இன்றைய விருந்து

  • FFC – 132 -யோகவாழ்வு வாழ்வோம் – 1/3

    யோகவாழ்வு வாழ்வோம் – 1/3

    FFC – 132                             

                                                                    01-11-2015-ஞாயிறு

    Sri_shanthanandar

    நிலையில்லாத வாழ்க்கையை  எதற்காக வாழ்வது, மகிழ்ச்சியாக வாழ்வது எவ்வாறு,  என்று தெரியாத நிலையில்,

    வாழ்வதனை எளிமையாக்கி, ஒரு கலையாக்கி,

    ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு மனவளக்கலை என்கின்ற பெயரில் அருளியுள்ள

    வாழ்வியல் அறிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடை கண்டு

    அந்த அடிப்படை வெளிச்சத்திலே தன்னைத் தூய்மை செய்து கொண்டு,

    பிறருக்கு வழி காட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்டு வாழ்தலே

    யோக வாழ்க்கையாகும் என்கிறார்.

     ஸ்ரீ சாந்தானந்தரோ ‘நான் யார்?’ என்று அறியாதவன் ஒன்றும் அறியாதவன், இறைவனைத் தனது அறிவாகக் காண்பவனே அறிவுள்ளவன் என்கிறார்.

    மேலும் ஆத்மாவைவிட மேலான நண்பன் வேறுயாரும் கிடையாது என்கிறார்.  பக்தியில் சிறந்து விளங்கிய பக்திமான்கள் ஆண்டவனை நண்பனாகக் கருதினார்கள் என்பதனை நினைவிற் கொள்ள வேண்டும்.

    ‘தன்னை அறிந்தால் பிரம்மத்தை அறிந்தவனாவாய்’ என்கிறார்.  கடவுளை(பிரம்மத்தை) அறிவதைவிட வேறு மேலான  யோகம்(அதிருஷ்டம்) என்ன உள்ளது இவ்வுலகில்?

     யோக வாழ்க்கை என்பது என்ன?  யாரும் விரும்பியோ, எண்ணியோ  பிறப்பதில்லை.  பிறப்பது தன்விருப்பமில்லால் நடந்தாலும் மனிதன் வாழ்வது மட்டும் தன் விருப்பத்தில்தான் உள்ளது. அதாவது இயற்கை நியதிக்குட்பட்டு நலம் விரும்பி வாழலாம். நலமே தரும் யோக வாழ்க்கை வாழலாம்.  இதனை அறிந்தவனே ஸ்ரீ சாந்தானந்தர் கூறும் அறிவுள்ளவனாவான்.

    பொதுவாக யோகம் என்றால் ‘அதிர்ஷ்டம்’ என்று பொருள் கொள்வர்.  ஜோதிடர்கள் ஒருசில ஜாதகங்களைப் பார்த்துவிட்டு இந்த ஜாதகர்  ‘யோக ஜாதகர்’ என்பர்.  அதாவது அந்த ஜாதகர் எல்லா வசதிகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.  அந்த பாக்கியம் எங்கிருந்து வந்தது?  அவனுடைய மூதாதையர் செய்துள்ள நல்ல காரியங்களால் வந்தது.  ‘மாதா பிதா செய்தது மக்களுக்கு’ என்பர்.

    சமுதாயமும் ஒருவன் எல்லா வசதிகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழும் போது   அவனை  யோகக்காரகன் என்று சொல்லும்.

    ஆன்மீகத்தில் யோகம் என்றால் தியானம், யோகாசனம் என்று பொருள். தியானத்தாலும், யோகாசனத்தாலும், ஏற்கனவே   இந்த ஆன்மா செய்துள்ள   தவறான   செயல்களால்   உண்டான பாவப்பதிவுகளை  நீக்கச் செய்து உடல்நலம்,   மனவளம்   பெறமுடிகின்றது.    யோகம்    செய்ததால் கிடைத்த உடல்நலமும் மனநலமும் பெற்றவர்  யோகக்காரகா்தானே!

    சமுதாயத்தால் கருதப்படுகின்ற யோகக்காரகரரும் யோகம் செய்கின்றாரோ, இல்லையோ தன் கருமைய கணக்குப்புத்தகத்தில் பாவப்பதிவுகள் நீங்கி புண்ணியப்பதிவுகள்  பெற்றவராகத்தான் இருக்க முடியும்.

    இப்போது ‘நான் யார்?’ என அறிவதால் ஏற்படும் பயன்களையும், அறியாததால் வரும் துன்பங்களை அறிந்து கொண்டால் ‘நான் யார்?’ என அறிந்து வாழ்வது யோகவாழ்வு என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

    yoga_vazhvu

     ஆன்மீகத்தில்  ‘நான் யார்?’ (Who am I ?)என்கின்ற வினா மிகச்சிறப்புடையது. ‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது !’  என்பார்களே அது போல் ‘நான் யார்?’  என்கின்ற வினா நான்கு எழுத்துக்களே கொண்ட சிறிய வினாவாக இருந்தாலும் இந்த வினாவின் விடைதான், அறிவின் வளா்ச்சியில் உச்ச நிலையை அடைந்து மனிதனின் கீர்த்தியை வெளிப்படுத்துவதாகும். 

        இயற்கையாகிய பேரறிவு / இறை, தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில், ஏன் உயிரினங்களாக வந்தது என்கின்ற காரணத்தை அறிந்தால், நான் யார் என்கின்ற வினாவிற்கான விடை கிடைக்கும்.

    இயற்கை/இறை உயிரினங்களாக வந்தக் காரணம் என்ன என்று சிந்தித்தால்,   பஞ்சபூதங்களிலிருந்து வந்து கொண்டிருந்த அழுத்தம், ஒலி, ஒளி, சுவை. மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளை உணர்வதற்காக, பேரறிவாகிய இயற்கை, ஓரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாக ஒவ்வொன்றாகப் படிப்படியாக (stage by stage) தன்மாற்றடைந்து வந்தது. பிரபஞ்சத்தில்,   பஞ்ச பூதங்களிலிருந்து நடந்து கொண்டிருந்த பஞ்சதன்மாற்ற நிகழ்ச்சிகளை (Physical Transformation of Pancha Boothas)உணர்ந்தாகிவிட்ட பிறகு, அத்துடன் இயற்கை  தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாமே! உயிரினங்களாக வந்து பின்னர் மனிதனாக ஏன்  வந்தது?

    நாம் யார் அவ்வாறு  கேட்பதற்கு? தாயைப் பார்த்து பிள்ளை  “நீ ஏன் என்னைப் பெற்றாய்?” எனக் கேட்க முடியுமா? முடியாது.  அது போல் இயற்கை அன்னையையும் நாம் கேட்க முடியாது. ஆனால் அந்தக் காரணத்தை அறிய உரிமையும். தகுதியும் உள்ளது நமக்கு. காரணத்தைக் கேட்போம். விடையை அறிவோம். அறிய விழைந்தால் இயற்கை அன்னையே காரணத்தை உற்சாகத்துடன் கூறி மகிழ்வாள்.  நீயே அதுவானால் அதுவே  சொல்லும்” என்பதும் இதுதான்.

    ஐந்தறிவிலிருந்து, ஆறாம் அறிவிற்கு, ஏன் தன்மாற்றப் பயணத்தைத் தொடர்ந்து இயற்கை அன்னை மனிதனாகவும் வந்தாள் என வினா எழலாம்.  ஏன் அவ்வாறு வினா வருகின்றது. காரணம், இன்று மனித குலத்தின் நிலை அவ்வாறு உள்ளது.  இன்று சமுதாயத்தில் வறுமை நிலவுகின்றது. சூது, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கின்றன.  ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைக்கின்ற துன்பங்கள் மலிந்து விட்டன. வாழ்க்கை பெரும் சிக்கலாகிவிட்டது.  உத்திரவாதமின்மையான வாழ்க்கை (insecured life) வாழ வேண்டியுள்ளது.   இயற்கை/இறை மனிதனாக வராமல் இருந்திருந்தால், மனித குலம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக வேண்டியதில்லையே என  எண்ணத் தோன்றலாம். இப்பிரபஞ்சத்தில் இவ்வளவு குற்றங்களே இருந்திருந்திராதே!

    என்ன செய்வது?  இயற்கையின் ஆதிநிலை, பேரறிவையும் கொண்ட அளப்பரிய பேராற்றல் உடையது. ஆற்றல் என்றாலே இயக்கத்திற்கு வந்தால்தானே சிறப்பு.  இயக்கத்தில் இருந்தால் தானே அது ஆற்றல் என்கின்ற பெருமையைப் பெறுகின்றது. மின் கலம் (Battery) உள்ளது. மின்கலத்தை இயக்கினால் தான் அதிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்த முடியும்.  மின் கலத்தை இயக்காமல் இருந்தால் அது ஒரு பயனற்ற பெட்டியாகத்தான் இருக்கும். அதுபோல் பேராற்றல் தன்னையே  இறுக்கிக் கொண்டு, நொறுங்கி இயக்கத்திற்கு வந்தது. பேராற்றலுடன் கூடவே, அறிவென்றாலே அறியும்  இயல்புடையதாகிய அறிவு பேரறிவாக  இருந்ததால், பேரறிவு உயிரினங்களாக மாற்றம் அடைந்தது.

    இங்கே சிந்திக்க வேண்டும் மனிதன்.  அடுத்த விருந்தில் (04-11-2015) தொடர்வோம்.

     

    Loading

  • FFC – 131-அறிவிற்கு விருந்து

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து 

    FFC – 131

    28-10-2015—புதன்

    FFC-131-28-10-2015-தெய்வப் புலவர்-அறிவிற்கு விருந்து

     

    திருவள்ளுவர் 133 அதிகாரங்களை ஏற்படுத்தியுள்ளார் என்றால் என்ன பொருள்? அந்த 133 அதிகாரத் தலைப்புகள் தெரிவிப்பவைகள் அத்தனையும் மனிதனுக்கு அவசியமானது. சொல்ல வேண்டிய ஒரு வாழ்வியல் உண்மையை ஒரு குறளிலே சொன்னால் அது போதாது என்று எண்ணி பத்து கோணங்களில் கூறுவதற்குப் பத்து குறட்பாக்களில் கூறியுள்ளார். ஒழுக்கத்திற்கென்று தனி அதிகாரத்தை ஒதுக்கி பத்துக் குறப்பாக்களை அருளியுள்ளார். அதுபோல் அறிவைப் பற்றி பத்து பாக்களில் கூறி அறிவுடைமை அதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    இயற்கை தனது மனிதகுலத் தன்மாற்ற தொழிற்சாலையில், விலங்கினப் பண்பால் மனிதகுலத்திற்கு வந்துவிட்ட பரிணாமக்கசடுகளை நீக்க, அறிஞர்கள் வழியாக அறநெறி அறவுரைகள் வழங்கினாலும் சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை, எப்படி, உடலுக்கு நோய் வந்தால் மருந்தைக் கொண்டு சரி செய்துகொள்ள மனித சமுதாயம் கண்டுபிடித்துள்ளதோ அதுபோல், பிறவிப்பிணிக்கு, இயற்கை இவ்வளவு அறநெறிகளை தனது மூத்த குழந்தைகளில் ஒருசிலர் வழியாகத் தெரிவித்து வந்தாலும் மனிதசமுதாயம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. ‘நாளை கிடைக்கும் பலாக்காயைவிட இன்றே கிடைக்கும் களாக்காயே மேல்’ என கைமேல் பலன் தரும் புலனின்பத்தை அனுபவித்துவிட்டு துன்பத்துக்குள்ளாகின்றது. இதனைத்தான் அறிஞர்கள் எல்லோருமே புலன்மயக்கம் என்கின்றனர்.

    எனவே புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்க ஆன்மா இந்த உடல் எடுக்கவில்லை. அதுதான் பிறப்பிற்கானக் காரணம் என்றால், ஆன்மா மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து வெறும் பிறப்பு-இறப்பு சுழலில்(mere cycle of birth and death) சிக்கித் துன்பக்கடலில் தத்தளிக்க வேண்டுமா?

    சலிப்பிற்கும், நடைமுறையில் மனிதனால், அளவும், முறையும் கடைபிடிக்க முடியாமல் வரும் துன்பங்களுக்குக் காரணமான புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்கும் அற்ப நோக்கத்திற்காகவா,

    எல்லாம் வல்ல இறை ஆதிமனிதனிலிருந்து இன்று வரை,
    கடலிலுள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று கணக்கிட முடியாதோ,

    அதுபோல், ஆதி மனிதனிலிருந்து இன்று வரைக் கணக்கிட முடியாத அளவில் பலகோடி கோடி மக்களாக வெறும்,

    பிறப்பு –இறப்பு சுழற்சிக்காகவா தன்மாற்றம் அடைந்தது?

    இதிலே என்ன ரசனை இருக்கின்றது இறைக்கு? இருக்க முடியும்!

    இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்தபோது இல்லாத சிறப்பினை மனித வடிவில் தன்னை அறியும்போது பெறுகின்றது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சுத்த அத்வைத தத்துவத்தை நமக்குத் தெளிய வைப்பதற்கு, மனிதனை “Sophisticated GOD” என்பார். காரணம் வெட்ட வெளியில் பேரறிவிற்கு உணர்வு கிடையாது. ஆகவே பேரறிவிற்கு, மனிதனாகி இப்போது தன்னை உணர்ந்து பேரின்பம் அடைகின்ற நிலை, வெட்டவெளியாக இருந்தபோது கிடையாது. இயற்கை இரகசியங்களை மனித அறிவின் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைகின்றது. முகம் பார்ப்பதற்குக் கண்ணாடித் தேவைப்படுவது போல், தன்னையே ரசிக்க பேரறிவிற்கு மனித உடலும், ஆறாம் அறிவும் தேவையாய் இருந்தது. முகம் பார்க்கக் கண்ணாடி வேண்டும். அழகனோ, அழகியோ தனது அழகினை இரசிக்கக் கண்ணாடி வேண்டும். கண்ணாடியே இல்லாத ஊரில் பிறந்த அழகனோ, அழகியோ எவ்வாறு தன் அழகினை இரசிக்க முடியும்?

    அதுபோல், இறைக்கும் தன் சிறப்பினையெல்லாம் அறிந்து மகிழ்வதற்கு, மனித வடிவக் கண்ணாடி தேவைப்பட்டது. இந்த நிலையினை ரசித்த ஓர் அறிஞர், இறையை கள்வன் என்கிறார். ஏனெனில் இறைவன் மனித உடலைக் கொண்டுதான் தன்னையே இரசிப்பதால் இறையை கள்வன் என்று இறையை அனுபவித்து, துவைதத்தில் சொல்கின்றார். சொல்வது துவைதம்தான். ஆனால் அறிஞர் அனுபவித்தது சுத்த அத்வைதம். சுத்த அத்வைதத்தை அனுபவிக்காமல் இப்படியொரு “இறைவன் கள்வன்” என்கின்ற உள்ளம் பூரிப்படைந்த ஆனந்த வர்ணனை வெளிவராது.

    அத்வைதியானாலும் நடைமுறையில் துவைதியாகத்தான் பேச முடிகின்றது, இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அத்வைத நினைப்பு அயரா விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். உண்மையில் உடலும், அறிவும் இறைவன் தானே. மனிதன் யாரோ, அறிவு எதுவோ, கடவுள் யாரோ அல்லவே. “இறைவன் கள்வன்” என்பது அத்வைதத்தை அனுபவித்து சொல்வது மட்டும் துவைத்தில் சொல்வதாக உள்ளது. சுத்த அத்வைதத்தை ரசித்து அனுபவித்து, சுத்த அத்வைதத்திலேயே சொல்வ தென்றால் “இறையே தன்மாற்றம் அடைந்து மனித வடிவில் அறிவாக இருந்து கொண்டு தன் பெருமைகளையும், தன்னையும் ரசிக்கின்றது. (God Himself enjoys His beauties, admirations and Himself) காஞ்சீபுரத்தில் இறைவனுக்கு கள்வன் என்கின்ற பெயரிலே கோயில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

    ஆனால் இப்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். ஆகவே ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொண்டு, மீண்டும் இப்பிறவியில் பழிச்செயல்கள் புரியாத அயரா விழிப்புடன் இருந்து, தன்னை உணர்ந்து, ஆன்ம உணர்விலேயே வாழ்ந்து பெருவாழ்வு வாழ்வதற்கு அறிவிற்கு விருந்தை அருந்துவதற்காக செய்ய வேண்டியவைகள் என்னென்ன?

    அறிவிற்கு விருந்தை அருந்துவதற்குச் செய்ய வேண்டியவைகள்:
    1) முதலில் சரியான அறிவினரைத் தேடி அவருடன் இணைந்திருத்தல் வேண்டும்.
    2) அந்த அறிவினர் கூறும் அறநெறிகள் சரியானவையா என சுயசிந்தனையின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல் “Information, Confirmation, Transformation” சோதித்து அறிய வேண்டும். அறிந்து அதுபோல் நடக்க வேண்டும்.
    3) வானொலி, மற்றும் தொலைக் காட்சியின் வாயிலாக ஒலி, ஒளி பரப்பப்படும் நிகழ்சிகளான சான்றோர் சிந்தனைகளைக் கேட்க வேண்டும். செய்தித்தாளில் “அறிவோமா ஆன்மீகம்” போன்ற பகுதிகளை ஆர்வமாகப் படிக்க வேண்டும்.
    4) மகரிஷி அவர்களின் வாழ்க்கை மலர்களிலுள்ள சிந்தனை விருந்தை அன்றாடம் தவறாமல் படிக்க வேண்டும்.
    5) அறிஞா்களின் அறநூல்களைத் தினந்தோறும் ஒரு மணி நேரமாவது படிக்க வேண்டும்.
    6) சத்சங்கத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ள வேண்டும். வாய்ப்பில்லாதபோது அறநூல்களை தினந்தோறும் வாசிப்பதே சத்சங்கம். அந்த அறநூல்கள் அருளிய அறிஞரின் அறிவாற்றலுடன் இணைகிறோம்.
    7) இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லாத போது தானே சிந்திப்பது பேரறிவோடு, சிற்றறிவு
    சத்சங்கத்தில் கலந்து கொள்வதேயாகும்.

    நவீன தொழில் நுட்பத்தில், www.prosperspiritually.com ஏற்பாடாகி அது சத்சங்கமாகப் பயன்பட்டு, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதற்காகவே உருவானதுதான் இந்த ‘அறிவிற்கு விருந்து’ என்கின்ற பகுதி. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக சகோதரிகளும், சகோதரர்களும், அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    வாழ்க வளமுடன். வாழ்க www.prosperspiritually.com வளர்க www.prosperspiritually.com.
    01-11-2015 ஞாயிறன்று வேறொரு தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 130-அறிவிற்கு விருந்து

    வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

     அறிவிற்கு விருந்து

    FFC – 130

    25-10-2015–ஞாயிறு

    அறிவிற்கு எவையெல்லாம் விருந்தாக இருக்க முடியும்?

    FFC-130-அறிவிற்கு விருந்தளிப்பன
    சுருங்கச் சொல்வதெனில் சிந்தனைச் செல்வத்தை அறிவின் உச்சத்திற்கு வளர்ப்பது

    போன்ற அறிவுபூர்வமான உண்மைகள் எல்லாம் அறிவிற்கு விருந்தாக இருக்கும்.

    அவ்வையார் கூறும் அப்படிப்பட்ட அறிவினர் யார்? ஏறக்குறைய நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அன்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷிகளாவார். அவரது அழைப்பை நினைவு படுத்திக் கொள்வோமே.

    anbargale vaareer-THAI
    ஆகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் ”அறிவினரைச் சேர்வது இனியது” என்று கூறியதை இப்போது, இந்த நூற்றாண்டில், அறிவை அறிந்து அனுபவித்து, “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, அன்பர்களே வாரீர்” என உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நடத்திக் கொண்டிருக்கின்றது. வாழ்க வேதாத்திரி மகரிஷியின் அறிவாற்றல். வேதாத்திரியம் என்ன விருந்து படைக்கின்றது? ஒரு புராணக்கதையில் வரும் பாரிஜாத மரம் போன்றது வேதாத்திரியம்.

    அந்தப் புராணக்கதைக் கூறுவது: . தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அம்மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்று கற்பனைக் கதை கூறுகின்றது. மகரிஷியின் அறிவாற்றல், அதாவது வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலரைப் போன்றது. அப்பாரிஜாத மலரில் அறிவுத் தேன் நிரம்பி வழிகின்றது. அறிவிற்கு வேண்டிய விருந்தைத் தரும் மகரிஷியின் அறிவாற்றல். அறிவுத் தேனிக்களாகிய நாம் எல்லோரும் பருகிக் கொண்டு ஆனந்த போதையில் உள்ளோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, அவ்வறிவுத் தேனை மற்றவர்களும் பருகி ஆனந்தமடைய வழிகாட்டும் அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து, எப்போதும் இறை அருளுக்குப் பாத்திரமாகி, அதே நேரத்தில் இப்பிறவிப் பயனை அடுத்தப் பிறவிக்கு தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயே பெற்றிடுவோம்.

    அறிவிற்கு விருந்தை எவ்வாறு தயார் செய்து அருந்துவது எனக் கேள்வி எழலாம். அவ்வையார் கூறுவது போன்று மூன்றாம் நிலை இனியதைக் கொடுக்கக் கூடியதான அறிவினரைச் சேர்ந்து, நான்காம் நிலையும் இறுதியானதுமான அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பதாலும் அறிவிற்கான விருந்தை அருந்த முடியும். வயிற்றுக்கு விருந்து நாவிற்கு மிகுந்த சுவையைத் தரும். வயிற்றுப் பசியினைப் போக்கும். வயிறு, உணவிலுள்ள சாறை உடல் வளர்ச்சிக்காக எடுத்துக் கொண்டு, சக்கையை மலமாக வெளியே அனுப்பிவிடுகின்றது. இப்படியாக வளர்ந்து வந்த உடல் மீண்டும் பஞ்ச பூதங்களாகி மறைந்து விடுகின்றது(மரணம்).

    ஆனால் அறிவிற்கு அளித்த விருந்து அப்படியாவதில்லை. உடல் அழிந்தாலும் அறிவிற்கு அளித்த விருந்து வம்சாவளி வம்சாவளியாகச் சென்று கொண்டிருக்கின்றது. எப்படி? கருமையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிவிற்கு விருந்து அளிப்பதால், அளிக்கும் ஒவ்வொரு விருந்தும் அதற்குரிய தரமாற்றத்தை அளிக்கின்றது. அந்த தரமாற்றம் என்றுமே அழியாத ஆன்மாவாகிய கருமையத்தில் பதிவதால், அந்த கருமையத்தின் செராக்ஸ் நகலே ஒருவரின் அடுத்த வம்சாவளி என்பதால் அறிவிற்கு அளிக்கும் விருந்தால் ஏற்படும் தரஉயர்வு தன்னுடைய வம்சாவளிக்குச் சென்றடையும். இவ்வாறகத்தான், நல்ல தரமுள்ள வம்சாவளியை உருவாக்குவதன் மூலம் மனித குலத்தை உய்யச் செய்ய முடியும். இஃதன்றி மனித குலத்தை எவ்வாறு உய்வடையச் செய்யமுடியும்? இது இயற்கையின் புனித ஏற்பாடு.

    அறிவிற்கு விருந்து தெளிவினைத் தரும். அது அறிவிற்கு ஆனந்தத்தைத் தரும். அதனால் தான் அவ்வையார் அறிவினரைச் சேர்ந்திருக்கச் சொல்கிறார். அறிவினர் என்று அவ்வையார் கூறுவது அறிவையறிந்த குருவைச் சோ்ந்திருக்கச் சொல்கிறார். அறிவையறிந்த குருவை அடைதலின் பயனை, திருமூலர் அருளிச்செய்துள்ள பாடலின் மூலம் நினைவிற்குக் கொண்டு வருவோம்.

    FFC-130-தெனிவு  குருவின் திருமேனி காண்டல்
    வ்வைத்தாய் கூறுவதனையும் நினைவு படுத்திக் கொள்ளலாம். தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நீதிகள்

    FFC-130-25-10-15-ஆத்திச்சூடி
    பொருள்: நல்லாரைக் காண்பது, அவர் சொல்லைக் கேட்பது, அவர் குணங்களைப் பேசுவதும், அவரோடு கூடியிருப்பதுவும், நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும்.
    உலக நீதி
    “மூத்தோர் சொன்ன வார்த்தைகளை மறக்க வேண்டாம்” …..என்கிறார் உலகநாதர்.

    அடுத்த விருந்தில் 28-10-2015 ஞாயிறன்று சந்திப்போம்.

    Loading

  • FFC – 129-அறிவிற்கு விருந்து

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

     அறிவிற்கு விருந்து

    FFC – 129

    21-10-2015—புதன்

     

    FFC-127-அவ்வையார்- இனிது

     

    அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளாவன:
    1) ஏகாந்தம் இனிது
    2) ஆதியைத் தொழுதல்
    3) அறிவினரைச் சோ்ந்திருத்தல்
    4) அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது.

    இப்போது சிந்திப்போம்,
    1) மனவளக்கலையால் ஏகாந்தத்தில் இருக்க முடிகின்றதல்லவா!
    2) மனவளக்கலையால் ஆதியைத் தொழுகிறோமல்லவா! — துரியாதீத தவம் இயற்றுகிறோமல்லவா!

    ஆகவே மனவளக்கலைஞர்களாகிய நாம் நம் சந்தோஷச் செய்தியினை மனவளக்கலை தந்த மாமனிதர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு தெரிவிப்போம்.

    FFC-128-18-10-15-சிந்தையை அடக்கியே-meditation

     

    3) நாம் யாரோடு சேர்ந்திருக்கிறோம்? ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதில் குருவைக்காட்டும் நிகழ்வு சமுதாயத்தில் விடுபட்டு போய் இருந்த நிலையில் தெய்வத்தை காட்டும் குருவோடு இணைந்திருக்கிறோம். அதுவும் அறிவிற்கு இயலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அறிவியளாலா் வேதாத்திரி மகரிஷி அவர்களோடு சோ்ந்திருக்கிறோம்,

    4) நாம் யாரைக் கனவிலும் நனவிலும் காண்கிறோம்? அவ்வையார் கூறும் அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்களை கனவிலும் நனவிலும் கண்டுகொண்டே இன்பமுறுகிறோம். எப்படி? மகரிஷி அவர்களின் கருத்துக்களை தினந்தோறும், மணி தோறும், ஏன் நொடிக்கு நொடி சிந்தித்து வருகிறோமல்லவா!
    இத்தருணத்தில் நம் நவயுக பிரம்மரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, பண்பேற்றம் பெற்று வருவதன் மூலம் நமது உளங்கணிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    FFC-128-129-குருவின் தொடர்பு
    இதற்கெல்லாம் அறிவிற்குப் பசி வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு உணவு தரப்படுகின்றது. உணவால் உடல் மட்டுமே வளர்கின்றது. உடல் மட்டும் வளர்ந்து பயனில்லை. அறிவும் வளர வேண்டும்.(ஆளும் வளரனும். அறிவும் வளரனும் – திரைப்படப்பாடல் வரி) அறிவு வளர்வதற்கு உணவு அவசியம். அதுவும் விருந்தாக இருக்க வேண்டும். ஏன்? விருந்து என்றால் பல உணவு வகைகள் இருக்கும். ருசி ஊட்டப்பட்டிருக்கும். நாவிற்கு மிகச்சுவையாக இருக்கும். ஆனால் தினந்தோறும் வயிற்றுக்கு விருந்து அவசியமில்லை. ஒரு காரணம், எல்லோருக்கும் தினந்தோறும் விருந்து அருந்த வசதி இருக்காது. மற்றொரு காரணம், தினந்தோறும் விருந்து அருந்தினாலும் வயிற்றுக்கு உபாதைகள் வரும். சலிப்பும் வரும்.
    அறிவிற்கு அளிக்கும் உணவு விருந்தாகவே இருக்க வேண்டும். விருந்து சாப்பிடுவதில் அறிவிற்கு சலிப்பே வராது. வயிற்றுக்கு அதிக உணவு அளித்தால் அசீரணம் வருவது போல் அறிவிற்கு விருந்து அளிப்பதில் எந்தவித கெடுதலும் வர வாய்ப்பில்லை. மாறாக அறிவு மேம்பட்டுக் கொண்டே வரும். பல்லாயிரம் பிறவிகள் தோறும் அறிவிற்கு விருந்தில்லாமல் அறிவு இளைத்து மனிதத்தில் பலவீனப்பட்டுள்ளது. ஆகவேதான் பரிணாமக்கசடான விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது மனித அறிவு.
    ஆகவே சரியான அறிவினரைச் சோ்ந்து மதித்து நடந்தால், அறிவிற்கு எப்போதும் விருந்தையே அருந்துவதில் பஞ்சம் இராது.
    அட்சய பாத்திரம் போல் அறிவிற்கு விருந்து தடையின்றி எந்நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது நிச்சயம்.
    அறிவினரைச் சோ்தலால் அறிவிற்கு விருந்து கிடைப்பதால் அது இனிதாகத்தானே இருக்கும்.
    அறிவினரைச் சேர்தலால் எவ்வகையான விருந்து அறிவிற்கு கிடைக்கும்?
    அறிவிற்கு எதெல்லாம் விருந்தாக இருக்க முடியும் என்பதனை 25-10-2015 ஞாயிறன்று அறிவோம்.

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

          அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

     

     

     

     

    Loading

  • FFC – 128-அறிவிற்கு விருந்து

     

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து

                                                                 FFC  – 128

                                                               18-10-2015—ஞாயிறு

    FFC-128-18-10-2015-kural-430

     

    திருவள்ளுவர் அறிவு பற்றி கூற வந்தவர் அதற்கென ஒரு அதிகாரத்தை ஒதுக்கி அறிவுடைமை என பெயர் வைத்துள்ளார். ஏன் அவ்வாறு பெயர் வைத்துள்ளார்.

    உடைமை என்றால் செல்வம் என்று பொருள். ஆகவே அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளதால், அறிவை செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகக் கருதி, அறிவை, அறிவுச்செல்வமாக்கிக் கொள்ள வேண்டுகிறார் நம்மையெல்லாம்.

       அறிவைப்பற்றிக் கூற வேண்டியதையெல்லாம் ஒன்பது குறட்பாக்களில் கூறிவிட்டு நிறைவாக அறிவைப்பற்றி ஒட்டு மொத்தமாக இரத்தினச் சுருக்கமாக (to sum up) கடைசிக் குறட்பாவில் மொழிவதைக் கவனிப்போம்.  

    அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்

    என்னுடைய ரேனும் இலர்.” …. குறள் எண் 430

    வேறொன்றும் இல்லாது இருந்தாலும் அறிவுடையவர் எல்லாம் உடையவரே ஆகிறார் என அழுத்தமாகக் கூறுகிறார். வேறு என்ன இருப்பினும், அறிவில்லாதவர், ஒன்றும் இல்லாதவர் ஆவார் என ஆதங்கத்தோடு கூறுகிறார்.  வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற எல்லா வளங்கள் இல்லாவிடினும், அறிவுவளம் இருப்பவர் எல்லாம் உடையவராகிறார் என்கிறார். அறிவு வளமில்லாமல்வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற வளங்களைப் பெற்றிருப்பவரை ஒன்றும் இல்லாதவர் என்கிறார்.

    அறிவுடையவர், அறிவில்லாதவர் என்று பிரித்து, இருதரப்பினராகக் கூறியிருப்பதால் அறிவுடைய மனிதன், அறிவில்லாத மனிதன் என்று பொருளல்ல. உயிரினம் என்றாலே அறிவு உண்டு. மனித உயிரினத்திற்கு பிரத்தியேகமாக ஆறாவது அறிவு உள்ளது என மனிதன் கூறுகிறான். உண்மைதான். ஆறாவது அறிவை சரியாக, முறையாகப் பயன்படுத்தத் தெரியாது அறியாமையில் உள்ளவனுக்கு ஆறாம் அறிவு இருந்து என்ன பயன் என்று கருதிதான், அம்மனிதரை அறிவில்லாதவர் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.

    ஒரு மனிதனை “எல்லாம் உடையவர்” என்பது பற்றிய சமுதாயக் கருத்து என்ன?

    முதலில் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வவளத்திலிருந்து எல்லாவளங்களும் பெற்று,

    பிறகு, துன்பமிலா இன்பவாழ்வு வாழ்ந்து,

    எல்லோராலும் மதிக்கத்தக்க பெருவாழ்வு வாழ்பவரை,

    ‘எல்லாம் உடையவர்’ என்று சமுதாயம் கூறும். இஃதெல்லாம் மனிதனுக்கு எவ்வாறு, எப்போது கிட்டும்?

    FFC-127-அறிவிற்கு விருந்து - தெனிந்த நல்லறிவு வேண்டும்

     

    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டு அறவழியில் செல்வம் ஈட்டும் போது.

    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டு துன்பமிலா இன்பவாழ்வு வாழ முடியும்,

    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டு பெருவாழ்வு வாழமுடியும்.

     வேறு வழியில்லாமல்பேரறிவு, விலங்கினங்களாகத்தன்மாற்றம்அடைந்துவந்து, கடைசியாகத்தான், மனிதஇனமாகவந்துள்ளது. ஆகவேஅறிவுடன்சேர்ந்துவிட்டவிலங்கினப்பண்பானபரிணாமக்கசடை(animal imprint as evolutionary effluent that has come out during the process of transformation of Consciousness from fifth sense living beings to sixth sense living beings)நீக்கினால்தான்திருவள்ளுவர்கூறும்அறிவிற்கானவரையறையை(definition of consciousness)மனிதஅறிவால்எய்தமுடியும்.

    விலங்கினங்களின் அறிவு, ஐந்து கோசங்களில், அன்னமய கோசம், மனோ மயகோசத்தைத் தவிர மற்ற கோசங்களில் இயங்கத் தேவையில்லை, அவசியமும் இல்லை.  ஆனால் மனிதன் அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரண்டை மட்டுமே முக்கியம் எனக் கருதாமல், மற்ற கோசங்களுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்து, பிராணமய கோசம், விஞ்ஞானமன கோசம், ஆனந்தமய கோசத்திற்கு உயர்ந்து வர வேண்டும்.

    விஞ்ஞான மய கோசத்தில் அறிவு சிந்திக்கின்றது. சிந்தித்தலின் விளைவாக அடுத்த கட்டமான ஆனந்தமய கோசத்திற்கு வருகின்றது. ஆனந்த மயகோசத்தில்தான் ஒருமனிதர் எல்லாம் உடையவராகிறார். எல்லாம் இருந்தும் ஆனந்தம் இல்லையென்றால் என்ன பயன்? தேங்காயை உடைத்து சாப்பிடத் தெரியாத நாயிடம் தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும்?   உருட்டிக் கொண்டேதான் இருக்கும் என்று ஆன்மீக நூல்கள் எடுத்து இயம்புகின்றன.

    கோசம்’ என்பது ஆன்மாவின் இயக்க நிலையையும் எல்லை விரிவையும் குறிக்கும் சொல்லாகும்.

    5_Gosam_spiritual_ladder

       ஆகவே அறிவு பிராணமய கோசத்திற்கு வந்து, விஞ்ஞான மயகோசத்திற்கு வருவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும். அதாவது சிந்திக்க வேண்டும். சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிந்தனா பள்ளியில் சேர்ந்து (School of Thoughts) பண்பேற்றக் கல்வி பயில வேண்டும். அப்படி ஒரு பள்ளி உள்ளதா? உள்ளது. அவ்வைத்தாய் கூறும் இனியதை அனுபவிக்க அறிவினருடன் சேர்ந்திருத்தலும், மேலும்மேலும் இனியதை அனுபவிக்க, அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பிக்க வைப்பதும் தான் அந்த சிந்தனா பள்ளி.

    மேலும் அறிவினருடன் சேர்ந்து, இனிய பயனை அனுபவிக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், அறிவினரை மதித்து நடந்து இயற்கையின் திறனான இயல்பூக்க நியதிப்படி தரத்தில் உயரவேண்டும். அவ்வை கூறும் நான்கு இனியவைகளில் கடைசி இரண்டையும் பெற்று விட்டால் அறிவு ஆனந்தமயகோசத்திற்கு வந்து விட்டது என்று பொருள். அவ்வையார் கூறும் நான்கு இனியவைகள் என்னென்ன என்று அடுத்த விருந்தில்(21-10-2015)அறிந்து கொள்வோம்.

     

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    Loading