இன்றைய விருந்து

  • FFC-206-எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 2/3

    எண்ணியது  நிகழ்வதில்  கருமையத்தின் பங்கு என்ன? 2/3

    FFC-206

                                                                    13-07-2016—புதன்

    தூய்மையான கருமையமே எண்ணியதை முடித்து வைக்கும்

    KURAL_666_FFC-206

    மனிதன் பொறுப்புடன் எண்ணுதல் வேண்டும்:

          எண்ணியது முடிதல் வேண்டும் என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்.  இன்றைய விருந்தில் கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.  

         ஒரு மனிதன் எண்ணுவது அவனால்தான் செயலுக்கு வரும் என்று சொல்ல முடியாது.  பிறராலும் செயலுக்கு வரலாம்.  பெரும்பாலும் மனிதன் தனக்காகவே எண்ணுவதுதான் அதிகம்.  எண்ணியதெல்லாம் நிறைவேறிவிட்டால்  மனிதனுக்கு மகிழ்ச்சிதான்.  ஆனால் நடைமுறையில் மனிதன் நினைப்பது அத்தனையும் நடப்பதில்லை.  அப்படியே நடந்தாலும் நன்மையாக இருக்குமா என்றால் அவ்வாறும் சொல்ல முடியாது.  இதற்கு என்ன காரணம்?  பொறுப்புடன் மனிதன் எண்ணுதல் வேண்டும்.  மனிதன் எண்ணுவதில் உள்ள  பொறுப்புகளாவன:

    1)   முதலில் என்ன செய்ய  வேண்டும் என்றும், என்ன செய்யக்கூடாது என்பது தெரிய வேண்டும்.  நுண்மான் நுழைபுலன் வேண்டும்.

    2)   அடுத்ததாக எண்ணுவதைச் செய்ய மனதிற்கு திண்மையும் வேண்டும்.

    3)   செய்ய முடிந்ததை  செய்யத்தக்கவாறு எண்ணவேண்டும்.

        நினைப்பது நிகழக்கூடியதாக இருந்தாலும் அதனையும் நிகழக்கூடிய வகையில் எண்ணவேண்டும்.  அதாவது எண்ணியது நிகழவேண்டும்; நிகழக் கூடியதை எண்ண வேண்டும்.  மனிதனால் எண்ணமுடியும் என்பதால் எதைவேண்டுமானாலும் எண்ணி விடமுடியாது.  எண்ணுவதில் பொறுப்பு அவசியமாகின்றது.  மேலும் பொறுப்பாக எண்ணுகின்ற  அவசியம் இயல்பாக அமைந்துவிட வேண்டும்.  அதற்கு என்ன வேண்டும்?  கருமையத் தூய்மை வேண்டும். இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார் என்று அவரது வைர மொழிகளின் வாயிலாக அறிவோம்.

    எண்ணுதல் நிறைவேறுவதற்கு கருமையத் தூய்மை ஏன் அவசியம்?

     “கருமையம் தூய்மையாக இருக்குமானால்,

    1)    என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்,  

    2)  எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”  

    -வேதாத்திரி மகரிஷி அவா்கள். 

     கருமையத்தூய்மை என்பது என்ன?  முதலில் கருமையம் என்பது என்ன என்று அறிவோம்.  கருமையம் இயற்கையின்/இறையின் நீதி மன்றம்.   ‘அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்’ என்கிறாரே அருளாளர் திருவள்ளுவர், அந்த அகம்தான் கருமையம்.  ‘உள்ளம் பெரும் கோயில்’  என்கிறாரே அறிஞர் திருவள்ளுவர் அந்த உள்ளம் தான் கருமையம்.  கருமையத்திற்கு உருவம் இல்லை. உருவமில்லை என்பதால் கருமையம் இல்லை என்றாகிவிடாது.  கருமையம் அரூபம், ரூபம் இதற்கிடையிலான அரூபா-ரூபம்.  உதாரணத்திற்கு காற்று.  காற்றிற்கு உருவம் இல்லை. உருவமில்லாததால் காற்று இல்லை என்றாகிவிடுமா?  காற்று இருப்பதனை தொடு உணர்வால் உணர்ந்து கொள்ள முடிகின்றதே,  எனவே காற்று அரூபா-ரூப நிலையைச் சேர்ந்தது.  அதேபோன்று கருமையம் அரூபா-ரூபமாக உள்ளது. எனவே கருமையத்தை தூய்மை செய்ய முடியும்.  கருமையத்தில் மனிதனின் பல்லாயிரம் பிறவிகளாக செய்த முத்தொழில்களான எண்ணம், சொல், செயல்கள் ஆகிய மூன்றும்  பதிந்துள்ளன. அவற்றில் நல்லதும் இருக்கலாம். தீயதும் இருக்கலாம். ஆகவே விளக்கம் பெற்ற பிறகு

               தீயவிளைவுகளைத் தரக்கூடிய பதிவுகளை செயலிழக்கச் செய்வதே கருமையத்தூய்மை என்பது.

    பூஜை அறையை தூய்மையாக வைத்திருப்பதுபோல் கருமையத்தை தூய்மையாக வைத்திருத்தல்:

              எவ்வாறு இல்லத்தில், இருக்கும் பூஜை அறையை  தூய்மையாக வைத்திருப்பதில் அக்கறை கொள்கிறோமோ, அவ்வாறே இறை வீற்றிருக்கும்  உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அக்கறைகொண்டு முழுமுயற்சியோடு முறையான பயிற்சிகள் செய்து, சத்சங்கத்தின் பயன்களைப் பெற்றும்,

              இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தியும்,

              இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் நம்மிடம் மலரச் செய்ய வேண்டும்/நிரூபிக்கச் செய்யவேண்டும்.

              மனஅலையின்-மனதின் மறுமுனை-உள்முனை  தெய்வமாக இருப்பதால், மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ அவ்விடத்தை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். ஏனெனில் ஒரு அலை எந்தப் பொருளிலிருந்து/இடத்திலிருந்து புறப்படுகின்றதோ அப்பொருளின்/அவ்விடத்தின் தன்மையை எடுத்துக்கொண்டு செல்லும்.  இது திருவேதாத்திரிய அலைஇயக்கத்தின் சிறப்பு ஆகும். ஏற்கனவே மனதின் மறுமுனை இறையாக இருந்தாலும், அது மனிதனாகி  வந்த வழியில் விலங்கினப்பதிவாகிய பரிணாமக் கசடுகளை சுமந்து கொண்டு வந்துள்ளதாலும், மனிதனாக வந்தபிறகு ஆறாம் அறிவு அதற்கு ஏற்ப பொருத்தமாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைக்காதபோது அறிவு அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய எதிர்மறைத்தன்மைகளுக்கு(negativeness) ஆளாகி துர் எண்ணங்கள்  பதிவுகளாகி ஆக்கிரமித்துக் கொண்டிருத்தலால்(பதிவு) அவ்விடம் தூய்மைக் கெட்டிருக்கின்றது.

             மனம் தூய்மையாக இருந்தால், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாது. மனம் தூய்மையானால் மனித மனமும் இறைமனமும் ஒன்றாகிவிடுகின்றது.  அதனால், இறை  எதனையும் அறியும் ஆற்றல் பெற்றுள்ளதுபோன்றே,  மனித மனதிற்கு ஆற்றல் வந்து விடுகின்றது. ஆகவே இறைமனமான மனித மனதிற்கு விளைவை முன்கூட்டியே அறியும் திறன் வந்துவிடுகின்றது. இத்திறனால் என்ன நடக்க வேண்டுமோ அதனை மனம் எண்ணுகின்றது.  எண்ணுவது நடக்கின்றது.  

    இங்கே வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் வேதவாக்கினை அறிந்து கொள்வோம்:

    Nalla payanulla

    திருவள்ளுவர் எண்ணத்தைப்பற்றி என்ன கூறுகிறார்?

          திருவள்ளுவர்  எண்ணத்தைப்பற்றிக் கூறுவதைக் கவனிப்போம்.  வினைத்திட்பம் என்கின்ற அதிகாரத்தில் ஆறாவது குறளாகக் கூறுவது என்ன?

    அதிகாரம்—வினைத்திட்பம்.

     “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியா்

    திண்ணியா் ஆகப் பெறின்.”                     …..குறள் எண் 666

     கருத்துரை:   எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருந்தால் எண்ணியது நடக்கும். அதாவது செயல் வலிமையுடையதாக  இருந்தால் செயல்புரிபவர் எண்ணியதை எண்ணியவாறே பெறுவர்.

         மேலும்  இக்குறளுக்கான பொருளை ஆராய்வோம்.  இக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரத்தையும், அவ்வதிகாரம் எந்த அதிகாரத்திற்குப் பிறகு திருவள்ளுவர் வைத்துள்ளார் என்பதனையும் கவனிக்க வேண்டும்.  வினைத்திட்பம் என்கின்ற அதிகாரம் வினைத்தூய்மை என்கின்ற அதிகாரத்திற்கு பிறகு வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் நோக்கத்தை அறிய வேண்டும்.  

         வினைத்திட்பம் அதிகாரத்தில் இக்குறள் அருளப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன?  திட்பம் என்றால் என்ன என்று அறிய வேண்டும். திட்பம் என்பது உயர்வழக்குச் சொல்.  அதனால்தான் இச்சொல் திருவள்ளுவரால் செய்யுளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  திட்பம் என்றால் வலிமை, உறுதி,(firmness) என்று பொருள்.  வினைத்திட்பம் என்றால் செய்கின்ற செயலில் உறுதி இருக்க வேண்டும்.   செயலை நல்லது என முடிவு செய்து செயலை செய்வதில் இருக்க வேண்டி உறுதியைத் தெரிவிக்கின்றது.  ‘முடிவு’ என்பது எண்ணம் ஒரு முறை எண்ணிவிடுவதல்ல. பலமுறை எண்ணி இருக்க வேண்டும். பிறகு செயலில் உறுதியோடுஇறங்க வேண்டும்.  அப்போது மனதிற்கு திட்பம் உண்டாகும். அதுதான் மனத்திட்பம் எனப்படுகின்றது.  ஒரு முறை எண்ணி ஒரு முறை முயலுவதிலேயே வெற்றி கிட்டிவிடும் எனச் சொல்ல முடியாது. தோல்வியும் நேரலாம்.  அதனால்தான் தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு எனப்படுகின்றது வெற்றியாளர்களால். இதுவரை அதிகாரத்தின் பெயருக்கான விளக்கத்தை அறிந்து கொண்டோம்.  

        இப்போது குறளுக்கு வருவோம்.  எண்ணியது நடக்கும்,  எப்போது நடக்கும்? எண்ணியவர் திண்ணியராக  இருப்பின் எண்ணியது நடக்கும்.  ‘திண்ணிய’ உறுதியான என்று பொருள். எனவே எண்ணுவதும் மனம்தான்.  அதே நேரத்தில் மனம் அதனை அடைய செயல்புரிவதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆயிரம் பேர் எண்ணலாம் ஒரு காரியத்தை செய்வதற்கு.  ஆனால் யார் யார் உறுதியாக செயல்படுகின்றனரோ அவர்களே எண்ணியதை அடைகின்றனர். 

         மேலும் எண்ணியது நடை பெற செயலில் இறங்க வேண்டும்.  அச்செயலில் வெற்றிகிடைக்க முயற்சி வேண்டும்.  சில நேரங்களில் முயற்சி தொடர் விடா முயற்சியாகவும் இருக்க வேண்டும். ஆள்வினை உடைமை அதிகாரத்தில் முயற்சி பற்றியும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.  முயற்சி என்பது தெய்வீகப்பண்பு. இறை நிர்குணமானது என்று சொல்லப்பட்டாலும் வேதாத்திரியம் இறைவெளியாக இருக்கும் இறைக்கு தரங்களையும், திறன்களையும் கூறுகின்றது.     இறையே மனிதனாகியது என்கின்ற போது இறையிடம் இல்லாத பண்போ, குணமோ மனிதனிடம் எதிர்பார்க்க முடியாது.  ஆகவே மனிதனுக்கு முயற்சி  மிக மிக அவசியம் என்றால் முயற்சி என்கின்ற பண்பு இறையிடம் இருக்கின்றது.  இறையின் தன்மாற்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாற்றமும் முயற்சியினால்தான் வந்துள்ளது.  அதனால்தான் முயற்சியை தெய்வத்தோடு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர்.

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

    மெய்வருத்தக் கூலி தரும்  …..குறள் எண்.  619.

      முயற்சிக்கு எதிர் சோம்பல்.  அதனால் தான் முயற்சியை பற்றிக் கூறும் அதிகாரத்திற்கு முன் மடிஇன்மை அதிகாரத்தை வைத்துள்ளார்.

      இப்போது ‘திண்ணிய’ என்கின்ற சொல் கூறும் பொருள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். திண்ணிய என்றால் உறுதி என்று பார்த்தோம்.  உறுதி உள்ள மனம்தான் ஆள்வினையுடைமையானதாக இருக்கும்.  முயற்சி இல்லாத மனம் திண்ணியதாக இருக்க முடியாது என்கின்ற பொருளையும்  அறிந்து கொள்ளட்டும்.

      மனிதன் வாழ்நாளில்  எத்தனையோ காரியங்களைச் செய்கிறான்.  இருப்பினும் செயற்தக்க அரிய  காரியம் இரண்டு  உள்ளது.  ஒன்று வாழ்வின் நோக்கத்தை அருளார்களின் வழிகாட்டுதலுடன், ஆசியுடன் அவனாகவே அறிவது.  வாழ்வின் நோக்கத்தை அறிவது. என்பதனை விட கண்டுபிடிப்பது என்றுசொல்வதே பொருத்தமாக இருக்கும். பின்னர் அதனை அடைவது இரண்டாவது செயற்தக்க அரிய காரியம்.  வாழ்வின் நோக்கம் கண்டுபிடித்த பிறகு, அதனை, ‘இப்பிறவியிலேயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்கின்ற புனித எண்ணமாக மாறுகின்றது.   அந்த புனித எண்ணம் நிறைவேற திண்ணிய நெஞ்சம் வேண்டும் மனிதனுக்கு. 

         திருவள்ளுவரைப் போன்றே மகான் மகா கவி பாரதியார் எண்ணியது முடிவதற்கும், அதே நேரத்தில் நல்லவை எண்ணவேண்டும் என்பதில் உறுதியோடு இருக்க திண்ணிய நெஞ்சம் வேண்டும் என இறைவியை இறைஞ்சுகிறார். அப்பாடலை நினைவில் அடுத்த விருந்தில் (17-07-2016 ஞாயிறு) அறிந்து கொள்வோம்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்


    அறிவிப்பு  

    வாழ்க வளமுடன்.

                        செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு  இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம். 

            அன்றைய தலைப்பு – அருளாளர்கள் உலகம்

    வாழ்க வளமுடன். 

    www.prosperspiritually.com


    Loading

  • FFC – 205-எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 1/3

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 1/3

    FFC –  205

     10-07-2016-ஞாயிறு

    எண்ணிய முடிதல் வேண்டும்.

    எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியிலேயே வைத்துப்பழகி  

                அறிஞர்கள் ஆவோம் விரைவில். வாழ்க வளமுடன்.

    Analysis_of_Thought

     

    எண்ணம் என்பதன் வரையரையை நாம் அறிவோம். எண்ணாத மனிதன் யாரும் இல்லை. எண்ணியதெல்லாம் நடந்துவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. எண்ணியது நிறைவேறுகின்றதா வாழ்க்கையில்? அல்லது நிறைவேறுகின்றவாறுதான் எல்லோராலும் எண்ண முடிகின்றதா என்பதும் ஐயமே. எண்ணியது நடக்காதபோது அது கவலையாக மாறுகின்றது. ஏன் இந்த நிலை?
    மனிதன் நினைத்தது நிறைவேறாதபோது என்ன சொல்கிறான்? ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கின்றது.’ என்கிறான். ‘மனிதன் நினைக்கிறான். அதனை ‘தெய்வம் நிறைவேற்றுகின்றது. — Man proposes God disposes’ என்று சொல்கிறோம். ஏன் எண்ணுவது நிறைவேறுவதில்லை? அல்லது ஏன் நிறைவேறுகின்றவாறு எண்ண முடிவதில்லை? இதன் விஞ்ஞானம்தான் என்ன? What is the Science of it? மனிதனைவிட தெய்வம் வல்லமை உடையது என்பதால் அவ்வாறு நடக்கின்றதா? தெய்வம் மனிதனைவிட வல்லமை உடையதுதான். இருந்தாலும் மனிதன் நினைத்ததை ஏன் எல்லா சமயங்களிலும் நிறைவேற்றித் தருவதில்லை தெய்வம்?
    ஆகவே தெய்வம் விரும்புவதை அறிந்து, மனிதன் அதனை எண்ணி அடைவதற்கு முயற்சி செய்து பெறுதல் வேண்டும் என்பதுபோல்தானே உள்ளது. ஆம் உண்மைதான். அதில் ஐயம் ஏதும் இல்லை. தெய்வம் விரும்புவதை எவ்வாறு அறிவது? தெய்வமேதான் மனிதனாக இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் தெய்வம் நினைப்பதை ஏன் மனிதன் அறிய முடியாது? தெய்வம் பொதுவாக நினைப்பது எதுவாக இருக்க முடியும்? நல்லது ஒன்றைத்தான் விரும்பும்? தன்னுடைய பிரஜைகளான மனித சமுதாயம் நலமுடன் இருக்கத்தானே விரும்பும்! மனிதன் நல்லவனாக வாழ்வதை விரும்பும் தெய்வம். தன்னுடைய தன்மாற்ற மனிதகுல சாம்ராஜ்யத்தில் அமைதியை விரும்பும். தெய்வம் விரும்புவதை அறிவது என்பதனை வார்த்தைகளுக்கான நேர் பொருளில்–literal meaning எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி மனிதன் எண்ணுவதில் ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பதற்கான விளக்கம் தெரிந்ததே. ஆகவே மனிதனின் ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பமாகும். ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பத்தை அறியமுடியும்.
    இன்றைய சிந்தனையில்
    1) எண்ணியதை முடிப்பது எவ்வாறு,
    2) செய்ய முடிந்ததை எவ்வாறு எண்ணுவது,
    3) செய்யத்தக்கவாறு எண்ணுவது பற்றிச் சிந்திக்க இருக்கிறோம்.

    “எண்ணிய முடிதல் வேண்டும்” என இறைவியை வேண்டச் சொல்கின்ற மகான் மகாகவி பாரதியாரை நினைந்து இச்சிந்தனையைத் தொடங்குவோம்.

    அன்னையை வேண்டுதல்

    “எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    ………………………………………………………………………………..
    ……………………………………………………………………………….” மகா கவி பாரதியார்.

    எண்ணியது நடக்க வேண்டும் என்று இறைவியைக் கேளுங்கள் என்கின்ற அதே வேளையில், நல்லவை எண்ணுதல் வேண்டும் எனவும் கேட்கச் சொல்கிறார். முதலில் நல்லதை எண்ண வேண்டும், பிறகு எண்ணிய நல்லது நிகழ வேண்டும். எண்ணியது முடிதல் வேண்டும் என்று கேட்டுவிட்டு, பிறகு ‘நல்லவை எண்ணல் வேண்டும்’ என்றிருக்கின்றது. இதற்கு என்ன பொருள்? ‘நல்லதை எண்ணுவேன்’ என்று இறைவிக்கு உறுதியினை அளிக்கச் சொல்கிறார். எண்ணுவது என்பது மனிதனிடம்தான் உள்ளது. எனவே மனிதன் நல்லதை எண்ணினால், எண்ணியதை நிறைவேற்றுவது இறைவியின் கடமை. என்றாகின்றது.
    மனிதனின் எண்ணம் நிறைவேறுவதைப்பற்றிச் சிந்திக்கின்றோம். ‘என்னைப் பற்றித் தெரிந்துகொள் என்று நம்சிந்தனைக்குள் கருமையம் பிரவேசிக்கின்றது?’ ஏன்? எண்ணியது நிறைவேறுவதற்கும், கருமையத்திற்கும் என்ன தொடர்புள்ளது?
    கருமையம் என்பது என்ன? இதனை ஆன்மா என்றும் சொல்லலாம்.

    உடலில் சுழன்று ஓடிக் கொண்டிருக்கும்போது காந்த ஓட்டம் ‘துல்லிய சமதள சீர்மை’ என்கின்ற தத்துவப்படி உடலில் ஒரு மையத்தில் திணிவு பெறுகின்றது. அந்தத் திணிவு பெற்ற சீவகாந்தமையம் தான் கருமையம் எனப்படுகின்றது? இதன் பணி என்ன? இந்தக் கருமையத்தில் கோடிக்கணக்கில் பதிவுகள்(imprints) உள்ளன. மனம் சுருக்கி பதிவுகளாக இங்கு வைக்கின்றது. வெவ்வேறு அலைச் சுழல்களில் ( different wave lengths) பதிவுகள் உள்ளன.
    ‘இறை, உயிர், மனம் என்னும் மூன்று மறை பொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள்தான் கருமையம்’ என்கிறார் மகரிஷி அவர்கள். நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை செய்து, பின்னர் தீர்ப்பு வழங்குவதுபோல், கருமையம் மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் (தெய்வம்) இடையே பாலமாக அமைந்திருப்பதால், கருமையத் தெய்வீக நீதி மன்றத்தில் நீதிபதியாகத் தெய்வமே இருந்து கொண்டு மனிதன் செய்துள்ள, செய்கின்ற முத்தொழில்களையும் பதிய வைத்துக் கொண்டு விளைவுகளாக தன் தீர்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
    இப்போது எண்ணியது நிகழ்வதிலும், நிகழ்வதை எண்ணுவதிலும் இந்த கருமையத்தின் பங்கு என்ன என்று அறிந்து கொள்ளவே இன்றைய சிந்தனை. இங்கே செயல் விளைவுத் தத்துவத்தையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ‘செயல் விளைவுத் தத்துவம்’ என்பது மனிதன் செய்யும் செயலுக்கு விளைவு உண்டு என்பதேயாகும். இதனை இயற்கையின் நீதி என்றும் சொல்லலாம். இதனை வேறுவிதமாகவும் சொல்லலாம். இறைவனை எங்கும் தேடவேண்டியதில்லை என்பார் நம்குருதேவர். ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்பார் நம்குருதேவர். மனிதனுடைய செயல்கள் என்னென்ன? மனிதனாகப் பிறந்ததற்கான அடையாளமாக மனிதன் எண்ணுகிறான். பேசுகிறான்(சொல்), பிறகு செயல்புரிகிறான். மனிதனின் முத்தொழில்களாவன: எண்ணம், சொல், செயல். இந்த மூன்றும் பதிவுகள் இல்லாமல் நடப்பதில்லை. எண்ணம் இயற்கையின் சிறப்பு என்பதுபோல், பதிதல் (imprint) இயற்கையின் சிறப்புகளில் மற்றொன்று. பதிதல் இல்லை எனில் எண்ணமே இல்லை. பதிதல் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? சிறிது கற்பனை செய்து பாருங்களேன். சத்சங்க அன்பர்களின் சிந்தனைக்கு விடப்படுகின்றது.
    மனிதனின் முத்தொழில்களும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை. இந்த முத்தொழில்களிலும் முதலில் இடம் வகிப்பது எண்ணமாகும். ஒரு Nano second நினைப்பது கூட பதிவாகாமல் இருப்பதில்லை. கருமையத்திலும், மூளையிலும், வான்காந்தத்திலும் பதிகின்றது. பதிந்ததை அந்த அலைச்சுழல் வரும்போது மீண்டும் பிரதிபலித்துக் காட்டுவது கருமையப் பதிவுகளே. ஒரு எண்ணம் வந்தது என்றால், அதன் விருப்பம்போல், அதனை மனதினுள் விட்டுவிடக்கூடாது. காவலாளிபோல்(gate keeper) இருந்து கொண்டு ஏன் வந்தது, எதற்காக வந்தது, அந்த எண்ணத்தை வளர்த்தால் அதன் விளைவு என்ன என்று முடிவு செய்து, அந்த எண்ணத்தின் விளைவு நன்மை செய்யுமானால் அந்த எண்ணத்தை மனதினுள்ளேவிடலாம். இல்லையென்றால் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டியதுதான். அதாவது அந்த எண்ணத்தை மீண்டும் மீண்டும், எண்ணி எண்ணி, நீர் பாய்ச்சி, உரம்போட்டு வளர்த்து விட்டால் அது மரமாகி தேவையற்ற விளைவுகளை விளைவிக்கும். செயல் விளைவு தத்துவப்படி எண்ணுவதிற்கும் விளைவு உண்டு.
    1991 அல்லது 1992 ஆம் வருடம் இருக்கலாம். விஞ்ஞானிகளின் கருத்தரங்கிற்கு(Science Meet) தலைமை தாங்க மகரிஷி அவர்கள் வேலூர் வந்திருந்தார். குருதேவர் விருந்தினர் மாளிகையில்(Guest house) தங்கியிருந்தார். ஒரு இனிய காலைப் பொழுது நேரம். அப்போது அவரைச் சந்தித்து ஆசி பெறும்போது, குருதேவர் திருவாய் மலர்கிறார். “இப்பொழுது கூட எந்த ஒரு எண்ணம் வந்தாலும், அதனை watchman ஐப் போல் வெளியே நிற்க வைத்து, அந்த எண்ணம் ஏன் வந்தது, அந்த எண்ணத்தை செயல்படுத்தினால் வரும் விளைவு என்ன என்று ஆராய்ச்சி செய்துவிட்டுத்தான் உள்ளே அனுமதிப்பேன்” என்றார். எண்ணம் ஆராய்தல் என்கின்ற புனிதப் பயிற்சியினை அருளியுள்ள அவருக்கு எண்ணத்தை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பது அவருக்கு இயல்பாகிவிட்ட நிலை.

    இப்போது நாம் சிந்திக்க வேண்டியது என்ன? அவருக்கு அப்போது வயது 80(1991-1911=80) இருக்கும். தனது 35 வயதில் தெய்வநிலை உணர்ந்து 55 வருடங்கள் பரிபூரண வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர் அப்போது. இருப்பினும் எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியில் வைத்திருப்பவர். அந்த நிலையில் அவருக்கு வருகின்ற எண்ணம் என்பது நல்ல எண்ணம், சமுதாயத்தை ஒட்டியே தான் இருக்கும். எனினும் அப்படியொரு நல்ல தெய்வீக எண்ணமாக இருந்தாலும் அதனையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறார். நல்ல எண்ணமாக இருந்தாலும் அதனையும் நிறைவேற்றுவதாக இருந்தாலும் இந்த சமுதாயத்தில்தானே நிறை வேற்ற வேண்டியிருக்கும். அந்த நிகழ்வை சமுதாயம் வரவேற்பதாக இருந்தால் தானே அந்த நல்ல எண்ணத்தையும் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.

    இந்நிகழ்ச்சியில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று உள்ளது. மகரிஷி அவர்கள், அறிவின் முழுமைப்பேறு அடைந்து, அதாவது முழுமையாக மனத்தூய்மை அடைந்து (80-35=45) 45 வருடங்கள் கழிந்த பிறகும் எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியிலேயே வைத்திருக்கிறார் என்பதனை அறிந்து மகிழ முடிகின்றது.

    அதே நேரத்தில் நாமே எண்ணம் எண்ணுவதிலோ அல்லது மற்றவரின் எண்ணங்கள் நம்மனதில் புகும்போது எவ்வாறு விழிப்புடன் இருக்கப் பயில வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை அறிய வைத்தது இயற்கை/இறை என்பதனை நினைந்து நன்றி செலுத்தி மகிழ்கிறோம்.

       மேலும், நம்குருதேவரின் வாழ்வில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சியினையும் அறிந்து ரசிப்போம் மகிழ்வோம். இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் நம்மிடையே செயலாவதற்கான வாய்ப்பல்லவா இது.

    மகரிஷி அவர்கள் 2002 இல் ‘மதமும் மனிதனும்’ என்கின்ற நூல் எழுதியபோது. பக்கம் 11 இல் குருவிற்கு வணக்கம் செலுத்தியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சில வைர வரிகளை நினைவுகூர்வோம். அவ்வரிகளாவன:

    இந்தக் கருத்துக்களைத் தொகுக்கும்போது வேறு சில அன்பர்களின் உரையாடலோ, செயல்களின் தாக்கமோ ஏற்படாது இருக்கத் தக்க நேரம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. நேற்றிலிருந்து(17-11-2011) இந்த ஆண்டு மௌன நோன்பு தொடங்கியிருக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு இந்த உயர்ந்த நன்நோக்கக் கருத்துக்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளேன்.” என்று மகரிஷி அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார்.” இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்ன?

    எண்ணங்கள் வலிமையானவை. அறியாமலேயே கூட பிறர் மனங்களில் ஊடுருவக் கூடிய ஆற்றல் உடைய மௌன ஊடகம் எண்ணம். ஆகவே எண்ணம் வருகின்றது/எழுகின்றது என்றால் எண்ணம் எழுவதற்கு ஆறு காரணங்கள் உள்ளதால், எண்ணத்தை ஆறு சோதனைகளுக்கும் உட்படுத்திய, பின்னர்தான் எண்ணத்தை நம் மனதுள் அனுமதிக்கும் நற்பழக்கத்தை பழகிக்கொள்ள வேண்டும். 

    இதுவே அறிவை அயரா விழிப்புணர்வில் இருக்கச் செய்யும்.

       அறிவின் முழுமைப்பேற்றினை அடைந்த, தனது எண்பது வயதிலும்கூட எண்ணத்தை ஆராய்ச்சியிலே வைத்திருந்தார் என்றால், இறை உணர் ஆன்மீக சாதகர்கள் தெய்வீகப்பயிற்சியான தற்சோதனையின் முதல் பாடமான ‘எண்ணம் ஆராய்தலில் எந்த அளவிற்குத் தேர்ச்சி பெற/பெற்றிருக்க  வேண்டும் என அறிந்து கொள்ள வேண்டியது பொறுப்பு மிகுந்த கடமையாகும் இதுவே நன்றி உணர்வாக, நம்குருதேவருக்கு செலுத்தும் காணிக்கையாகும்.

    “எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,

    எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்” என்று மகரிஷி அவர்கள் இயம்புவதை இப்போது நினைவு கூர்வது சிறப்புடையது.

    எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியிலேயே வைத்துப்பழகி அறிஞர்கள் ஆவோம் விரைவில். வாழ்க வளமுடன்.

    வினை-விளைவு விஞ்ஞானத்தின்படி, எண்ணத்திற்கும் விளைவு உண்டு. எண்ணியதற்கான முதல் விளைவு தனக்குள் ஏற்படும். அது எண்ணிய எண்ணத்திற்கு தகுந்தாற்போல் இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும், பூரிப்பாகவும் இருக்கலாம். அல்லது தீய எண்ணமாக இருந்தால் அது தனக்கே மனதிற்கு பொருந்தா துன்ப உணர்வாகவும் இருக்கலாம். எண்ணத்தை தற்சோதனைக்கு உட்படுத்தாவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் பிரதிபலித்து வலிவு பெற்று சொல்லாக – பேச்சாக வெளிவரும். அந்த சொல்லைப் பொறுத்து விளைவு இன்பமாகவோ அல்லது துன்பமாக வரும். அழுத்தம் பெற்ற எண்ணம் சொல்லாக வராமல், மூன்றாவது தொழிலான செயலாகவும் வரும். செயலுக்கு ஏற்ற விளைவு இன்பமாகவோ, துன்பமாகவோ வரும்.
    இந்த முத்தொழில்களும் கருமையத்தில் பதிவாகாமல் நடப்பதில்லை. செயலுக்குரிய விளைவு, ஐந்து காரணிகளான

            (1) நோக்கம்,

           (2) திறமை,

           (3) தொடர்பு கொள்ளும் பொருள்,

           (4) இடம்,

           (5) காலம் ஆகியவைகளைப் பொருத்திருக்கின்றது.

      அதனால் ஒரு சிலவற்றிற்கு உடனேயும் விளைவுகள் வரலாம். வேறு சிலவற்றிற்கு விளைவுகள் வருவதற்கு காலதாமதம் ஆகும். தீய விளைவுகளை உடனே தரக்கூடிய செயல்களைக்கூட, அறியாமையாலோ, அலட்சியத்தாலோ, உணர்ச்சி வசத்தாலோ அல்லது பழக்கப்பதிவின் அழுத்த உந்துதலாலோ மீண்டும் ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும்’ மனிதன் செய்துவிடுகிறான்; தவிர்க்கமுடிவதில்லை மனிதனால்.

    இதுபோன்ற நிலை காலங்காலமாக இருந்து கொண்டுதான் வருகின்றது. திருந்துவது போராட்டமாக உள்ளது என்பதாலே, மனிதகுலம், போராட்டத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடமுடியுமா?

    இதுவரை தோன்றிய அறிஞர்களின் ஆதங்கங்கள் வான்காந்தத்திலே பதிந்து கொண்டுவருகின்றன. அதன் அழுத்தத் திணிவாலும், மற்றும் மனிதகுலத்திற்கு ‘விமோசனமே கிடையாதா?’ என்கின்ற பேரறிவின் பின்னமான அருளாளா்கள் மற்றும் நல் உள்ளங்களின் வேண்டுதலுக்கிணங்க(Fraction demands. Totality supplies), இயற்கை கருணையோடு அளித்ததுதான் திருவேதாத்திரியம். மனிதனுள் ஏற்கனவே இருக்கும் பூரணத்தை வெளிக் கொண்டுவருமாறு கல்வி இருக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் மொழிந்துள்ளதுபோல், திருவேதாத்திரியம் கல்வியின் நான்கு அங்கங்களாக எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத்தத்துவ அறிவு என்று கருதுகின்றது.

    கல்வி என்பது ஆரம்பக் கல்வியிலிருந்து ஆரம்பிப்பது. மேலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’, ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது எதார்த்த நிலையாக உள்ளது. எந்த ஒரு நற்பழக்கமும் மனிதன் குழந்தைப் பருவத்திலேயே பழக ஆரம்பிக்க வேண்டும் என்பதால், இயற்கை, இப்போது, பள்ளிக் கல்வியிலேயே பண்பேற்றக்கல்வியினை திருவேதாத்திரியத்தின் வாயிலாகக் கொண்டுவந்துள்ளது. வாழ்க திருவேதாத்திரியம், வளர்க திருவேதாத்திரியம்.

    அடுத்த விருந்தில் (13-07-2016 புதன்) கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.

    … தொடரும் 13-07-2016

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு  

     08-07-2016-வெள்ளி

    வாழ்க வளமுடன்.

                       செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

    வாழ்க வளமுடன்.

    www.prosperspiritually.com

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி,
    வாழ்க வளமுடன்

    Loading

  • இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள். 2/2

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள். 2/2 

    FFC –  204

     06-07-2016-புதன்

    ‘உண்மையான நான்’ (Real ‘I’) அறிவிற்கு(மனிதனுக்கு) தெரிவதில்லை!

    சுய விலாசம் அறிய வேண்டும்:

    மனிதன் ‘தன்னை தவறாக அடையாளம்’ கொண்டிருக்கிறான். எனவே அவன் பல துன்பங்களுக்குள்ளாகிறான். மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாமலா வாழ்கிறான் என ஐயம் எழலாம்! அதாவது தான் யார் எனத் தெரியாமலா மனிதன் வாழ்கிறான் என்று நினைக்கலாம்! மனிதன், தன்னை மனிதன் என்றும், மேலும் தன் பெயரை வைத்தும், இன்னாரின் மகன் என்றும், தற்காலிக மற்றும் நிரந்தர முகவரியை(present and permanent address) வைத்தும் அடையாளம் கொள்கிறான். பொதுவாக தன்னை மனிதர்கள் எல்லோரும் கொள்ளும் இந்த அடையாளம் அல்ல இங்கே நாம் கூறும் அடையாளம்! அறிவின் இருப்பிடம் அறிந்து தன்னை அடையாளம் கொள்ள வேண்டும். தன்னுடைய சுய விலாசம் தெரிய வேண்டும். சுய விலாசம் மனிதகுலத்திற்கே ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதனை அறிவதற்காக, அறிவின் இருப்பிடத்தைக் காண்பிக்க மகரிஷி அவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்.

    மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்? ஆம் தவறான அடையாளத்தால்தான் துன்பங்களை அனுபவிக்கிறான். காரணம் தவறான அடையாளத்தால் அவனுடைய சரியான உண்மை அடையாளம் தெரிவதில்லை. அதாவது உண்மையான நான் (Real I) அவனுக்குத் தெரிவதில்லை.

    தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும், சரியாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும், வாழ்க்கை முறையில் வித்தியாசங்கள் பல உள்ளன. எனவேதான் தவறாக அடையாளம் கொண்டு வாழும் முறையில் துன்பங்கள் வருகின்றன. சரியாக அடையாளம் கொண்டு வாழும் போது இயற்கை விதித்துள்ளபடி எப்படி வாழ வேண்டுமோ, அவ்வாறு வாழும் போது இயற்கையே துணையாக இருக்கின்றது. அங்கே துன்பங்களைத் தவிர்க்கிறான். இன்பமே எஞ்சி நிற்கின்றது.

    தன்னைச் சரியாக அடையாளம் கொண்டு வாழ்ந்தால் இயற்கையோடு இணைந்து, இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழமுடியும். இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழ்ந்தால் இன்பம்தான். தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழும்போது இயற்கைக்கு முரணாக வாழ்கின்றது மனித சமுதாயம். ஆகவே வறுமை, பசி, பட்டினி, சண்டை, சச்சரவு, போர், பிணி, அச்சம், திருடு, கொலை, கற்பழிப்பு, சினம், கவலை, பயம் அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், சமுதாய அக்கறையின்மை ஆகிய பல்வேறு வகையானத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது மனித சமுதாயம்.

    தவறான அடையாளத்தால் தவறாகத்தானே வாழ முடியும்?!

    தவறான அடையாளத்தால் தவறுதானே நடக்க முடியும்! அவனுடைய உண்மையான நான் தெரிந்திருந்தால் அதற்கேற்ப அவன் வாழ்வான். வாழ்க்கையில் இன்பமிருக்கும். தவறான அடையாளத்தால் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே பல்வகையானத் துன்பங்களை அனுபவிக்கிறான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மனிதர்கள்தான் தங்களைத் தவறாக அடையாளம் காண்கிறார்கள் என்பதில்லை. அறிவை அறிந்த அறிஞர்களைத் தவிர மனித சமுதாயமே தன்னைத் தவறாகவே அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றது. ஆகவே தான் இன்று உலகத்தில் அமைதியின்மைக் காணப்படுகின்றது.

    வாழ்க்கையில் என்ன வேண்டும்?
    எதில் வெற்றி பெற வேண்டும்?
    வாழ்க்கையில் துன்பமில்லா–இன்பம் வேண்டும்.
    பேரின்பமே வேண்டும்.
    துன்பம் வந்தாலும் அதனைத் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும்.
    ஆகவே வாழ்வில் துன்பமில்லா–இன்பம் பெறுவதில் வெற்றி பெற வேண்டும்.
    துன்பம் தேவையில்லை. பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும்.

    ‘நான் யார்-வினா எழுதலே’ தவறான அடையாளம் கொண்டிருத்தலை உறுதிப் படுத்துகின்றது:

    நான் யார் என்கின்ற வினா எழும்போதே இதுவரை தவறான அடையாளத்தில் இருப்பது உறுதியாகின்றது. சரியான அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே இதுவரை தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவி்ல்லை என்றாகின்றது.

    தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே. தன்னை அறிவது என்பது இயற்கையின் நோக்கம். தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானதுதானே? இயற்கைக்கு முரணாக வாழ்ந்தால் விளைவு துன்பமே. மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?

    தவறான அடையாளம் எது?

    தேகாபிமானமே (body consciousness) தவறான அடையாளமாகும். அதாவது

    தவறான அடையாளம் என்பது தன் பரு உடலுடன் (physical body) தன்னை அடையாளம் காண்கிறான் மனிதன்.
    உடல் உண்மையான நானல்ல (It is not real I). .
    உடலே உண்மையான நானாக இருந்திருந்தால்,

    மரணத்திற்கும் பிறகும், அதாவது உயிர் பிரிந்த பிறகும்,

    உயிருடன் இருந்த போது சொல்வது போல் உடல், “நான்- நான்” என்று சொல்லிக் கொண்டிருக்கலாமே! அப்படிச் சொல்வதில்லையே!. எனவே உடல் நானல்ல. இறந்த பின் உடல் இருந்தும் முன்பு போல், அது “நான்” எனக் கூறுவது இல்லை. ஏன் என்பது அனைவரும் அறிவர். மரணத்தின் போது உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது. எனவே உடலுக்கு உணா்வு இல்லை. உயிர் உள்ள போது நான் எனக் கூறியது எது? அதுதான் அறிவு எனவே அறிவுதான் “உண்மையான நான்”(Real I).

    உடலை “நான்” என்கின்ற போது அது தன் முனைப்புள்ள நானாக (Egoful I) உள்ளது. உடலளவிலே அறிவு குறுகி நிற்கின்றது. இறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆகி விடுகின்றது. இறையை மறந்து விடுகின்றது. விழிப்புணர்வில் இடறி விடுகின்றது. உடலை நான் எனக் கருதுவது சரீர உணர்வாகும்(body consciousness).

    எப்போது தன்முனைப்பற்ற நானாக(Egoless I) மாறுவது?

    தளையில் (bondage) அகப்பட்டுக் கொள்கின்றது. விடுதலை (liberation), இல்லாமல் தவிக்கின்றது. அறிவுதான் உண்மையான நானாக இருக்கும் போது உடலை நான் எனக் கருதுவது தவறான அடையாளம். உடல் சரியான அடையாளமில்லை. எங்கும் நிறைந்துள்ள சர்வ வியாபியான இறை நம்முள்ளும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இறையை அடையாளம் காட்ட வேண்டுமல்லவா? உடலை தன்னுடைய அடையாளமாகக் காட்டுவது சரியல்ல.

    இறை நம்முள் இருக்கின்றது என்று அறிகின்ற இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சியில், உடலுடன் தன்னைத் தவறாக அடையாளம் கொண்டால் அது பயன் அற்று போய்விடும்.

    “அவனில் தான் நீ, உன்னில் அவன்
      அவன் யார்? நீ யார்? பிரிவேது?
    அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
    அறிவு முழுமை அது முக்தி ”

    எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இறையும் நாமும் ஒன்று என அறிந்து கொள்ளும்போது மனித அறிவு முழுமை பெறுகின்றது. அதுவே முக்தி என்கிறார். அதுவரை அறிவு, மனித இணப்பரிணாமத்தில் கொண்டுவந்துள்ள பரிணாமக்கசடுகளால்(விலங்கினப் பண்பு) குறைகள் உள்ளதாக இருக்கின்றது. குறை உடையது எவ்வாறு நிறைவுடையதாகும்? அதனால்தான் வாழ்க்கையில் எல்லா வளங்களும் உள்ளவனும் நிறைவு இல்லாமல் இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும் என்று பொருள் பற்று கொண்டு புலன்களின் வலையில்(trap) சிக்கிக் கொள்கிறான். வேடன் விரித்த வலையில் சிக்கிய விலங்கிற்கு எவ்வாறு நிம்மதி இருக்காதோ, அதேபோன்று, புலன்வலையில் சிக்கி சிறைப்பட்டவனுக்கு எவ்வாறு நிம்மதி இருக்க முடியும்? கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக திருவள்ளுவர் கூறுவதனை நினைவு கூர்வோம்.

    பொறி*வாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
    நெறிநின்றார் நீடு வாழ்வார்.               குறள் எண் 6

    (*பொறி=Trap).
    பொறி என்பதற்கு கருவி என்றாலும்பொருள்  புலன்கருவிகளை அளவோடும், முறையோடும் பயன்படுத்தவில்லையானால், கருவியாகச் செயல்பட்ட புலன், அறிவை தனது வலையில் சிக்கவைக்கும்(trap) கருவியாகி அறிவை அடிமையாக்கிக் கொள்ளும். இந்த நிலையில்தான் மனிதர்கள் பழக்கமாகி துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   எலிப்பொறி என்றால் என்ன? எலியைப்பிடிப்பதற்கு எலிப்பொறி பயன்படுத்தப்படுகின்றது. அதுபோல புலன்கள் அறிவை தன்வசப்படுத்தும்-அகப்படுத்தும் கருவியாகிவிடக் கூடாது. இந்நிலையில்தான் மனிதன் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான். அதாவது நல்விளக்கம் பழக்கத்திடம் தோற்றுவிடுகின்றது. மனிதனிடம் உள்ள தீமை ‘பழக்கம்’ என்கிறார் மானுடவியலாளரும் நாம் போற்றி போற்றி வணங்கும் குருதேவருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனிதனிடம் உள்ள தீமை என்பது பற்றி வேறோரு சமயம் விரிவாக சிந்திப்போம் அன்பர்களே!

    புலன்களின் வலையில்(sense-traps) சிக்குண்ட மனிதனுக்கு மீண்டு வருகின்ற பாக்கியம் உள்ளது:

    வேடன் விரித்த வலையில் சிக்கிய விலங்கிற்கு மடிய வேண்டிய துர்பாக்கியம் உள்ளது. ஆனால் புலன்வலையில் சிக்குண்ட மனிதனுக்கு புலன்கள் வலையிலிருந்து மீண்டு வரமுடிகின்ற பாக்கியம் நிச்சயம் உள்ளது.

    இந்த பாக்கியத்தைக் கண்டுபிடித்த,
    பிறஉணர்வை தன்னுணர்வுபோல் மதித்து இரக்கம் கொண்டு உதவி செய்வது அறம் எனக்கூறியுள்ள,
    அறவியல் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்,
    மனிதகுல மாந்தர்கள் அவதியுறுவதை தன்னுணர்வாக கருதி, கருணையோடு, உறுதியாக, தான்
    அனுபவித்ததுபோல், ‘அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற இன்றேனும் எழுச்சி பெற்று வாருங்கள்’
    என்று ஆதங்கத்துடன் அழைக்கிறார் கருணாமூர்த்தியான,
    அன்பும், கருணையும் என்ன என்பதனை இரண்டொழுக்கப் பண்பாக உணர்த்திய,
    நம் வாழ்க்கையில் அரிதினும் அரிதினுமாக கிடைத்தற்கரிய அருளாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள். ( காண்க – பிறவிக்கடல் நீந்தலாம்… ஞானக்களஞ்சியம் கவி எண் 1743)

    புலன் வலையிலிருந்து மீண்டு வருவதைத்தான் ஆங்கில ஆன்மீக நூல்கள் ‘Liberation’ என்கின்ற புனித சொல்லால் அழைக்கின்றன.

    எனவே இறை உணர் ஆன்மீகப் பயிற்சியில் தன்னை அறிவுடன் (ஆன்மா) சரியாக அடையாளம் கொள்ள வேண்டும். “பிரக்ஞானம் பிரம்மம்” என்று “அறிவே தெய்வம்” என்கின்றது வேதம்.

    தேர்வில் வரவிருக்கின்ற வினாவை, முன்னரேத் தெரிந்து கொண்ட மாணவன் நிலை !

    இது ஒரு புதிய உவமானம்; வேதாத்திரிய இறையியலின் கருத்தியல் பற்றிய சிறப்பைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு. வேதாத்திரிய இறையியலின் அகநோக்குப் பயிற்சியின் முடிவு என்னவாக இருக்க வேண்டும்?

    அகநோக்குப் பயிற்சித் தோ்வின் முடிவு (end result of inner travel – meditation-end reault of practical examination) கருத்தியலாகத் தெரிந்து கொண்டதை, அதாவது ‘ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், அறிவாகவும் உள்ளது என தானே அறிவதாகும்(understanding practically by himself). தேர்வு எழுத இருக்கும் மாணவருக்கு தேர்வில் என்ன கேட்கப்படும் என முன்னரே, யூகத்தால் தெரிந்து விட்டால் மாணவன் விடைகளை ஐயமின்றி தெரிந்து கொண்டு தேர்வை சிறப்பாக எதிர்கொள்வான்.
    அதே போன்று அக நோக்குப் பயிற்சித் தேர்வின் முடிவில் என்ன அறியவிருக்கிறோம் என்பதனை முன் கூட்டியே கருத்தியலாக அறிந்திருப்பது பெரும் உதவியாக இருக்கும்.

    இறையைக் காண்பித்து விட்டாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    ஆம்!!! காண்பித்துவிட்டார்!!!

    1911 ப் பிறகு சாதாரண மனிதனுக்கும், கடவுளைத் தரிசிக்கின்ற பாக்கியம் – அன்றாட வாழ்க்கையில் கடவுளைப் பார்த்துக் கொண்டே இருக்கின்ற பாக்கியத்தை இயற்கை/இறை கருணையோடு அருளிவிட்டது. எனவே அந்த வகையில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறையை மனிதகுலத்திற்குக் காண்பித்துவிட்டார். இறை அரூபமாக இருக்கும் போது எவ்வாறு மகரிஷி அவர்கள் அரூபமாக உள்ள இறையைக் காண்பிக்க முடிந்தது/முடிகின்றது? பொதுவாக அரூபமாக உள்ளதை காண்பிக்க முடியாதது என்பது உண்மைதான்.

    ‘இறை இல்லை’ என மறுக்க முடியாது இறைமீது பக்தி கொண்டவர்களால். அதேசமயம் ‘இறை அரூபமாக உள்ளது’ என்று கூறும்போதே அது இருப்பது ஏற்றுக் கொள்ளப்படுவதாகிவிடுகின்றது. எப்படி ஆறாம்அறிவு அரூபமாக இருந்தாலும், ஆறாம்அறிவு ‘தான் இருக்கிறேன்’ என்பதில் உறுதியாக உள்ளதோ, அதுபோல் இறை அரூபமாக இருந்தாலும், அது இருக்கின்றது என்பதும் உறுதி. அரூபமாகிய பேரறிவாகிய இறையேதான் மனித அறிவாக இயங்குகின்றது. எப்படி ஆறாம் அறிவு (மனிதஅறிவு) தன்னுடைய மற்ற உறுப்புகளைக் காட்ட முடிவது போல், தன்னைக் காட்ட முடியாதபோதும், தான் இருப்பதனை உறுதி படுத்துகின்றதோ, அதுபோல் மனிதஅறிவு அரூபமாகிய இறையை புலன்களால் காணமுடியாதபோதும், அது இருப்பதனை உறுதிபடுத்த முடிகின்றது.

    இப்போது, அரூபமாகிய இறையைப்பற்றிய சிந்தனை மனித அறிவிற்கு எட்டிவிட்டதால்,

    இறை இருப்பதை உறுதிபடுத்துவதும்(Existance Of God),
    இறை எவ்வாறு இருக்கின்றது(How God exists?) என்பதும்,
    இறை எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றதும்(How God functions?)

    என்பது பற்றி அறிவதனை இரண்டு விதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
    ஒன்று கருத்தியலாக(by theoretically-ie. theoretical understanding)
    மற்றொன்று செய்முறையாக (by practical understanding-practically realising)

    எனவே வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதுவரை காணமுடியாமல் (புலன்களால்) இருந்துவந்த இறையைக் காண்பித்துவிட்டார். இதுவே theoretical understanding of God. இம்முறையில் முதலில் இறையைப் பற்றிய புரிதலில் முழுமையான வெற்றி பெற்றிடல் வேண்டும்.(pass in theory examination as in an examination system in educational institution). இது முதல் நிலை.
    இரண்டாம் நிலை–
    பிறகு, கல்வி நிறுவனங்களிலே செய்முறைத் தேர்விலும் மாணவன் தேர்ச்சி பெறுவதைப் போன்று இறை உணர்க் கலையாகிய மனவளக்கலையிலும் செய்முறைத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, அரூபமாகிய இறைவைணக் காண்பது நிறைவேற வேண்டும்(self Realisation). இதுதான் மனவளக்கலையில் முழுமையாகத் தேர்ச்சி அடைவதாகும்.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறையை கருத்தாகக் காண்பித்து விட்டார். இறையை செயல் முறையில் காண்பதற்கு பயிற்சிகளையும் தந்துவிட்டார். அவரது பொறுப்பை உணர்ந்து கடமையை நிறைவேற்றிவிட்டார். எனவே இறை உணர் ஆன்மீக சாதகர்கள் கருத்தியலோடு இறையைக் காண்பதோடு நின்று விடாமல் செயல்முறையில் இறையைக் காணவேண்டியது பொறுப்பாகின்றது. வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.

    எனவே அக நோக்குப் பயிற்சியினை மேற்கொண்டு வரும்போது முடிவில்தான் இறையே எவ்வாறு எல்லாமாகவும், தானுமாகவும் இருக்கின்றது என அறிந்து மகிழ்கின்ற பழைய நிலை இப்போது மாறிவிட்டது, இப்போது பயிற்சியின் முடிவில் அறியவிருப்பது முன்னரே கருத்தியலாகத் தெளிவாகி பயிற்சியின் முடிவில் அதனை உறுதி செய்கின்ற காலம் வந்துவிட்டது. இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும், ஆன்மீக அறிவு வளர்ந்து வருவதற்கும் காரணம் வேதாத்திரியத்தின் தோற்றமே.

    அறிவு, ‘தான் ஆன்மா’ என சரியாக, கருத்தியலாக ஐயமின்றி உறுதிபடுத்திக் கொண்டால், அகநோக்குப் பயிற்சியில் வெற்றி பெறுவது(Enlightenment) எளிதாக இருக்கும். தான் உணரவிருப்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.
    மனிதனின் சரியான அடையாளம் என்பது ‘நான் உடலல்ல, ஆன்மா- I am not the body. I am Aathma’ என்பதே ஆகும். இந்த சரியான அடையாளம்தான்

    உலக சகோதரத்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல, உண்மையென உறுதி படுத்துகின்றது.
    வேற்றுமையில் ஒற்றுமை (unity in Diversity)என்பதும் சரி என்கின்ற முடிவுக்கு வரவைக்கின்றது.
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எவ்வாறு சரி என நிரூபிக்கின்றது.
    போரில்லா நல்லுலகம் விரைவில் மலர வேண்டும் என அவா கொள்ள முடிகின்றது.

    இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று நாற்பது கோடி. இந்த எழுநூற்று நாற்பது கோடி மக்களுக்கும் அடையாளம் ஒன்றுதான். அதுதான் தெய்வத்தின் சிறு பொறி ஒவ்வொரு மனிதனும். தெய்வம் ஒன்று என்கின்ற போது அந்த தெய்வத்தின் பொறிகளான ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அடையாளம்தான். பார்த்தசாரதி சதகத்தில் வரும்

    “உற்றுப் பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே” என்கின்ற வரி கூறுவது எவ்வளவு உண்மை எனத்தெரிகின்றது. மனிதனின் உயிர் விலங்கினத்திலிருந்து வந்துள்ளதால் எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்பது விஞ்ஞான ரீதியாகவும் சரி என அறிந்தாலும் அதன் பயனை இதுவரை அனுபவிக்க முடியாமல் உள்ளது.

    அதுபோல் மகாகவி பாரதியார் கூறுவதனைக் கவனிப்போம்.

    “காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
    கடலும் எங்கள் கூட்டம்
    நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
    நோக்க நோக்கக் களியாட்டம்” ……..  என்கிறார் மகாகவி பாரதியார்.

    பொதுவாக மனிதனின் அடையாளம் அவனுடைய பெற்றோர்களின் மகன் என்றாலும், அது இந்த உடலைப் பொருத்த வரை சரியாக இருந்தாலும், அதுவே அவனது உண்மையான அடையாளம் அல்ல. அவனது சரியான உண்மையான அடையாளம் அவன் தெய்வமகன் என்பது தான் சரி. பரம பிதாவின் குழந்தைகளே இந்த உலக மக்கள் அனைவரும். மக்கள் அனைவரும் அறிவு நிலையைில் ஒன்று. வினைப்பதிவில்தான் வேறு வேறாக இருக்கின்றனர். இந்த மெய்விளக்கத்திற்கான(உண்மையான விளக்கம் என்று பொருள் கொண்டாலும் சரி) வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலோடு இன்றைய விருந்தை நிறைவு செய்கிறோம். அதுவே அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் அளவில் அதிகமானதுமான “அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிது“ என்பதாகும்.

    மெய்விளக்கம்

    நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
      நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.
    ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை
      உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகி்ன்றோம்;
    ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு
      என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல
    வானறிவோம் உயிர்விளங்கும் வரைகடந்து நிற்கும்
      வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்

                               ……வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    இப்பாடலுக்கான விளக்கத்தை விரிவாக மற்றொரு விருந்தாக வைத்துக் கொள்வோம்.

    தான் என்றும் அழியா த ஆன்மா என தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? சுயமாய் சிந்தித்து பார்க்கலாமே!

    எல்லா அருளாளர்களின் துணையுடனும்,
    இம்மனிதகுலம் உய்வதற்காக உதித்த விடிவெள்ளியாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களின்
    அருளாசியுடனும்,
    அவர்களின் சூக்கும உடலுடன் இணைந்து,
    உலகில் விரைவில் உலக அமைதி பூத்துக் குலுங்க,
    உலக அமைதி கன்றுகளை/நாற்றுகளை நட்டு(பயிற்சிகள் செய்தல்),
    நீர் உற்றி(சுயமாய்ச் சிந்தித்து), உரம் இட்டு(அருளாளர்களுடன் சத்சங்க இணைப்பு கொண்டு)   வளர்ப்போம்.
    பூக்கட்டும் விரைவில் உலகெங்கிலும் நன்னிதி-மணம் வீசும் அமைதிப் பூ பூ பூ!!!

    ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

    வாழ்க உலக அமைதி. வருக உலக அமைதி விரைவில். வாழ்க வையகம். ,

    வாழ்க வேதாத்திரியம்.                 வளர்க வேதாத்திரியம். 

     வாழ்க அறிவுச் செல்வம்                                                            வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • FFC – 203-இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC –  203

    03-07-2016-ஞாயிறு

    NEW-3-FFC-203-SUB TITLE

     

    வாழ்க வளமுடன்.

    “அன்றாட வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வாருங்கள்” என்று மகரிஷி அவர்கள் அன்புடனும், கருணையுடனும், அக்கறையுடனும் விடுத்திருக்கும் அழைப்பினை அழுத்தமாக நினைவில் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

    அறிந்து அனுபவிப்பது . . .?

    ‘வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வாருங்கள்’ என்பதால் வாழ்க்கையை அறியாமலேயே மனித குலம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. என்று பொருளாகின்றது. அதாவது வாழ்க்கையை அனுபவிப்பதில் இரண்டு உள்ளதாகத் தெரிகின்றது. ஒன்று வாழ்க்கையை அறிந்து அனுபவிப்பது. மற்றொன்று அறியாமல் வாழ்க்கையை அனுபவிப்பது.

    இதில் எது சிறந்ததாக இருக்கும்? வாழ்க்கையை அறிந்து அனுபவிப்பதுதான் சிறந்ததாக இருக்கும். வாழ்கை என்று பொதுவாக ஒட்டுமொத்தமாக சொல்லாமல் ‘அன்றாட வாழ்க்கை’ என்று கூறியுள்ளதனையும் கவனிக்க வேண்டும். எப்போதும், நொடிக்கு நொடி வாழ்க்கையை விழிப்போடு அனுபவிக்க முடியும்/வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு கூறுகிறார்.

    அறிந்து அனுபவித்தல் என்றால் என்ன? ‘அனுபவித்தல்’ என்று சொல்லாமல், ‘அறிந்து அனுபவித்தல்’ என்கிறார். சிந்திப்போம். விடை பெறுவோம்.

    உணவு அருந்துகிறோம். ஆனால் எதற்காக உணவு அருந்துகிறோம் எனத் தெரியாமலா உணவு அருந்தப்படுகின்றது. பசியைத் தீர்ப்பதற்காகவும், உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறவும் உணவு அருந்துகிறோம் எனத் தெரிந்துதான் உணவு அருந்தப்படுகின்றது. உடல் ஆரோக்கியம் இருந்தால், மனிதன் விரும்பினாலும் விரம்பாவிட்டாலும் பசி உணர்வு வந்துவிடும். உடனே உணவைத் தேடி அருந்துகிறான். உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். உட்கொள்கின்ற உணவின் பெயர் தெரியாமலா உணவை உண்கிறான்.

    உண்கின்ற உணவின் பெயர் தெரியாமல் ஒரு நாள் உண்ணலாம்,
    ஒரு வாரம் உண்ணலாம்,
    ஒரு மாதம் உண்ணலாம்,
    ஒரு வருடம் உண்ணலாம்.
    ஆயுள் முழுவதுமாகவா உணவின் பெயரைத் தெரியாமலா உண்டுகொண்டிருக்கிறான்?

    பசி தீர்வதற்கு உணவின் பெயர் தெரிய வேண்டுமென்பதில்லைதான், என்றிருந்தாலும் உண்ணும் உணவு பசியை மட்டுமே தீர்க்க உதவுவதில்லை. உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்களைப் பெறுவதற்காகவும் பலவகையான உணவு உட்கொள்ளப்படுகின்றது. இருந்தாலும் உயிர் வாழ்வதற்காக உணவு உண்பதால் உண்பதற்காகவே மனிதன் வாழப் பிறக்கவில்லை என்பது மனிதன் அறிந்ததுதானே? உணவு உண்பதற்காக பிறப்பதுதான் வாழ்க்கை எனில் உண்பதற்காக ஒரு பிறவி போதாதா? பல்லாயிரம் பிறவிகள் தேவைப்படுகின்றதா? அப்படியே உணவு உட்கொள்வதற்காக மட்டும்தான் பிறவியின் நோக்கம் எனில் கூடவே மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் துன்பங்களை அல்லவா அனுபவித்து மரணம் சம்பவிக்கும் போது உணவை மறந்து உணவைத்துறந்து, உடலைத் துறந்துவிடுகிறான்.
    எத்தனையோ பிறவிகள் பிறப்பது,
    உணவு உட்கொள்வது,
    இறப்பது – —————– இந்த நிகழ்வுகள் மாத்திரம் தான் நடைபெற்றுக் கொண்டிருப்பதென்பது சரியாக இருக்குமா இயற்கையின்/இறையின் தன்மாற்ற-ஆட்சியில் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டாமா?

    எண்ண – ஊடகத்தை பயன்படுத்துவோம்:

    பிறப்பு என்பது இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்று என்று அறிவிற்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதை, அதாவது இயற்கை/இறை ஒரு நோக்கத்தை வைத்துத்தான் மனிதனென்ற தன்மாற்றத்தை நடத்திக் கொண்டது; கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து அறிவு வாழ்க்கையை நடத்த வேண்டாமா?! அவ்வாறு அறிந்து வாழ்க்கையை அனுபவித்தால் இன்பமே மிகும். இந்த உண்மையின் அடிப்படையில்தான் வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க இன்பமே என்பதால் ‘வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க என அழைத்திருக்கிறார் நம்மை எல்லாம்.’ இன்னமும் அழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்.

    எனவே அவருடன் இணைந்த நாமெல்லாம், அவர் விடுத்துள்ள  அருள் அழைப்பிற்கு மேலும் மேலும்  வலிமை சேர்க்க நம்முடைய எண்ண ஊடகத்தை புற ஊடகமாகவும், அக ஊடகமாகவும் பயன்படுத்துவோம். இதற்கு பொருட் செலவில்லை. எனவே எல்லோராலும் பொருட் செலவின்றி நம்முடைய அக ஊடகத்தை பயன்படுத்த முடியும் அன்றோ! அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ‘வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்’ என்கின்ற மந்திரம். இந்த மந்திரத்தை தேவைப்படும்போது. மற்றவர்கள் அறிய, புற ஊடகமாகவும் பயன்படுத்தலாம். அநேக நேரங்களில் அக ஊடகமாகவும் (வெளியே தெரியாமலும், மௌனமாகவே இருந்து கொண்டு, நல்லவை ஏற்பட  எண்ண அலைகளைப் பரப்பலாம்) பயன்படுத்தலாம். இதனை யாருமே அறியமுடியாதெனினும் எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு என்பது இயற்கையின்/இறையின் நீதி என்பதால், மௌன ஊடகத்தினால் அனுப்பப்படும் செய்திகள் மக்கள் மனதில் ஊடுருவி உரிய காலத்தில் அதற்கான நல்விளைவை ஏற்படுத்துமன்றோ! ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்கின்ற பரிணாமத்தின் கோட்பாட்டை நினைவில் கொள்வோம்.

    அருளாளர்கள் யார்?

    ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுதான் எல்லா அருளாளர்களின் ஆதங்கங்களும். அருளாளர்கள் யார்? எல்லா மக்களுமே இயற்கையின்/இறையின் அம்சமாக இருந்தாலும், இறை அருளை வேண்டுகிறவர்கள் மட்டுமே,
     பிறவியின் நோக்கத்தை அறிந்து,
     அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில்,
     வாழ்வின் எதார்த்தத்தை அறிந்து இன்ப வாழ்வு வாழ்ந்து,
     வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்.

    அவர்களின் வெற்றி அனுபவங்கள் வருங்கால சமுதாயத்திற்கு வழிகாட்டுதலாக இருந்து வருகின்றது. ஆனால் நடைமுறையில் பார்த்தோமேயானால், மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வெகு சிலரே அருளாளா்களின் அறவுரைகளை ஏற்று, முயன்று பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இந்நிலையினை மாற்றுவதற்காக வேதாத்திரியத்தை தோற்றுவித்துள்ளது இயற்கை/இறை என்பதனை அறியும்போது ஆறுதலும் நம்பிக்கையும் தருவதால் மனம் பூரிப்படைகின்றது.

    வெற்றி வாழ்க்கையில், அருளாளர்கள், தான் அடைந்த இன்பத்தை, தாம் எந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அந்த மனித சமுதாயமும் அனுபவிக்க வேண்டும் என்கின்ற பரந்த ஆதங்கமுடைய எண்ணங்களை எண்ணியவர்கள் அவர்கள்.

    அதனால்தான் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று அறிஞர் திருமூலரும், ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!’ என தாயுமான சுவாமிகளும் விரும்பியுள்ளனர். இந்த அருளாளர்கள் காட்டிய அருள் வழியே சென்று வெற்றி பெற்ற வேதாத்திரி மகரிஷி அவர்களும் ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்கின்ற வாழ்த்து மந்திரத்தையும் அந்த மந்திரத்தின் பயன் விரைவில் ஏற்படுவதற்கு அடிப்படிடையான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மற்றொரு மந்திரத்தையும் வான் காந்தத்தில் பரவவிடச் செய்துள்ளார்

    சாட்சாத் குருவே பிரம்மம்:

    குரு என்பவர் யார்? யாரால் அறியாமையை நீக்க முடியுமோ அவரே குரு? அறிவை(பேரறிவாகிய இறையை) அறியாத அறிவு, அதாவது தன்னையே அறியாத மனிதஅறிவு அறியாமையில் இருப்பதாகத்தானே பொருள் கொள்ள முடியும். எனவே அறிவை அறிய விளக்கங்களையும், வழிகளையும் கூறுபவரே குருவாக இருக்க முடியும். அதனால்தான் குருவணக்கத்தில் மற்ற எல்லா அருளாளர்களை நினைவு கூறும்போது அவர்களை அறிவில் அறிவாய் நிலைத்து அதனை வாழ்ந்து காட்டினோர் அனைவரையும் நினைவு கூர்வாம்’ என்கின்ற வரையறையுடன்தான் கூறுகிறார். எனவே பிரம்மம் என்கின்ற அறிவை அறிந்தவரே பிரம்மத்தை உணர்த்த முடியும். அப்படிப்பட்டவரே குரு. எப்போது பிரம்மத்தை அறிய முடியும்? பிரம்மமாகவே ஆனவர்தான் பிரம்மத்தை அறிந்திருக்க முடியும். எனவே குவைப்பற்றி கூறுகின்ற சமஸ்கிருத ஸ்லோகம் சாட்சாத் குருவே பிரம்மம் என்கின்றது.

    குரு ஸ்லோகம்

    குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:
    குருர் தேவோ மஹேஸ்வர:
    குரு சாட்சாத் பரப்ரம்மா
    தஸ்மை ஸ்ரீ குரவே நம:

    அருளாளர்களின் எண்ணங்கள்(எண்ணியது, எண்ணுவது) மறைந்து விடுவதில்லை:

    அருளாளர்கள் பூதவுடலை உதிர்த்த பின்னரும், அவர்களின் ஆதங்க–எண்ணங்கள் எங்கும் மறைந்துவிடுவதில்லை. அவர்கள் பூதஉடலை உதிர்த்த பிறகும் அவை நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்படி? எவ்வாறு? இல்லை என்றால் தொடர்ந்து வாழையடி வாழையாக திருக்கூட்ட மரபினில் அருளாளர்கள்(அவதாரங்கள்) உதிக்கின்றனர் என்பது எவ்வாறு சாத்தியமாகும்? இது தொடர் நிகழ்ச்சியல்லாவா? இது முடிவில்லா தெய்வீகத் தொடர் ஓட்டம் – Never ending Divine Relay Race).
    ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிஞர் திருமூலர் சொன்னதை இன்றும் நாம் மதித்து, ரசித்து நினைவு கூர்கிறோம் என்றால் அது எவ்வாறு சாத்தியமாகின்றது? திருமூலா் மந்திரங்களை பாடல்களாக அருளிச்சென்றார். அதனால் அதனைக் கண்டு இப்போது பயன் பெற முடிகின்றது என்பது மட்டுமில்லை, பல அருளாளர்கள் திருவள்ளுவர், திருமூலர் போன்று எழுதி விட்டுச் செல்லாமல் போனாலும் அவர்களுடைய ஆதங்களும் வான் காந்தத்தில் பதிந்தே உள்ளன என்பதனை நினைவில் கொள்வது வான்காந்த அறிவியல் அறிதலின் பயனாகும். அதனால்தான் மகரிஷி அவர்கள் எட்டு வரிகளைக் கொண்ட குருவணக்கப்பாடலில் முதல் ஆறு வரிகளில், தாயுமாமனவர், திருவள்ளுவர், திருமூலர் மற்றும் இராமலிங்கர் ஆகிய நான்கு அருளாளர்களின் திருநாமத்தைக் நினைவு கூர்ந்து விட்டு கடைசி இரண்டு வரிகளில்

    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
    அதை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூர்வாம்.”

    என்று கூறி எல்லா அருளாளர்களையும் நினைந்து வணங்குகிறார். இது வெறும் சம்பிரதாயம் அல்லவே!.

    அந்த ஆதங்கள், எண்ண வடிவில் வான் காந்தத்தில் இடம் பெற்று பதிந்து, செயலுக்கு வருவதற்கு தயாராக எப்போதும் காத்துக் கொண்டு, மனிதகுலத்தின் அந்த அந்த காலகட்டத்தின் தன்மாற்ற நிகழ்வின்/பரிணாம வளர்ச்சியின் பரிபக்குவநிலை அதிகரித்து வரும்போது அது அருளாளர்களின் அவதரித்தலை ஏற்படுத்துகின்றது. இது மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘Fraction demands Totality supplies’ என்பதாகும்.

    இருபதாம் நூற்றாண்டின்–அருளாளரின் அழைப்பு:

    யார் இந்த இருபதாம் நூற்றாண்டின் அருளாளர்? அவர் தான் 1911 இல் அவதரித்த நம்முடைய குருதேவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான திருமூலர் உலக நலத்தின்பால் கொண்ட அக்கறையால் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று விரும்பியுள்ளார். அவ்வாறே திருமூலரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்களும் உலக-நல-அக்கறையாளர்கள்-வரிசையில் இடம் பெற்றிருக்கிறார். எப்படி? உலக நலத்தின்பால் கொண்ட அக்கறையால், தன்னை உலக நலத்திற்காகத் தொண்டாற்ற அர்பணித்துக் கொண்டார் மகரிஷி அவர்கள். உலக நலத் தொண்டராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் மகரிஷி அவர்கள். இத்தகைய அருளாளார்தான், ‘தான் பெற்ற இன்ப அனுபவத்தை இவ்வுலக மக்களும் அனுபவிக்க வேண்டும்’ என எண்ணி , கவி வடிவில் அழைப்பு விடுத்துள்ளார்.

    அழைப்புக் கவி(1970)

    அன்பர்களே வாரீர்!
    அறிவின் இருப்பிடம்
    அறிந்து இன்பமுற,
    அன்பர்களே வாரீர்!
    இன்ப நிலையதை
    அறிந்திடலாம் இன்று.

    ‘தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்?’
    என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
    அன்றாட வாழ்க்கை அறிந் தனுபவிக்க
    இன்றேனும், விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்
    அன்பர்களே வாரீர்!                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி:

     

    தன்னுடைய அழைப்பில் ‘வாழ்க்கையை அறிந்தனுபவிக்க’ என்கிறார் மகரிஷி அவர்கள். வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வாருங்கள் என்று கூறி அழைக்கும்போதே அவர் அழைப்பில் உறுதியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வாறு அழைப்பது அவர் அழைப்பிற்கு சிகரத்தை சூட்டுகின்றது. அப்படியானால் ‘அறிந்தனுபவிப்பது’ என்பது என்ன?
    யாரும் அவர்களாக விரும்பிப் பிறப்பதில்லை. பிறந்துவிட்டோம். இது இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்று. வாழ்ந்தே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம் வந்துவிட்டது. உலகியல் வாழ்க்கையில் இன்னாதவைகள் இருப்பினும் இனியதையேத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று பழம் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றில் ஒரு பெரியார் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மைதானே அவர் கூற்று?!

    பிறப்பு இயற்கையின் நிகழ்வாக இருந்தாலும், வாழ்வில் இன்பமாக வாழ்வது என்பது வாழப்பிறந்தவரின் உரிமையும், சுதந்திரமும் ஆகும். அதுதான் ஆறாம் அறிவின் சிறப்பு. அத்தகைய திறமையையும் வல்லமையையும் உடையது ஆறாம் அறிவு. ‘தன்கையே தனக்குதவி’ என்பதுபோல் ஆறாம் அறிவே அதற்கு உற்ற துணையாகவே இருக்கும். பிறப்பு இயற்கையின் நிகழ்வு என்பதால், அந்த நிகழ்வின் இனிமை கெடாமல் வாழக்கற்றுக் கொண்டு வாழ்ந்தால் இயற்கையும்/இறையும் மனிதன் இன்பமாக வாழ்வதற்கு பெரும் துணையாகவே இருக்கும்.

    எதற்காக ஆறாம் அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும்?

    உற்ற துணையாக இருக்கும் அந்த ஆறாம் அறிவின் இருப்பிடம் எது என்று அறியவேண்டியக் கடமையும், நிர்பந்தமும் ஒவ்வொரு ஆறாம் அறிவிற்கும் உள்ளது என்பதனை ஆறாம் அறிவு அறிய வேண்டும். அதாவது தன்னைப்பற்றியே தானே அறிந்து கொள்ள வேண்டும் அறிவு.

    தான் யார் என அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு
    1) எங்கிருந்து புறப்பட்டோம்?
    2) எதற்காக இந்த பிறவிப் பயணம்?
    3) இதுவரை எத்தனை முறை இப்பிறவிப் பயணத்தை
    மேற்கொண்டிருக்கிறோம்?
    4) அதற்கான காரணம் என்ன? காரணங்கள் ஒன்றா, பலவா?
    5) முடிவாக எங்கு செல்லப் போகிறோம்?
    6) முடிவாகச் சென்ற பிறகு நம் நிலை என்ன?
    7) இதற்கிடையில் எவ்வாறு துன்பமில்லாமல் வாழ்வது?

    போன்ற வினாக்களுக்கான விடைகளை, ‘அந்த அறிஞர் சொன்னார், இந்த அறிஞரும் இதையேச் சொல்கிறார்’ என்று அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதே சமயம், அவ்வறிஞர்களின் கண்டுபிடிப்புகளை மதித்து, ரசித்து, வழிகாட்டியாகக் கொண்டு, சுயமாக அறிவுப்பூர்வமாக சிந்தித்து, அக்கண்டுபிடிப்புகளை நமதாக்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கையை ‘அறிந்து அனுபவிப்பது’ என்பது. மகரிஷி அவர்கள் இறை வணக்கம் பாடலில்

    இறைவணக்கம்

     எல்லாம் வல்ல தெய்வமது;
    எங்கும் உள்ளது நீக்கமற;
    சொல்லால் மட்டும் நம்பாதே;
    சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!

    என்று அருளி, ஆச்சரியக் குறியுடன் அந்த வரியை நிறைவு செய்திருக்கிறார் மகரிஷி அவர்கள். சிறுவர்களிடம், பெற்றோரும் சரி ஆசிரியப் பெருமக்களும் சரி ‘நன்றாகப் புரிந்து கொண்டு படி’ என்றுதானே அறிவுரை . வழங்குகின்றனர். ஏன்? ஒன்றை ஐயமின்றி விளங்கிக் கொண்டால் அது மறக்கவே மறக்காது. குறிப்பாக ஆன்மீக உண்மைகள்/கண்டுபிடிப்புகள்(தத்துவங்கள் என்பது சொல் வழக்கில் இருந்து மறைந்துவிடவேண்டும்) முன்னதாக கூறியவர் கருத்தை(இதுவரை) அப்படியே சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டால் அக்கருத்து கேட்டவரிடம் நிலைக்காமல் போய்விட வாய்ப்புண்டு. ஆனால் கேட்ட ஆன்மீக உண்மைகளை தகவல்களாக ஏற்றுக் கொண்டு. அதனை உறுதிபடுத்திக் கொண்டே பின்பற்றி வரவேண்டும். அப்போதுதான் அந்த உண்மை நம்முடைய கண்டுபிடிப்பாகி ஆன்மீகச் சாதகரின் தரத்தை(transformation) உயர்த்தும். எனவேதான் மகரிஷி அவர்கள் ‘Information. Confirmation, Transformation’ என்கின்ற அன்பு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

    அறிவு தன்னை தவறாக அடையாளம் காண்கின்றது:

    ஆறாம் அறிவு தன்னை யார் என அறியாத நிலையில் மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்கிறான். செயலில் தவறு ஒன்று நேர்ந்தால் அப்போது அதன் விளைவு துன்பமாகத்தானே இருக்கும் என்பது ஆறாம் அறிவிற்குத் தெரியாதா என்ன?! இக்கேள்விகளையெல்லாம் எழுப்புவது அறிவு அல்லது எழுந்தது அறிவினிடத்தில். எனவே இந்த ‘அறிவு யார்’, அதன் இருப்பிடம் என்ன என்று அறியவேண்டும். எனவே அறிவின் இருப்பிடம் அறிந்தால் இன்பமுறலாம் என்பதனைக் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள் மனிதகுலத்திற்கு 1970 ஆம் ஆண்டில் ‘இன்றேனும், விரைந்து எழுச்சிபெற்று உய்வீர்’ என அழைப்பு விடுத்துள்ளார். கிட்டத்தட்ட நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

    அறிவு தான் யார் என்று அறியாதபோது அது தவறான அடையாளமாகத்தானே இருக்கும். தவறான அடையாளத்திற்கான ஏற்ற நினைப்பையும், செயல்கைளையும் கொண்ட வாழ்க்கையில் துன்பம் தானே எஞ்சி நிற்கும்? எனவே வரும் அறிவிற்கு விருந்தில் (06-07-2016-புதன்) தவறான அடையாளத்தால் வரும் துன்பங்களைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்வில் தேறிடுவோம் – 2/2

     

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     FFC –  202

     
    29-06-2016-புதன்

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

    அருட் பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தது.
    “இது வரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ……………………….
    ……………………………………………………………………..
    இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்தி விடுவோம். அஞ்சவேண்டாம்.” என்றார்.
    வள்ளலார். தன் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவிட்டதை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஊனுடம்பு ஆலயத்தில் பத்து வருடங்கள் தங்கி இருந்து முடித்துக் கொண்டார். 

         இன்றும் அவரது அறிவாற்றலின் வாயிலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற வேதாத்திரி மகரிஷி அவா்கள் என்ன கூறுகிறார் என்றும் பார்ப்போம். உலக மக்களுக்கு 1970 ஆண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பு விடுத்து நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த அழைப்பைப் பற்றி நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இருந்த நிலையிலே, நம்மெல்லோரையும் அவரிடம் கொண்டு வந்து சீடராக்கியுள்ளது இயற்கை/இறை. இது இறையின் புனித திட்டமும், ஏற்பாடும் ஆகும்.
    1823 ல் அவதரித்த அருளாளர் வள்ளலார் “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.” என்றார்.
    1911ல் அவதரித்த அருளாளர் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர் ! *” என்கிறார்.
    முதலில் அவதரித்த அருளாளர் கூறுவதை சற்று சிந்தித்து பார்ப்போம். ஒருவர் கூட தான் கூறுவதை நம்பி எழுந்து திறத்தில் திகழ்வதற்கு ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார்,
    எழுந்து என்றால் ‘விழித்தல்‘ என்று பொருள் கொள்ள வேண்டும்.
    திறம் என்பதற்கு பொருளாக “மனிதனில் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவது” என்று கொள்ள வேண்டும்.
    ‘திகழ்தல்’ என்றால் பிரகாசித்தல், பொலிவுடன் இருத்தல், சிறப்புடன் இருத்தல், விளங்குதல் என்று பொருள். விளங்குதல் என்றால் புரிதல். தெரிதல் என்று பொருள். ஆகவே “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்றால்
    மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றல் விழிப்புற்று சிறப்புடன் தெய்வீகத்தை விளங்கச் செய்பவர் யாரும் இல்லை என்று ஆதங்கப் பட்டார். ஆனால் அத்தோடு இருந்து “அஞ்ச வேண்டாம்” என சமாதானம் கூறி அனைவரையும் திருத்தி விடுவோம் என்கிறார்.

    அவ்வாறே 1911ல் அவதரித்த அருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற்றுய்வீர் ! ” என்கிறார்.
    “இன்றேனும் விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்” என்றால் “இதுவரை எழுச்சி இல்லாமல் மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் தெய்வீக ஆற்றல் இன்றாவது விழிப்பு பெற்று உய்வீர் என்கிறார்.

    அழைப்புக் கவி(1970)

    அன்பர்களே ! வாரீர் !
    அறிவின் இருப்பிடம்,
    அறிந்து இன்பமுற,
    இன்பநிலையதை, ஏகநிலையதை,
    அன்பு நிலையதை
    அறிந்திடலாம் இன்று.
    ‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்?’
    என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
    அன்றாட வாழ்க்கையை அறிந் தனுபவிக்க
    இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர் !

    ……. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    1874 ல் வள்ளலார் எண்ணியது, 1953 ல்(1911+42=1953) நிறை வேறியது. இராமலிங்க சுவாமிகள் எண்ணிய, மக்களைத் திருத்தி விடும் படலத்தை, இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, அரியக்கலையாக இருந்து வந்து அகத்தவத்தை பரவலாக்கி, மனிதனை திருத்தும் முகமாகத்தான் அகத்தாய்வு பயிற்சியினையும் உருவாக்கி கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது.
    இராமலிங்க சுவாமிகள் எண்ணியது, இறை எண்ணியதுதானே!. ஆக மொத்தத்தில் அறிவை அறிந்தவர்கள் ‘இவ்வுலக மக்கள் திருந்தி உய்வதற்கு வழியே இல்லையா’ என எண்ணியதற்கிணங்க, “Fraction demands. Totality supplies” என்கின்ற தன்னுடைய நியதிப்படி, இயற்கை/இறை தன் திரு விளையாடலை வேதாத்திரியத்தின் வழியாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட மனிதகுலம் அறிவாகிய ஒழுங்காற்றலை பயன்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்நாளில் அறிய வேண்டியதை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிறவியினை அளிக்கின்றது இயற்கை.
    மனிதன் அறிய வேண்டியதை எல்லாம் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை கிடைக்கும் போது அறியப்பட்டுவிடும். அவையாவன:
    1) இறை அரூபம். அளப்பரிய ஆற்றல்
    2) இறை பேராற்றலாக, தூய அறிவாக(பேரறிவாக), வற்றா இருப்பாக, காலமாகவும்(Time), இருக்கின்றது.
    3) தன்முனைப்பில்லா நான் (Egoless I) அதாவது அறிவுடைமையுள்ள நான் கண்டுபிடிக்கப்படும். மனிதனிடமுள்ள (நானில்) உடல், உயிர், அறிவு ஆகிய மூன்றில் நானாக இருப்பது அறிவே என்றும், அதே அறிவு இறையாகும் என்றும், அறிவை அறிந்த நானே தன்முனைப்பு அற்ற நானாகும்.
    இந்தவிளக்கத்தைப் பெறாத, பெற்று நடைமுறைக்கு கொண்டு வராத நான்கள் தன் முனைப்புள்ள நான்களாகும்.
    4) பிற மனிதர்களிடமும் உள்ள அறிவும், இறையே, 720 கோடி உலகமக்களும் வெவ்வேறு நான்கள் இல்லை. ஒரே, ஆனால், உடலளவில் தனித்தனியாகவுள்ள நான்கள். உலக மக்கள்
    ஒரு மாபெரும் குடும்பம். ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிகளே.
    5) பிற உயிர்களிடம் உள்ள (தாவரங்கள் முதல் விலங்கினங்கள் வரை) உயிரும் சரி, அறிவும் சரி இறையே. இறையே உயிர்களுக்கெல்லாம் உயிராக திகழ்கிறான்.
    6) சடப் பொருட்களிலும் அணுவாக இருப்பதும், அணுவின் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதும் ஒழுங்காற்றலாகிய அறிவாகிய இறையே.
    7) அத்வைதம் தெளிவாக விளங்கிவிடும். ஒன்றே எவ்வாறு பலவாறாக இருக்கின்றது, இருக்க முடியும் என்கின்ற சந்தேகமும் விளங்கிவிடும்.
    8) வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பது அறியப்படும்.
    9) கோடனு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு அப்பால் எல்லையில்லாத அளவிற்கு விரிந்து உள்ள வெளியே (அப்பாலுக்கு அப்பாலாய்) இறையே என அறியப்படும். அது அறிவாக இருப்பதால்அது வெளியாகத் தெரிகின்றது என்கின்ற விளக்கமும் கிடைக்கப் பெறும்.
    10) ‘பிரக்ஞானம் பிரம்மம்’ ‘ அகம் பிரம்மாஸ்மி’ ‘தத்துவமஸி‘ ‘அயம் ஆத்மா பிரம்மம்‘ என்கின்ற மகா வாக்கியங்கள் விளங்கும்.
    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அறிவாக உள்ள அரூபமான இறையை, மனிதன் அறிவைக் கொண்டுதான் உணர முடியும். அறிவைக் கொண்டு பேரறிவை அறியும் பேற்றினையே தமிழ் இலக்கியங்களில் வீடுபேறு எனப்படுகின்றது.
    வீட்டிற்கெல்லாம் வீடு அது. அந்த வீட்டினை அடைவது பேறாகக் கருதப்படுகின்றது. எனவே வீடு பேறு எனப்படுகின்றது.
    அறம் காத்து, பொருள் ஈட்டி, அளவு முறையோடு இன்பம் துய்த்து, வீடு பேற்றை அடைவதே மனிதப்பிறவியின் நோக்கம் அல்லது பயன் என்கின்றது தமிழ் இலக்கியங்கள்.
    ஆறறிவாக வாழ்கின்ற மனிதர்களெல்லாம், அதற்கு ஏற்ப பொருத்தமாக, ‘உண்மைப் பொருளுணா்தல் பேறு’ என்றும், அதுவே பிறவிப்பயனைப் பெறுவதாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ஆகவே அருட்பிரகாச வள்ளலார் மற்றும் வேதாத்திரி மகரிஷி, மற்றும் பல மகான்களின் ஆதங்கங்களைப் பூர்த்தி செய்ய, ‘வீடு பேற்றில்’ தேறிடுவோம். தேறிடுவோம். தேறிடுவோம்.
    அந்தப் புனித ஆன்மாவின் ஆதங்கங்களுடன் நம்முடைய ஆதங்கத்தையும் சேர்த்துக் கொள்வோம்.
    . வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    அடுத்த ஞாயிறன்று (03-07-2016) சந்திப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

    முன்அறிவிப்பு

                30-06-2016

    வாழ்க வளமுடன்.

    வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .

    இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!

                                           … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC – 203

                                                                                                                                                                                     29-07-2016புதிய முன்னறிவிப்பு -FFC-203-1-7-16

    அன்புடையீர்  

    வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.

    தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.

    நன்றி.

    www.prosperspiritually.com

    Loading