August 2016

Monthly Archives

  • 218-பிறவிப் பயனை நல்கும்!2/?

    வாழ்க மனித அறிவு                                                            வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்!2/?

    அறிவிற்கு விருந்து—218

                17-08-2016—புதன்

    நம் குருதேவர் ‘பிறவிப்பயன்’  என்ன என்று கூறுகிறார்?

          இயற்கை/இறை கருணையோடு அளித்துள்ள  (சுத்த அத்வைத பொருளில்) மனவளக்கலையின், முதல் வெற்றியாளர், நம் குருதேவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆவார்.  மானுடனாக அவதரித்த பாலகன் வேதாத்திரியை பின்னர் மகரிஷியாக உயர்த்தி அவர் வழியாக சமுதாயத்திற்கு வாழும் கலையாகிய வாழ்வியலை அளித்துள்ளதால், இதற்கு வேதாத்திரியம் என்கின்ற நாமத்தை சூட்டியுள்ளது இயற்கை/இறை.  பின்னர் அதன் சிறப்பையும், மதிப்பையும், பயனையும் உணர்ந்தும், அடைந்தும்  வருகின்றபோது வேதாத்திரியம் என்பது ‘திரு’ என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருவேதாத்திரியம் என அழைக்கலாகின்றது,  திருவேதாத்திரியம் பிறவிப்பயன் எது என்று கூறுகின்றது?

    malare_malare_nee_yaar

         மலர் வழியே மறைபொருள் விளக்கத்தை இருவர் பங்குபெறும் நாடக வடிவில் மலருக்கும் மனிதனுக்கும் நடைபெறும் உரையாடலாக  பன்னிரண்டு சரணங்களில்(stanzas) கூறுகின்றது. வருங்காலத்தில் இந்தப்பாடலை பட்டி தொட்டியிலெல்லாம் குழந்தைகள்  மனனம் செய்து ராகத்தோடு இசைப்பார்கள் என்று திரிகால ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்  கூறியிருக்கிறார்.  எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த  பாடலின் பெருமையினை முதலில் அறிந்துவிட்டு பிறகு பிறவிப்பயனாக,  என்ன கூறப்பட்டுள்ளது என்று அறிவோம்.

      அந்த உரையாடலில்  மனிதன் ‘மலரே நீ யார்?’ என்று ஒரு  சரணத்தில்,   கேட்டது  ஒரு கேள்விதான் என்றாலும், மலர் கூறும் பதில் இதுவரை, இயற்கையின் ஆதிநிலையைப்பற்றி /இறையைப்பற்றி கூறுவது  தத்துவமாக இருந்து வந்ததை, இன்றைய  விஞ்ஞான உலக அறிவின் துணை கொண்டு உண்மையினை ஒன்பது  சரணங்களில்  (9×4=36) முப்பத்தாறு வரிகளில் கண்டுபிடிப்பாகவே எடுத்து இயம்புவதாக உள்ளது. தத்துவம் என்கின்ற நிலைமாறி கண்டுபிடிப்பு என்று ஆன்மீக சாதகர்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலையில் வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் அமைந்துள்ளது

         இப்பாடலில் அறிவிக்கப்பட்டுள்ள இயற்கையின் ஆதிநிலை/இறை பற்றிய கண்டுபிடிப்பினை எடுத்து சொல்லிய பாங்கு  எளிமையாகவும், விரிவாகவும்,  வருங்காலத்தில் குழந்தைகளும் புரிந்து கொண்டு பாடுகின்ற பாடலாகவும் உள்ளது.      பன்னிரண்டு  சரணங்களில், முதல்   சரணத்தில் மனிதன், மலரின் அழகு, வண்ணம், மணம் ஆகியவற்றை ரசித்ததால், பேரின்பமுற்று, தன்நிலையினைக் கூறி மலரைப்பார்த்து ‘நீ யார்?’ எனக் கேட்பது இடம் பெற்றுள்ளது.  மனிதனின் இரண்டு வார்த்தைகளைக் கொண்ட ‘நீ யார்?’ என்கின்ற சிறு கேள்விக்கு விடையான மாபெரும் உண்மை ஒன்பது சரணங்களில் இடம் பெற்றுள்ளது.

         பதினொன்றாவது சரணத்தில், கண்டுபிடிப்புகளிலேயே முதன்மையும், அரியதுமான மலர் கூறிய கண்டுபிடிப்பாகிய மறைபொருள் (mother-source of all inventions so far invented and to be invented in future) வரலாற்று உண்மையினை, தான்  தெளிவாக ஏற்றுக் கொண்டதை(confess) மனிதன் தன் வாய்மொழியின் வாயிலாக நன்றி பெருக்கோடு கூறுவதாக அமைந்துள்ளது.

        இறுதியாக பன்னிரண்டாவது சரணத்தில் மலருக்கும் மனிதனுக்கும் நடந்த உரையாடலில், பிறவிப்பயனை உணர்ந்து விட்டதனையும், மேலும் அப்பயனை  அடைந்து விட்டதாகவே தெரிவிப்பது முத்தாய்ப்பாக உள்ளது  கேள்வி கேட்டு பதிலை அறிந்த மாத்திரத்திலேயே பிறவிப்பயன் அடைந்து விட்டதாக பாடலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக பாடல்களில் கற்பனையும் உண்டு என்பதால் இதுவும்  கற்பனை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.  கேள்வி கேட்ட அந்த மனிதர் ஆன்மீக பயிற்சியாளரா அல்லது இனிமேல் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள இருப்பவரா?  அதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வை இயற்கை/இறை நிகழ்த்தி வைத்ததா? இது நிஜமாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான்.  அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வருவதுதான்.  இனி வரும் காலங்களில் இது எல்லோரிடம் நடக்கவிருப்பது.  தனது தந்தையை (பரமபிதா-இறை-பிதாவிற்கெல்லாம் பிதா) அறிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கப்போகின்றது?  அதற்காகத்தானே இறை மனிதனாகத் தன்மாற்றம் அடைந்துள்ளது. இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சியில்,  ‘தெளிவு’ பெரும் பங்கு வகிக்கின்றது.  இறை-உணர்-ஆன்மீகப்பயிற்சியின் முடிவு இறைஉணர்வு பெறுதல் என்று தமிழில் கூறுவதனை ஆங்கிலத்தில்   ‘Enlightenment’ எனப்படுகின்றது.   ‘Enlightenment’ என்பதற்கு தமிழில் ‘அறிவு ஒளி’ என்று பொருள்.   இன்னும் சற்று விளக்கமாக ஆங்கிலத்தில் சொல்வதானால்- Enlightenment is the advanced state of mind. ‘அறிவு ஒளி – அறிவொளி’ என்பதற்கான பொருள் என்ன என்று எடுத்துக் கொள்ள வேண்டும்? அறிவு ஒளியைப் பெறுகின்றபோது  அறிவு ஒளி-அறிவொளி எனப்படுகின்றது. ‘தெளிவு’ என்பதே இருட்டில் இருக்கின்ற அறிவிற்கு அதாவது அறியாமையில் இருக்கும் அறிவிற்கு ஒளியைச் சேர்ப்பது.       

          பன்னிரண்டாவது சரணம்தான் மனிதப்பிறவியின் பயன் என்ன என்று கூறுவதால் அதனை  இங்கே நினைவு கூர்வோம்.

         பன்னிரண்டாவது சரணத்தின் உட்பொருள்:

     12.  “ஆறறிவாக வாழ் மனிதர்

        அதற்கு ஏற்ப பொருத்தமுள

        பேறு உண்மைப் பொருளுணர்தல்

        பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.”

                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

      முதலில் இந்த சரணத்தின் அருமையை உணர்ந்து கொள்வோம்.  பிறகு சரணத்தின் பொருளுக்குள் செல்வோம். இந்த கடைசி சரணத்தில்,  மலரைப்பார்த்து ‘நீ யார்?’ எனக்கேட்டு, அதற்கு பதிலாக, மலர்கூறுவதனைக் கேட்ட மாத்திரத்திலேயே தெளிவடைந்து பிறவிப்பயன் அடைந்து விட்டதாக மனிதன் கூறுவதாக அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வரிகளை அமைத்துள்ளார்.  இவ்வாறாக வரிகள் இயற்கை/இறை(சுத்த அத்வைதத்தில்) அமைத்ததன் காரணம் அல்லது மகரிஷி அவர்கள்(துவைதத்தில்) எழுதியதன் காரணம்,  இருவருமே(இறைமற்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள்) அவ்வாறு கனவு காண்கின்றனர் என்றும் வைத்துக் கொள்ளலாம்.  அல்லது திரிகால ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள், இறையைப்பற்றிய புரிதல்  அவ்வளவு எளிமையாகிவிடும் என்பது நிதர்சனமாகத் தெரிவதால் அவ்வாறு வரிகளை அமைத்துள்ளனர் இருவருமே.  இந்த சரணத்தின் அருமையை உணர்ந்து கொண்டோம்.

       சரணத்தின் பொருள் என்ன? வரிகள் எளிமையாக, தானே பொருள் கூறக்கூடியதாக  உள்ளன.  (It is self explanatory.) இருந்தாலும் அருட்பாடல்களில் சொல்ல வந்த  உண்மை சுருக்கித்தானே சொல்லப்படும் (In condensed form).  எனவே பாடலுக்கானப்  பொருளை சிந்தித்து அறிவோம்.  நான்கு வரிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக பொருளை ஆராய்வோம்.

    1)   ஆறறிவாக வாழ் மனிதர்.

    2)   அதற்கு ஏற்ப பொருத்தமுள.

    3)   பேறு உண்மைப் பொருளுணர்தல்.

    4)   பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.

    ஆறறிவாக வாழ் மனிதர்:

         உயிரினங்கள் அவைகள் உணரும் தன்மைக்கேற்ப/எண்ணிக்கைக்கேற்ப ஒன்றிலிருந்து ஆறு வகையாக மனிதனால் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரித்த மனிதனுக்கு ஆறு வகையான உணர்வுகளை உணரக்கூடிய ஆற்றல் உள்ளதால் அவனே, அவனை ஆறாம் அறிவுடையவன் மனிதன் என்று வகைப்படுத்திக் கொண்டான்.  ஆனால் விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்து  ஆறாம் அறிவான உயிரினமான மனிதனாக வந்தபோது அந்த ஆறாம் அறிவிற்கான பயன் என்ன என்று இன்னமும் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் அளவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாக உள்ளது என்றே சொல்லலாம். 

        ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை உயிரினங்களாகத் தன்மாற்றம் அடைந்து வந்தபோது ஒன்றிலிருந்து – இரண்டிற்கு, இரண்டிலிருந்து – மூன்றிற்கு இவ்வாறாக ஐந்தாக வரும்  வரை ஒவ்வொரு உணர்வுகளாக கூடிக் கொண்டே வந்தன.   ஆனால் ஆறாம் அறிவாக வந்த மனிதகுலத்திற்கு என்ன பிரத்யேக உணர்வு கூடி இருக்க வேண்டும் அல்லது இயற்கை/இறை என்ன உணர்விற்காக மனிதனாக தன்மாற்றம் அடைந்துள்ளது  என்பது  1911 வரை வரை சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால் இந்நிலையினை மாற்றி வருகின்றது வேதாத்திரியம். அது வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் மிகச் சிறந்ததாகும்.

         பாடலின் ‘ஆறறிவாக வாழ் மனிதர்’ என்கின்ற பாடல் வரியில்  ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதற்கினங்க மனிதன் ஆறறிவுடையவன் என்கின்ற நினைவை நினைவூட்டி, ‘எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம் என்கின்ற வைரவரியின் ஆதங்கமும் தெரிய வருகின்றது,  

    ‘அதற்கு ஏற்ப பொருத்தமுள’ –

     எதற்கு ஏற்ப பொருத்தமுள?   ஆறாம் அறிவிற்கு ஏற்ப பொருத்தமாக என்று பொருள்.   பொருத்தமாக இருந்து என்ன செய்யவேண்டும்?  அதனை மூன்றாவது வரியில் காணலாம்.   ‘பொருத்தம்’ என்று சொல்வதால் ஆதிமனிதன் தோன்றி இன்று வரை பல லட்சம் ஆண்டுகள் ஆகியும்,  ஆறாம் அறிவிற்கு பொருத்தமாக ஆறாம் அறிவு மனிதனிடம் செயல்படவில்லை என்றுதானே பொருளாகின்றது.   ஆறாம் அறிவிற்கு பொருத்தமாக செயல்படவில்லை எனில் எந்த நிலையில் ஆறாம் அறிவு மனிதனிடம் செயல்படுகின்றது?  விலங்கினத்திலிருந்து மனிதன் வந்துள்ளதால், மனிதஇனத்தில் உருவமாற்றத்திற்கேற்ப குணங்கள் மறைந்து குறைகள் ஏதேனும் காணப்பட்டால் அப்போது, காரணத்தை அறிந்து தீர்வு காண, மனித இனத்திற்கு  முந்தைய இனமான விலங்கினத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துதானே தீர்வினைக் காண்பது சரியாக இருக்கும்.  மனிதஇனத்தில் உருவமாற்றத்திற்கேற்ப குணங்கள் மறைந்து குறைகள் காணப்படுகின்ற நிலையை ஆதங்கத்தோடு இயம்புவதனை மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள பாடலின் வாயிலாக அறிவோம். ஏற்கனவே  இப்பாடல் தெரிந்திருப்பினும், அதனை மீண்டும்  நினைவு படுத்திக் கொள்வோம்.  பாடல்கள் அருட்பாக்கள் என்பதால், பாடல்களை முதல் முறை படிக்கும்போதே உட்பொருள் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மறுமுறை படிக்கும்போது மேலும் உட்பொருளைத் தெரிவிக்கும்.  

       எனவே அப்பாடலை மீண்டும் நினைவு கூர்வோம். மேலும் ஒரே பாடல் வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம். எனவே பாடல்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும்போது எந்த சூழ்நிலையை எடுத்து இயம்புவதற்காக நினைவுபடுத்திக் கொள்ளப்படுகின்றதோ அந்த சூழ்நிலையை/உண்மையினை அறிந்து கொள்வதுதான் முக்கியம். ஒரு பாடலின் உட்பொருளை விளங்கிக்கொள்வதற்கு வேறொரு பாடலைத் தேட வேண்டியுள்ளது. இங்கேயே உள்ளது உதாரணம். ‘மலரே மலரே’ பாடலின் கடைசி சரணத்தில் வரும் இரண்டாவது வரியின் உட்பொருளை அறிவதற்கு வேறொரு பாடலான ‘மனிதருள் உயர்ந்தோர்’ என்கின்ற தலைப்பில் உள்ள பாடலை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

          மனிதருள் உயர்ந்தோர்(3-1-59)

    மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

      மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

    மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

      மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.

                      . . .  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடலை 1951 ஆம் வருடம் இயற்றியுள்ளார்.  அது வரை ஆதிமனிதன் தோன்றி எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தும், அவ்வாறு அப்பாடலை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அப்பாடல் இயற்றி அறுபத்து ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னமும் அப்பாடலை அவசியம் நினைவு கூறப்படுவதாகத்தான் உள்ளது சமுதாயத்தின் நிலை.  பாடல் மனிதருள் யார் உயர்ந்தோர் எனக் கூறுகிறார்.  எனவே அப்படிப்பட்டவர்களே ஆறாம் அறிவிற்கு ஏற்ப பொருத்தமாக வாழ்பவராக உள்ளார்.  முதல் வரியில் இன்னமும் மனித உருவத்தில் தன்மாற்றம் அடைந்திருந்தாலும், இயல்பூக்க நியதியான உருவமாற்றத்திற்கான குணங்கள் மாறவில்லை என்பதனையேத் தெரிவிக்கின்றது.  அப்படியானால் இயற்கையின் ஆதிநிலை/இறையின் திறனான இயல்பூக்க நியதி இதுவரை செயல்பட்டு வந்தது இப்போது மனிதனிடத்தில் செயல்பட முடியவில்லை என பொருள் கொள்ள முடியுமா?  முடியாது.  அப்படியானால் எவ்வாறு பொருள் கொள்வது? 

          ஓர் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.  ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்வோம்.  குழந்தை பிறந்த உடனேவா நடக்கின்றது?! பேசுகின்றது?!! பதினோரு மாதம் கழித்துதான் தத்தித் தத்தி நடக்க ஆரம்பிக்கின்றது. பேச ஆரம்பிக்கும் போது முதலில்  ‘ஒரு வார்த்தை சொல்’ பிறகு  ‘இரண்டு வார்த்தைச் சொல்’ என முயற்சிக்கின்றது. இதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படுகிறது.  எனவே ஒவ்வொரு உயிரினத்தின் தன்மாற்றத்திலும் அததற்குரிய குணங்கள் மலர்ந்து அந்த தன்மாற்றம் முழுமை அடைய அததற்குரியநேரத்தை கடக்க வேண்டியுள்ளது.

    அதேபோன்று மனித இனம் தன்மாற்றத்தில், ஆதிமனிதன் தோன்றி பலலட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தாலும், தன்மாற்றம் சீரடைந்து சிறந்து விளங்குவதற்கான நேரம் இருபதாம் நூற்றாண்டில்தான் இயற்கைக்கு/இறைக்கு சாத்தியமாகியது என்றுதான் இயற்கையின்/இறையின் அம்சமான நாம் எடுத்துக் கொள்ள முடிகின்றது.  

     ஆறறிவாக வாழ் மனிதர்’, ‘அதற்கு ஏற்ப பொருத்தமுள’ என்கின்ற இருவரிகளையும் சேர்த்து படிக்கும்போது  அறிய வருவது யாதெனில், ‘மனிதன் ஆறறிவுடையவனாக இருந்தும், அதற்கு ஏற்ப பொருத்தமாக வாழவில்லை என்பதனை மகரிஷி அவர்கள் தெரிவிக்கின்றார் என்பது தெரிகின்றது.’  அடுத்த வரியில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையும், கடைசி வரியில் அதுவே பிறவிப்பயன் என்பதனை அறிவித்துள்ளார்.  அவற்றை அடுத்த விருந்தில் (21-08-2016-ஞாயிறு) அறிவோம்.

         வாழ்க அறிவுச் செல்வம்                                                  வளர்க அறிவுச் செல்வம்.


  • சிந்திக்க வினாக்கள்–202

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    15-08-2016 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    தூய்மை எனில்    ————–             —————    நீக்கம்.             ——————— அனுபவமாகத்தான் அதை இயற்கை  ஒவ்வொருவருக்கும் அளிக்கும்.
                                                                                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

  • 217-பிறவிப் பயனை நல்கும்! 1/?

    வாழ்க மனித அறிவு                                                            வளர்க மனித அறிவு
    பிறவிப் பயனை நல்கும்!  1/?
    அறிவிற்கு விருந்து—217
                14-08-2016—ஞாயிறு
    வாழ்க வளமுடன்.
    அமைதி வேள்வி

    vv

    ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!!

    gurudevar

         இன்று வேதாத்திரி மகரிஷி அவர்களின் 106 வது ஜெயந்தி தினம். குருபூர்ணிமா தினத்திலிருந்து (19-07-2016) ஒன்பது அறிவிற்கு விருந்துகளில் ‘அருளாளர்கள் உலகம்’ பற்றி சிந்தித்து வந்தோம்.  அவ்வையார், மற்றும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் பெரியோரை/சான்றோரை துணைகொள்ளச் சொல்கின்றனர். எதற்காக துணைக் கொள்ளச் சொல்கின்றனர் என்பதனையும் அறிந்து கொண்டோம்.

         சான்றோர்கள் என்பவர் யார்?

         ஒழுக்க நெறியினைக் கடைபிடித்து சான்றாக வாழ்ந்தவர்கள்/வாழ்கின்றவர்கள் சான்றோர்கள்.

         எதற்காக அவர்களைத் துணை கொள்ளச் சொல்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்?

         சான்றோர்கள்,  நல்வாழ்வு வாழ்வதற்கு நமக்கு நல்வழிகாட்டுவதற்காக, அவர்களை துணை

         கொள்ளச் சொல்கின்றனர்.

         ‘அருளாளர்கள் உலகம்’ என்கின்ற தலைப்பில் சிந்தனை முடிவுபெற்றதைத்  தொடர்ந்து இன்று நேரிடை அருளாளர்-குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினமாக இருப்பதால்  அவரை வணங்கி நினைவு கூர்வோம்.

       அவர் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி எனும் கிராமத்தில் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14-ம் நாள் அவதரித்தார்.  இன்று நாம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடினாலும்,  என்று நாம் மனவளக்கலையை ஏற்றுக்கொண்டோமோ அன்றிலிருந்தே அவருடன் கலந்து விட்டோம்.  அவரை நினையாத நாளில்லை, நொடி இல்லை என்றே சொல்லலாம்.  ‘பிறவிப்பயனை நல்கும்’ என்று மகரிஷி அவர்கள் அருளியுள்ள உறுதி,  இறை-உணர் சாதனைக்கு காப்பாகவும், துணையாகவும் அமைகின்றது.   மகரிஷி அவர்கள்  ‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற உறுதியினை எந்த இடத்தில்/எப்பாடலில் அளித்திருக்கிறார்?  15-08-1984 அன்று, குருவின் சேர்க்கை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலில் இந்த உறுதியினை அளித்துள்ளார்.     

    மாதா பிதா குரு தெய்வம்:

       மாதா பிதா குரு தெய்வம் என்பது ஆன்றோர் மொழி.  இது எதனைத் தெரிவிக்கின்றது?  மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டும். 

          குழந்தை தாயை அதுவாகவே அறிந்து கொள்கின்றது. 

          தாய், தந்தையைக் காண்பித்து, தந்தையை அறிந்து கொள்கின்றது. 

          தாயையும், தந்தையையும் குழந்தை அறிந்துவிட்டது. 

          அடுத்ததாக அறிய வேண்டியது யாரை? குருவை அறிய வேண்டும்.  அதற்கு தந்தை குருவைக் காட்டிட குழந்தை குருவை அறியவேண்டும். 

         பண்டைக்காலத்தில், மக்கள் தொகை குறைவாக இருந்தபோது, குருகுலக்கல்வி  முறையில் இந்நிகழ்வு நடந்து  வந்துள்ளது.  குருகுலத்தில் அரசன் மகனும், சாதாரண பிரஜையின் மகனும் சமமாகத்தான் கருதப்படுவர். மக்கள் தொகை பெருகிவிட்ட இந்த விஞ்ஞான யுகத்தில்,  இம்முறை தானாகவே மாறிவிட்டது. குருகுலத்தில் மாணவன் உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் அற்பணித்து கல்வி பயின்றான். குருவானவர் தெய்வநிலையை உணர்ந்தவராக இருப்பார். குருகுலக் கல்வியில் மாணவனுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுடன், அறியாமையை நீக்கி  பண்பேற்றக்கல்வியையும் சேர்த்து கல்வி கற்பிப்பார் குரு.

        மாதா, பிதா, குரு தெய்வம் என்கின்ற ஆன்றோர் மொழிப்படி குருவை தந்தை காண்பித்து வைக்கும் நிகழ்வு நடைமுறையில் இல்லாத நிலையில், கல்விக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தாலும், பண்பேற்றத்தையும் சேர்த்துக் கற்க சிறந்த வாய்ப்பினை இயற்கை/இறை வேதாத்திரியத்தின் வாயிலாக இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கியுள்ளது. அதுதான் கலைகளிலேயே அரிய கலையாகிய மனவளக்கலை எனும் ஒழுக்கவியல் கல்வியாகும்.  அந்த அரிய வாய்ப்பினைப் பெற்ற நாமெல்லோரும் பாக்கியசாலிகள்.  இறை-உணர்வு-கல்வியினை கற்கும் பாக்கியசாலிகள் என்பதோடு மட்டுமல்லாது, இக்கல்வியில் தேர்ச்சி பெற்று மற்றவர்களுக்கும் கற்பிக்க நம்மை எல்லாம் இறைத்தூதுவர் என்று சொல்கின்ற அளவிற்கு இயற்கையியல்/இறையியல் கல்வியினையும் ஐயமற விளங்கிக் கொள்ளும் வகையில் வழங்கி வருகின்றது மனவளக்கலை.  இது சாதாரண நிகழ்ச்சி அல்ல.  இயற்கையின்/இறையின்/பேரறிவின் தன்மாற்ற பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.  இறையின் இயல்பூக்கத்தால் இது நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.

     ஒழுக்கவியல் கல்வி கட்டயாப்பாடமாக்க வேண்டும்:    

       சுவாமி விவேகானந்தர் மற்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய படி, பள்ளிக்கல்வியில், மற்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருவதுபோல், முழுமையான ஒழுக்கவியல் கல்வியினைஏற்படுத்தி அதனைக்  கட்டாயப் பாடமாக இணைக்கப்படாத நிலையில், தற்போதுள்ள சமுதாயத்திற்கு ஒழுக்கவியல் கல்வியினைக் கற்பிக்க, பண்டைக்கால முறைப்படி அறிவை அறிந்த குரு  தேவைப்படுகிறார். இந்த தேவையினை இருபதாம் நூற்றாண்டில் இயற்கை/இறை கருணையோடு,பிரம்ம ரிஷி வரிசையில் நவயுகத்தில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக  மனிதகுலத்திற்குத் தந்துள்ளது.  மனவளக்கலை எனும் பண்பேற்றக்கல்வியில் கருத்தியல், அதனோடு கருத்தியலில் அறிந்ததை சரிபார்க்கும் செய்முறைக் கல்வியியும் இணைக்கப்பட்டுள்ளது.  அதாவது மனவளக்கலை என்பது ஆன்மா உய்வு பெறத்கக்க ஆன்மீகப்பயிற்சியாகும்.  இது போதனையும், சாதனையும் இணைந்த கல்வியாகும். 

        இத்தகைய கல்வியில் தேர்ச்சி பெற கருத்தியல் பாடமும், செய்முறைப்பாடமும் இருந்தாலும், விலங்கினத்திலிருந்து வந்துள்ள மனிதகுலம், விலங்கினப்பண்பிலிருந்து மனிதப்பண்பிற்கு முழுவதுமாக ஏற்றம் பெறுவதற்கான கல்வி பல்லாயிரம்  பிறவிகளாக முறைப்படி கற்காததால், அந்தப் பழக்கப்பதிவிலிருந்து புதிய விளக்கப்பதிவிற்கு தன்னை மாற்றிக் கொள்ள, பயிற்சிகளோடு இயற்கையின்/இறையின் இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்வது அவசியம் எனக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள்.  இதனை மனதில் வைத்து 15-08-1984 அன்று, குருவின் சேர்க்கை பற்றி இந்த மனிதகுலத்திற்கு பாடலின் வாயிலாக அறிவிக்கிறார். அப்பாடலை அருளி சரியாக முப்பத்திரண்டு ஆண்டுகள் முடிந்து முப்பத்திரண்டாவது ஆண்டு ஆரம்பிக்கும் இன்நன்நாளில் நினைவு கூர்கிறோம்.

    பண்பேற்றம் பெறுவதற்கு குருவின் சேர்க்கை:

    FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15

         இப்பாடலில் முதல் ஐந்து வரிகளுக்கான விளக்கத்தை ‘அருளாளர்கள் உலகம்’  என்கின்ற தலைப்பில்  சிந்தித்து  அறிந்து கொண்டோம்.  இன்றைய தலைப்பு ‘பிறவிப்பயனை நல்கும்’ என்று உள்ளதால் இப்பாடலின் கடைசி மூன்று வரிகளான

       “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

      தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.” என்பதற்கு விளக்கம் காண்போம்,

         இம்மூன்று வரிகளில் ஒர் உண்மை சொல்லப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.  அதுதான் ‘பிறவிப்பயனை நல்கும்’ என்பது.  இது மனிதவாழ்வில் நடைபெறவேண்டிய நிகழ்வு(விளைவு) ஆகும்.  ஆனால் எந்த ஒரு விளைவும்  செயலின்றி நடக்காது என்பது இயற்கையின்/இறையின் நீதியாக இருப்பதால் அதற்கான செயலையும் இப்பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.  அதே நேரத்தில் அச்செயலை ஆன்மதாகத்துடன்   நாம் இப்போது இப்பாடலின் கடைசி மூன்று வரிகளுக்கான பொருளை ஆழ்ந்து சென்று சிந்திக்க வேணடும். என்னென்ன சிந்திக்க வேண்டும் என பட்டியலிட்டுக்கொள்வோம்(list out).

    ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடலின் வரிகள்:

     1)   பிறவிப்பயன் என்பது என்ன?

    2)   குருவை மதித்து ஒழுகுதல்

    3)   குரு உயர்வு

    4)   தப்பாது மதிப்பவரின் தரத்தை உயர்த்துதல்.

    பிறவிப்பயன் என்பது என்ன?

         பிறவிப்பயன் என்பது செயலைச் செய்து முடிவாக விளைவைப் பெறவேண்டும். (எனவே மனிதனாகப் பிறந்துவிட்டதாலேயே பிறவிப்பயனை அடைய இயலாது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.). எனவே இது சிந்திக்க வேண்டிய பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், இதனை சிந்திக்க வேண்டி பட்டியலில் முதலில் எடுத்துக் கொண்டோம்.  காரணம் மனித மனம் எப்போதும் ஆதாயம் தேடும் இயல்புடையதாதலால்(Human mind is so calculative) மனிதப்பிறவியினால் என்ன பயன் என்று அறிந்து கொள்ள மனம் விழையும்.  பிறவிப்பயன் என்பது மனிதப்பிறவியின் நோக்கத்தை வாழ்நாளில்நிறைவேற்றிக் கொள்ளுதலே ஆகும்.

        மனிதப் பிறவிக்கான பயன்  என்ன?  இவ்வாறு கேட்பதை விடுத்து, ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.  எப்படி?  முதல் கேள்விக்கு கண்டுபிடிக்கும் விடை மனிதப்பிறவிக்கான பயனை நாம் முடிவுசெய்ததாக அமையும். அது தவறாக இருக்கலாம். அல்லது சரியாகவும் இருக்கலாம் அன்றோ?!காரணம் மனிதப் பிறவிக்கான பயன்  என்ன என்கின்ற கேள்விக்கு விடை உடனே சொல்லி விடமுடியாது.  மனிதன் சுவாசிக்க என்ன தேவை என்கின்ற கேள்விக்கு, விடை  ‘ஆக்ஸிஜன் தேவை’ என்று சட்டென்று விடை சொல்வது போல் மனிதப்பிறவிக்கென்று என்ன பயன் உள்ளது என்கின்ற கேள்விக்கு சட்டென விடை சொல்லி விட முடியாது. சிந்தித்துதான் விடையைச் சொல்ல முடிகின்ற நிலையில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

        எனவே அப்படிப்பட்ட நிலையில், கூறும் அந்த விடை

            பூரணமாக(முழுமையாக) சிந்திக்காமையாலோ

            அல்லது ஓரளவிற்குமேல் சிந்திக்க முடியாமல் போவதாலோ(stagnated pondering)அல்லது உறுதிப்படுத்தப்படாத சிந்தனையாலோ,

           அறியாமையாலோ,

           அல்லது அறிந்து அலட்சியப்படுத்துவதாலோ,

           அல்லது அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பவும், வசதிக்கு ஏற்பவும்,

           தன்னையே ஏமாற்றிக் கொள்வதாக அல்லது கொண்டிருக்கின்ற சரியில்லாத  விடையாக இருக்குமன்றோ!  அப்படியிருக்கும்போது விடை சரியாக இல்லாமலும் இருக்கலாம், அல்லது சரியாகவும் இருக்கலாம். எனவே ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்கின்ற கோணத்தில் ஆராயும்போது விடை சரியாக இருக்கும்.  அப்போதும், இரண்டு நிலைகளிலும் ஆறாம் அறிவுதான்  விடையை முடிவு செய்யவிருக்கின்றது.  எனினும் இரண்டாம் நிலையில் ஆறாம் அறிவு தன்முனைப்பை விலக்கிவிட்டு இயற்கையோடு/இறையோடு இணைந்து விடைதேடும்.  முதல் நிலையில் ஆறாம் அறிவு உலகியல்அனுபவத்தைக் கொண்டு தன்முனைப்போடுதான் விடையைக் கூறும்.

         மனிதப்பிறவி என்பது இயற்கையின் அரிய நிகழ்வாகும். ஆகவே,  ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்கின்ற கேள்விக்கு  இயற்கை/இறை  வைத்துள்ளதை விடையாக  ஆறாம் அறிவு அறிகின்றது.  இதில் தவறு ஏற்பட வழியே கிடையாது.  மேலும் இந்த விடை மனிதகுலத்திற்கே பொதுவானது.  ஒருவர் கண்டுபிடித்ததை மற்றவர் அவ்வழியாகச் சிந்தித்து உறுதிபடுத்த வேண்டியதுதான்.  மனிதப்பிறவியின்   பயன் என்ன என்று ஒவ்வொருவரும் அவரவர்களாகவே தெரிந்து கொள்ள முன்வரவேண்டும்.  பயனை உணர்ந்தால் பயனை அனுபவிக்கலாமன்றோ! மனிதப் பிறவிக்கென்று என்ன பயன் உள்ளது என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?  மனிதப்பிறவிக்கான பயனை சிறுவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. ஆனால் மனிதப்பிறவிக்கான பயனை அறியும் வகையில் குழந்தைகளை வளர்க்கலாமன்றோ!  சிந்திக்கும் திறன் வளர்ந்து வருகின்ற நிலையிலுள்ள இளைஞர்கள் மனிதப்பிறவியின் பயனைக் கண்டுபிடிக்க வேண்டும். 

        சிந்திக்கும்போது, என்னென்ன உண்மைகளை/எதார்த்தத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்? 

        இதுவரை வாழ்ந்துள்ள நம் முன்னோர்கள் என்ன பயனை அடைந்தார்கள் மனிதப்பிறவியினால் என்பதனை கவனத்தில் கொள்ளலாம். 

       அது சரியாக இருந்தால் மீண்டும் நாம் அதனை சரிபார்த்துவிட்டு அந்த பயனை நிறைவெற்றிக் கொள்ள ஆயத்தமாகலாம். 

        இல்லை வெற்றிவாழ்க்கை வாழ்ந்த சான்றோர்கள் பிறவிப்பயன் பற்றி என்ன கூறுகின்றனர் என்பதனை கவனத்தில் கொண்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பண்பேற்றத்திற்கான மூன்று தாரக மந்திரங்களான – தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்–Information, Confirmation, Transformation ஐ பிரயோகப்படுத்தலாம்.

        இதுவரை வெற்றி வாழ்க்கை வாழ்ந்துள்ள சான்றோர்களின் அறிவுரையை கவனத்தில் கொள்ளலாம் என்கின்ற வரிசையில் அவ்வைத்தாய் மனிதப்பிறவியின் பயன் என்று என்ன கூறுகிறாள் என்பதனை ஆய்வு செய்யலாம்.  அவ்வைத்தாய் என்ன கூறுகிறாள் மனிதப்பிறவியின் பயனாக என்பதனை நினைவு கூர்வோம்.

        அரியது எது?

    அரிதரிது மானிடர் ஆதல் அரிது!

    மானிட ராயினும் கூன், குருடு, செவிடு,

    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!

    பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

    ஞானமும், கல்வியும், நயத்தல் அரிது!

    ஞானமும், கல்வியும் நயத்த காலையும்,

    தானமும், தவமும் தான்செய்தல் அரிது!

    தானமும், தவமும் தான்செய்வர் ஆயின்

    வானவர் நாடு வழிதிறந்திடுமே!

                        . . . அவ்வையார்.

    பாடல் வரிகள் பொருளை எளிமையாகத் தெரிவிப்பதாக இருந்தாலும், வேதாத்திரிய வழியில்  சற்று சிந்திப்போம். உயிர் மனிதனாகப் பிறத்தல் அரிது என்கிறார்?  ஏன்?  நம் உயிரோ, அல்லது பெற்றோர்களின் உயிரோ, அல்லது அவர்களின் பெற்றோர்களின் உயிரோ அவர்கள் எடுத்துள்ள இந்தபிறவியில் நேரிடையாக முதன் முறையாக மனிதஉடல் எடுக்கவில்லை.  உயிர் தோன்றி பலலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான், ஒரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாகி, பின்னர் ஆதிமனிதனாகி, பல்லாயிரம் ஆண்டுகளாகி, அவன் வம்சாவளியாகத்தான் நாம் அனைவரும் மனிதப்பிறவி எடுத்துள்ளோம்.  எனவே உயிருக்கு மனிதப்பிறவி என்பதனை அரிதாகக் கருதுகிறாள் அவ்வைத்தாய். உண்மைதானே! அப்படியே மனிதனாகப்பிறந்தாலும் ஊனங்கள்-குறைபாடுகள் இல்லாமல் பிறத்தல் அரிது என்கிறாள். ஊனங்கள், மற்றும் மூன்று இன்றியமையாத தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறைவதற்கு உறைவிடம் ஆகியவை பூர்த்தியானாலும் ஞானக்கல்வியினை விரும்புவதில்லை மனிதன்.  அப்படியே     ஞானக்கல்வியினை அறிந்தாலும், அதாவது வாழ்வின் நோக்கம் அறிந்தாலும் – பிறவியின் பயனை அறிந்தாலும்,  அதனை அடைவதற்கான வழிமுறைகள் தெரிந்தாலும் அதனை மேற்கொள்வதில்லை என்கிறாள் அவ்வைத்தாய். பிறவிப்பயனை அடைவதற்கான வழிமுறைகளான  தவமும்(இறைவழிபாடு), தானமும்(அறம்), செய்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு கிட்டும் என்கிறாள் அவ்வைத்தாய்.இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(17-08-2016-புதன்) நம் குருதேவர் பிறவிப்பயன் என்ன என்று கூறுகிறார் என்பதனை அறிய இருக்கிறோம். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்.