இன்றைய விருந்து

  • FFC – 147-வினா விடை 1

     

    வாழ்க மனித அறிவு                                                                                                         வளர்க மனித அறிவு

    வினா விடை 1

    FFC – 147

    23-12-2015 – புதன்

    சிந்திக்க வினாக்கள்-126
    19-11-2015 – வியாழன்

    வினா: அருள்நெறியின் உறுப்புகள் எவை?

    விடை:
    அருள் நெறியும் அறநெறியும் ஒன்றே. எப்படி? அருளைப் பெறக்கூடிய நெறி அருள்நெறி எனப்படுகின்றது. அந்த இறை அருள் எப்போது கிட்டும்? வாழ்க்கையை நெறியுடன் வாழ்ந்தால் இறை அருள் கிட்டும். அந்த நெறிதான் அறநெறி எனப்படுகின்றது, அறநெறியின் உறுப்புகள் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றுமாகும்.
    ஒழுங்காற்றலான அறிவே மனித அறிவாக இருந்தும், .ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்தால், ஒழுங்காற்றலான இறையின் அருள் எவ்வாறு கிட்டும்?
    ‘செயலுக்கான விளைவாக வருவது இறை’ என்கின்றபோது, கடமையில்லாமல்(செயல்) எவ்வாறு இறையின் அருள் கிட்டும்?
    ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்கின்றபோது ஈகையின்றி சமுதாயத்துடன் எவ்வாறு இசைந்து வாழ முடியும்? சமுதாயத்துடன் இசைந்து வாழாமலிருந்தால் இறை அருள் எவ்வாறு கிட்டும்?
    ஆகவே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து இறை அருளைப் பெற வல்லன. என்பதால் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று உறுப்புகளைக் கொண்ட அறநெறியும் அருள் நெறியும் ஒன்றே.

    சிந்திக்க அமுத மொழிகள்- 127

                                                                                                                                            20-11-2015—வெள்ளி

    இறந்தவர்களை கடல் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை. கரையோரம் ஒதுக்கி விடும். அதுபோல ஒழுக்கமற்றவர்களுடனான நட்பை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.
                                                                                                                                                 ….. புத்தர்
    பயிற்சி—
    1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே எடுத்துக்கூறவும், ஏன், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

    2) ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

    விடை:
    வினா-1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே நீங்களே எடுத்துக்கூறவும், அடுத்து, மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

    திருவள்ளுவர் கூறும் ‘கூடா ஒழுக்கம்’. ‘கூடநட்பு’ பற்றியேதான் புத்தரும் எடுத்துரைக்கிறார்.. ‘ஒழுக்கமற்றவர்களுடான நட்பை ஒதுக்கி விடுங்கள்’ என்கின்ற அறிவுரையை புத்தர் உவமானம் ஏதுமின்றியே நேரிடையாகவே சொல்லியிருக்கலாம். மனித சமுதாயத்திற்கு! ஆனால் சொல்வது தெளிவாகவும், சுருக்கமாகவும்(succinctly, pointedly, without leaving any loose ends) இருப்பதற்காக நறுக்குத்தெறித்தாற்போல் ‘கடல் இறந்தவர்களை ஒதுக்கிவிடுகின்ற’ உவமானத்துடன் கூறுகிறார் புத்தர்.
    உவமானங்கள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன? இயற்கையின் நிகழ்சிகளிலிருந்துதான் எடுக்கப்பட வேண்டும். வேறு எங்கிருந்து எடுக்க முடியும்? இயற்கையின் தன் இருப்பின் மூலமும், நொடிக்கு நொடி தன் நிகழ்வுகளின் மூலமும் அறிவுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றது. இயற்கையுடன் இணைந்திருந்தால் (attunement with Nature) இயற்கையே சிந்தனையாளர்களுக்கு ஆசானாக இருக்கும்.
    அறிஞர்கள் வாழ்வியல் கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு இரண்டு விதமாகச் சொல்வர். ஒன்று வாழ்வியல் கண்டுபிடிப்புகளை எளிதாக விளங்க வைப்பதற்கு உவமான உவமேயங்ளை கையாள்வர். சில நேரங்களில் உவமான – உவமேயம் இல்லாமலேயே நேரிடை அறிவுரையாகவும் இருக்கலாம். அறிஞர்கள் பயன்படுத்தும் உவமான- உவமேயங்களை நாம் மதிக்கவும் வேண்டும், ரசிக்கவும் வேண்டும். கூறுகின்ற கருத்திற்கும் உவமான-உவமேயத்திற்கும் உள்ள ஒற்றுமையை(mapping) அறிய வேண்டும். மனதிற்குள்ளாகப் போற்றிப் பழக வேண்டும். ஏன் எனில் இறைத்தூதர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், நாமும் வாழ்நாளில் பெறுகின்ற அனுபவங்களை அதுபோல் பின்வரும் சமுதாயத்திற்குச் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும்.

    ‘தான் உயராது, மற்றவரது உயா்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது’ என்பது இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றமாக (corollary) இருப்பதால், போற்றுகின்ற பண்பு இருக்கின்றது என்றால் மற்றவரது உயா்வுநிலைபோல் நாமும் உயரவேண்டும் என்கின்ற விழைவு அந்த ஆன்மாவிற்குள் உள்ளது என்பது அறிகுறி. அது மறைந்தும் இருக்கலாம். அல்லது அது வெளிப்படையாகவும் தெரியலாம். மறைந்திருப்பதை எவ்வாறு அறிவது? ‘பிறர் உயர்வைப் போற்றி, மதித்து, ரசிக்கும் தன்மை’ நம்மிடம் இருக்குமானால் இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றப்படி நாம் அந்த உயர்வுநிலைக்கு மெல்ல மெல்ல நகர்ந்து, உயா்ந்து வருகிறோம் என்று பொருள். குறிப்பாக இது குரு-சீடர் உறவில் பளிச்சிட வேண்டும்.

    நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் அமைந்துள்ள எல்லாச்சிறப்புகளில் இந்த உவமான – உவமேயங்கள் பயன்படுத்துதலும் முக்கியமானதாகும். இல்லையெனில் ‘வெட்டவெளியே தெய்வம்’ என்று வெளிப்படையாகத் துணிந்துரைத்து லட்சோப லட்ச சீடர்களைக் ஈர்த்துக் கொண்டிருக்க முடியுமா?

    மகரிஷி அவர்களின் உவமான – உவமேயங்கள் பயன்படுத்தும் சாதுரிய-யுக்தியினை அறிந்து கொள்ள அவர் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை அறிவோம்.

    மகரிஷி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு. அமெரிக்காவில் பயிற்சியாளர்களின் வினாக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்க இளைஞர் ஒருவர் மகரிஷி அவர்களிடம் ஒரு வினாவினைக் கேட்டாராம். அதாவது

    “சுவாமிஜி ஏன் ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்துகிறீர்களே! ஏன்” என்றாராம். அதற்கு மகரிஷி அவர்கள் பதில் வினாவினை அந்த இளைஞரிடம் கேட்டாராம். அது என்னவெனில்:- “சாலையில் மகிழுந்தை(car) ஓட்டிச் சென்று கொண்டிருக்கும்போது, சிவப்பு விளக்கு எரிந்தால் என்ன செய்வீர்கள்” என்றாராம். அதற்கு அந்த இளைஞர் என்ன சொல்லியிருப்பார்? அந்த இளைஞர் “சிவப்பு விளக்கு எரியும் போது நிற்காமல் போனால் விபத்து நேரும். எனவே மகிழுந்தை நிறுத்திவிட்டு பச்சைவிளக்கு எரியும்போது செல்வேன் ” என்றாராம். உடனே அதற்கு மகரிஷி அவர்கள் “அதுபோல்தான் வாழ்க்கையில் மனிதன் ஒழுக்கம் தவறி நடந்தால் வாழ்க்கை எனும் பயணத்தில் விபத்து ஏற்படும்” என்றாராம். அந்த விபத்துதான் துன்பங்களாக வருகின்றன. என்றாராம். மகரிஷி அவர்கள், அந்த இளைஞர் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற கருணையால், சாதுரியமாக தக்க உதாரணத்துடன் சொன்ன பதில் எவ்வளவு ஆறுதலையும், அதனால் மகிழ்ச்சியினையும் உண்டாக்கியிருக்கும்.! ஆறுதலும் மகிழ்ச்சியும் எவ்வாறு உண்டாகியிருக்கும்? ஒழுக்கம் அவ்வளவு அதிமுக்கியமானதா என்கின்ற ஐய–இருளில் இருந்த அந்த இளைஞரின் அறிவிற்கு விளக்கம் நிச்சயமாக ஒளியைத் தந்திருக்கும் என்பதால், ஐயம் தீர்ந்ததால் ஐயம் தீர்ந்த(இருள் மறைந்தது) ஆறுதலும், அதனைத் தொடா்ந்து அறிவு, ஒளியால் உயர்வை அடைந்ததால் மகிழ்ச்சியும் நிச்சயமாகக் கிடைத்திருக்கும்.

    இதே போன்று மற்றொரு நிகழ்ச்சி ஒழுக்கம் கடைபிடிப்பது பற்றி நடந்ததனை அறிவோம். இதே போன்று வேறொரு சமயத்தில் ஒழுங்குடன் இருப்பது பற்றி ஐயம் எழுந்தது பயிற்சியாளர் ஒருவருக்கு. அதற்கு அந்த பயிற்சியாளரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து இரண்டு சரிபாதியாகக் கிழிக்கச் சொன்னாராம் மகரிஷி அவர்கள். உடனே அந்த பயிற்சியாளர் காகிதத்தை வாங்கி இரண்டாக மடித்து மடிப்பை விரல்களால் நன்றாக தீட்டி பிறகு கிழித்தாராம். என்ன நடந்திருக்கும்? ஒன்றாக இருந்த காகிதம் சரியான நேர்கோட்டுடன் கிழிந்திருக்கும். மகரிஷி அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? அந்த பயிற்சியாளரிடம் “ஏன் இரண்டாக மடித்து தீட்டி கிழித்தீர்கள்? இரண்டு கைகளால் காகித்தை பிடித்து இழுத்தால் காகிதம் இரண்டாகக் கிழிந்திருக்குமே!” என வினவினாராம். அதற்கு அந்த பயிற்சியாளர் என்ன சொல்லியிருப்பார் என்று தெரிந்ததே, அப்படி மடித்து நன்கு தீட்டி கிழிக்க வில்லை என்றால் காகிதம் நோ்கோட்டில் கிழியாமல் தாறுமாறாக, வளைவுகளுடன் ஒழுங்கில்லாமல் கிழிந்திருக்கும்” என்றாராம். உடனே மகரிஷி அவர்கள் “இதுபோன்றுதான் வாழ்க்கையில் ஒழுங்கு இல்லையானால் வாழ்க்கை என்கின்ற வண்டிச்சக்கரம் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகும்” என்றாராம்.

    எனவே நமக்கும் உவமான-உவமேயம் கண்டு பிடிக்கும் திறன் வளர்ந்து விட்டால் அது இரண்டு விதங்களில் உதவியாக இருக்கும்.

    ஒன்று – முதலில் நமக்கு நாமே எடுத்துச் சொல்ல உதவியாக இருக்கும். இது என்ன? உதாரணமாக வாழ்க்கையில்

    ‘ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒத்துப் போக வேண்டும்(adjustment)’

    என்கின்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம். ‘நான் தான் சரியாக நடந்து கொள்கிறேனே, நான் ஏன் பிறருடன் ஒத்துப் போக வேண்டும் என வினா எழலாம்.? இந்த வினாவிற்கு விடை கிடைக்கும் வரை ஒத்துப் போக மனம் இடம் தராது. அப்போது இந்த உவமான உவமேயம் கண்டுபிடிக்கும் திறனால் தக்க உவமான-உவமேயம் கண்டுபிடித்து, மனதிற்கு தெளிவினை ஏற்படுத்த முடியும். இது முதலில் நமக்கு உதவியாக இருப்பது.

    மற்றொன்று. பிறர்க்கு நாம் கண்டுபிடித்த வாழ்வியல் உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு உவமான, உவமேயம் பயன்படுத்தும் திறன் உதவியாக இருக்கும். வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்களாக்கியுள்ளார். ஆகவே மனவளக்கலைஞர்களுக்கு ஞானாசிரியராகும் பயிற்சியினைத் தந்து அருள்நிதி என்கின்ற பட்டத்தை வழங்கி வருகிறார்.

    ஆகவே இறைத்தூதுவர்களான மனவளக்கலைஞர்களுக்கு,

    அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை பிறர்க்கு எளிமையாக, சுருக்கமாக விளங்க வைக்கவும்,

    அதுமட்டுமன்றி, தாங்கள் தங்கள் வாழ்வில் கண்டுபிடித்த வாழ்வியல் உண்மைகளையும் பிறர்க்கு எடுத்துச் சொல்வதற்கும் உவமான-உவமேய கண்டுபிடிக்கும் திறன் பெரும் உதவியாக இருக்கும்.

    உவமான-உவமேயம் இல்லாத ‘ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒத்துப் போக வேண்டும்(adjustment)’ என்கின்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம். இந்த அறிவுரைக்கு ஏற்ற உவமான-உவமேயத்தை கண்டுபிடிப்போம்.

    சாலையில் மிக கவனத்துடன் நடந்தோ அல்லது வண்டியை ஓட்டிக் கொண்டோ நம் பாதையில் செல்கிறோம். அப்போது எதிர் திசையில் ஒருவன் தாறுமாறாக வண்டியை ஒட்டிக் கொண்டு நம் பாதைக்குள் வருகிறான். அப்போது நாம் என்ன செய்வோம்? நாம் சரியாக நம் பாதையில் செல்கிறோம், அவன் தாறுமாறாக ஓட்டி நம் பாதையில் குறுக்கிட்டு வந்தால் அது அவன் தவறு என்று இருப்போமா? என்ன செய்வோம்? எதிர் திசையில் வருபவன் நம்மீது மோதி விடப்போகிறான் என்று நாம் ஒதுங்கிச் செல்வோம்,

    அதுபோல் நாம் என்னதான் நல்லவராக இருந்து(என நினைப்பதுகூட தன்முனைப்பின் வாசனையே. மனிதனாகப் பிறந்திருக்கிறோம். அதுபோல் வாழ்கிறோம் அவ்வளவுதான். இருந்தாலும் பரவாயில்லை. பண்பேற்றத்தில் ஆரம்ப கட்டத்தில் முதல்படியில் இருப்பவர் அவ்வாறு அவ்வாறு நினைப்பதில் தவறில்லை. ஆனால் பண்பேற்றப் படிகளில் ஏறி வரவர அந்த எண்ணமும் நீங்கி விடும். அயராவிழிப்புப் பயிற்சியால்) சரியாக நடந்து கொண்டிருந்தாலும் விட்டுக் கொடுத்து போவதுதான் அறிவுடைமை. இங்கு சமயோசிதமும் தேவை, நமக்கும், பிறருக்கும் துன்பம் வராத வரை, சமயோசிதத்துடன் பிறருடன் விட்டுக் கொடுத்து போவதுதான் அருள் நெறியின் அறிவுடைமை என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    “விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை
    கெட்டுப் போகின்றவர் விட்டுக் கொடுப்பதில்லை” என்று ஒரு பழமொழி உண்டு.

    பிறவியின் நோக்கத்தினை இப்பிறவியிலேயே நிறைவேற்றிட நமக்கு திருத்தம் வேண்டும் என முடிவு செய்துவிட்டால் இயற்கையே இதுபோன்ற உவமான – உவமேயங்களைக் கூறி, அல்லது சம்பவங்களை நிகழ்த்தி அறிவுறுத்துகின்றது. இதுபோன்ற நிகழ்வுகளை உணா்வதற்கு இயற்கையுடன் இணைந்து(attunement with Nature) இருக்க வேண்டும்.

    2) வினா– ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

    விடை—
    ஒரு அறிஞர் கூறியுள்ள அறிவுரையைக் கண்ணுறும் போது, அதே போன்று வேறு அறிஞர்கள் கூறிய அறிவுரை நமக்குத் தெரிந்திருந்தால் அதனையும் நினைவிற்கு கொண்டு வந்து இணைத்து ரசிக்க வேண்டும். இது எப்போது சாத்தியம் என்றால் பல அறிஞர்களின் அமுத மொழிகளை அறிந்திருந்தால் சாத்தியம். ஒரு அறிஞரின் அறிவுரை இப்போதுதான் முதன் முதலில் அறியப்படுகின்றது என்றால், இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று வேறு அறிஞா்களின் அறிவுரையைக் கண்ணுறும் போது இந்த அறிவுரையை நினைவில் கொண்டு வந்து இணைத்துப் பார்த்து அந்த ஒற்றுமையை ரசிக்க வேண்டும். அப்போதுதான் அந்த அறிவுரை சரியானது என மேலும் உறுதிபடுத்த உதவியாக இருக்க முடியும்.

    உதாரணத்திற்கு, ஒழுக்கமும், பழக்கமும் எடுத்துக் கொள்ளலாம். இது பற்றி அறிஞர்களின் கூற்று என்ன? முதலில் நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளதைக் கவனிப்போம்.

    ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இதே போன்று, இந்த உண்மையை ஒட்டி வேறு அறிஞர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா என்று பார்ப்போம். மேலைநாட்டு அறிஞர் ரூஸோ கூறுவது—

    “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்.” வேறு அறிஞர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா?

    ஸ்பானியப் பழமொழி. ஒன்று “முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள், பிறகு தோ்வடமாக மாறிவிடும் என்கின்றது.

    இவ்வாறாக ஒரே வாழ்வியல் உண்மையை பலகட்டங்களில் தெரிவிக்கும் பல அறிஞர்களின் அமுத மொழிகளை இணைத்து அமுதம் அருந்த வேண்டும். அப்போதுதான் பல பிறவிகளில் தவறவிட்ட பண்பேற்றத்தை இப்பிறவியலாவது பெற்று கடைத் தேறமுடியும்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 128

    21-11-2015—சனி

    எவனொருவன் ஒரு ஆன்மாவை அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.

    ….. மகாவீரர்

    பயிற்சி—
    1) எல்லாவற்றையும் என்பது என்ன? திரு வேதாத்திரியம் அதற்கு உதவுகின்றது அல்லவா?
    2) இது எப்படி சாத்தியமாகின்றது?
    3) இதனை மகாவீரர் எவ்வாறு கண்டுபிடித்திருப்பார்?

    விடை:
    1) வினா– எல்லாவற்றையும் என்பது என்ன? திரு வேதாத்திரியம் அதற்கு உதவுகின்றது அல்லவா?

    விடை- எல்லாவற்றையும் என்பது இறையின் சரித்திரத்தையே அறிந்து கொள்வதுதான். அதற்கு திருவேதாத்திரியம் பெருமளவு உதவியாக இருக்கின்றது. திருவேதாத்திரியம் மனித குலத்திற்கு இறை அளித்துள்ள காலத்துக்கேற்ற வரப்பிரசாதமாகும்.

    2) பரமாத்மாவே சீவாத்மாவாக உள்ளதால் சீவாத்மாவான ஆன்மாவைப்பற்றி அறிந்துகொள்ளும்போது பரமாத்மாவின் சரித்திரத்தை அறிந்து கொள்ள முடிகின்றது

    3) மகாவீரர் மட்டுமல்ல அவருக்கு முன்னர் / பின்னர் அவதரித்த ஞானிகளெல்லாம் கண்டுபிடித்துள்ளனர்? ‘தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என்கின்ற வினா அவர்களைத் கடுமையாகத் துளைத்திருக்கும். ‘நாம் யார்?’ என எண்ணியிருப்பர்?’ வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என அறிய விரும்பியிருப்பர். அதன் விளைவாக ‘நான் யார்?’ என இயற்கையால்/இறையால் உணர்த்தப்பட்டார்கள்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்

    முக்கிய   அறிவிப்பு

    வாழ்க வளமுடன்.

     

         அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்கப் பயிற்சியில்’ கேட்கப்பட்டுள்ள மேலும் சில வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட இருக்கின்றது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. படித்துப் பயன்பெற வாழ்த்துக்கள். தாங்கள் பயன் பெற்றதை உங்கள் கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

     

    வாழ்க வளமுடன்.

    Loading

  • FFC – 146-வினைப்பதிவின் முன் இருப்பு

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    வினைப்பதிவின் முன் இருப்பு

    FFC – 146

    20-12-2015—ஞாயிறு

    குறிப்பு:-

                வாழ்க வளமுடன்.

            கேட்கப்பட்டுள்ள வினாவின் விடையை விரிவாக ஆராய இருப்பதால், இன்றைய சத்சங்கம் முடிவதற்கு(article has become lengthy)அதிக நேரம் ஆகலாம். அதற்காகவே விடை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தரப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக/ ஒருசேர படித்து முடிக்க நேரம் கிடைக்காதவர்கள் முதல் பகுதியை படித்து முடித்துவிட்டு சிறிது இடைவெளி விட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். ஒருசேர படித்திட நேரம் இருக்குமானால் இடைவெளியில்லாமலும் படித்துப் பயன் பெறலாம்.

    வாழ்க வளமுடன்.

    பகுதி – 1

    வாழ்க வளமுடன்.

    இத்தலைப்பை சிந்திக்க எடுத்துக் கொண்டதற்குக் காரணம் ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ கேட்கப்பட்ட ஒரு வினாவிற்கான விடையாக அமைவதற்காகவே.

    முதலில் தலைப்பின் கீழ் சிந்தனையைத் தொடர்வோம். சிந்தனையின் முடிவில் நீங்களே எந்த வினாவிற்கான விடை உள்ளது என அறிவீர்கள். வாழ்க வளமுடன்.

    ‘வினைப்பதிவே தேகம் கண்டாய்’ என்கிறார் ஓர் அறிஞர். இந்த அறிஞரின் கூற்றை நினைவில் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

    தூயவெளி இறைநிலையின் தோற்றமான ஆன்மாவிற்கு எப்போது உடல் தேவையிருக்கின்றது?

    ஆன்மா தூய்மை அடையும் வரை அதற்கு உடல் தேவைப்படுகின்றது.

    அதாவது, ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை நியதியின்படி, ஆன்மா எண்ணிய எண்ணங்களின், (அவை நிறைவேறாத ஆசைகளாகவும் – பற்றுக்களாகவும் இருக்கலாம்.) விளைவுகள் வெளிவராத பட்சத்தில்,

    அந்த விளைவை அனுபவிப்பதற்கு, ஆன்மாவிற்கு தேகம் தேவைப்படுகின்றது.

    அதுதான் பிறவித்தொடர் என்பது.

    ‘பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்’ என்பதால். புவியில் வாழும் காலத்தில், ஆன்மா தூய்மை பெற்று பற்றற்று வாழ்ந்திருந்தால் உடலைவிட்டு பிரிந்த பிறகு மீண்டும் புவிக்கு வந்து அவற்றை அனுபவிப்பதற்கு, உடல் தேவையில்லை.

    ஆகவே அறிந்து கொள்ள வேண்டியது:

    1) வினைக்கு விளைவு உண்டு.
    2) விளைவில்லாத வினை இல்லை.
    3) உடலை வைத்து வினையாற்றியதால்தான், விளைவை அனுபவிப்பதற்கு உடல் தேவைப்படுகின்றது ஆன்மாவிற்கு. அதாவது செய்த வினைக்கு விளைவு வருவதற்கு முன் உடல் மரணத்தை தழுவினால், அழியாத ஆன்மாவிற்கு உடல் தேவையுள்ளது. அதற்குத்தான் மீண்டும் மீண்டும் பிறவி.
    4) விளைவு, செய்யும் செயலின் தன்மையைப் பொருத்தது.
    5) விளைவிற்கும் வினைக்குமிடை கால நீளம், மற்றும் விளைவின் தரம் ஆகிய இரண்டும் வினையின் தன்மையைப் பொருத்தது.
    விளைவு உடனே வரவேண்டியதில்லை. அதாவது வினையை ஆற்றிய உடனே அதற்கான விளைவு வரவேண்டும் என்பதில்லை.

    உதாரணத்திற்கு சூடான பாத்திரத்தை கவனக்குறைவாக வெறும் விரல்களால் தொட்டுவிட்டால், அதற்கான விளைவு உடனே வந்துவிடும். ‘சூடான பாத்திரத்தை கவனக்குறைவால் வெறும் விரல்களால் தொட்ட பதிவை’ இருப்பாக இருந்து கொண்டு, விளைவு பிறகு வராது. விளைவு உடனே வந்துவிடும். மற்றுமொரு உதாரணம் ‘மின் கம்பியை தொட்ட வினைக்கு’ விளைவு பிறகு வராது. உடனே வந்துவிடும். எனவே வினையின் தன்மையைப் பொருத்து வினைக்கும் விளைவிற்கும் இடைப்பட்ட கால நீளம் அமையும். இப்போது தலைப்பிற்குள் செல்வோம்.
    இந்த தலைப்பு என்ன அறிவுறுத்துகின்றது? இத்தலைப்பு, குறிப்பாக வினைக்கும் விளைவிற்கும் இடைப்பட்ட கால நீளத்தைப்பற்றியதாக இருக்கும். தலைப்பு, வினை, பயன், முன் இருப்பு ஆகிய சொற்களைக் கொண்டுள்ளது.
    வினை என்றால் மனிதனுடைய செயல் என்று பொருள்.
    வினைப்பயன் என்றால் மனிதன் செய்த செயலால் வரும் விளைவே அவ்வினையின் பயன்.
    முன் இருப்பு என்றால் முன்னரே இருந்தது என்று பொருள்.
    ஏற்கனவே விளைவு வராது, ‘இருப்பாக’ இருக்கின்ற வினைப்பதிவின் பயன் என்று பொருள். விளைவு இல்லாத வினையில்லை. அதுபோல் வினை இல்லாத விளைவு இல்லை. எனவே ஏற்கனவே விளைவு வராது இருப்பாக இருக்கின்ற வினைப்பதிவின் விளைவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தீடீரென தற்போது வந்துள்ள பெரும் விளைவிற்குரிய பெரும் வினை இப்போது செய்யப்படாமலும் இருக்கலாம். பெரும்பாலும் வருகின்ற விளைவுகள் நன்மையைத் தருவதாக இருந்தால் மனிதனுக்கு மகிழ்ச்சிதான்.
    ஒரு வேளை ஏற்கனவே இருப்பாக உள்ள வினைப்பதிவு பெருந்தீயப்பதிவாக இருந்து, வினை செய்யப்படும்போது விளைவு வராமல் இருந்து, இப்போது செய்யும் ஒரு சிறு தவறால், தூண்டப்பட்டு(trigger) பெருந்துன்பம் வரலாம். அப்போது மனிதன் வருத்தமடைகிறான். பெரும்பாலும் அதுபோன்ற சமயங்களில் ‘சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வந்துவிட்டது. எனவே செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று கூறி நொந்து கொள்வதும் உண்டு.
    காரணம் முன்பு செய்த பெருந்தீய வினை கவனத்தில் இல்லாதிருப்பது,
    அல்லது அதன் தன்மை, அதனால் பாதிக்கப்பட்டவரின் துன்பநிலை ஞாபகத்தில் இல்லாது போவது
    மற்றொன்று, செய்த அவ்வினை ஞாபகத்தில் இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என தப்புக் கணக்குப் போடுவது.
    முன்னோர்களின் கருத்தொடர்தான் நாம் என்பதால், முன்னோர்கள் செய்த வினையின் விளைவாகவும் இப்போது நமக்கு வரலாம்.
    இதற்கெல்லாம் என்ன விளக்கம்?
    இதற்கெல்லாம் ‘செயல் – விளைவுத் தத்துவம்’ என்கின்ற நூலை அருளியுள்ள வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன என்று பார்ப்பதே இன்றைய அறிவிற்கு விருந்து. மகரிஷியின் தத்துவம் செயல் விளைவுத் தத்துவத்தை மிக மிக வலியுறுத்துவதாக இருப்பினும் அதனை விரிவாக எடுத்துரைக்க ‘செயல் – விளைவு தத்துவம்’ என்கின்ற தனிநூலினை 1997 ஜனவரியில் எழுதியுள்ளார். அந்நூல் 67 பக்கங்களைக் கொண்டது. எனவே அந்நூலின் முக்கியத்தை அறிந்து கொண்டு அந்நூலை மீண்டும் மீண்டும் வாசித்து தெளிவு பெறவேண்டும்.
    மகரிஷி அவர்களின் அனைத்து மூலநூல்களும் வீட்டின் அலமாரியை அலங்கரிக்க வேண்டும். மூலநூல்கள் அலங்கரிப்பதே போதுமானதாகிவிடாது. அவற்றை தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி வாசித்து தெளிவு பெற்று, அவ்வையார் கூறுவதுபோல், ‘அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும் இனிது’ என்பதனை சோதித்துப் பார்க்க வேண்டும்.
    எனவே இன்றைய சிந்தனையான ‘வினைப்பதிவின் முன் இருப்பு’ என்கின்ற தலைப்பிற்குள் செல்வோம். மனிதனின் எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் அவனுடையக் கருமையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பாக உள்ளது. அவற்றிற்கான விளைவுகள் தக்க தருணத்தில் வெளிவரும். விளைவுகள் உடனேயும் வரலாம். அல்லது பிறகும் வரலாம். கால நீள அளவு செய்கின்ற வினையின் விளைவைப் பொருத்தது. இவ்வாறிருக்கும் போது சில நேரங்களில் வாழ்க்கையில் சிறு தவறு செய்யும்போது பெரும் துன்பங்கள் வரக்காண்கிறோம். அப்போது செயல்விளைவுத் தத்துவம் தவறு என நினைப்பது உண்டு. “No action will go waste. It will give appropriate result.” என்பார் மகரிஷி அவர்கள். ஆகவே செயல் விளைவுத் தத்துவம் தவறு என்பது சரியல்ல. விளைவையும் செயலையும் இணைத்துப் பார்க்க முடிவதில்லை.
    விளைவிற்கு காரணமான ஏற்கனவே செய்துள்ள வினையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாததே காரணம். அல்லது முன்னோர்கள் செய்த வினையாக இருந்தால் அதனை அறிய முடியாததே காரணம்.

    இப்போது வருகின்ற விளைவிற்கான வினை இந்தப்பிறவியிலேதான் நடந்திருக்க வேண்டுமென்பதில்லை. ‘மாதா, பிதா செய்தது மக்களுக்கு’ என்றிருக்கும்போது மனிதன் பெற்றோர்களின்/முன்னோர்களின் கருமையத் தொடர்புடையவன்(hereditary link) என்பதால், இப்போது மனிதன் அனுபவிக்கும் விளைவிற்கான காரணம் முன்னோர்களுடையதாகவும் இருக்கலாம். இது போன்று குறைந்த பட்சம் முன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளாகவும் இருக்கும். ஏற்கனவே 17-06-2015—புதனன்று ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 7/7 என்கின்ற தலைப்பில் சிந்தித்தபோது, இந்த உண்மையினை விவர ஓட்டப்படம்(flowchart) மூலம் அறிந்திருக்கிறோம். எனினும் மீண்டும் அதனை நினைவு படுத்திக் கொள்வதற்காக அந்தப் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரும்பினால் நீங்கள் இணையதளப் பெட்டகத்தில் உள்ள அன்று வெளிவந்த விருந்தினை இப்போதும் நீங்கள் browse செய்து அருந்தலாம்.
    சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் வருவது போன்று தவறாக மனிதன் நினைப்பது பற்றி நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். இதற்கான விளக்கத்தை கவிவடிவிலும் தந்திருக்கிறார். அதனை நினைவு கூர்வோம்.

    FFC-146-பினைப்பயள் முன் இருப்பு கவி

    இப்பாடலுக்கான விளக்கத்தை அறிவோம். கடையில் பொருளை எடை போடும் போது தராசின் ஒரு தட்டில் எடைக்கல்லும், மற்றொரு தட்டில் பொருளும் வைக்கப்படுகின்றன. எவ்வளவு பொருள் வைத்தாலும் தராசின் எடைக்கல் தட்டு மட்டும் கீழே உள்ளது. கடைசியாக சிறிய அளவில் பொருளை வைக்கும்போது பொருள் தட்டு தாழ்ந்து விடுகின்றது.
    கடைசியாக சேர்க்கப்பட்ட சிறு அளவு பொருள் மட்டுமேவா காரணம் எடைக்கல்லுக்கு பொருள் சமமானதற்கு?
    இதுவரை வைக்கப்பட்ட பொருளும், இப்போது வைத்த பொருளும் சேர்ந்து அழுத்தியதுதான், பொருள் வைத்திருக்கும் தட்டு கீழே இறங்கி, எடைக்கல்லுக்கு பொருள் சமமானதற்குக் காரணம்.
    அதுபோல் ஏற்கனவே இன்றுவரை இருப்பாக இருந்து, ஆனால் விளைவு வராமல் உள்ள பெரும் தீய பதிவு, தற்போதைய சிறு தவறால் ஓங்கி, பலமாக, விளைவைத் தருகின்றது. அதனால் தான் இக்கவிக்கு தலைப்பினை ‘வினைப்பயன் முன் இருப்பு’ என்று வைத்துள்ளார். எனவே செயல் விளைவுத் தத்துவம் பொய்யாகிவிடாது என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ‘அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்’ என்பர் பெரியோர். செயலுக்கான விளைவு உடனே வர வேண்டும் என்பதில்லை.
    விளைவு, செய்யும் செயலின் தன்மையைப் பொருத்தது.
    விளைவிற்கும் வினைக்குமிடை கால நீளம், மற்றும் விளைவின் தரம் ஆகிய இரண்டும் வினையின் தன்மையைப் பொருத்தது.
    மனிதன் தன் தவற்றினைத் திருத்திக் கொள்வதற்கு அவகாசம் கொடுக்கின்றது. எச்சரிக்கின்றது இயற்கை/இறை.
    அதற்கு மேலும், தவறுகள் செய்வது தொடருமானால் உரிய நேரத்தில் விளைவு துன்பமாக வந்து விடுகின்றது.
    மேலும் கோள்களின் சஞ்சார நிலைகளும்(planetary position) மனித வாழ்வோடு தொடர்பு கொண்டு, முன் இருப்பு செயல்களின் விளைவுகளாக இன்ப-துன்பத்தை அளிக்கக் காரணமாக உள்ளதால், அந்தந்த காலம் வர வேண்டியிருப்பதால் விளைவு வருவதற்கான கால நீளம் நீடிக்கலாம். செயல் விளைவுத் தத்துவத்தை மதித்து பயன் கொள்வதற்கு அவர் அருளியுள்ள நூலை ஓரிரு முறை வாசித்துப் பயன் அடைய இச் சத்சங்கத்தில் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    பகுதி – 2

    மேலும், பட்டினத்தாரின் வாழ்வில் நடந்த ஒரு அருட்சம்பவத்தை அறிவோம். பட்டினத்தார் துறவு பூண்டதால் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கும்போது. ஒரு இரவில் ஒரு கோயிலில் தங்கினார். அப்போது தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவ்வூரின் அரண்மனையில் ராணியின் முத்துமாலை திருடு போய்விடுகிறது இதனை அறிந்த காவலாளர்கள் திருடர்களை பிடிப்பதற்கு துரத்தி ஓடி வருகின்றனர். அப்போது திருடர்கள் பட்டினத்தார் தவம் செய்து கொண்டிருந்த கோயிலில் ஒளிந்து கொள்கின்றனர். காவலர்களும் அக்கோயிலுக்குள் நுழைந்து திருடர்களைத் தேடுகின்றனர்.

    அதற்கு மேலும் தங்களிடம் அந்நகை தங்களிடம் இருந்தால் கையும் களவுமாக பிடிபடுவோம் என அஞ்சி திருடர்கள் அந்த நகையை வீசி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். திருடர்களால் வீசி எறியப்பட்ட அந்த முத்துமாலை தவம் இயற்றிக் கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் வந்து விழுகின்றது. தவம் முடிந்த பிறகு தன் கழுத்தில் இருந்த அந்த நகையைப் பார்த்ததும், தன்னுடைய தவத்தைப் பாராட்டி அந்த முத்து மாலை இறைவனால் அணிவிக்கப்பட்டது என நினைக்கிறார். கோயிலுக்குள் புகுந்த காவலர்கள் பட்டினத்தார் கழுத்தில் ராணியின் முத்து மாலை இருப்பதைக் கண்டு பட்டினத்தாரை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரசன் முன் நிறுத்துகின்றனர். அரசன் பட்டினத்தாரை திருடன் எனக்கருதி அவரை கழுமரமேற்றச்(அந்தக்காலத்தில் மரண தண்டனை அளிக்கும் ஒரு கொடூரமான முறை) சொல்கிறான்.

    அப்போது பட்டினத்தார் இறைவனிடம் சரண் அடைந்து “என்செயலாவது யாதொன்றுமில்லை” எனப்பாடுகின்றார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-146- பட்டினத்தார் பாடல் என் கெபல் ஆவது ஒன்றில்லை

    இறைவனிடம் பூரணசரண் அடைகிறார். இறைவன் செயலன்றி தன் செயல் என்று ஒன்றும் இல்லை என்கிறார். அந்த நிகழ்வையே இறைவன் செயல் என உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார். தான் இப்பிறவியில் ஏதும் பாவங்கள் செய்ததில்லை. முன் செய்த தீவினைதான் மீண்டும் பிறப்பதற்குக் காரணம் என்கிறார். இப்போது வந்துள்ள ‘திருடன் என்கின்ற பழி(விளைவு)’ முன் பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக தன்னைப் பற்றிக் கொண்டது என்கிறார்,
    உடனே கழுமரம் தீப்பற்றி எரிகின்றது. இதனைக் கண்ட அரசன் பத்திரகிரியார், பட்டினத்தாரின் தெய்வீக நிலையினை அறிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு சீடனாகிவிட்டான். அரசன் பத்திரகிரியார் பின்னாளில் ஞானியானார். ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற வரிகளைச் சொன்னவர் வேறுயாருமில்லை. பட்டினத்தடிகள்தான். இந்நிகழ்வினைக் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தால் நமக்கு இறைவனின் திருவிளையாடல்களின் உண்மைகள் தெரிய வரும்.

    பத்திரகிரியாரின் கருமையப்பதிவிற்கேற்ப, பின்னாளில் பத்திரகிரியார் ஞானியாக வேண்டும் என்பது இறையின் திருவுளம்.

    அடுத்ததாக இறைவன் பட்டினத்தாரை தடுத்தாட்கொண்டது.

    பட்டினத்தார் இறைவனிடம் சரணடைந்த விதம்

    பின் வரும் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வதற்காகவும் ஏற்படுத்திய இறைவனின் நாடகம்.

    முன்வினைப்பயனை எடுத்துச் சொல்வதற்காக இறையாட்சி நடத்திய நாடகம்.

    திடீரென விளைவு துன்பமாக வரும்போது, ‘வினை ஏதும் இல்லாமல் விளைவு வந்துவிட்டது என சாதாரண மனிதன் ‘தெய்வத்திற்கு கண் இல்லை’ என தெய்வத்தையே நிந்திப்பது உண்டு.

    ஆனால், செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்றிருக்கும் போது இறையை நெருங்கிவிட்டவர், தன்னுடைய தவறான வினையால்தான் தீமை வந்துள்ளது என தன் பொறுப்பை ஒப்புக்கொள்ளாமல் தெய்வத்தின் மீதே எவ்வாறு பழியைச் சுமத்த முடியும்?

    எனவே அப்பழியை முன்வினையின் பயனாகக் கருதுவதோடு இருந்துவிடாமல்,

    பின்வரும் சமுதாயமும் ‘முன் இருப்பு வினைப்பதிவின் விளைவு தற்போதைய வினையில்லாதது போல் வரும் விளைவு’ என்கின்ற உண்மையினை அறிந்து கொள்ள ஒர் பாடலை இயற்றியுள்ளார்.

    ஏனெனில் அருட்பாடல்கள் வற்றாத சீவநதி போன்றதாகும். எக்காலத்திலும் மனித அறிவிற்கும் விளக்கம் அளித்துக் கொண்டே இருக்கும்.
    ஆகவே ஆட்சியின்றி ஆளுகின்ற இறையாட்சியில், எங்கும் நீக்கமற அறிவாக திகழ்ந்து கொண்டிருப்பதால் எந்த ஒரு செயலும் வீண் போவதில்லை. அதற்கான விளைவு வந்தே தீரும்.
    ஆகவே யாரும் எக்காலத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் செயல்-விளைவுத்தத்துவம் தவறு என்று கூறிவிட முடியாது.
    நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் முன்வினையின் இருப்பு பற்றி கூறியுள்ள விளக்கத்தை அறிந்து கொண்டோம். அவருக்கு மூத்தவரான பட்டினத்தார் அவர்களின் வாழ்க்கைச் சம்பவத்திலிருந்தும் முன் பிறவிகளில், அல்லது இப்பிறவியிலேயும் செய்துள்ள முன்வினையின் பயன் இப்போதும் வரலாம் என அறிந்து கொண்டோம். இனிமேலும் வினப்பதிவின் இருப்பின்(முன்னர் செய்தது) விளைவின் மீது ஐயம் இருக்காது. இருப்பினும் வேறு எப்படி முன்வினைப்பதிவை உறுதி செய்வது என்று பார்ப்போம்.

    அதற்கு முன்னர் ‘பூர்வபுண்ணியம்’ என்கின்ற சொல் கேள்விப்பட்டிருப்போம். எங்கே கேள்வி பட்டிருக்கிறோம்? எப்போது கேள்விப் பட்டிருக்கிறோம்.

    ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கின்ற முதுமொழிப்படி நிகழ்வுகள் இப்போது நடை முறையில் இல்லை சமுதாயத்தில் அந்த நிகழ்வுகள் என்னென்ன? தானே அன்னையைத் தெரிந்து கொள்கின்றது குழந்தை. அன்னை குழந்தைக்குத் தந்தையை அறிமுகப்படுத்துகிறாள். இது முதல் நிகழ்வு. அதுபோல் தந்தை குருவைக் காண்பிக்க வேண்டும். இது இரண்டாவது நிகழ்வு. மூன்றாவது நிகழ்வு குரு தெய்வத்தைக் காண்பிப்பது. முதல் நிகழ்வு நடக்கின்றதே தவிர, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிகழ்வு நடப்பதில்லை சமுதாயத்தில் நெடுங்காலமாக. இந்த நிலையில் குரு கிடைப்பதை அந்த ஆன்மா செய்த பூர்வபுண்ணியம் என்கின்றனர்.
    பூர்வபுண்ணியம் இல்லாமல் அறிவை அறிந்த குரு கிடைக்கமாட்டார். அப்படியானால் அந்த பூர்வபுண்ணியம் என்பது என்ன?

    ‘பூர்வ’ என்றால் முந்திய(former, bygone) என்று பொருள். உதாரணத்திற்கு பூர்வ ஜன்மம் என்கிறோம். புண்ணியம் என்றால் நமக்குத் தெரியும். நல்ல செயல்களைச் செய்வதால் வரும் நன்மை. நல்வினையின் பயன். நல்விளைவு. இறைவனின் அருள், ஆசி என்று பொருள். ஆகவே பூர்வபுண்ணியம் என்றால் முந்திய பிறவிகளில் இந்த ஆன்மா செய்த நல்ல செயல்களினால் இறைவனின் அருளும் ஆசியும் பெற்றதனை பூர்வ புண்ணியம் என்கிறோம்.

    பிரம்ம ரிஷியான வியாசர் காலத்தில் நாம் வாழவில்லை. இருந்தாலும் நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம். அவரை குருவாக பெற்றது என்பது தற்செயலான நிகழ்வு அன்று. எந்த நிகழ்வும் இறையாட்சியில் தற்செயலானது இல்லை. நிகழ்வு செயலின் விளைவாக இருப்பதால் எந்த நிகழ்வும் தற்செயல் அன்று. இறைவன் திட்டமிட்டபடி அதாவது கருமையப்பதிவுகளின் படி அவ்வப்போது நிகழ்வுகள் நடக்கின்றன.

    அறிவை அறிந்த குருவை பெறுவது என்பது பூர்வபுண்ணியத்தாலன்றி வேறு ஏதும் காரணம் இருக்க முடியாது. பெற்றோர் குருவை அடையாத நிலையிலும் தானாகவே குரு கிடைப்பது என்பது பெற்றோர்கள் உள்பட நம்முன்னோர்கள் செய்துள்ள நற்காரியங்களின் விளைவாக இறைவனின் அருளாசி பெற்றமையாகும். ஆகவே பூர்வபுண்ணியம் என்பது வினைப்பயனின் முன் இருப்புதானே!

    ஜோதிடக்கலையின் வழியாகவும் முன்வினைப்பதிவு இருப்பதனை உறுதி செய்யலாம். ஜோதிடக் கலையில் ராசிக் கட்டத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படுகின்றது. பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றால் என்ன? ஐந்தாம் இடம் முற் பிறவியில்(அதாவது பெற்றோர்கள் உள்பட முன்னோர்கள்) செய்துள்ள பாவ புண்ணயங்களுக்கு ஏற்ப அந்த இடம் ஒவ்வொருவருக்கும் அமையும். ஜோதிடக்கலையும் வினைப்பதிவின் முன் இருப்பை ஏற்றுக் கொள்கின்றது எனத்தெரிகின்றது.

    அந்த ஜாதகர் இன்னாருக்கு இன்ன நேரத்தில் பிறக்க வேண்டும் என விரும்பியா பிறந்தார்? அல்லவே! பெற்றோர்கள் செய்துள்ள வினைகளின் தொகுப்பாக பிறந்தார் அந்த ஜாதகர். அந்த ஜாதகர் பிறந்த நேரம், ஊர் இவைகளை வைத்து அந்த ராசிக்கட்டத்தை ஜோதிடக் கலை கணித்தது. அந்தக் கட்டத்தில் அமைந்த ஐந்தாம் இடத்தின் பலனான பூா்வபுண்ணியத்தைப் பற்றிக் கூறுகின்றது. ஆகவே அந்த ராசிக்கட்டம் கூறும் பூர்வபுண்ணியம் எங்கிருந்து வந்தது. முன்னோர்களின் செயல்களால் வந்தது அந்த பூர்வ புண்ணியம். ஆகவே பூர்வ புண்ணியம் என்பது பெற்றோர் உள்பட ஜாதகரின் முன்னோர்களின் வழியாக வந்துள்ளது. ஆகவே வினைப்பதிவின் முன் இருப்பு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

    ‘நெருப்பு இல்லாது புகையாது’, ‘அள்ளாது குறையாது’ என்பன போல் வினையில்லாமல் விளைவு இல்லை. இச்சிந்தனையை மகரிஷியின் அவர்களின் வினை விளைவு பற்றிய கவியோடு நிறைவு செய்வோம்.

    FFC-146- விளைவு இலா வினை இலலை

    இப்போது தெரிந்திருக்கும் எந்த வினாவிற்கான விடை இச்சிந்தனையில் உள்ளது என்று.

    16-11-2015 அன்று சிந்திக்க வினாக்கள் -125 இல் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கான விடை இச்சிந்தனையில் உள்ளது. உங்கள் நினைவிற்காக அவ்வினாவினை மீண்டும் நினைவு படுத்தப்படுகின்றது.

    சிந்திக்க வினாக்கள்-125

    16-11-2015 – திங்கள்

    வினா: சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                           வளா்க அறிவுச் செல்வம்

    முக்கிய அறிவிப்பு

    வாழ்க வளமுடன்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-12-2015 புதன்) ‘சிந்திக்கப் பயிற்சியில்’ கேட்கப்பட்டுள்ள மேலும் சில வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட இருக்கின்றது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. படித்துப் பயன்பெற வாழ்த்துக்கள். தாங்கள் பயன் பெற்றதை உங்கள் கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                           வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • அ.வி. 145-எல்லாப்புகழும் இறைக்கே –     9/9

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    எல்லாப்புகழும் இறைக்கே –     9/9

    அ.வி. 145

                                                16-12-2015-புதன்

      ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை நினைவு கூர்வோம்.

    ffc-55- படம்- pugazh-உயர்புகழ்

    மேலும் புகழ் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதாவது:

    1  புகழ் என்பது தன்முனைப்புக்கு போடும் தூபமில்லை.

    2  ஒருவரின் செயலின் நல்விளைவினால் மக்கள் கொடுக்கும் மதிப்புணர்வே புகழ்.

    சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டியது:

          இறையே எல்லாமாகவும், உயிர்களாகவும், அறிவாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் இருக்கின்றது.  அப்படி இருக்கும்போது மனிதன் என்பவன் யார்?  அவன் உயிர் யாருடையது?  அவன் அறிவு யாருடையது?  அவன் கைகள், கால்கள் ஆகிய உறுப்புகள் யாருடையது?  இந்த எல்லா வினாக்களுக்குமே ஒரே பதில் இறையினுடையதுதான் என்பது.

         புகழ் ஏற்படும்படி மனிதன் செய்த செயல் யாரால் செய்யப்பட்டது.  அந்தச் செயலை செய்யும் சூழல் யாரால் ஏற்படுத்தப்பட்டது? அந்தச் செயல் புரிந்ததில் அவனது உடலாற்றலும், மனமும், அறிவும், ஒன்று சேர்ந்தது யாரால்?  எல்லாமே இறையினால்தானே!  இது சம்பிரதாய பதில் இல்லை.  இதுதானே உண்மை. இந்த உண்மையறிந்து விழிப்போடு இருப்பதுதானே பேரின்பம்.

        அஃதன்றி புகழ் தன்னுடையது என்று நினைத்தால் என்ன பொருள்? நினைப்பது ஒன்று, செய்வது வேறு.  தன்முனைப்புதான் மனிதனையும் இறையையும் பிரித்து வைக்கும் திரை.  தன்முனைப்பு என்கின்ற திரையை நீக்கவேண்டிய பயிற்சியில்,  புகழுக்கு ஆசைப்படுவது தன்முனைப்பு என்கின்ற திரைக்கு மேலும் மேலும் திரையை போர்த்துவதாகும்.  ஏற்கனவே விலங்கினப் பண்பான பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கருமையத் தொடர்பாக நீடித்துக் கொண்டிருப்பதால் பிறருடைய புகழையும் மனிதன் அபகரிக்கத் தயங்குவதில்லை. 

          புகழ் இறையுணர் நோக்கத்தையே மறைத்துவிடும். மறக்கச்செய்துவிடும்.

          புகழை விரும்புவதுபிறவியின் நோக்கத்தை உறுதியும் செய்யாது, உறுதி செய்தாலும் பிறவியின் நோக்கத்தை அடையவும் விடாது.

          புகழ் தன்முனைப்பை ஊக்குவிக்கும்.

          புகழ், ‘இன்முகத்தையும், எளிமையையும்’ தனது செல்வமாக மகரிஷி அவர்கள் அனுபவித்ததை, ஒரு ஆன்மீக சாதகனை அனுபவிக்க முடியாதபடி  செய்துவிடும்.

          புகழ் ஆன்மீகத்தின் உச்ச நிலையானத் தெளிவினை ஏற்படுத்தாது.

          புகழ் ஏகவெளியான வீடு பேற்றினை அடையவிடாது.

      பொருளையும், புலன் இன்பத்தையும் இழப்பதற்கு வேண்டுமென்றாலும்கூட தயாராக இருக்கும் மனிதன், புகழையும், செல்வாக்கையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. 

        மகரிஷி அவர்கள், மனிதனுக்கு வேண்டிய வளங்களில் ‘உயர்புகழை’ ஒன்றாகக் கருதி, அதனை மெய்ஞ்ஞானத்திற்கு முன்னா் நான்காவது வரிசையில் இணைத்துள்ளார்.  காரணம் என்ன?  புகழ் மனிதனுக்கு அவசியம் என்று கருதியா சோ்த்துள்ளார்?  பிறவியின் நோக்கம் மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை அடைவது.   அந்த மெய்ஞ்ஞானத்திற்கு முன்னர் உயர்புகழை இணைத்துள்ளார்,

        மனிதன் சமுதாயத்தால் வளர்க்கவும், காக்கவும் படுகிறான்.  எனவே அந்த சமுதாயம் வளமாக இருக்க வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய  ‘கடன்’ உள்ளது.(Man has due to the society. Due to the society becomes duty).  அந்த கடன்தான்  ‘கடமை’ எனப்படுகின்றது. அந்த வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் என்ன புகழ் உள்ளது?  அதனை புகழ் எனக்கருதினால் அங்கே தன்முனைப்பு வந்துவிடுகின்றது.  ஆனால் மனிதன் செய்யும் கடமையினால் பயன் பெறும் மக்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவது தான் உயர்புகழ் என்கிறார் மகரிஷி அவர்கள்.

       புகழ் என்பது விரும்பிப் பெறுவதோ, ஏதேனும் ஒன்றைச்செய்து பெறுவதோ என்று நினைப்பதோ அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். சமுதாயத்திற்கு நன்மையான காரியங்களைச் செய்து, அதனாலே மக்களின் துன்பங்கள் நீங்கி, அந்த மக்கள் பெறும் மனநிறைவுதான் புகழ்.  மனநிறைவால் வரும் வாழ்த்தே உயர் புகழ் என்கிறார்.   உதாரணம் மகரிஷி அவர்கள் செய்துள்ள அறிவுத் தொண்டேயாகும்.

        ஆகவே மனிதனுக்கு புகழ் அவசியம் எனக்கருதி  உயர் புகழை  சங்கல்பங்களில் ஒன்றாக சேர்க்கப்படவில்லை.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் எனக்கருதி. நேரிடையாக கடமையை ஆற்றுங்கள் என வற்புறுத்தாமல் சொன்னது தான் உயர்புகழ்.

        மகான்கள் வரலாற்றில் தெளிவடைந்து இறையை உணர்ந்த பெரியோர்கள் அனைவருமே சமுதாயத்திற்கு சேவையைச் செய்ய முடியவில்லை.   அவ்வாறே மகரிஷி அவர்கள் இறையை உணர்ந்து விட்ட நிலையிலேயே இருந்து விட்டிருந்தால் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்காது இன்று.  கல்விநிலையங்களில் ஒழுக்கப்பழக்க அறிவையும், இயற்கைத்தத்துவ அறிவையும் கொண்டுசென்றிருக்க முடியாது.   இப்போது செய்யப்பட்டுவரும் அறிவுத்தொண்டே இல்லாமல் போயிருக்கும்.    “சிலர் இறையுணர்வால் பேரின்பம் பெறுகிறார்கள்,  வேறுசிலர் தொண்டால்  மனநிறைவு பெறுகிறார்கள்.  ஒரு சிலர்  இறையுணர்வாலும், தொண்டாலும்  மனநிறைவு பெறுகிறார்கள்” என்று கூறும் மகரிஷி, தான் இறையுணர்வாலும், தொண்டாலும் சரிசமமாக மனநிறைவு பெற்றதாகக் கூறியுள்ளார்கள். மகரிஷி அவர்கள் தான் சமுதாயத்திற்கு இயற்கையைப்பற்றி கூறும் உண்மைகள் எல்லாம் இயற்கை தனக்கு அறிவித்தது.  எனவே அவர் அதனை சமுதாயத்திற்கு தெரிவித்து விடுவது தனது கடமையாகக் கருதினார்கள்.  இயற்கை தனக்கு தெரிவிக்கின்றது என்பதில் மனிதனுக்கு எங்கே புகழ்? 

       இயற்கை தெரிவிப்பதை எடுத்துச் சொல்வதால் மக்கள் பயன் அடைவதால் வரும் மனநிறைவும், அதைக் கண்டு தான் மனநிறைவு பெறுவது தான் உயர் புகழாகும்.  ஆகவே இயற்கை சமுதாயத்திற்கு  தெரிவிக்க மகரிஷி அவர்களை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.  எல்லோரையும் கருவியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.  அதற்குரிய தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது. ஆனால் மகரிஷி அவர்கள், தன்னுடைய மாணவர்களை இயற்கை கருவியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.  ஆகவே இன்று சமுதாயம் உள்ள நிலையில் அறிவை மேம்படுத்தக் கூடிய அறிவுத்தொண்டு மிக, மிக அவசியமாக உள்ளது.  அந்த அறிவுத் தொண்டை செய்யவல்லவர்கள் வேதாத்திரி சிந்தனாப்பள்ளி மாணவர்கள்(Students of Vethathiri school of thoughts)  இவர்களை  ‘இறைத் தூதுவா்கள்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

       தூதுவர் என்றால் என்ன?  தூது என்றால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செய்தி அறிவிக்கும் பணி.  தூதுவர் என்றால் செய்தி அறிவிக்கும் பணியைச் செய்பவர்.  அப்படியானால் இறைத்தூதர் என்பவர்,  சிந்திப்பதன் மூலம், இறையிடமிருந்து செய்திகளை வாங்கி, விளங்கி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க அதனை சமுதாயத்திற்கு அறிவிப்பவராவார். இதன் மூலம் அறிவுத் தொண்டாற்றி, அதனால் சமுதாயம் பயன் பெற்று வாழ்வதை கண்ணுறும் நிகழ்ச்சியே உயர்புகழுக்கான செயலாகும். 

      பாராட்டு என்கின்ற சொல்லுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கமாவது:

    ஒருவரது செயலால் பாரே (உலகமே) பயனடைந்து மகிழ்ச்சியால் ஆடி குலுங்குவதால் (பார்+ ஆடுவது = பாராட்டு) வரும் சொற்களே பாராட்டு என்பார்.

       ஆகவே இன்றைய சமுதாயச் சூழலில்  சமுதாயத்திற்கு தேவைப்படுவது அறிவுத் தொண்டு.  ஆகவே அறிவுத் தொண்டாற்ற இறைத்தூதுவர்களாக செயலாற்ற வேண்டியே மகரிஷி அவர்கள் பயிற்சி அளித்து  ‘அருள்நிதி’ என்கின்ற பட்டத்தை அளித்துள்ளார்கள்.  எனவே உயர்புகழ் என்கின்ற சங்கல்பம் நிறைவேறுவதற்கேற்றவாறு அறிவில்  நாளும், நாளும் மேம்பட்டு அறிவுத் தொண்டாற்றி இன்புற்று வாழ்வோம்.  வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம்.  முற்றும்.

     

    *****

    முக்கிய அறிவிப்பு

    வாழ்க வளமுடன்,                                                  

                         அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம்.  படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

     வாழ்க வளமுடன்

    Loading

  • FFC – 144-எல்லாப் புகழும் இறைக்கே! – 8/?

     வாழ்க மனித அறிவு                                          வளர்க மனித அறிவு

    எல்லாப் புகழும் இறைக்கே! – 8/?

    FFC – 144

    13-12-2015 -ஞாயிறு

    மீண்டும் காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

    FFC-144-பொருள் புகழ் செல்வாக்கு

     

            காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடல் எட்டு வரிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் காந்த தத்துவ நூலில் மகரிஷி அவர்கள் அதற்காக அளித்துள்ள விளக்கவுரை 86 வரிகளில் அமைந்துள்ளது. இங்கே சுருக்கமாக அவ்விரிவுரையை அறிந்துகொள்வோம். இருப்பினும் அன்பர்கள் மீண்டும் மகரிஷி அவர்களின் விரிவுரையை வாசித்து பயன் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

         மனிதப் பிறவியின் நோக்கம் அறியாததால், அறிவை இறையோடு இணைத்து, விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளைக் கொண்ட அறநெறியை பழகிக் கொள்வதில்லை. ஆகவே பல பிறவிகளாக, கருத்தொடராக வந்துள்ள விலங்கினப் பதிவாகிய ‘பிறர் வளம் பறித்துண்டு வாழும் தன்மை’ சஞ்சித கா்மாவாக வந்துவிட்டது. அது பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம் (செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகிவிட்டது. ஆசை பெருகுவதால்,

    1)   எவ்வளவு இருந்தாலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கின்ற மனநிலை பேராசையாகின்றது.

    2)   அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு விடுகின்றது. உள்ளமும் கெடுகின்றது. அதற்கும் மேலாக மனித உறவில் இனிமை கெடுகின்றது.

    3)   தன்னுடைய செயல்களைத் தொடரவும் முடிவதில்லை. நிறுத்தவும் முடிவதில்லை. தேக்கம் ஏற்படுகின்றது.

    4)   விளைவு, மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அவ்வாறு மனம் புண்பட்டு அமைதியிழந்து தவிப்பவர்களுக்கு தனது அனுவங்களைக் கொண்ட விளக்கங்ளைக் கூறுவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார் இப்பாடலின் விரிவுரையில்.

       பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகியவைகளில் புகுந்தழுந்தி மனித மனத்தைப் புண்ணாக்கிக் கொண்டவர்கள் இருள் வாழ்க்கையில் வாழ்கின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே புகுந்து, அழுந்தி, புண்ணாகுதல், மனித மனம் ஆகிய நான்கு சொற்களைக் கவனிக்க வேண்டும்.

    1)   புகுந்து — தடையில்லாமல், யோசனை இல்லாமல், உள்ளே நுழைதல்

     

    2)   அழுந்தி – உள்ளிறங்குதல், புதைதல், ஒட்டிக் கொள்ளுதல், நிலை கொள்ளுதல்.

    எனவே புகுந்து, அழுந்தி என்கின்ற இருசொற்களின் பொருளை உற்று நோக்கினால், ‘புகுந்தழுந்தி” என்று மகரிஷி அவர்கள் கூறும் உட்பொருளை புரிந்து கொள்ள முடியும்.

    முன் யோசனை இல்லாததால்,

    நுண்மாண் நுழைபுலனறிவு  இல்லாது – விளைவறியாது,

    பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புதைந்து கொள்ளுதலை,

    புதைகுழியில் விழுந்து தானாகவே எழுந்து வரமுடியாத நிலையோடு ஒப்பிடுவதாகத் தெரிகின்றது.

    புதைகுழியில் விழுந்தவர் வேறொருவரின் உதவியின்றி எழுந்து வர முடியாது. அதுபோல் இருளிலுள்ள இந்த சமுதாயம் மருள் என்கின்ற மயக்க நிலையில் ஏற்ற ஆசை, அதனால் வருகின்ற பழிச்செயல்களிலிருந்து மீள்வதற்கு, புதைகுழியில் விழுந்தவருக்கு உதவும் வேறொருவர் போல், மகரிஷி அவர்கள் விளக்கம் தந்து உதவுகிறார்.

    3)   புண்ணாகுதல் –

         உடல் உறுப்புகளில் புண் உண்டாவதை அறிவோம். உறுப்புகளில் சதை, இரத்தம் இருக்கும். அங்கே புண் உண்டாகும். புண் சரியாகவில்லையென்றால் சீழ் வரும். ஆனால் அரூபமாக இருக்கின்ற மனதில் எவ்வாறு புண் வரும்? புண்ணாகும் என்று கூறிச் சிந்திக்கச் செய்கிறார்   இங்கே மகரிஷி.

     

    4)   மனித மனம்

    ‘மனித மனம்’ என்று கூறியிருப்பதனை கவனிக்க வேண்டும். மனம் என்றே சொல்லியிருக்கலாம்.      ஆனால் மனித மனம் என்கிறார். மனம் இதமாக இருப்பவன் மனிதன் (மனம்+இதம்=மனிதன்). மனிதனுக்கு மனம் இதமாக இருக்கவேண்டும். மனம் ‘புண்ணாகி’ என்பது இதமாக இருக்க வேண்டிய மனம், இதமிழந்து இருப்பதனைக் குறிப்பிடுகின்றது.

       ‘இதம்’ என்பது சுகத்தைக் குறிக்கின்றது? எப்போது சுகம் கிடைக்கும் மனதிற்கு?

         மனம் இசைவாக இருக்கும்போது சுகம் கிடைக்கும். இசைவு என்பது ஒத்துப்போகுதல். அதாவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் தராமல் இருப்பதும், முடிந்தால் நன்மை செய்வதும்தான் இசைவும், ஒத்துப் போகுதலுமாகும். இதுவே இயற்கையின் நோ்மறை(positiveness) யாகும். ஆகவே மனதிற்கு சுகமளிக்கும்.

         அளவாகவும், அனுபவிக்கத் தகுந்த கட்டுப்பாட்டிலும் இருக்கும் மனம், இதமாக இருக்கும். மனம் எந்த ஒன்றையும் அனுபவித்தாலும், இன்பவியல் சூத்திரமான(formula) அளவையும், முறையையும் கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் இன்பமே துன்பமாகும் விந்தையினை சந்திக்க வேண்டிவரும்.

       ஆகவே உருவமில்லாத மனம் புண்ணாகுதல் என்பது, இசைவில்லாமலும், அளவையும்,    முறையையும் முறையே மீறுதலும், மாற்றுதலாகும்.

          பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் ஆகிய நான்கில் புகுந்து அழுந்தி மனித மனம் புண்ணாகி, இருளடைந்துவிட்ட வாழ்க்கையில் ஒளியைக்கொண்டு வர தனது விளக்கத்தினைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். புகுந்து அழுந்தி அனுபவிக்கும்போது இன்பவியல் (இன்பம்+இயல்) மறக்கப்படுவதால், இயற்கையின் இனிமை கெட்டு வாழ்வில் துன்பங்களே விளைகின்றன.

       இன்பவியல் என்பது என்ன? இன்பதுன்ப நிகழ்ச்சியினை வேதாத்திரியம் அறிவியல் அடிப்படையில் விளக்குவதால் இன்பதுன்ப நிகழ்ச்சியினை இயல் என்கிறோம்.

    மனிதனின் உறுப்புகள் இயங்குவதனை மருத்துவ இயலாகக் கொள்கின்ற போது,

    உறுப்புகள் இயங்குவதே இன்பம் அனுபவிப்பதற்கே என்றிருக்கும் போது,

    அந்த இன்பம் என்பது என்ன என்று இதுவரை மருத்துவ விஞ்ஞானம் கூறாத நிலையில்

    வேதாத்திரியம் இன்ப துன்ப நிகழ்ச்சியினை அறிவுபூர்வமாகக் கூறுவதால்

    இன்பதுன்ப நிகழ்ச்சியினை அறிவியலாகக் கருத வேண்டியுள்ளது

    வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களால்.

    இன்பவியலின் சூத்திரத்தை மட்டும் இங்கே நினைவு கொள்வோம். இன்பவியலை முழுவதுமாக   வேறொரு விருந்தில் விரிவாக அறிவோம். இன்பவியலின் சூத்திரம் என்ன?

    ஒன்று அளவை (limit) மீறக்கூடாது; மற்றொன்று முறையை (method) மாற்றக்கூடாது என்பதாகும்.

    துன்பத்திற்குக் காரணமான அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.

       இன்பம் அனுபவிப்பதில், இன்பவியல் முன்னரே தெரிந்திருந்தாலும் பழக்கத்தால் அலட்சியப்படுத்தினாலும், தெரியாதிருந்தால் அது அறியாமையாகி, இரண்டுமே மனிதஅறிவின் குறைபாடுகளாக இருப்பதால் இயற்கையின் இனிமை கெடுகின்றது. விளைவு – வாழ்வில் துன்பங்களாக விளைகின்றது.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(16-12-2015- புதன்) ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை அறிந்து கொள்வோம்.

     

     

     

     

     

     

     

     

     

     

    Loading

  • FFC – 143-புகழும் உயர்புகழும் – 7/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 7/?

    FFC – 143

    09-12-201-5 – புதன்

    இன்றைய விருந்தில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்துவது எவ்வாறு பேரின்பம் அடைவதை இழக்க வைக்கின்றது என்று அறிவோம். அதற்கு காந்த தத்துவத்தில் உள்ள இரண்டு பாடல்களையும் கவனிக்க வேண்டும்.

    காந்த தத்துவம்

    FFC-143-NEW- எல்லாப்புகழும் இறைக்கே

     

    மெய் உணர்தல் என்கின்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் பொருளல்லாதவற்றை பொருள் எனக் கொள்ளுதல்(குறள் எண். 351) மயக்க உணர்வு என்கிறார். அம்மயக்க உணர்வால் சிறப்பு இருக்காது. துன்பமே உண்டாகும் என்கிறார்.
    அதே போன்று மற்றொரு குறளில்(355) எப்பொருள் எத்தன்மையதாக, தோன்றினாலும், அப்பொருளின் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும் என்கிறார். இந்த அடிப்படையில்தான் பெரியபுராணத்தில் ‘ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ எனப்படுகின்றது. இது விரக்தியால் சொல்லப்படுவதன்று. ஓடு, செம்பொன் என்கின்ற இரண்டு பொருட்களும் தூல நிலையில் வேறு வேறாகத் தோன்றுகின்றது. ஆனால், சூக்குமத்தில் இரண்டும் அணுக்களால் ஆனதே. காரணநிலையில் இரண்டிலும் காந்தம் வெளிப்படுகின்றது. இந்த நிலையில் பொருள் கொள்ளும் போதுதான் எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றான் என்பது சரியாக இருக்கும்.
    அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தில் 423 வது குறளில் எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், அப்படியே எடுத்துக்கொள்ளாமல், சுயமாய்ச் சிந்தித்து அப்பொருளின் உண்மையான பொருளைக் காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர்(மானசீக குரு) வழி வந்த மகரிஷி அவர்கள் அதனை மேலும் நமக்குத் தெளிவாக்கியுள்ளார். பொருள், நிகழ்ச்சி என்றும், இயற்கையின் இரகசியம் எது என்றும் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.

    இயற்கையின் இரகசியம் எது என்று கூறும்போது மூன்றடுக்கு இயக்க நிலைகளான தூலம், சூக்குமம், காரணம் ஆகியவற்றில் சூக்குமமும், காரணமும் இயற்கையின் இரகசியங்கள். அதனை எந்த அளவிற்கு உணர்கின்றோமோ, அந்த அளவிற்கு வாழ்வில் பொறுப்புணர்ச்சியும் ஏற்படும் என்கிறார் மகரிஷி அவர்கள். இல்லாவிடில் திருவள்ளுவர் கூறியதுபோல் மயக்கத்திற்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    விஞ்ஞானத்தின் நோக்கம் என்பது இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றி அனுபவித்தலே. மெய்ஞ்ஞானத்தின் நோக்கம் அவ்வாறு இயற்கை வளங்களிலிருந்து மாற்றப்படும் வாழ்வின் வளங்கள் எல்லோருக்கும், எல்லாவற்றையும் போதுமான அளவில் கிடைக்கச் செய்து, எல்லோரும் இன்புற்று, உலகில், ‘அமைதி பூத்துக்குலுங்க’ வழி செய்வதே. அதற்கு மெய்ப்பொருள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் தெளிவாகிட வேண்டும். மெய்ஞ்ஞானம் அடைவதற்கான பயிற்சிகள் மட்டுமே உலகில் அமைதியினை ஏற்படுத்திவிடாது.

    720 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில். தனிநபர்கள் வெகு சிலர் மேற்கொள்ளும் மெய்ஞ்ஞானப் பயிற்சிகளால் மட்டுமே உலகில் அமைதி வந்துவிடாது. அப்பயிற்சிகளை செய்பவர்களுக்கு மட்டுமே அமைதி கிடைக்கும். மெய்ஞ்ஞானப் பயிற்சிகளை மக்கள் அனைவருமே மேற்கொள்வதில்லை. மேற்கொள்ளவும் இயலாது. ஆனால் உலகில் அமைதி நிலவிடவேண்டும். ஆகவே உலகில் அமைதி நிலவிட, மெய்ஞ்ஞானப் பயிற்சியின் நோக்கத்தையும் அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவையும் கருத்தில் கொண்டு சமுதாய வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு பலதிட்டங்களை தீட்டி ஒவ்வொன்றாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

    மகரிஷி அவர்களின் நோக்கம் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே. இதற்காக இரவு பகலாக சிந்தித்து மகரிஷி அவர்கள் உலக சமாதானத்திற்கான திட்டங்களைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இம்முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் உலக சமாதானப் பாடல்களுக்கு தானே விரிவுரை அளிக்க விரும்பி முதலில் தமிழில் விளக்கவுரையும், உலக சமாதானம் என்பது உலகத்திற்கு பொதுவானது என்பதால், பிறகு இரண்டாம் பதிப்பில் விளக்கவுரையை மட்டும் உலகப் பொது மொழியான ஆங்கிலத்திலும் அளித்துள்ளார்.

    காந்த தத்துவ நூலின் முகவுரையில் மகரிஷி அவா்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். “எந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தால் அதன் மூலம் இந்தப் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும் அறிய முடியுமோ, அந்த அறிவை உங்களுக்கு இப்போது கொடுக்கப் போகிறேன்” என முற்காலத்தில் அறிவை உணர்ந்த பேரறிஞர் ஒருவா் தன்னுடைய சீடர்களுக்குக் கூறியுள்ளதாகக் கூறுகிறார். அதுதான் பிரணவம் என்கின்ற சொல்லால் விளக்கிய காந்த தத்துவம் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே காந்த தத்துவம் பற்றிய கவிகளுக்கு மகரிஷி அவர்களே விளக்கவுரை நல்கியுள்ளார்.
    காந்த தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை’ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது?

          காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக, பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக் கூறும் ‘மனத்தூய்மை‘ என்கின்ற தலைப்பையுடைய பாடல் அமைந்துள்ளது.

    ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்கின்ற முதல் பாடலுக்கு மகரிஷி அவர்களே வழங்கியுள்ள விரிவான விளக்கவுரையை அவர் எழுதியுள்ள காந்த தத்துவம் என்கின்ற நூலினை படித்து விளங்கிக் கொள்வது அவசியமாகும். முதல் பாடல் எட்டு வரிகளைக் கொண்டதாக இருந்தாலும், மகரிஷி அவர்களே அவ்வரிகளுக்காகத் தந்துள்ள விரிவுரை 181 வரிகளில் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும். எனவே தத்துவ நூல்களையும், தத்துவக் கவிகளையும் படிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை (word to word) பொருள் கொள்ளக் கூடாது. வரிகளுக்கு வரி பொருள் கொள்ளக்கூடாது. வரிகளுக்கு இடையேயும் பொருள் கொள்ள வேண்டும் (We must read in-between lines)

    அவ்விரிவுரையில் மகரிஷி அவர்கள், தான் இறையுணர்வு பெற்றதை படிப்படியாக விளக்குகிறார். நம்முடன் மகரிஷி அவர்கள் நேராக பேசுகின்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒருவேளை, வேறு யாராவது விளக்கவுரை தந்திருந்தால் மகரிஷி அவர்களின் சொந்த இறையுணர்வு அனுபவம் விடுபட்டே போயிருக்க வாய்ப்புண்டு.

    மகரிஷி அவர்கள் அவரது விளக்க உரையில், எவ்வாறு காந்த தத்துவத்தில் அவர் தெளிவு பெற்றார் என்பதனைக் கூறுகிறார், ஆக்கினைத் தவமும், துரிய தவமும் ஆழ்ந்து செய்யச் செய்ய தனக்கு சக்திகள தவம், சிவகளத்தவம் இரண்டும் உள்ளுணர்வாக உருவானதைக் கூறுகிறார். அதனால்தானே அவரது மனவளக்கலை பயிற்சியில் சக்திகள தவமும், சிவகளத்தவமும் இடம் பெற முடிந்தன. இது இயற்கை/இறையின் ஏற்பாடன்றோ!

    இவ்விரண்டு தவங்களினால் , பொருள், புகழ், இன்பம், செல்வாக்கு ஆகிய நிலைகளில் அலைச் சுழல்களாக இயங்கிக் கொண்டிருந்த மனம் இருப்பு நிலையான அமைதிக்கு வந்து நின்ற அனுபவம் பெற்றதாகக் கூறுகிறார், இந்த அனுபவத்தைக் கொண்டு நிலைக்கும், அலைக்கும் இடையே அவரது ஆராய்ச்சி தொடர்ந்ததாகக் கூறுகிறார், அதன் விளைவாக நிலையானது அறிவும் என்றும், அதுவே அலைநிலையில் மனமாக இயங்குகின்றது எனவும் விளக்கம் பெற்றார் என்கிறார், பிறகு காந்தம் உருவாவது பற்றியும். அந்த காந்த ஆற்றலின் தன்மாற்ற விளைவுகளே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மனம் என்கின்ற ஆறு உண்மைகளைத் தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

    இறையே தனது துண்டுபட்ட பகுதி நிலையில் (fractionated state) பிரபஞ்சத்தில் இயங்கும் எல்லாப் பொருட்களாகவும் இருப்பதால் இறையின் தன்மை அனைத்தும் ஒவ்வொன்றிலும் இருப்பதை உணர்ந்ததாகக் கூறுகிறார், இறையே எல்லாமாகவும் இருப்பதால் அணு முதல் அண்டங்கள் வரை நெறி தவறாமல் இயங்கி வருவதை உணர்ந்தார், இந்த உண்மையினை உணர்ந்து உணர்ந்து அதில் லயமாகும் போதெல்லாம் அந்த மனநிலையே தனக்கு உயர்ந்த தவமாக அமைந்தது என்கிறார், மனதின் அடித்தளமாக விளங்கும் இறைநிலையை உணர்ந்த அந்த விழிப்புநிலையை பேரானந்தம் என்கிறார்.

    ஆகவே முதல் பாடலுக்கான விளக்கவுரையை காந்ததத்துவ நூலில் கட்டாயமாக வாசித்துப் பயன் பெறவும்.
    அடுத்த அறிவிற்கு விருந்தில்(13-12-2015) மேலும் சிந்திப்போம்.

    Loading