இன்றைய விருந்து

  • எண்ணிய முடிதல் வேண்டும். 2/2

    எண்ணிய முடிதல் வேண்டும். 2/2

    FFC-80

    06-05-2015 – புதன்

    nava yuga viyasar

    எண்ணியது முடிதல் வேண்டும் என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய விருந்தில் கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.

    ஒரு மனிதன் எண்ணுவது அவனால்தான் செயலுக்கு வரும் என்று சொல்ல முடியாது. பிறராலும் செயலுக்கு வரலாம். பெரும்பாலும் மனிதன் தனக்காகவே எண்ணுவதுதான் அதிகம். எண்ணியதெல்லாம் நிறைவேறிவிட்டால் மனிதனுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நடைமுறையில் மனிதன் நினைப்பது அத்தனையும் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் நன்மையாக இருக்குமா என்றாலும் அவ்வாறும் சொல்ல முடியாது. இதற்கு என்ன காரணம்? பொறுப்புடன் மனிதன் எண்ணுதல் வேண்டும். மனிதன் எண்ணுவதில் உள்ள பொறுப்புகளாவன:

    1) முதலில் என்ன செய்ய வேண்டும், என்றும் என்ன செய்யக்கூடாது என்பது தெரிய வேண்டும். நுண்மான் நுழைபுலன் வேண்டும்.
    2) அடுத்ததாக எண்ணுவதைச் செய்ய மனதிற்கு திண்மையும் வேண்டும்.
    3) செய்ய முடிந்ததை செய்யத்தக்கவாறு எண்ணவேண்டும்.

    நினைப்பது நிகழக்கூடியதாக இருந்தாலும் அதனையும் நிகழக்கூடிய வகையில் எண்ணவேண்டும். அதாவது எண்ணியது நிகழவேண்டும்; நிகழக் கூடியதை எண்ண வேண்டும். மனிதன் எண்ணமுடியும் என்பதால் எதைவேண்டுமானாலும் எண்ணி விடமுடியாது. எண்ணுவதில் பொறுப்பு அவசியமாகின்றது. மேலும் பொறுப்பாக எண்ணுகின்ற அவசியம் இயல்பாக அமைந்துவிட வேண்டும். அதற்கு என்ன வேண்டும்? கருமையத் தூய்மை வேண்டும். இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார் என்று அவரது வைர மொழிகளின் வாயிலாக அறிவோம்.

    “கருமையம் தூய்மையாக இருக்குமானால்,
    1) என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்,
    2) எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”

                                                                                                                          ……வேதாத்திரி மகரிஷி அவா்கள்.
    திருவள்ளுவர் எண்ணத்தைப்பற்றிக் கூறுவதைக் கவனிப்போம். வினைத்திட்பம் என்கின்ற அதிகாரத்தில் ஆறாவது குறளாகக் கூறுவது என்ன?
    ”எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியா்
    திண்ணியா் ஆகப் பெறின். …..குறள் எண் 666

    கருத்து: எண்ணியவர், எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப் பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

    ஞானி மகாகவி பாரதியார் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    அன்னையை வேண்டுதல்
    எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
    தெளிந்த நல்லறிவு வேண்டும்;
    பண்ணிய பாவமெல்லாம்
    பரிதிமுன் பனிபோல,
    நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்.
    …. மகா கவி பாரதியார்.

    மகாகவி பாரதியாரின் இப்பாடலுக்குள் புகுவோம். இப்பாடலின் பொருளை அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டால் என்ன அறிவோமோ அவ்வாறே அறிவதற்காக மகாகவி பாரதியாரின் அறிவாற்றலுடன் நம் அறிவாற்றலையும் இணைத்துக்கொள்வோம். பெரும்பாலும் இப்பாடலின் முதல் நான்கு வரிகளை மட்டுமே அநேக இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிவோம். கடைசி நான்கு வரிகளை பயன்படுத்துவது என்பது அரிதாக உள்ளது. இங்கு நாம் எல்லா வரிகளுக்குமே மகாகவி பாரதியாரிடமிருந்து, பொருளும், விளக்கமும் கேட்டறிவோம்.

    இப்பாடலில், வேண்டுதல்கள் ஐந்து போல் இருந்தாலும் நான்கு வேண்டுதல்களும்(wants), ஐந்தில் இரண்டாவது வேண்டுதல் உறுதி மொழியாவும் உள்ளன. இதற்கும் மேலாக ஒரு ஒப்புக் கொள்ளுதலும்(confession) உள்ளன.
    1) எண்ணிய முடிதல் வேண்டும்.
    2) நல்லவை எண்ணல் வேண்டும்.(இது வேண்டுதல் மட்டும் இல்லை. உறுதிமொழி கலந்த வேண்டுதலாக உள்ளது. இறைவிக்கு அளிக்கும் ‘நல்லவை எண்ணுவேன்’ என்கின்ற உறுதி மொழியை அளித்துவிட்டு, அதற்கு விழிப்போடு தான் இருக்க, இறைவி துணையாக இருக்க வேண்டும் என்கின்ற வேண்டுதலும் உள்ளது.)
    3) திண்ணிய நெஞ்சம் வேண்டும்.(நல்லது என எண்ணியதை முடித்திட மனதிற்கு உறுதியும், தைரியமும் வேண்டும். தளரா விடமுயற்சி வேண்டும்.)
    4) தெளிந்த நல்லறிவு வேண்டும். (எல்லோரிடமும் அறிவு இருக்கின்றது. ஆனால் தெளிந்த நல்லறிவு என்பது அறிவை அறிந்தவரிடமேதான் உள்ளது. நல்லறிவு வேண்டும் என்பது சரி. நல்லதையே எண்ணுவதற்கும், நல்லதையே பேசுவதற்கும், நல்லதையே செய்வதற்கும் நல்லறிவு அவசியமாகின்றது என்பது தெரிகின்றது. ஆனால், அதிலும் தெளிந்த என்கின்ற வார்த்தையை சோ்த்திருக்கிறார் பாரதியார். ஏன் எல்லாவற்றிலும் நல்லதே இருக்க வேண்டும் என்கின்ற விளக்கமாகியத் தெளிவு வேண்டும். மனித சமுதாயத்தில் பெரும்பாலும், தெளிந்த நல்லறிவு இல்லாமையால்தான் இப்பாடலே இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பாரதியாருக்கு.)
    5) ஒப்புதல் அளித்தல்:– பண்ணிய பாவமெல்லாம்.(அறியாமையில் குற்றவாளி உணர்ச்சி வயத்தில் குற்றம் செய்துவிட்டு, நீதி மன்றத்தில் நீதிபதியிடம் தெளிந்த மனநிலையில் தான் குற்றம் செய்து விட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் (confession statement) கொடுப்பது போல், இறைவியின் சன்னிதானத்தில்— ‘இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் பாவங்கள் செய்து விட்டேன் என்கின்ற ஒப்புதல் வாக்கு மூலம்)
    6) நசித்திடல் வேண்டும். (செய்த பாவங்களெல்லாம் நீக்கிட வேண்டும்)

    கருத்துரை:– அதாவது ஒவ்வொரு மனிதனும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும், செய்த செயல்களின் விளைவுகளாகத் தனிமனிதத் துன்பங்களும், சமுதாயத்துன்பங்களும் மல்கிவிட்டன. அதுதான் உலகில் அமைதியின்மைக்கு காரணமாக உள்ளது. ஆகவே ஒரு(இந்த) காலகட்டத்திலாவது, தன்னுடைய பாவங்களை உணர்ந்து, அவை நசிந்திட, இனிமேலாவது, நல்ல எண்ணங்களை எண்ணி, அவ்வாறு எண்ணுகின்ற எண்ணங்கள் நிறைவேற (உலகில் அமைதி நிலவவேண்டும் என்பது கூட ஓர் உயர்ந்த எண்ணம்) வேண்டும் என இறைவியை வேண்டச்சொல்கிறார்.

    திருவள்ளுவர் மற்றும் ஞானி மகாகவி பாரதியார் கூறும் வைரவரிகளையும், மகரிஷி அவர்கள் கருமையம் தூய்மையாக இருக்குமானால் எண்ணம் நிறைவேறுவது பற்றி கூறும் வைரவரிகளையும் ஒப்பிட்டால் தெரிய வருவது திருவள்ளுவர் கூறும் ‘செயல் ஆற்றுவதில் வேண்டிய உறுதி, பாரதியார் கூறும் திண்மை, ’ மகரிஷி அவர்கள் கூறும் கருமையத்தூய்மையால் கிடைக்கப் பெறுகின்றது என்பது தெரிகின்றது, மகரிஷி அவர்கள் “ஞானி நினைப்பது நடக்கும். ஞானி நடக்கக் கூடியதைத்தான் நினைப்பான்” என்பார். காரணம் ஞானி கருமையத்தூய்மை அடைந்தவர். எல்லோருமே எண்ணுவது நிகழ வேண்டும் என நினைக்கின்றனா். அதற்கு கருமையத்தூய்மை அவசியம் என்பதனை உணர வேண்டும்.

    கருமையத்தூய்மை அடைந்தவரின் மனதில் தேவையற்ற எண்ணங்கள் (ஆசைகள்) இராது. எண்ணங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். எண்ணிக்கையில் குறைவான, நியாயமான எண்ணங்கள் இருக்கும்போது, மனஆற்றல் அழுத்தத்துடன் ஒவ்வொன்றாக முடித்திட, செயல் ஆற்றுவதற்கு உறுதி அதிகமாக இருக்கும். வாழ்வின் நோக்கம் உறுதி செய்யாத நிலையில், தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக இருப்பதால், எல்லாவற்றையும் செய்து முடிக்கும் உறுதிக்கு வலிவு குறைந்துவிடும்.

    ஆகவே தற்சோதனைக்கு உட்படுத்தாத எண்ணங்கள், தேவையற்ற ஆசைகள், வாழ்க்கைக்கு முரணான ஆசைகள் கருமையத்தூய்மையைக் கெடுக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் எண்ணத்தின் வலிமையைப்பற்றிக் கூறும் கவிகளைக் கவனிப்போம்.
    எண்ணத்தின் வலிமை
    “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.
    எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.”

    எண்ணத்தில் நிறைந்திடு
    “விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ
    எண்ணத்தில் நிறைந்திடு! செய்கையில் சிறந்திடு!”
    தீய எண்ணம்
    “உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்,
    உள்ளத்தி லெழும் ஒழுங்கற்ற எண்ணமே”.

    ..….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஆகவே எண்ணம் நிறைவேற வேண்டுமெனில் கருமையத்தூய்மை அவசியமாகின்றது என்பதனைக் கவனிக்க வேண்டும். எல்லோருக்கும் தான் எண்ணுவதெல்லாம் நிறைவேற வேண்டுமென்கின்ற ஆசை இருப்பதால் கருமையத்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

    உயிர் ஒரு மறைபொருள். இருப்பினும் உயிர் மீது எல்லோருக்குமே அக்கறை உள்ளது போல் கருமையம் மற்றும் அதனைத் தூய்மைப்படுத்துவதின் மீது அக்கறை இருக்க வேண்டும். உயிர் ஒரு மறைபொருளாக இருந்து, கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், உயிர் இருப்பதை முழு மனதோடு ஒப்புக்கொள்கின்றான் மனிதன். காரணம் உயிர் பிரிவதால், மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து விடுவதை மற்றவர்களின் இறப்பிலிருந்து அறிந்து கொள்கின்றான். இருப்பினும், மரணத்தால், உடல் வாழமுடியாமல், புலன்இன்பம் அனுபவிக்க முடியாமல் பயனற்றுப்போவதை, உடல் மீதுள்ள பற்றால் அவனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

    எனவே எளியமுறை குண்டலினியோகம் பயிலாதவர்கள்கூட, மறைபொருளான உயிர் இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர். யார் ஒப்புக் கொள்கிறார்களோ, இல்லையோ, உயிர் மனித உடலில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. உயிர் இருப்பதுபோல், உயிருடன் தொடர்புடைய கருமையம் அல்லது ஆன்மா (Registry of recorded events taking place while living)ஒன்று மறைபொருளாக மனிதனிடம் இருப்பதனையும் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

    ஒப்புக் கொண்ட பிறகு, மருத்துவர்களைத்தவிர, பள்ளிப்படிப்பு படித்த மற்றவர்கள், தங்களின் இதயத்தை நேரிடையாகப் பார்க்க முடியாவிட்டாலும், எவ்வாறு இதயம் உடலில் இருக்கின்றது என்று நம்புவதில் உறுதியாக இருக்கின்றார்களோ, மற்றும் இதயத்தின் வடிவம், இயக்கம் பற்றிய விளக்கங்கள் அறிந்தும் இருக்கின்றார்களோ அதுபோல் கருமையம் இருப்பது பற்றியும், அதன் இயக்கம் பற்றிய தெளிவையும் பெற வேண்டும். இதுவரை, ஜீவாத்மா(மனிதன்), பரமாத்மா(கடவுள்) என்றும், ஜீவாத்மா என்றும் அழியாதது என்றும் ஆன்மிக நூல்கள் கூறியிருந்தாலும், அவை மனிதனால்-ஆறாம் அறிவால் கருத்துருவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஆனால், இந்த நிலையில், இறை, பரமாத்மாவாகிய தன்னைப் பற்றியும், தான் ஜீவாத்மாவான வரலாற்றையும், தான் எவ்வாறு ஆட்சியின்றி ஆளுகின்ற விதத்தையும், அதனை நவயுக வியாசர், நம் குருதேவர் உலக சமுதாயத்திற்கு எடுத்து இயம்புகின்ற விதத்தில் விளக்கியுள்ளது.

    அன்று வேதங்களை எல்லாம் தொகுத்து கொடுத்தவர் வேதவியாசா் எனப்படுகிறார்,  இன்று இறையின் மறைபொருள் விளக்கங்களை, தான் நேரில் பார்த்ததுபோல், அதேபோன்று பிறரும் எளிதாக அறியவும், மேலும், மனிதன்  எவ்வாறு எதார்த்தமாக வாழவேண்டும் என்றும் எல்லாவற்றையும் தொகுத்து இணைத்துக் கொடுத்த  நம்அருட்தந்தை அவர்களை, நவயுக வியாசர் என்று கூறாமல்  இருக்க முடியுமன்றோ! இது பொருத்தத்திலும் பொருத்தமன்றோ! 

    ஆகவே, ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்று நமக்கெல்லாம் நம் குருதேவர் உறுதி அளித்துள்ளதால், நம் குருதேவர், எவ்வாறு கருமைய உண்மைகளை அறிந்து சமுதாயத்திற்கு கூறியுள்ளாரோ, அது போல் நாமும் கருமையத்தைப்பற்றியும், அதன் மதிப்பையும் உணர்ந்து மதித்து அதனைத் தூய்மையாக வைத்துக் கொண்டு பிறர்க்கும் எடுத்துச் சொல்வோம். எனவே, நாம் அதன் இருப்பு, இயக்கம் பற்றி உறுதிப்படுத்தி, அதனைத் தூய்மை செய்வதில் அக்கறையோடு இருக்க வேண்டும்.

    கருவில் திருவுடையவர்களுக்கு மறைபொருள் விளக்கங்கள் அதிகமாகத் தேவையில்லை. அறிவை அறிந்த குருநாதரின் கருணையானப் பார்வை திருவுடையவரின் மீது விழுந்தாலே போதுமானது. திருவுடையவரிடம் மலர்வதற்காகக் காத்திருந்த ஆன்மீக மொட்டு மலர ஆரம்பித்துவிடும். மற்றவர்களுக்கு இயற்கையிலுள்ள மறைபொருட்களின் இரகசியங்கள் விளங்க விளங்கத்தான், தன்முனைப்பு நீங்க ஆரம்பித்து மனம் திண்மை பெறும். திண்மை பெற்ற மனம்தான் உறுதியுடன் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். அதனால்தான் ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’ என்று பாரதியாரும், “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும். எண்ணத்தில் உறுதியும் (திண்மை) ஒழுங்கும் அமைந்திடில்.” என்று மகரிஷி அவர்களும் கூறுகிறார்கள்.

    கருமையத்தூய்மை என்பது ஏதோ கருமையம் தூய்மையாக இருப்பதற்காக மனிதன், செய்யும் பணி அல்ல. மனிதனுடைய இன்ப வாழ்விற்கும் அவனுடைய நல்வம்சாவளிக்காகவும் (good progeny as an asset to the family and society) கருமையத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மனிதனின் முத்தொழில்களையும் பதிவுகளாக ஏற்றம்(upload) செய்யும் கருமையம் ஒன்று இல்லாமல், எவ்வாறு உயிரினம் வாழ முடியும்? ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் கருமையத்தின் பதிவுகளையும், அதன் தரத்தையும் வைத்துதானே அமைகின்றது.

    உயிர் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதனைவிட அதிக அக்கறை கருமையத்தின் மீதும், அதன் தூய்மையைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். உயிர் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பது உண்மைதான் என்றாலும், கருயைத்தூய்மை இருந்தால்தான் எண்ணிய எண்ணமும் நிறைவேறும்; ராஜவாழ்க்கையும் (liberated life) வாழ முடியும். இங்கே ‘ராஜவாழ்க்கை’ என்பது சொல்லளவில் சொல்லப்படுவதல்ல. புலன்களுக்கும், மனம்போன போக்கிற்கும், அறிவு அடிமையாகி வாழாமல், எப்போதும் துன்பமிலா வாழ்வாகும். கருமையம் பற்றிய முழுமையானத் தெளிவினைப் பெறுவது அவசியமாகும். அதற்கு திருவேதாத்திரியத்தின் ‘கடவுளும் கருமையமும்’, ‘மனம்” ஆகிய நூல்களை மீண்டும் மீண்டும் படித்து தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    அந்நூல்களில் உள்ள உண்மைகளை மீண்டும், மீண்டும் படிக்க படிக்க, கருமையம், அதன் இருப்பு மற்றும் அதன் நீதிதவறா பணிகளான பதிதல் மற்றும் விளைவுகளை வழங்கும் நுட்ப நிகழ்வுகளை நேரிடையாக காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, நமது மனமானது கருமையத்தூய்மையின் மீது அதிக அக்கறை செலுத்தும். கருமையத் தூய்மைக்கேற்பவே மனித வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் வாய்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    கருமையத்தூய்மையும் எண்ணம் நிறைவேறுதலும் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைர வரிகள் நம்மனதில் எப்போதும் சுழன்று கொண்டே விழிப்புடன் இருக்க, அவ்வரிகளை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக் கொண்டு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம்.

    “கருமையம் தூய்மையாக இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”                ……வேதாத்திரி மகரிஷி அவா்கள்.

    இதுபோன்ற வாழ்வியல் உண்மைகள் அனைத்தும், மனிதனின் பள்ளிக்கல்வி—மாணவப் பருவத்திலேயே முழுமையாகச் சென்றடையச் செய்து மனிதவளத்தை பெருக்கியும், அதன் உச்சத்திற்கே உயா்த்தியும் வளமிகு மனித சமுதாயத்தை, திருவேதாத்திரியம் உருவாக்கி வருகின்றது என்றால் மிகையாகாது. போற்றுவோம் திருவேதாத்திரியத்தை. வாழ்த்துவோம் திருவேதாத்திரியத்தை. வாழ்க திருவேதாத்திரியம் வளர்க திருவேதாத்திரியம்.

    அடுத்த விருந்தில் புதிய தலைப்பின் கீழ், கருமையத்திற்குள்ள நான்கு பாலங்கள் பற்றியும், அவற்றை இறை/இயற்கை தனது செயல்விளைவு நீதியின்படி, மனித வாழ்க்கையில் இன்ப-துன்ப விளைவுகளைத் தரும் நுட்பத்தைப் பற்றியும் அறிவோம். அடுத்த விருந்திற்காகக் (10-05-2015) கூடுவோம்.    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • எண்ணிய முடிதல் வேண்டும். 1/2

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

    எண்ணிய முடிதல் வேண்டும். 1/2

    FFC-79

    03-05-2015 – ஞாயிறு

    எண்ணாத மனிதன் யாரும் இல்லை. எண்ணியதெல்லாம் நடந்துவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. எண்ணியது நிறைவேறுகின்றதா வாழ்க்கையில்? அல்லது நிறைவேறுகின்றவாறு எல்லோராலும் எண்ண முடிகின்றதா என்பதும் ஐயமே. எண்ணியது நடக்காதபோது அது கவலையாக மாறுகின்றது. ஏன் இந்த நிலை?

    மனிதன் நினைத்தது நிறைவேறாதபோது என்ன சொல்கிறான்? ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கின்றது.’ என்கிறான். ‘மனிதன் நினைக்கிறான். அதனைத் ‘தெய்வம் நிறைவேற்றுகின்றது. — Man proposes God disposes’ என்று சொல்கிறோம். ஏன் எண்ணுவது நிறைவேறுவதில்லை? அல்லது ஏன் நிறைவேறுகின்றவாறு எண்ண முடிவதில்லை? இதன் விஞ்ஞானம்தான் என்ன? What is the Science of it? மனிதனைவிட தெய்வம் வல்லமை உடையது என்பதால் அவ்வாறு நடக்கின்றதா? தெய்வம் மனிதனைவிட வல்லமை உடையதுதான். இருந்தாலும் மனிதன் நினைத்ததை ஏன் எல்லா சமயங்களிலும் நிறைவேற்றித் தருவதில்லை தெய்வம்?

    ஆகவே தெய்வம் விரும்புவதை அறிந்து, மனிதன் அதனை எண்ணி அடைவதற்கு முயற்சி செய்து பெறுதல் வேண்டும் என்பதுபோல்தானே உள்ளது. ஆம் உண்மைதான். அதில் ஐயம் ஏதும் இல்லை. தெய்வம் விரும்புவதை எவ்வாறு அறிவது? தெய்வமேதான் மனிதனாக இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் தெய்வம் நினைப்பதை ஏன் மனிதன் அறிய முடியாது? தெய்வம் பொதுவாக நினைப்பது எதுவாக இருக்க முடியும்? நல்லது ஒன்றைத்தான் விரும்பும்? தன்னுடைய பிரஜைகளான மனித சமுதாயம் நலமுடன் இருக்கத்தானே விரும்பும்! மனிதன் நல்லவனாக வாழ்வதை விரும்பும் தெய்வம். தெய்வத்தின் தன்மாற்ற மனிதகுல சாம்ராஜ்யத்தில் அமைதியை விரும்பும். தெய்வம் விரும்புவதை அறிவது என்பதனை வார்த்தைகளுக்கான நேர் பொருளில்–literal meaning எடுத்துக்கொண்டாலும் சரி/எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி மனிதன் எண்ணுவதில் ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பதற்கான விளக்கம் தெரிந்ததே. ஆகவே மனிதனின் ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பமாகும். ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பத்தை அறியமுடியும்.

    இன்றைய சிந்தனையில்

    1) எண்ணியதை முடிப்பது எவ்வாறு,
    2) செய்ய முடிந்ததை எவ்வாறு எண்ணுவது,
    3) செய்யத்தக்கவாறு எண்ணுவது பற்றிச் சிந்திக்க இருக்கிறோம்.

    “எண்ணிய முடிதல் வேண்டும்” என இறைவியை வேண்டச் சொல்கின்ற மகான் மகாகவி பாரதியாரை நினைந்து இச்சிந்தனையைத் தொடங்குவோம்.

    அன்னையை வேண்டுதல்

    “எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    ………………………………………………………………………………..
    ……………………………………………………………………………….” மகா கவி பாரதியார்.

    எண்ணியது நடக்க வேண்டும் என்று இறைவியைக் கேளுங்கள் என்கின்ற அதே வேளையில், நல்லவை எண்ணுதல் வேண்டும் எனவும் கேட்கச் சொல்கிறார். முதலில் நல்லதை எண்ண வேண்டும், பிறகு எண்ணிய நல்லது நிகழ வேண்டும். எண்ணியது முடிதல் வேண்டும் என்று கேட்டுவிட்டு, பிறகு ‘நல்லவை எண்ணல் வேண்டும்’ என்றிருக்கின்றது. இதற்கு என்ன பொருள்? ‘நல்லதை எண்ணுவேன்’ என்று இறைவிக்கு உறுதியினை அளிக்கச் சொல்கிறார். எண்ணுவது என்பது மனிதனிடம்தான் உள்ளது. எனவே மனிதன் நல்லதை எண்ணினால், எண்ணியதை நிறைவேற்றுவது இறைவியின் கடமை. என்றாகின்றது.

    மனிதனின் எண்ணம் நிறைவேறுவதைப்பற்றிச் சிந்திக்கின்றோம். ‘என்னைப் பற்றித் தெரிந்துகொள் என்று நம்சிந்தனைக்குள் கருமையம் பிரவேசிக்கின்றது?’, ஏன்? எண்ணியது நிறைவேறுவதற்கும், கருமையத்திற்கும் என்ன தொடர்புள்ளது?

    கருமையம் என்பது என்ன? இதனை ஆன்மா என்றும் சொல்லலாம். உடலில் சுழன்று ஓடிக் கொண்டிருக்கும்போது காந்த ஓட்டம் ‘துல்லிய சமதள சீர்மை’ என்கின்ற தத்துவப்படி உடலில் ஒரு மையத்தில் திணிவு பெறுகின்றது. அந்தத் திணிவு பெற்ற சீவகாந்தமையம் தான் கருமையம் எனப்படுகின்றது? இதன் பணி என்ன? இந்தக் கருமையத்தில் கோடிக்கணக்கில் பதிவுகள்(imprints) உள்ளன. மனம் சுருக்கி பதிவுகளாக இங்கு வைக்கின்றது. வெவ்வேறு அலைச் சுழல்களில் ( different wave lengths) பதிவுகள் உள்ளன.

    ‘இறை, உயிர், மனம் என்னும் மூன்று மறை பொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள்தான் கருமையம்’ என்கிறார் மகரிஷி அவர்கள். நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை செய்து, பின்னர் தீர்ப்பு வழங்குவதுபோல், கருமையைம் மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் (தெய்வம்) இடையே பாலமாக அமைந்திருப்பதால், கருமையத் தெய்வீக நீதி மன்றத்தில் நீதிபதியாகத் தெய்வமே இருந்து கொண்டு மனிதன் செய்துள்ள, செய்கின்ற முத்தொழில்களையும் பதிய வைத்துக் கொண்டு விளைவுகளாக தன் தீர்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
    இப்போது எண்ணியது நிகழ்வதிலும், நிகழ்வதை எண்ணுவதிலும் இந்த கருமையத்தின் பங்கு என்ன என்று அறிந்து கொள்ளவே இன்றைய சிந்தனை. இங்கே செயல் விளைவுத் தத்துவத்தையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ‘செயல் விளைவுத் தத்துவம்’ என்பது மனிதன் செய்யும் செயலுக்கு விளைவு உண்டு என்பதேயாகும். இதனை இயற்கையின் நீதி என்றும் சொல்லலாம், இதனை வேறுவிதமாகவும் சொல்லலாம். இறைவனை எங்கும் தேடவேண்டியதில்லை என்பார் நம்குருதேவர். ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்பார் நம்குருதேவர். மனிதனுடைய செயல்கள் என்னென்ன? மனிதனாகப் பிறந்ததற்கான அடையாளமாக மனிதன் எண்ணுகிறான். பேசுகிறான்(சொல்), பிறகு செயல்புரிகிறான். ஆகவே மனிதனின் முத்தொழில்களாவன: எண்ணம், சொல், செயல். இந்த மூன்றும் பதிவுகள் இல்லாமல் நடப்பதில்லை. எண்ணம் இயற்கையின் சிறப்பு என்பதுபோல், பதிதல் (imprint) இயற்கையின் சிறப்புகளில் மற்றொன்று. பதிதல் இல்லை எனில் எண்ணமே இல்லை. பதிதல் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? சிறிது கற்பனை செய்து பாருங்களேன். சத்சங்க அன்பர்களின் சிந்தனைக்கு விடப்படுகின்றது.

    மனிதனின் முத்தொழில்களும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை. இந்த முத்தொழில்களிலும் முதலில் இடம் வகிப்பது எண்ணமாகும். ஒரு Nano second நினைப்பது கூட பதிவாகாமல் இருப்பதில்லை. கருமையத்திலும், மூளையிலும், வான்காந்தத்திலும் பதிகின்றது. பதிந்ததை அந்த அலைச்சுழல் வரும்போது மீண்டும் பிரதிபலித்துக் காட்டுவது கருமையப் பதிவுகளே. ஒரு எண்ணம் வந்தது என்றால், அதன் விருப்பம்போல், அதனை மனதினுள் விட்டுவிடக்கூடாது. காவலாளிபோல்(gate keeper) இருந்து கொண்டு ஏன் வந்தது, எதற்காக வந்தது, அந்த எண்ணத்தை வளர்த்தால் அதன் விளைவு என்ன என்று முடிவு செய்து, அந்த எண்ணத்தின் விளைவு நன்மை செய்யுமானால் அந்த எண்ணத்தை மனதினுள்ளேவிடலாம். இல்லையென்றால் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டியதுதான். அதாவது அந்த தீயஎண்ணத்தை மீண்டும் மீண்டும், எண்ணி எண்ணி, நீர் பாய்ச்சி, உரம்போட்டு வளர்த்து விட்டால் அது மரமாகி தீயவிளைவுகளை விளைவிக்கும். செயல் விளைவு தத்துவப்படி. எண்ணுவதிற்கும் விளைவு உண்டு.

    1991 அல்லது 1992 ஆம் வருடம் இருக்கலாம். விஞ்ஞானிகளின் கருத்தரங்கிற்கு(Science Meet) தலைமை தாங்க மகரிஷி அவர்கள் வேலூர் வந்திருந்தார். குருதேவர் விருந்தினர் மாளிகையில்(Guest house) தங்கியிருந்தார். ஒரு இனிய காலைப் பொழுது நேரம். அப்போது அவரைச் சந்தித்து ஆசி பெறும்போது, குருதேவர் திருவாய் மலர்கிறார். “இப்பொழுது கூட எந்த ஒரு எண்ணம் வந்தாலும், அதனை watchman ஐப் போல் வெளியே நிற்க வைத்து, அந்த எண்ணம் ஏன் வந்தது, அந்த எண்ணத்தை செயல்படுத்தினால் வரும் விளைவு என்ன என்று ஆராய்ச்சி செய்துவிட்டுத்தான் உள்ளே அனுமதிப்பேன்” என்றார். எண்ணம் ஆராய்தல் என்கின்ற புனிதப் பயிற்சியினை அருளியுள்ள அவருக்கு எண்ணத்தை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பது அவருக்கு இயல்பாகிவிட்ட நிலை.

    இப்போது நாம் சிந்திக்க வேண்டியது என்ன? அவருக்கு அப்போது வயது 80(1991-1911=80) இருக்கும். தனது 35 வயதில் தெய்வநிலை உணர்ந்து 55 வருடங்கள் பரிபூரண வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர் அப்போது. இருப்பினும் எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியில் வைத்திருப்பவர். அந்த நிலையில் அவருக்கு வருகின்ற எண்ணம் என்பது நல்ல எண்ணம், சமுதாயத்தை ஒட்டியே தான் இருக்கும். எனினும் அப்படியொரு நல்ல தெய்வீக எண்ணமாக இருந்தாலும் அதனையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறார். நல்ல எண்ணமாக இருந்தாலும் அதனையும் நிறைவேற்றுவதாக இருந்தாலும் இந்த சமுதாயத்தில்தானே நிறை வேற்ற வேண்டியிருக்கும். அந்த நிகழ்வை சமுதாயம் வரவேற்பதாக இருந்தால் தானே அந்த நல்ல எண்ணத்தையும் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.

    வினை-விளைவு விஞ்ஞானத்தின்படி, எண்ணத்திற்கும் விளைவு உண்டு. எண்ணியதற்கான முதல் விளைவு தனக்குள் ஏற்படும். அது எண்ணிய எண்ணத்திற்கு தகுந்தாற்போல் இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும், பூரிப்பாகவும் இருக்கலாம். அல்லது தீய எண்ணமாக இருந்தால் அது தனக்கே மனதிற்கு பொருந்தா துன்ப உணர்வாகவும் இருக்கலாம். எண்ணத்தை தற்சோதனைக்கு உட்படுத்தாவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் பிரதிபலித்து வலிவு பெற்று சொல்லாக – பேச்சாக வெளிவரும். அந்த சொல்லைப் பொறுத்து விளைவு இன்பமாகவோ அல்லது துன்பமாக வரும். அழுத்தம் பெற்ற எண்ணம் சொல்லாக வராமல், மூன்றாவது தொழிலான செயலாகவும் வரும். செயலுக்கு ஏற்ற விளைவு இன்பமாகவோ, துன்பமாகவோ வரும்.

    இந்த முத்தொழில்களும் கருமையத்தில் பதிவாகாமல் நடப்பதில்லை. செயலுக்குரிய விளைவு, ஐந்து காரணிகளான (1) நோக்கம், (2) திறமை, (3) தொடர்பு கொள்ளும் பொருள், (4) இடம், (5) காலம் ஆகியவைகளைப் பொருத்திருக்கின்றது. அதனால் ஒரு சிலவற்றிற்கு உடனேயும் விளைவுகள் வரலாம். வேறு சிலவற்றிற்கு விளைவுகள் வருவதற்கு காலதாமதம் ஆகும். தீய விளைவுகளை உடனே தரக்கூடிய செயல்களைக்கூட, அறியாமையாலோ, அலட்சியத்தாலோ, உணர்ச்சி வசத்தாலோ அல்லது பழக்கப்பதிவின் அழுத்த உந்துதலாலோ மீண்டும் ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும்’ மனிதன் செய்துவிடுகிறான்; தவிர்க்கமுடிவதில்லை மனிதனால்.

          இதுபோன்ற நிலை காலங்காலமாக இருந்து கொண்டுதான் வருகின்றது.  திருந்துவது போராட்டமாக உள்ளது என்பதாலேயே, மனிதகுலம்,  போராட்டத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடமுடியுமா?

           இதுவரை தோன்றிய அறிஞர்களின் ஆதங்கங்கள் வான்காந்தத்திலே பதிந்து கொண்டுவருகின்றன.   அதன் அழுத்தத் திணிவாலும், மற்றும்  மனிதகுலத்திற்கு ‘விமோசனமே கிடையாதா?’ என்கின்ற பேரறிவின் பின்னமான அருளாளா்கள் மற்றும் நல் உள்ளங்களின் வேண்டுதலுக்கிணங்க(Fraction demands. Totality supplies), இயற்கை கருணையோடு அளித்ததுதான் திருவேதாத்திரியம்.

          மனிதனுள் ஏற்கனவே இருக்கும் பூரணத்தை வெளிக் கொண்டுவருமாறு கல்வி இருக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் மொழிந்துள்ளதுபோல், திருவேதாத்திரியம் கல்வியின் நான்கு அங்கங்களாக எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத்தத்துவ அறிவு என்று கருதுகின்றது.

        கல்வி என்பது ஆரம்பக் கல்வியிலிருந்து ஆரம்பிப்பது. மேலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது எதார்த்த நிலையாக உள்ளது.  எந்த ஒரு நற்பழக்கமும் மனிதன் குழந்தைப் பருவத்திலேயே பழக ஆரம்பிக்க வேண்டும். என்பதால், இயற்கை, இப்போது,  பள்ளிக் கல்வியிலேயே பண்பேற்றக்கல்வியினை திருவேதாத்திரியத்தின் வாயிலாகக் கொண்டுவந்துள்ளது.  வாழ்க திருவேதாத்திரியம்,  வளர்க திருவேதாத்திரியம்.

          அடுத்த விருந்தில் கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.      … தொடரும் 06-05-2015.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 10/10

     

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 10/10

    FFC – 78 

                                 

    29-04-2015—புதன்

     

         சென்ற விருந்திலிருந்து, துறவு பற்றி திருவள்ளுவர், மற்றும் மகரிஷி அவர்கள் கூறுவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து இந்த விருந்திலும் மேலும் மகரிஷி அவர்கள் துறவு பற்றி கவிகள் மற்றும் உரைநடை வாயிலாகவும் கூறுவதனை அறிந்து கொள்வோம்.

     POST 29-4-15-FFC-78-இ இ சந்நியாசம்

                     பாடலின் பொருள்: முதலில் ‘வியாசம்’ என்கின்ற வார்த்தைக்குப் பொருள் காண்போம். ‘வியாசம்’ என்றால்

    1)   விரிவு

    2)   கட்டுரை

    3)   பகுத்தறிவு என்று பொருள்.

    கட்டுரை என்றால் ஒன்றைப் பற்றி விரிவாக தகவல் தந்து எழுதுவது.

        இப்போது ‘தன்வியாசம்’ என்கின்ற சொல்லிற்கு வருவோம். தன்வியாசம் என்றால் தன்னைப்பற்றிய சரித்திரத்தை, விரிவாக, முழுவதுமாக பகுத்தறிவோடு அறிவது.

         அடுத்ததாக சன்யாசம் என்கின்ற சொல்லிற்கு வருவோம்.

     சன்யாசம் என்றால் நடைமுறையில் உள்ள பொதுவான விளக்கம் யாதெனில்: — உலகப் பற்று, குடும்பப் பாசம், முதலியவற்றை விடுத்த நிலை, துறவு என்று பொருள்.

     

       கவியின் பொருளுக்குள் செல்வோம். தன்னுடைய பூர்வீக சரித்திரத்தை முழுவதுமாக பகுத்தறிவோடு அறிந்த அறிவாளி, சத்து, சித்து, அனந்தனாகிய தன்வியாசம் அறிந்தவர் வாழும் நிலையினை விளங்கிக் கொள்ளாத மக்களால், ‘குடும்பப் பொறுப்பை உதறிவிட்டு, சன்யாசம் மேற்கொண்டு விட்டார்’ என்றுத் தவறாக ‘சன்னியாசம்’ என்கின்ற சொல் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.

     சந்யாசிக்கும் பசிக்கும்.

     சந்யாசிக்கும் உடை தேவை.

    சந்யாசிக்கும் உறைவிடம் தேவை.

     

    ஆகவே சாதாரண மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் சந்யாசிக்கும் தேவை.

    அவர், மக்களிடமிருந்து வேறுபட்டுக் காண்பதில் எவ்வாறு வித்தியாசப்படுகின்றார்?

    இன்பம் துய்த்தலில் அளவும், முறை இருக்கும்.

    ஒழுக்க நெறி கொண்ட வாழ்வு வாழ்வார்.

    நிலையில்லாத தன்மையை நினைவில் கொண்டு மக்களுடனே மக்களாக வாழ்வார்.

    POST 29-4-15-FFC-78- இனிதி-  ஈட்டல்-29-4-15 RCD FR NAG

     

    இது வரை மகரிஷி அவர்கள் துறவு பற்றி கவியின் வாயிலாகப் பேசியவற்றைக் கேட்டோம்.

    இப்போது உரைநடை வாயிலாகத் துறவு பற்றி மகரிஷி அவர்கள் நம்முடன் பேசுவதைக் கேட்போம்.

    1)   துறவறம் என்பது உறவிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே!

    2)   துறவை விடுதலையோடு (liberation) இணைத்துப் பேசுவதைக் கேட்போம். உண்மையை உணர்ந்த அறிவின் தெளிந்த கருத்தே துறவு, அதுவே விடுதலை. அது என்ன விடுதலை? அஞ்ஞானி புலன்களில் சிறைப்படுத்திக் கொண்டு(get trapped by his own senses) வாழ்வதிலிருந்து விடுபட்டு, அளவும், முறையும் காத்து வாழ்வது விடுதலை எனப்படுகின்றது. மீண்டும் பிறவியில்லை என்பதே துன்பச் சிறையிலிருந்து விடுதலைதானே!

     

    3)   காயினை மூடிவைத்து கனியச் செய்வது போன்றது உலகியலோடு ஒழுகி இல்லறம் ஆற்றாத துறவு.   —- இன்னும் ஏன் அச்சம் நமக்கு இறைவனை நாடுவதில்? வேதாத்திரிய இறை உணா் ஆன்மீகத்திற்கு அச்சம் தேவையில்லை. ஆம், அச்சம் தேவையில்லை!   எல்லா நிலைகளிலும் வழிகாட்டும் மந்திரங்களைக் கொண்டிருக்கின்றது இயற்கை/இறை மனிதகுலத்திற்கு கருணையோடு அருளியுள்ள திருவேதாத்திரியம்.

    4)   உற்ற உலகிலோடொழுகி இல்லறம் ஆற்றிப் பெற்ற அறிவின் உயர்வே பெருந்துறவு.

     

    5)   துறவையும் உள்ளத்தூய்மையும் இணைத்துப் பேசுவதைக் கவனிப்போம். உறவிலே அமைந்துள்ள உண்மையை உணர்ந்திடு. துறவிலே உள்ள உள்ளத்தூய்மை பெற்றுய்யலாம். ஆகவேதான் மகரிஷி அவர்கள்,

    அறநெறியில் விழிப்புடனும், பொறுப்புடனும் செயல்களாற்றி,

    எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மை அடைந்துவிட்டாலும்,

     இறை உணா்வு பெறுவது அதனுடன் முழுமை அடையாதலால், அதாவது முதல் இரண்டு படிகளிலே முடிவு பெறாமையால்,

    பாடலின் அடுத்த நான்கு வரிகளில் துறவைப் பற்றித் தெளிவடைந்த உயர்அனுபவத்தைக் பேரின்ப நிலைகளின் மூன்றாவதும் மற்றும் நான்காவதும் இறுதியுமான படிகளாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

     6) வெறுத்து ஒதுக்குவது துறவாகாது, அறிந்து உணர்ந்து, தொடர்பு மற்றும் உறவினைச் சரியாகக் கணக்கிட்டு அளவு முறையுடன் அனுபோகம் கொள்ளும் விழிப்பு நிலை கொண்ட மனநிலைதான் துறவு என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் துறவி என்பவர் யார் எனக் கூறுவதனைக் கவனிப்போம்.

    துறவி பற்றி ….

    துறவறத்தான் என்பவர், பொருளீட்டிக் காப்பதைத் தவிர்த்து, அறிவுத் துறையில் உயர்ந்து, அதாவது அறிவின் இருப்பிடம் மற்றும் சரித்திரம் அறிந்து பிறர்க்கு எடுத்துச் சொல்லி தொண்டாற்றுபவர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

       மகரிஷி அவர்களின் நினைவு தினமான 28-03-2015 ஆம் நாளிலிருந்து நான்கு வாரங்களாக ‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!’ என்கின்ற தலைப்பில், அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்களை, அவ்வையார் கூறுவது போல் நினைவு கொள்வது எப்படி என்று ஆராய்ந்து வந்திருக்கிறோம். அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது என்பது வார்த்தைக்கு உள்ள பொருளில்(literal meaning) எவ்வாறு சாத்தியம் எனத் தோன்றலாம். அவ்வையார் அறிவினரோடு பாமரன் சேர்ந்ததால் ஏற்படும் பிணைப்பின் தீவிரத்தின் (intensity of bond between Guru and disciple) அளவை வேறு எவ்வாறு கூறமுடியும்? அவ்வையார் கூறுவது போல் அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது சாத்தியமா என்பதற்கு வருவோம்.   அறிவினர் கூறும் அறிவுரைகளை சிரமேற்கொண்டு, ரசித்து. மதித்துக்கும் நிலை சீடனுக்கு இருக்குமேயானால் அறிவினரோடு பிணைப்பு அதிகமாகும்.

       சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் மூச்சுவிடுவதுபோல் சிந்தனை   செயல்பட ஆரம்பித்தால், இறையின் திருவிளையாடல் இல்லாத எந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதால் அங்கே இறைவனின் திருவிளையாடலைக் கண்டு ஆனந்தப்படலாம். அவ்வாறு ரசிக்கும் போது கூடவே அறிவினரின் நினைப்பும் வந்துவிடும். அறிவினரோடு சேர்ந்த பலன்தானே எப்போதும் சிந்திப்பது!

       இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும், நனவிலும், காண்பதுதானே என்று சிந்திக்க ஆரம்பித்து, இயல்பூக்க நியதியினை மனிதன் தன்னுடைய பண்பேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு, பிறவிப்பயனை அடைவது என்பதனை அறிந்து கொண்டோம்.   அத்துடன் மகரிஷி அவர்கள் பிறவிப்பயனை அறிந்து, தான் எவ்வாறு இறை உணர்வு பெற்றார் என்கின்ற அனுபவத்தையும் அறிந்து

    கொண்டோம். இறை உணர்வு என்பது சாதாரணமானவர்களுக்கு அரிதாக இருந்ததை சாதாரணமானவர்களும் இறை உணா்வு என்கின்ற புனிதச் சொற்றொடரை அன்றாட வாழ்வில் பயன்படுத்தவும், அதற்கான பயிற்சிகளையும் முயற்சியோடு மேற்கொள்ளும் காலம் திருவேதாத்திரியத்தால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பது இயற்கையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கிய திருப்புனையாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

       வேறொரு சமயத்தில் பிறவிப்பயன் என்பது என்ன, அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதனை எவ்வாறு அடைவது, இறை உணர்வு என்பது முறையான – சரியானத் துறவையும் அடக்கிக் கொண்டது என்பதனையும் பார்ப்போம். ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பது இயற்கையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கிய திருப்புனையாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

       வேறொரு சமயத்தில் பிறவிப்பயன் என்பது என்ன, அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதனை எவ்வாறு அடைவது, இறை உணர்வு என்பது முறையான – சரியானத் துறவையும் அடக்கிக் கொண்டது என்பதனையும் பார்ப்போம். இன்றைய சிந்தனையை மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்து வணங்கி முடித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.

    POST 29-04-15-FFC-78-இ இ ஏன ஏழுது பாரதி

     மகாகவி பாரதியார் தான் எழுதுவது எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என வாணியை வேண்டுகிறார்.

    1)   தெளிவான சிந்தனை வேண்டும் என்கிறார்.

    2)   தெளிவான பேச்சு வேண்டும் என்கிறார்.

    3)   தெளிவான எழுத்து ஆகிய மூன்றும் வேண்டும் என வேண்டுகிறார் மகா கவி பாரதியார்.

    வாழ்க பாரதியாரின் அறிவாற்றல். எட்டட்டும் பாரதியாரின் அறிவாற்றல் எல்லோருக்கும். மகாகவி பாரதியார் கூறுவது போன்றுதானே பாரதியாரின் இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்களின் எழுத்துக்களும் பாடல்களும் உள்ளன?  வாழ்க திருவேதாத்திரியம். வளா்க திருவேதாத்திரியம்.

       அடுத்த விருந்தில் (03-05-2015) எண்ணியது முடிதல் வேண்டும் பற்றி சிந்திக்க இருக்கிறோம்..

    Loading

  • இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 9/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 9/?

    FFC – 77

    26-04-2015—ஞாயிறு.

    சென்ற விருந்தில், திருவேதாத்திரியத்தின் 1849 ஆம் மந்திரமான ‘இன்பம் இன்பம் இன்பம் இன்பம்’ என்கின்ற தலைப்பின் கீழுள்ள பாடலின் முதல் நான்கு வரிகளில், மகரிஷி அவர்கள், தான் இறைமையை அடைவதற்கானத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்தார் என்று கூறியுள்ளதனை அறிந்து கொண்டோம். இன்றைய விருந்தில்,

    உலக மக்கள் வாழும் இப்போதைய நிலையில், உலகமக்களுக்கு, இறைமைக்கு வழிகாட்டவும்,

    அதன் விளைவாக உலக சமாதானத்தை, மக்கள் மனங்களிலே வித்திடச் செய்யவும்,

    மகரிஷி அவர்களை கருவியாக்கி, உயர்த்தி, அவருள் இறை/இயற்கை அன்னை, ஏற்படுத்திய புரிதல் அனுபவங்களை அடுத்த நான்கு வரிகளின் வாயிலாக அறிவோம்.
    பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது. அதற்கு மனத்தூய்மை அவசியம். எனவே
    இறை உணர்வு பெறுவதற்கான உளப்பயிற்சியும்,
    மனம் தூய்மை பெற அறநெறியில் விழிப்புடனும், பொறுப்புடனும் செயல்களாற்றி மனம் தூய்மையானபோது பேரானந்தம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் முதல் நான்கு வரிகளில்.
    மனம் தூய்மையாவதால் பெறும் பேறு இறை உணர்வு. மனம் தூய்மை அடைந்துவிட்டது, விளைவாக இறை உணர்வு பெற்றாகிவிட்டது. பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டது. பிறவியின் நோக்கத்தை அறிந்த போது என்று ஆரம்பித்த பாடல் அந்த நான்கு வரிகளோடு, பாடலை முடித்திருக்கலாமே இறை/இயற்கை. அப்பாடலை முடிக்காமல், மேலும் நான்கு வரிகளை இயற்றச்செய்துள்ளது இறை/இயற்கை. எனவே மகரிஷி அவர்கள் அடுத்த நான்கு வரிகளை இயற்றியுள்ளார்.
    ஆகவே இறை உணர்வு பெற்றது/பெறுவது என்பது அறநெறியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளை உள்ளடக்கிய அறநெறி வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை எனத்தெளிவாகத் தெரிகின்றது.
    அந்தக் கடைசி நான்கு வரிகள் கூறுவதென்ன?

    POST 26-04-2015-FFC-77 இ இ உறவுகளில்
    கடைசி நான்கு வரிகளில் உறவு, துறவு பற்றி கூறுகிறார். வாழ்க்கை உறவு இல்லாமல் நடைபெறாது. உறவிற்கு எதிர் சொல்போல் இருக்கின்ற துறவைப் பற்றிக் கூறுகின்றார். ஆனால் மகரிஷி அவர்கள், சமுதாயம் கொண்டுள்ள பொருளில் துறவினை ஆதரிக்கவில்லை. ஆனால் மகரிஷி அவா்கள்,
    “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்” என்று திருவள்ளுவர் கூறுகின்ற நிலையில் துறவு பற்றி கூறுகிறார்.

    மகரிஷி அவர்கள் துறவை, பொதுவாக சமுதாயம் கொண்டுள்ள பொருளில் ஆதரிக்க வில்லையாயினும், பிறவியின் நோக்கத்தை அடைந்த தன் அனுபவத்தைக் கூற வந்த மகரிஷி அவா்கள்,
    உறவையும் துறவையும் இணைத்தும்,

    சரியானத் துறவுநிலை என்ன என்று அறிந்து, அதனை உயர்வானதாக உணர்ந்ததை மூன்றாவது நிலையாகவும்,
    முடிவாக அத்துறவு நிலையினை அடைந்ததை நான்காவதும், இறுதியுமான பேரானந்த நிலைகளாகக் கூறி அப்பாடலை முடித்து வைக்கிறார் ஆன்மீக விஞ்ஞானத்தின் சிகரத்திற்கேச் சென்றுள்ள மகரிஷி அவர்கள்.

    அப்படியானால் துறவு பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன என்று ஆராய்வோம்.
    துறவு பற்றி மகரிஷி அவர்கள் பல்வேறு இடங்களில் கூறியுள்ளதை கவனத்திற்கு கொண்டு வருவோம்.

    1) உறவிலே கண்ட உண்மை நிலை துறவு என்கிறார். இதற்கு அவா் கூறும் உதாரணமாவது:- தூங்கும் வரை தலையணை தேவையாய் இருக்கின்றது. விழித்த பிறகு தலையணைத் தேவையில்லை. விழித்த பிறகு யாரும் தலையணையைத் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. என்கின்ற உதாரணத்தைக் கூறுவார். தேவையிருக்கும்போது அப்பொருளின் நினைவு இருக்கலாம். தேவையை முடித்துக் கொண்ட பிறகு அப்பொருளை மறந்துவிடவேண்டும். பசி உணர்வு ஏற்படும்போது உணவின் மீது எண்ணம் செல்லலாம். ஆனால் பசி உணர்வு தீர்ந்த பிறகு உணவின் மீது எண்ணம் அவசியமில்லை. உணவின் மீது எண்ணம் கொண்டிருப்பதே வாழ்க்கையாகிவிடக் கூடாது. அன்பர்களை அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அழைப்பு விடுக்கும்போது ”தின்றுத் திரிந்து உறங்கவாப் பிறந்தோம்” என்று கூறி அறிவுறுத்துவதனை நினைவில் கொள்ள வேண்டும்..

    2) “பற்று அற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
    நிலையாமை காணப்படும்.” ……………………………………. என்கிறார் வாசுகி என்கின்ற மாதர்குல ரத்தினத்தை இல்லத்தரசியாக்கிக் கொண்டு வாழ்ந்த, இல்லறத்து ஞானியான திருவள்ளுவர். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டுடன் இன்பத்துப்பாலையும் சேர்த்தவர், அறத்துப்பாலில் துறவறவியலில் பத்துக் குறட்பாக்களையும் எழுதியுள்ளார். திருவள்ளுவர் காலத்திற்குப் பிறகு, 19 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருவள்ளுவருக்கு மானசீகச் சீடராகிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் இல்லறத்தை வலியுறுத்தியும் அதே நேரத்தில் இல்லறத்திலேயே துறவு பற்றியும் கூறியிருக்கிறார். மகரிஷி அவர்கள் கூறும் துறவறம் என்பது என்ன? எப்படி இல்லறமும், இல்லறத்தைத் துறந்து துறவறமும் ஒன்று சோ்ந்து இருக்க முடியும் என ஐயம் எழலாம். என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள் என ஆராய்வோம்.

    ஆங்கிலத்திலே சொல்லும் போது “Detached attachment” தேவை என்பார் மகரிஷி அவர்கள். ‘Detachment’, ‘attachment’ ஆகிய இரண்டு எதிர்ச் எதிர்சொற்கள் இணைந்த “Detached attachment” சொற்றொடரை (phrase) உருவாக்கியிருக்கிறார். தமிழில் கூறும்போது ‘பற்றற்ற பற்று’ வேண்டும் என்பார். அப்படியானால் பற்று இல்லாமல் இருக்க முடியாது என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்த பற்று பற்றற்றதாக இருக்க வேண்டும் என்றல்லவா பொருளாகின்றது. எப்படி?

    அதாவது உணவில் உப்பும் தேவை. ஆனாலும் உப்பு மிகுந்து விடக் கூடாது. உப்பில்லா பண்டம் குப்பையிலே. உப்பு அவசியம் என்றாலும், உப்பு அதிகமாகிவிட்டாலும் உணவு, உண்ணப்படுவதற்கானத் தகுதியை இழந்துவிடும். எனவே உணவிற்கு உப்பைச் சேர்க்கும் போது எவ்வளவு கவனம் தேவையோ அதேபோல் இல்லறத்திலேயே துறவறம் நடத்த வேண்டும். அந்த துறவறம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் தாமரை இலை போல் வாழ்க்கை வாழ வேண்டும். அதாவது தாமரை இலை தண்ணீரிலேயே வாழ்ந்தாலும், தண்ணீரைத் தன் மீது ஒட்டிக் கொள்ளாமல் வாழ்கின்றது. அதுபோல் மனித வாழ்க்கை என்பது உறவில்லாமலும் வாழ முடியாது. அந்த உறவே சிக்கலை ஏற்படுத்திவிடும்படியும் ஆகிவிடக்கூடாது. உறவு என்றால் மனிதர்களோடு தொடா்பு கொள்வது மட்டுமல்ல. பொருட்களோடு தொடர்பு கொள்வதும் அடங்கும். ஒருவரை சார்ந்திருக்கும் மனிதா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கு மேல் பொருட்கள் அதிகமாக அதிகமாக  ஒருவரின் சுதந்திரம் பறிபோகும் என்பார் மகரிஷி அவர்கள். சுதந்திரம் பறிபோவது என்பது துன்பம்தானே? இதனையே திருவள்ளுவர்

     “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.”                                 என்கிறார்.

    இதற்கு என்ன பொருள்? ஒருவா் எந்தெந்தப் பொருள்களிலிருந்து பற்று நீங்கி இருக்கின்றாரோ, அந்தப் பொருள்களிலிருந்து அவருக்குத் துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர், துறவு என்கின்ற அதிகாரத்தின் முதல் குறளிலேயே. இது உண்மைதானே! திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவா்கள் வகுத்துக் கொடுத்துள்ள தற்சோதனைப் பயிற்சியின் இரண்டாவது அங்கமான ஆசை சீரமைத்தலில் வெற்றி அடைந்தவர் வள்ளுவர் கூறும் துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தவர்தானே?

    வள்ளுவர் கூறுவதிலுள்ள நியாயத்தை–தர்க்க சாஸ்திரத்தைப் ‘logic—the Science of reasoning’ ஐ பார்ப்போம். பொருட்கள் நிலையில்லாதது. மாறக்கூடியது. அழியக் கூடியது. ‘நான் யார்–தத்துவ–-உண்மை’ யின் படி, மனிதன் அழியக் கூடிய உடலல்ல. அழியாத ஆன்மாதான் மனிதன். பிறவிச் சுழற்சியை முடித்துக் கொள்ள, அழியாததிலிருந்து (மெய்ப்பொருள்) வந்த, அழியாதது (ஆன்மா) எதனுடன் பிணைப்பை வைத்துக்கொள்ள வேண்டும்? அழியாததுடன்தானே பிணைப்பை வைத்துக் கொள்ள வேண்டும்.
    அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த பிணைப்பை ஏற்படுத்தித் தருபவர் தான் அறிவை அறிந்த அறிவாளி. அழியும் பொருட்களோடு பிணைப்பை வைத்துக் கொண்டு என்ன செய்துவிடப் போகிறான் மனிதன்? கீதாசாரக் கருத்தை நினைவிற்கு கொண்டு வாருங்கள். வந்த நோக்கம் அழியாத பொருளைப் பற்றிக் கொண்டு அழியாத பொருளாக மாற வேண்டும், அதனைத் தவிர்த்துவிட்டு, அறவே அதனை மறந்துவிட்டு, அழியும் பொருட்களோடு அளவும் முறையும் இன்றி உறவு வைத்துக் கொண்டால் விளைவு துன்பம்தானே வரும். மீண்டும் மீண்டும் அழிகின்ற பொருட்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வள்ளுவப் பெருந்தகை கூறும் பிறவிப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் உருவாகும்.

    ‘இல்லறம் துறவறவம்’ என்கின்ற தலைப்பில்(560—581) 22 பாக்களை இயற்றியுள்ளார் மகரிஷி அவர்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

    POST 26-04-2015-FFC-77-இ இ இல்லறமும்

    கருத்துரை: துறவறம் என்பது எண்ணத்தில் இருக்க வேண்டும் என்கிறார். அகம் துறவறத்தை ஏற்க வேண்டும். அகமாக உள்ளது இறைதானே?! அதாவது இயற்கையின் எதார்த்தம் விளங்கியத் தெளிந்த தெளிவு வேண்டும். எண்ணமே இயற்கையின்/இறையின் சிகரம், எண்ணம் இயற்கையின்/இறையின் சிறப்பு, இயற்கைக்கோ/இறைக்கோ, பற்று தான் இருக்கின்றதா? இல்லையே! ஆகவேதான் இயற்கையாகிய/இறையாகிய எண்ணத்தில் துறவு வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஜீவாத்மா இறைமையை எய்துவதற்கு எண்ணத்தில்தானே துறவு இருக்க வேண்டும். புற வேடங்களிலும், சொல்லிலும் துறவு இருந்து என்ன பயன்? எண்ணத்தில் துறவு இருந்தால்தானே,

    “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி” என்று திருவேதாத்திரியம் தனது முதல் மந்திரத்திலேயே இயம்பியுள்ளது சாத்தியமாகும். மேலும் துறவு பற்றி மகரிஷி அவர்கள் கவிகள், உரைநடைகள் வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார் என்று அடுத்த விருந்தில் பார்ப்போம்.
    தொடரும் 29-04-2015.

    Loading

  • இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 8/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 8/?

    FFC – 76

    22-04-2015—புதன்

    இன்றைய விருந்தில் மகரிஷி அவர்கள் பிறவியின் நோக்கத்தைக் கண்டுபிடித்து, அதனை அடைந்ததில் அனுபவித்த பேரானந்தத்தை நான்கு நிலைகளாக இன்பம் இன்பம் இன்பம் இன்பம் என்கின்ற தலைப்பில் ஒரு கவிதையாக அருளியுள்ளார். அக் கவியின் பொருளை அறிவோம்.
    தான் பிறவியின் நோக்கத்தை அடைந்ததை நான்கு நிலைகளாகக் கூறுகிறார்.
    1) பிறவியின் நோக்கத்தை அறிதல்,
    2) பின்னர் அதனை அடைவது,
    3) உயர்வானத் துறவு நிலையை உணர்தல்,
    4) முடிவாகத் துறவு நிலையைப் பெறுதல்.
    முதல் வரி கூறுவது என்ன?

    பிறவியின் நோக்கத்தை அறிந்தது: பேரின்பப் படிகளின் முதல் படியாக பிறவியின் நோக்கத்தை அறிந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். ஆனால்  “பிறவியின் நோக்கத்தை அறிந்த போதும்” என்றுதான் முதல் வரி சொல்கின்றதே தவிர, பிறவியின் நோக்கம் என்ன என்று சொல்லவில்லை. மகரிஷி அவர்கள் பிறவியின் பயன் இறையுணர்வு பெறுவது என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் இப்பாடலில் அதனை மீண்டும் கூறவில்லை. ஒருவேளை அது ஏற்கனவே தன்னுடைய மாணவர்களுக்குத் தெரிந்ததுதானே என்பதால் அப்பாடல் வரிகளில் ‘பிறவியின் நோக்கம் இறைஉணர்வு பெறுவது’ என்று கூறவில்லை போலும்!

    பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதே பேரானந்த நிலையை அடைந்ததாகக் கூறுகிறார். அதாவது,
    திக்குத்(திசை) தெரியாத இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்டு வழி தெரியாமல் அவதியுறும்
    சாதாரணமான, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்,
    தீடீரென ஒளி தெரிந்து, வழி தெரிந்து காட்டில் இருந்து வெளியேறினால் எவ்வாறு இன்பம் இருக்குமோ, அதனைவிட அதிகமாக இன்பம், பிறவியின் நோக்கத்தை தானாகவே கண்டுபிடித்தபோது இருக்குமல்லவா?
    இருண்ட வாழ்க்கையில் ஒளி தெரிய ஆரம்பித்ததன் விளைவாக, வாழ்க்கைக்கு லட்சியம் ஏற்பட்டு விடுவதால் ஆனந்தம் இருக்கத்தானே செய்யும்! அதுவும் அது பேரானந்தமாகத்தானே இருக்கும்!

    இரண்டாவது வரி கூறுவது என்ன?

     “பின் அந்த எல்லையினை அடைவதற்கு” என்று அடுத்த இரண்டாவது வரி உள்ளது. இந்த இரண்டாவது வரி —  “பின் அந்த எல்லையினை அடைவதற்கு” என்று கூறுவதால், பிறவியின் நோக்கத்தை அடைவதற்கு ஒரு எல்லை இருப்பதாகத் தெரிவிக்கிறார் மகரிஷி அவர்கள். இது வரை பிறவியின் நோக்கம் அறியாத, பயனற்ற பல்லாயிரம் பிறவிகள் வீணாய்ப்போன அறியாமை வாழ்க்கை வாழ்ந்த ஆன்மாவிற்கு பிறவியின் நோக்கம் விளங்கி, அதனை அடையப் போகிறோம் என்பது எல்லை உடையதாகத்தானே இருக்கும். ஆகவே அந்த எல்லையினை அடைவதற்காக மகரிஷி அவர்கள் மேற்கொண்ட வழிகளை மூன்றாவது மற்றும் நான்காவது வரிகள் கூறுகின்றன.
    மூன்றாம் வரி கூறுவது என்ன?

    “அறநெறியில் விழிப்போடு பொறுப்புணர்ந்து,” — மகரிஷி அவர்களே வகுத்துக் கொடுத்துள்ள ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்ட அறநெறியில் வாழ்வதற்குப் பொறுப்பினை உணர்ந்தும். விழிப்புடன் இருந்ததைத் தெரிவிக்கிறார். அந்த எல்லையினை அடைவதற்கு பொறுப்பும், விழிப்பும் எவ்வாறு அவசியம் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். புல்லாய், பூண்டாய், வண்டாய்ப் பல்வேறு விலங்கினப் பிறவிகளைக் கடந்து, அவ்வையார் கூறும் அரிதான மானுடப் பிறவி கிடைத்துள்ளது. எனவே மனிதனாகப் பிறந்ததற்கான பொறுப்பு உள்ளது. அதுதானே ஆறாம் அறிவின் சிறப்பு. இந்த பொறுப்பு வந்துவிட்டால், கூடவே அதனுடன் தொக்கியுள்ள அயரா விழிப்பும் வந்துவிடும். அந்த அயரா விழிப்பு(constant awareness—Awareness Is God) நிலைதானே ஆதியாகிய பேரறிவின் நிலை. அந்த பேரறிவின் விழிப்பு நிலையில் இருந்து பிறழ்ந்து இருந்ததற்கான காரணம் மனிதப் பிறவியின் நோக்கம் அறியாமையேயாகும். நான்காவது வரிக்குள் செல்வோம்.

    நான்காவது வரி கூறுவது என்ன?

     ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோதும்,” — பொறுப்புடனும், விழிப்புடனும் இருந்தது எதற்காக என்கிறார் இவ்வரியில். அதாவது பொறுப்புடனும், விழிப்புடனும் இறைமையில், இருந்து தனது செயல்களை ஆற்றி, முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகியவைகளில் தூய்மை அடைந்து வெற்றி பெற்றதைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    முதல் நான்கு வரிகளை் கூறும் தெய்வீகச் செய்தியினை சுருக்கமாகச் சொல்லிப் பார்ப்போம்
    1) பிறவியின் நோக்கத்தை அறிந்து,
    2) பின்னர் அந்த எல்லையினை அடைவதற்காக,
    3) பொறுப் புணர்ந்த பொறுப்புடனும்,

    4) அறநெறியில் விழிப்புடனும்,

    5) செயல்கள் ஆற்றி
    6) எண்ணம், சொல், செயல் தூய்மை ஆன போது, தான் அடைந்த இரண்டு பேரானந்த நிலைகளை, வாய்மொழியால் எவ்வாறு கூறமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வாறு இருந்தாலும், அந்தப் பேரானந்த நிலையின் விளிம்பிற்கே கொண்டு நிறுத்தியிருக்கிறார் மகரிஷி அவர்கள்.

    தான் அடைந்த பேரானந்த நிலைகளில், முதல் நிலையாக பிறவியின் நோக்கம் அறிந்ததையும், இரண்டாவது நிலையாக எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை ஆனதையும் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அத்தோடு பேரானந்த நிலை நின்றுவிட்டதாகக் கூறவில்லை. மூன்றாவது, மற்றும் நான்காவது நிலையாகவும் இரண்டினைக் குறிப்பிடுகின்றார், இறை உணர்வு என்பதனை அவருடைய சீடர்கள், குழப்பமில்லாமல் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையிலே பல்வேறு இடங்களில் பல கோணங்களில் இறைஉணர்விற்கு வரையறைபோல் கூறியுள்ளார்.

    அவைகளில் ஒரு சிலவற்றை நாம் பார்ப்போம்.

    1) “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்கிறார். அதாவது செயலின் விளைவாக சிவனைக் காண்கின்ற வழியே சிறந்த இறை உணர்வு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    2) இயற்கையின் தன்மையினை உணர்ந்து கொள்வது இறை உணர்வு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    3) இறை உணர்வு என்பது, இறைவனைப் பற்றி தெளிவாகத் உணர்ந்து கொண்டு இறைவனே தனக்குள் அறிவாகவும், அனைத்திலும் இயக்க ஒழுங்காற்றலாகவும் இருப்பதை அகக் காட்சியாகக் கொண்டு, எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களை முறைப்படுத்திக் கொண்டு ஆன்மாவின் மாசற்ற வாழ்க்கை நிலையே இறை உணா்வு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    4) மனம் தூய்மை அடைந்தால் அந்த வினாடியே இறை உணர்வு கிட்டும் என்கிறார்.
    5) இறை உணர்வு என்பதைச் சரியாகப் பெற்றுவிட்டால் வாழ்க்கையே அறநெறியாக அமையும் என்கிறார். அறநெறி வழியாக இறை உணர்வு என்ன என்று கூறுகிறார். அறநெறியே இறை உணர்வு என்கிறார்.

    இவ்வாறாக இறை உணர்வு பற்றி சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். இறை உணர்வு என்றால் இறையை உணர்வது என்று மட்டும் சொல்லிவிடவில்லை. நாம் தனியாக இருக்கிறோம். இறை எங்கோ தனியாக இருக்கின்றது. அதனை நாம் கைகளால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இறைஉணர்வைப்பற்றி, பலகோணங்களில் விளக்குகிறார் மகரிஷி அவர்கள். எனவேதான் இறை உணர்வு பற்றி இத்தகைய வரையறைகள் கூறியிருக்கிறார். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில்,

    இறையே நம் அறிவாக இருந்தும்,
    பரிணாமக் கசடுகளால் கலங்கமுற்றிருப்பதால்,

    இறை உணர்வு என்பது, மனிதனின் முத்தொழில்களிலும் தூய்மைப் பெறுவதே என்கிறார். இந்த விளக்கம் எளிதாக இருந்தாலும், மனிதன் பழக்கப் பதிவுகளில் மூழ்கிவிட்டதால், முத்தொழில்களிலும் மிக மிகப் பின்தங்கியே உள்ளான். விளக்க வழி வாழ முடியவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. திருவள்ளுவர் கூறும் பிறவிப்பெருங்கடலை நீந்த முடியமால் மீண்டும் மீண்டும் பிறவிச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றது மனிதகுலம். அதனால் தான் திருவேதாத்திரியம்  “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்” என்கின்றது.

    இறை உணர்வு என்பது மனித மனம் தூய்மை அடைதலே என்பதால் பிறவியின் நோக்கம் என்ன என்று கூறாமல் பிறவியின் நோக்கம் அறிந்த போது என்று கூறிவிட்டு, பிறகு அந்த எல்லையினை அடைய விழிப்புடனும், பொறுப்புணர்ந்து எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களில் தூய்மை அடைந்த போதும் பேரானந்தம் என்கிறார். மனித மனம் தூய்மை அடைவதே இறைஉணர்வு என்பதனை மனதில் கொண்டுதான் பாடலின் முதல் வரியில் பிறவியின் நோக்கம் என்று சொல்லாமல், பிறவியின் நோக்கம் அறிந்தபோது பேரானந்தம் அடைந்ததாகக் கூறுகிறார். ஆகவே இறை உணர்வு பெற மனத்தூய்மை அவசியம் என்பதனை வலியுறுத்துகிறார். பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது என்பதனை இன்னொரு வகையில் சொல்வதென்றால் பிறவியின் நோக்கம் மனிதன் மனிதனாக வாழ்வது என்றும் பொருள் கொள்ளலாம். மனிதம் மனம் தூய்மை அடைந்தால்தான் அவன் மனிதன். இல்லையெனில் மனித உருவினிலே அவன் மிருகமாக அரைகுறை மனிதனாகத்தான் வாழ்கிறான் என்றே பொருள். இந்தக் கருத்தை மகரிஷி அவர்களின் ஒரு கவியின் வாயிலாக அறிவோம்.

    முழுமனிதன்(03.01.1959)

    மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு,
    மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு,
    மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்
    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.

    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    ஆகவே விலங்கினத்திலிருந்து கருத்தொடராக வந்துள்ள மனிதஇனம், இன்னமும் பிறர்வளம் பறித்தலான விலங்கினப் பண்பிலிருந்து முழுவதுமாக விடுதலை அடையவில்லை என்பதனால்தான் முழுமனிதன் என்கின்ற தலைப்பின் கீழ், யார் முழுமனிதன் என்று கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு, கவியின் வழியாக தன்னுடைய ஆதங்கத்தையும் தெரிவிக்கும்படி ஆயிற்று மகரிஷி அவர்களுக்கு.
    ஆகவே தற்போதுள்ள மனிதனவன் முழுமனிதனாக
    மனதை அறிய வேண்டும்,
    மதி நிலைக்க வேண்டும்,
    மனம் இதமாக இருக்க வேண்டும்,
    மனம் உவந்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்.
    இத்தகைய மனிதன் முழுமனிதனாகிறான் என்கிறார் மகரிஷி அவர்கள். இதுவரை பாடலின் முதல் நான்கு வரிகளில் நம் குருநாதர் அவா்கள் பிறவிப்பயனை அடைந்து வந்த தெய்வீக அனுபவங்களை அறிந்தோம். மனிதன் முத்தொழில்களில் தூய்மை அடைந்தாலே இறையுணர்வு பெற்றதற்கான அடையாளமாகும் போது இத்துடன் மனிதப் பிறவியின் நோக்கம் முடிந்து விட்டதுதானே என ஐயம் எழலாம். மனிதன் மனிதனாக்கூடிய வழிகளை இந்த நான்கு வரிகளும் கூறுகின்றன. ஆனால் மனிதன் தெய்வமாகப் பிரகாசிக்க அடுத்த நான்கு வரிகள் மகரிஷி அவா்களின் அனுபவங்களைத் தருவதோடு, எதார்த்தத்தை புரிந்து கொள்ள சிந்திக்க வைக்கின்ற வகையிலே உள்ளன. அவற்றை அடுத்த விருந்தில் அருந்துவோம். வாழ்க வளமுடன். தொடரும் 26-04-2015- ஞாயிறு

    Loading