இன்றைய விருந்து

  • தன்குறைகளை அறிவதே ஞானம்

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

     FFC – 108

     09-08-2014 ஞாயிறு

    self_purifying

     

          தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்வதே ஞானம் என்கிறார் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள். குறைகளை அறிந்து கொள்வதே ஞானமா? தன் குறைகளைத் தானே அறிபவன் அத்துடன் சும்மா இருந்து விடுவதில்லை. ஏனெனில், வள்ளுவர் கூறுவதுபோல் சான்றோர்களின் அணிகலான நாணம் அவனிடமும் உள்ளதால் தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வான், தன்குறைகளை அறிந்து கொண்டு தன்னை திருத்திக் கொள்ளும் போதுதான் அவன் தன் குறைகளை அறிந்தவன் ஆகிறான். அவனே தான் பின்னர் சான்றோனாகிறான். ஞானியாகிறான்.

         தன்குறைகளை அறிந்து கொள்பவன், எந்த அளவிற்கு ஆழ்ந்து தீவிரமாகத் தன்னை திருத்திக் கொள்ள முயல்கின்றானோ அதற்கேற்ப திருந்துகின்ற சூழலும் வாய்ப்பும் ஏற்படும். அறிவினர்ச் சேர்க்கையும் உண்டாகும். தன்குறைகள் தனக்கே தெரிய ஆரம்பிப்பதும், தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதுமே அறிவிற்கு ஏற்படுகின்ற தெளிவினால்தான் சாத்தியமாகின்றது. இயற்கையே ஆதிநிலையில் பேரறிவாக இருந்தது, மனித அறிவாக தன்னையே உணர்ந்து கொண்டு மகிழ்வதற்காக மலர்ந்துள்ளது.

         ஆனால் தனது பயணத்தில் பரிணாமக் கசடுகளைச் (விலங்கினப்பண்பை) சுமந்து கொண்டு வந்துவிட்டது மனித அறிவு. அந்த பரிணாமக் கசடுகள்தான் மனிதனிடம் குற்றங்குறைகளாக உள்ளன.  “எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம்” என்கின்ற ஆதங்கப் புதிரை இன்னமும் கொண்டதாகவே உள்ளது மனித மனம்.

         ஆகவே மனிதனுக்கு தன் குறையை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆர்வம் வந்து விட்டால் எல்லாம் வல்ல இயற்கையே திருந்துகின்ற சூழலையும், நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றது. அந்த இயற்கையின் ஏற்பாடுதான் — அவ்வையார் கூறும் அறிவினரின் அல்லது தன்னை உணர்ந்த குருவின் சேர்க்கையும், பிறகு அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதில் இன்பம் கண்டு பிறவிப் பயனை இப்பிறவியிலேயே அடைதலும்.

    பொதுவாக ஞானம் தேடுவதை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் ஞானம் தேடி ஞானியாகிவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்கின்ற தவறானக் கருத்து நிலவி வருகின்றது. ஞானம், தேடிப் பெறுவதன்று. அறிவு தனக்கு ஏற்படுத்திக் கொள்கின்ற முழுமையானத் தெளிவே ஞானம். அறிவு மேலும் மேலும் தெளிவு அடையும்போது, அறிவின் குறைகள் படிப்படியாக நீங்குதல் ஏற்படும். எனவே ஞானம் என்பது குறைகள் நீங்கிய அறிவின் நிலை என்றுதானே பொருளாகின்றது. ஞானம் என்பது அறிவின் ஒளியாகும். எப்படி? இருட்டில் இருக்கும் அறிவிற்கு ஞானம் ஒளியைத் தருகின்றது. அறிவொளியே ஞானம்.

    ஞானம் என்கின்ற சொல்லின் பொருளென்ன?

    • ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை,
    • முழுமையான அறிவு என்பதனைக் குறிக்கின்றது.

    அனைத்தும் அறிந்த நிலை என்றால் அறிவிற்கு குழப்பம், சந்தேகம் முதலியவை நீங்கி ஏற்படும் துலக்கம் என்று பொருள். அதாவது ஞானம் எனில் தெளிவு என்று பொருள்.

    முழுமையான அறிவு என்றால் அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகிய குறைகள் நீங்கிய நிலை. மனித அறிவு ஞானம் ஏற்படுவதற்கு முன்னர் குறைவுடைய அறிவாக இருக்கின்றது. ஆதலால்தான் மனவளக்கலையின் இறுதிப்பயன் அறிவின் முழுமைப் பேறு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஞானம் என்பது பற்றி மகாகவி பாரதியார், மற்றும் அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் கூறுவதையும் பார்ப்போம்.

    மகா கவி பாரதியார் தெளிந்த நல்லறிவை ஞானம் என்கிறார். தெய்வப்பாடல்கள் வரிசையில், ஒருபாடலில் “தெளிந்த நல்லறிவு வேண்டும்” என தெய்வத்தை வேண்டச் சொல்கிறார். அப்பாடலை நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அன்னையை வேண்டுதல்
     “எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
    தெளிந்தநல் லறிவு வேண்டும்;
    பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பனிபோல,
    நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்.”  — மகா கவி பாரதியார்.

    எதற்காகத் தெளிந்த நல்லறிவை கேட்கச் சொல்கிறார் மகா கவி? பாவங்களை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே  “என்னுடைய பாவங்களைப் போக்கிட வேண்டும்” என இறையை மீண்டும் மீண்டும் வேண்டுவது என்பது அறிவின் மடமையன்றோ. செய்த பாவத்திற்கான பாதிப்புகள் தனக்கும் சமுதாயத்திற்கும் வந்து கொண்டே இருக்குமல்லவா? பாவங்கள் செய்யாத தெளிந்த நிலைக்கு அறிவு உயர்ந்து விட்டால் பாவத்தின் விளைவுகளான தீமைகள் தனக்கும் சமுதாயத்திற்கும் நிகழாமல் இருக்குமல்லவா? பாவங்கள் செய்யாத நிலைக்கு உயர்ந்த அறிவு நல்லறிவுதானே. நல்லறிவில் தெளிவும் சேர்ந்து விட்டால் எவ்வளவு நலன் பயப்பதாக இருக்கும். எனவே தெளிந்த நல்லறிவை வேண்டச் சொல்கிறார் மகாகவி.

         நல்லவை எண்ணாததற்கு முன், தீயவைகளை எண்ணியதால்தான், பாவங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று அறிந்து கொள்வதற்கும், இனிமேல் நல்லவைகளையே எண்ண வேண்டும் என்று விரும்புவதற்கும், ஏற்கனவே செய்துள்ளப் பாவங்கள் நீங்க வேண்டும் என இறைவியை வேண்டுவது என்பது அறிவு தெளிந்தால்தான் சாத்தியமாகும். அந்த அறிவுத் தெளிதல் ஏற்பட்டு விட்டால் கெட்ட அறிவு நல்லறிவாக மாறிவிடும். தெளிதல் ஏற்பட்ட நல்லறிவுதான் தெளிந்த நல்லறிவு எனப்படும். அதாவது தன்னிடமுள்ள குறைகளை அறிந்து கொள்வதற்கு தெளிந்த நல்லறிவு வேண்டும். அதனால்தான் தெளிந்த நல்லறிவை இறைவியிடம் வேண்டச் சொல்கிறார் பாரதியார்.

    அடுத்ததாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் பற்றிக் கூறுவதனைச் சிந்தி்ப்போம்.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் என்பதற்கு, பொதுவான மற்றும் சிறப்பான விளக்கம் தருகிறார்.
    ஞானத்திற்கான பொதுவான வார்த்தை விளக்கம் தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    சிறப்பான விளக்கம் அறிவையறிந்த தெளிவு என்கிறார்
    அறிவின் இருப்பிடத்தை அறிந்து இன்புற்ற மகரிஷி அவர்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க, அவ்வின்பத்தை அனுபவிக்க அன்பர்களையெல்லாம் அழைப்பதைக் கவனிப்போம்.

    அழைப்புக் கவி
    அன்பர்களே, வாரீர்!
    அறிவின் இருப்பிடம்
    அறிந்து இன்பமுற
    அன்பர்களே வாரீர்        என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஞானம் என்கின்ற சொல்லிற்குப் பொதுவான அர்த்தம் தெளிவு. தெளிவு என்பது யாருக்கு? எந்த ஒன்றைப் பற்றியும் அறிந்து கொள்வதில், குழப்பம், சந்தேகம் இன்றி அந்த ஒன்றைப் பற்றி அனைத்தையும் அறிந்த அறிவின் நிலை தான் தெளிவு. உதாரணத்திற்கு சிறந்த வழக்குரைஞரை சட்ட ஞானமுடையவர் என்கிறோம். சிறந்த பாடகரை இசை ஞானம் உள்ளவர் என்கிறோம். எந்தத் துறையில் சிறந்து விளங்குகிறாரோ அந்தத்துறையில் ஞானமுடையவர் என்கிறோம். பணியின் நிமித்தமாக மனிதர்கள் வெவ்வேறுத்துறையில் இருந்தாலும் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே சிறப்பாக வாழ்வதற்கு ஞானம் வேண்டும். அதனை வாழ்க்கை ஞானம் எனலாம். வாழ்வது ஒரு கலை.
    எதற்காகப் பிறந்தோம்?
    கடைசியாக எங்கே செல்ல இருக்கிறோம்?
    ஏன் துன்பம் வருகின்றது?
    வந்த துன்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
    துன்பமில்லாமல் வாழ முடியாதா?
    ஆகிய வினாக்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.

    பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்து பூர்வீகச்சொத்தான அமைதியை அனுபவிக்க அறிவிற்கு வேண்டியத் தெளிவுதான் வாழ்க்கை ஞானம் எனலாம்.

    அதற்கு, “நான் – நான்” எனக்கூறிக்கொண்டிருக்கும் அறிவு தனது இருப்பிடத்தை, அதாவது தனது மூலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மீண்டும் தன் மூலத்தோடு இணைத்துக் கொண்டால் இன்புறலாம், பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கலாம். அறிவு தன்னை அறிந்து கொள்ளும்போது தெளிவு கிடைக்கின்றது. அந்தத் தெளிவினை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். அந்நிலை எய்திய அறிவு முழுமை பெற்ற அறிவாகின்றது.

    அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தெளிவினால் வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து வாழ முற்படுவான் மனிதன். நிலையாமையை அறிந்து கொள்வதும் ஞானம் தான். மனிதன் இப்போது தன்னிடம் உள்ள குற்றங்குறைகளை அப்படியே வைத்துக் கொண்டு ஞானம் பெற முடியாது. தெளிவாகிய ஞானம் பெறுவதற்குப் பல பிறவிகளாகத் தன்னிடம் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள குறைகளை அறிய வேண்டும். அந்த குறைகளை அறியும் நிலைக்கு வந்த மனிதன் தன்னை திருத்திக் கொண்டு வாழ முற்படுவான்.

    மனிதனிடம் உள்ள குறைகள் என்னென்ன?

    தீய எண்ணங்கள்,

    தேவையில்லாத ஆசைகள்,

    சினங் கொள்வது,

    கவலையுறுதல் மற்றும்

    தான் யார் என உணராமை ஆகியவைகளாகும்.

    பொதுவாக, ஞானவானைத் தவிர, தன்முனைப்பு இல்லாத மனிதர்கள் கிடையாது. ஆகவே தன் குறையை அக்கறையோடு  பிறர் எடுத்துச் சொன்னாலும் அதனை தன்முனைப்பு கொண்ட மனம் ஏற்க மறுக்கும். சரி தானாகவாவது குறைகளைக் கண்டுபிடிக்குமா அறிவு என்றால்
    அங்கே இரண்டு காரணிகள் குறுக்கிடுகின்றன .

    1. ஒன்று பரிணாமக் கசடுகளால் வந்த அறிவின் குறைபாடு.அந்த ஒன்றும் மீண்டும் மூன்றாக பரிணமிக்கின்றது. அவை, அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகியன.

    அறியாமை இருந்தால் தன் குறையை எப்போதுமே கண்டுபிடிக்க இயலாது. குறைகள் இருந்தால் அங்கே அதன் விளைவுகள் துன்பங்கள்தான். அறியாமலோ அல்லது அறிந்தோ செய்தாலும் இரண்டிற்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. சூடான பாத்திரத்தை, அறியாது குழந்தை தொட்டாலும் சரி அல்லது தாய் தொட்டாலும் விளைவு சுடும். விளைவைத் தெரிந்தோ அல்லது தெரியாது செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு நிச்சயம் உண்டு. அங்கே தாய் சூடானப் பாத்திரத்தைக் குழந்தை தொடாதவாறு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். தாயின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் தான் குழந்தை சூடான பாத்திரத்தை தொட்டு சூட்டினால் வந்த புண்ணை அனுபவிக்கின்றது. குழந்தையும் அனுபவிக்கின்றது. தாய் அதைவிட அதிகமான துன்பம் அனுபவிக்கிறாள். விளைவை அறிந்து செயல் செய்தாலும்(கற்றார்) அல்லது விளைவை அறியாது(கல்லார்) செயல் செய்தாலும் விளைவு உண்டு என்பதனை ஒரு கவியில் மகரிஷி அவர்கள் கூறும் வரிகளை நினைவில் கொள்வோம்.

    “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்

    காணும் இன்ப துன்பமவன் ” . . . . . என்கிறார் மகரிஷி அவர்கள்.

    2. மற்றொரு காரணி தனக்குத் தானே தன்முனைப்பு. அதாவது தன்னுடைய குறைகள் தனக்குத் தெரிய வந்தாலும் அதனைத் தானே ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம். இது வாழ்க்கையில் சிலருக்கு அன்றாட நிகழ்வாகவே இருக்கலாம். மனமே குற்றவாளி. மனமே வழக்குரைஞர், மனமே நீதிபதி. மூன்று வேடங்கள் எடுக்க வேண்டியுள்ளது மனம். ஆகவே மனம் உறுதியாக இருந்து மனம் போன போக்கெல்லாம் போகாமலிருக்க வேண்டும். எனவேதான் பாரதியார் திண்ணிய(உறுதியான) நெஞ்சம் வேண்டும் என இறைவியைக் கேட்கச் சொல்கிறார். இந்நிலையில் மனிதன் தன் குறைகளை அறிவது என்பது ஞான வாயில் எனலாம். அதனால் தான் மனவளக்கலையில், ஞானக்கோயிலுக்கான முதல் படியாகத் தன்குறைகளைத் தானே அறிந்து கொண்டு திருத்திக் கொள்ளும் தற்சோதனை எனும் பயிற்சி அகத்தவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    தன்னிடமுள்ளக் குறைகளை அறிவது ஞானபீடத்திற்கு செல்லும் வாசல். ஆகவேதான் மகாத்மா காந்தி குறைகளை அறிவதே ஞானம் என்கிறார். தன்னுடைய குறைகளை அறிபவன் தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்துள்ளான். அவ்வாறு முடிவு எடுத்தவன் தன்னை தினந்தோறும் பல்வகைகளிலும் திருத்திக் கொள்வதற்கு, அறிவினரைச் சேர்ந்தும், அவர்களை கனவிலும். நனவிலும் கண்டும், அறிவின் மேம்பாட்டிற்கு அறிவினரின் அறநூல்களைச் சிரத்தையுடன் படிப்பதும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதில் இன்பம் இருப்பதை அறிந்து சத்சங்கத்தில் கலந்து கொண்டும் ஞானத்தைப் பெருக்கி ஞானபீடத்தை அடைவான்.

    மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தருவது இயற்கையின் நியதியாக உள்ளதால், மனிதன் இதனைக் கவனத்தில் கொண்டு நல்ல விளைவுகளையே விரும்பும் மனிதன் தன் குறைகளை அறிந்து கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டு ஞானஒளியில் தானும் பிரகாசித்து, தான் வாழும் சமுதாயத்தையும் பிரகாசிக்க வைப்பதற்கு எல்லாம் வல்ல இறையருளும் அறிவில் அறிவாய் நிலைத்து அறத்தை வகுத்து அவ்வாறே வாழ்ந்து காட்டியவர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. முற்றும். 

    குறிப்பு—அடுத்த ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்வு 14-08-2015 வெள்ளிக்கிழமை-மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்தன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக இடம் பெறும். ஆகவே வழக்கம் போல் வெள்ளிக்கிழமையன்று நிகழும் ‘சிந்திக்க அமுத மொழிகள்’ நிகழ்வு 12-08-2015 புதனன்று இடம் பெறும்.

    Loading

  • குருபூர்ணிமா

    சிறப்பு அறிவிற்கு விருந்து
    FFC – 105

    31-07-2015

    குருபூர்ணிமா

    vysa_maharishi_and_vethathiri_maharishi

     வேத வியாசரும் நவயுக வியாசரும்

    வாழ்கவளமுடன்

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.
    வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.
    எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல. என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.
    எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.
    குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம். பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
    அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.
    அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது:
    “ வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது
    தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
    தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்’
    என்றும்
    “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்” என்றும் அருள்கூர்ந்து தெரிவிக்கிறார் நமக்கு.
    அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது
    “பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்” என்கிறார்.
    இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.
    மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது” என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது. மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
    மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும். எனவே நாம் நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல் எப்போதும் விழிப்பிலே இருந்து கொண்டு மனிதப் பண்பான அன்பும் கருணையும் வழிந்தோடும் அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டு செய்து வருவதாகும்.
    “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும் உலக அமைதியும் விரைவில் நிஜமாக, அழுத்தமான எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன. ஒன்று மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும். மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு நோக்கம் நிறைவேறிய பிறவி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.

    இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.

    நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    guru_paadham

    வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்திரியம்

    Loading

  • வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்

     FFC -103

    26-07-2015 – ஞாயிறு

    anbargale vaareer-THAI

     

    மலரை நாடித் தேனீக்கள் வரும். ஏன்? மலரில் தேன் உள்ளதால் தேனீக்கள் மலரை நாடிச் செல்கின்றன. மலர்களில் பல உள்ளன. மலர்களில் பாரிஜாத மலர் என்பது ஒன்று. ஆனால் பாரிஜாத மலர் என்பது கற்பனையான ஒன்று.
    அச்சத்தை ஏற்படுத்தி, மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக, நரகம், சுவர்க்கம் என்று கற்பனையாகப் படைக்கப்பட்டது போல் தேவலோகமும் ஒரு கற்பனைதான். அந்த தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்று ஒரு கற்பனைக் கதை கூறுகின்றது. பாரிஜாத மலர் என்றோ ஏற்படுத்தப்பட்ட கற்பனையான மலர்.
    இப்போது ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’ என்கிறோம். ஏன்? பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் தருவதைப் போல் வேதாத்திரியம் விரும்பியதை எல்லாம் தரும். மனிதன் எதனை விரும்ப வேண்டும்? சிந்திப்போம்.
    மனிதன் தனக்கு வேண்;டியதை விரும்புகிறான். அவ்வாறு மனிதன் விரும்ப வேண்டியது என்ன?
    1) நல்ல உடல் நலம்,
    2) நீண்ட ஆயுள்,
    3) நிறை செல்வம்,
    4) உயர் புகழ் ஆகியவைகள் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும்.

    இந்த நான்கிற்கும் மேலாக மனிதன் வாழ்வதற்கு அவசியமானவை ஏதாவது உள்ளதா? உண்டு.

    இந்த வாழ்க்கை எதற்காக, மனிதன் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டதோ,

    அந்த காரணத்தை அறிந்துஅதனை அடைய வேண்டும்.

    இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவுதான் தன்னை அறிய வேண்டி மனித அறிவாக தன்மாற்றமடைந்துள்ளது. [The premordial state of Nature, the Consciousness, Almighty the God itself has transformed into human consciousness]

    கடலிருந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, குளிர்ந்த பின்னர் மழையாகப் பொழிந்து, ஆறாகி, நதியாகி நிலப்பரப்பில் ஆர்பரித்து ஒடி கடலில் கலந்து தன் சுழற்சியை முடித்துக்கொண்டதும் ஆர்பரிப்பு நின்று அமைதி கொள்கின்றது. அது போல்
    பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (fractioned) மனித அறிவு
    மீண்டும் பேரறிவுடன் கலந்து,
    தன்னை அறிந்து கொண்டு,
    தன் சுழற்சியை முடித்துக் கொள்ளும் போதுதான் பேரமைதி உண்டாகும் அறிவிற்கு.

    அதாவது ஆறாம் அறிவு தன்னை அறிந்;து கொண்டு இன்பமுறவே இந்த மனிதவாழ்க்கை. இவ்வாறு வந்த அறிவின் பயணத்தில், அறிவு ஒரு பிறவியிலேயே அதனை அடைய முடியாது. பல கோடிப் பிறவிகள் எடுத்து,
    அப்பிறவிகளிலெல்லாம், மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள நோக்கம் அறியாத அறியாமையால்;
    புலன்வழி வாழ்க்கையையே வாழ்ந்து மயக்கம் கொண்டு,
    அளவு மீறியும், முறை மாறியும் வாழ்ந்து
    ஏற்படுத்திக் கொண்ட வேண்டாத துன்பம் தரும் பதிவுகளைத் தன்
    ஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,
    அவற்றின் விளைவுகளை அனுபவிக்கவே வந்த பிறவிதான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பிறவி. ஆகவே மனித வாழ்க்கைக்கு அவசியமான உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ் ஆகிய வளங்களுடன் மெய்ஞ்ஞானம் என்கின்ற ஐந்தாவது வளமும் அவசியமாகின்றது. இந்த மெய்ஞ்ஞான வளத்துடன் மனித வாழ்வு முழுமை அடைகின்றது.

    மனித வாழ்வு முழுமை அடைவதற்கு இப்போது அறிவிற்கு, இத்தனை பிறவிகளில் ஏற்படாதத் தெளிவு அவசியமாகின்றது. இதனை அறிவு விரும்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனை அறியாமல், “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்”; என்கின்ற அறிவுரை இருந்தும் மனிதன் மனம் போன போக்கெல்லாம் போய்க்கொண்டு அல்லறுகிறான்.

    மனிதன் விரும்புவதெல்லாம் எதுவாக இருக்க வேண்டும்? உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஆகிய ஐந்து வளங்களையும் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு கிடைத்து விடலாம். ஐந்தாவது வளம் கிடைப்பதற்கு அறிவு மேம்பட வேண்டும். அந்த அறிவு மேம்பட, அறிவிற்கு சிந்தனை ஆற்றல் வளர வேண்டும். சிந்தனையை, அறிவின் செல்வமாக்கிட வேண்டும்.

    அதனால்தான் ‘வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்’ (Slogan) என்கின்ற எண்ண ஆதரவு கோருதலின் வாயிலாக மனித எண்ணங்களின் ஆதரவினைத் திரட்ட வேண்டும். ஆகவே பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும் என்பதுபோல் இயற்கைக்கு புறம்பாக இல்லாமல், நியாமான, இறுதியாக மனிதன் விரும்ப வேண்டிய மெய்ஞ்ஞானத்தை அடைய மனித அறிவு தெளிந்த நல்லறிவாவதற்கு வேண்டிய விருந்திற்கெல்லாம் விருந்தினை அளிக்க வல்லது வேதாத்திரியம்.

    தன்னிடம் எழும் எல்லா ஐயங்களுக்கும் புரிதலையும் தெளிவையும் விரும்புவான் மனிதன். அந்த விரும்புதலை அள்ளித் தர வல்லததுதான் வேதாத்திரியம். ஆகவேதான் இதனை ஒரு பாரிஜாத மலர் என்கிறோம். பாரிஜாத மலர் ஒரு கற்பனையே என்றாலும். என்றோ மனிதனை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக ஏற்படுத்திய ஒரு கற்பனைக் கதையில் வந்த பாரிஜாத மலர் உண்மையில் இன்று வேதாத்திரியத்தின்; அருமை பெருமைகளைக் எடுத்துக் கூறி அறிவுத் தேனீக்களை ஈர்க்க, எடுத்துச் சொல்வதற்கு உவமேயமாக இருந்துள்ளதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கின்றது. வேதாத்திரியத்தின் வாயிலாக இதுவரை கற்பனை மலராக இருந்து வந்த பாரிஜாத மலர் இன்று உண்மையான மெய்ஞான மலராகிவிட்டது.

    இதுவரை எத்தனையோ ஆன்மீக மலர்களை காலத்திற்கேற்ப மனித அறிவின் நிலைகளுக்கேற்ப இயற்கை மலரச்; செய்துள்ளது. ஆனால் இன்று பூக்களிலேயே சிறந்த பூவான விரும்பியதைக் கொடுக்கும்; பாரிஜாத வேதாத்திரிய மலரை அளித்துள்ளது இயற்கையின் கருணையன்றோ. வேதாத்திரியத்தில் என்னென்ன உள்ளன என்று கேட்பதைவிட, உங்களுக்கு எது தேவையோ அது இருக்கின்றதா என்று கேளுங்கள். இருக்கும். தட்டுங்கள் திறக்கப்படும். இது மிகையல்ல. வேதாத்திரிய பாரிஜாத மலர் ஐந்து வளங்களைத் தருகின்றது. அவையாவன, உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஆகும்.
    பாரிஜாத மலரின் மெய்ஞ்ஞானத் தேன் .நான்கு வகைகளில் கீழ்கண்ட வினாக்களுக்கு அறிவுப்பூர்வமான விடைகளைத் தந்து சுயமாக சிந்திக்கவும் செய்கின்றது.

    1) கடவுள் என்பவர் யார்? இயற்கை என்பது எது?
    2) உயிர் என்பது என்ன?
    3) இன்பதுன்பம் என்பது என்ன?
    4) வறுமை ஏன் வருகின்றது?

    ஆகிய நான்கு வினாக்களுக்கான விடைகளின் வாயிலாக, அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரிலுள்ளத் தேனை நான்கு வழிகளில் அருந்தலாம். இது தவிர வேறு எது மனிதஅறிவிற்குத் தேவையாக இருக்க முடியும்? இந்த நான்கும் மகோன்னத கேள்விகள். எனவே இந்த மகோன்னத கேள்விகளுக்குத் தெளிவைப் பெறுவது என்பது, இதுவரை அறிவு விரும்பியதன்றோ! இது வரை இது மறைமுகமாக விரும்புதலாக (latent desire) இருந்து வந்தது. இப்போது வேதாத்திரியத்தால் அது வெளிப்படையான விரும்புதலாகிவிட்டது. ஆகவேதான் வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் என்கிறோம்.

    மலர் என்று ஒன்று இருந்தால் அதிலுள்ளத் தேனை அருந்துவதற்காக தேனீக்கள் வந்து மொய்ப்பதை போன்று இப்போது மலா்ந்துள்ள பாரிஜாத மலரான வேதாத்திரியத்தில் உள்ள அறிவுத் தேனை பருக அறிவுத் தேனீக்கள் ஏற்கனவே மொய்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஆகவே இதனை கண்ணுறும் அனைவரும் வேதாத்திரிய அறிவுத்தேனைப் பருக ஓடோடி வாருங்கள். அனுபவித்துவிட்டு மற்றவர்களையும் பாமர அறிவிலிருந்து அறிவுத்தேனீயாக்க வழிகாட்டி புண்ணியத்தைச் சேர்த்திடுவோம்.

    மகரிஷி அவர்கள் அறிவை அறிய விளக்கம் தருகிறேன் என்று அவர் விடுக்கும் அழைப்பை அவர் எழுதிய காந்த தத்துவ நூலின் பக்கம் 11 இல் முதல் பத்தியில் உள்ள அவர் எழுத்தின் வாயிலாகவே அறிவோம்.

    FFC-103-பாரிஜாதமலர்

    மேலே உள்ள பாடல் வரிகளுக்கு அவரே விளக்கமும் கொடுத்துள்ளார். அவ்வரிகள் மந்திரம் போல் உள்ளதால் அதனை அன்பர்கள் ஏற்று பயன்பெற, அவ்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

    FFC-103- பாடலின் விளக்க வுரை

    பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும். பொதுவாக மனிதன் விரும்புவதெல்லாம் என்னவாக இருக்க முடியும்? நிரந்தரமில்லாத உலகியல் வாழ்க்கையில், இப்பூவுலகை விட்டுச்செல்லும்போது விரும்பிச் சோ்த்த யாவற்றையும் இங்கே விட்டுச் செல்பவைகளைத்தான் விரும்புவதாக இருக்கும்.

    ஆனால் வேதாத்திரிய பாரிஜாத மலர்,
    முதலில் உடல்நலத்தையும்,
    உடல்நலத்தால் பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான காலநீளத்தை நீட்டிக்கும் நீளாயுளும்,
    இப்புவியல் வாழ்வதற்குத் தேவையான பொருட்செல்வத்தைத் தரக்கூடிய நிறைசெல்வத்தையும்,
    மனிதனின் அறிவுத்தொண்டு இவ்வுலகிற்கு மிக மிக அவசியமாக இருப்பதால், அந்த அறிவுத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் அளித்து, அதன் மூலம் பயனாளிகள் வாழ்த்துவதால் வருகின்ற பாராட்டுதலான உயர்புகழையும் தந்து
    மெய்ப்பொருளை விளக்கி, மனதில் மெய்ப்பொருளை நிறையச் செய்து மனநிறைவளிக்கின்றது.
    இந்தப் பேற்றினைவிட வேறு எது மனம் விரும்புவதற்குள்ளது?
    எப்போதும், எல்லையுள்ள பொருட்களை மட்டுமே மனம் நினைப்பதால், மனம் எல்லையுடைதாகி, குறுகிவிடுவதால் மனம் குறைவுடையதாகிவிட்டது.
    மனதில் எல்லையில்லா மெய்ப்பொருள் நிறைந்து விட்டால், மனம் விரிவடைந்துவிடும். நிறைவடைந்துவிடும்.
    அதனைவிட மனதிற்கு வேறு என்ன தேவையிருக்கின்றது?
    மனமும் மெய்ப்பொருளும் ஒன்றாயிற்றே! மனமும் மெய்ப்பொருளும் ஒன்றாகிவிட்டால் மனம் நிறைவு பெறுகின்றது.
    கடலிருந்து நீர் ஆவியாகி மழை பெய்து, மீண்டும் ஆற்றில் நீர் ஆர்பரித்துக்கொண்டு இறைச்சலுடன் ஓடி கடலில் கலந்து அமைதியுறுகின்றது. அதுபோல் மெய்ப்பொருளே மனிதமனமாகி மீண்டும் மெய்ப்பொருளுடன் சோ்ந்துவிட்ட பிறகு மனித மனம் சொற்களால் விவரிக்க முடியாத அமைதிப்பேற்றினைப் பெறுகின்றது. இது தான் இயற்கையின் உள்ளது உள்ளபடியான நிலை.  அடுத்த விருந்திற்கு 29-07-2015 புதன் அன்று சந்திப்போம்.

    வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்;
    வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம், வளர்க அறிவுச் செல்வம்.
    வாழ்க உலக மக்கள் அனைவரும்.
    வாழ்க உலக அமைதி; வருக உலக அமைதி விரைவில்.
    *****

    Loading

  • ஐவகை மயக்கம்

    FFC-102

    22-07-2015—புதன்

    dheaivappulavar

    இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம்’. மயக்கம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும்;. உறவினர் யாராவது மயக்கம் அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

    மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

    எண்ணிக்கையிலோ இந்த மயக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

    அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கத் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன், இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்குள்ளாக நேரிடும்.

    எனவே, அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
    இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

    o இனிமேலாவது, புதிதாக தீய பழக்கங்களை பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
    o ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்,

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கின்ற எதார்த்த நிலையைக் கூறுகிறார், இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். பழகிய பழக்கத்திலிருந்து வெளிவருவது ஆரம்ப நிலையில் கடினமாக உள்ளது என்கிற எதார்த்த நிலையை எடுத்துக் கூறப்படுவது, தேவையற்ற பழக்கங்களிலிருந்து விடுபடும் முயற்சியினை பாதியிலே விட்டுவதற்காக அல்ல. பழகிய பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும் போது, ஆரம்பத்தில் வெற்றி பெறமுடியாமையால், மனம் தளர்ந்து விடாமல் இருந்து ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்து பழகிய பழக்கத்திலிருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்று சொல்லப்படுகிறது.

    அதே நேரத்தில், வேண்டாத தீயப்பழக்கத்தை இனிமேலாவது ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் எச்சரிக்கப் படுத்தப்படுகின்றது.

    அதே நேரத்தில்

    this_birth_is_enough_for_liberation
    என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    வேதங்கள் “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?” என்கின்ற ஒரு கேள்வி எழுந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
    உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது, மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதை அறிவு இன்பமாக உணர்வதையே. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி, அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.

    ‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கையே மயக்கத்தில் தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்களும் புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக,

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. குறள் எண் 6 என்று கூறுகிறார்.

    இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும்> அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்;க வேண்டும். இக்குறளில் உள்ள,

    1) பொறி, அவித்தான்,
    2) ஒழுக்க நெறி மற்றும்
    3) நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வெவ்வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.

    “ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்;கை வாழ்வர்”. என்பது ஒருபொருள்.

    மற்றொரு பொருள்

    “மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர்.

    மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.

    இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.

    ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.

    அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.

    “நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.

    புலன்களை பயன்படுத்துவதில் ஒழுக்கம் கடைபிடிப்பது புலன் ஒழுக்கம். புலன்களில் எவ்வாறு ஒழுக்கம் கடைபிடிப்பது? ஒழுக்கம் என்பது தீங்கு தராத நல்ல செயல்களாகும். ஆகவே புலன்களைப் பயன்படுத்தும்போது தீங்கு தராத செயல்களைச் செய்வது ஒழுக்கமாகும். புலன்களைப் பயன்படுத்தும் போது எப்போது தீங்கு வரும்? புலன்களில் இன்பம் துயக்கும்போது, அளவு மீறினாலும், முறையை மாற்றினாலும் இன்பமே துன்பமாக மாறிவிடுகின்றது என்பதனை அறிவோம். ஆகவே புலனொழுக்கம் என்பது இன்பம் துய்த்தலில் அளவும், முறையும் காப்பது ஆகும். ஒவ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கு இருக்க வேண்டும். அந்த ஒழுங்கே(order of function) அதற்கு ஒழுக்கமாகும்.

    மற்றும் நீத்தார் பெருமையில்,

    “ ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி.” குறள் எண் 25                                                  என்கிறார் திருவள்ளுவர்.

    புலன் மயக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அவருடைய கவியின் வாயிலாக அறிவோம்.

    FFC-102- ஐவகை மயக்கம்-புலன்கவர்ச்சி

    பாடல் வரிகளே அவற்றிற்கான விளக்கத்தை தெளிவாகத் தருவதால் தனியாக விளக்கம் அவசியமில்லை. தனியாக விளக்கம் அவசியமில்லை. புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. ஆன்மீகத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் பற்று. பற்று என்பது புலன்மயக்கத்திலிருந்து உருவாகின்றது. புலன் மயக்கத்தினால் களங்கங்கள் உருவாகின்றன. ஏனெனில் புலன்கவர்ச்சி மயக்கத்தினால் உணர்ச்சி மீறுகின்றது. உணர்ச்சி மீறும்போது பாவப்பதிவுகள் உருவாகும்.   அப்படி பிறவிதோறும் உருவாக்கிய பாவப்பதிவுகளினால்தான் இந்த பிறவி உண்டானது.

    எனவே மனம் போனபோக்கெல்லாம் போகாமல், புலன்களை அறிவாலே ஆட்சி செய்து புவிவாழ்வில் நிறைவைப் பெற்று பிறப்பை முடித்துக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள், வைணவப் பெரியார் ஒருவரின் பாடலோடு சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

      FFC-102-வைகை மயக்கம்- நன்றாய் ஞானம்

    உலகியல் வாழ்க்யைில் துன்பமில்லாமல் வாழவும்,  ஆன்மீகத்தில் முன்னேறவும் புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. புதிய சிந்தனை தொடரும் 26.07.2015.

    Loading

  • வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் — 5/5

    FFC — 101

    அ.வி .—101

     மனவளக்கலை அறிவுப்பசிக்கு விருந்து (சென்ற விருந்தின் தொடர்ச்சி)

                                                      19-07-2015—ஞாயிறு

    FFC-62vethathiri_mararishi

    முதல்அறிவின் – அறிவியலாளர்

    The First Scientist of Consciousness

    சென்ற விருந்தில்,

    1)   ஆன்மீக சிகரத்தின் ஏணியில், மூன்றாம் படியிலிருந்து ஏறி ஐந்தாம் படியான ஆனந்தமய கோசமான ஆன்மீகத்தின் உச்சத்தை அடைவதற்கு அறிவுப்பசியின்மை,தடையாக உள்ளது என்றும்,

    2)   மேலும் மகரிஷி அவர்கள்  அடைந்த பேரின்பப் படிகள் அறிவுப்பசியினைத் தூண்டும் மருந்தாக உள்ளதையும்,

    3)   அவர்அடைந்தப் பேரின்பப்படிகள் வரிசை வழிகாட்டுதலாக இருப்பதையும் அறிந்தோம்.

     இன்று மனவளக்கலை எவ்வாறெல்லாம் விருந்தாக அமைந்துள்ளது எனப்பார்ப்போம். மனிதன், மனதினுடைய வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் இன்பமாக வாழமுடியும் என்றிருப்பதால், அதற்காக ஒரு கலையை உருவாக்கி மனவளம் எனப் பெயரிட்டு வழங்கி வருகிறார் மனதை அறிந்த அறிவின்-அறிவியலைத் தந்த அருட்தந்தை அவர்கள். மண்வளம் இருந்தால்தான் அதில் விளையும் பயிர்கள் நன்கு விளைந்து அதிக விளைச்சலைக் கொடுக்கும். அதுபோல் மனித மனங்கள் வளமாக இருந்தால்தான் மனித மனங்களில் மனிதம், ஊற்றுப் பெருக்கெடுத்து அதிகமாக வளரும்.

    இப்பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வெப்பம், காற்று, குளிர் ஆகியவற்றின் நிலை சரியாக இருக்க வேண்டும். இதனை தட்ப வெப்பம்(climate), என்பர். சீதோஷ்ணம் என்றும் சொல்வதுண்டு.

    எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருக்கும் இப்பிரபஞ்சத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால் தான், இயற்கை அன்னை, இப்பூமியைத் தேர்ந்தெடுத்து உயிர்களாக தன்மாற்றம் அடைந்துள்ளது. உயிர்கள் உருவாவதற்கு தட்ப வெட்ப சூழல் சரியாக இருந்ததுபோல், எல்லா உயிர்களும் துன்பங்கள் இல்லாமல் வாழ்வதற்கும் சூழல் தேவைப்படுகின்றது. அச்சூழலாகிய அன்பும், கருணையும் கொண்ட மனிதம் நிலவவேண்டும். அந்நிலையினை மனிதமனமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியப் பொறுப்பினை, இயற்கை மனிதனின் ஆறாம் அறிவிடம் தந்துவிட்டது. மனிதனிடம் மனிதம் மலரவேண்டும். மனமிருந்தால் மார்க்க முண்டு.

    இதனைக் கருத்தில் கொண்டுதான், இறையே அறிவாகவும், மனமாகவும் உள்ளதால் மனதின் வளத்தை வளர்க்க, பெருக்க அறிவைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள அறிவின்–அறிவியலை உருவாக்கியுள்ளார் முதல் அறிவின் அறிவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவேதான் அறிவின் இருப்பிடம் அறிந்தால் இன்புறலாம் என்கிறார் அறிவின் அறிவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள். ‘அறிந்தது சிவம்(அறிவை) மலர்ந்தது அன்பு’ என்றுள்ளதால், ,அறிவின் இருப்பிடம் அறியும்போது மனித மனம், மனிதம் மலரக்கூடிய வளமாக மாறும்.

    ஆகவே மனவளக்கலை, சிந்தனையைத் தூண்டி அதனால் எழும் எல்லா வினாக்களுக்கும் அறிவுப்பூர்வமான விடைகளை விருந்தாக அளிக்கின்றது.

    1)   அறிவின் இருப்பிடத்தை தெரிவிக்கின்றது.

    2)   அறிவின் பயணத்தை, தன்மாற்றத்தைத் தெரிவிக்கின்றது

    3)   அறிவின் இயக்கத்தைத் தெரிவிக்கின்றது,

    4)   துணிந்து தெய்வம் அரூபமான வெட்டவெளி என்கின்றது.

    5)   வெட்டவெளி சக்தியில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிது என வினா எழுப்பியுள்ளது.

    6)   வெட்ட வெளி ஒன்றுமில்லாதது எனநினைக்கப்படும் நிலையில் வெட்டவெளிக்கு தரத்தையும், திறன்களையும் கூறுகின்றது.

    7)   ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கின்றது.

    8)   ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் இணைத்துள்ளது.

    9)   வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.

    10)  ஓழுக்கம் உயிரைவிட மேலானது என்பதனை வலியுறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டொழுக்கப் பண்பாட்டினைத் தந்துள்ளது.

    11)  ஒழுக்கம் பழக்கமாகிட, கல்வியில் ஒரு அங்கமாக ஒழுக்கப்பழக்கறிவை சேர்த்துள்ளது.

    12)  உயர் புகழ் அளிக்கக் கூடிய தொண்டிற்கு நல்வாய்ப்பினை அளித்துள்ளது.

    13)  அறிவு தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க மனவளக்கலைலைய வடிவமைத்துள்ளது.

    14)  உலக சமாதானத்திட்டங்களை அளித்துள்ளது.

    15)  சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைக் கூறுகின்றது.

    16)  தனிமனிதன், சமுதாயம், இயற்கை ஆகிய மூன்றிணைப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளைக் கூறுகின்றது.

    17)  போரில்லா நல்லுலகத்திற்கு வழிகாட்டுகின்றது.

    18)  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.

    19)  ஒன்றே பலவாகியது என்கின்ற ஒருமை இயலைத் தந்துள்ளது.

    20)  தனிமனிதனையும் உலகையும் உய்வித்து வாழவைக்கும் ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்தை அருளியுள்ளது.

       இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infinite—எல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால்,      திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல் எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால்,    அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’ எனக் கேட்டால்,    ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும். எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்ற திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று

         ‘என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’ என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.

         அறிவே-தெய்வமாக இருப்பதால், அறிவை – தெய்வத்தை பயன்படுத்திக் கொள்வது என்பது ஆறாம் அறிவிடம் தான் உள்ளது. அறிவிற்கு மந்தம் நீங்கி அறிவில் தெளிவும், கூர்மையும் இருக்க வேண்டும். அறிவு சிந்திக்க வேண்டும்.

       சிந்தனை என்கின்ற உணவின் அவசியத்தையும், சிறப்பையும் கருதி சிந்தனை அறிவிற்கு விருந்து என அழைக்கப்படுகின்றது, அறிவுப்பசிக்கான உணவு சிந்தனையே. சிந்தனை செய்ய எந்த ஆராய்சிக் கூடமோ, கருவியோ அவசியமில்லை. உயிருள்ள, மனமுள்ள, அதாவது அறிவுள்ள மனிதன் சிந்திக்கலாம். அறிஞர்கள் தானாகவே சிந்திப்பர். சிலர் அறிஞர்களின் தூண்டுதலால் சிந்திப்பர். நாளடைவில் அந்த சிலரும் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிடுவர். சிந்திப்பது அரிய கலை. சிந்திக்கப் பழக வேண்டும். சிறந்த சிந்தனை

     • அறிவிற்கு உயர்வை அளிக்கும்.

    வாழ்க்கையில் தெளிவினை உண்டாக்கும்.

    சிந்தனை இருளைப் போக்கி வாழ்வில் விளக்கேற்றும்.

    • சிந்தனைப் பிரச்சனைகளைத் தீர்க்கும்.

    சிந்தனை அறிவிற்குச் செல்வமாகும்.

    சிந்தனை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கச் செய்யும்.

          சுவாசிப்பதை யாரும் விரும்பிச் செய்வதில்லை. அது இயல்பாக நடக்கின்றது. அதுபோல் சிந்தனை செய்வது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாகிவிட்டால் மூச்சு விடுவது போல் சிந்தனையும் இயல்பாகிவிடும்.   அதற்கு ஒரு உதாரணம் வேதாத்திரி மகரிஷிகளாவார் மகரிஷி அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்வது தனக்கு நாளடைவில் பழக்கமாகி விட்டது என்கிறார் தனது வாழ்க்கை விளக்கத்தில். சிந்தனை   சுகம் தரும். சிந்தனை எவ்வாறு சுகம் தரும்? சிந்தனை தரும் சுகம்தான் பேரின்பம் என்பது. மகரிஷி அவர்கள் ‘பேரின்பம்’ என்பது என்ன என்றும் கூறும் அவா் இயற்றிய நூலின் வரிகளை நாம் நினைவு கூர்ந்து மகிழ்ந்து எப்போதும் நினைவில் கொள்வோம்.

       மகரிஷி அவர்கள் இயற்றி ‘LOGICAL SOLUTIONS FOR PROBLEMS OF HUMANITY’ என்கின்ற நூலில், மூன்றாவது அத்தியாயமான

    Topic – 3 — PROBLEM NO. : 3

    ‘IGNORANCE OF HUMAN PHYSICAL AND PSYCHIC FUNCTIONS AND VALUES; NATURE OF PAIN AND PLAEASURE, THEIR TRUE CAUSES, NATURE OF THE MIND AND ITS MYSTIC AS WELL AS PERIPHERAL CAPABILITIES’ இல்

    30   ஆம் பக்கத்தில்  இரண்டாவது பத்தியின்  கடைசி நான்கு வரிகளாவன:-

    Rarely, when the mental wave expands and merges with the Gravity to realize its own functions in every thing and everywhere, it is felt as culmination of pleasure and satisfaction—that is ecstasy.

    –    Bhagavan Vethathri Maharishi.

    ‘இந்த ஆங்கில நூல்தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது ‘சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள்’ என தலைப்பு வழங்கப்பட்டு, மூன்றாவது அத்தியாயமான ‘மூன்றாம் சிக்கல்’ என்பதனை

                               அத்தியாயம் — 3 — மூன்றாம் சிக்கல்

    ‘மனித உடலும் மனமும் சார்ந்த செயல்களையும் மதிப்புகளையும் அறியாமை: இன்ப துன்பத்தின் இயல்பு; அவற்றிற்கான உண்மைக் காரணங்கள்; மனதின் தன்மையும் அதன் அகநிலை மற்றும் புறநிலை செயல் வல்லமைகளும்.’ எனத்தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் பக்கம் 23 இல் ‘ecstasy கான மொழியாக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

       இறைநிலையான மனஅலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக்காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே பேரின்பம்’ ஆகும்.

    –     பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       எப்போது இந்நிலை கிட்டும்? அறிவு மந்தமாக இருந்தால் கிட்டாது. அறிவிற்கு ‘தேடுதலாகிய பசி’ ஏற்படும்போதுதான் இந்நிலை கிட்டும். அதாவது அறிவு ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் காரணகாரியம் அறியவேண்டும். எந்த ஒரு வாழ்க்கை நிகழ்ச்சியையும், ஆராய்ச்சி இல்லாமல் விட்டுவிடக் கூடாது. அரிய சிந்தனைகள் மனதில் மலர்ந்து அதனை வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு பொருத்திப்பார்த்து சரியென அறியும் போது அது பேரின்பமாக இருக்கும். எனவே அறிவிற்கு பசியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    மேலும், ஆங்கிலப்புத்தகத்தில் பக்கம் 31 இல் முதல் பத்தியில் மகரிஷி அவர்கள் கூறுவதனையும் கவனிக்க வேண்டும்.

     It is not an easy task to try and explain the intricate functions and relationship between the bio-magnetic genetic centre, the brain cells and the mental wave, hampered by the restrictions of colloquial language. If one can understand these divine mystic phenomena through intuition cultivated by psychic practice and dedication, it is great fortune and achievement of lifelong satisfaction. Although such a deep comprehension is not possible for everyone, a general understanding would enable one to live with a new awareness of one’s evolutionary history and respect for self and all other living beings.”

    –    Bhagavan Vethathri Maharishi.

       மேலே கூறப்பட்ட ஆங்கிலப்பகுதியின் தமிழாக்கம் ‘சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள்’ என்கின்ற நூலில் பக்கம் 24 இல் முதல் பத்தியில் பின் வருமாறு உள்ளது.

       “சீவகாந்தக் கருமையும், மூளையின் செல்கள், மனஅலை இவற்றிற்கு இடையேயுள்ள மறை புதிரான தொடர்புகளையும் செயல்பாடுகளையும் பேச்சு வழக்கில் உள்ள சொற்களால் விளக்க முற்படுவது கடினமான வேலையாகும். ஒருவர் தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டு உளம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டால் கிடைக்கும் உள்ளுணர்வு மூலம் இவ்விதமான ஆன்மீகச் சார்பான செயல்களைப் புரிந்து கொள்ள முடியும்.   இது அவருக்கு வாழ்நாள் முழுவதும் திருப்தி அளிக்கக் கூடிய மேன்மையான நற்பேறும் சாதனையுமாகும்.   இம்மாதிரியான ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான ஆற்றலைப்பெறுவது அனைவருக்கும் சாத்தியமில்லை என்றாலும், ஒருவரின் பொதுவான அறிவு அவரின் பரிணாம வரலாற்றைப் புதிய விழிப்புணர்வோடு அறியச் செய்து, தன்னையும் மதித்து பிற உயிரினங்களையும் மதித்து வாழ வழி வகுக்கும்.

                            ….. பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டு உளம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டால் கிடைக்கும் உள்ளுணர்வு மூலம் கிடைப்பது வாழ்நாள் முழுவதும் திருப்தி அளிக்கக் கூடிய மேன்மையான நற்பேறும் சாதனையுமாகும் என்கிறார். தவம் என்பது உளம் சார்ந்த பயிற்சி. அப்படியிருக்க தவம்” என்று நேரிடையாகச் சொல்லாமல் உளம் சார்ந்த பயிற்சிகள் என்று பன்மையில் கூறுகிறார். வேறு என்ன உளம் சார்ந்த பயிற்சிகள் உள்ளன?

       தன்னை எப்போதும் சோதித்துக் கொண்டே இருக்கக் கூடிய இரண்டொழுக்கப்பயிற்சியின் விரிவாகிய ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டேனா?’ என்கின்ற சோதனை.

       அடுத்த உளம் சார்ந்த பயிற்சி, மூச்சு போல், இடைவிடாத அர்ப்பணிப்போடு கூடிய சிந்தனை–மூச்சுமாகும். ஆழ்ந்த சிந்தனையே இறையிடம் பேசுவதுதானே!! ஆன்மீகச் சார்பான செயல்களைப் புரிந்து கொள்வது வாழ்நாள் முழுவதும் திருப்தி அளிக்கக் கூடிய மேன்மையான நற்பேறும் சாதனையுமாகும் என்று மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இத்தகைய திறன் இருந்ததால்தான் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்த சின்னம்மாள், வரதப்ப முதலியார் தம்பதிகளுக்கு கி.பி. 14-08-1911 இல் பிறந்த குழந்தையை பின்னாளில் வேதாத்திரி மகரிஷியாக்கியது இயற்கை/இறை. அதுபோல் பலரை மகானாக்கும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது இயற்கையில். இது காலத்தின் கட்டாயம் இயற்கைக்கு.

    ஆன்மீகச் செயல்களை புரிந்து கொள்வது என்பது   வாழ்நாள் முழுவதும்

    1)   திருப்தி அளிக்கக்கூடியது,

    2)   மேன்மையானது,

    3)   நற்பேறானது,

    4)   சாதனையானது என நான்கு பலன்கள் ஒன்று சேர்ந்தது என்று கூறுகிறார்.

    சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் வாழ்நாள் சாதனையும், வாழ்நாள் முழுவதும் இத்தகைய பலன்கிடைக்கக் கூடிய செயல் ஒன்றே ஒன்றுதான். அதுதான்

    ஆன்மீக வாழ்வின் அவசியத்தை உணர்ந்து,

    வாழப்பிறந்த மனிதர்கள் வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே கண்டு பிடித்து

       மகரிஷி அவர்களைப் போல் படிப்படியாக பேரின்பப் படிகளில் ஏறி வெற்றி பெறுதலாகும்.

       ‘ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான ஆற்றலைப் பெறுவது’ என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். எனினும்  “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று நம் எல்லோரையும் வாழ்த்தியும் வாழ்த்திக் கொண்டேயும் இருக்கிறார் என்பதனை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       அனைவருக்கும் சாத்தியம் இல்லை என்பவர்களில் நாம் இல்லாமல், சாத்தியமாகும் ஒரு சிலரில் நாமாகவும் இருப்போம் என உறுதியாக நிற்போம். ஏனெனில் அன்றாடம் ‘மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்’ என்கின்ற சங்கல்பம் இயற்றி வருகிறோம். ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’ என்கின்ற வரிசையில் நிற்போம். மெய்ஞ்ஞானத்தில் வெற்றி பெற்று இந்த சமுதாயத்திற்கு ஒளிவிளக்காக திகழ்வோம்.

    இத்தகைய ஆன்மீகச் சார்பான செயல்களைப் புரிந்து கொள்ளும் திறனை கைவல்யமாக்க அறிவிற்கு மிகுந்த அறிவுப்பசி இருக்க வேண்டும். அறிவுப்பசியின் முக்கியத்தை உணர்த்துவதற்காகவே இங்கு மகரிஷியின் கூற்று நினைவுப் படுத்தப்படுகின்றது,

        சிந்திக்க ஆரம்பித்து ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு முடிவில் விடை அனுபவரீதியாக காணவேண்டும். அதாவது தன்னை உணர்தலாகும்.

    “தன்னை உணராத படிப்பு எதுவாயினும் பொருளற்றதே, தன்னை உணர, தன்னைத்தான் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே சித்த வித்தை. தன்னையறிவதே ஞானோதயம்—கைவல்லியம்!!” என்கிறார் தான் அருளிய சித்த வேதம்–மோட்ச சூத்திரத்தில் சித்த சமாஜ நிறுவகர் சுவாமி சிவானந்த பரமஹம்சர். அறிவுப்பசிக்கு இறையே இரை—விருந்து என்கின்ற புரிதலுடன் இன்றைய சிந்தனை விருந்தை முடித்துக் கொள்வோம். இணையதள சத்சங்கம், அறிவுப்பசியை மேலும், மேலும் தூண்டவும், நல்விருந்தாகவும் அமைய எல்லா குருமார்களின் அருளும், திருவருளும், அன்பர்களின் ஆன்மீக தாகமும் துணை நிற்குமாக.

    அடுத்த விருந்திற்கு 22-07-2015 புதனன்று கூடுவோம்.

     

    thanks_for_quenching_my_thirst_for_knowledge

    Loading