admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 319(131 & FFC159)

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 319(131 & FFC159)

    17-07-2020  — வெள்ளி

    நல்ல பழக்கமே நல்லொழுக்கம்

     

    தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

    ….. புத்தர்

    பயிற்சி—
    1) அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    விடை:–

     

    ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதுபோல். தீய பழக்கம், பெரும்பாலும், ஆரம்பத்தில் இன்பத்தையே தந்தாலும் அல்லது தருவதுபோல் இருந்தாலும்/இருந்து ஈர்த்தாலும், பின்னர் அது தீங்கையேத்தான் நிச்சயம் தரும். அதுவரை அந்த தீயபழக்கத்தை தேனாக நினைப்பவனை முட்டாள் என்கிறார் புத்தர். பின்னர் அந்த தீயபழக்கம் தீங்கை தர ஆரம்பித்ததும் அதனை உணர்ந்து தன்னை திருத்திக் கொள்வதில் வெற்றி பெறுவது,

    • அத்தீய பழக்கத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம்,
    • அதில் ஆழ்ந்து, ஆழ்ந்து அனுபவித்த ஆரம்பகால சுகம்,
    • எவ்வளவு காலம், அது பழகப்பட்டிருக்கின்றது

    ஆகியவற்றைப் பொருத்து எளிமையாகவும் இருக்கலாம். அல்லது அறிஞர் ரூஸோ கூறும் ‘ஒழுக்கவாழ்விற்கு போராட வேண்டும்’ என்பதுபோல் போராடும்படியாகவும் இருக்கலாம். எந்த ஒரு பழக்கத்தையும் பழகுவது என்பது ஐம்புலன்களைக் கொண்டுதான் பழகவேண்டும். எந்த ஒரு தீயபழக்கமும் ஆரம்பத்தில் சுகம் கொடுத்து பிறகு சிக்க வைத்துவிடும். உணர்கருவிகளாகிய புலன்களை தவறாகப் பயன்படுத்தும்போது புலன்கள் அறிவை சிக்கவைத்துவிடுவதால், ஐம்பொறிகளும் (ஐம்புலன்களும்) அறிவிற்கு உணர்கருவிகளாகச் செயல்பட்டாலும், அறிஞர் திருவள்ளுவர் அவற்றை ‘பொறி’ என்பதனை கருவி எனும் அர்த்தத்தில் கூறாமல், ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்கின்றபோது ‘சிக்கவைக்கும்–அகப்படுத்தும் பொறிகளாகத்தான் எச்சரிக்கிறார். (traps-உதாரணத்திற்கு எலியைச் சிக்கவைக்கும் எலிப்பொறி)’

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடுவாழ் வார்.” …. குறள் எண் 6

    ஆகவே ஆரம்பத்தில் சுகம் கொடுப்பதாக இருந்து, ஆரம்பிக்கப்பட்ட தீயபழக்கம், பின்னர் தீங்கை கொடுக்கும்போது, அதனை விட்டுவிடுவதற்கு அதனுடன் போராட வேண்டியிருக்கும்.
    தீய பழக்கம் ஆரம்பத்தில் ஒருவேளை இன்பத்தைக் கொடுத்தாலும், ‘தீமை தீங்கைத் தரும் இயல்புடையதால்’, பின்னர் தீங்கைத்தான் நிச்சயமாகத் தர ஆரம்பிக்கும். அதுவரை அத்தீயசெயலை தேனாகக் கருதுகிறான் முட்டாள் என்பதனை வலியுறுத்திக் கூறவந்ததே புத்தரின் இந்த அமுதமொழி. உதாரணத்திற்குப் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல், சூதாட்டம் போன்ற இன்னும் எத்தனையோ, தீயபழக்கங்கள் மனிதனிடம் உள்ளன. மனிதத்துவத்தை நன்கு அலசி ஆராய்ந்த மானுடவியல் அறிஞரும் நம்முடைய குருநாதருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘மனிதனிடம் இருக்கும் தீமை, பழக்கம்’ என்கிறார். பழக்கம் பழகிவிட்டால் அது வழக்கமாகிவிடும். பழக்கவழக்கம் தீமையைத் தருவதாக இருந்து விட்டால் பின்னர் அதனை நிறுத்துவதற்கு பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

        துன்பம் தரும் பழக்கம் எவ்வாறு  நற்பழக்கமாகும்? 

        துன்பம் தரும் செயல் எவ்வாறு ஒழுக்கச் செயலாகும்?

        எனவே   நல்ல பழக்கமே நல்லொழுக்கமாகும்.

         பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்காமல் அச்செயலில் இறங்குவது எதனைக்குறிக்கின்றது? அறிவின் கூர்மையின்மையைக் குறிக்கின்றது, காய்கறிகளை நறுக்க உதவும் கத்தி அதன் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு கூர்மையாக இருக்க வேண்டும். கூர்மையற்ற கத்தியால்(மழுங்கிய) உபயோகமில்லை. அதுபோல் கூர்மையில்லாத அறிவால்(மழுங்கிய) பயனில்லை மனிதனுக்கு. அறிவு அரூபமாக உருவமற்று இருந்தாலும், அது கூர்மையாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவு கூர்ந்து உணரமுடியும். அறிவு கூர்மையில்லாதிருந்தால், அது தனக்கே உபயோகமற்றுபோய்விடும். ஒன்று தனக்கே உபயோகமற்று இருப்பது விசித்திரமாக இல்லை?! ‘நான் எனக்கே உபயோகமற்று இருக்கிறேன்’ என்றால் எப்படியிருக்கும்? கூர்மையின்மையால் உபயோகமற்றிருப்பது/போவது அறிவிற்கே துன்பத்தை தரும். 

          கூர்மையாக இருக்கும் அதே நேரத்தில், அறிவு தன்முனைப்பில் சிக்காமல் இருக்க விழிப்புடனும் இருக்க வேண்டும். ‘தான் கூர்மையாக இருக்கிறேன்’ என்று அறிவு கர்வம் கொள்ள நேரிடின் அது தன்முனைப்பில் சிக்க நேரிடும்.

      கூர்மையாக இருக்க வேண்டியது அறிவின் இயல்பு. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மனிதன். அதில் பெருமை கொண்டு கர்வமடைய எங்கே நியாயம் இருக்கின்றது? நியாயமே இல்லை. அந்த அறிவுக்கூர்மை விவேகமான பேரறிவின் சிறப்பு. இது சுத்தஅத்வைதம். என் அறிவு கூர்மையானது என பெருமை கொள்கின்ற துவைதத்திற்கு இடமில்லை.

        கூர்மையான கத்தியை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் கூர்மையான கத்தி விரல்களையே காயப்படுத்திவிடும். சாணை பிடிக்கப்பட்ட அறிவாள்மனை சில நாட்கள் மிகக்கூர்மையாக இருக்கும். அதனை காயை நறுக்கப்பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லாவிடில் சில நேரங்களில் விரல்களை காயமாக்கிவிடும்.

        அதுபோல் அறிவின்கூர்மையால் தன்முனைப்பை வெளிப்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம். அடக்கம் வேண்டும்.

       ஒரு பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்காமல் அச்செயலில் இறங்குவதற்குக் காரணம், அறிவின் குறைபாடே!

        அறிவின் குறைபாடுகள் என்ன என்று ஆராயப்போனால், அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம். ஆகியமூன்றும் அறிவின் குறைபாடுகளாகத் தெரியவரும்.

         அவற்றை ஒவ்வொன்றாக சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

    முதலில் அறியாமையை எடுத்துக் கொள்வோம்.

    இயற்கையின்/இறையின் நெறியான அறநெறியை சமுதாயத்தில் நிலைநிறுத்த சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்கள் பல இருந்தாலும், தவறிழைக்கும்போது அது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் குற்றம் எனகருதப்படுமானால், அப்போது அந்தச் சட்டம் தனக்கு தெரியாது(அறியவில்லை) என வாதிடமுடியாது. ‘Ignorance of Law cannot be an excuse’ என்பதுபோல், அறியாமையும் (அறியாமைக்கு அறியாமை காரணமாக இருந்தாலும்) மன்னிக்க முடியாததுதான். ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிறைய சட்டங்கள் உள்ளன. அவற்றிற்கு பெயர்களும் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.. ஆகவே வழக்கறிஞரல்லாத மற்ற குடிமகன்கள் எல்லாம், ஒருசட்டத்தைக் குறிப்பிட்டு ‘இந்த சட்டம் எனக்குத் தெரியாது’ என்று சொல்ல முடியாது.

         ஏனெனில் எந்த ஒரு சட்டமும் மனிதன் கடைபிடிக்க வேண்டிய ஆறாம் அறிவிற்குடைய அறநெறியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

        ஆறாம் அறிவுடைய மனிதன் அறநெறி வாழ்க்கை வாழத் தெரிந்திருக்க வேண்டும். அறநெறி வாழ்க்கை வாழாமல் போனால் அது சட்டத்தை மீறியதாகி, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட சட்ட–எண்ணைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தி, தண்டிக்கும்.

        நெறியுடன் இயங்குகின்றது இயற்கை. நெறியுடன் இயங்குகின்ற இயற்கை ஒழுங்காற்றலாகவுள்ள பேரறிவே. அதுவேதான் இறை. ஆகவே இறையின் நெறியான அறநெறி என்பது என்ன? ஒழுக்கம், கடமை, ஈகை ஆகும். ஆகவே இது ஆறாம் அறிவிற்கு இருக்க வேண்டிய நெறிகளாகும். ஒழுக்கம் மீறும்போது/தவறும்போது அது தவறுதானே?!

       ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்கிறார் மகரிஷி அவர்கள். விளைவறிந்து செய்தாலும், விறைவறியாது செய்தாலும் அதற்குரிய விளைவு வந்தே தீரும். (குற்றம் என தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் ஒரே விளைவுதான் வரும்)

         சூடான பாத்திரம் எனத் தெரியாமல், குழந்தை அறியாமல் அதன் மீது கைகளை வைத்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். குழந்தை அறியாமையில் கை வைத்து விட்டது என்பதற்காக பாத்திரம் சுடாமலா இருக்கும்? பெரியவர்களும் கவனக்குறைவாக சூடான பாத்திரத்தின் மீது கையை வைத்துவிட்டாலும் கை சுட்டுவிடும். கவனக்குறைவுடன் செய்த செயலுக்கான விளைவு ‘கைசுட்டுவிடுதல்’

    அடுத்ததாக கடமையை எடுத்துக் கொள்வோம்.

         கடமை என்பது இயற்கையின்/இறையின் இயல்பு அல்லது பண்பாகும் ஆகவே கடமையை விடுவது அல்லது செய்யாமல் இருப்பது அல்லது தவறுவது தவறுதானே?! இயற்கை தனது கடமையை தவறாது செய்து கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு சூரியனைச் சுற்றி பூமி ஒரே சீராக வலம் வந்து கொண்டிருகின்றது. இது இயற்கையின் கடமைகளில் ஒன்று. அந்தக்கடமையில் ஏதாவது குறை ஏற்படுமாயின் என்னவாகும்? ஆகவே அந்த இயற்கையின் ஒரு சிறந்த உயர்ந்த அங்கம்தான் மனிதன். எனவே மனிதன் கடமையில் தவறக்கூடாது. கடவுளையும் கடமையையும் இணைக்கின்ற உண்மையினை மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

    கடவுளும் கடமையும்(17-12-1954)

    கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்.
    கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்.

    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடலிலுள்ள உண்மை அனைவருக்குமே பொருந்தும். ஏன் இவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது. இது மகரிஷியின் மாணவா்களாகிய மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவது அல்ல.

        மனிதனின் வாழ்வை பற்றிய ஒரு உண்மை கண்டுபிடிக்கப்படுகின்றது என்று சொன்னால் அது ஏதோ ஒரு தரப்பினருக்குமே மட்டும் பொருந்துவதாகக் கொள்வதற்கில்லை. இப்புவியில் வாழ்கின்ற மனிதகுலத்திற்கே பொருந்துவதாகத்தான் கொள்ள வேண்டும்.

        கடமையையும் கடவுளையும் இணைத்து சொல்வதால் இந்த உண்மை கடவுளை அறியவேண்டும் என்கின்ற மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகாது. மனவளக்கலைஞர்களல்லாத, கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

    கடமையைச் செய்வதும் கடவுளை அறிவதும் சமப்படுத்தப்படுகின்றது. கடமை என்பது என்ன? கடமை என்பது உரிய நேரத்தில் செய்ய வேண்டிய செயலாகும். செய்த செயலுக்கு இயற்கைநீதியின்படி விளைவு உண்டு. அந்த விளைவு எது? விளைவாக வருவதுவே இறைவன். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்கின்ற உண்மையை தெரிவித்துள்ளது வேதாத்திரியம் என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை.

    ஈகை

    துன்பத்தில் இருப்பவருக்கு உதவுகின்ற பண்புதான் ஈகை எனப்படுகின்றது. ஆகவே ஈகை ஆறாம் அறிவின் சிறப்பல்லவா?! ஆதலால், ஈகையைச் செய்யத் தவறும்போது ஆறாம் அறிவின் சிறப்பு கீழிறங்கிவிடும். ஆறாம் அறிவின் சிறப்புபோனால் அது கீழ்மைதானே? விளைவு சிறப்பால் வருகின்ற உயர்வோ அல்லது நன்மையோ இழக்கப்படுமன்றோ! ஒன்று இழக்கப்படுகின்றது என்றால் அதன் விளைவு துன்பமன்றோ! அறியாமையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்ததில் அறியாமை என்பது மன்னிக்க முடியாதது, அறியாமைக்கும் ஏற்ற விளைவு வரும் என அறிந்து கொண்டோம். அந்த சிந்தனையில் கூடவே அறம் பற்றியும் அதன் அங்கங்களான ஒழுக்கம், கடமை, ஈகை பற்றியும் அறிந்து கொண்டோம்.

    இப்போது அறிவின் குறைபாடான அலட்சியம் என்றால் என்ன என்று அறிவோம்.

    பொதுவாக இது அனைவரிடமும் அவ்வப்போது தலைதூக்கும். பழக்கத்தாலும் அலட்சியம் செய்வது உண்டு. எனவே அலட்சியம் பற்றி பார்ப்போம். அலட்சியம் அறியாமையைவிட மோசமானது. தெரிந்தும் உதாசினப்படுத்துதல். தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்றிருக்கும்போது, செய்வது குற்றம் என்று அறிந்தும் அலட்சியத்தால் செய்வது’ அதனைவிட கொடுங்குற்றம். இது தன்முனைப்பின் வெளிப்பாடாகும்.

    மூன்றாவது உணர்ச்சிவயம். இது எல்லோரிடமுமே உள்ளது. எல்லோரிடம் இருப்பதால் அது சரி என்றாகிவிடாது. .இங்கே மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இயல்பும் – உயர்வும் (22-12-1953)

    அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
    அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    உணர்ச்சி பெரியதா அல்லது அறிவு பெரியதா? உணர்ச்சி உயர்ந்ததா அல்லது அறிவு உயர்ந்ததா? உணர்ச்சி அறிவை உணா்வதில்லை. அறிவுதான் உணர்ச்சியினை உணர்கின்றது. எனவே அறிவுதான் எல்லாவகையிலும் சிறப்புடையது, உயர்ந்தது. அறிவேதான் இறையாக மனிதனிடம் உள்ளது.

      உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளது மனிதர்களிடம் என்றால் என்ன நிலையில் உள்ளது இந்த சமுதாயம்? உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளதால் அறிவைக் கொண்டுதான் மனிதன் செயல்படமுடியும் என்கின்றபோது உணர்ச்சியிடம் தோற்ற அறிவு(இறை) எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும்?

       அறிவை(இறையை) தோற்கடித்த உணர்ச்சியால் தனக்கும், தன்னுடன் வாழும் சகமனிதர்களுக்கும் எவ்வாறு நலமளிக்க முடியும்? எனவே மனவளம் கருதி அறிவால் உணர்ச்சியை வெல்கின்ற கலைதான் மனவளக்கலை. அரசன் சேவகனிடம் அடிமையாவது போன்றது உணர்ச்சி அறிவை வெல்வது. அரசன்(அறிவு) சேவகனுக்கு(உணர்ச்சி) ஆணையிடுவது போன்றது அறிவு உணர்ச்சியினை வெல்வது.

        அறிவு எப்போதும் உணர்ச்சிக்கு வசப்படக்கூடாது. அறிவு உணர்ச்சிக்கு வசப்பட்டால் அது அறிவிற்கு உடைமையாகாது(அறிவுடைமையாயகாது). அதனால்தான் எது அறிவு என்று கூறவந்த திருவள்ளுவர் அறிவைப்பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறார். சிந்தனை முற்றுபெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.

    வாழ்க சிந்தனைச் செல்வம்!      வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-314(207)

    வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-314(207)

     

    16-07-2020 – வியாழன்

    வாழ்க மனித அறிவு!                                                            வளா்க மனித அறிவு!!

    உணர்ச்சிவயம்

    வாழ்க வளமுடன்!

    1) முதலில் வார்த்தை விளக்கம் காணவும்.

         i ) உணர், உணர்வு, உணர்ச்சி என்றால் என்ன?

        ii ) வயம், வசம் என்றால் என்ன?

        iii ) உணர்ச்சி வயம் என்றால் என்ன?

    2) ஏன் உணர்ச்சிவயம் மனிதஅறிவின் குறைபாடாகக் கருதப்படுகின்றது?

    3) அறிவு உணர்ச்சிகளை உணர்வதற்காகத்தானே உள்ளது! அவ்வாறு இருக்கும்போது ஏன் அறிவு உணர்ச்சி வயமாகக்கூடாது?

    4) விழிப்புணர்விற்கும் உணர்ச்சிவயத்திற்கும் என்ன தொடர்பு? அது விரும்பத்தக்கதா?

    5) அயரா விழிப்புணர்வே இறை எனப்படும்போது, உணர்ச்சிவயம்???

    6) அமைதி பூர்வீக சொத்து எனப்படும்போது, உணர்ச்சிவயம் பூர்வீகச்சொத்தை அனுபவிக்க அனுமதிக்குமா?

    7) உணர்ச்சிவயத்திற்கு எதிர்சொல் உண்டா?

    8) மனவளக்கலை இயம்புகின்ற அறிவின் ஐந்து சிறப்புகள் என்னென்ன?அறிவு உணர்ச்சிவயப்பட்டால்  ஏதேனும் ஒன்றாவது மலருமா?

    9) அதேபோன்று அறிவு பெறவேண்டிய ஐந்து பேறுகள் என்னென்ன?  அவற்றினை  அடைய முடியுமா?

    10) ஆன்ம பலம் என்றால் என்ன? ஆன்ம பலத்திற்கும் உணர்ச்சிவயத்திற்கும் தொடர்பு உள்ளதா?  உள்ளது எனில் அது எவ்வாறு தொடர்புள்ளது?

    11) i)ஆன்ம பலம், உலகியல் வாழ்க்கை வாழ்கின்றவர்களுக்கும், இறைஉணர் சாதகர்களுக்கும் அவசியம் தானே?! 

     ii) அவசியம் எனில் எவ்வாறு அவசியமாகி்ன்றது?

     iii) இயற்கையில்/இறை ஆற்றலில் நடந்துகொண்டிருக்கின்ற தன்மாற்ற நிகழ்வில் இரு தரப்பினர் என்று இருக்கின்றனரா?

      12) மனிதனுக்குத் தேவையான மற்ற பலங்களோடு ஒப்பிடுகையில் ஆன்ம பலத்தின் சிறப்பு என்ன? ஆன்ம பலமே சிறந்ததா?

    13) இறையே மனித அறிவாக இருக்கும்போது மனிதஅறிவு   உணர்ச்சிவயத்தில் இருந்தால் இறை அருளை எவ்வாறு பெறமுடியும்?

    14) அறிவு எப்போது முழுமை பெறுவது? வீடுபேறு பெறுவது எப்போது?  ஒவ்வொரு மனிதனும் வீடுபேறு அடையும் படலம் தொடங்கியாகிவிட்டது என்பதனை நினைவில் கொள்ளவேணடும்.  மகா கவி பாரதியார் “ எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்” என்றுரைத்தான் கண்ணபிரான் என்று கூறி  எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் ”  என அழுத்தமாகவும்  தீர்க்கதரிசனமாகவும்,  சத்தியவாக்காகவும்  கூறியுள்ளார்.  நான் யார் என்கின்ற வினா அளிக்கும் அறிவிற்கானத் தெளிவினை  மனவளக்கலை மூலமாக  ஆன்மீகத்தில்  ஏற்பட்டுள்ள சடுதிமாற்றத்  திருப்புமுனையாக இயற்கை/இறை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றதல்லா?   அறிவிற்கு ஏற்படும் தெளிவு – விழிப்புணர்வு  உணர்ச்சி வயத்திற்கு இடமளிக்குமா?

    வாழ்க திருவேதாத்திரியம்!         வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!

    குறிப்பு:

    இந்தப் பயிற்சியில் இதுவரை 14 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும், நொடிதோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • இன்றைய விருந்து – ஐவகை மயக்கம் – FFC-297(102)

    வாழ்க மனித அறிவு!                     வளர்க மனித அறிவு!!


    ஐவகை மயக்கம்- FFC – 297 (102)

    16-07-2020-புதன்

    வாழ்க வளமுடன்!

    இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம்’. மயக்கம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும். உறவினர் யாராவது மயக்கம் அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

    மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

    எண்ணிக்கையிலோ இந்த மயக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

    அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கத் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன், இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்குள்ளாக நேரிடும்.

    எனவே, அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
    இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

    o இனிமேலாவது, புதிதாக தீய பழக்கங்களை பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
    o ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்,

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கின்ற எதார்த்த நிலையைக் கூறுகிறார், இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். பழகிய பழக்கத்திலிருந்து வெளிவருவது ஆரம்ப நிலையில் கடினமாக உள்ளது என்கிற எதார்த்த நிலையை எடுத்துக் கூறப்படுவது, தேவையற்ற பழக்கங்களிலிருந்து விடுபடும் முயற்சியினை பாதியிலே விட்டுவதற்காக அல்ல. பழகிய பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும் போது, ஆரம்பத்தில் வெற்றி பெறமுடியாமையால், மனம் தளர்ந்து விடாமல் இருந்து ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்து பழகிய பழக்கத்திலிருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்று சொல்லப்படுகிறது.

    அதே நேரத்தில், வேண்டாத தீயப்பழக்கத்தை இனிமேலாவது ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் எச்சரிக்கப் படுத்தப்படுகின்றது.

    அதே நேரத்தில்

    this_birth_is_enough_for_liberation
    என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    வேதங்கள் “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?” என்கின்ற ஒரு கேள்வி எழுந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
    உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது, மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதை அறிவு இன்பமாக உணர்வதே. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி, அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.

    ‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கையே மயக்கத்தில் தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்களும் புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக,

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. குறள் எண் 6 என்று கூறுகிறார்.

    dheaivappulavar

    இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும், அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்க வேண்டும். இக்குறளில் உள்ள,

    1) பொறி, அவித்தான்,
    2) ஒழுக்க நெறி மற்றும்
    3) நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வெவ்வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.

    “ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்து, இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்”. என்பது ஒருபொருள்.

    மற்றொரு பொருள்

    “மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர்.

    மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.

    இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.

    ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.

    அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.

    “நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.

    புலன்களை பயன்படுத்துவதில் ஒழுக்கம் கடைபிடிப்பது புலன் ஒழுக்கம். புலன்களில் எவ்வாறு ஒழுக்கம் கடைபிடிப்பது?

    ஒழுக்கம் என்பது தீங்கு தராத நல்ல செயல்களாகும். ஆகவே புலன்களைப் பயன்படுத்தும்போது தீங்கு தராத செயல்களைச் செய்வது ஒழுக்கமாகும்.

    புலன்களைப் பயன்படுத்தும் போது எப்போது தீங்கு வரும்? புலன்களில் இன்பம் துயக்கும்போது, அளவு மீறினாலும், முறையை மாற்றினாலும் இன்பமே துன்பமாக மாறிவிடுகின்றது என்பதனை அறிவோம். ஆகவே புலனொழுக்கம் என்பது இன்பம் துய்த்தலில் அளவும், முறையும் காப்பது ஆகும்.

    ஒவ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கு இருக்க வேண்டும். அந்த ஒழுங்கே(order of function) அதற்கு ஒழுக்கமாகும்.

    மற்றும் நீத்தார் பெருமையில்,

    “ ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி.” குறள் எண் 25                                                  என்கிறார் திருவள்ளுவர்.

    புலன் மயக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அவருடைய கவியின் வாயிலாக அறிவோம்.

           நல்வினை தீவினை (அக்டோபர் 1982)

    “புலன்கவர்ச்சி மயக்கத்தால் உணர்ச்சி மீறி,

    புறத்தாற்றும் செயல்களெல்லாம் வீழ்ச்சி காட்டும்;

    புலன்கள்தமை அறிவாலே ஆளக் கற்கும்

    பொறுப்புடைய வாழ்க்கைநெறி ஆக்கம் நல்கும்,

    புலன்மயக்கம் தன்முனைப்புப் பழிச்செயல்கள்,

    புகழ்போக்கும் பொருட்கள் உயிர்ப் பற்றுயர்த்தும்,

    புலன்அடக்கம் இம்மூன்றும் களங்கம் போக்கி,

    புவிவாழ்வின் நிறைவுதரும், பிறப்பறுக்கும்.”

                             …..  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பாடல் வரிகளே அவற்றிற்கான விளக்கத்தை தெளிவாகத் தருவதால் தனியாக விளக்கம் அவசியமில்லை. தனியாக விளக்கம் அவசியமில்லை. புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. ஆன்மீகத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் பற்று. பற்று என்பது புலன்மயக்கத்திலிருந்து உருவாகின்றது. புலன் மயக்கத்தினால் களங்கங்கள் உருவாகின்றன. ஏனெனில் புலன்கவர்ச்சி மயக்கத்தினால் உணர்ச்சி மீறுகின்றது. உணர்ச்சி மீறும்போது பாவப்பதிவுகள் உருவாகும்.   அப்படி பிறவிதோறும் உருவாக்கிய பாவப்பதிவுகளினால்தான் இந்த பிறவி உண்டானது.

    எனவே மனம் போனபோக்கெல்லாம் போகாமல், புலன்களை அறிவாலே ஆட்சி செய்து புவிவாழ்வில் நிறைவைப் பெற்று பிறப்பை முடித்துக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள், வைணவப் பெரியார் ஒருவரின் பாடலோடு சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    நன்றாய் ஞானம் கடந்து போய்,

    நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,

    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்

    உவப்பு இல் – அதனைத் உணர்ந்து உணர்ந்து,

    சென்று ஆங்கு, இன்ப துன்பங்கள்

    செற்றுக் களைந்து, பசை அற்றால்,

    அன்றே அப்போதே வீடு,

    அதுவே வீடு – வீடாமே. 

                            ….. வைணவப் பெரியார்.

    உலகியல் வாழ்க்யைில் துன்பமில்லாமல் வாழவும்,  ஆன்மீகத்தில் முன்னேறவும் புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. புதிய சிந்தனை தொடரும்.

    வாழ்க திருவேதாத்திரியம்!                  வளர்க திருவேதாத்திரியம்!!


    Loading