FFC-299(263) சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?2/3

 வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

lotus

FFC-299(263)

22.07.2020-புதன்

சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 2/3

Analysis_of_Thought

கடந்த அறிவுக்கு விருந்தில் சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY) அறிந்துகொண்டோம். இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.

சிந்திக்கும் அரிய கலையில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி அவசியம். அந்த பயிற்சி இந்த இணைய தள சத்சங்கத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருவதை அறிவீர்கள். இந்த சிந்தனைப் பயிற்சி ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1) சிந்திக்க வினாக்கள் 

2) சிந்திக்க அமுத மொழிகள்

3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்

4) சிந்திக்க குரு–சீடர் உரையாடல்

5) சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை.

இப்பயிற்சிகளின் நோக்கங்கங்களைத் தனித்தனியாக அறிவோம். நோக்கம் அறிந்து எந்த ஒன்றையும் செய்வது நலம் தானே?

அறிவு எதனையும் அறிவு பூர்வமாகத்தான் அறிய விரும்பும்.

அதாவது அறிவு உண்மையை அறியத்தான் விரும்பும். ஏனெனில் அறிவு மெய்ப் பொருளிருந்து வந்தது அல்லவா?

அறிவுப்பூா்வமாக அறியும் போதுதான் அது உள்ளத்திற்குச் சென்று, தரம் மாறுவதற்கு, மனம் ஒத்துழைக்கும். சிந்தனைப் பயிற்சியினை ஒரே பயிற்சியாக வைக்காமல் சிந்திக்கப் பழகுவதற்காக ஐவகையாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதன் நோக்கத்தைத் தனித்தனியாக அறிய வேண்டும்.

1) சிந்திக்க வினாக்கள் – இப்பயிற்சியின் நோக்கம்:

 வினாக்களை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு விடைகளைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்விகளைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். சில வினாக்களுக்கு அவ்வப்போது விடைகளும் தரப்படுகின்றன.

2) சிந்திக்க அமுத மொழிகள் – இப்பயிற்சியின் நோக்கம்:

அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அறிஞர்கள் மொழிந்தவை ஏன் அமுத மொழிகள் எனப்படுகின்றன? அமுதம் என்கின்ற சொல்லுக்கு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.

வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் மூன்று இன்பங்கள் கிடைக்கின்றது.

    ஒன்று தாகம் தீர்கின்றது.

   இரண்டாவது நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது.

  மூன்றாவது உணவாகவும் அமைகின்றது.

நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தணிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்பங்கள் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

     இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

   அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும்.

   தெளிவானால் அறிவு அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு விழையும். அவ்வார்வம் ஏற்படும்போது அறிஞர்களின் அறிவு நிலைக்கு ரசிப்பவர் அறிவும் உயரும்.  அதானல் திருத்தங்கள் தேவைப்படின் கேட்பவர்  அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். அதுவரை இருட்டில் இருந்த அறிவொளியை வீசத்தொடங்கும். அறிவொளியாகத் திகழும்.

வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு?

அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது கழிவாகி வெளியேறிவிடும்.

    எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையைத் தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல்) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

1) அறிவிற்கு இனிமையாக இருக்கும்.

2) வாழ்வியலைப் பற்றிய உண்மைகளைக் கூறும்.

3) பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.

4) அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.

5) ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.

6) ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.

7) ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.

8) கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.

9) இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.

10) தரம் மாற்றத்திற்கு மன தைரியத்தை ஊட்டும்.  தன்னம்பிக்கையை வளர்க்கும்.

பத்து  பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால்  அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறிவதில்லை.

பயனை  இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனி அறிஞர்களின் மொழிகளை அமுதமாக அருந்துவோம்.

அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடவேண்டும்.

சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தெரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பார்க்கலாம்.

அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும்; சலிப்பே இராது.

நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள்.

வாழ்க வளமுடன்.

3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள் –   இப்பயிற்சியின் நோக்கம்:

அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள்.

     ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள்,

    இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள்,

    மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க

    உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம்.

  கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள்.

  எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்

கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது,

  அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி யானால்  வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப் பெருங்கடலை நீந்தி பிறவிப் பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

  1. நல்ல கவி (19-12-1962),
  2. கவியின் சிறப்பு (1954),
  3. சிறப்புடைய கவிகள் (1954),
  4. கவியின் பெருமதிப்பு,
  5. கவியின் ஆயுளும் எண்ணிக்கையும் (1954),
  6. கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல் (1954),
  7. கவியின் ஆற்றல் (1954),
  8. அருட்பா (1954),
  9. பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும் (1954),
  10. கவிகள் எவ்வாறு வருகின்றன? (1954)
  11. கீழ்த்தரமான கவிகள் (1954),
  12. கவிகள் பொதுச் சொத்து (1954),
  13. நிறைவாய் இருக்க (1988)

ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார். 

இக்கவிகளை ஞானக்களஞ்சியம் பாகம் – 1 ல் உள்ளன.  அதனை  வாசித்து பயனடையுங்கள்.  மேலும் சிந்திக்க கவிகள் பயிற்சியின் அவசியம் விளங்கும்.

கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.

பேச்சினைப் பெய்கின்ற மழையோடும்,

எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும்,

கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார்.

இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.

கவியின் பெருமதிப்பு (1954)

ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய

ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி

பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம்

பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம்

உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை

ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம்

பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும்

பேரோட்ட முடை சீவநதி போலாகும்.               

                                 — வேதாத்திரி மகரிஷி அவர்கள்

பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும்.

கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும்.

கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும்.

அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேல்க் கவிகள் எழுதியுள்ளார்.

கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது

கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.  அதே போன்று திருவள்ளுவரை இருபதாம் நுற்றாண்டில் மானசீகமாக் குருவாக ஏற்றுக்கொண்ட நம் குருநாதர் அருளிய ஞானக்களஞ்சியம் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார்.

அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு,

அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும்,

மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனை ஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும்.

அறிவினர்களின் கவிகளை வாசிப்பதும்,

நினைவில் கொள்வதும்,


உட்பொருளை நினைவில் கொள்ளுதலும்

அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து

பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் பேரின்ப வாழ்வு வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.  இரண்டுமே ஒன்றுதான்.  பிறவியின் பயனை அடைவது என்பதே  பல பிறவிகளில் சாதாரண வாழ்வு வாழ்ந்தது போலன்றி இப்பிறவியலாவது வாழ்வாங்கு  வாழ்கி்ன்ற  பேரின்ப வாழ்வதுதானே!

இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே   “அங்கிங்கெனாதபடி”  எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.

திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்?

அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன,.

எனவேதான் மகரிஷி அவர்கள், தன்னுடைய  சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று

அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார்.

ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அறிஞர்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

கவிகளால் சிந்தனை வளம் பெருகும்.

ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில்  “சிந்திக்கக் கவிகள்” என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கவிகளால் பயன் பெறுவதில் நான்கு நிலைகள்:

முதல் நிலை:  கவிகளை வாசிப்பது என்பது மூளை வரை மட்டுமே செல்வது ஒருவகை. ஏனெனில் கண்கள் பார்த்து படிக்கும்போது, அதற்கு மூளை உதவியாக உள்ளதால் ‘மூளை வரை செல்லும்’ எனப்படுகின்றது.  அதற்கு மேல் ஏதும் மாற்றம் அடைவதில்லை கவியினை வாசித்தவர்

இரண்டாம் நிலை: இந்நலையில் மனம் வரை செல்லும்.  அதாவது கவியின் உட்பொருள் மூளையைக் கடந்து மனம் வரை செல்லும்.  அறிவு ஓரளவு சிந்திக்க ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

மூன்றாம் நிலை: மூளை, மனம் வரை சென்ற உட்பொருளை அறிவு பின்னர் உருவகப்படுத்திப் பார்ப்பது மூன்றாம் வகை.   இந்த நிலையில் அறிவு கவியின் உட்பொருளால் ஈர்க்கப்பட்டுள்ளது  என்று பொருளாகின்றது.  அதனால்தான் அறிவு அதனைத் தீவீரமாக சிந்திக்கின்றது.

நான்காம் நிலை:  கடைசியாக கவியின் உட்பொருளாக மாற்றம் அடைந்தால்தான் கவி வாசிப்பதன் முழுப்பயன் நிறைவேறும். கவியும் அந்த நபரை பொறுத்த வரையில் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இருக்கும். கவியை வாசிக்கும்போது, கவி அருளிய அருளாளரை நினைந்து, நினைந்து, போற்றி, போற்றி அவரது அரிய திறமைகளைம் பெருமைகளையும் நினைத்து தனக்குள்ளாகவே மகிழலாம்.  வாய்ப்பு இருந்தால், ‘யான் பெற்ற இவ்வின்பம் பெரு இவ்வையகம்’ என்பதற்கிணங்க மற்றவர்களிடம் அதனைப் பற்றிப்பேசி தானும் மகிழ்ந்து, அடுத்தவரையும் மகிழ வைத்து ஊக்குவிக்கலாம்.  ஆனால் நம் கவனம் மட்டும் அறிவின் முழுமையை அடைவதிலேயே இருக்க வேண்டும்.

இது போன்ற மகிழ்ச்சி அவ்வைத்தாய் கூறும் அறிவினரைச் சேர்ந்து, அவரைக் கனவிலும், நனவிலும் அடிக்கடி நினைப்பதால்தான் சாத்தியமாகின்றது. அதனால்தான் அவ்வைத்தாய் அறிவினரைச் சேர்ந்திருந்து அவரை கனவிலும், நனவிலும் நினைப்பதை இனிதினும் இனிதாகக் கருதுகிறாள் அவ்வைத்தாய்.

4) சிந்திக்க குரு – சீடர் உரையாடல்-இப்பயிற்சியின் நோக்கம்:

மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம்.

தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமைகின்றது. ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்து நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

   ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும். 

    இதுவரை சிந்தித்தலின் நான்கு பயிற்சிகளைப் பார்த்தோம்.  அடுத்த பயிற்சியான சிந்தித்தலின் அன்றாடசுயசோதனை பயிற்சியினை அடுத்த அறிவிற்கு விருந்து பகுதியில் 26.07.2020 அன்று அறிந்து கொள்வோம்.  வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க  அறிவுச் செல்வம்!!