May 2015

Monthly Archives

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 2/?

     

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 2/?

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 87

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 87

    31-05-2015—ஞாயிறு

    Scientist of Consciousness

    ஒழுக்க நெறி பற்றியும், ஒழுக்கத்தை வாழ்வில் உறுதியாகக் கடைபிடிப்பதிற்கு, மனதுடன் அறிவு போராட வேண்டியுள்ளதற்கான காரணம் என்ன, அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற வழி என்ன என்று சென்ற அறிவிற்கு விருந்தில் சிந்திக்க ஆரம்பித்தோம். அச்சிந்தனையில், இது வரை புண்ணியம், பாவம் என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கு முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகியன எவ்வாறு விஞ்ஞானச் சொற்களாக அமைகின்றன என்று பார்த்தோம்.

    இன்றைய சிந்தனையில்,
    தடம் புரண்ட மனிதவாழ்க்கை எனும் ரயில் என்ஜினை(derailed man’s life—rail engine) எவ்வாறு போராடி, ஒழுக்க நெறி தண்டவாளப்பாதையில் (rail track), அதாவது வாழ்க்கை எனும் ரெயில் என்ஜினை தூக்கி வைத்து, வாழ்க்கை பயணத்தை
    செம்மையாகவும் சிறப்பாகவும் முடிக்கும் வழியில் வாழ்ந்து,
    தினந்தோறும் சங்கல்பம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் உயர் புகழை அடைந்து, நாம் இப்புவிக்கு வந்து போனதற்கான அடையாளத்தை (trace of this precious human birth) இப்பிறவியிலாவது, பதிப்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    இச்சிந்தனையில் அறிவு தன்னைப் பற்றி சொல் என்று அறிவுறுத்தியதால், அறிவு பற்றி சுருக்கமாக அறிவின்–அறிவியல் மற்றும் முதல் அறிவின்–-அறிவியாலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். ஆகவே, இன்றைய சிந்தனையான ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பிலிருந்து வெளியே சென்று விட்டதாகக்கருத வேண்டாம். இச்சிந்தனையைச் செய்து கொண்டிருக்கும் அறிவேதான், தன்னை மேம்படுத்திக் கொள்ள முழுமை அடைய விரும்பித்தான் இச் சத்சங்கத்தில் பங்கு கொண்டுள்ளது.

    ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற விளக்கத்தை பெற வேண்டும் என்று எண்ணுவது அறிவுதானே! ஆகவே அதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?! சந்தர்ப்பம் வரும்போது கூடுதலாகத் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது இருப்பதால் தெரிந்து கொள்ளவது நலம்தானே. கல்விக்கூடங்களில், நடத்தப்படும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பாடத்திட்டம்(Syllabus) ஏற்படுத்தப்பட்டு, அதற்குமேல் அதிகமாக அந்த பாடத்தை படிக்க வேண்டிய அவசியமிருக்காது. அப்படி ஏதாவது அந்த பாடத்திட்டத்தையும் கடந்து, தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டால் அது ‘out of syllabus’ என்று கூறுவர். அதுபோல் அல்ல அறிவின் தரத்தை மேம்படுத்தி, அறிவை முழுமை செய்விக்கின்ற பாடம் என்பது. எப்பொழுதெல்லாம் கூடுதலாக தகவல்கள் கிடைக்கின்றதோ, அதனை உள்வாங்கி வைத்துக் கொண்டால் நம்முடைய தொடர் சிந்தனைக்கு உதவியாக இருக்கும்.

    ஒழுக்க வாழ்விற்கு போராடவேண்டியிருப்பதால், எப்போது அப்போராட்டம் முடிவிற்கு வரும் என்பதனை முதலில் அறிவோம். யாரும் போராட்டத்தை விரும்புவதில்லை. அமைதியைத்தான் விரும்புவா். தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமல், அமைதியை இழக்கவைக்கும் போராட்டத்தை இன்னமும் எத்தனை நாள்தான் நடத்தி வாழ்க்கையையே வீணடிப்பது? ஆகவே ஒழுக்க வாழ்விற்காக, மனதுடன் நடத்துகின்ற போராட்டம் எப்போது முடிவிற்கு வரும் என்கின்ற ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆகவே போராட்டத்தின் முடிவு எப்போது வரும் என்கின்ற ஐய-வினாவிற்கு விடையை அறிவோம்.

    போராட்டத்தின் முடிவு,
    ‘மனிதனாக பிறந்து விட்டவர் நல்லவனாக வாழ வேண்டும்’ என்கின்ற உன்னதமான ஆசையில், அவரவர்கள் கொண்டுள்ள மிகுந்த ஆர்வத்தைப் பொருத்தும்,
    திருவள்ளுவர் கூறும் ‘நாணத்தை’ (அதிகாரம் நாண் உடைமை- குறள் எண். 1011-1020)எந்த அளவிற்கு உடைமையாக்கிக் கொண்டிருப்பதைப் பொருத்தும்,
    ஒழுக்கப் பயிற்சியில் எடுக்கும் தளரா விடா முயற்சியினைப் பொருத்தும்,
    அவரவர் வாழும் சமுதாயச் சூழலைப் பொருத்தும்,
    மரபணு/கருமையப் பதிவுகளையும் பொருத்தும்,
    நல்லோரிடம் கொண்டுள்ள இணக்கத்தைப் பொருத்தும், அதில் காணும் பேரின்பத்தைப் பொருத்தும் அமையும்.

    அடுத்ததாக, 2046 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த – உலக பொது மறையை அருளிய அறிஞர் திருவள்ளுவர், ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆராய்வோம்.

    திருவள்ளுவர், ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி ஒழுக்கத்திற்கு ஓர் அதிகாரத்தையே ஒதுக்கி அதற்கு ஒழுக்கமுடைமை(ஒழுக்கம்+உடைமை) எனப் பெயரிட்டு பத்து குறட்பாக்களை அருளியுள்ளார். ‘உடமை’ என்றால் ‘ஒருவருடையது’ என்பதாகும், ‘ஒருவருடையது’ என்கின்றபோது, அது அவரது செல்வமாகிவிடுகின்றது. ஆகவே ஒழுக்கமுடைமை என்று கூறுவதால் ஒழுக்கத்தைச் செல்வமாகக் கருதுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.

    செல்வம் சோ்ப்பது எதற்காக? தேவை ஏற்படும் போது செலவழிப்பதற்காக. தேவையைப் பூர்த்தி செய்தால் மனம் இன்புறும். செல்வம் இல்லை எனில், தேவையைப் பூா்த்தி செய்ய முடியாது. தேவையைப் பூர்த்தி செய்ய வில்லையென்றால், அப்போது மனிதனுக்குத் துன்பம் தானே வரும்? பொருட்செல்வம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள உதவுவது போல், ஒழுக்கச்செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும். ஆகவே ஒழுக்கமுடைமை மனிதனுக்கு இன்பத்தைத் தரவல்லது. ஒழுக்கச் செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்கின்றபோது மனிதனின் எந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்?

    மனிதனின் பொதுவான தேவைகள் என்ன? மனிதனின் இன்றியமையாத் தேவைகள் மூன்றாகும். அவை உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம். இந்த மூன்றுத் தேவைகளையும் பூா்த்தி செய்து கொள்வதற்கு மனிதனுக்கு பொருட்செல்வம் தேவையாக உள்ளது. அதற்காக மனிதன் உழைத்து பொருளீட்டுகிறான். அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கிறான். ஒழுக்கச் செல்வம் பூா்த்தி செய்யும் அந்த தேவை என்ன? மூன்று இன்றியமையாத் தேவைகளும் மனிதனுக்கு எதற்காகத் தேவை? மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகவில்லையெனில் இன்பமாகத்தான் வாழமுடியுமா?

    அப்படியானால் மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் மனிதன் இன்பமாக வாழ்கின்றானா? வாழ முடிகின்றதா மனிதனால்? எதார்த்த நிலை என்ன? எதார்த்தத்தில், இரு தரப்பினருமே, அதாவது மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியானவர்களும், பூர்த்தியாகாதவர்களும் அமைதி இழந்து துன்ப வாழ்வு வாழ்கின்றனர். காரணம் என்ன?

    மூன்று இன்றியமையாத தேவைகள் பூர்த்தியானவர்கள் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். சிக்கிக் கொண்டால் வாழ்க்கை சிக்கலாகத்தானே ஆகிவிடும். சமுதாய அமைப்பும் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சுலபமாகச் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையாகவும், முரணான பேராசையை தூண்டிவிடுவதற்கு மேற்கொண்டு தூபம் போடுவதாகவும் உள்ளது.
    ஒழுக்கச் செல்வம் பூா்த்தி செய்யும் அந்த தேவைதான் என்ன?

    மனிதன் மனிதனாக வாழ்வதுதான் அந்த தேவை. மனிதன் மனிதனாகத்தானே வாழ்கிறான். வாழ முடியும். இயற்கை எவ்வாறு படைக்கின்றதோ அவ்வாறாகத்தானே(வேதாத்திரிய கருத்து படைப்புக் கருத்து அல்ல) வாழ முடியும் என ஐயங்கள் பல எழலாம். மனிதன், தான் விரும்பி பிறப்பதில்லை. இயற்கையின் தன்மாற்ற நந்தவனத்தில் வண்ணமும், நறுமணமும் கொண்டு இறுதியாகப் பூத்த மலர் தான் மனிதன். மனிதனின் பிறப்பு என்பது இயற்கையின் நிகழ்ச்சி. ஆகவே மூன்று இன்றியமையாத் தேவைகள் பூா்த்தியாகிவிட்ட பிறகு, மனிதன் மனிதனாக வாழ்வது என்பதுதான் அந்தத் தேவை. மனிதன் மனிதனாக வாழ்வது ஒரு தேவையா? இயற்கையில், மற்ற உயிரினங்கள் எதற்காக பிறவி எடுத்ததோ அதற்காகவே வாழ்கின்றன.

    உதாரணத்திற்கு, நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி சீறி விரோதியை பயமுறுத்தும். அது இயற்கை கொடுத்த தற்காப்புத் திறன். மற்றொரு உதாரணம் பூனை. இரையைத் தேடும் பூனை, இரையை நோக்கி நடந்து செல்லும் போது, தான் நடக்கும் சப்தத்தை இரையாகவிருக்கும் உயிர், அதாவது இரையாகிய எலி அறிந்து ஓடிவிடாமல் இருக்க கால்நகங்களை மடக்கி வைத்துக் கொண்டு நடந்து, இரை மீது பாய்ந்து இரையான எலியைக் கவ்விப் பிடிக்கும்.

    ஆனால், மனிதன் மட்டும், ஆறாம் அறிவிருந்தும், மனிதனாக வாழவில்லை. அப்படியென்றால் என்ன பொருள்? மனிதன் ஆடை அணிந்து கொள்கிறான். தன்னை அழகு படுத்திக் கொள்கிறான். இன்னும் எவ்வாறு மனிதனாக வாழ வேண்டும் என ஐயம் எழலாம் ஆறாம் அறிவிற்கு. இயற்கையின் தன்மாற்றத்தில், மனிதஇனம் விலங்கினத்திலிருந்து வந்தது. எதற்காக? மீண்டும் விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டு வாழ்வதற்காகவா? இயற்கை/இறை அன்பும் கருணையுமானது. இயற்கை/இறை மனிதனிடம் தான் சிறப்புறுகின்றது. இயற்கை/இறை தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில் மனிதனோடு உருமாற்றத்தை நிறுத்திக் கொண்டது. இதற்கு மேலும் அதற்கு உருமாற்றம் தேவையில்லை. உருவத்தில், அழகில் சிறந்து விளங்குகிறான் மனிதன். ஆனால் பெரும்பாலோர் அறிவில் சிறந்து விளங்கவில்லை; மனிததரத்தில் சிறந்து விளங்கவில்லை. எனவேதான் முன்னாள் இந்திய ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள், “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை” என்கிறார்.

    அடுத்ததாக, ஒழுக்கத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது என்ன? – “மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று இயல்புகளால் உருவாக்கப்படுகிறான் மனிதன். இதில் தெய்வீக இயல்பு வளர்ப்பது ஒழுக்கமாகும்.“ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    மனிதனின் மூன்று நிலைகளில் மூன்றாவதும் கடைசியுமான, உன்னதமுமான நிலைக்கு தெய்வீக இயல்பை வளர்ப்பதுதான் ஒழுக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதனை கூர்ந்து கவனிக்க வேண்டும். மனிதனாகிவிட்டால் மட்டும் போதாது, அவ்வையார் கூறும் அரிதாகிய மனிதப் பிறவி எடுத்தமையின் பயனாகிய ஞானத்தை அடைய வேண்டும். ஞானம் பெற்றால்தான் விவேகானந்த சுவாமிகள் கூறும் – விரும்பும் தெய்வீக இயல்பை அடைய முடியும்.

    ஒழுக்கத்தைப் பற்றி முதல் அறிவின் – அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன? ‘அறிவின் – அறிவியலாளர்’ என்றால் என்ன? அறிவின் – அறிவியலைக் கண்டுபிடித்தவர் அறிவின் – அறிவியலாளர். அறிவின் – அறிவியல் என்பது என்ன? அறிவைப்பற்றிய விளக்கங்களைத் தெரிவிக்கும் இயல்-அறிவியல். அறிவின் – அறிவியல் முதன்முதலில் தந்தவர் மகரிஷி என்பதால் அவர்களை முதல் அறிவின் – அறிவியலாளர் என்கிறோம்.

    இயல் என்பது என்ன என்று சாக்ரடீஸ் கூறுவது:- “இயல்வழியாக அறிவைப் புகட்டுவதால் அது அறிவியல் எனப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி எனக்கூறுவது இயல். எதன் வழியாக, எத்துறையைப்பற்றி அறிவு புகட்டப்படுகின்றதோ, அவ்வழி அத்துறையின் இயல் எனப்படுகின்றது”. உதாரணத்திற்கு மருத்துவத்தைப் பற்றிய அறிவு புகட்டும் இயல் மருத்துவ இயல் எனப்படுகின்றது, அதுபோல் ‘அறிவை’ ப்பற்றிய அறிவை புகட்டுவதால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவைப் பற்றி ஏற்படுத்திய இயலை அறிவின்—அறிவியல் என்கிறோம்.

    அறிவைப்பற்றிய விளக்கங்கள், அதாவது,
    1) உயிர்களின் அறிவினது மூலம் (பேரறிவு ஆதியும் அந்தமும் இல்லாதது. அது தொடக்கமில்லாதது-அனாதியானது. எனவே அதற்கு மூலமில்லை)
    2) அறிவின் ஆரம்பம்,
    3) அறிவின் இருப்பிடம்,
    4) செந்நெறி,
    5) மற்றும் அறிவின் ஏழுவகை செயல்பாடுகள், (அமைப்பு, துல்லியம், ஒழுங்கு, உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல், தன்னையே அறிதல்),
    6) ஆட்சியின்றி ஆளுகின்ற செந்திறமை,

    7) மனிதன் அறிவை முழுமைப்படுத்த வேண்டிய அவசியமும்,  அதற்கான வழிகளும்

    8) செயலுக்கு எற்ற விளைவினைத் தரும் செங்கோலாட்சி.

    9) அறிவை ஆட்சி செய்து பெறுகின்ற அறிவாட்சித்தரம்(personality) பெறுவதற்கான பயிற்சிகள்,
    10) அறிவின் பூரண அமைதியான மனிதகுலத்தின் பூர்வீகசெல்வத்தை அனுபவிக்க வழிகள் – திட்டங்கள் கொண்ட உலக சமாதான திட்டம்.

    ஆகியவைப் பற்றிய அறிவுப்பூர்வமான(விஞ்ஞானமாக) விளக்கங்கள் கொடுத்துள்ளதை அறிவின்—அறிவியல்(Science of Consciousness) என்றும், அதனை அறிவுடைய எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கண்டுபிடித்து உலகுக்கு, முதலில் சொன்ன(explorer of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்களை அறிவின் முதல் அறிவியலாளர்(First Scientist of Consciousness), என்று கூறுவது, அவருடைய கண்டுபிடிப்பின் சிறப்பை அறிந்த மகிழ்ச்சி பூரிப்பில் கூறும் போற்றுதலாகும். மேலும் நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்று அவ்வையார், தான் அருளிய ‘நல்வழி’ யில் மொழிந்துள்ளார். இதே போன்று மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவு கூர்வோம்.

    FFC-87எப்பொருளை-to-post-on-31-05-15

    நல்லோர் குணங்களை எப்போது எடுத்துரைக்க முடியும்? அவ்வையார் கூறும் அந்த ‘நன்று’ தான் என்ன? இங்கே பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் பொன் மொழியான ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது.  ரசிக்கவும் முடியாது.’ என்பதனை கூர்ந்து நோக்க வேண்டும். கூர்ந்து நோக்கினால், அவ்வையார் கூறும் ‘நல்லோர் குணங்களுரைப்பதுவும் நன்றே’ என்பது, மகரிஷி அவர்கள் கூறுவது போல் ‘அந்த நல்லோர் குணங்களை ரசிப்பதாலும், மதிப்பதாலும் நாமும் நல்லோர் கூறும் பாதையில் உயர்ந்து வருகிறோம் என்பதில் உறுதிப்பாடு கிடைக்கப்பெற்று ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

    அடுத்த விருந்தில் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் பற்றியும், மனிதனுக்கான வரையறைகளில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள மனிதனுக்கான வரையறைப் பற்றியும், எண்ணிலடங்கா பிறவித் தொடரில், இப்பிறவியோடு கூடிய முந்தையை, ஏழு தலைமுறைகளில், 127 ஆன்மாக்களின் தொடர்பை அட்டவணையின் மூலமும்(Chart) அறிய இருக்கிறோம்.

    தொடரும் 03-06-2015- புதன்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 78

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

    30-05-2015—சனி

     

    வெளிச்சத்திலே இருள் ஒளிந்திருப்பதுபோல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது.

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    பயிற்சி—
    1) தெய்வ நிலையைப் பற்றிக் கூறுவதற்கு ஏன் ‘வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பதை’ உவமானம் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 77

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    29-05-2015—வெள்ளி

     

    நம்பிக்கை என்பது பூஜ்ஜியம் மாதிரி. அது தனித்து இருந்தால் பயன் இல்லை. உழைப்பு என்ற ஒன்றுடன் சேர்ந்து இருந்தால் அதன் மதிப்பே எல்லாவற்றையும் விட உயர்வானது.

    …..டெஸ்கார்ட்ஸ்

    பயிற்சி—
    1) திருவள்ளுவர் முயற்சி பற்றி கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்