அறிவிற்கு விருந்து – 287

வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

அறிவிற்கு விருந்து – 287

                                                                                                                      26-04-2020—ஞாயிறு

வாழ்க வளமுடன்!

22-04-2020 அன்று சிந்திக்க வினாக்கள் பகுதியில் “இனியொரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!! ” என்ற மகா கவி பாரதியாரின் அமுத மொழியினை சிந்திக்க எடுத்துக் கொண்டோம். அப்பயிற்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்று அறிவிற்கு விருந்து பகுதியில் விடை காண்போம். அக்கேள்விகளை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.

 “இனியொரு விதி செய்வோம்!  அதை எந்த நாளும் காப்போம்!! ” என்கிறாரே மகா கவி பாரதியார்!

  என்ன விதி அது?

  ‘இனி’ என்பதால் இது வரை அவர் கூறும் விதி இல்லையா? 

  அவர் கூறி ஒரு நூற்றாண்டு  ஆகிவிட்டதல்லவா? 

 அவ்விதி  இருக்கின்றது; அதனை  மேம்படுத்த வேண்டும் என்கிறாரா பாரதியார்? 

ஒரு வேளை அவ்விதி  இல்லையெனில் அவரது எண்ணம் எப்போது நிறைவேறும்?

 விதி ஏற்படுத்துவதோடு அது எந்நாளும் காப்பற்றப்பட வேண்டும் என்கிறாரே மகா கவி.  இதற்கு  என்ன பொருள்?

 எந்நாளும் காப்பற்றப்படக்கூடிய விதி எவ்வாறு இருக்க  வேண்டும்?                        

சிந்திப்போம்! 

  விதி என்றால் என்ன?  

சற்று நேரம் மௌனம் இருந்து சிந்திப்போம். எதனை விதி என்போம்?

1.   விதி என்பது முன்கூட்டியே வகுக்கப்பட்டதாகவும் மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படும் நியதி; ஊழ்(destiny, fate) மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படுவதால்  இது இயற்கை நியதி.

2.  ஒன்றைச் செய்வதற்கு வகுக்கப்பட்ட ஒழுங்கு முறை; (rules) செய்வது என்றால் யார் செய்வது?  மனிதன் ஒன்றைச் செய்வதற்கு அவனால், சமுதாயத்தால் வகுக்கப்பட்ட ஒழுங்கு முறை.  இயற்கையே சமுதாயமாகியுள்ளது  என்பதால் இயற்கையின் சார்பில் சமுதாயம் . இயற்கையின் இனிமை கெடாமல் நியதியினை   ஏற்படுத்திக்கொண்டு நல்வாழ்வு    வாழ முடியும்.

3.   இயற்கையின் நிகழ்வில் உள்ள ஒழுங்கு (Law of Nature). இது மனிதனால் மாற்ற முடியாதது.

இந்த மூன்றில் எந்த விதியை செய்வோம் என்கிறார் மகா கவி பாரதியார் என்பது நமது ஐயமாக உள்ளது. மூன்றுமே இயற்கை நியதிதான்.  அப்படி இருக்கும் போது சமுதாயம்  மகா கவி பாரதியார் கூறும் எந்த விதியை செய்ய வேண்டும்?

மூன்றுமே இயற்கையினால் வகுப்பட்டதாக இருந்தாலும், இரண்டாவது விதியை இயற்கையின் அங்கமான மனித சமுதாயம் இயற்கைக்கு இனிய முறையில் விதியை செய்து கொள்ளலாம்/கொள்ளவேண்டும்.   இந்த இரண்டாம் விதியைத்தான் மகா கவி பாரதியார் “இனியோர் விதி செய்வோம்” என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் “அதை எந்த நாளும் காப்போம்” என்பது நம்மை மேலும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றது.

இயற்கை ஒன்றுதான். அதில் ஏதும் பிரிவு இல்லை. ஆகையால் இயற்கையில் உள்ளது ஒரு நீதிதான்.  அது இயற்கை நீதி எனப்படுகின்றது. இயற்கையாகிய ஆற்றல் எங்கும் எதிலும் இறைந்துகிடப்பதாலும், அதுவே “எது இறை? யார் இறை?” என்கின்ற வினாவிற்கு திருவள்ளுவர் அவரது முதற் குறட்பாவில் கூறும்  விடையாகவும் இருப்பதால் அது இறை என்கின்ற காரணப்பெயரால்  அழைக்கப்படுகின்றது.

இயற்கை முந்தியதா அல்லது இறை முந்தியதா என ஒருவர் வினவினால் அதற்கு பதில் “இயற்கையும் இறையும் ஒன்றே”.  அப்படியிருக்கும்போது முந்தையது பிந்தையது என்று எப்படி இருக்கமுடியும்?  உயிரினங்கள் உள்பட பிரபஞ்சத்திற்கு மூலம் எது என்பதனை, யார் யாருக்கு எப்படி அழைக்க விருப்பமோ அவ்வாறே இயற்கை எனவும் இறை எனவும் அழைக்கலாம்.  பொதுவாக இயற்கை என்றால் யாவருக்கும் பொதுவாக இருப்பதால் இயற்கை என்றே அழைத்துக் கொள்ளலாம் அல்லவா?

                                                                                                                                     . . .  தொடரும்.

வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!