FFC – 273-செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 8/?

வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

lotus

செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 8/8

FFC – 273
அ.வி. 273

06-12-2017-புதன்

கருமையம்
(பாகம்-3)

வாழ்க வளமுடன்!

சென்ற அறிவிற்கு விருந்தில், கருமையம் பாகம் இரண்டில் ‘முன்னோர்கள் செய்த சஞ்சித கர்மாவையும்’ இப்பிறவியில் அனுபவிக்க வேண்டியுள்ளது என்றும், அதற்கு உதாரணமாக பட்டினத்தடிகளார் சுவாமிகளின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றினை நினைவு கூர்ந்ததன் மூலம் உறுதிபடுத்தினோம்.

பட்டினத்தடிகளார் வாழ்ந்த காலத்தில் இறைஉணர்வு பெறுவதற்கு இருந்த துறவு நிலை கடுமையானது என்றும்,

அந்த துறவு நிலையை இருபதாம் நூற்றாண்டில் வாழ்வாங்கு வாழ்ந்த ஓர் அறிஞரின் வழியாக எளிமையாக்கி சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது இயற்கை/இறை என்றும்,

அந்த அறிஞர் யார் என்கின்ற வினாவுடன் சத்சங்கத்தை சென்ற அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில் முடித்துக் கொண்டோம்.

அந்த அறிஞர் யார் என இன்றைய விருந்தில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டின் சுவாமிகளே ஆவார் அவர்:

அந்த அறிஞர் வேறு யாருமில்லை. நம் குருநாதர் அவர்களே. இருபதாம் நூற்றாண்டில் இயற்கை, துறவு நிலையின் உண்மை நிலையை நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழியாக எடுத்துக் கூறியுள்ளது. எனவே இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த பட்டினத்து சுவாமிகளான வேதாத்திரி மகரிஷி அவர்களின் துறவு பற்றிய தெளிவினை நினைவு கூறுவது நலம் பயக்கும்.

‘உறவின் உண்மை நிலை துறவு’ என்கிறார் இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி சுவாமிகள். ‘புவிவாழ்வின் இயல்பொக்க’ வாழ்வதற்கு யோசனை கூறுகிறார். எனவேதான் ஈகையை உள்ளடக்கிய அறத்தைப் போதிக்கிறார். மேலும் மகரிஷிகள் கூறுவதனைக் கவனிப்போம்.

FFC-272-உறவுகளில் - Copy

என்கிறார் ஆன்மீகத்திற்கு பிரம்மசரியம் அவசியமில்லை என்றுரைத்து இல்லறத்தையும் துறவறத்தையும் இணைத்தே வாழ்ந்த நமது சுவாமிகள் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பதிதல் மனிதனிடம் எங்கு பதிவாக முடியும்/பதிவாகின்றது?

பதிதல் இல்லாமல் எந்த நிகழ்வும் இல்லை என்பதனை அறிந்துகொண்டோம். மனிதனில் நடக்கும் எந்த நிகழ்வுகள் பதிகின்றன? மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் பதிகின்றன. மனித உடலில் எங்கு பதிவாக முடியும்? பதிதல் நடக்க வேண்டுமெனில் அதற்கு காந்த-ஊடகம்(magnetic medium) அவசியம். செயற்கையாக ஒலி-ஒளியை பதிவு செய்ய தயாரிக்கப்படும் ஒலி-ஒளி நாடாவில் (cassette) காந்த பூச்சு(magnetic coating) செய்யப்பட்டுள்ளது. இயற்கையில், பதிதல் காந்த ஊடகத்தில் நடக்கின்ற அற்புதநிகழ்வை(phenomenon) வைத்துக்கொண்டுதான் விஞ்ஞானம் செயற்கையாக பதிவு செய்வதற்கு காந்த ஊடகத்தைப் பயன்படுத்துகின்றது.

உடலெங்கும் இரத்தம் ஓடினாலும் அதற்கு மையம் இருதயம் இருப்பதுபோன்று உடலெங்கும் காந்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அதற்கு ஒரு மையம் உள்ளது. அதுதான் கருமையம் என்கிறார் மகரிஷி அவர்கள். உடலில் உள்ள காந்த மையமான கருமையத்தில் ‘பதிதல் நிகழ்வு’ நடக்கின்றது.

அழியாத ஒன்றில் வினைகள் பதிகின்றன:

அது என்ன அழியாத ஒன்று? மரணத்திற்கு பின்னர் உடல் உறுப்புகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. ஆனால் ஆன்மா அழிவதில்லை. எப்படி? மரணத்தின் போது உயிர் உடலைவிட்டு வெளியேறிவிடுவதால் ஆன்மா அழிவதில்லை. அழியாத ஆன்மாவில்தான் மனிதன் ஆற்றும் வினைகள் பதிகின்றன. காரணம் மனிதன் ஆற்றிய வினைகளுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்பதாலும், அதற்கான விளைவுகள் அவன் வாழும் காலத்திற்குள் வராதுபோகும் பட்சத்தில் மனிதனின் அழியக்கூடிய உடல் உறுப்புகளில் பதியுமனால் அவனுடைய வினைப்பதிவுகளும் உடல் அழியும் போது அழிந்து விடும். அதாவது அவனது வினைப்பதிவுகளின் கணக்கும் (account of imprints of his deeds) இறந்த பிறகு அழிந்துவிடும். எனவே வாழும் காலத்தில் மனிதனின் வினைப்பதிவுகள் அழியாத ஒன்றான காந்த மையமான கருமையத்தில் பதிகின்ற ஏற்பாடு இயற்கையில் அமைந்துள்ளது.

மேலும் பதிதலின் விளைவு ஒருவர் வாழும் காலத்திலும் வரலாம், அல்லது அவருக்குப் பின்னரும் வரலாம் என்றிருக்கின்றது. எனவே மரணம் சம்பவித்த பிறகு உடல் உறுப்புகள் அழிந்து விடுகின்றன. ஆகவே பருஉடல் மூலம் ஒருவர் செய்த வினைப்பதிவுகளை carry forward செய்ய முடியாது. carry forward செய்ய உடலில் மரணத்திற்கு பின்னரும் பலன் அல்லது விளைவினை தரத்தக்க அழியாத ஒன்றின் மீதுதான் பதிதல் நடக்க வேண்டும். உயிர் என்றுமே அழிவதில்லை. மரணத்தின் போது உயிர் வெளியேறிவிடுகின்றது. ஆகவே பதிதல் உயிரில்தான் நடக்க வேண்டும். மேலும் பதிதலுக்கு காந்த ஊடகம் தேவைப்படுவதால் உயிரால் ஏற்படுகின்ற காந்த ஊடகமான கருமையத்தில் பதிதல் நடக்கின்றது,

கருமையம் என்பது என்ன?

உயிர்த்துகள்கள் உடலில் ஓடிக்கொண்டிருக்கின்றது. உயிர்த்துகள்களால் காந்தம் உருவாகின்றது. அதுவே சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவகாந்தமும் ஓடிக்கொண்டிருக்கின்றது. சீவகாந்தம் திணிவு பெறுகின்றது. அதற்கு ஒரு மையம் ஏற்படுகின்றது. அந்த மையமே கருமையம் என்கிறார் மகரிஷி அவர்கள். காந்த கருமையத்தில்தான் பதிதல் நடைபெறுகின்றன.

இப்பிறவியில் செய்த வினைகளின் பதிவுகள், சஞ்சித கர்மாவின் பதிவுகள், முன்னோர்களிலிருந்து பின்னோக்கி சென்றால், ஆதிமனிதன் வரை செய்துள்ள வினைகளின் பதிவுகள், அதற்கும் பின்னோக்கி சென்றால் விலங்கினப்பதிவுகள்,அதற்கு முன்னர் பஞ்சபூதங்கள் உருவாகிய நிகழ்வுகள், அதற்குமுன்னர் துகள்கள் உருவாகியபோது பதிந்த பதிவுகள் அனைத்தும் பதிந்துள்ளன உயிர்த்துகள்களில் என்கிறார் மகரிஷி அவர்கள்.

இவற்றில் மனிதனின் இனிமையாக வாழ்வதற்கு வேண்டிய பதிவுகள் எவை?

இவற்றில் இனிமையாக வாழ்வதற்கான பதிவுகளே வாழ்வின் நோக்கத்தையும் நிறைவேற்றும் வினைப்பதிவுகளாகும். அப்படியானால் அது என்ன பதிவுகள்? துகள்கள் உருவான பதிவுகள், அதற்குமேலும் பஞ்சபூதங்கள் உருவானபோது பதிந்த பதிவுகள், பிறகு உயிர் தோன்றிய பதிவுகள், விலங்கினத்திலிருந்து ஆதிமனிதன் உருவாகியபோது பதிந்த பதிவுகள், ஆக பிரபஞ்ச உற்பத்தி இரகசியப்பதிவுகள் எல்லாம் அகக்காட்சியாக கிடைக்க வேண்டும். அப்போதுதான்

நாம் யார்,
நாம் எங்கிருந்து வந்தோம்,
நாம் எதற்காக வந்தோம்,
என்ன செய்து கொண்டிருக்கிறோம்,
எங்கே செல்லப்போகிறோம்,
வாழ்க்கை என்பது என்ன,
இதற்கிடையில் இன்பம், துன்பம் வருகின்றதே, அது எங்கிருந்து வருகின்றது,
ஏன் வருகின்றது,
மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி,
இன்ப துன்பங்களை அனுபவிக்க மீண்டும் பிறக்க வேண்டுமா

போன்ற ‘நான் யார்?’ வினாவிற்கான துணை வினாக்களுக்கு விடை கிடைத்து குழப்பமுற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு தெளிவினும் தெளிவு ஏற்பட முடியும். ஆகவே இத்துனைப் பயன்தரக்கூடிய அகக்காட்சி கிடைப்பது எப்போது என்கின்ற ஐயம் எழுகின்றது அறிவிற்கு. அகக்காட்சி கிடைப்பது மனவளக்கலையின் செய்முறை பயிற்சியின் வெற்றியால் மட்டுமே கிடைப்பதாகும். கருமையத்தில் பதிந்துள்ள துன்பமளிக்கும் வினைப் பதிவுகளைப்போக்கி வாழ்வின் நோக்கம் நிறைவேற்றுதற்கான பதிவுகளை ஏற்படுத்துவதே கருமையத்தூய்மை எனப்படுகின்றது.

கருமையத் தூய்மையைக் கெடுக்கின்ற செயல்கள் யாவை?

வாழ்க்கையில் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவின் முழுமைப் பேற்றினைப் பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். கருமையத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஏற்ற வகையில் ஆக்கப்பூர்வமான எண்ணங்களும், உயர்ந்த செயல்களும் இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். அதற்கு கருமையத்தின் தூய்மையைக் கெடுத்து களங்கப்படுத்தும் எண்ணங்களும், செயல்களும் என்ன என்று தெரிந்து கொண்டால் அவற்றினைத் தவிர்க்கலாம். கருமையத் தூய்மை குறித்து மகரிஷி கூறுவதனை அவர்களின் வாய்மொழியாக அறிவோம்.

கருமையத் தூய்மை

நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
நெஞ்சம் மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய் பிறர்உளம் வருத்தல்,
மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை சினம்வஞ்சம் காத்தல், மேலும்
நெறிபிறழ்ந்த உணவு உழைப்பு உறக்கம் உடலுறவு
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
களங்கப்படுத்திவிடும்; கருத்தொடு சீர்செய்வோம். . . . (ஞா.க:1805)

. . . வேதாத்திரி மகரிஷி.

அடுத்த அறிவிற்கு விருந்தில்(10-12-2017)பாடலுக்கான பொருளை விரிவாக அறிந்து கொள்வோம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்