admin

Author Archives

  • எண்ணிய முடிதல் வேண்டும். 2/2

    எண்ணிய முடிதல் வேண்டும். 2/2

    FFC-80

    06-05-2015 – புதன்

    nava yuga viyasar

    எண்ணியது முடிதல் வேண்டும் என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய விருந்தில் கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.

    ஒரு மனிதன் எண்ணுவது அவனால்தான் செயலுக்கு வரும் என்று சொல்ல முடியாது. பிறராலும் செயலுக்கு வரலாம். பெரும்பாலும் மனிதன் தனக்காகவே எண்ணுவதுதான் அதிகம். எண்ணியதெல்லாம் நிறைவேறிவிட்டால் மனிதனுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நடைமுறையில் மனிதன் நினைப்பது அத்தனையும் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் நன்மையாக இருக்குமா என்றாலும் அவ்வாறும் சொல்ல முடியாது. இதற்கு என்ன காரணம்? பொறுப்புடன் மனிதன் எண்ணுதல் வேண்டும். மனிதன் எண்ணுவதில் உள்ள பொறுப்புகளாவன:

    1) முதலில் என்ன செய்ய வேண்டும், என்றும் என்ன செய்யக்கூடாது என்பது தெரிய வேண்டும். நுண்மான் நுழைபுலன் வேண்டும்.
    2) அடுத்ததாக எண்ணுவதைச் செய்ய மனதிற்கு திண்மையும் வேண்டும்.
    3) செய்ய முடிந்ததை செய்யத்தக்கவாறு எண்ணவேண்டும்.

    நினைப்பது நிகழக்கூடியதாக இருந்தாலும் அதனையும் நிகழக்கூடிய வகையில் எண்ணவேண்டும். அதாவது எண்ணியது நிகழவேண்டும்; நிகழக் கூடியதை எண்ண வேண்டும். மனிதன் எண்ணமுடியும் என்பதால் எதைவேண்டுமானாலும் எண்ணி விடமுடியாது. எண்ணுவதில் பொறுப்பு அவசியமாகின்றது. மேலும் பொறுப்பாக எண்ணுகின்ற அவசியம் இயல்பாக அமைந்துவிட வேண்டும். அதற்கு என்ன வேண்டும்? கருமையத் தூய்மை வேண்டும். இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார் என்று அவரது வைர மொழிகளின் வாயிலாக அறிவோம்.

    “கருமையம் தூய்மையாக இருக்குமானால்,
    1) என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்,
    2) எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”

                                                                                                                          ……வேதாத்திரி மகரிஷி அவா்கள்.
    திருவள்ளுவர் எண்ணத்தைப்பற்றிக் கூறுவதைக் கவனிப்போம். வினைத்திட்பம் என்கின்ற அதிகாரத்தில் ஆறாவது குறளாகக் கூறுவது என்ன?
    ”எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியா்
    திண்ணியா் ஆகப் பெறின். …..குறள் எண் 666

    கருத்து: எண்ணியவர், எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப் பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

    ஞானி மகாகவி பாரதியார் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    அன்னையை வேண்டுதல்
    எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
    தெளிந்த நல்லறிவு வேண்டும்;
    பண்ணிய பாவமெல்லாம்
    பரிதிமுன் பனிபோல,
    நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்.
    …. மகா கவி பாரதியார்.

    மகாகவி பாரதியாரின் இப்பாடலுக்குள் புகுவோம். இப்பாடலின் பொருளை அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டால் என்ன அறிவோமோ அவ்வாறே அறிவதற்காக மகாகவி பாரதியாரின் அறிவாற்றலுடன் நம் அறிவாற்றலையும் இணைத்துக்கொள்வோம். பெரும்பாலும் இப்பாடலின் முதல் நான்கு வரிகளை மட்டுமே அநேக இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிவோம். கடைசி நான்கு வரிகளை பயன்படுத்துவது என்பது அரிதாக உள்ளது. இங்கு நாம் எல்லா வரிகளுக்குமே மகாகவி பாரதியாரிடமிருந்து, பொருளும், விளக்கமும் கேட்டறிவோம்.

    இப்பாடலில், வேண்டுதல்கள் ஐந்து போல் இருந்தாலும் நான்கு வேண்டுதல்களும்(wants), ஐந்தில் இரண்டாவது வேண்டுதல் உறுதி மொழியாவும் உள்ளன. இதற்கும் மேலாக ஒரு ஒப்புக் கொள்ளுதலும்(confession) உள்ளன.
    1) எண்ணிய முடிதல் வேண்டும்.
    2) நல்லவை எண்ணல் வேண்டும்.(இது வேண்டுதல் மட்டும் இல்லை. உறுதிமொழி கலந்த வேண்டுதலாக உள்ளது. இறைவிக்கு அளிக்கும் ‘நல்லவை எண்ணுவேன்’ என்கின்ற உறுதி மொழியை அளித்துவிட்டு, அதற்கு விழிப்போடு தான் இருக்க, இறைவி துணையாக இருக்க வேண்டும் என்கின்ற வேண்டுதலும் உள்ளது.)
    3) திண்ணிய நெஞ்சம் வேண்டும்.(நல்லது என எண்ணியதை முடித்திட மனதிற்கு உறுதியும், தைரியமும் வேண்டும். தளரா விடமுயற்சி வேண்டும்.)
    4) தெளிந்த நல்லறிவு வேண்டும். (எல்லோரிடமும் அறிவு இருக்கின்றது. ஆனால் தெளிந்த நல்லறிவு என்பது அறிவை அறிந்தவரிடமேதான் உள்ளது. நல்லறிவு வேண்டும் என்பது சரி. நல்லதையே எண்ணுவதற்கும், நல்லதையே பேசுவதற்கும், நல்லதையே செய்வதற்கும் நல்லறிவு அவசியமாகின்றது என்பது தெரிகின்றது. ஆனால், அதிலும் தெளிந்த என்கின்ற வார்த்தையை சோ்த்திருக்கிறார் பாரதியார். ஏன் எல்லாவற்றிலும் நல்லதே இருக்க வேண்டும் என்கின்ற விளக்கமாகியத் தெளிவு வேண்டும். மனித சமுதாயத்தில் பெரும்பாலும், தெளிந்த நல்லறிவு இல்லாமையால்தான் இப்பாடலே இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பாரதியாருக்கு.)
    5) ஒப்புதல் அளித்தல்:– பண்ணிய பாவமெல்லாம்.(அறியாமையில் குற்றவாளி உணர்ச்சி வயத்தில் குற்றம் செய்துவிட்டு, நீதி மன்றத்தில் நீதிபதியிடம் தெளிந்த மனநிலையில் தான் குற்றம் செய்து விட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் (confession statement) கொடுப்பது போல், இறைவியின் சன்னிதானத்தில்— ‘இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் பாவங்கள் செய்து விட்டேன் என்கின்ற ஒப்புதல் வாக்கு மூலம்)
    6) நசித்திடல் வேண்டும். (செய்த பாவங்களெல்லாம் நீக்கிட வேண்டும்)

    கருத்துரை:– அதாவது ஒவ்வொரு மனிதனும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும், செய்த செயல்களின் விளைவுகளாகத் தனிமனிதத் துன்பங்களும், சமுதாயத்துன்பங்களும் மல்கிவிட்டன. அதுதான் உலகில் அமைதியின்மைக்கு காரணமாக உள்ளது. ஆகவே ஒரு(இந்த) காலகட்டத்திலாவது, தன்னுடைய பாவங்களை உணர்ந்து, அவை நசிந்திட, இனிமேலாவது, நல்ல எண்ணங்களை எண்ணி, அவ்வாறு எண்ணுகின்ற எண்ணங்கள் நிறைவேற (உலகில் அமைதி நிலவவேண்டும் என்பது கூட ஓர் உயர்ந்த எண்ணம்) வேண்டும் என இறைவியை வேண்டச்சொல்கிறார்.

    திருவள்ளுவர் மற்றும் ஞானி மகாகவி பாரதியார் கூறும் வைரவரிகளையும், மகரிஷி அவர்கள் கருமையம் தூய்மையாக இருக்குமானால் எண்ணம் நிறைவேறுவது பற்றி கூறும் வைரவரிகளையும் ஒப்பிட்டால் தெரிய வருவது திருவள்ளுவர் கூறும் ‘செயல் ஆற்றுவதில் வேண்டிய உறுதி, பாரதியார் கூறும் திண்மை, ’ மகரிஷி அவர்கள் கூறும் கருமையத்தூய்மையால் கிடைக்கப் பெறுகின்றது என்பது தெரிகின்றது, மகரிஷி அவர்கள் “ஞானி நினைப்பது நடக்கும். ஞானி நடக்கக் கூடியதைத்தான் நினைப்பான்” என்பார். காரணம் ஞானி கருமையத்தூய்மை அடைந்தவர். எல்லோருமே எண்ணுவது நிகழ வேண்டும் என நினைக்கின்றனா். அதற்கு கருமையத்தூய்மை அவசியம் என்பதனை உணர வேண்டும்.

    கருமையத்தூய்மை அடைந்தவரின் மனதில் தேவையற்ற எண்ணங்கள் (ஆசைகள்) இராது. எண்ணங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். எண்ணிக்கையில் குறைவான, நியாயமான எண்ணங்கள் இருக்கும்போது, மனஆற்றல் அழுத்தத்துடன் ஒவ்வொன்றாக முடித்திட, செயல் ஆற்றுவதற்கு உறுதி அதிகமாக இருக்கும். வாழ்வின் நோக்கம் உறுதி செய்யாத நிலையில், தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக இருப்பதால், எல்லாவற்றையும் செய்து முடிக்கும் உறுதிக்கு வலிவு குறைந்துவிடும்.

    ஆகவே தற்சோதனைக்கு உட்படுத்தாத எண்ணங்கள், தேவையற்ற ஆசைகள், வாழ்க்கைக்கு முரணான ஆசைகள் கருமையத்தூய்மையைக் கெடுக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் எண்ணத்தின் வலிமையைப்பற்றிக் கூறும் கவிகளைக் கவனிப்போம்.
    எண்ணத்தின் வலிமை
    “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.
    எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.”

    எண்ணத்தில் நிறைந்திடு
    “விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ
    எண்ணத்தில் நிறைந்திடு! செய்கையில் சிறந்திடு!”
    தீய எண்ணம்
    “உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்,
    உள்ளத்தி லெழும் ஒழுங்கற்ற எண்ணமே”.

    ..….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஆகவே எண்ணம் நிறைவேற வேண்டுமெனில் கருமையத்தூய்மை அவசியமாகின்றது என்பதனைக் கவனிக்க வேண்டும். எல்லோருக்கும் தான் எண்ணுவதெல்லாம் நிறைவேற வேண்டுமென்கின்ற ஆசை இருப்பதால் கருமையத்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

    உயிர் ஒரு மறைபொருள். இருப்பினும் உயிர் மீது எல்லோருக்குமே அக்கறை உள்ளது போல் கருமையம் மற்றும் அதனைத் தூய்மைப்படுத்துவதின் மீது அக்கறை இருக்க வேண்டும். உயிர் ஒரு மறைபொருளாக இருந்து, கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், உயிர் இருப்பதை முழு மனதோடு ஒப்புக்கொள்கின்றான் மனிதன். காரணம் உயிர் பிரிவதால், மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து விடுவதை மற்றவர்களின் இறப்பிலிருந்து அறிந்து கொள்கின்றான். இருப்பினும், மரணத்தால், உடல் வாழமுடியாமல், புலன்இன்பம் அனுபவிக்க முடியாமல் பயனற்றுப்போவதை, உடல் மீதுள்ள பற்றால் அவனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

    எனவே எளியமுறை குண்டலினியோகம் பயிலாதவர்கள்கூட, மறைபொருளான உயிர் இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர். யார் ஒப்புக் கொள்கிறார்களோ, இல்லையோ, உயிர் மனித உடலில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. உயிர் இருப்பதுபோல், உயிருடன் தொடர்புடைய கருமையம் அல்லது ஆன்மா (Registry of recorded events taking place while living)ஒன்று மறைபொருளாக மனிதனிடம் இருப்பதனையும் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

    ஒப்புக் கொண்ட பிறகு, மருத்துவர்களைத்தவிர, பள்ளிப்படிப்பு படித்த மற்றவர்கள், தங்களின் இதயத்தை நேரிடையாகப் பார்க்க முடியாவிட்டாலும், எவ்வாறு இதயம் உடலில் இருக்கின்றது என்று நம்புவதில் உறுதியாக இருக்கின்றார்களோ, மற்றும் இதயத்தின் வடிவம், இயக்கம் பற்றிய விளக்கங்கள் அறிந்தும் இருக்கின்றார்களோ அதுபோல் கருமையம் இருப்பது பற்றியும், அதன் இயக்கம் பற்றிய தெளிவையும் பெற வேண்டும். இதுவரை, ஜீவாத்மா(மனிதன்), பரமாத்மா(கடவுள்) என்றும், ஜீவாத்மா என்றும் அழியாதது என்றும் ஆன்மிக நூல்கள் கூறியிருந்தாலும், அவை மனிதனால்-ஆறாம் அறிவால் கருத்துருவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஆனால், இந்த நிலையில், இறை, பரமாத்மாவாகிய தன்னைப் பற்றியும், தான் ஜீவாத்மாவான வரலாற்றையும், தான் எவ்வாறு ஆட்சியின்றி ஆளுகின்ற விதத்தையும், அதனை நவயுக வியாசர், நம் குருதேவர் உலக சமுதாயத்திற்கு எடுத்து இயம்புகின்ற விதத்தில் விளக்கியுள்ளது.

    அன்று வேதங்களை எல்லாம் தொகுத்து கொடுத்தவர் வேதவியாசா் எனப்படுகிறார்,  இன்று இறையின் மறைபொருள் விளக்கங்களை, தான் நேரில் பார்த்ததுபோல், அதேபோன்று பிறரும் எளிதாக அறியவும், மேலும், மனிதன்  எவ்வாறு எதார்த்தமாக வாழவேண்டும் என்றும் எல்லாவற்றையும் தொகுத்து இணைத்துக் கொடுத்த  நம்அருட்தந்தை அவர்களை, நவயுக வியாசர் என்று கூறாமல்  இருக்க முடியுமன்றோ! இது பொருத்தத்திலும் பொருத்தமன்றோ! 

    ஆகவே, ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்று நமக்கெல்லாம் நம் குருதேவர் உறுதி அளித்துள்ளதால், நம் குருதேவர், எவ்வாறு கருமைய உண்மைகளை அறிந்து சமுதாயத்திற்கு கூறியுள்ளாரோ, அது போல் நாமும் கருமையத்தைப்பற்றியும், அதன் மதிப்பையும் உணர்ந்து மதித்து அதனைத் தூய்மையாக வைத்துக் கொண்டு பிறர்க்கும் எடுத்துச் சொல்வோம். எனவே, நாம் அதன் இருப்பு, இயக்கம் பற்றி உறுதிப்படுத்தி, அதனைத் தூய்மை செய்வதில் அக்கறையோடு இருக்க வேண்டும்.

    கருவில் திருவுடையவர்களுக்கு மறைபொருள் விளக்கங்கள் அதிகமாகத் தேவையில்லை. அறிவை அறிந்த குருநாதரின் கருணையானப் பார்வை திருவுடையவரின் மீது விழுந்தாலே போதுமானது. திருவுடையவரிடம் மலர்வதற்காகக் காத்திருந்த ஆன்மீக மொட்டு மலர ஆரம்பித்துவிடும். மற்றவர்களுக்கு இயற்கையிலுள்ள மறைபொருட்களின் இரகசியங்கள் விளங்க விளங்கத்தான், தன்முனைப்பு நீங்க ஆரம்பித்து மனம் திண்மை பெறும். திண்மை பெற்ற மனம்தான் உறுதியுடன் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். அதனால்தான் ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’ என்று பாரதியாரும், “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும். எண்ணத்தில் உறுதியும் (திண்மை) ஒழுங்கும் அமைந்திடில்.” என்று மகரிஷி அவர்களும் கூறுகிறார்கள்.

    கருமையத்தூய்மை என்பது ஏதோ கருமையம் தூய்மையாக இருப்பதற்காக மனிதன், செய்யும் பணி அல்ல. மனிதனுடைய இன்ப வாழ்விற்கும் அவனுடைய நல்வம்சாவளிக்காகவும் (good progeny as an asset to the family and society) கருமையத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மனிதனின் முத்தொழில்களையும் பதிவுகளாக ஏற்றம்(upload) செய்யும் கருமையம் ஒன்று இல்லாமல், எவ்வாறு உயிரினம் வாழ முடியும்? ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் கருமையத்தின் பதிவுகளையும், அதன் தரத்தையும் வைத்துதானே அமைகின்றது.

    உயிர் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதனைவிட அதிக அக்கறை கருமையத்தின் மீதும், அதன் தூய்மையைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். உயிர் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பது உண்மைதான் என்றாலும், கருயைத்தூய்மை இருந்தால்தான் எண்ணிய எண்ணமும் நிறைவேறும்; ராஜவாழ்க்கையும் (liberated life) வாழ முடியும். இங்கே ‘ராஜவாழ்க்கை’ என்பது சொல்லளவில் சொல்லப்படுவதல்ல. புலன்களுக்கும், மனம்போன போக்கிற்கும், அறிவு அடிமையாகி வாழாமல், எப்போதும் துன்பமிலா வாழ்வாகும். கருமையம் பற்றிய முழுமையானத் தெளிவினைப் பெறுவது அவசியமாகும். அதற்கு திருவேதாத்திரியத்தின் ‘கடவுளும் கருமையமும்’, ‘மனம்” ஆகிய நூல்களை மீண்டும் மீண்டும் படித்து தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    அந்நூல்களில் உள்ள உண்மைகளை மீண்டும், மீண்டும் படிக்க படிக்க, கருமையம், அதன் இருப்பு மற்றும் அதன் நீதிதவறா பணிகளான பதிதல் மற்றும் விளைவுகளை வழங்கும் நுட்ப நிகழ்வுகளை நேரிடையாக காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, நமது மனமானது கருமையத்தூய்மையின் மீது அதிக அக்கறை செலுத்தும். கருமையத் தூய்மைக்கேற்பவே மனித வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் வாய்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    கருமையத்தூய்மையும் எண்ணம் நிறைவேறுதலும் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைர வரிகள் நம்மனதில் எப்போதும் சுழன்று கொண்டே விழிப்புடன் இருக்க, அவ்வரிகளை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக் கொண்டு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம்.

    “கருமையம் தூய்மையாக இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”                ……வேதாத்திரி மகரிஷி அவா்கள்.

    இதுபோன்ற வாழ்வியல் உண்மைகள் அனைத்தும், மனிதனின் பள்ளிக்கல்வி—மாணவப் பருவத்திலேயே முழுமையாகச் சென்றடையச் செய்து மனிதவளத்தை பெருக்கியும், அதன் உச்சத்திற்கே உயா்த்தியும் வளமிகு மனித சமுதாயத்தை, திருவேதாத்திரியம் உருவாக்கி வருகின்றது என்றால் மிகையாகாது. போற்றுவோம் திருவேதாத்திரியத்தை. வாழ்த்துவோம் திருவேதாத்திரியத்தை. வாழ்க திருவேதாத்திரியம் வளர்க திருவேதாத்திரியம்.

    அடுத்த விருந்தில் புதிய தலைப்பின் கீழ், கருமையத்திற்குள்ள நான்கு பாலங்கள் பற்றியும், அவற்றை இறை/இயற்கை தனது செயல்விளைவு நீதியின்படி, மனித வாழ்க்கையில் இன்ப-துன்ப விளைவுகளைத் தரும் நுட்பத்தைப் பற்றியும் அறிவோம். அடுத்த விருந்திற்காகக் (10-05-2015) கூடுவோம்.    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-69

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    04-05-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்!

     

    அறிவின் பருவங்களாக மகரிஷி அவர்கள் கூறும் ஐந்து என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-68

    30-04-2015— வியாழன்

    தற்சோதனையில்லாத தவம் எதற்குச் சமம் என்கிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?

    விடை: — கைப்பிடியில்லாத கத்திக்கு ஒப்பிடுகிறார் தற்சோதனையில்லாத தவத்தை, மகரிஷி அவர்கள். தன்னையே தாக்கிவிடும் என்கிறார். தற்சோதனை செய்யாமல் தவம் மட்டும் செய்து வந்தால் தவஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் தீய எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் நடந்துவிடும். அதற்கு மன்னிப்பு குணம் வேண்டும். தற்சோதனையால் தான் மன்னிப்பு குணத்தை வளர்க்க முடியும்,

    ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    Loading

  • எண்ணிய முடிதல் வேண்டும். 1/2

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

    எண்ணிய முடிதல் வேண்டும். 1/2

    FFC-79

    03-05-2015 – ஞாயிறு

    எண்ணாத மனிதன் யாரும் இல்லை. எண்ணியதெல்லாம் நடந்துவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. எண்ணியது நிறைவேறுகின்றதா வாழ்க்கையில்? அல்லது நிறைவேறுகின்றவாறு எல்லோராலும் எண்ண முடிகின்றதா என்பதும் ஐயமே. எண்ணியது நடக்காதபோது அது கவலையாக மாறுகின்றது. ஏன் இந்த நிலை?

    மனிதன் நினைத்தது நிறைவேறாதபோது என்ன சொல்கிறான்? ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கின்றது.’ என்கிறான். ‘மனிதன் நினைக்கிறான். அதனைத் ‘தெய்வம் நிறைவேற்றுகின்றது. — Man proposes God disposes’ என்று சொல்கிறோம். ஏன் எண்ணுவது நிறைவேறுவதில்லை? அல்லது ஏன் நிறைவேறுகின்றவாறு எண்ண முடிவதில்லை? இதன் விஞ்ஞானம்தான் என்ன? What is the Science of it? மனிதனைவிட தெய்வம் வல்லமை உடையது என்பதால் அவ்வாறு நடக்கின்றதா? தெய்வம் மனிதனைவிட வல்லமை உடையதுதான். இருந்தாலும் மனிதன் நினைத்ததை ஏன் எல்லா சமயங்களிலும் நிறைவேற்றித் தருவதில்லை தெய்வம்?

    ஆகவே தெய்வம் விரும்புவதை அறிந்து, மனிதன் அதனை எண்ணி அடைவதற்கு முயற்சி செய்து பெறுதல் வேண்டும் என்பதுபோல்தானே உள்ளது. ஆம் உண்மைதான். அதில் ஐயம் ஏதும் இல்லை. தெய்வம் விரும்புவதை எவ்வாறு அறிவது? தெய்வமேதான் மனிதனாக இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் தெய்வம் நினைப்பதை ஏன் மனிதன் அறிய முடியாது? தெய்வம் பொதுவாக நினைப்பது எதுவாக இருக்க முடியும்? நல்லது ஒன்றைத்தான் விரும்பும்? தன்னுடைய பிரஜைகளான மனித சமுதாயம் நலமுடன் இருக்கத்தானே விரும்பும்! மனிதன் நல்லவனாக வாழ்வதை விரும்பும் தெய்வம். தெய்வத்தின் தன்மாற்ற மனிதகுல சாம்ராஜ்யத்தில் அமைதியை விரும்பும். தெய்வம் விரும்புவதை அறிவது என்பதனை வார்த்தைகளுக்கான நேர் பொருளில்–literal meaning எடுத்துக்கொண்டாலும் சரி/எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி மனிதன் எண்ணுவதில் ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பதற்கான விளக்கம் தெரிந்ததே. ஆகவே மனிதனின் ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பமாகும். ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பத்தை அறியமுடியும்.

    இன்றைய சிந்தனையில்

    1) எண்ணியதை முடிப்பது எவ்வாறு,
    2) செய்ய முடிந்ததை எவ்வாறு எண்ணுவது,
    3) செய்யத்தக்கவாறு எண்ணுவது பற்றிச் சிந்திக்க இருக்கிறோம்.

    “எண்ணிய முடிதல் வேண்டும்” என இறைவியை வேண்டச் சொல்கின்ற மகான் மகாகவி பாரதியாரை நினைந்து இச்சிந்தனையைத் தொடங்குவோம்.

    அன்னையை வேண்டுதல்

    “எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    ………………………………………………………………………………..
    ……………………………………………………………………………….” மகா கவி பாரதியார்.

    எண்ணியது நடக்க வேண்டும் என்று இறைவியைக் கேளுங்கள் என்கின்ற அதே வேளையில், நல்லவை எண்ணுதல் வேண்டும் எனவும் கேட்கச் சொல்கிறார். முதலில் நல்லதை எண்ண வேண்டும், பிறகு எண்ணிய நல்லது நிகழ வேண்டும். எண்ணியது முடிதல் வேண்டும் என்று கேட்டுவிட்டு, பிறகு ‘நல்லவை எண்ணல் வேண்டும்’ என்றிருக்கின்றது. இதற்கு என்ன பொருள்? ‘நல்லதை எண்ணுவேன்’ என்று இறைவிக்கு உறுதியினை அளிக்கச் சொல்கிறார். எண்ணுவது என்பது மனிதனிடம்தான் உள்ளது. எனவே மனிதன் நல்லதை எண்ணினால், எண்ணியதை நிறைவேற்றுவது இறைவியின் கடமை. என்றாகின்றது.

    மனிதனின் எண்ணம் நிறைவேறுவதைப்பற்றிச் சிந்திக்கின்றோம். ‘என்னைப் பற்றித் தெரிந்துகொள் என்று நம்சிந்தனைக்குள் கருமையம் பிரவேசிக்கின்றது?’, ஏன்? எண்ணியது நிறைவேறுவதற்கும், கருமையத்திற்கும் என்ன தொடர்புள்ளது?

    கருமையம் என்பது என்ன? இதனை ஆன்மா என்றும் சொல்லலாம். உடலில் சுழன்று ஓடிக் கொண்டிருக்கும்போது காந்த ஓட்டம் ‘துல்லிய சமதள சீர்மை’ என்கின்ற தத்துவப்படி உடலில் ஒரு மையத்தில் திணிவு பெறுகின்றது. அந்தத் திணிவு பெற்ற சீவகாந்தமையம் தான் கருமையம் எனப்படுகின்றது? இதன் பணி என்ன? இந்தக் கருமையத்தில் கோடிக்கணக்கில் பதிவுகள்(imprints) உள்ளன. மனம் சுருக்கி பதிவுகளாக இங்கு வைக்கின்றது. வெவ்வேறு அலைச் சுழல்களில் ( different wave lengths) பதிவுகள் உள்ளன.

    ‘இறை, உயிர், மனம் என்னும் மூன்று மறை பொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள்தான் கருமையம்’ என்கிறார் மகரிஷி அவர்கள். நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை செய்து, பின்னர் தீர்ப்பு வழங்குவதுபோல், கருமையைம் மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் (தெய்வம்) இடையே பாலமாக அமைந்திருப்பதால், கருமையத் தெய்வீக நீதி மன்றத்தில் நீதிபதியாகத் தெய்வமே இருந்து கொண்டு மனிதன் செய்துள்ள, செய்கின்ற முத்தொழில்களையும் பதிய வைத்துக் கொண்டு விளைவுகளாக தன் தீர்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
    இப்போது எண்ணியது நிகழ்வதிலும், நிகழ்வதை எண்ணுவதிலும் இந்த கருமையத்தின் பங்கு என்ன என்று அறிந்து கொள்ளவே இன்றைய சிந்தனை. இங்கே செயல் விளைவுத் தத்துவத்தையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ‘செயல் விளைவுத் தத்துவம்’ என்பது மனிதன் செய்யும் செயலுக்கு விளைவு உண்டு என்பதேயாகும். இதனை இயற்கையின் நீதி என்றும் சொல்லலாம், இதனை வேறுவிதமாகவும் சொல்லலாம். இறைவனை எங்கும் தேடவேண்டியதில்லை என்பார் நம்குருதேவர். ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்பார் நம்குருதேவர். மனிதனுடைய செயல்கள் என்னென்ன? மனிதனாகப் பிறந்ததற்கான அடையாளமாக மனிதன் எண்ணுகிறான். பேசுகிறான்(சொல்), பிறகு செயல்புரிகிறான். ஆகவே மனிதனின் முத்தொழில்களாவன: எண்ணம், சொல், செயல். இந்த மூன்றும் பதிவுகள் இல்லாமல் நடப்பதில்லை. எண்ணம் இயற்கையின் சிறப்பு என்பதுபோல், பதிதல் (imprint) இயற்கையின் சிறப்புகளில் மற்றொன்று. பதிதல் இல்லை எனில் எண்ணமே இல்லை. பதிதல் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? சிறிது கற்பனை செய்து பாருங்களேன். சத்சங்க அன்பர்களின் சிந்தனைக்கு விடப்படுகின்றது.

    மனிதனின் முத்தொழில்களும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை. இந்த முத்தொழில்களிலும் முதலில் இடம் வகிப்பது எண்ணமாகும். ஒரு Nano second நினைப்பது கூட பதிவாகாமல் இருப்பதில்லை. கருமையத்திலும், மூளையிலும், வான்காந்தத்திலும் பதிகின்றது. பதிந்ததை அந்த அலைச்சுழல் வரும்போது மீண்டும் பிரதிபலித்துக் காட்டுவது கருமையப் பதிவுகளே. ஒரு எண்ணம் வந்தது என்றால், அதன் விருப்பம்போல், அதனை மனதினுள் விட்டுவிடக்கூடாது. காவலாளிபோல்(gate keeper) இருந்து கொண்டு ஏன் வந்தது, எதற்காக வந்தது, அந்த எண்ணத்தை வளர்த்தால் அதன் விளைவு என்ன என்று முடிவு செய்து, அந்த எண்ணத்தின் விளைவு நன்மை செய்யுமானால் அந்த எண்ணத்தை மனதினுள்ளேவிடலாம். இல்லையென்றால் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டியதுதான். அதாவது அந்த தீயஎண்ணத்தை மீண்டும் மீண்டும், எண்ணி எண்ணி, நீர் பாய்ச்சி, உரம்போட்டு வளர்த்து விட்டால் அது மரமாகி தீயவிளைவுகளை விளைவிக்கும். செயல் விளைவு தத்துவப்படி. எண்ணுவதிற்கும் விளைவு உண்டு.

    1991 அல்லது 1992 ஆம் வருடம் இருக்கலாம். விஞ்ஞானிகளின் கருத்தரங்கிற்கு(Science Meet) தலைமை தாங்க மகரிஷி அவர்கள் வேலூர் வந்திருந்தார். குருதேவர் விருந்தினர் மாளிகையில்(Guest house) தங்கியிருந்தார். ஒரு இனிய காலைப் பொழுது நேரம். அப்போது அவரைச் சந்தித்து ஆசி பெறும்போது, குருதேவர் திருவாய் மலர்கிறார். “இப்பொழுது கூட எந்த ஒரு எண்ணம் வந்தாலும், அதனை watchman ஐப் போல் வெளியே நிற்க வைத்து, அந்த எண்ணம் ஏன் வந்தது, அந்த எண்ணத்தை செயல்படுத்தினால் வரும் விளைவு என்ன என்று ஆராய்ச்சி செய்துவிட்டுத்தான் உள்ளே அனுமதிப்பேன்” என்றார். எண்ணம் ஆராய்தல் என்கின்ற புனிதப் பயிற்சியினை அருளியுள்ள அவருக்கு எண்ணத்தை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பது அவருக்கு இயல்பாகிவிட்ட நிலை.

    இப்போது நாம் சிந்திக்க வேண்டியது என்ன? அவருக்கு அப்போது வயது 80(1991-1911=80) இருக்கும். தனது 35 வயதில் தெய்வநிலை உணர்ந்து 55 வருடங்கள் பரிபூரண வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர் அப்போது. இருப்பினும் எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியில் வைத்திருப்பவர். அந்த நிலையில் அவருக்கு வருகின்ற எண்ணம் என்பது நல்ல எண்ணம், சமுதாயத்தை ஒட்டியே தான் இருக்கும். எனினும் அப்படியொரு நல்ல தெய்வீக எண்ணமாக இருந்தாலும் அதனையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறார். நல்ல எண்ணமாக இருந்தாலும் அதனையும் நிறைவேற்றுவதாக இருந்தாலும் இந்த சமுதாயத்தில்தானே நிறை வேற்ற வேண்டியிருக்கும். அந்த நிகழ்வை சமுதாயம் வரவேற்பதாக இருந்தால் தானே அந்த நல்ல எண்ணத்தையும் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.

    வினை-விளைவு விஞ்ஞானத்தின்படி, எண்ணத்திற்கும் விளைவு உண்டு. எண்ணியதற்கான முதல் விளைவு தனக்குள் ஏற்படும். அது எண்ணிய எண்ணத்திற்கு தகுந்தாற்போல் இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும், பூரிப்பாகவும் இருக்கலாம். அல்லது தீய எண்ணமாக இருந்தால் அது தனக்கே மனதிற்கு பொருந்தா துன்ப உணர்வாகவும் இருக்கலாம். எண்ணத்தை தற்சோதனைக்கு உட்படுத்தாவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் பிரதிபலித்து வலிவு பெற்று சொல்லாக – பேச்சாக வெளிவரும். அந்த சொல்லைப் பொறுத்து விளைவு இன்பமாகவோ அல்லது துன்பமாக வரும். அழுத்தம் பெற்ற எண்ணம் சொல்லாக வராமல், மூன்றாவது தொழிலான செயலாகவும் வரும். செயலுக்கு ஏற்ற விளைவு இன்பமாகவோ, துன்பமாகவோ வரும்.

    இந்த முத்தொழில்களும் கருமையத்தில் பதிவாகாமல் நடப்பதில்லை. செயலுக்குரிய விளைவு, ஐந்து காரணிகளான (1) நோக்கம், (2) திறமை, (3) தொடர்பு கொள்ளும் பொருள், (4) இடம், (5) காலம் ஆகியவைகளைப் பொருத்திருக்கின்றது. அதனால் ஒரு சிலவற்றிற்கு உடனேயும் விளைவுகள் வரலாம். வேறு சிலவற்றிற்கு விளைவுகள் வருவதற்கு காலதாமதம் ஆகும். தீய விளைவுகளை உடனே தரக்கூடிய செயல்களைக்கூட, அறியாமையாலோ, அலட்சியத்தாலோ, உணர்ச்சி வசத்தாலோ அல்லது பழக்கப்பதிவின் அழுத்த உந்துதலாலோ மீண்டும் ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும்’ மனிதன் செய்துவிடுகிறான்; தவிர்க்கமுடிவதில்லை மனிதனால்.

          இதுபோன்ற நிலை காலங்காலமாக இருந்து கொண்டுதான் வருகின்றது.  திருந்துவது போராட்டமாக உள்ளது என்பதாலேயே, மனிதகுலம்,  போராட்டத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடமுடியுமா?

           இதுவரை தோன்றிய அறிஞர்களின் ஆதங்கங்கள் வான்காந்தத்திலே பதிந்து கொண்டுவருகின்றன.   அதன் அழுத்தத் திணிவாலும், மற்றும்  மனிதகுலத்திற்கு ‘விமோசனமே கிடையாதா?’ என்கின்ற பேரறிவின் பின்னமான அருளாளா்கள் மற்றும் நல் உள்ளங்களின் வேண்டுதலுக்கிணங்க(Fraction demands. Totality supplies), இயற்கை கருணையோடு அளித்ததுதான் திருவேதாத்திரியம்.

          மனிதனுள் ஏற்கனவே இருக்கும் பூரணத்தை வெளிக் கொண்டுவருமாறு கல்வி இருக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் மொழிந்துள்ளதுபோல், திருவேதாத்திரியம் கல்வியின் நான்கு அங்கங்களாக எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத்தத்துவ அறிவு என்று கருதுகின்றது.

        கல்வி என்பது ஆரம்பக் கல்வியிலிருந்து ஆரம்பிப்பது. மேலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது எதார்த்த நிலையாக உள்ளது.  எந்த ஒரு நற்பழக்கமும் மனிதன் குழந்தைப் பருவத்திலேயே பழக ஆரம்பிக்க வேண்டும். என்பதால், இயற்கை, இப்போது,  பள்ளிக் கல்வியிலேயே பண்பேற்றக்கல்வியினை திருவேதாத்திரியத்தின் வாயிலாகக் கொண்டுவந்துள்ளது.  வாழ்க திருவேதாத்திரியம்,  வளர்க திருவேதாத்திரியம்.

          அடுத்த விருந்தில் கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.      … தொடரும் 06-05-2015.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading