்தானே சீவகாந்தமாக செயலாற்றுகின்றது. சீவகாந்தத்தைப் பயன்படுத்தி பயனில்லாத சொற்களைப் பேசுவதால் இறை ஆற்றலான சீவகாந்தம் தான் வீணாகின்றது. எனவே யாருக்கும் பயனில்லாத சொல் பேசுதலை நெல்மணிகளுடன் பயன்படாது இருக்கும் பதருடன் ஒப்பிடுகிறார். பயன் படாது போனாலும் பரவாயில்லை. பேசுவரின் சீவ காந்தமும் விரயம் ஆகின்றது. கேட்பவரின் சீவகாந்தமும், நேரமும்(இறை ஆற்றல்) விரயமாகின்றது.

    மேலும் சொல் வகையைச் சார்ந்தவை எவை எவை?

        மேலும் அறிய வேண்டியது யாதெனில் நன்றியுணர்வும், பாராட்டுதலும் கூட ‘சொல் வகையை’ச் சார்ந்ததே. எப்படி? ஒருவர் செய்த உதவிக்கு பயன் பெற்றவர் நன்றி கூறுதல் அவசியம். ‘நன்றி’ என்று கூறுவது நாவினால் சொல்கின்ற சொல்தானே! இனியவை கூறல் அதிகாரத்திற்கு பின்னர் செய்நன்றி அறிதல் அதிகாரத்தை வைத்துள்ள காரணத்தை அறிய வேண்டும். ‘நன்றி’ என்று கூறுவது இனியவை கூறல்தானே! நன்றி கூறுதலோடு நின்றுவிடக்கூடாது. அதனை நினைவில் கொண்டு அவருக்கு ஏதாவது தேவை ஏற்படுகின்ற சூழல் வந்தால் திருப்பி உதவி செய்ய(reciprocation) வேண்டும்.

    செய்நன்றி அறிதல்:

    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு”                                  . . . குறள் எண்-107

    பொருள்: துன்பத்தைப் போக்கினவரின் நட்பை ஏழுபிறப்பிலும் நினைப்பர் பெரியோர்.

    (எழுமை வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினைக் குறிக்கின்றது)

    பாராட்டு:

    பாராட்டு என்பதும் ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே. பாராட்டு என்பது உயர்வாகக் கூறுதல், மெச்சிப் புகழ்தல் என பொருளாகின்றது. ஒருவர் செய்த செயலால் பயன் வருகின்றபோது அச்செயலை பாராட்ட வேண்டும்.  ‘மிகைபடச் சொல்லேல்’ என அவ்வைத்தாய் ஆத்திச் சூடியில்(89) அறிவுரை கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

       பாராட்டு என்கின்ற சொல்லிற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கத்தினை நினைவு படுத்திக் கொள்வோம்.  பாராட்டு என்பது இரண்டு சொற்களைக் கொண்டது, பார்+ஆடு=பாராட்டு. ஒருவர் செய்த செயலால் உலகமே(பார்) பயனடைந்து அதனால் மகிழ்ச்சி பொங்கி ஆடுதலால் வரும் சொற்களே பாராட்டு எனப்படுகின்றது என்பார் மகரிஷி அவர்கள்.

    அவ்வைத்தாய் எவ்வாறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆத்திச்சூடியில் அமுதமொழிகளால் அறிவுரைகளை கூறுவதனை நினைவு கூர்வோம்.

     அவ்வையின் ‘சொல்வகை’யைச் சார்ந்த அமுதமொழிகள்:

     

     

    இவ்வாறாக ஆத்திச்சூடியில் 108 ஒரு வரி அறிவுரைகளில் சொல்லை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று,

        திருவள்ளுவர் ஒரு அறிவுரையை ஒரு அதிகாரத்தில் பத்து கோணங்களில் அறிவுறுத்துவதுபோல்,

        அவரது சகோதரியும் நம்முடைய அருட்தாயுமான அவ்வை ‘பேசுவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பத்திற்கும் மேலான கோணங்களில் அறிவுறுத்துகிறார். 

    அல்லது கற்றுத்தருகிறார் என்பதனை அறிந்து மகிழ்வோம்.

    ஆத்திச்சூடி குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆன்மீகத்தில் வெற்றி பெரும் வரை அனைவருமே ஒரு வகையில் குழந்தைகள்தான். எனவே ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை படித்து அவ்வைத்தாய் கூறியுள்ளதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

    விரும்பும் இனியவை ஈடேற …. ?

     

    எல்லோரும் இனியவையே விரும்புவர்.

    ‘அறிவினர் சேர்தல், இனிது என்றும், அதனினும் இனிது, அவரை கனவிலும் நனவிலும் காண்பது தானே’ என்கின்ற அவ்வைத்தாய்

       ஆத்திச்சூடியில் ‘சான்றோர் இனத்திரு’ என்று ஒரு வரியில் கூறுகிறார். அதாவது சான்றோர்களிடம் சேர்ந்து இரு என்கிறார். இனியதை அனுபவிக்க சான்றோர்களிடம் சேர்ந்திருப்பவர் எவ்வாறு இருக்க வேண்டும்?

    சான்றோர்களிடம் சேர்ந்திருக்க …..?

        சான்றோர்களிடம் சேர்ந்திருப்பதற்கு என்ன சான்று? சான்றோர்களிடம் சார்ந்திருப்பவர் நல்ல சொற்களையே பேசாமல் இருந்தால் சான்றோரைச் சேர்ந்திருப்பதற்கு சான்றாகுமா? சான்றோர்களிடம் சேர்ந்திருத்தலின் பயனை அனுபவிக்க முடியுமா?

    எனவே சொற்களைப் பயன்படுத்துவதில் ‘மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்’ என்கின்ற அறிவுரையை நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும் என்பதே இதுவரை ‘சொல்’ பற்றி சிந்தித்ததின் பயன் என அறிந்து கொள்வோம்.

    நல்லதையே எண்ணுவோம். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். .

    எப்போதும் விழிப்புணர்வோடு இருப்போம்.

     இது வரை மனிதனின் முத்தொழில்களில் ஒன்றான சொல் பற்றி அறிந்து கொண்டோம். அடுத்ததாக ‘நேரிடை செயல்’(Direct action) பற்றி அடுத்த அறிவிற்கு விருந்தில்(12-08-2020-புதன்)

    வாழ்க அறிவுச் செல்வம் !                          வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading