சிந்திக்க வினாக்கள்-315(SV143 & FFC-166)

வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

lotus

சிந்திக்க வினாக்கள்- 315 (FFC-166)

 

20-07-2020 – திங்கள்

மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

விடை:

‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூலாகக் கூறுவது எது எனக் கேட்கப்பட்டிருந்தது. மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்த நூல் எதுவாக இருக்கும் என அறிந்து கொள்வது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கடமை ஆகும். கடமை என்று கூறுவது நமது நன்மைக்காகத்தான்.

எதற்காக இயற்கை/இறை நமக்கு இந்த நூற்றாண்டிலே கிடைத்தற்கரிய   குருவான வேதாத்திரி மகரிஷியிடம் புனித உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது?

  •   பல்லாயிரம் பிறவிகள் எடுத்து,
  •  ஆனால் பிறவியின் நோக்கமும் ஆறாம் அறிவின் ஒரே பயனுமான, அறிவாகிய தெய்வத்தை அறிந்து கொள்ளாமல்,
  • அனைத்துப் பிறவிகளையும் பிறப்பது–இறப்பது என்பதனையேதான் சாதனை வாழ்க்கையாகக் கொண்டு, சாதாரணப் பிறவிகளாகவே வீணாக்கிவிட்ட நிலையில்,
  •   இப்பிறவியில், நம்முடைய மாதாவும், பிதாவும் செய்த புண்ணியத்தால், நம்முடைய குடும்பத்திலேயே மற்றவர்களுக்கு (ஒரு வேளை உடன்பிறப்புகளுக்கு குரு-சீடா் உறவு கிடைக்காத) கிடைக்காத நிலையில்,
  •  நம்முடைய தற்போதையப்பிறவி பரிபக்குவ நிலையினை அடைந்துள்ளமையால்தான்,
  •   நெடுங்காலமாக பல்லாயிரம் பிறவிகளாகத் தொடர்புகொண்டுள்ள கருமையம் ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை இந்த ஒரு பிறவிகாலத்திலேயே மாற்றி அமைத்துப், பயனடைய அகத்தாய்வும், அகத்தவமும் இறையுணர்பாதையிலே விழிப்புடன் வாழ்ந்து,
  •   நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கும் இறைத்தூதுவர்களாக இறைத் தொண்டு-அறிவுத்தொண்டு செய்து வாழ்வாங்கு வாழ்வதற்கேயாம்.

            வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

 நம்முடைய சத்சங்கத்தில் வேதாத்தரி மகரிஷி அவர்கள் உள்பட எல்லா அருளாளர்களும் எப்போதும் சூக்குமமாக எழுந்தருளி நமக்கெல்லாம் உற்ற வழிகாட்டிட வேண்டும்.

 ஆகவே இன்றைய சிந்தனை, மனிதனின் சொத்தாகிய முழுப்பண்பேற்றத்தையும் விரைவில் இப்பிறவியிலேயே அடைவதற்காக இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நமது குருபிரான் வேதாத்திரி மகரிஷியின் அரிய பெருமைகளை அறிந்து கொள்வதற்காக அமையட்டும்.

 குரு-சீடா் உறவு  நிரந்தரமில்லா இவ்வுலகில், இழந்த நிரந்தர மற்றும் மூல உறவை மீட்டெடுத்து சீடருக்குத் தரும் தெய்வீக இணைப்பை இயற்கை ஏற்படுத்தித் தரும் புனித உறவு ஆகும் குரு-சீடா் உறவு.

மகரிஷி அவர்கள் எல்லா அருளாளர்களையும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்டவர். இதனை அவர், தன்னுடைய சீடர்கள் எவ்வாறு குருவணக்கம் செய்ய வேண்டும் என இயற்றிய பாடலிலுள்ள கடைசி இரண்டு வரிகளான,

‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.’

என்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

அப்படியிருக்கும்போது எந்த அருளாரின் நூல் அவரைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுவார்? அதற்கான விடையை குருவணக்கப்பாடலில் உள்ள முதல் ஆறுவரிகளிருந்து யூகிக்க முடிகின்றது. அப்பாடலின் முதல் ஆறு வரிகளில் நான்கு குருமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த அருளாளர்கள் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கா் ஆகியவர்களே ஆவார்கள்.

இவர்களில் எந்த அருளாளர் அருளிய நூல் மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்ததாக இருக்க முடியும்? மகரிஷி அவர்கள் சிறுவனாக இருந்தபோது பக்தி சிரத்தையோடு கலந்து கொண்ட பஜனையில் பாடப்பட்ட பாடல்களில் ஒன்றான ‘அங்கிங்கெனாதபடி’ எனத் தொடங்கும் பாடலால் தனது உள்ளம் லயித்துவிடும் என்று தனது வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் என்கின்ற தெளிவு என்கிறார். இந்தப்பாடலே அவரது உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து. இறைநிலையை உணர உதவியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். எனவே அப்பாடல் அருளிய அருளாளர் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.

அடுத்ததாக அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் என்று கூறி திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்,
மூன்றாவதாக திருவள்ளுவர் அறிவித்த அறிவை அறிவதற்கு வழிகள் சொன்ன அறிஞா் திருமூலர் அவர்களையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
நான்காவதாக, தன்னுள் வள்ளாரின் ஆன்மா பத்துவருடங்கள் தங்கி வழிகாட்டியதால், அவரை குருவாக வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.

இந்த நான்கு அருளாளர்கள் இயற்றியுள்ள நூல்களில் ஒன்றைத்தானே மகரிஷி அவர்களைக் கவர்ந்த ஒரு பெருநூலாக மகரிஷி அவர்கள் கூறியிருக்க முடியும்?

அறிவைக் கவர்ந்த என்று சொல்வதானால் அது எந்த நூலாக இருக்க முடியும்?

தாயுமானவர் ‘அறிவே தெய்வம்’ என்பது அவரைக் கவர்ந்திருக்கின்றது.

அடுத்ததாக அகமாக உள்ளதுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி அதுவே அறிவு என்று திருவள்ளுவர் தனக்கு உணர்த்தியதாகக் மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

அறிஞா் திருமூலர் அவ்வறிவை அறிவதற்கு வழிகள் சொல்லியதாகக் கூறுகிறார்.

நான்காவதாக  அருளார்கள் எது தெய்வம் என்று கூறிய அறிவில் ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் வள்ளார் என்பதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் .

இந்த நான்கு அருளார்களின் ஒருவரான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்தான் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று குறிப்பிடுகிறார். காரணம் என்ன?

திருக்குறளை அறிவுக் கடல் என்கிறார்.

 நாம் மகரிஷி அவர்களை அருட்தந்தை என்று அழைப்பதுபோல். மகிரிஷி அவர்கள் திருவள்ளுவரை தெய்வத்தந்தை என்று அழைக்கிறார்.
எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத ஐம்பது பாக்களுக்கு மட்டும் உரிய பொருளை திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்னும் நூலில் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.
மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்திருக்கக் கூடிய ஒரு சில பாக்களை நாம் யூகத்தால் அறிந்து கொண்டதை நினைவு கூர்வோம் இத்தருணத்தில்.

அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி, அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர் என குருவணக்கப்பாடலில் மொழிந்துள்ளதால் குறள் எண் 702 ஐ நினைவு கூர்வோம்.

“ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”

இக்குறளுக்கு சாதாரணமாகக் கூறப்படும் பொருள் யாதெனில், சந்தேகமின்றி மனதில் உள்ளதை உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்பது.

ஆனால் நம்குருதேவர் கூறும் உட்பொருள் விளக்கத்தினை அறிந்து மகிழ்வோம். எவர் ஒருவா் ஆன்மாவை உணர்கின்றாரோ அவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாகவே உணர்ந்தவராவார். ஆகவே ஆன்மாவை அதன் இயல்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிதுகூட ஐயமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்று திருவள்ளுவர் கூறுவதாக நம்முடைய மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் அறிவினுடைய மதிப்பையும் அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார் அக்குறளின் வாயிலாக என்கிறார் மகரிஷி அவர்கள்.

மேலும் மூன்று குறட்பாக்களை அறிந்து விட்டு இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

“பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.” . குறள் எண் 351

“எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.“ குறள் எண் 355

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் எண் 423

மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியில்  வெற்றி பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியத் தெளிவை, இன்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துக்கூறுவதற்கு மகரிஷி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இன்று நமக்கெல்லாம் தெளிவாக கூறுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.

மேலும் இது பற்றி விரிவாக அறிய இந்த இணையதள ஆசிரியர் இயற்றிய “நான் யார்?” எனும் நூலில், இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்? என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில், மெய்ப்பொருள் பற்றி வள்ளுவமும், வேதாத்திரியமும் என்ன கூறுகின்றன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளதனை வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.

 திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.

 இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?

 முதல் படி:

ஆராய்ச்சியாகும்.

1)   முதலில் இறை என்பது எது,

2)   இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,

3)   இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,

4)   கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,

5)   அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன

 போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.

 

இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.

 இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?

1)   இறை என்பது எது,

2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,

3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,

4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.

5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.

 மூன்றாவது படி: பயிற்சியாகும்.

 ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப, முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.

 நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.

 வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும்.

மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.

 அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

1)   மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார்.

2)   மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

3)   சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.

 அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.

 நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.

வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

 

வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!


Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments