November 2014

Monthly Archives

  • தவறான அடையாளமும், அதன் துன்பங்களும். 1/2

    தவறான அடையாளமும், அதன் துன்பங்களும். 1/2

    வாழ்க மனித அறிவு!                                                                   வளா்க மனித அறிவு!

    FFC – 18

    14-11-2014

    (Mistaken Identiy and its sufferings)

    மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்கிறான். எனவே அவன் பல துன்பங்களுக்குள்ளாகிறான். மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா? தெரியாமல், மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்?. ஆம் .தவறான அடையாளத்தால்தான் துன்பங்களை அனுபவிக்கிறான். காரணம் தவறான அடையாளத்தால் அவனுடைய சரியான உண்மை அடையாளம் தெரிவதில்லை. அதாவது உண்மையான நான் (Real I) அவனுக்குத் தெரிவதில்லை.

    தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் சரியாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் வாழ்க்கை முறையில் வித்தியாசங்கள் பல உள்ளன. எனவேதான் தவறாக அடையாளம் கொண்டு வாழும் முறையில் துன்பங்கள் வருகின்றன. சரியாக அடையாளம் கொண்டு வாழும் போது இயற்கை விதித்துள்ளபடி எப்படி வாழ வேண்டுமோ, அவ்வாறு வாழும் போது இயற்கையேத் துணையாக இருக்கின்றது. அங்கே துன்பங்களைத் தவிர்க்கிறான். இன்பமே எஞ்சி நிற்கின்றது.

    தன்னைச் சரியாக அடையாளம் கொண்டு வாழ்ந்தால் இயற்கையோடு இணைந்து, இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழமுடியும். இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழ்ந்தால் இன்பம்தான். தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழும்போது இயற்கைக்கு முறணாக வாழ்கின்றது மனித சமுதாயம். ஆகவே வறுமை, பசி, பட்டினி, சண்டை, சச்சரவு, போர், பிணி. அச்சம், திருடு. கொலை, கற்பழிப்பு. சினம், கவலை, பயம் அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், சமுதாய அக்கறையின்மை ஆகிய பல்வேறு வகையானத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது மனித சமுதாயம்.

    அவனுடைய உண்மையான நான் தெரிந்திருந்தால் அதற்கேற்ப அவன் வாழ்வான். வாழ்க்கையில் இன்பமிருக்கும். தவறான அடையாளத்தால் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே பல்வகையானத் துன்பங்களை அனுபவிக்கிறான். மனிதன் என்றால் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மனிதர்கள்தான் தங்களைத் தவறாக அடையாளம் காண்கிறார்கள் என்பதில்லை. அறிவை அறிந்த அறிஞர்களைத் தவிர மனித சமுதாயமே தன்னைத் தவறாக அடையாளம் காண்கின்றது. ஆகவே தான் இன்று உலகத்தி்ல் அமைதியின்மைக் காணப்படுகின்றது.

    வாழ்க்கையில் என்ன வேண்டும்? எதில் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் துன்பமில்லா–இன்பம் வேண்டும். பேரின்பமே வேண்டும். துன்பம் வந்தாலும் அதனை துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும். ஆகவே வாழ்வில் துன்பமில்லா–இன்பம் பெறுவதில் வெற்றி பெற வேண்டும். துன்பம் தேவையில்லை. பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையளாம் காணப்படவி்ல்லை என்றாகின்றது.

    தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே. தன்னை அறிவது என்பது இயற்கையின் நோக்கம். தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அயைாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணாததுதானே? ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமைகெடச் செய்கிறான். இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பமே. மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?

    தவறான அடையாளம் என்பது தன் பரு உடலுடன் (physical body) தன்னை அடையாளம் காண்கிறான். உடல் உண்மையான நானல்ல (It is unreal I).
    உடலே உண்மையான நானாக இருந்திருந்தால்,

    மரணத்திற்கும் பிறகும், அதாவது உயிர் பிறிந்த பிறகும்,

    உயிருடன் இருந்த போது சொன்னது போல் உடல், “நான்” என்று சொல்லலாமே! அப்படிச் சொல்வதில்லையே!. எனவே உடல் நானல்ல. இறந்த பின் உடல் இருந்தும் முன்பு போல், அது “நான்” எனக் கூறுவது இல்லை. ஏன் என்பது அனைவரும் அறிவர். மரணத்தின் போது உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது. எனவே உடலுக்கு உணா்வு இல்லை. உயிர் உள்ள போது நான் எனக் கூறியது எது? அதுதான் அறிவு் எனவே அறிவுதான் “உண்மையான நான்”(Real I).

    உடலை “நான்” என்கின்ற போது அது தன் முனைப்புள்ள நானாக (Egoful I) உள்ளது. உடலளவிலே அறிவு குறுகி நிற்கின்றது. இறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆகி விடுகின்றது. இறையை மறந்து வுிடுகின்றது. விழிப்புணர்வில் இடறி விடுகின்றது. உடலை நான் எனக் கருதுவது சரீர உணர்வாகும்(body consciousness).

    தளையில் (bondage) அகப்பட்டுக் கொள்கின்றது. விடுதலை (liberation) ,இல்லாமல் தவிக்கின்றது. அறிவுதான் உண்மையான நானாக இருக்கும் போது உடலை நான் எனக் கருதுவது தவறான அடையாளம். உடல் சரியான அடையாளமில்லை. எங்கும் நிறைந்துள்ள சர்வ வியாபியான இறை நம்முள்ளும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இறையை அடையாளம் காட்ட வேண்டுமல்லவா? உடலை தன்னுடைய அடையாளமாகக் காட்டுவது சரியல்ல.

    இறை நம்முள் இருக்கின்றது என்று அறிகின்ற ஆன்மீகப் பயிற்சியில், உடலுடன் தன்னைத் தவறாக அடையாளம் கொண்டால் அது பயன் அற்று போய்விடும்.

    “அவனில் தான் நீ, உன்னில் அவன்
    அவன் யார்? நீ யார்? பிரிவேது?
    அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
    அறிவு முழுமை அது முக்தி”

    எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இறையும் நாமும் ஒன்று என அறிந்து கொள்ளும்போது மனித அறிவு முழுமை பெறுகின்றது. அதுவே முக்தி என்கிறார். அதுவரை அறிவு குறைவுள்ளதாக இருக்கின்றது. குறைவுள்ளதில் எவ்வாறு நிறைவு இருக்கும். அதனால்தான் வாழ்க்கையில் எல்லா வளங்களும் உள்ளவனும் நிறைவு இல்லாமல் இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும் என அலைகிறான். அலைகிறவனுக்கு எப்படி நிம்மதி இருக்கும், இப்போது “நான் யார்?“ என்கிற வினாவிற்கு விடை அறிவுதானே.

    . . . . நாளைச் சந்திப்போம். வாழ்க வளமுடன்

    Loading

  • தன்முனைப்பில்லா நான் (Egoless I )

    தன்முனைப்பில்லா நான் (Egoless I )

    FFC-17

    13-11-2014

           தன்முனைப்பு என்பது ”Ego” என்கின்ற ஆங்கிலச் சொல்லின் பொருளாகும்(meaning). ”Edging God out” என்கின்ற வாக்கியத்தில் உள்ள மூன்று சொற்களின் (words) ‘E’, ‘G’, ‘O’ என்கின்ற முதல் எழுத்துக்களை (letters) எடுத்து உருவாக்கப்பட்ட(coined) எழுத்துதான் ”Ego” என்கின்ற எழுத்து.   இறையை (இறைவனை, God) வெளியே ஓரம் தள்ளி விடுதல் என்பதாகும். தன்முனைப்பு என்பது இறையை மறந்த நிலை. மனிதனுக்கும் இறைக்கும் உள்ள திரையே தன்முனைப்பாகும். தன்னை இறையிடமிருந்த பிரித்துக் காட்டிக் கொள்ளும் நிலை.

         எனவே இறையுணர் ஆன்மீகத்தில் இறை உணர்வு பெறுவதற்கு தன்முனைப்பு கரைய வேண்டும். ”தன்முனைப்பு கரைந்து போம், காணும் தெய்வம்” என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருட் செய்தியினைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

         தன்முனைப்பு என்பது,   அறிவு தன் மூலத்தை மறந்து தன்னை உடலுடன் அடையாளம்(body consciousness—mistaken identity) கொண்டு முனைப்பு கொள்கின்றது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இருக்கும்போது, மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது அல்லது ஏங்குவது அல்லது புகழ் மயக்கத்தில் இருப்பது, இறையிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் தன்முனைப்புதான் காரணம். தன்முனைப்புதான் எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர். ஆகவே தன்முனைப்பு நீங்க அறிவு தன்னைப் பற்றி தெளிளாக விளங்கிக் கொள்ள வேண்டும்.  அதற்கு தவமும் சுயசோதனையும் அவசியம்.

         தினந்தோறும் மனிதன் ”நான்” ”எனது” என்கின்ற இரு சொற்களையும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தன்முனைப்பை வெளிபடுத்துகின்ற ”நான்” ”எனது” என்கின்ற சொற்களை உபயோகிக்காமல் இருப்பது எங்கனம் சாத்தியம். என ஐயம் சாதகர்களுக்கு எழலாம். இந்த ஐயம் தீர்க்கவே இன்றைய சிந்தனை.

       தன்முனைப்பு நீக்கிக் கொண்ட ஞானியும் ”நான்” என்கின்ற சொல்லை பயன்படுத்தினாலும் ஞானி பயன் படுத்துவதற்கும் சாதாரண மனிதன் பயன் படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது..   ஞானி என்பவர் எப்போதும் அயரா விழிப்பு நிலையில் இறையே தானுமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்ற ஞாபகத்தில் இருப்பார். ஆனால் சாதாரண மனிதன் இவ்வுண்மையை தெரிந்திருந்தாலும் அந்நிலையை மறந்து தான் வேறு, இறை வேறு என்கின்ற உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பதுதான் அந்த வித்தியாசம்.

    எனவே ஞானி பயன்படுத்துவது ”Egoless I”. சாதாரண மனிதன் பயன்படுத்துவது ”Egoist I or Egoful I” ஞானியின் ”நானை” சாதாரண மனிதன் புரிந்து கொள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளுவதைக் கவனிப்போம்.

       ”எரிந்து கருகிப்போன கயிறு தன் பழைய உருவத்தோடு இருந்தாலும் ஒன்றையும் கட்டுவதற்கு உதவாது. அதுபோல் பிரம்ம ஞானத்தால் எரிக்கப்பட்ட ஞானியின் அகங்காரமும்(தன்முனைப்பு) அப்படிப்பட்டதே என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

       மேலும் விவேக சூடாமணி கூறுவதையும் கவனிப்போம். நிழலைப்போல் தொடர்ந்து தேகம்(உடல்) வந்து கொண்டிருந்தாலும் ”நான்” என்னுடையது” என்கின்ற எண்ணமில்லாமை சீவன் ”முக்தனுடைய அடையாளம்” என்கிறது. நாளை சந்திப்போம்.

                           வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.

    வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • தன்குறைகளை அறிவதே ஞானமா? (நேற்றையைத் தொடர்ச்சி) 2/2

    தன்குறைகளை அறிவதே ஞானமா? (நேற்றையைத் தொடர்ச்சி) 2/2

    FFC – 16

    12-11-2014

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் என்பதற்கு, பொதுவான மற்றும் சிறப்பான விளக்கம் தருகிறார்.
    ஞானத்திற்கான பொதுவான வார்த்தை விளக்கம் தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    சிறப்பான விளக்கம் அறிவையறிந்த தெளிவு என்கிறார்
    அறிவின் இருப்பிடத்தை அறிந்து இன்புற்ற மகரிஷி அவர்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க, அவ்வின்பத்தை அனுபவிக்க அன்பர்களையெல்லாம் அழைப்பதைக் கவனிப்போம்.
    அழைப்புக் கவி

    anbargale vaareer-THAI

    ஞானம் என்கின்ற சொல்லிற்குத் பொதுவான அர்த்தம் தெளிவு. தெளிவு என்பது யாருக்கு? எந்த ஒன்றைப் பற்றியும் அறிந்து கொள்வதில், குழப்பம், சந்தேகம் இன்றி அந்த ஒன்றைப் பற்றி அனைத்தையும் அறிந்த அறிவின் நிலை தான் தெளிவு. உதாரணத்திற்கு சிறந்த வழக்குரைஞரை சட்ட ஞானமுடையவர் என்கிறோம். சிறந்த பாடகரை இசை ஞானம் உள்ளவர் என்கிறோம். எந்தத் துறையில் சிறந்து விளங்குகிறாரோ அந்தத்துறையில் ஞானமுடையவர் என்கிறோம். பணியின் நிமித்தமாக மனிதர்கள் வெவ்வேறுத்துறையில் இருந்தாலும் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே சிறப்பாக வாழ்வதற்கு ஞானம் வேண்டும். அதனை வாழ்க்கை ஞானம் எனலாம். வாழ்வது ஒரு கலை.
    எதற்காகப் பிறந்தோம்?
    கடைசியாக எங்கே செல்ல இருக்கிறோம்?
    ஏன் துன்பம் வருகின்றது?
    வந்த துன்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
    துன்பமில்லாமல் வாழ முடியாதா?
    ஆகிய வினாக்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.
    பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்து பூர்வீகச்சொத்தான அமைதியை அனுபவிக்க அறிவிற்கு வேண்டியத் தெளிவுதான் வாழ்க்கை ஞானம் எனலாம்.
    அதற்கு, “நான் நான்“ எனக்கூறிக்கொண்டிருக்கும் அறிவு தனது இருப்பிடத்தை, அதாவது தனது மூலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மீண்டும் தன் மூலத்தோடு இணைத்துக் கொண்டால் இன்புறலாம், பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கலாம். அறிவு தன்னை அறிந்து கொள்ளும்போது தெளிவு கிடைக்கின்றது. அந்தத் தெளிவினை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். அந்நிலை எய்திய அறிவு முழுமை பெற்ற அறிவாகின்றது.
    அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தெளிவினால் வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து வாழ முற்படுவான் மனிதன். நிலையாமையை அறிந்து கொள்வதும் ஞானம் தான். மனிதன் இப்போது தன்னிடம் உள்ள குற்றங்குறைகளை அப்படியே வைத்துக் கொண்டு ஞானம் பெற முடியாது. தெளிவாகிய ஞானம் பெறுவதற்குப் பல பிறவிகளாகத் தன்னிடம் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள குறைகளை அறிய வேண்டும். அந்த குறைகளை அறியும் நிலைக்கு வந்த மனிதன் தன்னை திருத்திக் கொண்டு வாழ முற்படுவான். மனிதனிடம் உள்ள குறைகள் என்னென்ன? தீய எண்ணங்கள், தேவையில்லாத ஆசைகள், சினங் கொள்வது, கவலையுறுதல் மற்றும் தான் யார் என உணராமை ஆகியவைகளாகும்.
    பொதுவாக, ஞானவானைத் தவிர, தன்முனைப்பு இல்லாத மனிதர்கள் கிடையாது. ஆகவே தன் குறையை அக்கறையோடு எடுத்துப் பிறர் சொன்னாலும் அதனை தன்முனைப்பு கொண்ட மனம் ஏற்க மறுக்கும். சரி தானாகவாவது குறைகளைக் கண்டுபிடிக்குமா அறிவு என்றால்
    அங்கே இரண்டு காரணிகள் குறுக்கிடுகின்றன .
    ஒன்று பரிணாமக் கசடுகளால் வந்த அறிவின் குறைபாடு. அந்த ஒன்றும் மீண்டும் மூன்றாக பரிணமிக்கின்றது. அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகியன.
    அறியாமை இருந்தால் தன் குறையை எப்போதுமே கண்டுபிடிக்க இயலாது. குறைகள் இருந்தால் அங்கே அதன் விளைவுகள் துன்பங்கள்தான். அறியாமலோ அல்லது அறிந்தோ செய்தாலும் இரண்டிற்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. சூடான பாத்திரத்தை, அறியாது குழந்தை தொட்டாலும் சரி அல்லது தாய் தொட்டாலும் விளைவு சுடும். விளைவைத் தெரிந்தோ அல்லது தெரியாது செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு நிச்சயம் உண்டு. அங்கே தாய் சூடானப் பாத்திரத்தைக் குழந்தை தொடாதவாறு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். தாயின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் தான் குழந்தை சூடான பாத்திரத்தை தொட்டு சூட்டினால் வந்த புண்ணை அனுபவிக்கின்றது. குழந்தையும் அனுபவிக்கின்றது. தாய் அதைவிட அதிகமான துன்பம் அனுபவிக்கிறாள். விளைவை அறிந்து செயல் செய்தாலும்(கற்றார்) அல்லது விளைவை அறியாது(கல்லார்) செயல் செய்தாலும் விளைவு உண்டு என்பதனை ஒரு கவியில் மகரிஷி அவர்கள் கூறும் வரிகளை நினைவில் கொள்வோம்.

    “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
    காணும் இன்ப துன்பமவன் ” . . . . . என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மற்றொரு காரணி தனக்குத் தானே தன்முனைப்பு. அதாவது தன்னுடைய குறைகள் தனக்குத் தெரிய வந்தாலும் அதனைத் தானே ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம். இது அநேகருடைய வாழ்க்கையில் அன்றாட நிகழ்வாகவே இருக்கலாம். மனமே குற்றவாளி. மனமே வழக்குரைஞர், மனமே நீதிபதி. மூன்று வேடங்கள் எடுக்க வேண்டியுள்ளது மனம். ஆகவே மனம் உறுதியாக இருந்து மனம் போன போக்கெல்லாம் போகமலிருக்க வேண்டும். எனவேதான் பாரதியார் திண்ணிய(உறுதியான) நெஞ்சம் வேண்டும் என இறைவியைக் கேட்கச் சொல்கிறார். இந்நிலையில் மனிதன் தன் குறைகளை அறிவது என்பது ஞான வாயில் எனலாம். அதனால் தான் மனவளக்கலையில், ஞானக்கோயிலுக்கான முதல் படியாகத் தன்குறைகளைத் தானே அறிந்து கொண்டு திருத்திக் கொள்ளும் தற்சோதனை எனும் பயிற்சி அகத்தவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    தன்னிடமுள்ளக் குறைகளை அறிவது ஞானபீடத்திற்கு செல்லும் வாசல். ஆகவேதான் மகாத்மா காந்தி குறைகளை அறிவதே ஞானம் என்கிறார். தன்னுடைய குறைகளை அறிபவன் தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்துள்ளான். அவ்வாறு முடிவு எடுத்தவன் தன்னை தினந்தோறும் பல்வகைகளிலும் திருத்திக் கொள்வதற்கு, அறிவினரைச் சேர்ந்தும், அவர்களை கனவிலும். நனவிலும் கண்டும், அறிவின் மேம்பாட்டிற்கு அறிவினரின் அறநூல்களைச் சிரத்தையுடன் படிப்பதும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதில் இன்பம் இருப்பதை அறிந்து சத்சங்கத்தில் கலந்து கொண்டும் ஞானத்தைப் பெறுக்கி ஞானபீடத்தை அடைவான்.
    மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தருவது இயற்கையின் நியதியாக உள்ளதால், மனிதன் இதனைக் கவனத்தில் கொண்டு நல்ல விளைவுகளையே விரும்பும் மனிதன் தன் குறைகளை அறிந்து கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டு ஞானஒளியில் தானும் பிரகாசித்து, தான் வாழும் சமுதாயத்தையும் பிரகாசிக்க வைப்பதற்கு எல்லாம் வல்ல இறையருளும் அறிவில் அறிவாய் நிலைத்து அறத்தை வகுத்து அவ்வாறே வாழ்ந்து காட்டியவர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. முற்றும். வாழ்க வளமுடன்.
    வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு. வாழ்க அறிவுச்செல்வம். வளர் அறிவுச் செல்வம்

     

    Loading