March 2016

Monthly Archives

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 3/?

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    FFC – 170

    09-03-2016—புதன்

     FFC-170-மகரிஷி படம்-அறத்தின் மாண்புணர்ந்து caption

    சென்ற இரு அறிவிற்கு விருந்தில், உலகநல வாழ்த்துப்பாவில் உள்ள எட்டு வாழ்த்துக்களில் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து–மந்திரம் பற்றி சிந்தித்து வருகிறோம். மந்திரங்களின்(மந்திரம்—வாழ்த்து) பொருள் தெரிந்து உச்சரிப்பதில் விசேஷ பலன் உண்டு என்பதால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது பற்றி ஆழ்ந்தும், விரிந்தும் சிந்தித்து வருகிறோம். மூன்றாவது நாளாக இன்றும் அதே பொருள் பற்றி சிந்திக்க ஆர்வத்துடன் கூடியிருக்கிறோம். இன்று,

    1.  மனித இன பரிணாமத்தில் எப்போது அறம் தோன்றிற்று,

    2.  பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்பது என்ன,

    3. எவ்வாறு அது பண்பாட்டை உயர்த்தும் என்பது பற்றியும்,

    4. வேறு அறிஞர்கள் இது பற்றி என்ன கூறியிருக்கிறார்கள், எவ்வாறு கூறியிருக்கின்றனர்,

    5. அது எவ்வாறு 20ஆம் நூற்றாண்டில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற புனிதச் சொற்றொடராக மலர்ந்துள்ளது

    என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    ஆழ்ந்த விரிந்த சிந்தனையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில், மனிதஇன பரிணாமத்தைப்பற்றி சிந்தித்தபோது கிடைத்த மிக முக்கியமான கண்டுபிடிப்பாகிய ‘அறம்’ என்ன என்பதும் ஒன்றாகும். அந்த கண்டுபிடிப்பை தெரிவிப்பதற்கு சரியான வழி, பாடல் என்பதால் ‘அறத்தின் தோற்றம்’ என்கின்ற தலைப்பினைக் கொடுத்து ஒரு கவியினை 20-12-1959 அன்று அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-169-6-3-16பகுத்துணர்வில் அறத்தின் தோற்றம்

    இப்பாடலை 48 வயதில் இயற்றியுள்ளார். 35 வயதில் இறைவுஉணர்வில் தெளிவடைந்திருக்கிறார். ஈசன் மீது கொண்ட ஆசை நிறை வேறிவிட்டது. வேறு சில அருளாளர்கள் ஈசன் மீது கொண்ட ஆசையிலேயே தொடர்ந்து திளைத்திருப்பது போன்றில்லாமல், திருமூலத் தெய்வத்தை மானசீகக் குருவாக ஏற்று தன்னை அறியும் கலையில் நிறைவடைந்தவர் மகரிஷி அவர்கள். மேலும், அதனை சமுதாயத்திற்கு கற்றுத் தரும் விருப்பம் அவரிடம் இருந்ததால், அறிவுத் தொண்டிலும் நிறைவடைய, சிறக்க,

    ‘ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’

    என்கின்ற திருமூலரின் எண்ணத்தின் ஊடுருவலால், மகரிஷி அவர்கள் உலக நல விரும்பியாக இருந்ததாலும், அதற்கேற்றபடி அறிவுத் தொண்டில் தன்னை உலக நலத் தொண்டராக அர்பணித்துக் கொண்டார். எனவே தான் மகரிஷி அவர்கள் இறை உணர்விலும் மற்றும் சமுதாயத் தொண்டிலும் நிறைவு பெற்றார். ஒரு முறை மகரிஷி அவர்கள் கூறியதாவது— ‘ஒரு சிலர் இறை உணர்விலேயே நிறைவு பெறுகிறார்கள். வேறு சிலர் தொண்டினால் நிறைவு பெறுகிறார்கள். ஆனால் நானோ இறைஉணர்வு, தொண்டு இரண்டிலும் சமமாக நிறைவு பெற்றேன்’ என்றார். அறிவுத் தொண்டில் அவருக்கு இருந்த ஈர்ப்பினாலே அவர் ஆழ்ந்து விரிந்த அற்புதத்திலும் அற்புதமான சிந்தனையாளராக திகழ்ந்தவர்.

         எனவே 35 வயதில் இறைவுணர்வில் தெளிவடைந்தாலும் இவ்வுலகம் உய்வதற்கான வழிவகைகளை தொடர்ந்து ஆராய்ந்து வந்தார். அதில் ஒன்று தான் இறையைப்பற்றிய தெளிவாக விளக்கம் இவ்வுலகிற்கு அளிக்க வேண்டும் என்பது. எனவே அவர் கடைசி சுவாசம் வரையில் சிந்தனை மூச்சையும் நிறுத்த வில்லை. மகா சமாதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரும், ‘இறையின் தன்மாற்ற சரித்திரம் என்கின்ற ஒரு நூலை இயற்றிவிட்டுத் தான் விடை பெற்றார்.

        உயிரினங்களிலேயே மிக மிகச் சிறந்தது மனித இனம். மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் தன்னை வேறுபடுத்தி சிறப்புறுவதற்கு காரணம் உள்ளதால்தான், மனிதன் தன்னை விலங்கினத்திலிருந்து வேறுபடுத்திக் காண்கிறான்.

         மற்ற உயிரினங்களுக்கு தன் உணர்வு மட்டுமே தெரியும். பிற உயிர்களின் உணர்வு தெரியாது. எப்படி? புலிக்கு மானின் உணர்வு தெரியாது. பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. நரிக்கு முயலின் உணர்வு தெரியாது. ஏன் எனில் அவை விலங்கினங்கள். மேலும் பிற உயிர்களின் உணர்வு தெரிய வந்தால் புலி மானையும், பாம்பு எலியையும், நரி முயலையும் உணவாக்கிக் கொள்ள முடியாது. பின்னர் அவை உணவில்லாமல் எப்படி உயிர் வாழ முடியும்?

    ஆனால் மனிதன் தன்னுணர்வு போன்று அதே அளவில், ஏன் சிலசமயங்களில் கூடுதலாகவும் பிற உயிர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பிறஉயிர்படும் துன்பங்களை, தான் அனுபவிப்பதுபோல் உணரக்கூடியத் தன்மை ஆறாம் அறிவிற்கு உண்டு. ஆனால் ஆறாம் அறிவின் இந்த நிலை ஆதிமனிதர்கள் தோன்றியதுமே அவர்களுக்கு தோன்றவில்லை. ஆறாம் அறிவின் இந்த நிலை மனிதஇன பரிணாமத்தில் வருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும். எனவே அவ்வாறு இருந்த நிலையில் ஆறாம் அறிவு பிறஉயிர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நிலையை எந்த சம்பவத்தால் எத்தினம் ஏற்பட்டது என்பதனையே இப்பாடல் வரிகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    அறத்தின் தோற்றம் என்கின்ற பாடலுக்குள் ஆழ்ந்து செல்வோம். அப்பாடலிலுள்ள வரிகளைக் கவனிக்கவும். மகரிஷி அவர்களின் சிந்தனை அனுபவத்தை உள்ளது உள்ளவாறு அப்படியே பிரதிபலிக்கின்றது. மகரிஷி அவர்களின் மனக்கண்களில் அறம் தோன்றிய காட்சி தோன்றியதுபோல், நமக்கும் அவ்வாறே மனக்கண்களில் தோன்றுமாறு படம் பிடித்துக் காட்டுகின்றன பாடல் வரிகள்.

    பாடல் நான்கு வரிகளாக இருந்தாலும் அவை தெரிவிக்கும் ஐந்து மாபெரும் உண்மைகள் மனிதகுலம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டியவைகளாக உள்ளன.

    அவ்வுண்மைகளை விளக்க வரிகள் நாற்பதோ, ஐம்பதோ போதா. நானூறோ அல்லது ஐநூறு வரிகளும் தேவைப்படும். ஏனெனில் பலநாள் சிந்தித்து கண்டுபிடித்த உண்மைகளை தெரிவிக்க எளிய சுருக்கமான வழிதான் அருட்பாடல்(condensed form of thoughts is poem) என்பது. எனவே அருட்பாடலுக்கு விளக்கம் அளிப்பதென்றால் அதிக வரிகள் தேவைப்படுகின்றன. பாடல் வரிகள் தெரிவிக்கும் உண்மைகள் என்னென்ன?

    1) அறம் என்ன என்பதற்கும் விடையும்,

    2) மதம் தோன்றியதற்கான காரணம்,

    3) ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சுத்த அத்வைத விஞ்ஞானத்தை அன்றே திருமூலத் தெய்வம் கூறியிருந்தாலும், மதம் ஏன் பலவாகியதற்கான காரணம்,

    4) மதங்கள் பலவானாலும் எல்லா மதங்களின் நோக்கமும் ஒன்றுதான் எனவும்,

    5) அது தான் அறம் என்கின்ற விளக்கமும் அறியப்படுகின்றன.

        நீண்ட நாள் மனித இன பரிணாமத்தை ஆராய்ந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். மனித இன பரிணாமத்தை ஆராய்ந்த போது இயற்கையால்/.இறையால் அவருக்கு விளக்கப்பட்ட விளக்கங்களே அவை. ஆங்காங்கே ஆதிமனிதர்கள் தோன்றி இருப்பார்கள். முதன் முதலில் விலங்கினத்திலிருந்து வந்த ஆதிமனிதர்களிடம் விலங்கினப்பண்பேதான் முழுவதுமாக இருந்திருக்கும். நாள் செல்லச்செல்ல அறிவு வளர வளர, மனிதப்பண்பு வெளிப்பட ஆரம்பிக்கும்போதுதான் ‘பிறர் உணர்வை அறிய ஆரம்பித்திருப்பான் ஆதிமனிதன். ஆரம்பித்ததோடு இல்லாமல் அந்த துன்பத்தின் தன்மையையும், அளவினையும் தனது மனதால் யூகித்து உணர்ந்திருப்பான்.

    அப்போது ஏற்பட்ட மனநிலைதான் இரக்கம் என்பது. இரக்கம் ஏற்பட்டதோடு, பிற மனிதன் படும் துன்பத்தைப் போக்குவதற்கு, கைகள் இருந்ததால், கைகளின் துணையுடன் உதவியிருப்பான். எனவே இந்த இரக்கத்திற்கு வேறு பெயர் கருணை எனலாம். உலகில் எங்கோ ஒருமனிதனுக்கு இரக்கம் ஏற்பட்டு உதவி செய்த முதல் நிகழ்வு அறிவில், சிந்தனையில் ஏற்பட்டதனை சிறந்த திருப்பம் என்கிறார் அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதுதான் அறம் என்றாயிற்று என்கிறார். இங்கே நாம் முதலில் ரசிக்க வேண்டியது ‘முதல் நாள்’ என்பது. மனிதகுலம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகின்றது. அதில் ஒரு நாள் இரக்கப்பட்டு உதவி செய்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

         அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, ஆராயும் திறனும், அதன் மூலம் கண்டுபிடித்த உண்மைகளை எளிமையான வரிகளில் அவர் கவிகளாக படைக்கும் கவித்துவம் பெற்றதனாலும் நமக்கன்றோ பயன்!. அவருக்கு இயற்கை/இறை அறிவித்த எதனையும் விட்டுவைக்காமல் 1800க்கும்மேல் கவிகளாகவும், விரிவாக உரைநடை வடிவில் நூல்களையும் அருளியுள்ளார். இது இயற்கையால்/இறையால் திட்டமிட்டு சமுதாயத்தை விலங்கினத்திலிருந்து மனித நேயத்திற்கு திருப்புவதற்கு எடுத்த முயற்சியாகும்.

    அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய சொற்கள் ‘சிறந்த திருப்பம்’ என்பது. திருப்பம் என்று மட்டும் சொல்லவில்லை நம் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள். ‘சிறந்த’ என்கின்ற அடைமொழியினைச் சேர்த்துக் கொள்கிறார். காரணம் என்ன? இந்தக் காரணத்தை அறிந்துகொள்வது நமக்குச் சிறப்பு.

        ஐந்து புலன்களின் வாயிலாக அறிந்து கொண்டிருந்த ஐந்தறிவு விலங்கினமே சடுதி மாற்றத்தால் ஆறறிவுடைய சீவனாக மாற்றம் பெற்றுள்ளது. உணவிற்காக ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்னும் அன்பும் கருணையுமிலா(அன்பும் கருணையும் இல்லா தன்மை (ஐந்தறிவின் நிலை.) இயல்புடைய விலங்கினம்தான் சடுதிமாற்றத்தால் மனிதனாக மாற்றம் பெற்றுள்ளது. காரணமில்லாமலா இயற்கையோ/இறையோ எதனையாவது செய்யும்? மனிதனாக தன்மாற்றம் அடைந்தற்கான காரணம் என்ன?

        ஐவகை பிரபஞ்ச நிகழ்ச்சிகளை அறிவதற்காக ஐந்தறிவு வரை உயிரினங்களாக தன்மாற்றம் அடைந்த பிறகு மற்றொரு சீவ இனமான மனிதனாக தன்மாற்றம் அடைந்ததற்குக் காரணம் ஐவகை நிகழ்ச்சிகள் ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இதற்கெல்லாம் மூலம் என்ன என்று அறிவதற்காகவேதான். இதனைத்தான் இப்போது நாம் மனிதப்பிறவியின் நோக்கம் என்கிறோம்.

    ஐந்தறிவு வரை, சீவ இனங்கள் விலங்கினங்களாகவே வாழ்கின்றன. ஐந்தறிவு சீவ இனங்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் சென்றபிறகு, இயற்கை/இறை தன்னை அறிவதற்காக ஆறாம் அறிவு சீவ இனமாக தன்மாற்றம் அடைந்துள்ளது. ஆதிமனிதனின் தோற்றத்திற்கு பிறகு பல லட்சம் ஆண்டுகள் சென்ற பிறகும், விலங்கினத்தன்மையுடனே வாழ்ந்து வந்திருந்த ஆறாம் அறிவு சீவ இனம். ஆறாம் அறிவு சீவன் மனிதன் என்பதால், அது மனிதத்தை வெளிபடுத்தி ஆக வேண்டும். மேலும் இயற்கை/இறை தன்னை உணர்வதற்காகவே ஆறாம் சீவ இனமாக தன்மாற்றம் அடைந்துள்ளதால், அச் சீவ இனம் இயற்கையின்/இறையின் தன்மையான அன்பும் கருணையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. எனவே விலங்கினத்தன்மையோடு வாழ்ந்துவந்த மனித இனம், திடீரென்று, ஒரு நாள், பிறர் படும் துன்பத்தை அறிந்து, மனம் இரங்கி உதவி செய்ததை சிறந்த திருப்பம் என்கிறார் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இந்த இரக்கம் தான் மனிதனை விலங்கினத்திலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. பிறஉயிர் படும் சுக துக்க உணர்வினை மனிதனால் மட்டுமே உணர முடியம். இந்த நிகழ்வு மனித இன பரிணாமத்தில் ஒரு நாள் ஏற்பட்டதை சிறந்த திருப்பம் என்கிறார். அதுவரை விலங்கினமாகவே வாழ்ந்து வந்த மனிதன் ஒரு நாள் இரக்கம் கொண்டு உதவி செய்தது திருப்பம் தானே! அதுவும் அது சிறந்த திருப்பம்.

    விலங்கினத்திலிருந்து வந்த மனித இனம் வந்திருந்தாலும், தொடர்ந்து விலங்கினங்கள்போல் வாழமுடியாது. மனித குலத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு துன்பம் அளிக்காத அன்பு நிலையும், பிறர் படும் துன்பத்தைப் போக்கும் இரக்க குணமும்-கருணையும் மிக மிக அவசியம்.  இதுவே மகரிஷி அவர்கள்  இயற்றிக் கொடுத்துள்ள இரண்டொழுக்க சங்கல்பாமாகும். இந்நிலை மனிதகுலத்தில் மலர்வதற்கு என்ன வழி? ஒருநாள் ஏற்பட்ட சிறந்த திருப்பம் தொடர்ந்து, இயல்பாகி, மனிதகுலத்தில் மனித நேயமாக மலர வேண்டும். அதற்கு இயற்கையின்/இறையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மனிதன் இறைஉணர்வு பெறவேண்டும். இறைஉணர்வு பெறுவது என்பது விலங்கினத் தன்மை முற்றிலுமாக நீங்கும்போதுதான் சாத்தியம்.

         மனிதகுலம் பண்பின் உச்சத்தில் வாழ்வதற்கு அறஉணர்வு அவசியம். அறஉணர்விற்கு இறை உணர்வு அவசியம். பொதுவாக வெளிச்சத்தைக் காண கண்கள் அவசியமாக இருப்பதுபோல், மனிதகுலம் உயர்ந்த பண்பின் வெளிச்சத்தைக்காண்பதற்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றன. அவை ஒன்று இறை உணர்வு. மற்றொன்று அற உணர்வு. மனிதனுக்கு அறஉணர்வும் அவசியம். அதற்கு இறை உணர்வும் அவசியம். இறை உணர்வில்லாமல் அறஉணர்வில்லை. அற உணர்வில்லாமல் இறை உணர்வில்லை. ஒன்றை ஒன்று சார்ந்துதான் உள்ளது. அதனால்தான் அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறை உணர்வு என்று இறை உணர்வை வரையறுக்கிறார்  மனிஇனப்பரிணாமத்தில் என்று அறம் தோன்றியது என அறுதியிட்டு கூறிய மெய்ஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

         பின்னர் அறிவில் சிறந்த அறிஞர்கள் ‘இரக்கம் கொண்டு பிறர் துன்பத்தைப் போக்கும் குணத்தை’ மக்களிடம் பரவிட நெறிகளை போதனை செய்தார்கள். பின்னர் அந்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தவர்கள், அவற்றிற்கு அந்நெறிகளை போதித்தவரின் பெயரை வைத்து இன்னார் மதம் என அழைக்கலாயினர். இவ்வாறாக ஆங்காங்கே அறிஞர்கள் தோன்றி மக்களிடம் அன்பு நெறிகளை போதித்து, அவற்றை ஆங்காங்கே மக்கள் பின்பற்றி வந்த போது மதம் பலவானது என்கிறார் மகரிஷி அவர்கள்.

         அறம் தோன்றியதைக் கூறும் பாடலை மீண்டும் மீண்டும் வாசித்து மனனம் செய்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால் மகரிஷி அவர்களின் இந்த கண்டுபிடிப்பின் அலைநிலைக்கு சிந்தனையில் உயரலாம். ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்றுதானே கூறுகிறார்.

         இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். இன்று அறத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொண்டோம். அறம் ஓங்கியிருத்தலே மனிதபண்பாடாகும். மனிதஇன பரிணாமத்தில் என்றோ ஒரு நாள் ஏற்பட்ட சிறந்த திருப்பமான அறம், தொடர்ந்து செழிப்புடன் வளராமல் இருப்பதால், மனிதப்பண்பாடு உயர்ந்து சிறப்பது என்பது பகுத்துணர்வில் தொகுத்துணர்வால்தான் முடியும் என்பதால் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பது என்ன என்று அடுத்த அறிவிற்கு விருந்தில்(13-03-2016—ஞாயிறு) அறிய இருக்கிறோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-157

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    07-03-2016 – திங்கள்

    அறிவை மூன்றாகப் பிரிக்கிறார் மகரிஷி அவர்கள்.   அவை என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 2/?

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    FFC – 169

    06-03-2016—ஞாயிறு

    FFC-169-6-3-16-பகுத்துணர்வில்

    சென்ற அறிவிற்கு விருந்தில் திருவேதாத்திரியத்தின் இறை இயலின் சாராம்சமான ‘பகுத்துணர்வு’, ‘தொகுத்துணர்வு’ ஆகிய இரு சொற்களுக்கான பொருளை வார்த்தை அளவில் அறிந்தோம். இன்று ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதன் உள்ளார்ந்த பொருளையும், இறை இயலின் சாராம்சம் என்று ஏன் சொல்கிறோம் என அறிய இருக்கிறோம். மேலும்
    இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாடு எது என்பதனையும்,

    அறம் எப்போது மனிதஇன பரிணாமத்தில் தோன்றியது என்றும்,

    எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாட்டினை உயர்த்தும் என்றும்,

    அறவாழ்வினை நாடுவதே நம் கடமையின் சிறப்பாக அமைவது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    இயற்கைக்கும்/இறைக்கும் உகந்த பண்பாடு என்றால் என்ன?

    இயற்கைதான்/மனிதனாக வந்துள்ளதனை அறிவோம். அப்படியானால் அதற்கு இணக்கமாக, ஒத்த முறையில் ஒழுக்கப்பழக்க வழக்கங்களையும், குணத்தையும் பெற்றிருத்தலே மனிதப்பண்பாடு எனப்படுகின்றது.

    இயற்கை/இறைநீதி தவறாது மதித்து நடத்தலே அதற்கு ஒத்த முறையில் வாழ்வதாகும். இயற்கை/இறைநீதி தவறாது மதித்து நடத்தல் என்பது இயலாதது அல்ல. நீதி என்றால் அதனை மதித்து நடக்கத்தானே வேண்டும்?! நீதியினை மதித்து நடக்கும்போது, விளைவு, தனக்கும், தன்னால் பிறர்க்கும் துன்பம் எப்போதும் வராது. நன்மையே வரும். இவ்வாறாக ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் உலகில் அமைதியே நிலவும் அன்றோ! இயற்கை/இறைநீதி தவறாது மதித்து செயல்கள் ஆற்றினால், வருகின்ற விளைவு இன்பமே என்கின்றபோது, அவ்விளைவுக்குரிய அச்செயலை என்னவென்று சொல்வது? ஒழுக்கம் என்றேதான் சொல்ல முடியும். வேறு எந்த சொல்லால் அச்செயலை அழைப்பது? ஆகவே இயற்கை/இறை நீதி மதித்து நடத்தல் என்பது ஒழுக்கம் கடைபிடித்தலேதான். இந்த ஒழுக்கப்பழக்கமாகிய பண்பாடுதான் உயரவேண்டும் மனிதகுலத்தில் என்று வாழ்த்தச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

    பண்பாடு உயரட்டும் என வாழ்த்தச் சொல்கிறார் என்பதால் பண்பாடு மனித குலத்தில் இப்போது குறைந்த நிலையில்தான் உள்ளது என்றுதானே பொருளாகின்றது? பண்பு என்றால் குணம் என்று பொருள். பண்பாடு உயர வேண்டும் என்றால் மனித குலம் குணத்தில் உயர வேண்டும் என்பதாகின்றது. ஆதி மனிதன் தோன்றி பலலட்சம் ஆண்டுகள் ஆகியும், நாகரீகம் வளர்ந்த பிறகும், மனித குலம் குணத்திலும், பண்பிலும் இன்னமும் உயர வேண்டும் என்கின்ற நிலை இருப்பதற்குக் காரணம் என்ன?

    எதற்காக இயற்கை/இறை ஆறாம் அறிவுடைய மனித இனமாக தன்மாற்றம் அடைந்தது? இன்றுள்ள நிலையில் மனிதகுலம் அவதியுறுவதற்காகவா இயற்கை/இறை மனிதனாக வந்துள்ளது? இயற்கையின்/இறையின் திறமை இவ்வளவுதானா?

    இன்று மனிதகுல நிலை என்ன என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஒழுங்கிற்கு ஈனத்தை விளைவிக்கின்ற ஒழுங்கீனம், சண்டை, சச்சரவு, பிணக்கு, போர், ஒருவன் மற்றொருவனுக்கு தீங்கிழைத்தல், பொய், சூது, வஞ்சம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற மனிதப்பண்பிற்கு ஒவ்வாத செயல்கள்தான் நடந்து கொண்டு வருகின்றன. இந்நிலைக்குக் காரணம் இயற்கை எதற்காக ஆறாம் அறிவுடைய மனிதனாக தன்மாற்றம் அடைந்து வந்ததோ, அதனை அறியாமல், அதற்கு முரணாக வாழ்ந்து வருவதேயாகும்.

    எதற்காக இயற்கை/இறை மனிதனாக தன்மாற்றம் அடைந்து வந்தது என்று விஞ்ஞானம் எடுத்துச் சொல்லவில்லை. இருப்பினும் மெய்ஞ்ஞானம் சொன்னாலும் அதற்கு மனித குலம் ஆா்வத்தோடு முழுவதுமாக கேட்டுக்கொள்ளவில்லை. அப்படியே கேட்டுக்கொண்டாலும் அதனை வாழ்க்கையில் முழுவதுமாக சாதனை செய்வதில்லை.

    அறநூல்கள் கூறுவதெல்லாம் ஏட்டினிலே இருப்பதற்காகவும், அதனை தேர்விற்காக பாடல்களை மனனம் செய்து மதிப்பெண் வாங்குவதற்காகவும் தானே உள்ளன! அந்த அருளாளர்/அறிஞர் அதனைக் கூறினார், இந்த அருளாளர்/அறிஞர் இதனைக் கூறினார் என்று அருளாளர்களை/அறிஞர்களை மறக்காமல் இருப்பதற்காகவே மட்டும் தான் உள்ளது. அருளாளர்களை/அறிஞர்களை மறக்காமல் இருப்பது நல்லதுதான். அது வரவேற்கத்தக்கது.. ஆனால் அருளாளர்களின்/அறிஞர்களின் அருட்குணத்தையும், அருட்செயலையும் நினைந்து, நினைந்து, மதித்து, மதித்து, போற்றி, நாமும் அவர்கள் கூறும் பண்பாட்டு நிலைக்கு உயர்வதற்கு முயற்சி செய்வதில்லை.

    திருவள்ளுர் ஏன் 133 அதிகாரங்களை இயற்ற வேண்டும்? மனித குலத்திற்கு வேண்டிய அறிவுரைகளைக் கூறுவதற்கு அத்தனை அதிகாரங்கள் தேவைப்பட்டன. ஒன்றல்ல, , பத்தல்ல, நூறல்ல—- 133 அதிகாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன திருவள்ளுவருக்கு. மனிதகுலத்திற்கு வேண்டிய அறிவுரைகளை சொல்வதற்கு. இதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டியுள்ளதா எனில் அது திருவள்ளுவரைத்தான் கேட்க வேண்டும். இப்போது அதே திருவள்ளுவர் மீண்டும் புவிக்கு வந்தால் என்ன நினைப்பாரோ தெரியவில்லை. 2047 ஆண்டுகள் சென்றும் ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, நாணுடைமை போன்று பத்து உடைமைகளை உங்களுடைய செல்வமாக்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியும், அச்செல்வங்களை புறக்கணித்துவிட்டு அறிவின் ஏழ்மையில் அல்லவா வாழ்கின்ற நிலை நிலவுகின்றது.

    திருவள்ளுவர் கூறிய ஒழுக்கமும், பண்பும், அறிவும் உயர்ந்துள்ளதா எனில் இல்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

    திருவள்ளுவருக்குப்பிறகு எத்தனையோ அருளாளர்கள் தோன்றி அறநெறிகளைப் போதித்திருந்தாலும் பண்பு உயர்ந்துள்ளதா எனில் இல்லை என்றுதானே சொல்ல வேண்டியுள்ளது, பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற வாழ்த்துக்கள் இந்த மனிதகுலத்திற்கு தேவைப்படுகின்றது என்பதால்தான் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மந்திரமே உருவாகியுள்ளது. ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டினை உயர்த்த முடியும் என்பதனை அறிந்து கொள்வதால், அம்மந்திர உச்சாடனத்தின் திணிவு அதிகமாகி, வெற்றியினை விரைவில் பெறமுடியும்.

    யார் ஒருவரும் தனக்குத் தானே துன்பங்களை இழைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். இருந்தாலும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும் தனக்குத் தானே துன்பங்கள் இழைத்துக் கொள்வதும் நடைமுறையில் பெரும்பாலும் காணப்படுகின்றது. இது ஒருபக்கம் இருப்பினும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு இழைக்கும் தீமைகளும் பெருகிக் கொண்டு வருகின்றன. அவை மனிதனின் செயல்பாடுகளான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் வழியாகவும் நடந்தேறி வருகின்றன. இது குடும்பத்திலேகூட காணமுடிகின்றது.

    எனவே குடும்பத்தை எவ்வாறு நடத்தி குடும்பஅமைதி காண்பதனைக் கற்றுக்கொள்ளவதற்காக குடும்ப அமைதி என்கின்ற பாடத்தை வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். அப்பாடத்தில் எதிர்பார்த்தல் இன்மை, ஒருவர் உள்ளம் புரிந்து மற்றவர் நடந்து கொள்ளுதல் ஆகிய தெய்வீகப் பண்புகளான ஒத்துப்போதல், பொறுமை, தியாகம்(adjustment, tolerance, sacrifice) ஆகியவற்றைப்பற்றிய விளக்கங்களை எடுத்துக்கூறி அவற்றை வளர்த்துக் கொண்டு கர்மயோகிகளாக வாழ்ந்து குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகவே திகழும்படி வாழ்த்துகிறார்.

    அவர் அருளியுள்ள திருமண வாழ்த்துப்பாவில்
    அகமகிழ் அரிய காட்சி,
    ஒத்த உயர்வு,
    அன்பளிப்பு,
    பண்புப் பயிற்சி,
    நல்லுரை,
    வாழ்த்து ஆகிய ஆறு தலைப்புகளில் கவிகள் அருளியுள்ளார்.

    அவற்றைக் கூர்ந்து நோக்கினால் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என அறியலாம். திருமண வாழ்த்துப்பாடலை வாசித்துப் பாருங்கள். குறிப்பாக திருமணம் ஆக இருப்பவர்கள் கவனியுங்கள். அந்தப் பாடலை எந்த அளவிற்கு ஆழ்ந்து விரிந்து வாசிக்கிறீர்களோ, ஆராய்ச்சி செய்து, மகரிஷி அவர்களின் புனித எண்ணத்துடன் உடன்பாடு ஏற்படுகின்றபோது, மகரிஷி அவர்களிடமிருந்து அது வாழ்த்தாக அமைந்து நீங்கள் எல்லாவளங்களையும் பெற்று ஞானக்குழந்தைக்கு காரணமான பொறுப்புடைய அருட்பெற்ளோர்களாவீர்கள். மகரிஷி எண்ணங்களை ஆராய்ந்து அவற்றை உங்களுடையதாக ஆக்கிக் கொள்ளும் போது அது உங்களுடைய விருப்பமாகின்றது. அதுபோல் உங்கள் திருமணவாழ்க்கை அமையும், ஏனெனில் ‘எதனை நீங்கள் விரும்புகிறீர்களோ நீங்கள் அதுவாக ஆவீர்கள்’ என சுவாமி விவேகானந்தர் அருளுரை உபநிடத விளக்கவுரை கூறியிருக்கிறார்கள். அருளுரை விஞ்ஞான அடிப்படியைில் உள்ளது. இயல்பூக்க நியதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது என்ன ஆன்மீகக் கருத்தா? இல்லையே!! இயல்பூக்க நியதி என்பது விஞ்ஞானம்தானே!?

    ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு இழைக்கும் தீமைகளும் பெருகிக் கொண்டு வருவதற்கான காரணமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதாவது:–

    1) மனிதன் மனிதனின் மதிப்பை உணராததேதான் என்கிறார்.
    அவரின் இந்த கண்டுபிடிப்பினை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

    2) ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மாற்றானாகக் கருதும்போதுதான்,
    அவனுக்கு துன்பம் இழைக்க மனம் வருகின்றது.

    3) அடுத்ததாக மனிதனுக்கே இருக்க வேண்டிய மற்ற உயிர் படும் துக்கத்தை தன் உயிர் அனுபவிப்பதுபோல் உணராமை ஏற்படுகின்றது. விலங்கினத்திற்கு மற்ற உயிர் படும் துக்கம் தன் உயிர் அனுபவிப்பது போல் உணரமுடியாது. எவ்வாறு எனில் மானைத் துரத்தும் புலிக்கு எவ்வாறு மானின் துக்கம் தெரிய முடியும்? தெரிய வந்தால் புலி பசித்திருந்து இறக்க நேரிடும்.

    4) ஆனால் மனிதன் மற்ற உயிர் படும் துன்பத்தை தன் உயிர் அனுபவிப்பதுபோல் உணரமுடியாமை. உணரமுடியாது எனில் மனித குலம் ‘அன்பு-‘கருணை –Love–Compassion’ ஆகிய சொற்களை ஏன் கண்டு பிடித்திருக்க வேண்டும்?

    5) இங்கேதான் மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘விலங்கினப்பண்பு’ என்பதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். விலங்கினத்திலிருந்து கருத்தொடராக மனிதஇனம் வந்துள்ளதால் மனிதனின் கருமையத்திலும் விலங்கினப் பண்பு தொடர்ந்து இன்று வரை வந்துகொண்டே இருக்கின்றது.

    இயற்கையின் மனித இனப்பரிணாமம் ஆதிமனிதனிலிருந்து ஆரம்பித்து இன்று வரை அது தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது. ஆதிமனிதன் தோன்றியதிலிருந்தே அறவுணர்வு தோன்ற ஆரம்பிக்கவில்லை. தோன்றியிருக்கவும் முடியாது. ஏனெனில் ஆதிமனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியவன்.

    எப்படி பிறஉயிரைக் கொன்று உணவாகக் கொள்ளும் விலங்கினத்தில் அறஉணர்வை எதிர்பார்க்க முடியாதோ அது போல் விலங்கினத்திலிருந்து தோன்றிய உடனே ஆதிமனிதர்களிடமும் எவ்வாறு அறஉணர்வை எதிர்பார்க்க முடியும்?

    மனிதனுக்குத்தான் அறஉணர்வு அவசியம். நாகரீகமும் அவசியம். மனிதப்பண்பு(மனித குணம்) என்பதே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட அறம்தானே? அதனால்தான் உலக நல வாழ்த்துப்பாடலில் கடைசி வாழ்த்து மனிதகுலம் அறவாழ்வு வாழ்வதற்காக அமைந்துள்ளது. மேலும் அவ்வாழ்த்தைக் கவனிக்கவும்.

    FFC-168-பகுத்துணர்வில் உல நல வாழ்

    மூன்றாவது மனிதனாக இருந்து கொண்டு உலகை வாழ்த்துகின்றவாறு அந்த சொற்றொடர் அமையவில்லை. அதாவது உலகை வாழ்த்துபவர்கள் தங்களையும் சேர்த்துக் கொண்டுதான் எண்ண அலைகளை பரப்புவதாக அமைந்துள்ளது அவ்வாழ்த்து – ‘நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.’ என்றிருக்கிறது.

    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம் அடுத்த அறிவிற்கு விருந்தில்(09-03-2016 – புதன்) நம் அருட்தந்தை அவர்கள் மனித இன பரிணாமத்தில் அறம் தோன்றியதை கண்டுபிடித்து நமக்கு தெரிவித்துள்ளதை அறிவோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.

    Loading