இன்றைய விருந்து

  • அ.வி. 138-எல்லாப் புகழும் இறைக்கே! –2/?

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    எல்லாப் புகழும் இறைக்கே! –2/? 

    அ.வி. 138

    22-11-2015 – ஞாயிறு

    FFC-138-குறள் எப்பொருள்

     

    இன்றைய சிந்தனையை திருவள்ளுவரின் அறிவாற்றலின் துணையுடன் துவங்குவோம்.

    குறள் 351 – விளக்கம்—

    மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.

    குறள் 423 – விளக்கம்—

    எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் உண்மையானப் பொருளைக் காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர்.

    மேற் கண்டுள்ள இரண்டு குறட்பாக்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது, மனிதன் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் பொருள், மெய்ப்பொருள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமலிருக்கும் அறியாமையேயாகும். அறிந்தாலும் அறிந்தபோது அறிந்ததோடு சரி, அத்துடன் அறிந்தது மறக்கப்பட்டுவிடும். அறிந்தது செயலுக்கு கொண்டுவரும்போதுதான் பயன் கிட்டும். அறியாமை என்கின்ற குறைபாடு அறிவிற்கு இருந்தால் துன்பம்தான் வரும். ‘பொருள்‘, ‘மெய்ப்பொருள்‘ வித்தியாசம் எந்த அளவிற்கு அறியப்படுகின்றதோ அந்த அளவிற்கு பற்றுக்கள் நீங்கிவரும். பற்றற்றே கண்ணே பிறப்பறுக்கும். பேரானந்தத்தின் திறவுகோல்கள் இரண்டு உள்ளன.

    FFC-138-பேரானந்தத்தின் திறவுகோல்கள

    இது பற்றி விரிவாக ஞானக்களஞ்சியத்தில் ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவி எண். 1849 இல் அறியலாம். அக்கவியில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்த பேரானந்த நிலைகளை நான்கு படிகளில் கூறியுள்ளார்.

    ffc-137- இன்பம் இன்பம் இன்பம் இன்பம்

    பொதுவாக அறிவிற்கு விருந்து என்பது, பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (Fractioned) மனித அறிவுடன், பரிணாமக்கசடால் குறைகள் வந்து சேர்ந்து விட்டதால் குறைகள் நீங்கி மனிதஅறிவு, முழுமை அடைவதற்கு, அது அறிய வேண்டியதை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அறிந்து விட வேண்டும். அப்போதுதான் மனித குலத்தில் இப்போதுள்ள பெருந்துயர நிலை நீங்கி நிரந்தர அமைதி ஓங்கும்.

    அப்படியானால் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது, ‘தான்’, ‘சமுதாயம்’, ‘இயற்கை’ ஆகிய மூன்றின் இணைப்பில் நடக்கின்றது. எனவே அறிவிற்கு விருந்தாவது இந்த மூன்றைப்பற்றிய தகவல்களும் சிந்தனைகளுமேயாகும். ஆகவே இன்றைய சிந்தனைக்கான தலைப்பு ‘புகழும் உயர்புகழும்’ என்றிருந்தாலும் ‘பொருள் மெய்பொருள்’ என்பது இயற்கையைப் பற்றியது என்பதால் அதனைச் சற்று சிந்தித்து விட்டு தலைப்பிற்குள் செல்வோம். தலைப்பை விட்டு வெளியே சென்றுவிடுவதாக நினைக்க வேண்டாம்.

    மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது? பொருள் என்பது புலன்களால் உணரப்படுவது. ஆனால், பொருட்கள் உண்மையில் பொருட்களல்ல என்கின்றது மெய்ஞானம். வேதாந்திகள் அவர்களுக்குத் தெளிவாகிய நிலையில் துணிந்து. இந்த உலகம் பொய்யானது(the world is unreal) என்று கூறுகின்றனர். காணும் உலகம் ஒரு கனவே என்கின்றனர். மாயை என்கின்றனர். இக்கூற்றை சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. காண்பது எவ்வாறு பொய்யாக முடியும் என நினைக்கத்தானே தோன்றும்! ஆனால் சுத்தஅத்வைதத் தெளிவு வர வர ஏன் வேதாந்திகள் ‘உலகம் பொய்யானது’ என்று அவ்வாறு கூறுகின்றனர் என்பதும் தெரியவரும்.

    இதனை வேதாத்திரிய மெய்ஞ்ஞானமமோ அறிவுபூர்வமாக விளக்குகின்றது. வேதாத்திரியமும் ‘பொருள் பொருளல்ல’ எனக்கூறுகின்றது. ஆனால் காரணம் கூறுகின்றது.

    எந்த தோற்றமே இல்லாத ஒன்றிலிருந்து பொருள் எனப்படும் தோற்றம் உருவானதோ,
    அந்த மூலமான, தோற்றமே இல்லாத ஒன்றுதான் பொருள் என்றும்,
    அதுவே உண்மையான பொருள் என்றும் கூறுகின்றது.
    அதற்கும் வேதாத்திரியம் கூறும் காரணத்தை அறிவோம்.
    பொருள் என்பது நிகழ்ச்சிதானே தவிர அவை பொருளல்ல என்கின்றது வேதாத்திரிய மெய்ஞானம்.

    முதலில் பொருளை நிகழ்ச்சிதான் என ஏற்றுக்கொண்டால் பொருள் பொருளல்ல என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியும்.

    பொதுவாக நிகழ்ச்சி என்பது நிகழ்வைக் குறிக்கும். நிகழ்ச்சி என்பது தொடங்கி முடிவுக்கு வரும். உதாரணத்திற்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம். நாடகம் என்பது நிகழ்ச்சி. ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும். அது போல் பொருள் நிகழ்ச்சி என்றால் காணப்படுகின்ற பொருள் முடிவுக்கு வந்து விடுகின்றதா? எந்தப் பொருளும் தோன்றி மறையக் கூடியதே. மாற்றமே நிலையானது என்கின்றது (Change alone is permanent) விஞ்ஞானம். அதாவது எதுவுமே இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் அல்ல. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே மாறிக்கொண்டிருப்பதுதான் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கின்றது இந்தப் பிரபஞ்சத்தில். மாறிக் கொண்டிருப்பதை நிகழ்ச்சி என்கின்ற பெயரால் கூறினால் என்ன?

    தோற்றத்திற்கு ஆரம்பம் இருப்பது போல் முடிவும் உண்டு. உதாரணத்திற்கு மலரை எடுத்துக் கொள்வோம், அது பொருளா, நிகழ்ச்சியா? மலரை நிகழ்ச்சி என்கிறார் மகரிஷி அவர்கள். பருப்பொருளாக இருக்கின்ற மலர் நிகழ்ச்சி என்றால், மலர் எங்கே நிகழ்ச்சியை ஆரம்பித்தது. அது எப்போது முடியும்? இதுபோன்ற வினாக்கள் எழலாம். அது தோற்றத்துடன் தானே இருக்கின்றது! காலையில் பூத்த மலர் மாலையில் வாடிவிடுகின்றதே! மலர்ந்தது வாடியது நிகழ்ச்சியில்லையா? மலர்ந்த போது அது தோன்றி நிகழ்ச்சியை ஆரம்பித்தது. வாடியபோது மலர் என்கின்ற நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது. வாடி, மலரானது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சருகாகி மலரே காணாமல் போய்விடுகின்றது. பருப்பொருளாக இருந்த மலர் என்னவாயிற்று?
    மலர் பருப்பொருளாக இருக்கும்போது அணுக்களின் கூட்டாக இருந்து தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது, மலர் வாடி காய்ந்து சருகாகி மறைந்ததும் அணுக்களின் அமைப்பே கலைந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் மேடையில் இருந்த நடிகர்கள் அங்கு இல்லை அவர்களெல்லாம் கலைந்து தங்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர். மேடை வெற்றிடமாகி விட்டது. எனவே இந்த மலர் என்கின்ற சரித்திரத்தை நாடகத்துடன் ஒப்பிட்டு, மலர் வழியே விளங்கும் மறைபொருள் என்கின்ற தலைப்பில் நான்கு அடிகளைக் கொண்ட பன்னிரண்டு செய்யுட்களை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அதில் நாம் நான்காவது செய்யுளை இங்கே நினைவிற்கு கொண்டு வருவோம்.

    FFC-138- பரமணுக்கள்

    48 அடிகளைக் கொண்ட இப்பாடலின் வழியாக மலருக்கும் மனிதனுக்கும் இடையே உரையாடலாக ஆக்கி மலர் தன்னுடைய சரித்திரத்தை மனிதனுக்கு கூறுவதாக அமைத்து, சுத்தஅத்வைத தத்துவ விஞ்ஞானத்தை எளிமையாக்கி குழந்தைகள் பாடுவதற்கு எளிதாகவும், சிறுவர், சிறுமியர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியும் இயற்கையும் இறையையும் ஒன்றே எனக் கூறுகிறார். இதைவிட வேறு எவ்வாறு அரூபமான இறை தன்னுடைய சரித்திரத்தைக் கூறமுடியும்? இதுவரை உலக ஆன்மீக வரலாற்றில் இயற்கை/இறை ஏற்படுத்தாத திருப்புமுனையை இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக ஏற்படுத்தியுள்ளது.

    வருங்காலத்தில் இப்பாடலை குழந்தைகளெல்லாம் பாடிக்கொண்டிருப்பார்கள் எனக் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? இயற்கையின்/இறையின் சரித்திரத்தை மிக எளிதாக விளங்கிக்கொள்ளும் நிலையை சமுதாயம் விரைவில் பெற்றுவிடும் என்பதுதான் பொருள். இது தானாகவே நடந்திடாது. ‘Fraction demands, Totality supplies’. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்று கூறுவது போல் இயற்கையின் சிகரமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் மனிதன் அதனை பயன்படுத்த வேண்டும்.

    ஏனெனில் ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்றிருக்கும் போது மகரிஷி அவர்களைத் தரிசிக்கின்றவர்கள் அனைவருமே அவரது சிந்தனாப்பள்ளியிலே மாணவர்களாகி நீடித்தால் அந்த பொன்னாள் நிறைவேறும் காலம் அருகிவிடும். எனவே மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது. அப்படியானால் என்ன அர்த்தம்?

    அடுத்த விருந்தில் புதனன்று (25-11-2015) வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களுக்குள்ள கடமையையும் பொறுப்பையும் என்னவென்று சிந்திப்போம்.

    இன்றைய விருந்தின் சுருக்கம்:

    1)   பொருள், மெய்ப்பொருள் பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிந்து கொண்டோம்.

    2)   பேரானந்தத்தின் இரண்டு திறவுகோல்கள்.

    3)   மகரிஷி அவர்கள் பேரானந்தத்தை எவ்வாறு நான்கு படிகளில் (கண்டுபிடித்தல் இரண்டு-செயல்படுத்துதல் இரண்டு)எய்தினார்.

    4)   மலர் ஒரு பொருளல்ல. நிகழ்ச்சியே! பிரபஞ்சிம் எனும் மேடையில் மலர் என்கின்ற நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • எல்லாப் புகழும் இறைக்கே!  –1/?

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    எல்லாப் புகழும் இறைக்கே!  –1/?

    அ.வி.137

    18-11-2015 புதன்

     

    FFC-137- new-எல்லாப்புகழும் இறைக்கே

    எல்லா சிறப்புகளும், பெருமைகளும் புகழும் இறைக்குத்தானே சொந்தம்?!  சந்தேகமா?

    ஐந்தறிவு வரை புகழ் யாருடையது என்கின்ற பிரச்சனை, அவற்றிற்கு எழவில்லை. இயற்கையின் சிறப்பும் புகழும் ஐந்தறிவு சீவ இனங்களுக்குத் தெரியாது. எதற்காக, தானே ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்ததோ, அது நிறைவேறுவதற்கு  வாய்ப்பு கிட்டாத நெடுங்கால நிலையில், ஆறாம் அறிவு, தன்னுடைய மூலம் தெரியாமல், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதால், ஐவகைப் பற்றுக்களில் ஒன்றாகிய  புகழ்-பற்றில் மூழ்கி, ‘‘புகழ் யாருடையது? என்னுடையதா, இறையினுடையதா?’ என்கின்ற   தன்முனைப்புச் சிக்கலில் அல்லலுருகின்றது.  தவிக்கின்றது.

    FFC-137-அவன் யார் நீ யார்- படம்

    என்கின்ற வேதாத்திரிய உண்மை சமுதாயத்திற்கு  ஞானத்தெளிவாகும் வரை புகழ் யாருடையது? என்கின்ற தன்முனைப்புப் பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே சமுதாயத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.

         இருப்பினும் இறை-உணர் ஆன்மீக சாதகர்களாவது இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்.  ஏனெனில் மெய்ப்பொருளை உணர்வதற்கான பயிற்சியினை செய்து கொண்டு வரும்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் மனதில் வாசம் செய்து கொண்டிருந்தால், கருத்தியலாக தெரிந்தது கருத்தியலாக இருக்குமேயன்றி, செய்முறையில் தோ்ச்சி பெறுவது இயலாததாகிவிடும்.

     அறிவியாலாளர்/விஞ்ஞானியைப் பற்றிய ஓரு ஆங்கிலக்கூற்று ஒன்று உண்டு. —

    ‘He who knows Science is not a Scientist; but person who knows Science and lives scientifically alone is a Scientist.’   Similarly a person who knows Spiritualism is not Spiritualist but a person who knows Spiritualism and lives spiritually alone is a True Spiritualist.

       What is required for the Society?  Spiritualism or Spiritual Evolution? Spiritual evolution is essential and required. Spiritual evolution is for harmonious living in Society. That is – manly living – finally Godly living is essential in order to enjoy hereditary wealth of Peace.

    Knowing Spiritualism alone will not be beneficial to life.  But being a True Spiritualist/Living spiritually is  certainly  a boon  to life.

       அறிவியல்/விஞ்ஞானம் தெரிந்தவர் அறிவியலாளர்/விஞ்ஞானி அல்ல. அறிவு பூர்வமாக வாழ்பவரே அறிவியலாளர்.  அதுபோல் ஆன்மீகம் தெரிந்தவர் ஆன்மீகவாதியல்ல.  ஆன்மீகம் தெரிந்து ஆன்மீகவாதியாக வாழ்பவரே  உண்மையான ஆன்மீகவாதி.  சமுதாயத்திற்கு என்ன தேவை?  ஆன்மீகம் தெரிந்திருத்தலா அல்லது ஆன்மஉணர்வு பரிணாமம் தேவையா?  ஆன்மஉணா்வு பரிணாமம் தான் அவசியமாகவும், தேவையுமாக உள்ளது. பரிணாமம் ஆன்மஉணர்வு நிலைக்கு எட்டவில்லை.  அதனால்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும்,  தத்துஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன்  “பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை” என்றார். ஆன்மஉணா்வு பரிணாமம் என்பது சமுதாயத்தில் இணக்க வாழ்விற்கு அவசியமாக உள்ளது.  அதாவது மனிதன் மனிதனாக வாழ ஆரம்பித்து, தெய்வமாக வாழ்வதாகும்.  இதன் மூலம்தான் மனித குலம் தனது  பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவிக்க முடியும்.

        ஆன்மீகம் தெரிந்திருப்பது மட்டுமே வாழ்க்கைக்கு பயன் தராது.  ஆனால் உண்மையாக ஆன்மீக வாழ்க்கை — மனிதனாக — நல்லவனாக வாழ்வதென்பதே  இறைவன் கொடுத்த வரமாகும்.

        வாழ்வியலுக்கு  வேண்டியதையெல்லாம் 133 அதிகாரங்களாக வகுத்து அவற்றில்  எடுத்து இயம்பியுள்ள திருவள்ளுவர், ‘தெரிந்து கொண்டதற்கு’ — கற்றதற்கு   சான்று என்ன என்று சொல்லாமலா இருப்பார்?!   என்ன சொல்லியிருக்கிறார் என்று ஆராய்வோம். ஆராய்ந்ததில் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களை எடுத்துக் காட்டுகிறார்.  முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இரண்டாவது குறளிலும். அடுத்து,  ‘கல்வி’ என்கின்ற அதிகாரத்தில் முதல் குறளிலும்  கூறியிருக்கிறார்.

    கற்றதனா லாய பனனென்கொல் வாலறிவன்

    நற்றால் தொழாஅர் எனின்.                  …. குறள் -2

    விளக்கம்:— தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்? எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.  தெளிவான ஆன்மீகம் தெரிந்து கொண்டு அதுபோல் வாழாமல் இருப்பதனால் என்ன பயன் எனக் கேட்கிறார்.

    கற்கக் கசடறக்  கற்பவை கற்ற பின்

    நிற்க அதற்குத் தக.                      …. குறள் 391

     விளக்கம்:– கற்கத்தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்றதற்கு-தெரிந்து கொண்டதற்கேற்ப நெறியில் வாழ வேண்டும்.  அந்த நெறிதான் ஆன்மீகம்.  ஆன்மீகத்தை சந்தேகமில்லாமல் கற்க வேண்டும்.  கற்ற பிறகு கற்றதற்கேற்ற நெறியில் வாழ்வதே சிறந்த ஆன்மீகமாகும். அவரே சிறந்த வாழ்வியலாளராவார் என்கிறார்.

        புகழ் யாருடையது பற்றி ஓர் உதாரணத்தின் மூலம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஒரு குடும்பத்திலுள்ள பெண்ணின் திருமணம் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகளின் சரீர ஒத்துழைப்பாலும்  மற்றும் அவா்கள் ஈட்டிய  பொருளைக் கொண்டும் மிகச்சிறப்பாக நடந்தேறியது என்று வைத்துக் கொள்வோம். உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள் எல்லோரும் என்ன கூறுவர்?  அக்குடும்பத்தலைவரின் பெயரைச் சொல்லி ‘அவர் தன் மகளுக்கு மிகச்சிறப்பாகத் திருமணம் நடத்தினார்’ என்று சொல்வதுதானே இயல்பு.  அதனை விட்டுவிட்டு தந்தை இருக்கும் போது, அந்த ஆண்பிள்ளைகளின் பெயர்களைச் சொல்லியா  ‘சகோதரர்கள் தங்களின் தங்கைக்கு மிகச்சிறப்பாகத் திருமணம் நடத்தினார்கள்’ என்றா சொல்வார்கள்! சகோதரர்கள்தான்  தங்களைப் பற்றி இவ்வாறு சொல்வதை விரும்புவார்களா?   அதுபோல் இயற்கையின்/இறையின் அரசாட்சி என்கின்ற தொடர் நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.  அதில் மனிதன் ஒருநீர்குமிழ் பாத்திரம் தான். இயற்கையின்/இறையின் கருவியாகத்தான் மனிதன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.  இது தெள்ளத்தெளிவாகி விட்டால் ‘புகழ் யாருடையது’ என்கின்ற தன்முனைப்புப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிடும்.

         ஒரு செயலால் வருகின்ற புகழை அது இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுவது சிறப்பா?  அல்லது அப்புகழ் தன்னுடையது என்பது சிறப்பா? இறைவனுக்கு கீழ்படிதலாக சொல்வதல்ல ‘புகழ் இறைவனுடையது’ என்று.  அப்புகழை ஏற்படுத்தக் கூடியச் செயலை செய்வதற்கான சந்தர்ப்பம் யார் ஏற்படுத்தியது?  தான்-நான் யார்? தான்- தனது எங்கிருந்து வந்தன?

        உடல் பலமும், அறிவுபலமும் யார் கொடுத்தது? யாருடையது? அப்புகழுக்கான செயலை சமுதாயத்திற்கு செய்வதற்காக இறை திட்டமிட்டு,  ‘அதன் பணியை நிறைவேற்றத் தன்னை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதே இறை’ என்று நினைப்பதில் பெருமையா, சிறப்பா, மகிழ்ச்சியா?

         புகழ் ஏற்படக்கூடிய சமுதாயத்திற்கானச் செயலை நிறைவேற்றுவதற்குக்  கருவியாக ஒர் ஆன்மாவை இறை  தேர்ந்தெடுக்கின்றது  என்றால் என்ன பொருள்?  அந்த ஆன்மா இறைக்கு நெருக்கமாகி வருகின்றது என்று பொருள்.  அல்லது நெருக்கமாகிவிட்டது என்று பொருள். அதாவது இறையும் அந்த ஆன்மாவும் ஒன்றாகிவிட்டது என்று பொருள்.  தந்தைக்கு புகழ் என்றால் நமக்கும் தானே.  பின்னர் ஏன் கவலை?  புகழ் எனும் மாய வலையில் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்?  எனவே இன்றையச்சிந்தனையில் ‘புகழ்—உயர்புகழ்’ பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

     புகழும் உயர்புகழும்:

      புகழ் என்பது எதனைக்குறிக்கின்ற சொல்? புகழ் என்பது பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலையைக்(fame, renown) குறிக்கும் சொல்.  பெருமை(glory, praise) என்றும் பொருள்.

       புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயா்ந்தது என்றால், எதனைச் சொல்ல முடியும்?   அதிகாரி, உயர் அதிகாரி என்கின்ற இருவரில் யார் உயர்ந்தவர் என்றால், உயர்அதிகாரி உயர்ந்தவர் என்று சொல்வோம். அதுபோல், புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயர்ந்தது,  என்றால் பொதுவாக, உயர்புகழ் உயர்ந்தது என்போம்.  எப்படி? ‘உயர்’ என்பது பல நிலைகளாகப் பகுக்கக்கூடியதில் மேலாக உள்ளதைக்(higher in grades or in hierarchical set up) குறிக்கும் பெயரைடைச் சொல்.  உதாரணத்திற்கு உயா்படிப்பு. அதுபோல்,  ஒன்றின் உயர்ந்த நிலையைத் தெரிவிக்க  ‘உயர்’ என்பதனைச் சேர்த்து சொல்வது போல் ‘புகழ்’ என்கின்ற சொல்லுடன் ‘உயர்’ என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ எனப்படுகின்றது வேதாத்திரியத்தில்.

       புகழ், உயர்புகழ் என்கின்ற இரண்டில் எது உயர்ந்தது என்கின்றபோது உயர்புகழ்தானே உயா்ந்தது என விடை வரும்.  ஆனால் புகழ் இறைக்குரியது, உயா்புகழ் மனிதனுக்குரியது என்கின்ற போது இறையைவிட மனிதன் உயர்ந்தவனா என்கின்ற ஐயம் வந்து வந்துவிடுகின்றதா? ஏன் இந்த குழப்பம்?

       ‘புகழ்’ என்கின்ற சொல், ஏற்கனவே உள்ளதை எல்லோருமே அறிவர். அதாவது, ‘உயர்புகழ்‘ எனும் சொல் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ‘புகழ்‘ எனும் சொல் உள்ளது. ‘புகழ்’ ‘உயா்புகழ்’ ஆகிய இரு சொற்களில் முதலில் தோன்றியது புகழ் எனும் சொல். எனவே முன்னரே இருந்த ‘புகழ்’ என்கின்ற சொல், மனிதனுக்கு முன்னரே  இருக்கின்ற  இறைக்குரியதாகிவிட்டது,  ஆனால் இறைக்குரிய புகழை மனிதன் அறியாமையில் தனதாக்கிக் கொள்கிறான்.  புகழ் என்பது எப்படி மனிதனுக்குரியதாகும்?

       பல பிறவிகளாக  அறிவு (ஆன்மா) தன் மூலத்தை மறந்திருக்கின்றது.

       தன்மூலத்தினுடான (இறையுடனான)  பிணைப்பை மீண்டும் நிரந்தர நினைப்பிற்கு கொண்டு வருவதற்காக எடுத்த  இந்தப்பிறவியிலும்,

       அறியாமையில் புகழை தனதாக்கிக் கொள்ளும்போது, அறிவு (ஆன்மா,) தன்னை இறையிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ளவே செய்கின்றது.

       இறையே நாமாக இருக்கின்றது என்கின்றபோது இறைக்கு புகழை உரித்ததாகக் கூறுவதில் நாம் குறைந்து விடப்போகிறோமா?  மாறாக பேரானந்த நிலைக்கு செல்வதற்கு அதுதான் திறவுகோல். (மனிதன் கூறினாலும் கூறாவிட்டாலும் புகழ் இறைக்குரியதுதான்.) ஆகவே சம்பிரதாயத்திற்காக புகழ் இறைக்குரியது என்று கூறப்படவில்லை.   இறையாகிய ஒன்றுதானே எல்லாமாக ஆகியுள்ளது. எனவே எல்லாப் புகழும் அந்த ஒன்றாகிய இறைவனுக்கேதான்   என்பதுதான் சரி.

       ஆகவே புகழ் என்கின்ற சொல் ஏற்கனவே உள்ள நிலையில், வேதாத்திரியத்தில் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது ‘உயர்புகழ்’ எனும் சொல்.

       நடைமுறையில், இறைக்குரிய புகழை, அறியாமையில் மனிதன் தனது என நினைத்துக் கொண்டிருப்பதாலும், இருப்பினும், திருவள்ளுவர் புகழ் மனிதனுக்கு அவசியம் என கருதியதுபோல், மனிதனுக்கென்று புகழும் அவசியம் எனக்கருதி, ‘புகழ்’ என்கின்ற சொல்லோடு “உயா்” என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது வேதாத்திரியத்தில்.

       உயா்புகழை, மனிதனுக்கு அவசியமான ஐந்து வளங்களில் ஒன்றாகக் கருதி நான்காவது வளமாகச் சோ்த்து  உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன் என்கின்ற  சங்கல்பத்தை தினந்தோறும் தவத்தின் முடிவில் இயற்றச் சொல்லியிருக்கிறார்  வாழ்வியலாளரும், மெய்ஞானியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       மெய்ஞானத்தில் ‘மெய்ப்பொருள்’ ‘பொருள்’ என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல் வேதாத்திரிய மெய்ஞானத்தில் ‘புகழ்’ ‘உயர்புகழ்’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  ‘புகழும் உயர்புகழும்’ என்கின்ற நம்சிந்தனையில் மெய்ப்பொருள், பொருள் ஆகிய இரண்டும் குறுக்கிட்டு விட்டதால்,  இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு இப்போது ‘பொருள்’ ‘மெய்பொருள்’ பற்றியும் சிறிதளவு சிந்தித்துவிடுவோம்.   பொருள், மெய்ப் பொருள் பற்றியத் தெளிவு மனிதனுக்கு மிக மிக அவசியம்.  அதனை அடுத்த விருந்தில் – வருகின்ற ஞாயிறன்று(22-11-2015) சிந்திப்போம்.

    Loading

  • FFC – 136-வாழ்வில் தேறிடுவோம் – 2/2

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    வாழ்வில் தேறிடுவோம் – 2/2

    FFC – 136

    15-11-2015 – ஞாயிறு

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

    அருட் பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தது.

    “இது வரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ……………………….
    ……………………………………………………………………..
    இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்தி விடுவோம். அஞ்சவேண்டாம்.” என்றார்.

    வள்ளலார். தன் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவிட்டதை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஊனுடம்பு ஆலயத்தில் பத்து வருடங்கள் தங்கி இருந்து முடித்துக் கொண்டார்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்து, நம்மிடையே அருட்தந்தையாக இருந்து உறவாடி, இன்றும் அவரது அறிவாற்றலின் வாயிலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற வேதாத்திரி மகரிஷி அவா்கள் என்ன கூறுகிறார் என்றும் பார்ப்போம். உலக மக்களுக்கு 1970 ஆண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பு விடுத்து நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த அழைப்பைப் பற்றி நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இருந்த நிலையிலே, நம்மெல்லோரையும் அவரிடம் கொண்டு வந்து சீடராக்கியுள்ளது இயற்கை/இறை. இது இறையின் புனித திட்டமும், ஏற்பாடும் ஆகும்.
    1823 ல் அவதரித்த அருளாளர் வள்ளலார் “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.” என்றார்.
    1911ல் அவதரித்த அருளாளர் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர் ! *” என்கிறார்.
    முதலில் அவதரித்த அருளாளர் கூறுவதை சற்று சிந்தித்து பார்ப்போம். ஒருவர் கூட தான் கூறுவதை நம்பி எழுந்து திறத்தில் திகழ்வதற்கு ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார்,

    எழுந்து என்றால் ‘விழித்தல்‘ என்று பொருள் கொள்ள வேண்டும்.
    திறம் என்பதற்கு பொருளாக “மனிதனில் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவது” என்று கொள்ள வேண்டும்.
    ‘திகழ்தல்’ என்றால் பிரகாசித்தல், பொலிவுடன் இருத்தல், சிறப்புடன் இருத்தல், விளங்குதல் என்று பொருள். விளங்குதல் என்றால் புரிதல். தெரிதல் என்று பொருள். ஆகவே “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்றால்
    மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றல் விழிப்புற்று சிறப்புடன் தெய்வீகத்தை விளங்கச் செய்பவர் யாரும் இல்லை என்று ஆதங்கப் பட்டார். ஆனால் அத்தோடு இருந்து “அஞ்ச வேண்டாம்” என சமாதானம் கூறி அனைவரையும் திருத்தி விடுவோம் என்கிறார்.
    அவ்வாறே 1911ல் அவதரித்த அருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற்றுய்வீர் ! ” என்கிறார்.
    “இன்றேனும் விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்” என்றால் “இதுவரை எழுச்சி இல்லாமல் மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் தெய்வீக ஆற்றல் இன்றாவது விழிப்பு பெற்று உய்வீர் என்கிறார்.

    anbargale vaareer-THAI

    1874 ல் வள்ளலார் எண்ணியது, 1953 ல்(1911+42=1953) நிறை வேறியது. இராமலிங்க சுவாமிகள் எண்ணிய, மக்களைத் திருத்தி விடும் படலத்தை, இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, அரியக்கலையாக இருந்து வந்து அகத்தவத்தை பரவலாக்கி, மனிதனை திருத்தும் முகமாகத்தான் அகத்தாய்வு பயிற்சியினையும் உருவாக்கி கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது.
    இராமலிங்க சுவாமிகள் எண்ணியது, இறை எண்ணியதுதானே!. ஆக மொத்தத்தில் அறிவை அறிந்தவர்கள் ‘இவ்வுலக மக்கள் திருந்தி உய்வதற்கு வழியே இல்லையா’ என எண்ணியதற்கிணங்க, “Fraction demands. Totality supplies” என்கின்ற தன்னுடைய நியதிப்படி, இயற்கை/இறை தன் திரு விளையாடலை வேதாத்திரியத்தின் வழியாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட மனிதகுலம் அறிவாகிய ஒழுங்காற்றலை பயன்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்நாளில் அறிய வேண்டியதை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிறவியினை அளிக்கின்றது இயற்கை.
    மனிதன் அறிய வேண்டியதை எல்லாம் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை கிடைக்கும் போது அறியப்பட்டுவிடும். அவையாவன:

    1) இறை அரூபம். அளப்பரிய ஆற்றல்
    2) இறை பேராற்றலாக, தூய அறிவாக(பேரறிவாக), வற்றா இருப்பாக, காலமாகவும்(Time), இருக்கின்றது.
    3) தன்முனைப்பில்லா நான் (Egoless I) அதாவது அறிவுடைமையுள்ள நான் கண்டுபிடிக்கப்படும். மனிதனிடமுள்ள (நானில்) உடல், உயிர், அறிவு ஆகிய மூன்றில் நானாக இருப்பது அறிவே என்றும், அதே அறிவு இறையாகும் என்றும், அறிவை அறிந்த நானே தன்முனைப்பு அற்ற நானாகும்.
    இந்தவிளக்கத்தைப் பெறாத, பெற்று நடைமுறைக்கு கொண்டு வராத நான்கள் தன் முனைப்புள்ள நான்களாகும்.
    4) பிற மனிதர்களிடமும் உள்ள அறிவும், இறையே, 720 கோடி உலகமக்களும் வெவ்வேறு நான்கள் இல்லை. ஒரே, ஆனால், உடலளவில் தனித்தனியாகவுள்ள நான்கள். உலக மக்கள்
    ஒரு மாபெரும் குடும்பம். ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிகளே.
    5) பிற உயிர்களிடம் உள்ள (தாவரங்கள் முதல் விலங்கினங்கள் வரை) உயிரும் சரி, அறிவும் சரி இறையே. இறையே உயிர்களுக்கெல்லாம் உயிராக திகழ்கிறான்.
    6) சடப் பொருட்களிலும் அணுவாக இருப்பதும், அணுவின் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதும் ஒழுங்காற்றலாகிய அறிவாகிய இறையே.
    7) அத்வைதம் தெளிவாக விளங்கிவிடும். ஒன்றே எவ்வாறு பலவாறாக இருக்கின்றது, இருக்க முடியும் என்கின்ற சந்தேகமும் விளங்கிவிடும்.
    8) வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பது அறியப்படும்.
    9) கோடனு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு அப்பால் எல்லையில்லாத அளவிற்கு விரிந்து உள்ள வெளியே (அப்பாலுக்கு அப்பாலாய்) இறையே என அறியப்படும். அது அறிவாக இருப்பதால்அது வெளியாகத் தெரிகின்றது என்கின்ற விளக்கமும் கிடைக்கப் பெறும்.
    10) ‘பிரக்ஞானம் பிரம்மம்’ ‘ அகம் பிரம்மாஸ்மி’ ‘தத்துவமஸி‘ ‘அயம் ஆத்மா பிரம்மம்‘ என்கின்ற மகா வாக்கியங்கள் விளங்கும்.
    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அறிவாக உள்ள அரூபமான இறையை, மனிதன் அறிவைக் கொண்டுதான் உணர முடியும். அறிவைக் கொண்டு பேரறிவை அறியும் பேற்றினையே தமிழ் இலக்கியங்களில் வீடுபேறு எனப்படுகின்றது.
    வீட்டிற்கெல்லாம் வீடு அது. அந்த வீட்டினை அடைவது பேறாகக் கருதப்படுகின்றது. எனவே வீடு பேறு எனப்படுகின்றது.
    அறம் காத்து, பொருள் ஈட்டி, அளவு முறையோடு இன்பம் துய்த்து, வீடு பேற்றை அடைவதே மனிதப்பிறவியின் நோக்கம் அல்லது பயன் என்கின்றது தமிழ் இலக்கியங்கள்.
    ஆறறிவாக வாழ்கின்ற மனிதர்களெல்லாம், அதற்கு ஏற்ப பொருத்தமாக, ‘உண்மைப் பொருளுணா்தல் பேறு’ என்றும், அதுவே பிறவிப்பயனைப் பெறுவதாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ஆகவே அருட்பிரகாச வள்ளலார் மற்றும் வேதாத்திரி மகரிஷி, மற்றும் பல மகான்களின் ஆதங்கங்களைப் பூர்த்தி செய்ய, ‘வீடு பேற்றில்’ தேறிடுவோம். தேறிடுவோம். தேறிடுவோம்.
    அந்தப் புனித ஆன்மாவின் ஆதங்கங்களுடன் நம்முடைய ஆதங்கத்தையும் சேர்த்துக் கொள்வோம்.
    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    அடுத்த புதனன்று (18-11-2015) சந்திப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC/அ.வி. 135-வாழ்வில் தேறிடுவோம்!

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    வாழ்வில் தேறிடுவோம்!

     FFC/அ.வி. 135

    11-11-2015 – புதன்

    வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியவை:

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

    பிறப்பு – இறப்பு என்கின்ற இரு நிகழ்சிகளுக்கு இடையில் அனுபவிப்பதுதான் வாழ்க்கை எனப்படுகின்றது. சிறுவனாக இருக்கும்போது பள்ளிப் படிப்பில் தேற்கிறோம். வாலிபனாக இருக்கும்போது கல்லூரிப் படிப்பில் தேற்கிறோம். பணிக்குச் சென்ற பின் அப்பணியிலும் தேற்கிறோம். ஆனால் வாழ்வில் தேறினோமா என்றால் சந்தேகமே. இல்லாவிட்டால் ‘ஒருவரேனும் தேறிலர்’ என்று ஆதங்கப்பட்டிருக்கமாட்டார் அருட்பிரகாச வள்ளலார். எனவே ‘அஞ்சவேண்டாம், திருத்திடுவோம்’ என்று பூதவுடலைவிட்டுச் சென்றபோது கூறிய அருட் செய்திக்கு இணங்க திருந்திடுவோம், தேறிடுவோம். இது காலத்தின் கட்டாயம்.

    வாழ்க்கை தோன்றி மறையும் ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. எனவே மனிதஅறிவு இக்குறுகிய காலத்தில், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டு இன்புற வேண்டும். இன்று உலக மக்கள் தொகை 720 கோடி. பத்து வருடங்களுக்கு முன்னர் உலக மக்கள் தொகை சுமார் 640 கோடி. பத்து வருடங்களில் மக்கள் தொகை 80 கோடி அதிகரித்துள்ளது. இந்த பத்து வருடங்களில் இறந்தவர்களைவிட பிறந்தவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் தொகை 80 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்தவர்கள் எத்தனை போ் என சொல்ல முடியுமா? புள்ளி விவரம் இல்லை. கடலிலுள்ள நீரில் எவ்வளவு நீர்த்துளிகள் இருக்கும் என்று சொல்ல முடியாதோ அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்துள்ள மக்கள் தொகை எண்ணிக்கையும்.
    ஒவ்வொரு ஆண்டும், பிறந்த நாள் வரும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று இருப்பவர் அடுத்த 100 ஆண்டுகளில் இருக்கப் போவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் இன்று இல்லை.(மனிதனின் ஆயுட்காலம் 100 என எடுத்துக் கொண்டு இது சொல்லப்படுகின்றது) நின்றால் ஒரு அடி சொந்தம். படுத்தால் ஆறடி சொந்தம். இது வேதாந்தமில்லை. தத்துவமில்லை, ஒதுக்கித் தள்ளுவதற்கு. இதுதான் எதார்த்தம்.FFC_46-geetha chaaram-
    இயற்கையாகிய–பேராற்றலிருந்து உருவானவர்கள்தான், இத்தனை கோடானுகோடி உலக மக்களும். அதே இயற்கை ஆற்றலிருந்துதான் மனிதன், நீர்க்குமிழ் போல், மறையக்கூடிய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். சூரிய ஆற்றல், வெப்ப ஆற்றல், காந்த ஆற்றல், மின் ஆற்றல், எரிசக்தி ஆற்றல், இயந்திர ஆற்றல், இரசாயன ஆற்றல், இவ்வாறாக பல்வேறு ஆற்றல்-வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி அனுபவித்துவிட்டு ஒரு நாள் மறைகிறான். நீர்க்குமிழியான உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியவைகளை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறான் மனிதன்.
    720 கோடி மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்றால் என்ன பொருள்? 720 கோடி மக்களும் 720 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்கள் (Treasure-House of Divine Energy). இவ்வாறாக 720 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்களாக இருந்தும், அதனை அறியாது அறியாமையில் வாழ்கின்றது உலக சமுதாயம். இத்தகைய தெய்வீக ஆற்றலை, ஒவ்வொரு மனிதனும் கொண்டிருந்தாலும், “விஞ்ஞானத்தை நோ்வழியில் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இணைந்த வாழ்வு மலர வேண்டும்”, என்று மகரிஷி அவா்கள் கூறுவது போல் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தெய்வீக ஆற்றலை நேர்வழியில் பயன் படுத்துகின்ற நெறிமுறைகளைக் கற்க வேண்டும். 720 கோடியில் ஒரு சிலரைத்தவிர மற்ற தெய்வீகக் கருவூலங்களின் ஆற்றல்களும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஆகவே தான் இன்னமும் மனித குலம் தன் பூர்விகச் சொத்தான(hereditary wealth) அமைதியினை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது.

    முதல் மனிதன் தோன்றி இன்று வரை எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?
    பல்லாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்.

    இன்னமும் மனித குலத்தில், தன்னுடைய பூர்வீக சொத்தான அமைதி எனும் (ஆதியில் இருப்பாக இருந்தது) சொத்தை மட்டும் எல்லோராலும் முழுவதுமாக அனுபவிக்க முடியவதில்லை. பூர்வீக சொத்தான அமைதியை மட்டும் ‘எல்லோராலும் முழுவதுமாக’ அனுபவிக்க முடியவில்லை என்றால் வெகு சிலரே தனது பூர்வீக சொத்தான அமைதியை முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று பொருளாகின்றது. ஆம். அப்படித்தான். முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று ஏன் கூறப்படுகின்றதென்றால் அந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்களில் ஒரு சிலர் பூர்வீக சொத்தை அனுபவித்தாலும், அவர்களும் குறைவாகவேதான் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கின்றனர் என்றாகின்றது. ஆம். மற்றவர்களில் உள்ள அந்த வெகு சிலரும் பூர்விக சொத்தான அமைதியை அனுபவித்தாலும் அவர்களும் அறிந்து அனுபவிப்பதில்லை. அறிந்து அனுபவிக்காததால் முழுவதுமாக அமைதியை அனுபவிக்க முடியவில்லை. குறைவாகவே தான் அனுபவிக்கின்றனர், பெரும்பாலோர் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமலேயே மடிந்து விடுகின்றனர், காரணம் என்ன? வாழ்வில் அறிய வேண்டியதை அறியவில்லை.

    தன் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்கின்ற அந்தவெகு சிலரின் எண்ணிக்கையை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது விரல் விட்டு எண்ணுகின்ற அளவிலேதான் இருக்கும். அவர்களால் மட்டும் எவ்வாறு தங்களது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க முடிகின்றது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் எதார்த்த வாழ்வு வாழ்பவர்கள்.

    எதார்த்தம் என்றால் என்ன?
    எதார்த்தம் என்றால் உள்ளது உள்ளபடி,
    நடைமுறைக்கு முரண்படாதது.
    அப்பட்டமான உண்மை (naked truth) என்று பொருள்.

    உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு நடைமுறைக்கு ஏற்றபடி வாழ்கின்றவர்கள் அந்த முதல் ரக வெகு சிலர். அந்த முதல் ரக வெகு சிலர் உலகநியதியையும், இயற்கையின் தன்மாற்றத்தின் சாராசாம்சத்தையும் விளங்கிக் கொண்டு வாழ்பவர்கள். கீதாசாரம் கூறும் இயற்கையியலாகிய வாழ்வியல் உண்மைகளை நினைவு கூர்வோம். இயற்கையியலாகிய வாழ்வியல் என்பதால் எல்லோருக்குமே பொதுவானதுதானே.
    சமுதாயம் இயற்கையின்/இறையின் மற்ற ஆற்றல்களையும், வளங்களையும் வாழ்வின் ஆற்றலாகவும், வளமாகவும் மாற்றி வாழத் தெரிந்து கொண்டதே தவிர, இயற்கையின்/இறையின் முதன்மையான ஆற்றலான ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இதுதான் இன்றைய, இதுவரை வந்துள்ள சமுதாயத்தின் குறை.
    காரணம், மனித அறிவு, இதுவரை வாழ்வின் நோக்கத்தை விஞ்ஞானப் பூர்வமாக அறியவில்லை.
    இதனால் அறிவிற்கு மூன்று குறைபாடுகள் வந்துவிட்டன. அவையாவன
    அறியாமை,
    அலட்சியம்,
    உணர்ச்சிவயம்.
    ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்ள,
    அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அறிவு மனிதனிடம் இருக்கின்றது. ஆனால் அந்த அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அதாவது
    அறிவின் பூர்வீகம் அறிய வேண்டும். அறிவின் பூர்வீகம் என்பது, மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு எங்கிருந்து வந்தது என அறிய வேண்டும்.
    “காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்கின்ற மகான் பாரதியின் கூற்று எவ்வாறு அறிவியல் உண்மையைக் கொண்டதாக உள்ளது என்று அறிய வேண்டும்.
    அதுபோல் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கின்ற திருமந்திரம் எவ்வாறு அறிவியலைக் கொண்டதாக உள்ளது என்றும் அறிய வேண்டும்.

    அறிவின் இருப்பிடம் அறிந்து கொண்டால், ஒழுங்காற்றலான அறிவாற்றலை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தலாம். ஒழுங்காற்றலான அறிவை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தினால்தான் அறிவின் இருப்பிடம் அறிய முடியும்.

    அறிவின் இருப்பிடம் அறியும் போது, மனிதஅறிவு வாழ்நாளில், தான் அறிய வேண்டியதை எல்லாம் அறிந்துவிடும். மகாவீரர் கூறுவதனை நினைவு கூர்வோம்.
    “எவனொருவன் ஆன்மாவை அறிகிறானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.”
    நான் யார் என அறியப்பட்டுவிடும். அறிவு என்றாலே, அதன் இயல்பு அறிதலாகும். அவ்வாறு இருக்கும் போது,
    அறிய வேண்டியதான, தன்னுடைய மூலத்தை, பூர்வீகத்தை அறியாது இருந்தால் அறிவு எவ்வாறு தன் பூர்விக சொத்தை அனுபவிக்க முடியும்? நான் யார் என அறிவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும். இப்போது சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளியுள்ளதை நினைவு கூர்தல் நலம் பயக்கும்.

    “தன்னை உணராப்படிப்பு எதுவாயினும் பொருளற்றதே. தன்னை உணர, தன்னைத் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே, தன்னையறிவதே ஞானோதயம் – கைவல்யம்!! ”
                                      — சுவாமி சிவானந்த பரமஹம்சர்.

    மற்றொரு அறிஞரான டால்ஸ்டாய் கூறுவதையும் நினைவு கூர்வோம்.
    “எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றதோ, அவன்தான் மிகச்சிறந்த கலைஞன் என்று கூற முடியும்”
                     — டால்ஸ்டாய்.
    வரும் ஞாயிறன்று(15-11-2015) வேதாத்திரி மகரிஷி அவர்களின் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்புக்கவியையும், அருட்சோதி வள்ளலார் அவா்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது மொழிந்ததையும், வாழ்வில் அறிய வேண்டியவைகளையும் அறிவோம்.

    Loading

  • FFC – 134-யோகவாழ்வு வாழ்வோம் – 3/3

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     யோகவாழ்வு வாழ்வோம் – 3/3

                                         FFC – 134                            

                                                                 08-11-2015-ஞாயிறு

     -படம்

         பக்தனுக்கும், ஞானிக்கும் கடவுளை அறிந்ததில் உள்ள வித்தியாசத்தை ஒர் கவியில் மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்ந்து இன்றைய சிந்தனையை துவங்குவோம்.

    நான் யார் என கருத்தியலாக அறிந்ததோடு மட்டமல்லாது, தொழிற் கல்வியில் கருத்தியல் பாடத்துடன் செய்முறையும் உள்ளது போல், இறை உணர் ஆன்மீகத்திலேயும் உள்ள செய்முறைப் பயிற்சியில் (அகத்தவம்) வெற்றி பெற வேண்டும். அதாவது கருத்தியலாக அறிந்ததை  உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுப்பயன்களை அடைய முடியும். அப்பயன்கள், துன்பமில்லா யோகவாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவைகளாகும்.

        செய்முறைப் பயிற்சியில் உறுதியுடன் அறிவதற்கு சில காலம் தேவையிருக்கின்றது.

        அந்தக் காலத்தின் அளவு

           அவரவா்களின் ஆர்வம்,

           கைமேல் பலனை எதிர்பார்க்காத தளரா விடாமுயற்சியினைப் பொருத்திருக்கும்.

           புலன்வழி வினைப்பதிவுகளின் அழுத்தம் ஆகியவைகளைப் பொருத்திருக்கும்.

    இருப்பினும் ‘நான் யார்’ என்பதனை கருத்தியலாகச் சந்தேகமின்றித் தெளிவுடன் அறிவதால், செய்முறை பயிற்சியில் ஆர்வமும், முயற்சியில் அயரா விடாமுயற்சியும் கைக்கூடும். அதன் விளைவாக புலன் வழி வினைப்பதிவுகளின் வேகமும், அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வர, செய்முறைப் பயிற்சியில் நான் யார் என உறுதியுடன் அறிவதற்கு தேவைப்படும் காலம் சுருங்கி வரும். அதாவது அகத்தவத்தின் முடிவு விரைவில் கைகூடிவிடும்.

       ஒரு மனிதன் வாழ்க்கையை நான் யார் என அறிவதற்காக பயன்படுத்தாத போது, இயற்கையின் நோக்கத்தை அறியாது, அறியாமையில் வாழும்போது இயற்கைக்கு முரணான வாழ்க்கைதான் வாழமுடியும். இயற்கைக்கு முரணாக வாழும் போது இயற்கையின் இனிமை கெடும். இயற்கையின் இனிமையைக் கெடச்செய்தால் விளைவுகளும் துன்பங்களாகத்தானே (miserable life)வரும்.   பிறவிப்பிணிக்கு ஆளாகி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இதே miserable life-ஐத்தான் வாழ வேண்டி வரும். அல்லது வம்சாவளியின் வழியாக துன்பம் தரக்கூடிய விளைவுகள் வரநேரிடும்.

       எந்த ஒரு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றாலும் அதற்கான செயல் புரிந்தேயாக வேண்டும். நான் யார் என அறிந்து அதன் பயனை அடைவதற்கு மனவளக்கலையாகிய அகத்தவமும், தற்சோதனைப் பயிற்சியும் அவசியம். நான் யார் என அறிதலின் பயனை விரிவாகத் தெரிந்து கொள்வதால், பயிற்சி செய்வதற்கான ஊக்கமும், ஆக்கமும் வரும். ஏனெனில் மனித மனம் ஆதாயமில்லாமல் எதனையும் விரும்பாது (human mind is so calculative) என்பதால், நான் யார் அறிதலின் பயனை அறிந்து கொள்வது பயனளிக்கும். ஆகவே நான் யார் என அறிதலின் பயன்களையும், அறியாதலால் வரும் துன்பங்களையும் அறிய வேண்டும். இப்பயன்கள் பற்றி, இணைய தள ஆசிரியரால் எழுதப்பட்டு 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நான் யார்?’ என்கின்ற நூலில் எளிமையாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது. அந்நூல்பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்நூலில், ‘அறிந்தது என்ன’ என்கின்ற இறுதி அத்தியாயத்தில், “லாபமும், நஷ்டமும்” என்கின்ற தலைப்பில்  அட்டவணைப்படுத்திக்   கொடுக்கப்பட்டுள்ளது. அது உங்கள் பார்வைக்காக நகல் எடுத்துத் தரப்பட்டுள்ளது. வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    naan yaar-page-146-2naan yaar-page-147-சிவி-5-1-15நாகு-3

    naan yaar-page-148-4

       எனவே ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடை கண்டு அந்த அடிப்படை வெளிச்சத்திலே தூய்மை செய்து கொண்டு பிறருக்கு வழிகாட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு யோகவாழ்க்கை வாழும் பாக்கியம் மனவளக்கலைஞர்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.  அடுத்த விருந்திற்கு 11-11-2015 புதனன்று சத்சங்கத்தில் கூடுவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading