இன்றைய விருந்து

  • FFC – 117-இறை அருள் பெற…….

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….

    FFC – 117

    09-09-2015-புதன்

    பரிணாமக்கசடுகள்:

    FFC-117-அறமே மதம்

    என்கின்ற பாடலோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

    பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவோடு பரிணாமக் கசடும் வந்து விட்டது என்று பார்த்தோம். இன்று அதிலிருந்து தொடர்வோம். பரிணாமக் கசடு என்றால் என்ன? பரிணாமக் கசடு வந்து விட்டது என்பது, விலங்கினப் பண்பும் மனிதனிடம் வந்துவிட்டது என்பதனைக் குறிக்கின்றது.

    விலங்கினப் பண்பு என்பது பிறர் வளம் பறித்துண்ணலாகும். புலி மானைக் கொன்று தின்பது பிறா் வளம் பறித்துண்பதாகும். பிறர் வளம் பறித்தலில், மூன்று கொடூரச் செயல்கள் நடக்கின்றன. அவையாவன,

    1. பிற உயிர் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
    2. பிற உயிரைச் சித்திரவதைச் செய்தல்
    3. கொலைசெய்தல்

    ஆகிய மூன்று செயல்கள் நடை பெறுகின்றன. விலங்கினத்தில் அது செயல்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் மனிதனிடம் காணப்பட்டால் அது மூவகைக் குற்றங்களாகி விடுகின்றன.

    புலி மானைக் கொன்று உணவாகக் கொள்வது இயற்கையால் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மனித அறிவிற்கு பிறா்வளம் பறித்தல் என்பது அநீதியானது. எனவே இவ்வகைக் குற்றம் புரிந்தவா்களைத் தண்டிக்கச் சட்டங்கள் உள்ளன. இருப்பினும் சட்டத்தின் கண்களுக்குத் தெரியாமலும் பிறர்வளம் பறித்தல் அடிப்படையாகக் கொண்டக் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எந்தவகைக் குற்றங்களாக இருந்தாலும் பெரும்பாலானக் குற்றங்கள் விலங்கினப் பண்பை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.

    புலி மானைக் கொல்லும் நிகழ்ச்சியில் புலிக்கு மானின் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்கத் தெரியாது. ஒரு வேளைத் தெரிவதாக வைத்துக் கொண்டால் புலி மானைக் கொல்லாது. இது சாத்தியமில்லை புலிக்கு. புலி புல்லைத்தான் தின்ன வேண்டியிருக்கும். ஆகவே விலங்கினப் பண்பில் பிறா் உணர்வை தன்னுணர்வு போல் மதிக்கும் பண்பு கிடையாது. அந்த விலங்கினப் பண்பே மனிதனிடம் இன்னமும் அதாவது மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் மறைய வில்லை. மனிதனின் தரம் மனித அளவிற்கு உயரவில்லை. ஆகவேதான் முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டா். இரதாகிருஷ்ணனுக்கு  “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை– Evolution is still not complete) என்கின்ற உண்மையை நம்மிடம்பதியவைக்க வேண்டிய அவசியம் வந்தது.

    புலி மானைக் கொன்று உணவாகக் கொள்கின்ற உதாரணத்தின் மூலம் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்பதனை விளக்கி, அந்த பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கசடாக உள்ளது என்பதால்.  “எல்லா மனிதர்களும் அவ்வாறு பிறர் வளம் பறித்தலாகிய கொலை செய்வதில்லை, எனவே விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் உள்ளது என்பது சரியில்லை” என ஒரு சிலர் நினைக்கலாம்.
    குடும்பங்களிலேயேகூட பிறர்வளம் பறித்தலைக் காணமுடியும். மாமியார் தன்மகள் போல் பார்க்க வேண்டிய மருமகளைச் சொல்லால் கடிவது விலங்கினப் பண்பையேச் சாரும். எப்படி? விலங்கினப் பண்பில் உள்ள, பிறர் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்காமை மாமியாரிடமும் உள்ளது. அதாவது தான் கடிவதால் மருமகள் துன்புறுவதை மாமியார் தன்னுணர்வு போல் கருதாமை தான் காணப்படுகின்றது. தெரிந்திருந்தால் அன்பாகச் சொல்லியிருக்கலாம். இது மருமகளுக்கும் பொருந்தும். மருமகள் மாமியாரை தாய் போல் கருதுகின்ற பெருந்தன்மை இருக்க வேண்டும். பொருந்தா குடும்பச் சூழலில் பிறக்கும் வருங்கால சமுதாயச் செல்வங்களான குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?

    நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயா்வு அளிக்கும் போது, அந்த உயர் பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பிற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்தான் தோ்ந்தெடுக்கப்படுவார். எப்படி பதவி உயர்விற்கு அப்பதவிக்கானக் கடமைகளை ஆற்றும் பொறுப்பிற்கானத் தகுதியும் திறமையும் அவசியமோ, அதுபோல் வாழ்க்கையில், மகளாக இருந்து மருமகளாக உயரும் போது அதற்கானப் பொறுப்பினை ஆற்றும் நற்குணத் தகுதிகளையும், நற்குணத் திறமைகளையும் பெற்று குணவதியாக, மகளாக இருக்கும் போதே பெற்றிருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் துணை புரிய வேண்டும். அம்மாவாக இருந்து மாமியாராக உயர இருக்கும் குடும்பத்தலைவிக்கும், மகளாக இருந்து மருமகளாக உயர இருக்கும் பெண்ணிற்கும் ஆலோசனைக் கூறும் பயிற்சி(counselling course) தேவையாக உள்ளது. அந்தத் தேவையினை ஏற்கனவே  ‘மனவளக்கலை’ பூர்த்தி செய்து வருகின்றது என்றால் மிகையாகாது. மனிதனை மாண்புடையவனாக்கும் பயிற்சியான மனவளக்கலையை திருமணத்திற்கு முன்பே, அதாவது பதினைந்து வயதிலிருந்து பத்து வருடங்கள் முறைப்படிக் கற்றுப் பயிற்சியும் செய்து வந்தால் இது போன்ற குடும்பச் சிக்கல்கள் தீர்ந்து இயல்பாகவே மாண்புடையக் குழந்தைகள் பிறக்க ஏதுவான சூழ்நிலை நிலவும்.

    இச்சிந்தனையின் ஆரம்பத்தில் நினைவுகூர்ந்த பாடலில், தன்மாற்றம் என்கின்ற பரிணாமத்தில், ஆதிமனிதர்கள் கூட்டத்தில், அறம் தோன்றிய நாளை அறுதியிட்டு கூறுகிறார். ஆனால் அவ்வாறு தோன்றிய, மூன்று அங்கங்களான ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவற்றை உள்ளடக்கிய அறம், மனித குலத்தில் வளர்ந்து செழிக்கவில்லை என்பதுதான் இன்றைய மனிதகுலத்தின் அவல நிலை.

    மனிதன் என்றால் அவனிடம் மனிதம் இருக்க வேண்டும். ஒழுக்கம், கடமை. ஈகை ஆகிய பண்புகள் இருந்தால்தானே அவனிடம் மனிதம் ஒங்கியிருக்கும். மனிதம் ஓங்கினால் அன்பும் கருணையும் மலரும். அன்பும் கருணையும் என்பது என்ன? ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் தானே அன்பும், கருணையின் வெளிப்பாடுகள். ஒழுக்கம் கடமை, ஈகை ஆகியவை இல்லாமல் எவ்வாறு அன்பும் கருணையும் மலரும்?!
    மனிதம் வெளிப்படுத்துகின்ற மனிதகுலநிலைக்கு இன்றைய மனிதகுலம் முன்னேறிவரவில்லை என்பதனை ஆதங்கத்துடன் தெரிவிக்கவே “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை-Evolution is still not complete) என்கின்ற உண்மையைக் கூறுகிறார் முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டா். இராதாகிருஷ்ணன். அடுத்த விருந்தில் 13-09-2015 ஞாயிறன்று தொடர்வோம்

    Loading

  • இறை அருள் பெற…….

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….

    FFC — 116

    06-09-2015–ஞாயிறு

     

    இறையே அறிவாக மனிதனிடம் உள்ளது. இறையையே மனிதன் தன்னிடம் வைத்துக் கொண்டு ஏன் துன்பத்துக்குள்ளாக வேண்டும்? மனிதனின் செயலில் விளைவாக வருவது இறை என்கின்ற நியதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறையே மனிதனிடம் அறிவாக இருந்தாலும், மனிதனுடையச் செயல்களுக்கேற்ப விளைவுகள் துன்பமாகக் கூட வரலாம். இறையே, முதல் மனுநீதிச் சோழன்.
    அறிவிற்கு விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் முன்னரே அதன் விளைவைக் கணித்து அச்செயலைச் செய்ய வேண்டும். ஏற்கனவே அச்செயலைச் செய்து அதன் விளைவை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அனுபவித்திருக்கலாம். மீண்டும் அச்செயலை இப்போது செய்ய வேண்டிய சூழல் வருமானால், ஏற்கனவே அச்செயலைச் செய்து அனுபவித்த அனுபவம் கவனத்திற்கு வந்து அச்செயலை செய்வதா வேண்டாமா என்கின்ற முடிவை அந்த நொடியிலேயே அறிவு எடுக்க வேண்டும் (Quick insight of the mind). நுண்மாண் நுழைபுலன் (விரைந்துணர் அறிவாற்றல், தெளிவும் விரைவும் கூடிய தன்மை = perspicacity) வேண்டும். நுண்மாண் நுழைபுலன் மூன்று சொற்களை உள்ளடக்கியது.
    1) நுண்: – நுண் என்றால் நுட்பம் அல்லது நுண்ணியது, கூர்மையானது என்று பொருள்.
    2) மாண்: – மாண் என்றால் மாண்புடையது என்று பொருள். அதாவது நுண்மாண் என்பது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்தன்மை எனலாம்.
    3) நுழைபுலன்: – நுழைபுலன் என்றால் ஊடுருவி அறியும் திறன்.

    dheaivappulavar

    தவறு செய்வது, நாணத்தை(வெட்கத்தை) ஏற்படுத்த வேண்டும். திருவள்ளுவர் மனிதனுக்கு இருக்க வேண்டிய உடைமைகளை(சொத்து, உரிமையுடையது) வலியுறுத்துவதற்கு,

    • அன்புடைமை,
    • அடக்கம் உடைமை,
    • ஒழுக்கம் உடைமை,
    • பொறை உடைமை,
    • அறிவு உடைமை,
    • அருள் உடைமை,
    • ஊக்கம் உடைமை,
    • ஆள்வினை உடைமை,
    • பண்பு உடைமை,
    • நாண் உடைமை                

     ஆகிய பத்து அதிகாரங்களை ஏற்படுத்தியுள்ளார். மனிதனுக்கு இருக்க வேண்டிய மற்றவைகளைக் கூறிவிட்டு கடைசியாக நாணம் இருக்க வேண்டும் என்கிறார். அப்போது மனிதன் முழுமை அடைகிறான். எனவேதான் நாணமுடைமையை கடைசியாகக் கூறியிருக்கிறார். நாணமில்லை என்றால் குடும்பத்திலிருந்து சமுதாயம் வரைக் குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். நாணம் என்பது சான்றோர்களுக்கு அணிகலன் என்கிறார். ஆகவே, வெட்கப்படவேண்டியிருக்கச் செய்கின்ற செயல்களாகிய தவறுகளைச் செய்யக் கூடாது. அந்த சான்றோன்மையாகிய பெருந்தன்மை இருந்தால், அறிவு எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நுணுகி ஊடுருவி அறிந்து முடிவு எடுக்கும். இதற்கு நினைவாற்றல் மிக மிகத் தேவை.
    ஆறாம் அறிவு கற்கும் திறனுடையது. எனவே ஆறாம் அறிவு தன்னுடைய எல்லாத் திறன்களையும் கற்க வேண்டும். வெறும் புலன்வழி வாழ்க்கையையே முக்கியமாகக் கருதி வாழ்ந்தால், அதாவது வெறும் அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே மனிதனின் எண்ணம் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அறிவு தன்னுடைய முக்கியமான, தன்னிடம் மறைந்து இருக்கின்ற திறன்களைக் கற்க இயலாது.

    பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவோடுபரிணாமக் கசடும் வந்து விட்டது. (கசடு என்றால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் கழிவு). பரிணாமக் கசடுகள் என்றால் என்ன என்று அடுத்த விருந்தில்(09-09-2015) சிந்திப்போம்.

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    FFC – 115

    02-09-2015–புதன்

    வறுமை ஏன் வருகின்றது?

    கொடிது ! கொடிது ! வறுமை கொடிது !
    அதனினும் கொடிது இளமையில் வறுமை?
                                       — அவ்வையார்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
                             — வள்ளளார்.
    தனியொருவனுக் குணவிலை யெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்
                                                —மகாகவி பாரதி மகான்.

    கடவுள் என்பவர் யார் என்று பார்த்தோம். இன்று வறுமை ஏன் வருகின்றது என்கின்ற வினாவிற்கானக் காரணத்தைப் பார்ப்போம்.
    மகரிஷி அவர்கள் பத்து வயதிலேயே வறுமையின் பிடியில் சிக்கியவர். சிறுவனாக இருந்தபோதே தறியில் உழைப்பார் மகரிஷி அவர்கள். ஒரு நாள் காலையிலிருந்து தறியில் வேலை செய்துவிட்டு வந்தவருக்கு நண்பகல் உணவாக கஞ்சிகூட பெற்றோர்களால் கொடுக்கமுடியாத வறுமை நிலையை அனுபவித்தவர். அவ்வையார் கூறியுள்ளது போல் இளமையில் வறுமை என்கின்ற மிகக் கொடிய நிலையை அனுபவித்தவர்.
    ஏன் இளமையில் வறுமை கொடியது என்கிறார் அவ்வையார்? இளமையில் பசியினைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் இளமை என்பது வளரும் பருவம். வளரும் நிலையிலேயே வறுமை இருந்தால் உடலளவில் எவ்வாறு வளர முடியும்? பிறகு குணத்திலேயும் வளர வேண்டியதுள்ளது. இளம் பருவத்தில் வறுமையின் கொடுமையில் வாழ்பவர்கள், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான் அவ்வையார் இளமையில் வறுமை கொடியதிலும் கொடியது என்கிறார்.
    எதனையும் அதன் போக்கிலே விட்டுவிடாமல் ஏழ்மை ஏன் வருகின்றது என வினாவினைக் கேட்டார் மகரிஷி அவர்கள். இன்பம், துன்பம் ஏன் வருகின்றன என வினவினார். தன்குடும்ப வறுமையைப் போக்க நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்வதன் மூலம் போக்க முடியும் எனக்கண்டறிந்தார். அதுபோலவே வறுமையை ஒரு அளவிற்கு சமாளித்தார். வறுமை இருப்பினும் தன்னுடைய நான்கு வினாக்களுக்கான விடைகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியோடு இருந்து வந்தார்.
    தனக்குள்ள வறுமைக்கு மட்டும் தீர்வு காணாமல், சமுதாயத்தில் உள்ள வறுமையையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். பொருள் வறுமை இல்லை, அறிவின் வறுமைதான் உள்ளது எனக் கண்டு பிடித்தார். பகிர்ந்துண்ணும் நிலைக்கு அறிவு நிலை பண்படாததை அறிவின் வறுமை என்கிறார். வறுமை என்கின்ற துன்ப அலை வீசும் போது மற்றவர்கள் எவ்வாறு நலமாக வாழ முடியும்?
    இயற்கை அன்னை ஒவ்வொரு உயிரையும் படைக்கும் முன்னரே அது வாழ்வதற்கான வளங்களை வைத்து விட்டுத்தான் படைக்கிறாள். ஏழ்மையில் சிலர் வாழ வேண்டும் என்றா படைத்திருப்பாள்? ஆகவே ஏழ்மை என்பது மனிதனால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. ஆகவே சமுதாயம் நினைத்தால் ஏழ்மையை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
    பொருளாதார ஏற்றத்தாழ்விற்குக் காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். பொருள்துறையில் சமநீதி தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

    “பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி
    பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
    சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த” வாழ்வு காண்போம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    “உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
    பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்”

    என்று உலகைத் தினந்தோறும் அவரது மாணவர்களையெல்லாம் வாழ்த்தச் செய்திருக்கிறார்.

    உலகநல வேட்பில்.

    “மக்கள் உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும் ” என்கிறார்.

    சமூகச்சிக்கல்களுக்கான காரணங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் என்று கூறி தீர்வுகளைக் கூறியிருக்கிறார்.

    மனித வாழ்க்கை அறநெறியாக இருக்கவேண்டும் என்று எண்ணி, ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டது அறம் என்று, “குலமுதலாய் பேதங்கள் கொள்ளும் நிலைமாற்றி

    பலரும் கூடி உழைத்துப் பங்கிட்டு வாழ்ந்திடுவோம்
    உலகில் பிறந்து விட்ட ஒவ்வொர் மனிதனுக்கும்
    நில உலகம் சொந்தமென்ற நீதிநிலை நாட்டிடுவோம்.” ……. என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இந்த நான்கு வினாக்களும் தனிமனித மற்றும் சமுதாய நலனைக் கருதியதாகின்றன. இந்த வினாக்களுக்கான விடைகள் இன்றுள்ள சமுதாயத்தை உய்விக்கச் செய்யவல்லன.

    இந்த மகோன்னத வினாக்கள் வேதாத்திரிய சிறுவனை பின்னர் மகானாக்கியது என்பதால், அவரைப் பற்றி மட்டும் சிந்திப்பதற்காக “மகானாக்கிய மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து சிந்தித்திருக்கலாம். ஆனால் மகானாகுதல் எனும் வாழ்வின் நிகழ்ச்சி முடிந்து விட்டதாகக் கருதாமல், “மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து மகானாகுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே மனித குலத்தில் அவசியமாகின்றது என வலியுறுத்தப்படுகின்றது.

    இதனை எண்ணித்தான் மகரிஷி அவர்கள் “ Vethathiri Maharishi Institute for Spiritual and Intuitional Education”. என்கின்ற ஆன்மீக கல்வி நிறுவனத்தை நிறுவி அதன்வழியாக யோகமும் மனித மாண்பும்” என்கின்ற கல்வியினை பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை கொண்டுசென்று மனிதர்களையெல்லாம் பண்பேற்றம் பெறுவதற்காக வழிவகைகள் செய்துள்ளார்.

    ஆகவே இந்த நான்கு வினாக்களுக்கும் விடைகள் தெரிந்து விட்டது, இனிமேல் இந்த வினாக்களை எழுப்பி விடைகாண வேண்டிய அவசியம் இல்லை எனக்கருதவே முடியாது. இந்த நான்கு வினாக்களுக்கான விடைகள் சரியா, எவ்வாறு சரி, அறிவுபூர்வமாக உள்ளனவா என ஆராய வேண்டும். அவ்வாறு ஒவ்வொரும் ஆராய்ந்து சரி என ஒப்புதல் வழங்கும் போதுதான் வேதாத்திரியம் மேலும் மேலும் பூத்து காய்த்து கனிகளாகிப் பயன்படுவதற்கு மக்களின் ஆத்மார்த்த எண்ண ஆதரவு திரண்டு உலக மக்களால் ஏற்கப்பட்டு, பாரதியாரின் இளைய சகோதரரான மகரிஷி அவர்கள் கனவு கண்ட உலக சமாதானம் விரைவில் மலரும்.

    FFC-115-2-9-15-வறுமையற்ற வாழ்வு

    என்கின்ற பாரதி மகானின் சத்திய வாக்கினை, அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக நிஜமாக்குவதற்காக இயற்கை அன்னை, தன்னுடைய தன்மாற்றத்தில் உறுதியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அவளுடைய குழந்தைகளான நாம் துணை நிற்போம். பேரறிவில் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை மகான்களின் அறிவாற்றலும் இவ்வுலகத்தை உய்விக்கட்டும். மகரிஷி அவர்கள் வறுமையற்ற வாழ்வு என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியினை நினைகூர்வோம்.பற்றிவாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    FFC-115-2-9-15- வறுமையற்ற வாழை்வு

    வாழ்க உலக சமாதானம். வருக உலக சமாதானம் விரைவில் என வாழ்த்துகிறோம்

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

    வாழ்க மனித அறிவு                              வளர்க மனித அறிவு

     

    FFC -114

     30-08-2015—ஞாயிறு

     4. இறைவன் என்பவர் யார்?

     

    FFC-114-30-08-15-கடவுள் உயிர் வினைப்பயன்

    இன்று மூன்றாவது வினாவான “இறைவன் என்பவர் யார்?” என்றும் “அவர் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார்?” என்கின்ற வினாவினை சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். மகரிஷி அவர்கள், அவருடைய தந்தையார் பழக்கியபடி கடவுளிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார். கடவுள் இருக்கிறார் என்கின்ற நம்பிக்கை மகரிஷி அவர்களுக்கு இருந்தாலும், அவருடைய உள்ளம் கடவுள் என்பவர் யார் என்கின்ற வினாவை சிறு வயதிலேயே எழுப்பியது.
    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோருக்கு கடவுளைக் காணாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.  பக்தியிலேயே திளைத்து ஒரு சிலர் கடவுளைக் கண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. காட்டிற்குச் சென்றுக் கடுந்தவம் புரிந்ததன் பயனாக கடவுள் காட்சி கொடுத்தார் என்றும் ஆன்மீக வரலாறுகள் செப்புகின்றன. கடவுளைச் சிலை வடிவில் வணங்கி கடவுளைக் கண்டவர்கள் கடவுளை உருவகப்படுத்தி பாடல்கள் அருளியுள்ளனர். சித்தா்கள், மனதை ஒருமுகப்படுத்தி கடும் தவம் புரிந்து கடவுளைக் கண்டார்கள் எனவும் செய்திகள் உள்ளன. சித்தர்கள் கடவுள் நிலையை அரூபம் என்றனர்.
    பக்தியின் வழியாக கடவுளைத் தரிசித்தவர்களும் அல்லது அரூப வழிபாட்டில் கடவுளை உணர்ந்தவர்களும் வாழ்க்கையில் ஒழுக்கச் சீலர்களாக இருந்தனர் என்பதனை அவர்களது வாழ்க்கை வரலாறுகள் தெரிவிக்கின்றன. அறவாழ்வு வாழ்ந்துள்ளனர். அதுதானே சமுதாயத்திற்கு அவசியம். கடவுள் அன்பும் கருணையுமானவன் என்கின்றனர் இருதரப்பினருமே. இரு தரப்பினருமே கடவுள் நிலையைப் பற்றியும், மனிதன் எவ்வாறு அறவாழ்வு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி அறநூல்கள் எழுதியுள்ளனர். இருப்பினும் சாதாரண மனிதனுக்கும் விளங்குகின்ற அளவில் கடவுள்நிலை விளக்கம் இல்லை.
    தந்தை யார்? தாய் யார்? என்று ஒவ்வொரு மனிதனுக்குத் தெரிகின்றவாறு கடவுள் யார்? என்கின்ற கடவுள் நிலை விளக்கம் இல்லை. கடவுள் நிலையைப்பற்றி குழப்பம் தான் உள்ளது. சமுதாயச் சிக்கல்களுக்கானப் பல காரணங்களில் கடவுள் நிலையைப் பற்றியக் குழப்பமும் ஒன்று. இதனை மகரிஷி அவர்கள் சமுதாயச் சிக்கல்களும் அதற்கான ஆய்வுத் தீா்வுகளும் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
    மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணமும் எழுந்து விட்டது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைய வேண்டும் என்று சுவாமி விவோகானந்தர் கூறியுள்ளார். முன்னவர் விரும்பினார். அதனையே பின்னவரான உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி, ஐன்ஸ்டீன் “மெய்ஞானமில்லாத விஞ்ஞானம் நொண்டி, விஞ்ஞானமில்லாத மெய்ஞானம் குருடு”, (Science without Religion is lame, and religion without Science is blind) என்று கூறியுள்ளார். அடுத்த பின்னவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்துவிட்டார்.
    எல்லோரும் கடவுளைக் காண முடியவில்லை. நம்பிக்கையில்தான் கடவுள் வணங்கப்படுகிறார். அதுவும் இணக்கமில்லாத வணக்கம்தான் நடைபெறுகின்றது. மூடநம்பிக்கைகள் பெருகிவிட்டன. ஆகவே கடவுளை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆதிமூலம் என்று கடவுளுக்குப் பெயா் வைத்திருந்தாலும், அதனை வைத்து கடவுள் ஏன் ஆதிமூலம் என அழைக்கப்படுகிறார் என்று கேள்வி கேட்டு கடவுள் நிலையை உறுதி படுத்தப்படுவதில்லை.
    கட+உள்=கடவுள் என்றும், இப்பிரபஞ்சத்தை (ஆட்சியின்றி என்பது கவனிக்கத்தக்கது) ஆண்டு கொண்டிருப்பதால் ஆண்டவன் என்றும், கடவுள் எங்கும் நீக்கமற இருக்கிறான் என்று கூறி, அதாவது இறைந்து கிடப்பதால் கடவுளுக்கு இறைவன் என்கின்ற பெயரும் உள்ளன. ஆனால் கடவுள் நிலை அறுதியிட்டுக் கூறப்படவில்லை. கடவுள் எல்லாவற்றையும் விட வலிமையானவன் அதாவது mightier than all என்பதால் Almighty என்றும்,   G(generation)+O(operation)+D(destruction)=GOD என்கின்ற உருவாக்கிய சொல்லாக கடவுளை ‘GOD’  என்றும் ஆங்கிலத்தில் கடவுளை அழைக்கின்றனர்.
    இந்த நிலையிலே கடவுள் என்பவர் யார் என்றும், அவர் ஏன் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவினை அரூபமான இயற்கேயே/இறையே
    சிறுவர் வேதாத்திரியிடம் கேள்வியாக வந்து,
    அதுவே தன் நிலையை அப்பட்டமாக தெளிவாக விடையாகத் தந்து
    வேதாத்திரியை மகானாக்கி, மகாத்மாவாக்கி,

    அறிவினரைச் சேர்தல் மூன்றாம் இனிதாக அவ்வையார் கூறும் அறிவினராக்கி(குருவாக்கி),
    மனிதன்(துவைத நிலையில்) ஏற்படுத்திய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று குருவைப்பற்றிக் கூறுவதற்கிணங்கத் தானே வேதாத்திரிய வடிவில் குருவாகி,
    உலகிற்கு அறிவொளியாக காட்சி கொடுத்துள்ளது. இதுதான் ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத விஞ்ஞானம்.

    சுருக்கமாக, இயற்கை திருவேதாத்திரியத்தின் வாயிலாக இறையைப்பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

    “வெட்டவெளியேத் தெய்வம்”
    வெட்ட வெளியை பாழ்நிலை, அது ஒன்றுமில்லாதது என்று கூறப்பட்டு வந்ததற்கு, மாற்றாக, அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகிய நான்கு தரங்களை(qualities as adjectives)யும், அது மட்டுமல்லாது தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கின்ற மூன்று திறன்களையும் கொண்டுள்ளது என்கின்றது வேதாத்திரியம்.

    மேலும் உருவமில்லாத வெட்டவெளி எவ்வாறு உருவமுள்ளதாக முடிந்தது என்பதனை விளக்குவதற்குக் காரணம் அதற்கு தன்னிறுக்க ஆற்றல் (self compressive force)இருந்தது என்கின்றது வேதாத்திரியம்.
    அதற்கு மேலும் தனித்தனியே வெளியிலிருந்து துகளானது எவ்வாறு சுழற்சி பெற்று, எவ்வாறு அவைகள் ஒன்று கூடி தொகுப்பாகி விண்ணாகவும் மற்ற பஞ்ச பூதங்களாக முடிந்தது என்பதற்கு காரணமாக இருந்தது சூழ்ந்தழுத்தும் ஆற்றல் surrounding pressure force என்கின்றது வேதாத்திரியம். வேதாத்திரியம் அருளியுள்ள ஒரு கவியுடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    FFC-114-30-08-2015- வெட்டவெளி சக்தி யில்லையானால்

     இவ்வளவு திட்டவட்டமாக, அறுதியிட்டு, தெளிவாக இதுவரை காணமுடியாதிருந்த தெய்வத்தை அவரவர்களே கருத்தியலாக அறிந்து கொண்டு, அதனை செய்முறையாகவும்-அதாவது தவத்தால் உணரச் செய்துள்ளது வேதாத்திரியம். இது காலத்தின் கட்டாயமும் அவசியமும். இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம். அடுத்த விருந்தில் (02-09-2015-புதன்) நான்காவது மகோன்னத வினாவான ‘வறுமை ஏன் வருகின்றது’ பற்றி சிந்திப்போம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     FFC – 113

    26-08-2015—புதன்

    3. உயிர் என்பது என்ன?

    FFC-113-26-815- உயிர்

    கடோ உபநிடதத்தில், சிறுவன் நசிகேதன் யமனிடம் பெற்ற மூன்று வரங்களில் கடைசி வரமாக உயிரைப்பற்றி கேட்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யமனோ, தேவர்களுக்குக் கூட அந்தக் கேள்விக்கு விடை தெரியாது. ஆகவே அதனைத் தவிர்த்து வேறு ஏதாவது உலகியல் இன்பங்களை வரமாகக் கேட்கச் சொல்கிறான். ஆனால் நசிகேதன் அதனை மறுத்துவிட்டான். பல வழிகளில் யமன் அந்த கேள்வியினைத் தவிர்க்க விரும்பினான்.

    கடைசியில் அத்யாத்ம யோகத்தால்தான் உயிரைப்பற்றி அறிய முடியும் என்று கூறி விட்டு யமன் அங்கிருந்து சென்று விடுகிறான். நசிகேதன் பல மாதங்கள் அங்கேயே இருந்து தவம் புரிந்து முடிவில் ஆன்மாவைப்பற்றி அறிகிறான். முதன் முதலில் ஆன்மாவைப்பற்றி அறிந்தவன் நசிகேதன் எனப்படுகின்றது. அத்தகைய சிறப்பைப் பெற்ற உயிரைப்பற்றி வேதாத்திரியத்தின் துணை கொண்டு அறிய இருக்கிறோம்.
    ஒருவரின் ‘இறப்பினை’ தெரிவிக்க அவரது உயிர் பிரிந்து விட்டது எனப்படுகின்றது. உயிர் உடலை பிரிந்து விட்டது என அறிய முடிகின்றது. ஆனால் உடலை விட்டு பிரிந்த உயிர் எங்கு சென்றது என்று தெரியுமா? தெரியாது? இதைத்தான் நசிகேதன் யமனிடம் அன்று கேட்டான். ஆனால் யமன் அதற்கு வாய்மொழியாக பதிலளிக்கவில்லை. நசிகேதன் யமனிடம் கேட்டு பின்னர் தானே தவமிருந்து விடையைப் பெற்றான். அந்நிலையினை மாற்றி இப்போது இயற்கை/இறை ஒருமணிநேர வகுப்பிலேயே உயிரைப்பற்றிய விளக்கம் வேதாத்திரியத்தின் வாயிலாக அளித்து வருவது வேதாத்திரியம் அருள்துறைவளர்ச்சியில் ஏற்படுத்தியுள்ள திருப்புமுனையாகும்.

    1) உயிர் பிரிந்ததை படுக்கையில் உள்ள நோயாளியைச் சுற்றியிருந்த யாரும் கவனிக்க முடிவதில்லை.
    2) உயிர் பிரிந்த உடல் எரிக்கப்படுகின்றது. ஆகவே உயிர் எரிக்கப்படுவதில்லை.
    இந்த இரு நிகழ்ச்சிகளிலிருந்து
    உயிர் என்பது ஆற்றல் என்றும்,
    அதனால் அதனை அழிக்க முடியாது என்றும்,
    ஆற்றல் என்பதால் அதனைக் கண்களால் காணமுடியாது என்றும் தெரிகின்றது.

    நசிகேதன் அன்று அத்யாத்ம யோகத்தால்(ஆன்மாவுடன் இணைதல் என்று பொருள்) உயிரைப்பற்றி அறிந்ததை இன்று மனவளக்கலைஞர்கள் உயிரறிவை கருத்தியலாகவும், செய்முறைப்பயிற்சியிலும் அறிந்து கொண்டிருக்கின்றனர். கருத்தியலாக தெரிந்தாலும், செய்முறைப்பயிற்சியான தவம் மற்றும் தெளிவின் மூலமாக உயிரறிவை தானாகவே பெறுவதுதான் உயிரைப்பற்றித் தெரிந்து கொண்டதற்கான பொருள். மனிதன் உத்தமனாக, அதுதான் உத்தமம்.

    அப்போதுதான் மனிதனிடம் அறவுணர்வு மேலோங்கும். மனிதனிடம் உள்ள விலங்கினப்பண்பு செயலிழந்து, அறவுணர்வு தழைக்கவேதான் ஆன்மீகம் என்கின்ற அருள்துறை வளர்ச்சியடைந்து வருகின்றது.
    வறுமையை நீக்க எவ்வளவுதான் பொருள்துறை வளர்ச்சியடைந்து வந்தாலும்,
    அறிவின் வறுமையை நீக்கக்கூடிய அருள்துறை வளர்ச்சியடையும் அளவிற்குத்தான்
    மனிதகுலம் வறுமை நீங்கி, தன் பூர்வீகச் சொத்தான் அமைதியினை அனுபவித்து வாழ முடியும்.

    எனவே இன்று உயிர் என்பது என்ன என்கின்ற இரண்டாவது வினாவினைச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். இது வரை உயிரைப் பற்றிய விளக்கம் விஞ்ஞானத்தில் இல்லை. ஆனால் உயிர் என்பது என்ன என்கின்ற வினா எழுந்து அதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு இயற்கை/இறை விளக்கம் அளித்துள்ளது. உயிர் கண்களுக்குத் தெரியாது. ஆனால் இருக்கின்றது. இல்லை என மறுக்க முடியாது. உயிர் இருப்பதை உணரலாம். அப்படியானால் உயிர் எவ்வாறு உள்ளது?
    இப்பிரபஞ்சத்தில் கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய, ஆனால் இருக்கின்ற பொருள் என்ன?
    பஞ்சபூத தன்மாற்றத்திற்குப் பிறகுதான் உயிரினங்கள் தோன்றியுள்ளன. பஞ்சபூதங்களில் மிகச் சிறியதும் கண்களுக்குத் தெரியாததும் எது? விண்தான் பஞ்சபூதங்களில் கண்களுக்குத் தெரியாத ஒன்று. பஞ்சபூதங்கள் தோன்றிய பிறகு, பஞ்சபூதக் கலவைகளால்தான் உயிரினங்கள் தோன்றியுள்ளன.
    பஞ்ச பூதங்களிலிருந்துதான் உயிர் வந்துள்ளது என்கின்றபோது, பஞ்சபூதங்கிளிலேயே கண்களுக்குத் தெரியாத ஆனால் இருக்கின்ற விண்தான் உயிராக வந்துள்ளது.
    இப்போது உயிர் என்பது என்ன, அது எவ்வாறு உடலில் இயங்குகின்றது என்கின்ற வினா எழுந்ததால் இயற்கை அருளிய விடைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

    1) இயற்கை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்குப் பஞ்சபூதங்கள் உருவான வரலாற்றினைத் தெரிவித்துள்ளது. பஞ்ச பூதங்கள் உற்பத்திப் பற்றியச் சிந்தனையில் மகரிஷி அவர்கள் ஈடுபட்டிருந்த போது, மகரிஷி அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை “பஞ்சபூதப் பூங்காவிலே உலாவினேன்” என அவரைச் சொல்ல வைத்து இயற்கையும் மகிழ முடிந்தது.

    2) ‘உயிர்’ ஒரு மறை பொருளாக இதுவரை இருந்ததை, இப்போது விரும்பியவர்களுக்கு உணரச்செய்கின்றது.

    3) மனமும் ஒரு மறைபொருளாக இருந்ததை இப்போது விளக்கப் பொருளாக மாற்றியுள்ளது இயற்கை. மகரிஷி அவர்கள் ஒரு முறை ஆங்கிலத்தில் மனம் என்கின்ற தலைப்பில் அருளுரை ஆற்றும்போது கூறியதை இப்போது நினைவு கொள்வோம். மகரிஷி. அவா்கள் கூறியதாவது: “I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind.” இவ்வாறு அவர் கூறியது எவ்வளவு சரி என்று, மனதைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளேக் கூறும்.

    4) உயிர் இருக்கும் வரை தான் மனம் செயல்படுகின்றது. இதனை யாவருமே அறிவர். ஆகவே மனதிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்புதான் என்ன? அந்த தொடர்பினை எளிய வாக்கியமாகிய “உயிரின் படர்க்கை நிலைதான் மனம்- The extended activity of life force is mind” என்பதன் மூலம் மிகத் தெளிவாக அறிய முடிகின்றதல்லவா? இதுவே மனதிற்கான எளிய வரையறையாக அமைந்து விட்டது. இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்ட மனதிற்கான வரையறை விளக்குவதற்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதப்பட்டுள்ளன மகரிஷி அவர்களால். இது மட்டுமா முடிந்தது இயற்கைக்கு? மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ளத் தொடர்பை, சுத்த அத்வைத உண்மையை, நான்கு வார்த்தைகளால் ஒரு வரையறையாகவே சொல்ல முடிந்துள்ளது. அது இதோ!

    5) மனதின் மறு முனை தெய்வம்(The other end of mind is God) என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் மானசீக குருவான திருமூலர் அருளிய “உள்ளம் பெருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற உண்மை இதன் மூலம் விளக்கப்பட்டுவிட்டது.

    6) ஆன்மீக நூல்கள் “நீ உடலல்ல, நீ ஆத்மாவே என்கின்றது.” ஆத்மா என்ன என்று தெரிந்தால்தானே ஆத்மாவாகிய நான் யார் என்றும் நான் எவ்வளவு சிறப்புடையவன் என்றும் விளங்கும். ஆகவே ஆத்மா என்ன என்றும், அது தெய்வீக நீதி மன்றம் என்றும் தெரிவித்துள்ளது. “Fraction demands. Totality supplies.” என்பார்கள் மகரிஷி அவர்கள். பின்னமான வேதாத்திரிய சிறுவர் பன்னிரண்டு வயதிற்குள் எழுப்பிய வினாக்களுக்கு முழுமையாகிய இயற்கை/இறை (Totality) கொடுத்ததுதான் இவ்வளவு அறிவு பூர்வமான வேதாத்திரிய விளக்கங்களும்.

    “உற்றுப்பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே” என்று பார்த்தசாரதி சதகம் கூறுவது இப்போது விளங்குகின்றது.

    ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்ற அறிஞர் திருமூலரின் சத்திய வாக்கு விஞ்ஞான அடிப்படையில் விங்குகின்றது.

    மேலும் மகாகவி பாரதியார் கூறும்  ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்பதும் விளங்குகின்றது.

    FFC-110-FIN- காக்கைக்

    அடுத்த (30-8-2015 ஞாயிறு) அறிவிற்கு விருந்தில் கடவுள் என்பவர் யார் என்கின்ற வினாவினை எடுத்துக் கொண்டு சிந்திப்போம்.

    Loading