முகப்பு

 

நோக்கம்

சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?

ஆம்!

சிந்தனைவளம் இயற்கைவளங்களில் மிக மிகச் சிறப்பானதும், முதன்மையானதுமாகும். ஆறாம் அறிவின் துணை கொண்டு இயற்கை வளத்தைக் கண்டுபிடித்து, வாழ்வின் வளமாக்கி பயன் அடைந்து வரும் சமுதாயம் அதே இயற்கையின் ஆறாம் அறிவினுடையப் பயனாகிய சிந்தனை வளத்தை பயன்படுத்தாமல் இருக்கின்றது மிகவும் வருத்தப்படுவதாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிந்தயைாளர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள். மலர்கின்ற அச்சிந்தனைப் பூக்களின் வாசனையைாவது நுகரப்படுகின்றதா என்றால் அதுவும் மிகமிகக் குறைவே.

அவர்கள் கூறிய அறநெறி அறிவுரைகளையாவதுக் கேட்டு மனித குலம் திருத்திக் கொண்டு வாழ்கின்றதா என்றால் அதுவும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, நாணமுடைமை ஆகிய அதிகாரங்களை ஒதுக்கி அதில் பத்து குறட்பாக்களின் வாயிலாக ஒரு பொருள் பற்றி வெவ்வேறு கோணங்களில் எடுத்துக் கூறியும் இதுவரை இந்த சமுதாயத்தில் ஒழுக்கமும் அறிவுடைமையும் சிறப்புற்றுள்ளதா? சமுதாயம் .திருந்தியுள்ளதா?

தனக்கு நாக்கு இல்லை என்பதால் சிந்தனையாளர்களின் நாக்காக இருந்து கொண்டு, சிந்தனையாளர்களின் வழியாக, இயற்கை தன் குழந்தைகளுக்கெல்லாம் சொல்லியும் குழுந்தைகளின் கேளா அலட்சிய நிலையைப் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் இயற்கை அன்னைக்கு?. சிந்தனையைாளர்கள் கூறுவது யாருடையது? இயற்கையினுடையதுதானே! இப்போது கூறிய இந்த இரண்டு கூற்றுக்களும் ஒருமை விஞ்ஞானத்தின் புரிதலின் வெளிப்பாட்டின் கீழ் கூறப்பட்டதாகும். ஏதோ மொழி வளத்திற்காக கூறுவதன்று.

சிந்தனையாளர்கள் கூறும் வாழ்வியல் அறிவுரைகளைக் கேட்பதற்கே சிந்தனை அவசியமாகின்றது. முதலில் அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு உண்ண ஆர்வம் இருப்பது போல் அறிவுப்பசிக்கு உண்ண ஆர்வம் இருக்க வேண்டும். அதுதான் சிந்தனையாளர்கள் உதிர்க்கும் அமுதத்தை தேனமுதமாக்கி உண்ணுவதாகும். சிந்தனையாளர்களின் அமுதமொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருப்பதே சிந்திக்கக் கற்றுக்கொள்வதன் அறிகுறியாகும். அதுதான் சிந்திக்கும் கலையின் முதற்படியாகும். அந்த ஆர்வம் வந்துவிட்டால் அங்கே சிந்தனை வாடாப் பூ மலர ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

மனிதன் சிக்கலின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பல வளங்கள் தேவைப்படுகின்றன. அவ்வளங்களில் ஒன்று செல்வம். செல்வம் என்றால் பொதுவாக சமுதாயத்தால் கருதப்படுவது யாதெனில் பொருட்செல்வம் மட்டும் தான். ஆனால் செல்வ வளங்களில் முதன்மையானது அறிவுச்செல்வம். பொருட் செல்வத்தை ஈட்டுவதற்குக்கூட அறிவு தேவைப்படுகின்றது.

பொருட் செல்வத்தை ஈட்டுவதற்கானத் திறமையை முதலில் அறிவு பெற வேண்டும். இங்கேயும், அதாவது பொருட்செல்வத்தைத் தேடும்போதுகூட அறிவு தேவையாய் இருக்கின்றது. பொருட்செல்வத்தை,
எவ்வாறு,
எவ்வழியில்,
எவ்வளவு ஆகிய அறவழிகளில் ஈட்டுவது,
ஈட்டியதை எவ்வாறு அறவழியில் சேமிப்பது.

எவ்வழியில் தனக்கும், குடும்பத்திற்கும், மற்றும் வறியோர்க்கு ஈகையாக செலவழிப்பது
ஆகிய முடிவுகளை அறிவுதான் எடுக்க வேண்டும். பொருட் செல்வம் ஈட்டுவதற்கும் அறிவு தேவையாக இருக்கின்றது. இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்குவதற்கும் அறிவுதான் தேவைப்படுகின்றது.
ஆகவே செல்வத்தில் முதன்மையானது அறிவுச் செல்வமாகும். ஆனால் இத்தகைய அறிவைப் பற்றிய அறிவுKnowledge of Consciousness) இல்லாமல் உள்ளது மனித சமுதாயத்தில். இது பெரும் குறை. இப்பெரும் குறையை வைத்துக் கொண்டு சமுதாயம் எவ்வாறு வளமாக, நலமாக., அமைதியாக வாழ முடியும்?
அறிவைப் பற்றிய விஞ்ஞானத்தை(Science of Consciousness) இயற்கை, சாதாரண குடும்பத்தில், பேறு பெற்ற, கொடுத்து வைத்த சின்னம்மாள், வரதப்பன் தம்பதியினர் தவமிருந்து பெற்ற வேதாத்திரி எனும் தெய்வீகக் குழுந்தையும், பின்னர் உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக எடுத்து இயம்புகின்றது, தயவு செய்து அதனைப் படித்து நலம் பெறுங்கள்.

மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ள வேதாத்திரி மகரிஷியினுடைய, இயற்கையியல் மற்றும் வாழ்வியல் கண்டுபிடிப்புகளை பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை இயற்கையால் கொண்டு போக முடிந்துள்ளதற்கான காரணம் மகரிஷியின் சிந்தனைகள் தான்.
திருவள்ளுவர், திருமூலர், அவ்வையார் போன்ற அறிஞா்கள் எந்த பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றனர்? அவா்கள் இயற்றிய அறநூல்கள் தான் பள்ளியிலும் கல்லூரியிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகின்றனர் மாணவர்கள். அறிஞர்கள் சிந்தித்ததன் பயனாக பின்னர் வரும் சமுதாயம் பயன் பெறுகின்றது,

மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகக் கூட்டத்தில் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்தாராம். மகரிஷி அவர்களின் பேச்சால் ஆச்சரியமடைந்த அமெரிக்கர்கள் மகரிஷி அவர்களிடம் “You are speaking on a wide variety of topics. Which was the University you studied in, Swamijy?” எனக்கேட்டார்களாம். அதற்கு மகரிஷி அவர்கள் “ I did not study in any University. I only studied in the city of the Universe” என்றாராம். மகரிஷியின் இக்கூற்று உண்மைதானே!

அதாவது இயற்கை அவருக்கு அறிவுறுத்தி அவர் சிந்தித்ததை மற்றும் உள்ளுணர்வாகப் பெற்றதை வாழ்க்கையில் நடைமுறையில் சரியாக உள்ளதா, என உறுதி செய்ததை, எல்லாவற்றையும் சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டார் உலநலத்தொண்டரான அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதுவும் அவர் படித்தது பிரபஞ்ச பல்கலைக்கழகத்தில் என்பதும் சரிதானே! அருந்தவத்தால், அவர் மனதை பிரபஞ்சம் வரை விரித்து அங்கேயே நிற்கின்ற பழக்கத்தை கைவல்யப்படுத்திவிட்டார். ஆகவே, இது வரை வாழ்ந்த அறிஞர்களின் வாயிலாகவும், இயற்கை அவருக்கு, உணா்த்தியதை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் சாத்தியம் என்றும் கூறுகிறார்,
ஒரு முறை. கும்பகோணத்தில் நடந்த பயிற்சியின் முடிவு நாளன்று, அவரது உலக நலத்தின்பால் உள்ள எண்ணத்தை, அவா் ஒரு கதையின் வாயிலாகக் கூறினார். தாத்தா ஒருவர் அவரை விதையை நிலத்தில் ஊன்றி, நீர் ஊற்றி, அது முளைத்து, வளர்ந்து கொடியாகி. அதற்கு பந்தலும் போட்டு விட்டார். கொடி உயர்ந்து காயும் காய்த்து விட்டது. ஆனால் பந்தலுக்கு மேல் உயர்ந்த கொடியில் காய்த்திருக்கும் காயை அவரால் எட்டிப் பறிக்க முடியவில்லை. அதற்கு அவரது பேரன் அவரிடம் ”தாத்தா! என்னை உங்கள் தோள் மீது ஏற்றி உட்கார வையுங்கள். உங்கள் தோளின் மீது உட்கார்ந்து கொண்டு காயைப் பறிக்கிறேன்” என்று கூறினானாம்.

இந்த கதையைக் கூறிவிட்டு மேலும் மகரிஷி அவர்கள் தொடர்ந்தார். அவரது மாணவ–நண்பர்களிடம் கூறியதாவது:- ”அதுபோல் நான் அவரைச் செடியின் விதை ஊன்றி, செடியும் முளைத்து, பந்தலும் போட்டு விட்டு. கொடி படர்ந்து பூ பூத்து காய்க்க ஆரம்பிது விட்டது. நீங்கள் என் தோளின் மீது உட்கார்ந்து காயைப் பறியுங்கள். இயற்கை எனக்குத் தெரிவித்ததை எல்லாம் நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன். ஒன்றையும் விட்டு விடவில்லை. இனி இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் நீங்கள் எளிதாக சிந்திக்க முடியும். நீங்கள் ஆன்மீக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துங்கள். ஆன்மீகத்தில் ஆழ்ந்து போனால், இச்சை இல்லாமலாகி, புலன் இன்பமே அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்கின்ற மாயையான அச்சத்தை நீக்கி, ஆன்மீகத்தை வாழ்வியலாக்கி அரும்பெரும் சாதனைகளைப் படைக்க இருக்கின்றீர்கள்.” என்றார்.

அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்கு அறிவு சிந்திக்க வேண்டும். சிந்தனை என்பது மனித வாழ்விற்குத் தேவையான வளமாகும் மனித இனத்திற்கும் ஐயறிவு விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடே ஆறாம் அறிவுதான்.. சிந்திக்கின்ற அறிவுதான் ஆறாம் அறிவு. சிந்தித்தால்தான் அது ஆறாம் அறிவு. இல்லை எனில் அது ஐந்தாம் அறிவு. எப்படி? சிறு நடைமுறை நடப்புகளின் வாயிலாக அறிவோம்.
இருவருக்கு இடையே வாய்ச்சண்டை நடக்கும் போது, அது அதிகமாகி, முதலாமவர், இரண்டாமவரை ”மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே.” என்றால் இரண்டாமவருக்குச் சினம் பொங்கி, அதிகமாகி, கையை ஓங்கி முதலாமவரை அடிப்பதற்கு செல்வதைப் பார்த்திருக்கலாம். காரணம் என்ன?
ஒரு காரணம், முதலாமவர் இரண்டாமவரை சொன்னது முதலாமவருடைய கீழ்த்தரத்தைப்(மிருகம் என்று கூறியது) பற்றிய உண்மைக்கூற்று.

இரண்டாவது காரணம், மனிதர்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள், ஏங்குபவர்கள். தன்னைப் பற்றி கற்பனையாக, பொய்யாக பிறர் புகழ்ந்துரைத்தாலும், அதில் மகிழ்ச்சி அடையும் இயல்புடையவர்கள். எனவே, ”மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே” என்று இரண்டாமவரின் கீழ்த்தரத்தைச்சுட்டிக்காட்டியது இரண்டாமவருக்கு அவமானமாகி விட்டது.,
சிந்தித்திருந்தால் அங்கே சண்டைக்கே வாய்ப்பில்லை. சிந்திக்காததால் சினம் அதிகமாகி கைகலப்பு ஏற்படும் அளவிற்கு சென்று விடுகின்றது, சில நேரங்களில் கொலை நடக்கும் அளவிற்கும் சென்றுவிடுகின்றது நிலைமை. பிறகு வாழ்நாள் முழவதும் வருந்த வேண்டியுள்ளது, சிந்தித்தல் பொறுமையைத் தரும். அறிவு ஆட்சி செய்திருக்கும் அந்த நிகழ்வில். பின் விளைவுகளைத் தடுத்திருக்க முடியும். நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவர் மிருகமாகி விட்டார்.
சிந்தித்தால்தான், ஆறாம் அறிவு,

O பரிணாமத்தில் மனித இனத்திற்கு முந்தைய இனமான விலங்கினப் பண்பின்
வாசனையால், மறந்தும்,
O ஐந்தாம் அறிவாக செயல்பட விடாமல்,
O ஆறாம் அறிவாகச் செயல்பட முடியும்.
சிந்தித்தல், ஆறாம் அறிவை முதன்மைச் செல்வமாக்கும், துன்பங்கள் நீங்கி பேரின்பத்தை அனுபவிக்கச் செய்யும். சிந்தித்தல் என்பது ஆறாம் அறிவின் சிறந்த கலை.

எல்லாக் கலைகளிலும் எல்லோராலும் சிறந்து விளங்க முடியாது. ஏதாவது ஒரு கலையிலும் எல்லோராலும் சிறந்து விளங்குவது சாத்தியமில்லை. ஆனால் சிந்தித்தல் கலை எல்லோருக்கும் பொதுவானது. ஏனெனில் மனிதன் என்கின்ற உயிரினத்திற்கு அடையாளம் ஆறாம் அறிவே. மனிதனுக்கு அடையாளமான ஆறாம் அறிவினுடைய அடையாளமே சிந்தித்தல் தானே. ஆகவே சிந்தித்தல் எல்லோருக்கும் பொதுவானதாகின்றது. சிந்தித்தல்தான் ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும். ஆனால் எதார்த்தத்தில் பெரும்பாலோர் சிந்திப்பது கிடையாது. சிறந்த சிந்தனையாளர் என்று புகழப்படும் அளவிற்கு சிந்திக்கமுடிய வில்லையாயினும் வாழப் பிறந்துவிட்ட மனிதன் வாழ்க்கையை வெற்றிகரமாக துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்காவது கீழ் கண்டவாறு சிந்திக்க வேண்டாமா?

  • நல்லெண்ணமாக இருப்பதற்கு எண்ணத்தை ஆராய வேண்டாமா?
  • பேராசை ஆட்டிப்படைக்காமல் இருக்க, ஆசையை சீரமைக்க வேண்டாமா?
  • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலை என்று தெரிந்தும் சினம் தவிர்க்க வேண்டாமா?
  • இன்பத்தைச் சுரண்டும் கவலையை ஒழிக்க வேண்டாமா?
  • அறிவிற்கு விருந்தளிக்க நான் ஏன் பிறந்தேன் என தெரிந்து கொள்ள வேண்டாமா?

சிந்தனையின்மையால் தான் வாழ்க்கையில் தவறுகள் நடக்கின்றன. அதன் விளைவுதான் துன்பமாகின்றது. தனக்கு மட்டும் துன்பம் ஏற்படுவதில்லை. அவனைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கும் துன்பம் ஏற்படுகின்றன.

அறிவு தன்னுடைய திறனைப் பற்றிக் கூறுவதற்கு ’அறிவுக்கூர்மை’ என்கின்ற சொல்லை ஏற்படுத்திக் கொண்டது. கூர்மை என்கின்ற சொல் எவ்வாறு உருவமில்லா அறிவிற்குப் பொருந்தும்? உருவம் உள்ள பருப்பொருளுக்கு கூர்மை இருப்பது சாத்தியமாகும். உதாரணத்திற்கு காய் நறுக்கும், உருவமுள்ள கத்தி கூர்மையாக இருக்கும். இருக்க வேண்டும். இல்லை என்றால் காயை நறுக்கவே முடியாமலும் போகலாம். அல்லது எளிதாக நறுக்க முடியாது. சிரமப்பட்டுதான் காயை நறுக்க வேண்டும். காய் நறுக்குவதில் நளினம் இருக்காது. கத்தி கூர்மையாக இருந்தால் தேவையில்லாது சிரமப்பட வேண்டியதில்லையே! இந்த விளக்கம் உருவமுள்ள கத்தியைப் பற்றியது.
ஆனால் நாம் இப்போது சிந்திப்பதோ உருவமில்லா அறிவினுடையக் கூர்மையைப் பற்றி. அறிவிற்கு உருவமில்லை என்பதால் அறிவில் எவ்வாறு கூர்மை சாத்தியம் என ஐயம் எழலாம். குழந்தையின் அழகை வர்ணிக்கும் போது மூக்கு கூா்மையாக உள்ளது என்கிறோம். ஏனெனில் மூக்கிற்கு உருவம் இருக்கின்றது. ஆனால் உருவமில்லாத அறிவிற்கு கூர்மை என்பது என்ன? சிந்தித்தல்தான் அறிவின் கூர்மை. அறிவு கூர்ந்து கவனிப்பதையே அறிவின் கூர்மை என்கிறோம். அறிவின் கூர்மையேதான் சிந்தனை என்பதாகும். இப்போது சிந்தனைப் பயிற்சி பற்றி அறிவோம்.
எந்த ஒரு கலையையும் பயிற்சி செய்துதான் அக்கலையில் வெற்றி பெற முடியும். சிந்தித்தல் என்பது ஒர் அரிய கலையாக உள்ளது மனித குலத்திற்கு. ஏனெனில் மனிதர்களில் சிந்திப்பவர்கள் மிக மிகச் சிலரே. ஏன் பிறந்தோம்,, எங்கே செல்ல இருக்கிறோம், இன்பதுன்பம் ஏன் வருகின்றது என்றுகூடத் தெரியாமல் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.

சிந்தனை என்பதும் எண்ணம் தான், ஒரு பொருள் பற்றி ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுந்து விடை கண்டுபிடித்து தெளிவு பிறக்கும் வரை மனதில் தொடர்ந்து எழுபவைகள் அனைத்தும் எண்ணங்கள்தான். மனம் எண்ணுகின்றது. எண்ணும் நிலைகள் மற்றும் தரத்தை வைத்து மனம் ஐந்து நிலைகளில் இயங்கக் கூடியதாகக் கண்டுபிடித்துள்ளனர். அறிவை அறியும் கலையில் தேர்ச்சி பெற்ற அறிதல் கலைஞா்களாகிய அறிஞர்கள்(அறிவை அறிந்த கலைஞர்கள் அறிஞர்களாவர்)

1) அன்னமய கோசம்
2) மனோமய கோசம்
3) பிராணமய கோசம்
4) விஞ்ஞானமய கோசம்
5) ஆனந்தமய கோசம்

ஆகிய ஐந்து நிலைகளில் மனம் இயங்கும். கோசம் என்றால் உறை என்று பொருள். பெரும்பாலோருக்கு அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய முதல் இரண்டு நிலைகளிலேயே மனம் இயங்குகின்றது, சாப்பிடுவது மற்றும் அன்னத்தின் மீது மனம் செல்வது. ஆகவே பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. அன்னமய கோசம் மற்றும் அன்னைத்தைப் பற்றிய மனோமய கோசத்திலேயே மனம் இயங்குகின்றது. என்பதனைக் கேட்கும் போது வெட்கப்பட வேண்டியதாக அல்லவா உள்ளது. சாப்பிடுவது மலம் கழிப்பது, மீண்டும் மலம் கழிக்கச் சாப்பிடுவதற்கான இயந்திரமாக செயல்படுவதற்காகத்தானா இந்த மனிதப் பிறவி?

”அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்கிறாரே அவ்வைத்தாய். எப்படி மானுடப் பிறவி அரிதாக இருக்க முடியும்? சிந்திக்காமல் இருந்தால் இந்தப் பிறவி அரிதானதாக இருக்கமுடியுமா? எல்லோருமே சிந்தித்து விஞ்ஞானி ஆக முடியுமா என்று கூட ஐயம் எழலாம். விஞ்ஞானியாக இருந்தாலும் அஞ்ஞானியாக இருந்தாலும், இருவருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே வாழ்வியல் விஞ்ஞானம் எல்லோருக்குமே பொது. ஆகவே எல்லோரும் வாழ்வியல் விஞ்ஞானிகளாக வேண்டும். இதுவும் சற்று இயலாத காரியமாக இருப்பதால் வாழ்வியல் சூழலையாவது அறிஞர்கள், பொறுப்புடைய தலைவர்கள் ஏற்படுத்தி மனிதகுலம் தன்னுடைய பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதே நோக்கமும் ஆர்வமும்.

வெகு சிலருக்குத்தான் மனம் மூன்றாவது நிலையான பிராணமய கோசத்தில் இயங்குகின்றது. அவர்களிலும் வெகுச் சிலருக்குத்தான் மனம் நான்காவது நிலையான விஞ்ஞானமய கோசத்தில் இயங்குகின்றது. இவர்களே சிந்திப்பவர்கள். இந்த சிந்திப்பவர்களிலும் ஒரு சிலரால்தான் ஆனந்தமய கோசத்தில் மனதை இயங்க வைக்க முடிகின்றது. ஆகவே மனிதன் ஆனந்த வாழ்வு வாழ சிந்தனை, தொடர் சிந்தனையாக அமைய வேண்டும். பெரும்பாலோர் சிந்திக்காததுதான் இன்றைய மனிதகுல அமைதியின்மைக்குக் காரணம். இதுவரை சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY)அறிந்து கொண்டோம். இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.

ஆகவே சிந்திக்கும் அரிய கலையில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி அவசியம். அந்த பயிற்சியினை இந்த இணைய தள சத்சங்கத்தின் வாயிலாக வழங்க விரும்பப்படுகின்றது. சிந்தனைப் பயிற்சியை ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1) சிந்திக்க வினாக்கள் மட்டும்.
2) சிந்திக்க அமுத மொழிகள்
3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்.
4) சிந்திக்க குரு – சீடர் உரையாடல்
5) சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை.

இப்பயிற்சிகளின் நோக்கங்கங்களைத் தனித்தனியாக அறிவோம். நோக்கம் அறியாமல் எந்த ஒன்றையும் செய்யக் கூடாது. அது மூடநம்பிக்கையாகிவிடும். அறிவு எதனையும் அறிவு பூர்வமாகத்தான் அறிய விரும்பும். அதாவது அறிவு உண்மையை அறியத்தான் விரும்பும். ஏனெனில் அறிவு மெய்ப் பொருளிருந்து வந்ததுதானே? அதுவே மெய்ப் பொருள்..
அறிவுபூா்வமாக அறியும் போதுதான் அது உள்ளத்திற்குச் சென்று, தரம் மாறுவதற்கு, மனம் ஒத்துழைக்கும். சிந்தனைப் பயிற்சியினை ஒரே பயிற்சியாக வைக்காமல் சிந்திக்கப் பழகுவதற்காக ஐந்து வகைகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதன் நோக்கத்தைத் தனித்தனியாக அறிய வேண்டும்.

1) சிந்திக்க வினாக்கள் மட்டும்: இப்பயிற்சியின் நோக்கம்:

”அறிவிற்கு விருந்து” ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இது அறிவிற்கு விருந்தாகவும் மட்டுமல்லாது, சிந்தனையையும் மேலும் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு அவற்றிற்கான விடைகளைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினாக்கள் (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளன.

வினாக்களை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு விடைகளைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்விகளைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில்.

2) சிந்திக்க அமுத மொழிகள்: இப்பயிற்சியின் நோக்கம்:

அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அதனை ஏன் அமுத மொழிகள் என நாம் கூறுகிறோம்?
அமுதம் என்கின்ற சொல்லுக்கு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.
வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் மூன்று இன்பங்கள் கிடைக்கின்றது. ஒன்று தாகம் தீர்கின்றது. மற்றொன்று நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது. உணவாகவும் அமைந்தது. நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தனிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்பங்கள் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும். தெளிவானால் அறிவு அறிஞர்களின் மொழிகளைக் கேட்பதற்கு விழையும். விழைந்தால் அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். இருட்டில் இருந்த அறிவு ஒளியை வீசும். அறிவொளியாகத் திகழும்.

வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு? அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது மலமாகி வெளியேறிவிடும். ஆனால் அறிஞர்களின் அமுத மொழிகள் அறிவிற்கு என்றென்றும் அமுதமாக கருமையத்தில் பதிந்து தங்கிவிடும். ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும். கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும். இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும். மன தைரியத்தை ஊட்டும். நம்பிக்கையை வளர்க்கும்.
எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையைத் தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல் ) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

 அறிவிற்கு இனிமையாக இருக்கும்.

 வாழ்வியலைப்பற்றிய உண்மைகளைக் கூறும்.

 பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.

 அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.

 ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.

 ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.

 ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.

 கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.

 இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.

 மன தைரியத்தை ஊட்டும்.

 நம்பிக்கையை வளர்க்கும்.

பத்திற்கு மேற்பட்ட இவ்வளவு பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால் ஏன் அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக .இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறியவில்லை.
இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனிமேலாவது அறிஞர்களின் மொழிகளை அமுதமாக அருந்துவோம். அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடுங்கள். சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தொரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பாருங்கள். அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும். சலிப்பே இராது, நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள். வாழ்க வளமுடன்.

3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்: இப்பயிற்சியின் நோக்கம்:

அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி, மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள். ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள் இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள். மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம். கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள். எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்
கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது, அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி என்றால் வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப்பெருங்கடலை நீந்தி பிறவிப்பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

நல்ல கவி, கவியின் சிறப்பு, சிறப்புடைய கவிகள், கவியின் பெருமதிப்பு, கவியின் ஆயுளும் எண்ணிக்கையும், கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல், கவியின் ஆற்றல், அருட்பா, பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும். கவிகள் எவ்வாறு வருகின்றன?. கீழ்த்தரமான கவிகள், கவிகள் பொதுச் சொத்து. நிறைவாய் இருக்க ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார்.
கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.
பேச்சினைப் பெய்கின்ற மழையோடும், எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும், கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார், இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.

கவியின் பெருமதிப்பு (1954)
ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய
ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி
பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம்
பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம்
உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை
ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம்
பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும்
பேரோட்ட முடை சீவநதி போலாகும் ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்

பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும். கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும். . கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும். அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள்.. மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேலாகக் கவிகள் எழுதியுள்ளார்.

கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.
கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெருவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார். அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு, அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும், மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனைஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும். அவர்களின் கவிகளை வாசிப்பதும், நினைவில் கொள்வதும், உட்பொருளை நினைவில் கொள்ளுதலும் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.

இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே ”அங்கிங்கெனாதபடி” எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.
திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்? அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன, எனவேதான் மகரிஷி அவர்கள், அவர்களது சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார், ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அவா்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

கவிகளால் சிந்தனை வளம் பெருகும். ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில் ”சிந்திக்கக் கவிகள்“ என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது,

4) சிந்திக்க குரு – சீடர் உரையாடல்: இப்பயிற்சியின் நோக்கம்:
மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம். தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமையும். ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்தை நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும்.

5) சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை: இப்பயிற்சியின் நோக்கம்.
இப்பயிற்சியின் நோக்கம் அவரவர்களே தங்களை சோதித்துக் கொள்ளுதலாகும். இதற்காக ஒரு நாட்குறிப்பை (diary) வைத்துக் கொள்ளுங்கள். அதில் தினந் தோறும் குறிப்பெடுத்துக்கொள்வதற்கு. காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நீங்கள் அறிஞர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டது, மற்றும் நீங்களாக சிந்தித்தது ஆகியவைகைள குறித்து வாருங்கள். உலாவச்செல்லும்போது கூட நாட்குறிப்பை எடுத்துச் செல்லுங்கள். சில நேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும். அவற்றைக்குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அக்கருத்துக்கள் மறந்து போகலாம். மீண்டும் நினைவிற்கு வராமல் போகும்.
*****

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments