நோக்கம்
சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?
ஆம்!
சிந்தனைவளம் இயற்கைவளங்களில் மிக மிகச் சிறப்பானதும், முதன்மையானதுமாகும். ஆறாம் அறிவின் துணை கொண்டு இயற்கை வளத்தைக் கண்டுபிடித்து, வாழ்வின் வளமாக்கி பயன் அடைந்து வரும் சமுதாயம் அதே இயற்கையின் ஆறாம் அறிவினுடையப் பயனாகிய சிந்தனை வளத்தை பயன்படுத்தாமல் இருக்கின்றது மிகவும் வருத்தப்படுவதாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிந்தயைாளர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள். மலர்கின்ற அச்சிந்தனைப் பூக்களின் வாசனையைாவது நுகரப்படுகின்றதா என்றால் அதுவும் மிகமிகக் குறைவே.
அவர்கள் கூறிய அறநெறி அறிவுரைகளையாவதுக் கேட்டு மனித குலம் திருத்திக் கொண்டு வாழ்கின்றதா என்றால் அதுவும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, நாணமுடைமை ஆகிய அதிகாரங்களை ஒதுக்கி அதில் பத்து குறட்பாக்களின் வாயிலாக ஒரு பொருள் பற்றி வெவ்வேறு கோணங்களில் எடுத்துக் கூறியும் இதுவரை இந்த சமுதாயத்தில் ஒழுக்கமும் அறிவுடைமையும் சிறப்புற்றுள்ளதா? சமுதாயம் .திருந்தியுள்ளதா?
தனக்கு நாக்கு இல்லை என்பதால் சிந்தனையாளர்களின் நாக்காக இருந்து கொண்டு, சிந்தனையாளர்களின் வழியாக, இயற்கை தன் குழந்தைகளுக்கெல்லாம் சொல்லியும் குழுந்தைகளின் கேளா அலட்சிய நிலையைப் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் இயற்கை அன்னைக்கு?. சிந்தனையைாளர்கள் கூறுவது யாருடையது? இயற்கையினுடையதுதானே! இப்போது கூறிய இந்த இரண்டு கூற்றுக்களும் ஒருமை விஞ்ஞானத்தின் புரிதலின் வெளிப்பாட்டின் கீழ் கூறப்பட்டதாகும். ஏதோ மொழி வளத்திற்காக கூறுவதன்று.
சிந்தனையாளர்கள் கூறும் வாழ்வியல் அறிவுரைகளைக் கேட்பதற்கே சிந்தனை அவசியமாகின்றது. முதலில் அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு உண்ண ஆர்வம் இருப்பது போல் அறிவுப்பசிக்கு உண்ண ஆர்வம் இருக்க வேண்டும். அதுதான் சிந்தனையாளர்கள் உதிர்க்கும் அமுதத்தை தேனமுதமாக்கி உண்ணுவதாகும். சிந்தனையாளர்களின் அமுதமொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருப்பதே சிந்திக்கக் கற்றுக்கொள்வதன் அறிகுறியாகும். அதுதான் சிந்திக்கும் கலையின் முதற்படியாகும். அந்த ஆர்வம் வந்துவிட்டால் அங்கே சிந்தனை வாடாப் பூ மலர ஆரம்பிக்கின்றது என்று பொருள்.
மனிதன் சிக்கலின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பல வளங்கள் தேவைப்படுகின்றன. அவ்வளங்களில் ஒன்று செல்வம். செல்வம் என்றால் பொதுவாக சமுதாயத்தால் கருதப்படுவது யாதெனில் பொருட்செல்வம் மட்டும் தான். ஆனால் செல்வ வளங்களில் முதன்மையானது அறிவுச்செல்வம். பொருட் செல்வத்தை ஈட்டுவதற்குக்கூட அறிவு தேவைப்படுகின்றது.
மேலும்…