இன்றைய விருந்து

  • FFC – 176-தெளிவு—2/?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு
    தெளிவு—2/? 

    FFC – 176

    30-03-2016—புதன்.

    ninaivu_koorvaam

    வாழ்க வளமுடன்.

    சென்ற அறிவிற்கு விருந்தில் ‘தெளிவு’ பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம். இன்று அதே பொருள் பற்றி இரண்டாவது நாளாக சிந்திக்க இருக்கிறோம். சென்ற விருந்தில் சிந்தித்ததை இப்போது நினைவு படுத்திக் கொள்வோம். இறை உணர்வு பெற, பயிற்சியோடு, தெளிவும் அவசியம் என அறிந்து கொண்டோம். இப்பிறவியிலேயே பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கான தெளிவினையும், உறுதியினையும் நம் குருதேவர் அளித்துள்ளது பற்றி அறிந்து கொண்டோம்.

    திருமூலரின் திருமந்திரத்தின் ஒருபாடலின் தலைப்பு ‘குருவருளே திருவருள்’ என்பதனை எடுத்துக் கொண்டு, இறை உணர்வு பெற தெளிவு அவசியம் என வலியுறுத்துவதனை ஆராய இருக்கிறோம். அதுவும், அந்த தெளிவு குருவின் வழியாக நான்கு வழிகளில் வருகின்றது என்கிறார் திருமூலர்.

    தெளிவு என்பது என்ன? தெளிவு என்பது அறிவின் புரிந்து கொள்ளும் தன்மையின் உச்ச நிலை. அறியக்கூடிய அறிவு, அறியவேண்டியதை, புரிந்து கொள்வதில்
    எவ்வித ஐயமும் இல்லாமல் விளக்கங்கள் பெறவேண்டும்
    குழப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது.
    இதுவா, அதுவாக என்கின்ற ஊசலாடும் மனநிலை இருக்கக் கூடாது.
    தீர்மானமான நிலை அடைதல் வேண்டும். (CONFIRMED DETERMINATION)

    நீரோடையில் ஓடும் நீர் அசுத்தமாக இருந்தால் நீரின் கீழே அடியில் உள்ள பொருட்கள் கண்களுக்குத் தெரியாது. நீரிலுள்ள அசுத்தங்கள் நீரின் தெளிந்த தன்மையை மறைக்கும். அசுத்தங்கள் நீக்கப்பட்டால் அதே தண்ணீர் தெளிந்ததாகிவிடும். தெளிந்த நீரோடையில் நீரின் ஆழத்தில் உள்ள பொருட்கள் தெரிவதுபோல், தெளிந்த அறிவிற்குத்தான், எதனை ஆழ்ந்து அறிந்து, அறிந்ததன் அடிப்படையில், வாழ்க்கைக்கான அர்த்தமும், அதற்கேற்ப எவ்வாறு வாழவேண்டும் என்பதும் தெரியவரும்.

    மேலும், தெளிவு என்றால் ‘பொலிவு’ என்கின்ற பொருளும் இருப்பதால், தெளிவு பெற்ற அறிவில் பொலிவு ஏற்படும். அதாவது அறிவு புத்துணர்ச்சி பெறும். அறிவில் புதிய மலர்ச்சி ஏற்படும். அறிவு பிரகாசிக்கும். அறிவு அறிவொளியாகத் திகழும்.

    சுருங்கச் சொல்வதென்றால், அறிவு தனது நீண்டகால பயணத்தில் தன்னுடைய மூலத்தை, இருப்பிடத்தை, சுயவிலாசத்தை மறந்துவிட்டு புலனின்ப மயக்க நிலையில் உள்ளதை-intoxicated sensual pleasures – a state of coma of sensual pleasure). மீட்டு, மீண்டும் பூர்வீக நினைவிற்குக்கு(துரியாதீத நிலை) கொண்டு வரவேண்டும். அதுவே தெளிதலாகும். தெளிவடைந்துவிட்டால் அது புனர்ஜென்மமாகும். இப்பிறவியிலேயே, மறுபிறவி எடுத்து ஆனால், மீண்டும் பிறவாதிருத்தலாகும்.

    இதுவரை வாழ்க்கையைப்பற்றிய சிந்திக்காமல், ‘பிறப்பது, இன்ப, துன்பம் மாறி, மாறி அனுபவிப்பது, இறப்பது(birth, enjoyment of pain and pleasure, death) என்பதுதான் வாழ்க்கை’ என்கின்ற புரிதலில் வாழ்ந்து வருகின்றான் மனிதன். மனிதவாழ்க்கை என்பது
    இயற்கையின் நிகழ்வு என்பதால்,
    மனிதவாழ்க்கைக்கு இயற்கை நோக்கம் வைத்துள்ளது,
    அது இறை உணர்வு பெறுவது,
    அதனை நிறைவேற்றும் வகையில் இயற்கை நீதியை மதித்து,
    இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் என்கின்ற உறுதியான தீர்மானம் செய்வதுதான் தெளிவடைதலாகும்.

    திருமூலத்தெய்வம் நான்கு வழிகளிலே தெளிவினை அடையலாம் என உறுதியாகக் கூறுகிறது. அந்த யுக்தியினைக் கையாள வேண்டும். அல்லது மகரிஷி அவர்கள் கூறுவதுபோல் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி, பண்பேற்றம் பெற்று குருவை மதித்து ஒழுகி பிறவிப்பயனை அடைய வேண்டும். திருமூலத்தெய்வம் நான்கு வழிகளிலே தெளிவினை அடையலாம் எனக்கூறுவதும், மகரிஷி அவர்கள் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி, பண்பேற்றம் பெறலாம் என்று கூறுவதும் ஒன்றுதான்.

    குருவருளே திருவருள்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

    . . . அறிஞர் திருமூலர்.

    குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பது ஆன்றோர் மொழி. குரு அருள் இல்லாமல் இறை அருள் பெறமுடியாது. ஏனெனில் அறிவை அறிந்த, அறத்தின் கவசமாக விளங்கும் பெரியவரே இறையை நோக்கிய பயணத்தில் சீடருக்கு வழிகாட்டி வெற்றி அடையச்செய்ய முடியும் என்பதால், குருவின் அருள் இல்லையானால் இறையருள் இல்லை என்கின்றனர்.

    சீடன் தன் ஆன்மீக பயணத்தில் வெற்றி அடையும்போது, குரு என்பவர், இன்பம்-துன்பம் ஆகிய இருநிலைகளிலிருந்து விலகி இருந்தாலும், அவரே முதலில் மகிழ்ச்சி அடைவார். ஏனெனில் அவர் கற்றுக் கொடுத்து வழிகாட்டியது வெற்றிகண்டதே அதற்குக் காரணம். மேலும் குரு விரும்பி இன்னாருக்கு அருள் புரிய வேண்டும் என்று நினைத்து அருளை அருளுவதில்லை. சீடருக்கு குருவருள் கிடைப்பது என்பது இயற்கையின்/இறையின் நிகழ்வே-செயலுக்கேற்ற விளைவு இயற்கை நீதி. யார் ஒருவர் குருவை மதித்து ஒழுகுகிறார்களோ அவர்களை, குருவின் உயர்வு, தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை அடையச் செய்கின்றது இயற்கை/இறை. அது தானாகவே நிகழும் நிகழ்வு(It is an automatic process.)
    எனவே குருவருளுக்கு பாத்திரமாகிவிட்டால் திருவருள் நிச்சயம் என்கிறார் பாடலின் தலைப்பிலேயே அறிஞர் திருமூலர். பாத்திரமாவது என்றால் என்ன? திருவருள் பெறுவதற்குத் தகுதியாக பண்பேற்றம் பெற்றுத் தயாராகி, இறை உணர்வு பெறுதலுக்காக ஏங்கி நிற்கும் நிலையே பாத்திரமாவது என்பது. திருவருளுக்கு தகுதி நிலையாகிய பண்பேற்றம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

    ஆதிமனிதனாகியபோது அவனது பண்பின் ஆரம்ப இருப்பு முழுவதும் விலங்கினப் பதிவே. அறத்தின் தோற்றம் என்று நடந்ததோ அன்று வரை விலங்கினப்பண்பில், சொல்லுகின்ற அளவிற்கு மாற்றம் ஏதும் இருந்திருக்காது. மனித இனப்பரிணாமத்தில் அறத்தின் தோற்றத்திற்குப் பிறகு விலங்கினத்தன்மை(பண்பு) பிறவிகள் தோறும் அவனது முயற்சி, சூழ்நிலைக்கு ஏற்ப மிக மிகச் சிறிதளவிலேதான் மாற்றம் பெற்று வந்திருக்கின்றது. அப்போது அவனது தன்மை விலங்கினப்பண்பு, மற்றும் மனிதப்பண்பு சேர்ந்த ஒரு கலவையாக இருந்திருக்கும். விலங்கினப்பண்பும், மனிதப்பண்பும் கலந்த கலவையாக இருந்தாலும், தெய்வமே மனிதனாக தன்மாற்றம் அடைந்ததால், அந்த இரண்டு பண்போடு தெய்வப்பண்பும் வெளியே தெரியாமல் மறைந்திருக்கின்றது(dormant). மறைந்திருக்கும் தெய்வீகப்பண்பை முழுவதுமாக வெளிப்படுத்தும் காலகட்டத்தில் மனிதஇனப் பரிணாமம் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சடுதிமாற்றமாக இயற்கை/இறை கருணையோடு அருளியதுதான் மனவளக்கலை.
    மனதை வளமாக்கும் கலையினை பயில்வதோடு, அறிவு தெளிவினையும் பெறவேண்டும். ஏனெனில் மனவளக்கலை மற்ற கலைகளிலிருந்து வித்தியாசப்படுகின்றது. மற்ற கலைகளை எல்லோரும் பயில வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. மற்ற கலைகளை பயில்வது என்பது, அவரவர்களின் விருப்பம், திறமை ஆகியவற்றைப் பொருத்தது.

    ஆனால் மனவளக்கலையை எல்லோருமே கற்றே ஆக வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் மனித இதுவரை இனப்பரிணாமத்தில் இல்லாதிருந்த, ‘வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்கின்ற கலையைக் கற்றுத்தருவதால்’ வாழ்வதற்காகப் பிறந்த மனிதகுலமே கற்க வேண்டிய கலை மனவளக்கலை.

    மனதை வளப்படுத்தும் கலையாகிய மனவளக்கலை,

    இதுவரை பல்லாயிரம் பிறவிகளாக, இன்பம், துன்பம் ஆகிய இரண்டை மட்டுமே மாறி, மாறி வாழ்க்கை அனுபவங்களாகக் கண்ட மனித குலத்தை, பழைய பாதையிலிருந்து விலக்கி,  இன்பத்தில் அளவும் முறையும் பின்பற்றி, துன்பமில்லாமல் வாழ்ந்து இன்பத்திற்கும் மேலான அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிக்கக் கூடிய சிறப்பான வாழ்க்கைப் பாதைக்கு மாற்றும் வாழ்க்கைக் கலையாக இருக்கின்றது.

    எனவே எல்லோருமே வாழ்வதற்காகப் பிறந்துள்ளதால் மனவளக்கலையை எல்லோருமே பயின்றுதான் வாழ்க்கையை வாழவேண்டும்.

    மனவளக்கலை முதலில் சிறப்பாக வாழும் கலையாக செயல்பட்டு, இறுதியில் இறை உணர்வை பெறச்செய்யும் தெய்வீகக்கலையாக பரிணமிக்கும். எனவே இவ்வரிய கலையை பயில்வதற்கு பயிற்சியோடு, தெளிவும் அவசியமாகின்றது.

    ஏனெனில் இதுவரை பல்லாயிரம் பிறவிகளாக, அறிவு வேறு பாதையில்(இன்ப-துன்பம்) வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டது. எனவே திடீரென்று இப்பிறவியில் வாழ்க்கைப் பாதையை மாற்ற வேண்டுமெனில் பழக்கப்பதிவுகளின் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். எனவே விளக்கப்பதிவு பழக்கப்பதிவை எளிதில் வெற்றி பெற அறிவிற்குத் தெளிவு இருத்தல் அவசியம். தெளிவு இருந்தால் மனதிற்கு உறுதி ஏற்படும். இத்தருணத்தில் மகான் பாரதியாரை நினைவு கூர்வோம்.

    மகான் மகா கவி பாரதியார் துவைத நிலையில் இருந்து கொண்டு(பின்னர் அத்வைதத்தையும் உணர்ந்துவிட்டார்),
    தான் எண்ணியது நடக்க வேண்டும், என்று அன்னையை இறைஞ்சுகிறார்.
    அதே நேரத்தில் நல்லதையே எண்ணுதல் வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.
    நல்லதையே எண்ணுவதற்கு வலிமையான நெஞ்சம் வேண்டும் எனக் கேட்கிறார்.
    வலிமையான நெஞ்சமாக இருப்பதற்குத் தெளிந்த நல்லறிவு வேண்டும் என்கிறார்.

    இவற்றை எல்லாம் எதற்காக மகா கவி பாரதியார் கேட்கிறார்?
    செய்த பாவமெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காகக் கேட்கிறார்.

    ஆகவே அறிவிற்குத் தெளிவு இருந்தால்தான் நெஞ்சம் உறுதியாக இருந்து செய்த பாவங்களை எல்லாம் நசித்திட முடியும். எனவே அறிவிற்குத் தெளிவு அவசியமாக இருப்பதால், மனவளக்கலை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான அறிஞர் திருமூலர் தெளிவு பற்றிக் கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம்.

    அறிஞர் திருமூலர் அருளியுள்ள பாடலுக்குள் பயணிப்போம். அறிஞர் திருமூலர் பாடலுக்கு ‘குருவருளே திருவருள் என வைத்துள்ளார். திருவருள் பெறுவதற்காக குருவருளை நாடுகின்றோம். குருவருள் கிடைத்துவிட்டால் திருவருள் கிடைத்துவிடும். ஏனெனில் அறிவில் அறிவாய் நிலைத்து, அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டுகின்றவர் ஆன்மீக சாதகனுக்கு குருவாக கிடைத்துவிட்டால், ‘சாட்சாத் குருவே பிரம்மம்’ என்று குரு ஸ்லோகம் கூறுவது போலவும், ‘ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவரை தெய்வத்திற்குச் சமம்’ என்று திருவள்ளுவர் கூறுவது போலவும், குருவே தெய்வமாகி விடுகின்றார்.

    அடுத்ததாக குருவருள் திருவருளை ஏற்படுத்துவதற்கு, தெளிவு அவசியம் எனக் கண்டுபிடித்துள்ளார் அறிஞர் திருமூலர். அந்த தெளிவு குருவிடமிருந்தே சீடன் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறுகின்றார். குருவை அடைந்த பயன் இப்பிறவியிலேயே நிறைவடைய, ஏதோ ஒருவகையில் தெளிவு பெறுவது போதாது எனக்கருதி, இருக்கின்ற எல்லா வழிகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவதனை நான்கு வழிகளில் கூறுகிறார் திருமூலர்.

    இறை உணர்வு என்பது என்ன? உயிரினங்களிலேயே மனித உயிரினத்திற்கான பாக்கியம் இறை உணர்வு பெறுதல். மற்ற உயிரினங்களுக்கு இறை உணர்வு பெறுகின்ற பாக்கியம் இல்லை. மேலும் மனிதன் சமூகப்பிராணி(SOCIAL ANIMAL) என்பதால், சமூகத்தில் தான் வாழ முடியும் என்பதால், விலங்கினத்திலிருந்து வந்த மனித இனம், கருமையத் தொடர்பாக கொண்டுவந்துள்ள விலங்கினப் பதிவுகளை செயலிழக்கச் செய்து பூரண மனிதனாக வாழ வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி ஏற்படும். எனவே விலங்கினப் பதிவுகளை செயலிழக்கச் செய்து பூரணமனிதனாக வாழ்வதற்கு அறவுணர்வு அவசியமாகின்றது. அறம் என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று இறை நெறிகளைக் கொண்டது. அறம் இல்லாமல் இறை உணர்வில்லை. இறை உணர்வின் பயன் அற உணர்வு. அற உணர்வு என்பது மனித இனப் பண்பேற்றத்தின் உச்ச நிலை.

    விலங்கினப்பண்பிலிருந்து மனித இனப் பண்பிற்கு உயர்வது என்பது ஒரு கலை. கலை எதற்காக? கலையை முறையாக, ஊக்கத்தோடு, இடைவிடாது பயிற்சி செய்து அக்கலையில் முழு தேர்ச்சி பெறவேண்டும். எந்தக்கலையிலும் தேர்ச்சி பெறவேண்டுமெனில் கலை பயில்பவர்கள் அக்கலையில் சிறந்து விளங்கியவர்/விளங்குபவரை முன்மாதிரியாக(Role Model) வைத்துக் கொள்வர். அதே போன்றுதான் பண்பேற்றக் கல்வியிலும் அக்கல்வியினைப் போதிக்கின்ற பெரியவர் குருவாகிறார். ‘குரு’ என்றால் அறியாமையை போக்குகின்றவர் என்று பொருள். அறியாமையைப் போக்குவது என்பது என்ன? அறியாமை நீங்கினால் அறிவிற்கு என்ன கிடைக்கும்? அறியாமை நீங்கினால் அறிவிற்கு தெளிவு கிடைக்கும்.

    எனவே அறிவில் தெளிவு பெறுவதற்கான பயிற்சியாக ஆன்மீகசாதனை செய்பவர்கள் தங்கள் குருவிடமிருந்து தெளிவினைப் பெறவேண்டும். அக்காலத்தில் குருகுலக்கல்வி முறை இருந்தது. குருவின் ஆஸ்ரமத்திலிலேயே தங்கி சீடர்கள் எழுத்தறிவினையும், ஒழுக்கப்பழக்க அறிவினையும் கற்பர். அப்போது உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றினையும் அர்ப்பணித்து கல்வி பயில்வர். அர்ப்பணிப்பு இல்லாமல் கலையில் தேர்ச்சி பெற இயலாது. குருவின் ஆஸ்ரமத்திலேயே தங்கி கல்வி பயில்வதால், குருவின் நடை, உடை, பாவனை ஆகிய மூன்றிலிருந்துமே, தானாகவே, இயல்பாகவே பண்பேற்றம் சீடனிடம் ஏற்பட வாய்ப்பிருந்தது. அப்படி வாய்ப்பிருந்த நிலையிலுமே திருமூலர் குருவின் வழியாக சீடர் தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்பதனைக் கண்டுபிடித்துள்ளார்.

    இப்போது திருமூலர் கண்டுபிடித்துள்ள நான்கு தெளிவு பெறும் வழிகளுக்குள் செல்வோம்.

    1) தெளிவு குருவின் திருமேனி காண்டல்: குருவினுடைய திருமேனியை காண்பது எவ்வாறு அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்தும்? குருவின் திருமேனியைத் தரிசிப்பதில் தெளிவினை அடைந்தவர்கள், தொடர்ந்து குருவின் சீடராக இருந்து, பண்பேற்றத்தில் முழுவெற்றி பெற்று மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப அனுபவமான “நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்“ என்கின்ற நிலையினை அடைகின்றனர்.

    ஒருவருக்கு குருவின் திருமேனி தெளிவாகிய ஆனந்தத்தை தருகின்றது, மற்றவருக்கு ஏன் அதே தெளிவாகிய ஆனந்தத்தைத் தருவதில்லை? இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். குருவிற்கு வேண்டியவர் வேண்டாதவர் என்பதுகிடையாது. குருவானவர் ‘நோக்கும் திசையெல்லாம் தாமன்றி வேறில்லை’ என்கின்ற தெளிவினை அடைந்தவர் என்பதால், அவரிடம் எவ்வாறு வேண்டியவர், வேண்டாதவர் என்றிருக்க முடியும்? அவரிடம் வருகின்ற சீடர்களையெல்லாம் தாமாகவே பார்க்கக் கூடியவர். எனவே குருவின் தரிசனம் தெளிவு ஏற்படுத்துவது என்பது சீடர்களின் அருட்தாகத்தைப் பொருத்தது. சீடர்கள் பரிபக்குவ நிலையில் இருந்தால் குருவைத் தரிசித்த அன்றே ஈர்ப்பு ஏற்பட்டுவிடும் இது முதல் ரகம். வேறு சிலருக்கு, மற்றவர்களின் குரு-சீடர் உறவு அனுபவங்களைச் சொல்லக் கேட்டு மெல்ல மெல்ல ஈர்ப்பு வரும். இதற்காகத்தான் சத்சங்கம் மிக மிக அவசியமாகின்றது. அந்த முதல் ரகத்தவருக்கும் இரண்டாம் ரகத்தவருக்கும் ஏன் இந்த வித்தியாசம்? காரணம் முதல் ரகத்தவர் பரிபக்குவ நிலையில் இருக்கிறார். இப்படி சொல்வதால் இரண்டாமவர் பரிபக்குவ நிலையை அடையாதவரா என ஐயம் எழலாம். குரு கூறும் போதனைகள் அறிவிற்கு விருந்தாக அமைந்து, முதலாமவருக்கு எளிதில் அலை இயக்கத் தத்துவப்பண்புகள் படி ஊடுருவி கருமயத்தில் பதிவாகிவிடுகின்றது. இதன் விளைவாக அவ்வையார் கூறியுள்ளதுபோல் இனியவைகளுள் மூன்றாவதாக இடம் பெறுகின்ற ‘அறிவினரைச் சேர்தல்’ என்கின்ற நியதி வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றது. மற்றவருக்கு மெல்ல மெல்ல இது நடைபெறும். மெல்ல மெல்ல நடைபெற்றாலும் இப்பிறவியிலேயே தெய்வாம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் பண்பேற்றத்தை எட்டிட வேண்டும். அதனை அடுத்த பிறவிக்க தள்ளிப்போடக்கூடாது. 325000 பிறவிகள் எடுத்து வீணாகிவிடுமன்றோ! எனவே இன்னும் சிறிது தூரம்தான் உள்ளது எல்லையைக் கடப்பதற்கு என்கின்ற உற்சாகத்தோடு மகரிஷி அவர்கள் ‘முயற்சி வெற்றியைத் தராமல் இருந்தாலும், முயற்சிசெய்வது தொடரவேண்டும்’ . என்று கூறுவதுபோல் முயற்சி தொடர் விடா முயற்சியாக இருக்க வேண்டும்.

    இந்த பிரபஞ்சமே அலை இயக்கத்தினால் இயங்குகின்றது. குரு-சீடர் உறவின் வெற்றி, அலை இயக்கப் பண்புகளால் நடைபெறுகின்றது. அலை இயக்கப்பண்புகள் என்னென்ன? அலை இயக்கப்பண்புகள் ஐந்து.

    1) மோதுதல்(CLASH)
    2) பிரதிபலித்தல்(REFLECTION)
    3) சிதறுதல்(REFRACTION)
    4) ஊடுருவல்(PENETRATION)
    5) முன்பின் ஓடுதல்(INTERACTION)

    விளக்கம்: எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அணு முதற் கொண்டு, அண்டங்கள் வரை அது சுழன்று கொண்டே இருப்பது நாம் அறிந்ததே. அதனால் அலை என்பது தோன்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த அலை எங்கு செல்லும்?

    சுற்றியுள்ள பொருள் மீது தாக்கும். இதுதான் மோதுதல்(CLASH) எனப்படுகின்றது.
    ஒவ்வொரு பொருளிலிருந்தும் அலை வந்துகொண்டே இருக்கின்றது. அலைகள் பிரதிபலிக்கின்றது.
    அப்போது திரும்பி வருகின்றது. ஆனால் எல்லா அலையும் திரும்பாது. மோதுதல் ஏற்படுவதால், சிதறுதல்(REFRACTION) நடைபெறுகின்றது.
    எல்லாப்பொருட்களும் அலைகளின் கூட்டு இயக்கமாக நடைபெறுவதால் ஒரு அலை மற்றொரு அலை மீது மோதும்போது ஊடுருவதலும்(PENETRATION) நடை பெறுகின்றது.
    அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஒடிக்கொண்டேயும்(INTERACTION) இருக்கும்.

    இவ்வகையில் அலைகள் இயங்குகின்றன. இதே நிலைதான் குரு-சீடர் உறவிலும் நடைபெறுகின்றது. இந்த நிலையால்தான் சீடரின் பண்பேற்றத்தில் இயல்பூக்க நியதியும், குருவின் உயர்வு சீடரின் பண்பேற்றத்தை உயர்த்தி பிறவிப்பயனை நல்குகின்றது.

    அறிஞர் திருமூலர் கூறும் முதல் தெளிவான ‘தெளிவு குருவின் திருமேனி காணல்’ என்பதற்கு வருவோம். குருவின் திருமேனி என்பது என்ன? உடலா குரு? அல்லவே! அவருடைய ஆன்மாதான் அவர். குருவின் ஆன்மா எத்தன்மையது? அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு என்பதால், தெய்வாம்சமான அன்பும், கருணையும் பிரதிபலிக்கின்ற வகையில் தூய்மை அடைந்தது குருவின் கருமையம். சுருங்கச் சொல்வதென்றால் ‘நோக்கும் திசையெல்லாம் தாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்’ என்கின்ற நிலையினை அடைந்த தூய்மையான நிலை அது.

    ஆன்மாவிற்கு மேல் உடல் கவசம்போல் உள்ளது. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளும் அதன் தன்மையை அலையாக வீசிக் கொண்டிருப்பதால், கண்களுக்குத் தெரியாத குருவின் ஆன்மாவிலிருந்தும், கண்களுக்குத் தெரிகின்ற ஆன்மாவின் கவசம் போல் உள்ள திருமேனியிலிருந்தும் அலைகள், குருவினுடைய தன்மையினை வீசிக் கொண்டே இருக்கும். எனவே குருவின் திருமேனியைக் காண்கின்றபோது, அவரிடமிருந்து வருகின்ற தெய்வாம்ச அலைகள் சீடரின் மீது மோதி, பிரதிபலித்து, சிதறி, ஊடுருவி, இருவருக்கும் இடையே மோதி, திரும்பி வந்தும், இருவருக்கும் இடையே ஓடிக்கொண்டேயும் இருக்கும். இது இயற்கையின் நியதியாக உள்ளதால், குருபிரானை தரிசிக்கின்றவர்கள் அனைவருக்கும் பராபட்சம் இல்லாமல் இது நடக்கின்றது. இருந்தாலும் சீடர்களின் பரிபக்குவ நிலையினைப் பொருத்து, அலைஇயக்கத்தின் ஐந்தாவது நிகழ்வான இருவருக்கும் இடையே அலை ஓடிக்கொண்டிருத்தலில் வித்தியாசம் உள்ளது.

    இதனால்தான் ஆன்ம சாதகர்களுக்கு,  குருவிற்கும், சீடருக்கும் இடையே கெட்டியான பிணைப்பு(THICK BOND) ஏற்பட, பயிற்சியின் ஆரம்ப காலத்தில், குருவை அடிக்கடி சந்திக்கச் சொல்வதுண்டு. அடிக்கடி குருவை சந்திக்கும்போது குருவினுடைய திருமேனியைத் தரிசிக்கிறான் சீடன். அப்போது குருவிடமிருந்து வரும் அலைகள் சீடன் மீது மீண்டும் மீண்டும் மோதுகின்றன. குருவிடமிருந்து வரும் அலைகள் அதன் தன்மையை சீடா் மீது மீண்டும் மீண்டும் பதிக்கின்றது. அதாவது சீடரின் கருமையத்தில் பதிவாகின்றது. கருமைய பூரணத்தூய்மைதானே இறை உணர்வின் உச்ச கட்ட நிகழ்வு. அது என்ன உச்ச கட்ட நிகழ்வு. பக்தி மார்க்கத்தில், எவ்வாறு ஆலயங்களில் சுவாமி சிலைக்கு அலங்காரம் செய்து முடிந்ததும் சுவாமி சிலையை பக்தர்கள் காண்பதற்கு திரை விலக்கப்படுகின்றதோ, அதுபோல் ஞானமார்க்கத்தில், தெய்வத்தையும், மனிதனையும் பிரித்து வைக்கின்ற தன்முனைப்புத் திரை விலக வேண்டும். அப்போதுதான், தன்முனைப்பிலிருந்து உண்டாகிய ‘தான்’, ‘தனது’ என்கின்ற இரு தம்பதிகளுக்கு உருவாகிய அவலக் குழந்தைகளான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகள் நீ்ங்கி அறுகுணசீரமைப்பு நடந்தேறிவிடும்.

    குருவின் சன்னிதானத்தில் சீடனுக்கு அலாதியான அமைதி கிடைக்கின்றது. யார் சரியான குரு என்று சொல்வதற்கு ஒரு சாம்யம் உண்டு இறை உணர் ஆன்மீகத்தில். யாருடைய சன்னிதானத்தில் அமைதி கிடைக்கின்றதோ அவரே உகந்த குரு என்பார்கள். ஆரம்ப ஆன்மீக சாதகன், குருவைத் தரிசித்து சென்றுவிட்ட பிறகு அவர் சன்னிதானத்தை விட்டு விலகி இருக்கும்போதுகூட அவரது நினைவு பல விதங்களில் அடிக்கடி வரலாம்/வரும். இது பண்பேற்றத்திற்கான நல்ல அறிகுறியே! பல விதங்கள் என்பது, அடிக்கடி, குருவின் திருமேனி நினைவிற்கு வந்துபோகும். அவர் அருளிய அருட்செய்திகள் காதில் வந்து மோதலாம். அவரை மீண்டும், மீண்டும் காணவேண்டும் என்கின்ற தீராத அவா எழலாம். இதனை, அறிவு தெளிவு பெறுவதற்குத் தயாராகிவிட்டது எனலாம். இது அலை இயக்கத்தின் ஐந்தாவது பண்பான ‘அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக்கொண்டேயும்(INTERACTION) இருக்கும்’ நிலையாகும். இங்கே, மகரிஷி அவர்கள் கூறும் ‘பண்பேற்றத்திற்கு உதவும் இயல்பூக்க நியதியினை’ அறிவோம்.

    குருவின் சேர்க்கை(15-08-1984)
    “எப்பொருளை எச்செயலை, எக்குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும், உடலினிலும் மாற்றங் காணும்;
    இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்;
    —————————————————————
    ——————————————————————–
    ———————————————————————-
    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே அவ்வாறு ஆரம்பகால ஆன்மீக சாதகருக்கு அனுபவம் வந்தால் அது நல்ல அறிகுறியே. இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(03-04-2016—ஞாயிறு) அறிஞர் திருமூலர் கூறும் அடுத்தடுத்த தெளிவுகளைப் பற்றி சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                         வளர்க அறிவுச் செல்வம்.

    வாழ்க வளமுடன்.

    தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள்.   Help tips to send feedback in Tamil, click here.

    Loading

  • FFC – 175-தெளிவு—1/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    தெளிவு—1/? 

    FFC – 175

    28-03-2016—திங்கள்.

    ninaivu_koorvaam

    Pushpaanjali

    வாழ்க வளமுடன்.
    காலம் உருண்டோடுகின்றது. 10 வருடங்கள் கடந்துவிட்டன நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மகாசமாதி அடைந்து. இதே நாளில் 2006 ல் மகா சமாதி அடைந்தார். இப்போது பூதவுடல் இல்லையாயினும் அவரது சூக்கும உடல் வழியாக நம்மை கண்காணித்துக் கொண்டும், காப்பாகவும் இருந்து கொண்டு, இறைத்தூதுவர் பணிசெய்ய அவர் பணித்துள்ளதால் அப்பணியை நாம் சிறப்பாக, செவ்வனே செய்ய உற்ற துணையாகவும், அரணாகவும் இருந்து கொண்டு நம்மை ஆசிர்வதித்துக் கொண்டும் இருக்கிறார். நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நம்முடைய சத்சங்கத்தில் எப்போதும்போல் சூக்குமமாக எழுந்தருள அவர் திருவடிகளை வணங்கி வேண்டுகிறோம்.

    வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக சத்சங்கத்தில் குழுமியிருக்கிறோம். நினைவு அஞ்சலி(homage done on someone’s death anniversary) என்றால் என்ன என்பது நமக்குத் தெரிந்ததே. நினைவு அஞ்சலி என்பது ஒருவர் பூதவுடலை நீத்த நாளில் அவரை நினைத்துச் செலுத்தும் மரியாதை. எனவே நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக குழுமியிருக்கும் இவ்வேளையில் அவரை எவ்வாறு நினைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றி யோசித்தபோது, மகரிஷி அவர்கள்,
    அவரது மாணவர்களுக்கு ஆறாம் அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்தியும்,
    அதன் வாயிலாக வாழ்க்கையின் எதார்த்தத்தை விளங்கவைத்தும்,
    இருண்டிருந்த வாழ்க்கையை அறிவொளியில் மிகச்சிறப்பாக வாழ வழி வகுத்துள்ளதால், ‘தெளிவு’ என்கின்ற தலைப்பையே எடுத்துக் கொண்டு சிந்திக்கலாம் என்று தோன்றியது. எனவே ‘தெளிவு’ பற்றியே இன்று சிந்திப்போம்.

    பண்டைக்காலத்தில் சீடன் குருவுடனே தங்கி, குருவிற்கு உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணித்து பண்பேற்றக்கல்வி பெற்றான். எனவே குருவின் நடை, உடை, பாவனை ஆகிய மூன்றிலிருந்தும் பண்பாட்டுக் கல்வியினை இயல்பூக்க நியதிப்படிக் கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தது. நன்றியுணர்வாக குருவிற்கு காணிக்கையையும் சீடன் அளிப்பது வழக்கமாக இருந்தது.

    நவீன காலத்திற்கேற்ப இப்போது, அதே பண்பாட்டுக் கல்வியினை வேதாத்திரி மகரிஷி அவர்களிடம், தினம் வீட்டிலிருந்து கல்விக் கூடத்திற்கு வந்துபோகும் முறையில்(day-scholars) மாணவர்களாக இருந்து கல்வி பயின்று வருகிறோம். நம்முடைய குருதேவர், சீடர்களிடம் ஏதும் காணிக்கை எதிர்பார்ப்பதில்லை. எனவே வேதாத்திரி மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில், சீடர்களும் காணிக்கை கொடுக்கும் பழக்கமும் இல்லை. ஆனால்,

    Kumbakonam

    இதிலிருந்து என்ன தெரிகின்றது; தெளிவாகின்றது? நம்முடைய குருதேவர் அவர்கள், அவரைப்போன்றே, நாமும் பண்பேற்றத்தில் வெற்றி பெற்று மாக்களுக்கும், மக்களுக்கும் மனமுவந்து தொண்டாற்றும் மாமுனிவர்களாகவும் முழுமனிதர்களாகவும் ஆக வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கிறார் என்று ஐயமின்றி தெளிவாகின்றது.

    அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வில் அந்த அறிஞரின் குணங்களை, செயல்களை, உயர்வினை, தொண்டினை, தியாகத்தினை, தன்னலமற்ற சேவையினைப் பற்றி கலந்துரையாடி அவரை நினைவு படுத்திக் கொள்வோம். இது எதற்காக? இரண்டு பயன்கள் உள்ளன இதில்.

    • ஒன்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக் கொண்டு பண்பேற்றத்தில் உயர்வது.
    • மற்றொன்று அவ்வைத்தாய் கூறுவது போன்று இனிதிலும் இனியதை அனுபவிப்பது.

    அவ்வைத்தாய் எவ்வாறு இனிதிலும் இனியதை அனுபவிப்பது பற்றி கூறுகிறார் என்பதனை நினைவு கூர்வோம். 

    28-3-2016-NEW- அவ்வையாா-தெளிவுஅவ்வைத்தாய் கூறியுள்ளதுபோல்

    1) ஏகாந்தத்திலும்,
    2) அடுத்து ஆதியைத் தொழுவதிலும்-(துரியாதீத தவத்தில் அப்பாலுக்கு, அப்பாலாய் சென்றும்),
    3) அறிவினரோடு சேர்ந்திருத்தலிலும்(மகா புருஷர் வேதாத்திரி மகரிஷி அவர்களுடன்),
    4) அறிவினரைக்(மகா புருஷரை) கனவிலும், நனவிலும் காண்பதிலும்,
    அடுத்தடுத்து படிப்படியாக, அதிகரித்து வரும் இன்பத்தை அனுபவித்து வருவது வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைந்ததன் பயன், என்பதனை மனதை சாட்சியாக வைத்து பதிவு செய்கிறோம்.

    அவ்வையார் கூறும் அறிவினராக வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாகப் பெற்றது நம்பாக்கியம் அன்றோ! அத்தகைய அருளாளருக்கு நினைவு அஞ்சலி செலுத்த ஆனந்தத்துடன் குழுமியிருக்கிறோம். ஏற்கனவே தினந்தோறும், அவ்வைத்தாய் கூறுவதுபோன்று அவரை நினைத்து மகிழ்வு அடைந்து வருகிறோம்.

    இன்று மகரிஷி அவர்களுக்கு நினைவு தினமாக இருப்பதால் பிரத்தியேகமாக என்ன நினைக்க இருக்கிறோம். இத்தனை நாள் நினைந்து வருவதற்கும், இன்று நினைக்க இருப்பதற்கும் ஏதாவது விசேஷம் இருக்க வேண்டுமல்லவா?! அதனால்தான் ‘தெளிவு’ என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திக்க உள்ளோம்

    மனவளக்கலை வடிவமைப்பு,

    • மனிதன் பண்பேற்றத்தில் உச்சத்தை அடைந்து,
    • அதன் பயனாக இறை உணர்வு பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
    • வளம் குறைந்த மனதை இறை உணர்வு பெற்ற வளமான மனமாக ஆக்குவதே மனவளக்கலையின் நோக்கம்.

    எனவே இக்கலைக்கு மனவளக்கலை எனப்பெயரிடப்பட்டுள்ளது.

    இறை உணர்வு என்பது ஆங்கிலத்தில் ‘Realisation of God’, என்றும் அல்லது ‘Enlightenment’ எனவும் அழைக்கப்படுகின்றது. தன்னை அறிதல் என்றும் – ‘Self Realisation’ என்றும் சொல்வதுண்டு.
    ‘Enlighten’ (verb) என்றால் விவரமாக, தெளிவாக விளக்கு என்று பொருள்.

    ‘Enlightenment’ என்றால் advanced state of Knowledge, அறிவு, ஒளி, அறிவு புகட்டுதல், ஞான உபதேசம், அறிவொளி என்றெல்லாம் பொருள்.
    இறை உணர்வு என்பதற்கு பொருள், தெளிவு பெறுதல் என்றிருத்தலால், தெளிவில்லாமல் இருக்கும் அறிவு, இறை உணர்வு பெறுவதற்கு தெளிவு அடையவேண்டும். இறைஉணர்விற்கு அடிப்படையாக இருப்பது தெளிவே. பயிற்சிகள் மட்டுமே இல்லாமல், அதனுடன் தெளிவு சேர்தலும் இறை உணர்விற்கு மிக மிக அவசியமாக இருக்கின்றது. பழக்கப்பதிவின் அழுத்தத்தின் காரணமாக, பயிற்சியில் அவ்வப்போது தொய்வு அடையும் அறிவிற்குத், ‘தெளிவு’ உந்துதலையும், ஒளியையும் ஊட்டி அறிவை அறிவொளியாக மாற்றச் செய்யும். அறிவு முழுமையாக தெளிவடைந்துவிட்டால் அது ‘திடஞானம்’ பெற்றது போல்தான். அதன் பிறகு எத்தனை ஆயிரம் (சுமார் 325000) பிறவிகளின் பழக்கப்பதிவுகளும் தோற்றுப்போய், விளக்கப்பதிவே வெற்றி கொள்ளும் சாதனையாக அமையும் என்பது நிச்சயம்.

    ‘நான் யார்?’ என்று தெரியாமல், தன்னுடைய நிரந்தர விலாசம்-சுயவிலாசம்(Permanent address) அறியாத தெளிவின்மையில்தான் மனிதன் இருக்கின்றான். ‘இறை உணர்வை’ ‘தன்னை உணர்தல்’ என்றும் அழைக்கிறோம். இது தெளிவினை பெறுதலைச் சேர்ந்தது தானா? ஆம். ‘நான் யார்?’ எனத் தெரியாமல் இருக்கும் மனிதன் தான் யார் என தெரிந்து கொள்வது அறிவிற்குத் தெளிவினைச் சேர்த்தல் தானே!

    ஆகவே ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு கருத்தியலாகவும், செய்முறைப்பயிற்சியின் வாயிலாகவும்(both theoretically and practically) தெளிவினைப் பெறுவதுதான் ‘தன்னை உணர்தல்’ ஆகின்றது. கருத்தியலாகத் தெளிவு இருப்பதுபோல் தெரிந்தாலும் செய்முறையில் தெளிவில் வெற்றி பெறும்போதுதான் ‘தெளிந்த நல்லறிவு வேண்டும்’ என இறைவியை வேண்டிய மகான் மகா கவி பாரதியார் அனுபவித்த பேரின்ப நிலையான
    “நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை;
    நோக்க நோக்கக் களியாட்டம்.”
    என்கின்ற பேரானந்த நிலையை, பேரின்ப நிலையை அனுபவிக்கமுடியுமன்றோ!!!.

    தெளிந்த நல்லறிவை விருப்பியவர், இறைவியை வேண்டியதால்தான் களியாட்டம் என்கின்ற நிலையை அடைய முடிந்தது மகான் மகா கவி பாரதியாரால். அறிவு தெளிந்தால் பேரின்பம்தான் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். எப்போதும் ‘இன்னும் அதிகமாக வேண்டும் என்று கருதும் இயல்புடைய மனித மனம்’ மனதின் நான்கு நிலைகளான இன்பம், துன்பம், அமைதி, பேரின்ப நிலைகளில் கடைசியும், அதிகமுமான பேரின்ப நிலைக்கு ஆசைப்படுவதில்லை? ‘முடவனுக்கு கொம்புத் தேன் மீது ஆசை’ எனப்படுவது போன்றதா வேதாத்திரிய இறையியல்/ஆன்மீகப் பேரின்பம்?!  இல்லை! ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதன், அதற்கு ஏற்றால்போல், பொருத்தமாக, இறை உணா்வு ஆகியப் பேரின்பப் பேற்றினை பெற்றிட முடியும்.

    ‘தெளிவே’ தன்னை உண்மையாக உணர்தலாகும். தெளிவு பெறும் வரை உடலையே நான் என நினைத்துக் கொண்டிருக்கின்றது அறிவு. தெளிவில், ‘அறிவே நான்’ என்றும் ‘ஆன்மாவே நான்’ என்றும் உணர்ந்து கொள்கின்றது.

    மகரிஷி அவர்கள் தன்னுடைய மாணவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? மாணவர்களும் தன்னைப்போல் அறிவில் உயரவேண்டும் என்பதே.
    அதனால்தான் ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கிறார்.

    மேலும் நம் குருதேவர் அவர்கள் கூறுவதனை உற்று நோக்க வேண்டும். ‘நான் எனினும் நீ எனினும் நிறை அறிவில் ஒன்றே, வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்’ என்கின்ற உண்மையினை தெரிவித்து மாணவர்களும் தன்னைப்போல் அறிவில், சிறந்து உணர்ந்து உயர வேண்டும் என்பதே அவருடைய பேரவாவாகும்.

    தீயவினைப்பதிவின் காரணமாக பண்பில் பின்தங்கி இருக்கிறான் மனிதன். எனவே பண்பை உயர்த்துவதற்கான நோக்கத்தில் மகரிஷி அவர்களின் மாணவர்களாக இணைத்து வைத்துள்ளது இயற்கை/இறை என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே வினைப்பதிவை இப்பிறவியிலேயேப் போக்கிக் கொண்டு பிறவிப்பயனாகிய இறை உணர்வு பெற்று அறவாழ்வு வாழ வேண்டும். இதற்கான சாத்தியக் கூறுகளைக் கூறி, உறுதி அளிக்கிறார்.

    piRavipperunkadal

    பாடலுக்கான விளக்கம்: தலைப்பு ‘பிறவிப் பெருங்கடல் நீந்தலாம்’ என்று வைத்திருக்கிறார் மகரிஷி அவர்கள். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் பத்தாவது குறட்பா என்ன கூறுகின்றதனை நினைவு கூர்வோம்.

    “ பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.” குறள் எண். 10

    இக்குறளுக்கு மகரிஷி அவர்கள், தான் எழுதிய ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்கின்ற நூலில் விளக்கம் அருளியுள்ளார். அதனை வாசித்துப் பயன் பெறவும். பக்கம் 26 இல் கடைசி மூன்று வரிகளைக் கவனிக்கவும். ‘அடி சேர்ந்தார்க்கு’ என்பதற்குப் பொருள் தந்துள்ளார். ‘அடிசேர்ந்தார்க்கு’ என்பது ‘பாதார விந்தங்களிலே சரணாகதி அடைந்தவர்க்கு’ என அர்த்தம் கொள்வதை விட மெய்ஞ்ஞானி ஒருவரது வாழ்க்கை காட்டுகின்ற வழியிலே செல்வது’ என்பது மன விரிவாக ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கமாக அமையும் எனக் கூறியிருக்கிறார். மேலும் மகரிஷி அவர்கள் அவ்விடத்தில் குருவின் மேன்மையைப்பற்றி திருவள்ளுவர் கூறியுள்ளதை விளக்குகின்றார். அன்பர்கள் அனைவரும், அக்கருத்தை படிப்பது மகரிஷி அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் இந்நாளில் பொருத்தமாக இருக்கும்

    இப்போது மகரிஷி அவர்களின் பாடலுக்கான பொருளைக் கவனிப்போம். ஆன்மா எடுத்துள்ள பிறவி ஒன்று இரண்டு அல்ல. பிறவியை பெருங்கடலுடன் திருவள்ளுவர் ஒப்பிட்டதுபோல் மகிரிஷி அவர்களும் ஒப்பிடுகிறார். ஏன்? கடலின் அடுத்த கரை தெரியாது. கடல் தொடர்ந்து கொண்டே போகும். அதுபோல் பிறவி ஒன்றுக் கொன்று தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே போகின்றது.  பிறவிகளின் எண்ணிக்கையும் தெரியாது. எனவே பிறவியைக் கடலோடு ஒப்பிடுகிறார்கள் திருவள்ளுவரும் மகரிஷி அவர்களும். வேண்டுமென்றால், உதாரணத்திற்கு தோராயமாக, ஒரு ஆன்மா இதுவரை எத்தனைப் பிறவிகள் எடுத்திருக்கின்றது என்பதனை அறிய ஒரு கணக்கெடுக்கலாம்.

    மனிதகுலம் தோன்றி 65 லட்சம் ஆண்டுகள் ஆனாதாகக் கூறப்படுகின்றது. இன்றிருக்கும் மனிதன் ஆதிமனிதனின் கருத்தொடர்தான். அவன் எத்தனை பிறவிகள் இதுவரை எடுத்திருப்பான்? உதாரணத்திற்கு ஒரு பிறவிக்கு இருபது வருடங்கள் என வைத்துக் கொண்டால், (இருபது வருடங்களில் மனிதன் தன் வம்சாவளியை உற்பத்தி செய்யும் தகுதியுடையவனாகிறான்) 65,00,000 ÷ 20 = 325000 பிறவிகள் இன்றுள்ள மனிதன் எடுத்திருப்பான். இந்தக் கணிதப்படி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் பல்லாயிரம் பிறவிகள் எடுத்திருக்கிறான் என்று பொதுப்படையாக சொல்வது 325000 பிறவிகளைக் குறிக்கும். இதனை அறிஞர் திருவள்ளுவர், மனிதன் எடுத்துவரும் பிறவிகளைக் குறிப்பிடுவதனை ‘பிறவிப்பெருங்கடல்’ என்கிறார்.

    எனவேதான் பல்லாயிரம் பிறவிகள் மனிதன் எடுத்திருக்கின்றான் எனப்படுகின்றது. முதலில் மனிதன் எடுத்துள்ள பிறவிகளின் எண்ணிக்கையைக் கூறிவிட்டார். அடுத்ததாக பல்லாயிரம் பிறவி எடுத்து ஏற்ற பாவங்களைப்பற்றிக் கூறுகிறார். கடந்தபிறவிகளில் செய்துள்ள பாவங்களால், எடுத்துள்ள இந்தப் பிறவியில் மீண்டும் பழக்கவழக்கத்தால் பாவங்களையே செய்கின்றான் மனிதன். இப்படியாக பாவங்களின் சரித்திரம் தொடர்கின்றது. பிறவிகள் ஏன் பாவங்களைச் சோ்க்கின்றது? பிறவிகள் ஏன் பாவங்கைளைச் செய்கின்றன? அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சி வயத்தாலும் செய்த செயல்களினால் ஒழுக்கமில்லாது போய் பாவங்களாகின்றன. எனவே பிறவிதோறும் பாவக்கணக்கு தொடர்ந்து கொண்டே போகின்றது. எந்தப்பிறவியிலும் பாவக்கணக்கு முடியாததால் இப்போதும் பிறவி 325000 வது பிறவி எடுத்துள்ளான் மனிதன். இந்த பிறவியில் பாவக்கணக்கை முடித்துக் கொண்டு தெய்வமாக வாழ்ந்து, பெருங்கடலோடு ஒப்பிடப்பட்டுள்ள பிறவியை முடித்துக் கொள்வதற்காக வழிகளை மனித சமுதாயத்திற்குச் சொல்லி, உறுதியளித்து, அவர்களையும் இந்தப்பிறவியிலேயே தன்னைப்போலவே பண்பேற்றத்தில் உயர்ந்து பிறவியை முடித்துக் கொள்ளவே இந்தப்பாடலை 26.10.1994 அன்று இயற்றியுள்ளார்.

    பிறவிகள் தோறும் செய்த வினைப்பதிவின் சுமையை இறக்கி தூய்மை பெறவே பிறவி எடுக்கப்படுகின்றது என்கின்ற உண்மையினை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தெரிவிக்கும் பாடலை இத்தருணத்தில் நினைவு கூர்வது நலம்.

    vinaisumai

    மூன்றாவதாக 325000 பிறவிகளில் செய்யப்பட்டுள்ள பாவங்களை, இப்பிறவியில் புண்ணியச் செயல்களையே செய்து, இந்தப் ஒரு பிறவிக்காலத்திலே மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றலை, இயற்கை மனிதனுக்கு வைத்துள்ளது என்கிறார். புண்ணியச்செயல்களைச் செய்து பாவச்செயல் பதிவுகளை மாற்றி தெய்வத்திலிருந்து புறப்பட்ட மனிதன் மீண்டும் தெய்வமாகலாம் என்கிறார் மகரிஷி அவர்கள். இது நல்வாய்ப்பு என்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு நேரிடையாக செய்ய வேண்டியது என்னவெனில் ஆதிமனிதலிருந்து ஆரம்பித்த கருமையக் களங்கங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்கின்ற உறுதி வேண்டும்

    கருமையத்தூய்மையால் பலனடைய அகத்தவத்தால் பரத்தை உணர்ந்து ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளைக் கொண்ட அறத்தின் பாதையிலே வாழவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். மனிதன் அறவாழ்வு வாழ்வதுதான், அவனுக்கும் சமுதாயத்திற்கும் இன்றைய தேவையாக உள்ளது. மனிதனுக்கு இறை உணர்வு அவசியமா, அற உணர்வு அவசியமா என வினவினால் அறவுணர்வு அவசியம், ஆனால் அந்த அவசியம் பூர்த்தியாக இறை உணர்வு அவசியமாகின்றது என்கின்ற விடைதான் சரியாக இருக்கும். இருப்பினும், உயிரினங்களிலே மனித உயிர் இறை உணர்வு பெறுகின்ற பாக்கியம் பெற்றுள்ளது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘தெளிவு’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். எனவே இப்பாடலின் பொருள் அறிவிற்குத் தெளிவினைச் சேர்க்கிறதன்றோ?!

    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(30-03-2016-புதன்) ‘தெளிவு’ பற்றி மேலும் விளங்கிக் கொள்வோம். அதற்கு, திருமூலர் ‘குருவருளே திருவருள்’ என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு, இறை உணர்வு பெற தெளிவு அவசியம் என வலியுறுத்துவதனை ஆராய இருக்கிறோம். அதுவும், அந்த தெளிவு குருவின் வழியாக நான்கு வழிகளில் வருகின்றது என்கிறார் திருமூலர். நம்முடைய குருதேவருக்கு நினைவஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இறை உணர்வு பெறுவதற்கு அவசியமானதான ‘தெளிவு’ குருவின் வழியாக நான்கு வழிகளில், பெறுவது பற்றி சிந்திப்பது பொருத்தமானதாகவல்லவா உள்ளது.! அடுத்த சத்சங்கத்தில் (30-03-2016) சந்திப்போம்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்.

    வாழ்க வளமுடன்.

    தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள்.   Help tips to send feedback in Tamil,click here.

     

    Loading

  • அறிவிப்பு

    FFC-123-அறிவிப்பு
    வாழ்க வளமுடன்.

    நாளை (28-03-2016) மகரிஷி அவர்களின் மகாசமாதி தினம் வருவதால், நாளை ‘சிறப்பு அறிவிற்கு விருந்து’ நிகழ்ச்சி இடம் பெற இருக்கின்றது. எனவே இன்றைய அறிவிற்கு விருந்திற்கு மாற்றாக ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சி’ இடம் பெறுகின்றது.

    வாழ்க வளமுடன்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 7/?

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

    FFC – 174

    23-03-2016—புதன்.

    FFC-174-23-3-16-NEW-Maharishi PFOTO in frame

    FFC-123-அறிவிப்புவாழ்க வளமுடன்.

    சென்ற அறிவிற்கு விருந்தில் அறிவின் ஏழு செயல்பாடுகள் என்னென்ன என்றும், அதில் உணர்வு தொடர்பான 4, 5, 6, 7 ஆம் நிலைகளை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டோம். அவற்றில் 4, 5, 6 ஆம் நிலைகளான உணர்தல், அனுபவம், பிரித்துணர்தல் ஆகிய ஐயுணர்வைப்பற்றி சிந்தித்தோம். ஐயுணர்வே பகுத்துணர்வும் என்றும் அறிந்து கொண்டோம். இன்று அறிவின் கடைசியும், 7 ஆம் நிலையுமான ‘அறிவு தன்னை உணர்வது’ பற்றி சிந்திக்க இருக்கிறோம். ‘அறிவு தன்னை உணர்வதும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பது எவ்வாறு இயற்கையின் நிகழ்வு என அறிந்து விட்டு, பண்பாட்டை உயர்த்தும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு, மனிதகுலத்தின் பூர்விக சொத்தான அமைதியினை அனுபவிக்கச் செய்து, பேரின்பநிலையை அனுபவிக்கச் செய்கின்றது/செய்ய முடியும் என்பதனை அறிவோம். வாழ்க வளமுடன்.

    ஆறாம் அறிவிற்கும் ஐந்தாம் அறிவிற்கும் உள்ள வித்தியாசமே ஆறாம் அறிவு சிந்தனை செய்வதுதான். எதனைப்பற்றி சிந்தனை செய்வது? வாழ்க்கையை பற்றி நினைத்துப் பார்த்து எதார்த்தத்தை அறிவது. இந்த உலக வாழ்க்கை நிலையானதல்ல. நிலையில்லாத வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்கின்ற தெளிவுதான் சிந்திப்பதன் பலன்.

    யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. மனிதன் பிறக்கிறான். ஒரு நாள் இறக்கப்போகிறான். அதுவும் ஆறிலும் நடக்கலாம். அறுபதிலும் நடக்கலாம். பிறப்பதும், இறப்பதும் இயற்கையின் நிகழ்வுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இன்பம், துன்பம் ஆகிய இரண்டை மாறி, மாறி அனுபவிப்பதே வாழ்க்கையாகின்றது. அதிலும் ஒரு சிலருக்கு இன்பம் அதிகமாக இருக்கலாம். துன்பம் குறைவாக இருக்கலாம். வேறு சிலருக்கோ இன்பம் குறைவாக இருக்கலாம், துன்பம் மிகுதியாக இருக்கலாம். ஏன் இந்த வேறுபாடுகள்? இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? பிறக்கும்போது என்ன கொண்டுவந்தோம், போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம் என சிந்திக்கின்றானா மனிதன்? இவ்வாறாக அறிவின் 7 ஆம் செயல்பாடான சிந்தனைக்கு ஆறாம் அறிவு வருவதில்லை.

    உடல்வளர்ச்சியில் முழுமை அடைவதுபோல். அறிவு தனது வளர்ச்சியில் முழுமை அடைவதில்லை. உடல் பருப்பொருள் என்பதால் அது வளர்ச்சி அடைந்து முழுமை அடைகின்றது தெரிகின்றது. ஆனால் உருவமில்லா அறிவு என்பது வளர்ச்சி அடைய வேண்டும் எனில் அது பண்பேற்றத்தில் உயரவேண்டும் என்பது பொருளாகின்றது. எனவேதான் வாழ்வியல் கலையான மனவளக்கலை பயிற்சியின் இறுதிப் பயன் (End Result) அறிவின் முழுமை(Perfection of Consciousness) என்கிறார் மகரிஷி அவர்கள்.

    எதற்காக ஆன்மா மனிதனாக பிறந்துள்ளது என்பதனை, அவ்வையார் எவ்வாறு கூறுகிறார் என்பதனை நினைவு கூர்வோம். அவ்வையார் மானுடனாக பிறப்பதே அரிது என்கிறார். அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்கிறார். ஆம். உயிரினங்களிலே மானுடப்பிறவி உயர்ந்தது, சிறந்தது. எல்லா உயிரினங்களுக்கு அடிப்படையாகவும், பொதுவாகவும் இருப்பது உயிர். உயிர் பலகோடி விலங்கினப் பிறவிகளாக வாழ்ந்துவிட்ட பிறகே மனித உயிராக பிறவி எடுத்துள்ளது. எனவே தான் அரிது அரிது மானிடனாய்ப் பிறத்தல் அரிது என்கிறார். இவ்வாறாக அரிய பிறவி எடுத்துப் பிறந்தாலும் ஞானத்தைப் பெறுவது அரிது என்கிறார்.

    அவ்வையாரின் இந்த ஆதங்கத்தை,

    இப்போது, மனவளக்கலை, தனது பயிற்சியாளர்களை பிறவியின் நோக்கம் எது என
    திருவள்ளுவர் காட்டிய வழியில் சிந்திக்க வைத்து,
    ஞானம் பெறுவதற்கு பயிற்சியினை தொடரச் செய்து நிறைவு செய்கிறது.

    வாழ்வின் நோக்கம் அறிய திருவள்ளுவர் காட்டிய வழி என்ன?

    அறிவு, ஐயுணர்வாக, ‘அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை மட்டுமே உணர்ந்து கொண்டிருந்தபோது, அறிவிற்கு சிந்தனை மலரவில்லை. ஆனால் அறிவு, ஆறாம் அறிவாக மனிதனிடம் வந்தபோது அதன் சிந்தனைத்திறன் மலர வேண்டும்/மலர்ந்திருக்க வேண்டும் என்பதுதானே இயற்கையின் நிகழ்வாக இருக்க வேண்டும். அவ்வாறு மலர்ந்து என்ன செய்ய வேண்டும் ஆறாம் அறிவு? ‘ஐவகை நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்றோமே, இவை என்ன? இவை ஏன், எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன, இவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்ற நான் யார்?’ என்கின்ற வினாக்களால் உந்தப்பட்டு, தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளியுள்ள குறளான

    “சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
    வகை* தெரிவான் கட்டே உலகு” …. குறள் எண்: 27

    என்பதற்கேற்ப அறிவு அவ்வினாக்களுக்கான விடைகளைக் கண்டுபிடித்து உலக வாழ்க்கையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    ஓரறிவிலிருந்து ஆறாம் அறிவு சீவன்கள் வரை, ஒவ்வொன்றிற்கும் உள்ள உணர்வுகளைத் தெரிந்து கொள்வோம்

     FFC-174-23-3-16- பிரிக்கப்பட்ட சமன்பாடு

    ஒவ்வொரு அறிவிற்கும் ஒரு உணர்வு என்கின்றபடி ஐந்து சமன்பாடுகள் பூர்த்தியாகி உள்ளன. ஆறாவது சமன்பாட்டில் கோடிட்ட இடத்தில் ஒரு விடையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அது என்ன? சற்று சிந்திப்போம்.
    திருவள்ளுவர் கூறும் ‘வகை* தெரிவான் கட்டே உலகு’ என்பதற்கேற்ப பிரபஞ்ச நிகழ்ச்சிகளான, புலன்களுக்கு புலப்படுகின்ற ஐந்து நிகழ்ச்சிகள் ஏற்படுகின்ற வகையினை அறிந்து கொள்வதேயாகும். புலன்களால் உணரப்படுகின்ற ஐந்து நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றால் (தெரிந்தவை) ஏற்படுகின்ற வழியினை(வகையினை) அறிந்து கொள்வதன் மூலம் இதுவரை புலன்களால் அறியமுடியாததாக இருந்து வருகின்ற(தெரியாமல்) இறையையேக் கண்டுபிடித்துவிடலாம். அதாவது தெரிந்ததை வைத்து தெரியாததைக் கண்டுபிடிப்பது எளிதல்லவா?! இப்போது ஆறாவது சமன்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற முடிவிற்கு வருவோம். ஆறாவது சமன்பாடு

    FFC-174-23-3-16-பிரிக்கப்பட்ட சமன்-6ஆம்

    என்றிருக்க வேண்டும்.

    திருவள்ளுவர் கூறுவதுபோல், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்கின்ற ஐந்தின் வகை அறியும் வகையில்,
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, திருவள்ளுவரை மானசீக குருவாக வணங்கி ஏற்றுக் கொண்டு,

    தெய்வப்புலவரான திருவள்ளுவரின் இறையைப்பற்றிய எண்ணங்களை அப்படியே உள்வாங்கி,

    தன்னுடைய இறையியலுக்குச் சான்றாக ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கத்தினை,

    திருவள்ளுவரே வந்து இப்போது சொல்லியிருந்தால் எவ்வாறு சொல்லியிருப்பாரோ, அதுபோல்

    நூல் எழுதி, வெற்றி பெற்றவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் அருளியுள்ள

    திருவேதாத்திரியத்தில், ஐவகை நிகழ்ச்சிகள் என்ன, அவை எவ்வாறு ஏற்படுகின்றன,

    அவற்றின் மூலம் என்ன, அவற்றின் முடிவு என்ன என்பதனை அறிவித்து.
    ஆதியிலிருந்து முடிவுவரை பிரபஞ்சத்தையும் அறிவையும் எளிதில் புரிந்து கொள்ள முடிகின்றவாறு
    விளக்கங்கள் கூறியுள்ளார்.

    வேண்டியதெல்லாம் செய்முறைத் தேர்வில் வெற்றி(துரியாதீத தவத்தில் வெற்றி பெறுவது/ success in Thuriyatheeth meditation) பெறுவது. தேர்வில் வெற்றி பெற்றால் சான்றிதழ் தருவதுபோல் இந்தத் தோ்வில் வெற்றி பெற்றதற்கு ஏதாவது சான்றிதழ் உண்டா? உண்டு. அதனை நாமே அளித்துக் கொள்ள வேண்டியதுதான். அறிவிற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற நிலை கைவல்யமாகிவிட்டால் அதுவேதான் அதற்கு சான்றிதழ். அறிவிற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ கைவல்யமாகிவிட்டால் இயற்கையாகிய புவிமேல் எல்லாம் இன்பமயம்தான்.

    இத்துடன் இன்றைய அறிவிற்கு விருந்தை நிறைவு செய்து கொள்வோம். அறிவித்துள்ளபடி, அடுத்த அறிவிற்கு விருந்து, மகரிஷி அவர்களின் மகாசமாதி தினமான 28-03-3016 திங்களன்று நடைபெறும். அச்சமயம் ‘தெளிவு’ பற்றி சிந்திக்க இருக்கிறாம். ‘தெளிவு’ பற்றிய சிந்தனை முடிந்த பிறகு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருவது தொடங்கும் என அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 6/?

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    FFC – 173

    20-03-2016—ஞாயிறு.

     

    FFC-168- மகரிஷி படம்

    வாழ்க வளமுடன்.

    சென்ற அறிவிற்கு விருந்தில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதற்கான நேரிடையான விளக்கத்திற்குள் சென்றோம். அன்று அச்சிந்தனை முற்றுபெறாததால்  இன்றும் அதனைப்பற்றிய நேரிடையான சிந்தனையையே தொடங்குவோம். இன்று, மகரிஷி அவர்கள், ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் சொல்வதற்கானக் காரணத்தை அறிவோம்.

    உணர்வு’ பற்றி சிந்தனை செய்து வருகின்றோம். உணர்வது அறிவு என்பதால், திருவேதாத்திரியத்தில், அறிவிற்கு என்று அறிவியலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள், அறிவின் இயக்கத்தைப் பற்றிக் கூறுவது என்ன என்று அறிந்து கொள்வோம். அறிவு அரூபமாக இருந்தாலும், அது நம்மிடமே உள்ளதால், அதனைக் கண்டுபிடித்து, அதன் செயல்பாடுகள் பற்றி கூறியுள்ளார். அறிவு இயங்கும் நிலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். பஞ்சபூத பூங்காவிலே உலவி(எனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் அவரே குறிப்பிட்டுள்ளார்) பஞ்சபூதங்களின் உருவாக்கத்தினைக் கண்டுபிடித்ததுபோல், ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயனின் பேராட்சியில் அங்கம் வகித்து, அறிவின் இயக்க நிலைகள்/செயல்பாடுகள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

    உயிரினங்கள் உணர்வதால், உணரக்கூடிய அறிவு உயிரினங்களில் மட்டுமே இருக்கின்றது எனப் பொதுவாக எல்லோராலும் நினைக்கப்படும். ஆனால் மகரிஷி அவர்களின் ‘அறிவின் அறிவியல்’, அறிவு உயிரற்ற சடப்பொருட்களிலும் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளது. இது மனவளக்கலைஞர் அல்லாதவர்களுக்கு வியப்பையேத் தரும். ஆனால் மனவளக்கலைஞர்களுக்கு இக்கூற்று வியப்பைத் தராது. மாறாக அதனை நினைக்க நினைக்க ஆனந்தத்தை தரும். எனவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கேற்ப, விரும்புகின்ற உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சிறப்புற வாழ்வதற்கு, அருமருந்தாகிய மனவளக்கலையின் மகிமையை எடுத்துச் சொல்லி அவர்களையும் மனவளக்கலை பயில்வதற்கு வழிகாட்டிடுவோமாக. வாழ்க வையகம். வளர்க திருவேதாத்திரியம்.

    அறிவு சடப்பொருட்களிலும் உள்ளது என்பது மனவளக்கலைஞர் அல்லாதவர்களுக்கு, நம்பமுடியாமலும் இருக்கலாம். அல்லது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஏனெனில் எப்படி அறிவு சடப்பொருட்களுக்குள் இருக்கின்றது என்பது தெரியாது அவர்களுக்கு. ஆனால். மனவளக்கலைஞருக்கு, அறிவு உணர்வற்ற சடப்பொருட்களிலும் உள்ளது என்பதனை அறிவது என்பது ஆனந்தத்தைத் தருகின்றது. காரணம் ஒன்று, அறிவு தன்னைப்பற்றியே அறிந்து கொள்கின்றது. மற்றொரு காரணம், மகரிஷி அவர்கள் அறிவிற்கான அறிவியலில் சடப்பொருட்களில் அறிவைப்பற்றிக் கூறும் விளங்கங்களேயாகும். அவையாவன:

    1) உணர்வற்ற சடப்பொருட்களுக்கு ஏன் அறிவு அவசியமாகின்றது,
    2) அப்படி அவசியமாகிய அறிவு சடப்பொருட்களில் எவ்வாறு தன் பணியை ஆற்றுகின்றது,
    3) அறிவிற்கு அப்போது என்ன பெயர்,

    என்பதற்கான விளக்கம் மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இது திருவேதாத்திரிய அறிவின் அறிவியலுக்கு சிகரத்தை அணிவிக்கின்றது. ஏனெனில் விஞ்ஞானம்,

    அணுக்கள் அமைப்பாவதற்கும்,
    அணுக்களின் அமைப்பு நீடித்துக் கொண்டிருத்தலுக்கும்

    அறிவுதான் காரணம் என்பதனைச் சொல்வதில்லை.

    அறிவு உணரக்கூடியதாகவும், சிந்தனை செய்ய வல்லதாகவும் மட்டுமே உள்ளது என்று பல நாட்கள் நினைத்திருந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். நியாயம் தானே?! அறிவு என்றால் அது உயிரினங்களில் உணரக்கூடியதாகவும், மனிதனில் கூடுதலாக சிந்தனை செய்ய வல்லதாகவும் உள்ளது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே சிந்தனையாளரான மகரிஷி அவர்களும் அதுபோல் நீண்ட நாள் நினைத்திருந்திருக்கிறார்.

    ஆனால் அவருக்கு சுவாசமே சிந்தனையாக இருப்பதால்,
    அம்முயற்சிக்கு வெகுமதியாகவும்,
    அவர் நமக்கெல்லாம் சொல்வதற்காகவும்,
    இயற்கை/இறை மேலும் அவருக்கு உண்மையை விளக்கி,
    ‘உணர்ச்சிக்கு முன்னர் அறிவு உயிரற்ற சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் செயலாற்றுகின்ற’ உண்மையினை,
    நீண்ட நாட்களுக்குப் பிறகு, மகரிஷி அவர்களைக் கண்டுபிடிக்கச் செய்துள்ளது.

    எவ்வாறு, மேலும் அவருக்கு உண்மையை, இயற்கை/இறை விளக்கியிருக்கும் என்று நாம் இப்போது கண்டுபிடிப்போம்.

    பஞ்சபூதங்களிலிருந்துதான் உயிரினங்கள் தோன்றின. அவ்வாறு இருக்கும் போது உயரினங்களிலுள்ள அறிவு எங்கிருந்து வந்திருக்க முடியும்? பஞ்சபூதங்களிலிருந்துதான் வந்திருக்க முடியும். அப்படியானால் பஞ்சபூதங்களில் அறிவு இருந்திருக்கின்றது/இருக்கின்றது என்பது உண்மையாகின்றது.

    உணர்ச்சியில்லாத, பஞ்சபூதங்களில் அறிவு இருக்கின்றது என்றால், அறிவின் பணி என்னவாக இருக்கும்? அறிவின் பணி, பலகோடி பரமஅணுக்கள் ஒன்று சேர்த்து ஒழுங்காக, இயக்கமாக நீடித்து வெவ்வேறு பூதங்களாக இருப்பதற்குக் காரண ஆற்றலாக இருக்கின்றது.

    இந்த விளக்கத்தைத்தான் ‘மேலும் அவருக்கு விளங்கிய உண்மை’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
    எனவே ஒழுங்காகவும், அணுவின் இயக்கம் நீடித்து இருப்பதற்கு ஆற்றலாக அறிவு இருந்ததால் அதற்கு (ஒழுங்கு+ஆற்றல்) ஒழுங்காற்றல் என்கின்ற பெயர் வழங்கப்படலாயிற்று. விண்ணில் அறிவு ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது என்கின்ற அருட்செய்தியினை தெரிவிக்கும் பாடல் வரிகளை நினைவு கூர்வோம்.

    FFC-173-உணர்ச்சியாய் சிந்தனை

    இதனைக் கண்டுபிடித்த பிறகே அறிவின் செயல்கள் ஏழு என்கின்ற முடிவிற்கு வந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். அறிவின் ஏழு செயல்கள் என்னென்ன?

    FFC-173-N-அறிவின் செயல்பாடுகள்

    பகுத்துணர்வு மற்றும் தொகுத்துணர்வு பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் அறிவின் 4, 5, 6 மற்றும் 7 வது செயல்பாடுகள் பற்றி மட்டுமே சிந்திப்போம் இப்போது. அறிவு சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது பற்றி விரிவாக வேறொரு சமயத்தில் ஐயனின் திருவுளப்படி சிந்திப்போம்.

    அறிவு உயிரினங்களில் மூன்று வகைகளில் செயல்படுகின்றது. புலன்களின் எண்ணிக்கைக்கேற்ப அறிவு உணர்தலாக இயங்குகின்றது.

    உணர்தலிலும் மூன்று நிலைகளில் இயங்குகின்றது.
    அதாவது உணர்தல்(உணர்ச்சி),
    அதனால் ஏற்படுகின்ற இன்ப துன்ப அனுபவம்,
    ஒன்றோடு மற்றொன்றை பிரித்து உணர்தல் ஆகியவைகளாகும்.

    இதே அறிவு மனிதனில் வரும்போது,
    தனது ஆறாவது நிலையான சிந்தனை ஆற்றலாகவும்,
    அதனால் இயற்கையின் முழுமையை உணர்ந்து கொள்ளக்கூடிய பேராற்றலாகவும்,
    தன்னுடைய மூலத்தையும் முடிவையும் அறிந்து ‘தான் யார்’ என்ற தன்னிலை விளக்கம் பெறும் சிறப்பாற்றலாகவும் உயர்வு பெறுகின்றது.

    இங்கே நாம் மகரிஷி அவர்களைப்போல், ஆழ்ந்தும் விரிந்தும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

    அறிவைப்பற்றிய, மகரிஷி அவர்களின் இந்த கண்டுபிடிப்பு ஆன்மீகமா? விஞ்ஞானமா?/ஆன்மீகத்தைச் சேர்ந்ததா? அல்லது விஞ்ஞானத்தைச் சேர்ந்ததா? அல்லது ஆன்மீக-விஞ்ஞானமா(Spiritual Science)?

    அறிவு இருக்கின்றது என்பதனை அறிவே ஒப்புக்கொள்ளாதா? விஞ்ஞானம் சொல்லித்தான் அறிவு, தான் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா என்ன?

    அடுத்ததாக. அறிவு சீவ இனங்களில் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் ஆகிய மூன்று நிலைகளில் இயங்குகின்றது என்பது ஆன்மீகமா அல்லது விஞ்ஞானமா? அதுவும் விஞ்ஞானம்தான். அறிவு ஏற்றுக்கொள்ளாதா இதனை? அறிவுப்பூர்வமாகத்தானே உள்ளது. நடைமுறையில் நடப்பதுதானே ‘உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல்’ என்பது.

    அறிவு இருப்பது என்பதும், அது உயிரினங்களில் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் என்பதும் விஞ்ஞானமேதான். அறிவு, தான் இருப்பதை அறிவதும், உயிரினங்களில் தன் இயக்கங்களைப்பற்றி அறிவதும் விஞ்ஞானமே அல்லது இயற்கையின் தன்மை அது.

    அறிவின் 4, 5, 6 ஆம் நிலைகளான உணர்தல், அனுபவம், பிரித்துணர்தல் என்பது எல்லா சீவராசிகளுக்கும் பொதுவானது. அதாவது ஐந்தறிவு சீவனான விலங்கினத்திற்கும், ஆறாம் அறிவு சீவனான மனிதனுக்கும் பொதுவானது. அறிவின் இந்த மூன்று நிலைகளுக்கும் புலன்கருவிகள் அவசியம்.

    அறிவின் ஆறாவது செயல்பாடான ‘பிரித்துணர்தல்’ என்பது பிரித்து பிரித்து உணர்தல் என்பதால் அதனை பகுத்துப்பார்க்கும் பகுத்துணர்வு என்றும் கொள்ள வேண்டும். எனவே பகுத்துணர்வு என்பது அறிவின் செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்து விடுகின்றது. எனவேதான் இதனை தவிர்க்க முடியாது என சென்ற விருந்தில் அறிந்தோம்.( FFC 168 click here)

    தன் செயல்பாடுகளில் கடைசி நிலைக்கு(7 ஆம் நிலை) வரும்போது, அறிவு ஆறாம் அறிவு எனப்படுகின்றது. ‘தான் யார்?’ என அறிவு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான் அறிவு முழுமை பெறுகின்றது/பெறமுடியும். அரூபமான அறிவு முழுமை பெறுவது என்பது என்ன? அரூபத்தில் முழுமை என்பது என்ன? உருவத்தில் முழுமை இருக்க முடியும். அரூபத்தில் முழுமை என்பது அதன் முழுமைத்தன்மையை வெளிப்பிடுத்துவது; அதாவது அறிவு நிலையில் பண்பேற்றம் பெறுவது.

    ஒரு துளி விந்துநாதத்தில் ஆரம்பித்து பத்து மாதங்களில் குழந்தைக்கான உடல் முழு வளர்ச்சி அடைந்து குழந்தை பிறக்கின்றது. பின்னர் உடல் ரீதியாக முழு வளர்ச்சி அடைந்து குழந்தை, சிறுவனாக, வாலிபனாக ஆகின்றது. பிறகு உற்ற வயது வந்ததும் வம்சாவளி உற்பத்திக்குத் தயராகிறான் மனிதன். எனவே உடல் ரீதியாக மனிதனால் முழு வளர்ச்சி அடைய முடிகின்றது. ஆனால், அதுபோல், மனிதன்,

    அறிவின் செயல்பாடுகளில் கடைசி நிலையான ‘தன்னை உணர்தல்’ என்கின்ற நிலைக்கு,
    ஆறாம் அறிவு தரத்தில் உயர்ந்து வளர்ச்சி பெற்று முழுமை அடைய முடிவதில்லை.

    ஒரு சிலரைத் தவிர, அதாவது தெளிவு(ஞானம்) அடைந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அறிவின் நிலையில் ‘தன்னை உணர்கின்ற நிலைக்கு’ உயர்ந்து வளர்ச்சி பெற்று முழுமை அடைய முயற்சிப்பதில்லை. காரணம், அதற்கான விளக்கமோ, பயிற்சியோ அளிக்கின்ற நிலையோ, சூழலோ சமுதாயத்தில் பரவலாக ஏற்படவில்லை, உருவாக இல்லை. இங்கேதான் மனிதகுலத்தின் சிக்கல்கள் எல்லாம் மையம் கொண்டிருக்கின்றது. எனவேதான் இப்போது, இயற்கை/இறை, ஆன்மீகத்தில் ஏற்படுத்திய சடுதி மாற்றமமாக, வேதாத்திரியம்(Sudden exposure to Spirituallism) அந்நிலையினை மாற்றி ஆறாம் அறிவின் கடைசி செயலான ‘தன்னிலை உணர்தலை’ பாடமாக்கிட அறிவிற்கு அறிவியலை ஏற்படுத்தித் தந்துள்ளது.

    தன்னிலை உணர்தல் என்பது என்ன? அறிவு தன்னுடைய மூலத்திலிருந்து ஆரம்பித்து தன்னுடைய முழுப்பயணத்தையும் அறிந்து கொள்ளுதலாகும். முழுப்பயணத்தையும் அறியும்போது இறையே நானாகவும், மற்றவர்களாகவும், எல்லா உயிர்களாகவும், எல்லாமாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது என்கின்ற புரிதல் ஏற்படும்போது ‘நானே எல்லாமாகவும் இருக்கிறேன்’ என்கின்ற மிக உயர்ந்த நிலையான தெளிவு ஏற்படுகின்றது. இந்த நிலையில்தான் அறிவு தொகுத்துணர்கின்றது. அதாவது தொகுத்துணர்வு(Holistic view) என்பது எல்லாவற்றையும் ஒன்று படுத்தி உணர்தல்  (FFC -168 Click here)என்றாகின்றது. இந்த நிலையில்தான் சமுதாயத்தில் மனிதன், மதி நிலைத்த மனிதாக வாழமுடியும். மனமறிந்து மன இதமாய், மனிதன் உள்பட பிற உயிர்களுக்கும் மனம் விரும்பி, தொண்டாற்றி மாமுனிவனாக திகழும் மாமுனிவனே முழுமனிதன் என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    அறிவு மனிதனாக வந்த பிறகும், தனது கடைசி செயல்பாடான ‘தன்னிலை உணரவில்லை’யென்றால் என்ன பொருள்? அறிவு அதன் முந்தையை செயல்பாடுகளான 4, 5, 6 ஆம் நிலைகளான ஐயுணர்விலே—பகுத்துணர்விலே மட்டுமே வாழ்கின்றது என்றல்லவா பொருளாகின்றது. ஐயுணர்வு, விலங்கிற்கும் மனிதனுக்கும் பொது என்றாலும்கூட அறிவு மனிதனாக வரும்போது தனது கடைசியும், சிறப்புடைய செயல்பாட்டிற்கு (7 ஆம் நிலை) வரவில்லையானால் என்ன பொருள்? மானுடவியல் தந்த அருட்தந்தை அவர்கள் கூறுவது போல் ‘மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு’ என்கின்ற நிலைதான் என்று பொருள். எனவே இந்த நிலையில் உள்ள பண்பாடு உயர வேண்டும் என்கிறார் உலக நல ஆர்வலரும், அதனால் உலக நலத் தொண்டராக அறிவுத்தொண்டாற்றியதன் பயனாக லட்சோபலட்சம் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தவரான அருட்தந்தை அவர்கள்.

    அறிவு இருப்பதையும், அறிவு உயிரினங்களில் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் ஆகிய மூன்று நிலைகளில் இயங்குகின்றது என்பதற்கும் விஞ்ஞானமே என சற்று முன்னர் ஒப்புக் கொண்டோம்.

    அதுபோல், அறிவு மனிதனில் ‘தன்னை உணரவேண்டும் என்பதும் ’ விஞ்ஞானமா என்கின்ற வினா எழலாம். வினாவிற்கே அவசியமில்லை. அறிவு மனிதனில் தன்னிலை உணர்வது என்பது இயற்கையின் நிகழ்ச்சி. எனவே அது விஞ்ஞானமே! இதுவரை விஞ்ஞானம் அதனைக்கண்டுபிடித்துச் சொல்லவில்லை. ஆனால் மெய்ஞ்ஞானம் அதனை எப்போதோ கண்டுபிடித்துவிட்டது. இங்கேதான் அறிவின் வளர்ச்சிக்கண்களான விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் இணைந்து பார்க்க வேண்டும் இந்த உலகை. அதாவது உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்“மெய்ஞ்ஞானமில்லாத விஞ்ஞானம் குருடு. விஞ்ஞானமில்லாத மெய்ஞ்ஞானம் நொண்டிScience without Religion is blind and Religion without Science is lame” என்று ஆதங்கப்பட்டதை திருவேதாத்திரியம் நிறைவு செய்திருக்கின்றது.

    அறிவே, திருவேதாத்திரியம் அறிவைப்பற்றிக் கூறும் விளக்கத்தாலேயே எளிதாக தன்னை விளங்கிக் கொள்ள முடிகின்றது. அறிவு, அட்டவணையிலுள்ள 4, 5, 6 ஆம் நிலைகளில் உயிரினங்களில் செயல்படுகின்றது என்பது விஞ்ஞானமாகவே உள்ளது என்கின்ற போது அறிவு மனிதனில் தன்னை உணரவேண்டும் என்பதும் விஞ்ஞானமாகவேதான் உள்ளது.

    ஆறாம் அறிவு தன்னை உணர்தல் வேண்டும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம் என்பது விஞ்ஞானமே. எப்படி சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் அவசியம் என விஞ்ஞானம் கூறுகிறதோ அதுபோல் மனித குலத்திற்கு ‘தன்னை அறிவது’ என்பதும் விஞ்ஞான அடிப்படையில் அவசியமாகின்றது. ‘தன்னை அறிவதும் அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பது வெறும் ஆன்மீகப்பேச்சு அன்று. தற்போதைய ஆன்மீகத்தின் நிலை யாவரும் அறிந்ததே! மனிதன் விரும்பினால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளலாம். விரும்பாவிட்டால் ஆன்மீகத்தை விட்டும் விலகியே இருந்து வாழ்க்கை நடத்தலாம் என்பது மனிதனின் சுதந்திரம் என்கின்ற கருத்தாக இருக்கின்றது. ‘தன்னை உணர்வதும் அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பதும் மனிதஇன பரிணாமத்தில் நடக்கவேண்டிய இயற்கையின் நிகழ்வு அது. இயற்கையின் நிகழ்வான, ‘அறிவு தன்னை உணர்வதும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பதும் மனிதகுலத்திற்கே மிக மிக அவசியமானதும், கட்டாயமானதுமாகும். இந்த நிலையை வாழ்த்து என்கின்ற எண்ண அலைகளால் மலரச்செய்ய விரும்பியே வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை/இறை எழுதிய மந்திரமே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற உலகநல வாழ்த்து மந்திரமாகும்.

    இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-03-2016-புதன்), ‘அறிவு தன்னை உணர்வதும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பது எவ்வாறு இயற்கையின் நிகழ்வு என அறிந்து விட்டு, பண்பாட்டை உயர்த்தும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு, மனிதகுலத்தின் பூர்விக சொத்தான அமைதியினை அனுபவிக்கச் செய்து, பேரின்பநிலையை அனுபவிக்கச் செய்கின்றது/செய்ய முடியும் என்பதனை அறிவோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    Loading