இன்றைய விருந்து

  • FFC – 127-அறிவிற்கு விருந்து

    வாழ்க மனித அறிவு                                                                                                                          வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து

    FFC – 127

    14-10-2015—புதன்

    sindhanai_vilakkam       அறிவிற்கு எது விருந்து, விருந்தின் அவசியம் என்ன, விருந்தின் பயன்கள் என்ன என்று சிந்திக்க இருக்கிறோம்.       முதலில் தலைப்பிற்கு வார்த்தை விளக்கம் காண்போம். தலைப்பில் ‘அறிவு’, ‘விருந்து’ என்கின்ற இரு வார்த்தைகள் உள்ளன. அறிவு என்பது எது என்று எல்லோரும் அறிவர். எது உணர்வதற்கு காரணமாக உள்ளதோஉயிரில் எது உணர்கின்றதோ அது அறிவு.

    ஆனால் அறிவு அரூபமானது. உருவமற்றது. ஆனால் உள்ளது. இது விந்தை.

    அடுத்த வார்த்தையான விருந்திற்கு வருவோம். விருந்து என்றால் என்ன? விருந்து என்பது சிறப்பான உணவு. ஒருவரை அல்லது பலரை அழைத்து வழங்கும் சிறப்பான உணவை விருந்து என்கிறோம். ஐம்புலன்களில் ஒன்றான ‘நா’ என்கின்ற புலனை மகிழ்விக்கக் கூடியதாக அமையும் உணவு விருந்தாகும். பொதுவாக புலன்களுக்கு பேருவகையூட்டும் ஒன்றாகவும் கொள்ளலாம் விருந்தை. உதாரணத்திற்கு நல்ல இன்னிசையை ‘செவிக்கு விருந்து’ என்றும் ரம்யமான இயற்கைக் காட்சிகளை கண்களுக்கு விருந்து’ என்றும் கூறுகிறோம். நாவிற்கு (வயிற்றுக்கு) விருந்தாக இருந்தாலும் சரி, செவிக்கு விருந்தாக இருந்தாலும் சரி, கண்களுக்கு விருந்தாக இருந்தாலும் சரி அனுபவிப்பது பொதுவான ஒன்றுதான். அதுதான் அறிவு. உணவு என்பது என்ன? உண்ணுவது உணவு? எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக உண்ணுகிறோம். உடல் வளர்ச்சிக்கு, உடல் இயக்கத்திற்கு வேண்டிய ஆற்றலை, சக்தியைப் பெறுவதற்காக உண்கிறோம். உணவும் விருந்துதான். நல்ல இன்னிசையும் விருந்துதான், ரம்மியமான இயற்கைக் காட்சிகளும் விருந்துதான் அறிவிற்கு. அவை புலன்களுக்கு விருந்து இல்லை என்பதனைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் புலன்கள் அனுபவிப்பதில்லை. அறிவுதான் அனுபவிக்கின்றது. புலன்கள் கருவிகளாக இருக்கின்றதே தவிர புலன்களுக்கு விருந்து இல்லை. இந்த நிலையில் ‘அறிவிற்கு விருந்து’ என்பது எதனைக் குறிக்கின்றது? ‘வயிற்றுப்பசி’ என்கின்ற துன்ப உணர்வை போக்குவதற்காக உணவு உண்கிறோம். அதுபோல் ‘அறிவுப்பசி’ என்கின்ற துன்ப உணர்விற்கான உணவு அறிவிற்கு விருந்தாகின்றது. மற்ற விருந்துகளில் அறிவிற்கு புலன்கள் தேவைப்படுகின்றது. ஆனால் அறிவிற்கு–விருந்தில் புலன்கள் ஏதும் அவசியமில்லை. மற்ற விருந்துகளில், அதாவது புலன் இன்பத்திற்கு, கருவிகளாக இருக்க புலன்கள் அவசியமாக இருப்பதால், புலன்கள் தாங்கும் அளவிற்கு மேல் விருந்து இருக்குமானால் புலன்கள் துன்புறும், சலிப்படையும். ஆனால் அறிவிற்கு – விருந்தில் புலன்கள் அவசியமில்லையாதலால் இங்கே அறிவிற்கு சலிப்பு என்பதே கிடையாது. அத்தகையை அறிவிற்கு–விருந்து எது? அதுதான் சிந்தனை. சிந்தனைதான் அறிவிற்கான விருந்தாக உள்ளது. இன்னிசை விருந்து என்பதுபோல, சிந்தனை விருந்து என்கிறோம். சிந்தனை விருந்தை அனுபவிப்பது அறிவுதான். அறிவுதான் சிந்தனை செய்கின்றது. அறிவிற்கு-–விருந்தில் சலிப்பு இல்லாமையால் அறிவிற்கு விருந்து பேரின்பமாக உள்ளது. இங்கே வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பேரின்பத்தைப் பற்றி அறிவுப்பூர்வமாகக் கூறுவதனைக் கவனிப்போம். இறைநிலையான மன அலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றினைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே ‘பேரின்பம்’ ஆகும் என்கிறார் மகரிஷி அவர்கள். (சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் என்கின்ற நூலில் பக்கம் 23 இல்) ஆங்கிலத்தில், “Rarely, when the mental wave expands and merges with the Gravity to realize its own potentials and functions in everything and everywhere, it is felt as the culmination of pleasure and satisfaction –ecstasy ” (In the book ‘Logical solutions for the problems of Humanity’ — page No.30) எனவே உயிர் வாழ்வதற்காக, உடல் வளர்ச்சிக்காக, உடல் இயக்கத்திற்காக வேண்டிய ஆற்றலை, சக்தியை பெறுவதற்காக உணவை உண்பதுபோல், • மனிதனாக உயிர் வாழ்வதற்கு, • அறிவு வளர்ச்சி அடைய, • அறிவு முழுமையடைய, • அறிவு சீர்மையில் இயங்க தேவையான ஆற்றலை – சக்தியைப் பெறுவதற்காக, • பேரின்பம் அனுபவிக்க, விருந்து தேவை என்கிறோம். அவ்விருந்தை அறிவிற்கு விருந்து என்கிறோம்.

    இந்த அறிவிற்கு விருந்தை அருந்தவே, தனது ஆதிநிலையில் இயலாததை, பேரறிவு, தனது தன்மாற்ற நிகழ்ச்சியில் ஆறாம் அறிவாக மலர்ச்சி அடைந்துள்ளது. மனிதனிடம் இயற்கை/இறை தனது முழு சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது. ஆகவே அறிவு சிந்திக்க வேண்டும். சிந்திக்க பயிற்சியும் அவசியம். இந்த நோக்கத்தில்தான் இந்த இணையதள சத்சங்கம், இறையருளாலும், அருட்குரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் திருவருளாலும், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்கள் துணையுடன் நடைபெற்று வருகின்றது. தலைப்பிற்குள் செல்வோம். அறிவைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், பொருட்பாலில் அறிவுடைமை என்கின்ற ஒர் அதிகாரத்தையே ஒதுக்கி, பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதிகாரத்திற்கு “அறிவு” என்று பெயர் வைத்திருக்கலாம் திருவள்ளுவர். ஆனால்  “அறிவுடைமை” எனப் பெயர் வைத்துள்ளார். காரணத்தோடுதான் அறிவுடைமை எனப் பெயா் வைத்துள்ளார். அதனை அடுத்த விருந்தில் 18-10-2015 ஞாயிறன்று சிந்திப்போம்.

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன் உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.   நன்றி, வாழ்க வளமுடன்

    Loading

  • FFC – 126-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                                                      வளர்க மனித அறிவு

     

    (Constant Awareness)

    அயரா விழிப்புணர்வு
    FFC – 126

    11-10-2015—ஞாயிறு

    அயரா விழிப்புணர்வு பற்றி சிந்தித்து வருகிறோம். அவ்வையார் ‘அறிவினரோடு சோ்ந்திருத்தலும், அறிவினரைக் கனவிலும், நினைவிலும் காண்பதும் இனிதிலும் இனிது’ என்கிறார். காரணம் அது அயரா விழிப்புணர்வில் இருக்க உதவும். அயரா விழிப்புணர்வில் இருப்பது இனிமையாகத்தானே இருக்கும்.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் வள்ளலாரின் அருளைப் பெற்றதை நமக்குத் தெரிவிக்க அருளியுள்ள பாடலுடன் அயரா விழிப்பு நிலைச் சிந்தனையை நிறைவு செய்வோம்.

    FFC-126- வள்ளல் பெருமானார்

     

    அருட்சோதி இராமலிங்க வள்ளலார், தேடி வந்து கூடுவாஞ்சேரியை அடைந்து, தன்னுடைய ஆன்மாவை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்க வைத்துக் கொண்டு 1953 லிருந்து பத்து ஆண்டுகள் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வழிகாட்டி வந்தார். அப்போது மகரிஷி அவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயமாக இருந்தன என அருட்தந்தை அவா்கள் கூறுகிறார்கள். இராமலிங்க வள்ளலார், அவர் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தனது உடலை ஆட்கொண்டு முடித்தார் என எண்ணுவதாக அருட்தந்தை அவர்கள் தன்னுடைய வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் கூறுகிறார்,

    இந்த நிகழ்வு நடந்து முடிந்து சுமார் 33 வருடங்கள் கழித்து மேலே கூறிய கவியினை அருட்தந்தை அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ளார். 1981 ஆம் வருடம் எழுதிய “எனது வாழ்க்கை விளக்கம்” எனும் நூலில் இராமலிங்க வள்ளலார் தனக்கு அருட்பாலித்த நிகழ்ச்சியினையும் அதனால் தான் அடைந்த அருட்பயனைக் கூறியுள்ளார். இருப்பினும் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிகழ்ச்சியினைக் கவிதையாக்கி நமக்குத் தெரிவதற்காக அருளியுள்ளார். காரணம் என்ன? அன்பா்களின் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

    வேதாத்திரி மகரிஷி நமக்கெல்லாம் தந்தை என்றால் (அருட்தந்தை) வள்ளலார் நமக்கெல்லாம் தாத்தா தானே? அருட்தாத்தாதானே! எனவே அருட்தாத்தா – திரு அருட் பிரகாச வள்ளலார் 30-01-1874 அன்று வெள்ளியன்று இரவு 12 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தருளியதை இப்போது நினைகூர்வது பெரும் பயன் அளிக்கும்.

    “இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்து திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அக்கங்கு இருப்போம். திருத்திடுவோம். அஞ்ச வேண்டாம்” என்பதே அன்று திருவாய் மலர்ந்தது.

    ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளலார் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும், வேறு பல மகான்கள் கூறியதும்? ஆகவேதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குருவணக்கப் பாடலில் மானசீக நான்கு குருமார்களின் பெயர்களை மட்டும் கூறாமல், மிகவும் அறிவுக்கூர்மை உடைய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிகவும் நன்றியுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், நாமும் ஐயமின்றி உணரவேண்டும் என்கின்ற அருள் வேட்கையுடனும் இது வரை அறிவையறிந்த அறிஞா்களின் அறிவாற்றல்கள் துணை செய்யுமாறு வேண்டுகின்றார். இதுதானே உண்மை !

    உடலளவில் அடையாளம் கொண்டு ”அந்த மகான் சொன்னார். இந்த மகான் சொன்னார்” என்று சொல்வதைத் தவிர்த்து பேரறிவேதான் அந்த மகான் வடிவிலும், இந்தமகான் வடிவிலும் கூறியிருக்கின்றது என்று அறிந்துணரப்படவேண்டியதே ஆன்மீக உண்மை! மனிதகுலப் பரிணாமத்தில், அறிஞர்களின் அவ்வப்போது தோற்றம் என்பது முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஓட்டம்(Unending Divine Relay Race)

    எனவே அருட்தாத்தா வள்ளலார் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என் ஆணித்தரமாக மொழிந்துள்ளதை எப்போதும் நினைவில் கொள்வோம். நாம் திருந்துவதற்காகப் பிறந்துள்ளோம். எனவே “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்கின்ற வள்ளாரின் அருட்செய்திற்கிணங்க திருந்திடுவோம் அதி விரைவில். வள்ளாலாரின் ஆன்மாவின் ஏக்கத்தையும், சமுதாய நல அக்கறையையும் கவனிக்க வேண்டும். ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளார் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும்?

    இறை வெட்டவெளியாக அறிவாக உள்ளது என்று அறிந்து விட்டு வேறு எந்த உருவக் கடவுள் வந்து நமக்கு நேரிடையாக நற்கதியை அடையச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டவா்களாக இருந்துதான் நாம் இந்த இறையின் உண்மைநிலையை அறிந்து கொண்டோம். அப்படியானால் மகான்கள் கூறுவது போல் அறநெறி வாழ்க்கை வாழ்வதற்கு என்ன தயக்கம்? எது குறுக்கீடாக உள்ளது? சிந்தனை செய்வோம்.

    ”எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் குரு உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்” என்கின்ற வேதாத்திரி மகரிஷியின் உறுதி மொழியினை

    சிரமேற்கொண்டு செயல்கள் ஆற்றுவோம்.

    திட்டமிடுவோம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே அடைவதற்கு.

    பேரின்பம் முக்கியமா அல்லது புலனின்பமே முக்கியமா என முடிவு செய்வோம்.

    இயல்பூக்க நியதியைத் தரமாற்றத்திற்குப் பயன்படுத்துவோம்.

    தடங்கல்களைச் சத்சங்கம் மூலம் சரி செய்து கொள்வோம்.

    விரைவில் இறையின் அருளுக்குப் பாத்திரமாகி, இறைஉணர்வு பெற்று நாமும் சுகம் அடைந்து மற்றவா்களுக்கும், சமுதாயத்திற்கும் பேருதவியாக இருப்போம். ‘சாதனைதான் அறநெறி’ என்று அருளியுள்ள அருட்தந்தையின் கவியுடன் சிந்தனையை நிறைவு செய்வோம்.

    FFC-126-அறநெறி

    இவ்வுலகம் உய்ய, உலக மக்களைத் திருத்தி அறம் மலர திருவுளம் கொண்ட இது வரை வந்துள்ள அனைத்து மகான்களின் அறிவாற்றலின் துணை கொண்டு அறிவுத் தொண்டு செய்து மகிழ்வோம். அதற்கு நமக்கெல்லாம் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்று அருளிய அருட்பிராகாச வள்ளலாரின் அருள் துணை செய்யட்டும்.

    அயரா விழிப்பு நிலையோடு இருப்பதும் இறை-நினைவோடு(இறை உணர்வோடு) இருப்பதும் வேறு வேறன்று. இரண்டும் ஒன்றே. ஆகவே விழிப்பு நிலை என்கின்ற அருள்வெளிச்சத்தில் மகிழ்வோடு வாழ்வோம்.

    வருகின்ற புதன்கிழமையன்று(14-10-2015) வேறொரு தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திப்போம். வாழ்க வளமுடன்

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள்

    கருத்துக்கள்’ (Click Here) பகுதியில் பதிவு செய்யவும். 

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    Loading

  • FFC – 125-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                                                                         வளர்க மனித அறிவு

    (Constant Awareness)

    அயரா விழிப்புணர்வு

    FFC – 125

    07-10-2015—புதன்

     

    FFC-125- விழிப்பு எனும் அருள் வெளிச்சம்

    ஐந்து நலப் பேறுகள் எப்போது கிட்டும்?

    அயரா விழிப்புணர்வின் மேன்மையினைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். சமையல் அறையில் பணிபுரிவது, மகிழுந்து ஓட்டுவது, புலன் இன்பத்தைத் துய்ப்பது ஆகியனவற்றில் எல்லாம் விழிப்புணர்வு தேவை என்று பார்த்தோம். கண்கள் விழித்திருக்கும் போது, அதாவது விழிப்பு நிலையிலேயே அயராத விழிப்பு நிலை தேவை என்று பார்த்தோம். இது உலகியல் வாழ்க்கை வாழ்வதற்கு மட்டும் தேவையானது போல் தெரியலாம். ஆன்மீக வாழ்விற்கென்று அயரா விழிப்பு நிலை பற்றி ஒன்றும் சொல்லாதது போல் இருக்கலாம்.

    உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்றுத் தனித்தனியாகக் கிடையாது. ஆன்மா தன் பழிச்செயல்களைத் தூய்மை செய்து பிறவிப்பயனை எய்துவதற்காக இவ்வுலகில் பிறவி எடுத்துள்ளது. ஆகவே அயரா விழிப்புநிலை என்பது, அதன் இறுதியான பொருளில்(Ultimate sense) “மயக்கம் நீங்கி தன்னுடைய மூலநிலையை மறவாது இருத்தலேயாகும்.”

    ஆன்மா தன் மூல நிலையை உணரும் போது என்ன உணரும்? அதனை இப்போதே வேதாத்திரியம் கருத்தியலாகக் கூறிவிட்டது. அதனை உறுதி படுத்த செய்முறையில் (தவத்தில்)வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் மனிதனின் பண்பேற்றம் முழுமையடைந்து நிரந்தரமாக நிலைக்கும். ஆகவே மனிதன் கருத்தியலாக பெற்ற இறைஞானத்தை நினைவில் கொண்டு பழகி வர வேண்டும். இறைஞானம் என்ன கூறுகின்றது?

    எல்லாம் வல்ல ‘இறை’ என்கின்ற மெய்ப்பொருளே எழுச்சி பெற்று பிரஞ்சமாகி, அதில் இவ்வுலகமாக. உயிர்களாக தன்மாற்றத்தால் காட்சி அளிக்கின்றது. அந்தக் காட்சியில் இறையின் தன்மையான அறிவு வெளிப்படுகின்றது. சுத்தவெளி அணுவாக இயங்கி பஞ்சபூதங்களாகி, பிரபஞ்சமாகி உலகமாக, உயிர்களாக, உயிரின் அலையான மனமாக, ஐயறிவாக தன்மாற்றம் அடையும் வரை இறையின் தன்மை வெளிப்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஆனால் ஆறாம் அறிவாக மலர்ந்த போது இறையின் தன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

    இறையுணர் ஆன்மீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்போதும் விழிப்பு நிலை கொண்டு பிறருக்குத் துன்பம் தராத செயல்களையே எக்கணமும் செய்து கொண்டிருக்கின்ற விழிப்பு நிலையேதான் மெய்ஞானம் ஆகும். இறையே நானாகவும், சமுதாயமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்றது இறைஞானம். இந்த நினைப்பை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அயரா விழிப்பினால்தான், அறிவுமுழுமையின் ஐந்து நலப் பேறுகளான

    நுண்மான் நுழைபுலன்(Perspicacity),
    ஏற்புத்திறன்(Receptivity),
    தக அமைதல்(Adaptability),
    பெருந்தன்மை(Magnanimity),
    ஆக்கத்திறன்(Creativity)

    ஆகியவைகளை அடையமுடியும்.

    மேலும் ஐந்து பயன்களான

    இசைவு(Harmony),
    நிறைவு(Satishfaction),
    மகிழ்வு(Happiness),
    மெய்யறிவு(Wisdom),
    அமைதி(Peace)

    ஆகியவைகளும் பெறமுடியும். இந்த ஐந்து நலப் பேறுகள் மற்றும் பயன்களுக்கும், அயரா விழிப்புணர்விற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்று பயிற்சியாகச் சிந்தனை செய்து பார்க்கலாமே.

    மனவளக்கலையின் ஐந்து நலப் பேறுகள் எப்போது கிட்டும்?

     

    அயராவிழிப்பு நிலையை எட்டாது அறிவு ஐந்துநலப் பேறுகளையும் அடைய முடியாது. எனவேதான் அயரா விழிப்பு நிலை அறிவின் உச்சநிலையான ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    1) நுண்மான் நுழை புலன்(Perspicacity)—– இதற்கு அயரா விழிப்பு நிலைத் தேவையில்லையா? இல்லையென்றால் நுண்மாண் நுழை புலன் என்கின்ற பேறு கிட்டுமா? இந்நிலை வேண்டாமா அன்றாட வாழ்க்கைக்கு? நுண்மாண் நுழை புலன், அயரா விழிப்புநிலை என்பவை வேறு வேறா?

    2) ஏற்புத்திறன்(Receptivity) —-அயரா விழிப்பு நிலை இல்லையெனில் ஏற்புத்திறன் எப்படி கிட்டும்?
    3) தக அமைதல்(Adaptibilty) — அயரா விழிப்பு நிலை இல்லையெனில் தக அமைதல் எவ்வாறு கிட்டும்?

    4) பெருந்தன்மை(Magnanimity—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் பெருந்தன்மை எவ்வாறு கிட்டும்?

    5) ஆக்கத்திறன்(Creativity) —— அயரா விழிப்பு நிலை இல்லையெனில் ஆக்கத்திறன் எவ்வாறு கிட்டும்?

    
    மனவளக் கலையின் ஐந்து பயன்கள் எவ்விதத்தில் கிட்டும்?

    அயரா விழிப்பு நிலை எய்தி, ஐந்து நலப்பேறுகள் பெற்ற பின்னர்தான் ஐந்து பயன்களையும் பெற முடியும்.

    1) இசைவு(Harmony)—– அயரா விழிப்பு நிலை இல்லையெனில் இசைவு எப்படி கிட்டும்?

    2) நிறைவு (Satisfaction)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் நிறைவு எப்படி கிட்டும்?

    3) மகிழ்வு(Happiness)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் மகிழ்வு எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே மகிழ்வு தானே!

    4) மெய்யறிவுWisdom)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் மெய்யறிவு எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே அறிவின் இறுதியான உயர்ந்த நிலைதானே ! அறிவின் இறுதியான உயர்ந்த நிலையே மெய்யறிவுதானே!

    5) அமைதி(Peace) —— அயரா விழிப்பு நிலை இல்லையெனில் அமைதி எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே அறிவின் இறுதியான உயர்ந்த நிலை என்கின்றபோது அதுதானே பூர்வீக நிலை. அதுதானே அமைதி நிலை !

    குறிப்பு:- ஒவ்வொரு பேறு, பயன் ஆகியவற்றின் வரையறையை அயரா விழிப்பு நிலை வரையறையுடன் ஒத்துப் (Mapping) பார்த்து அயரா விழிப்பு நிலையின் தேவையை உணர்ந்து, அதன் மேன்மையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ”திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்று உறுதி அளித்த வள்லளார் தான் தன் பூதவுடலை விட்ட பின்னர் வேதாத்திரி மகரிஷியைத் தேர்ந்தெடுத்து, அவரது உடலில் பத்து வருடங்கள் தங்கி உலக மக்களை திருந்திட அஞ்சாமல் சொல்ல வேண்டியதை மகரிஷியின் வழியாக தெரிவித்து உலக மக்களைத் திருத்தி உய்யவைக்க திட்டமிட்டது இயற்கை என்பதனை நினைவு கூர்வோம். ஒருவருடைய அயரா விழிப்பு நிலையை, தானே, சரிபார்த்துக் கொள்ள ஒரு யுக்தியைக் கையாளலாம்.

    அஃதாவது:

    “காலையில் உறக்கத்திலிருந்து எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை யார் எங்கிருந்தாலும், எப்பணியில் ஈடுபட்டிருந்தாலும் ஒரு மணிக்கு ஒரு முறை ”நான் இந்த ஒரு மணிநேரமும் இறையினுடைய அருளுக்குப் பாத்திரமாக இருந்தேனா? ” என நம்மையே சோதித்துக் கொள்ள வேண்டும்.

    இப்படிச் செய்வதால் அறிவு அயரா விழிப்பு நிலையிலேயே இருக்க பேருதவியாக இருக்கும். இறையருளுக்கு பாத்திரமாகுதல் என்பதும் அயரா விழிப்பு நிலை என்பதும் வேறன்று. இரண்டுமே ஒன்றுதான்.

    ஞாயிறன்று (11-10-2015) தொடர்வோம். வாழ்க வளமுடன்.

    Loading

  • அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    (Constant Awareness)

    அயரா விழிப்புணர்வு

    FFC – 124

    04-10-2015—ஞாயிறு

    அயரா விழிப்புணர்வு என்கின்ற தலைப்பிலே சிந்தித்து வருகிறோம். அயராவிழிப்புணர்வு இருக்குமானால் ‘தன்குற்றம் உணர்ந்து பிறர் குற்றம் மன்னிப்பதில்’ வெற்றி அடையமுடியும். தன்னைத் திருத்திக் கொள்வது மிகவும் எளிது. யாரையும் யாரும் திருத்த முடியாது. அவரவர்களே திருந்தினால்தான் முடியும். எனவே பிறரைத் திருத்த முயல்வதை விட்டு விட்டு தன்குறையைத் திருத்திக் கொள்வதில் வெற்றி பெற்றால், ஒருவேளை அவர்களும் திருந்தலாம். “தன்குறையைக் காண்பதே ஞானம்” என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

    இத்தருணத்தில் கவிதை வடிவிலே மகரிஷி அவர்கள் கூறியுள்ளதை அறிந்து மகிழ்வுறுவோம்.

    FFC-124-தன் குற்றம் பாடல்

     வாழ்த்தி வாழ்வோம் என்கிறார் வாழ்வியல் உண்மைகளைக்கூறும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்கின்ற வாழ்வியல் சூத்திரத்தை அறிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

    ஏனெனில் அறிவு தன்னைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதால் அதற்கு மகிழ்ச்சி உண்டாகின்றது. உள்ளம் பூரிக்கின்றது. ஆனால் அந்நல்வழி குணநலனைப் பெற்றிராத, ஏற்கனவே அதனைப் பழகாத மனம் அறிவிற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆரம்பத்தில் மனம் ஒத்துழைக்காமல் இருக்கலாம். “நான் ஏன் பிறர் குற்றங்களைப் பெரிது படுத்தாது மன்னிக்க வேண்டும்?” போன்ற பல வினாக்களை எழுப்பி, அறிவுடன் ஒத்துழைக்காமல் இருப்பதற்கு நம்மையே பல கேள்விகள் கேட்கும்.

    இதே போன்று எப்பொழுதெல்லாம் மனிதன் நல்வழிக்குத் திரும்ப முயற்சி செய்கின்றானோ அப்போதெல்லாம் மனம் ஒத்துழைக்காது. மனதைக் குறைகூறுவதில் பயனில்லை. பழக்கப்பட்ட உடல் செல்கள், பழகிவிட்ட மனம் மீண்டும் பழக்கத்தை மாற்றி, விளக்க வழியே நல்வழிக்கு வருவதற்கு தடைகளாக உள்ளன. அதனால் எந்த ஒரு எண்ணத்திற்கோ, அல்லது எந்த ஒரு பழக்கத்திற்கோ, ஆராய்ச்சி செய்யாது, சிந்திக்காமல் ஆளாகிவிடக்கூடாது. அடிமையாகிவிடக்கூடாது. ஏனெனில் மனம் பழகிவிட்டது. அதனால் சில சமயங்களில் உடல் செல்கள் கூட ஒத்துழைக்காது. மனம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் அதற்கு உகந்த பதிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உலகமாந்தரை நினைத்து மகரிஷி அவா்கள் மொழிந்துள்ளதை இங்கே நினைவு கூர்வது நல்லது.
    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்Man is struggling between habit and wisdom.” மனிதனுக்கு சில வரையறைகள் உள்ளன. Man is a bundle of thoughts. Man is a social animal. மகரிஷி அவர்கள் மனிதனுடைய மற்றொரு வரையறையாக கூறுவது:- “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். வேறு எந்த சீவனுக்கும் இந்த வரையறை பொருந்தாது மனிதனுக்கு மட்டுமே பொருந்துகின்ற வரையறை இது.
    ஏனெனில் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மற்ற சீவன்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் அவை அதற்கென அன்று இயற்கை வைத்துள்ள வழியே வாழ்ந்து வருகின்றன. தங்கள் வாழ்க்கை நெறிகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மேலும் மற்ற சீவன்கள் ஐந்தறிவு அல்லது அதற்கும் கீழ் நிலையில்தான் உள்ளன. ஆனால் மனிதனின் ஆறாம் அறிவு ஐந்தறிவு நிலையிலிருந்து உயர்ந்துள்ளது. ஆதி மனிதன் தோன்றியபோது வாழ்ந்த நிலையிலேயே மனிதன் இன்று வாழவில்லை. நெறிகளை மாற்றிக் கொண்டான். ஆகவே மனிதன் இயற்கை வகுத்துள்ள வழியே வாழவில்லை. அங்கேதான் மனிதனுக்கு இயற்கை வழி வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் அறிவுரை விளங்கங்கள் தேவைப்படுகின்றன. அந்த விளக்கங்கள் மனிதன் பெற்றாலும் விளக்கங்கள் வழியே வாழமுடியாமல் பழைய தீமையளிக்கக் கூடிய பழக்கங்கள் வழியே வாழ்ந்து வருவதை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளதைக் கீழே உள்ள படங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    FFC-124-படம் 1-1-பழக்கத்திற்கும் வினக்கத்திற்கும்

    FFC-124-படம் 1-2 பழக்கப்பதிவு விளக்கப்பதிவு

    படம். 1 கருவில் திரு இல்லாதவர்களின் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதில் உள்ள போராட்ட நிலையை சுருக்கமாக விளக்கும் படங்கள்(Schematic Diagram showing the struggle between Habit and wisdom for those without Spiritual Prudence at the time of birth).

    FFC-124-படம்-2 பழக்கதிற்கும் விளக்கத்திற்கும்

     

    இது வரை எவ்வளவோ அறநூல்களை இயற்கை அளித்திருந்தாலும், மனிதகுலத்தால் இன்னும் அவலநிலையிலிருந்து மீண்டு வரமுடியாதற்கு, பல்லாயிரம் பிறவிகளாக பழகிய பழக்கப் பதிவுகள் காரணமாக உள்ளது. விளக்கத்தையும் மனிதன் விட முடியவில்லை. காரணம் அவன் ஆறாம் அறிவுடையவனாயிற்றே! விளக்கம் பெறுவதற்கும் அவனுக்கு பெரும் ஆசையுள்ளது. ஆனால் பல்லாயிரம் பிறவிகளாக அவனது கருமையம்(ஆன்மா) சுமந்து வந்த விளக்கமில்லாதப் பதிவுகளை இறக்கி வைக்கவோ அல்லது துடைக்கவோ முடியவில்லை. வேதாத்திரியம், கல்வி, எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூறியது, இப்போது பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை ஒழுக்கப் பழக்கறிவு, இயற்கைத் தத்துவ அறிவும் மனித மாண்புக்கல்வியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது,

    எனவே விளக்கங்களும், சத்சங்கமும் தான் மனதிற்கு விழிப்பு நிலையில் பழகுவதற்கு பெரும் துணையாக இருக்கும். தன்குற்றம் உணர்வதிலும், பிறர் குற்றம் மன்னிப்பதிலும் அயராத விழிப்பு தேவை. அப்படி விழிப்புடன் இருந்து இருந்துப் பழகி, சில நேரங்களில் தவறினாலும், தொய்வு ஏற்படாது முயற்சி செய்து, செய்து பழகப்பழக, பின்னர் அந்நல்வழிக் குணநலன் கைவல்யாமாகும். சித்திரமும் கைப்பழக்கம் என அவ்வைத் தாய் கூறியுள்ளது போல் எந்த தீய பழக்கத்தையும் நற்பழக்கமாக மாற்றி அமைத்திட பழகவேண்டும். அதோடு அவ்வைத்தாய் கூறுவது போன்று அறிவினரைச் (அறிவை அறிந்த குருவைச்) சேர வேண்டும். அடுத்த புதனன்று (07-10-2015) சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    Loading

  • FFC -123-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    ( Constant Awareness )

     அயரா விழிப்புணர்வு

    FFC -123

    30-09-2015–புதன்

    FFC-123-விழிப்பு நிலை சீவன்முக்தி-பாடல்1

     

    அறிவின் மூன்றாம் வளர்நிலை

    3) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல்.

    அயரா விழிப்புணர்வு என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்தித்து வருகிறோம். இன்று அறிவின் வளர் நிலைகளில் மூன்றாவது நிலையான ‘எண்ணம், சொல், செயல் ஆகியவைகளில் விழிப்புடன் இருத்தல்’ பற்றி சிந்திக்க இருக்கிறோம். மனிதனின் கர்மா. எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் வழியாகத்தான் நடைபெறுகிறது. மனிதனின் கர்மாவிற்கு ஏற்ப விளைவுகள் வருவதால், அதற்கேற்ப இன்ப-துன்பம் வருவதால், துன்பத்தை தவிர்க்க எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் விழிப்பு நிலை வேண்டும்.

    மேலே உள்ள கவியின் வாயிலாக எண்ணம்-செயல், விளக்க வழியே இல்லாமல், பழக்க வழியே இருக்குமானால் இறைஉணர்வை எய்த முடியாது என்பதனை அறிய வேண்டும். விழிப்பு வந்தால் சீவனில் இறைத்தன்மைளைக் காணலாம் என்கிறார் மகரிஷி அவர்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் அறிவின் வளர்நிலைகளில் ‘எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் விழிப்பு’ இருத்தலை மூன்றாவதும் கடைசியுமாக சோ்த்துள்ளார்,

    இருபத்து நான்கு மணிநேரத்தில் எட்டு மணிநேரம் உறக்கத்திற்காக செலவழிந்து விடுகின்றது. மீதமுள்ள பதினாறு மணி நேரம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான் மனிதன். அப்போதுதான் அவனுக்கு தவறுகள் செய்யும் சிக்கல்கள் வருகின்றன. தூங்காமல் இருக்கும் போது விழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு உணர்வும் உள்ளது. அப்படியிருக்கும் போது, அறிவிற்கு அது உணர்வு நிலைதான் என்றாலும் அப்போதும் அதற்குப் பிரத்தியேகமான விழிப்பு உணர்வு வேண்டும் என்கிறார்.

    அதனை அயரா விழிப்பு நிலை என்கிறார். அதனை அறிவிற்கான வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தச் சொல்கிறார். பேரறிவின் தன்மாற்றத்தில், மனித அறிவு ஞானத்தைப் (அறிவையறிந்த தெளிவு) பெறுவற்கான பயணத்தில், அறிவு அறிந்த அனுபவங்களில் (knowledge) அயரா விழிப்புணர்வு என்பது உச்ச நிலை என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். “Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards Wisdom” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மனிதன் உறங்கும் போது தவறுகள் செய்ய முடியாது. விழித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் தவறுகள் செய்கிறான். எனவேதான் கண் விழித்துக்கொண்டு, உணர்வுகள் உள்ள நிலையில் அயரா விழிப்பு நிலை வேண்டும் என்கிறார். இந்த அயரா விழிப்பு நிலையை மேன்மையாகக் கூறுகிறார். இந்த நிலையை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். இந்த அயரா விழிப்பு நிலையைத்தான் மெய்ஞானம் என்கிறார். அறிவிற்குள்ள விழிப்புணர்வு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் (School of thoughts) இருக்கின்றன.

    ஒன்று Materialistic awareness. மற்றொன்று Esoteric Awareness. Materialistic awarenss என்பது உலகியல் சம்பந்தப்பட்டது. சமையல் அறையில் சமைப்பதிலிருந்து ஆய்வுக் கூடத்தில் செய்யும் ஆராய்ச்சி வரையுள்ள விழிப்புணா்வாகும். ஆனால் “Esoteric Awareness“ என்பது இயற்கையின் இரகசியங்களை அறிவதிலும், அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்வதிலும் வேண்டிய விழிப்புணர்வாகும். மனிதனுக்கு “ஆன்ம விழிப்புணர்வு–Spiritual awakening” வேண்டும். . வேதாந்த நூல்கள் கூறுதாவது:- “ In Awakened Consciousness, Awareness is at its Zenith(உன்னத நிலை).” “Awareness Is God” என்கின்றது வேதாந்தம்.

    இந்த உயர்ந்த விழிப்பு நிலை வந்து விட்டால் மனிதன் பிறர் தவறுகளைக் குறையாக எண்ணமாட்டான். அதில் விழிப்புணர்வோடு இருப்பான். அப்படிக் குறைகளாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாமல், “அவர்களுடைய அறிவு நிலை அவ்வளவுதான். அதற்கேற்ப அவர்கள் செயல்களைச் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும்” என்கின்ற உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவான். தன்னுடைய செயல்களில் குற்றம் இருக்காது. மாறாக தன்னுடைய குற்றம் கண்டு தன்னைத் திருத்தி எப்போதும் நன்மையே செய்யும் தகைமை அவனுக்கு வந்துவிடும் என்கிறார் வாழ்வியல் விஞ்ஞானியும் மற்றும் அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) விஞ்ஞானியுமான, *அறிவியலாளர் (Scientist Science of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விஞ்ஞானத்தில் இன்றுவரை, அறிவு பற்றிய விளங்கங்கள் இல்லாமலே விடுபட்டுள்ளது. “அறிவே தெய்வம்”, இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது, “எல்லாவற்றையும் அறியக்கூடியது இறை” என்று ஆன்மீக நூல்கள் கூறியிருந்தாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்துள்ள அறிவைப் பற்றிய விளக்கம்தான் மெய்ஞானத்தை தெளிவாக்குகிறது. மெய்ஞானத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வேதாத்திரியத்தின் தோற்றம் மெய்ஞான உலகில் ஒரு மைல்கல். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி விஞ்ஞானத்தில் இல்லாத தெளிவான விளக்கம் வேதாத்திரியத்தில் உள்ள அறிவைப்பற்றிய விளக்கத்தால் கிடைத்துள்ளது.

    ஆகவே அறிவைப்பற்றிய தெளிவான அறிவுபூர்வமான விளக்கங்களை அளித்து, அறிவிற்கான இயலை (அறிவு+இயல்=அறிவியல்) (Science of Consciousness) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்களை *அறிவியலாளர், அறிவியல் விஞ்ஞானி என்கிறோம். சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகப் புகழ் விஞ்ஞானி வாயிலாக “விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும்” என்று ஏற்கனவே இயற்கை விருப்பம் தெரிவித்திருந்ததை, அவா்களுக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, நடத்தி பூர்த்தி செய்து விட்டது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைக்கப்பட்டு விட்டது. அத்வைத விஞ்ஞானத்தை (Advaidic Science) உருவாக்கிவிட்டது இயற்கை.

    விழிப்புணா்வின் மேன்மையைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் போது, “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அடுத்த ஞாயிறன்று(04-10-2015) நினைவு கூர்வோம். வாழ்க வளமுடன்.

    Loading