இன்றைய விருந்து

  • ஏன் ‘அறிவே’  தெய்வம் எனப்படுகின்றது?

      வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     ஏன் ‘அறிவே’  தெய்வம் எனப்படுகின்றது?

    அ.வி.எண்.56 — (1/?)

     

    11-02-2015 – புதன்

     

          வாழ்க வளமுடன்.

          சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டு ‘ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது?’ என்கின்ற  சிந்தனையைத்தொடங்கலாம்.   அந்த சம்பவம்தான் இன்றைய சிந்தனைக்கான தலைப்பிற்கு காரணமாக உள்ளதால் அந்த சம்பவம் என்ன என்று அறிந்து கொள்ளலாம்.

        பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உடற் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக தனது தாயாருடன் மன்றத்திற்கு வந்தாள்.  வரும்போது வாசற்கதவில் ஒட்டப்பட்ட இருந்த  ‘அறிவே தெய்வம்’  என்கின்ற ‘Sticker’ அவளுடைய கண்களில் பட்டது.  எத்தனையோ அன்பர்கள் அந்த வாசகத்தை பார்த்துவிட்டுத்தான் உள்ளே வருகின்றனர்.  மற்றவர்களுக்கு எழாத ஒரு வினா இந்த பெண்ணிற்கு மட்டும் மன்றத்திற்கு வந்த முதல் நாளன்றே . எழுந்துவிட்டது?  ‘அறிவே தெய்வம்‘  என்கின்ற வாசகம் அந்தப் பெண்ணை ஈா்த்தது.  அவளது அறிவை சிந்திக்க வைத்தது.

        அந்த பெண்ணிற்கு அப்போது பதினேழே வயதுதான் என்றாலும், அவள் ஏற்கனவே சுவாமி விவேகானந்தர் மீது பக்தியும், மரியாதையும் கொண்டிருந்தாள்.  சிறுமியாக இருக்கும்போதே யாருடைய தூண்டுதல் இன்றி, தானாகவே சுவாமி விவேகானந்தரின் நூல்களை வாங்கிப் படித்திருக்கிறாள்.  ஆகவே அவள் “எல்லாமே தெய்வம்” என்கின்ற அளவிலே அத்வைதம் பற்றி அறிந்திருந்தாள். இப்போது அவள் வினவிய வினாவிற்கு வருவோம்.

     ‘எல்லாமே தெய்வம்’ என்று அத்வைதம் கூறும் போது அறிவும் தெய்வம் என்றுதானே கூறவேண்டும்,  ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது” என்பதே அவள் தொலைபேசியில்  கேட்ட  வினா.  தெய்வமே எல்லாமாகவும் இருக்கும்போது, அறிவும் அந்த எல்லாமாக இருப்பதில் ஒன்றுதானே. அப்படியிருக்கும் போது அறி-வும்தெய்வம் என்று கூறாமல் அறி-வே தெய்வம் என அறிவை மட்டும் தனிமைப் (single out) படுத்தி ஏன் கூறப்படுகின்றது என்பது அவளுடைய வினாவின் அர்த்தம்.  இது நியாமான வினாதானே?

       இந்த வினாவிற்கான விடையை புரிந்து கொள்ள வேண்டுமெனில், வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் முன்னரே தெரிந்திருக்க வேண்டும்.  அப்பெண்ணிற்கு அதெல்லாம் தெரியாது. இருப்பினும் வினா கேட்கப்பட்டுவிட்டது.  பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.  அதுவும் தொலைபேசியிலே விடை சொல்ல வேண்டும்.

          எது தெய்வமாக இருக்க முடியும் என்கின்ற காரண முடிவிற்கு (logical conclusion) வருவது எப்படி என்று சொல்லி,

          அவள் பள்ளியில் படித்த அறிவியலைக் கொண்டு  அணுவின் (chemical atom) அமைப்பை நினைவு படுத்தி,

    அந்த அணு எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லி,

    அணுவிற்கு மூலம் வெளி என்று ஒருவாறு சொல்லி,

    அந்த வெளியின் தன்மைகளில் அறிவு ஒன்றாகவும்,

          அந்த ஒன்றே எல்லாவற்றிலும், அதாவது உயிரற்ற சடப்பொருட்களிலும் மற்றும் உயிருள்ள சீவன்களிலும் பிரதானமாகவும்  இருப்பதால்  அறிவே தெய்வம் எனப்படுகின்றது என விளக்கம் முப்பது நிமிடங்களில் கொடுக்கப்பட்டது.

          இருப்பினும் அந்த பெண்ணிற்கு  ‘எல்லாமே தெய்வம்’ என்பது தெரிந்து ஏற்புடையதாக இருந்தாலும், ‘எவ்வாறு எல்லாமே தெய்வம்’ எனப்படுகின்ற வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் (தத்துவம்) அவளுக்குத் தெரியாத நிலையில் எந்த அளவில் அந்த விடை அவளுக்கு ஏற்புடையதாக இருந்ததோ தெரியவில்லை.  ஆனால் அப்போது அவளுக்கு விளங்காவிட்டாலும் அது பின்னர் ஒரு நாள்  விளங்கிவிடும் என்று வாழ்த்து கூறப்பட்டது.  இன்றைய அறிவிற்கு விருந்தில் அந்த வினாவிற்கான பதிலை அறிவதிலும், அப்படியொரு வினா எழுப்பிய அந்த அறிவின் சிறப்பையும் நினைந்து மகிழ்வோம்.

       வேதாத்திரிய இறைநிலை விஞ்ஞானம்   ‘வெளியே’ (Eternal Space) தெய்வம் எனக்கூறுகின்றது.  அந்த வெளி ஒன்றுமில்லாதது அல்ல.  அந்த வெளியே இறை என்றும், அது  நான்கு வளங்களைக் கொண்டது என்கின்றது வேதாத்திரியம்.

     “வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்

    வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்”            என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

      இந்த நான்கு வளங்களைக் கொண்ட வெளிதான் தன்னிறுக்கத்தால் நொறுங்கி துகள்களாகி, பின்னர் துகள்கள் ஒன்று சேர்ந்து விண்ணாகி, காற்றாகி, நீராகி, நெருப்பாகி, மண்ணாகியது.  பிறகு ஓரறிவிலிருந்து ஆறு அறிவு உயிரினங்களாகியுள்ளது. இவ்வாறிருக்கும்போது  எதனைத் தெய்வம்  என்று  சொல்வது?  எல்லாமே தெய்வம்.  தெய்வமேதான் எல்லாமாகவும் உள்ளது.  இப்பிரபஞ்ச மூல ஆற்றலே தெய்வம் எனலாமா? அல்லது பிரபஞ்ச மூல ஆற்றலின் நான்கு வளங்களான வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகியவை தெய்வம் என அழைப்பதா? அல்லது வெளியின் வளங்களைத் தனித்தனியாக பிரித்து தெய்வமென்பதா?

    அதாவது,

    வற்றாயிருப்பே தெய்வம் என்பதா?

    அல்லது

    பேராற்றலே தெய்வம் என்பதா?

    அல்லது

    அறிவே (பேரறிவே) தெய்வம் என்பதா?

    அல்லது

    காலமே தெய்வம் என்பதா?

    இவற்றில் எது பொருத்துமாக உள்ளது?  அறிவே தெய்வம் என்பது பொருத்தமாக இல்லையா?  பொருத்தமாக இருப்பதால் தான் அறிவே தெய்வம் எனப்படுகின்றது.  மற்ற வளங்களை நினைந்து, இறையை போற்றாமல் இல்லை.  எல்லாம் வல்ல தெய்வமது என்கிறோமே!  எல்லாம் வல்லது என்றால், அது வற்றாயிருப்பையும் பேராற்றலையும் தான் குறிக்கின்றது.    ஆதிநிலையின் வளமாக, வற்றாயிருப்பாக பேராற்றல் மட்டுமே   இருந்து, அறிவு இல்லாதிருந்தால்

    1)   இந்த பிரபஞ்சமும் உருவாகியிருக்க முடியாது.

    2)   அறிவைக் கொண்டு உணர்கின்ற உயரினங்களும் உருவாகியிருக்க முடியாது,

     

    எப்படி?

    உயிர்களுக்குச் சான்று உணர்வு. அந்த உணர்வை உணர்வது அறிவு. அப்படியிருக்கும் போது, உணா்கின்ற அறிவு, உயிர்களுக்கு எங்கிருந்து வந்திருக்க முடியும்?  உயிர்களுக்கு மூலமும் அந்த ஆதிநிலைதான். ஆகவே ஆதிநிலையில்  அறிவு இருந்ததால்தான் அதுதான் உயிர்களிடம் அறிவாக வந்துள்ளது.  எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் உயிர்களே உருவாகியிருக்க முடியாது என்று மேலே கூறிய இரண்டாவது கூற்று சரி.

       முதல் கூற்றான ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் இந்த உணா்வில்லாத இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியாது என்பது எவ்வாறு சரியாக உள்ளது என ஐயம் இருக்கும்.  பிரபஞ்சத்திற்கு அறிவு இல்லையே!  இந்த பிரபஞ்சத்திலுள்ள கோடானுகோடி நட்சத்திரங்கள் உயிரற்ற சடப்பொருட்கள் தானே (non-living beings). அவைகளின் மூலப் பொருளுக்கு  அறிவு தேவையில்லையே.  (ஆனால் அவைகளின் உற்பத்திக்கு அறிவு தேவையாக உள்ளது.) உயிரற்ற சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லையே!  எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாமல் வற்றாயிருப்பாக பேராற்றல்மட்டும் இருந்திருந்தால்கூட உயிரற்ற சடப்பொருளான இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியுமல்லவா?  எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதற்கூற்று எவ்வாறு சரி என ஐயம் வருவது நியாயம்தானே!   அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் 15-02-2015 அன்று அறிவோம்.   தொடரும்

    Loading

  • புகழும் உயர்புகழும் – 6 / 6

     

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 6 / 6

    அ.வி. 55

     

                                                              08-02-2015 ஞாயிறு

    ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை நினைவு கூர்வோம்.

    ffc-55- படம்- pugazh-உயர்புகழ்
    மேலும் புகழ் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதாவது: 

    புகழ் என்பது தன்முனைப்புக்கு போடும் தூபமில்லை.

    ஒருவரின் செயலின் நல்விளைவினால் மக்கள் கொடுக்கும் மதிப்புணர்வே புகழ்.

    சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டியது:

          இறையே எல்லாமாகவும், உயிர்களாகவும், அறிவாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் இருக்கின்றது.  அப்படி இருக்கும்போது மனிதன் என்பவன் யார்?  அவன் உயிர் யாருடையது?  அவன் அறிவு யாருடையது?  அவன் கைகள், கால்கள் ஆகிய உறுப்புகள் யாருடையது?  இந்த எல்லா வினாக்களுக்குமே ஒரே பதில் இறையினுடையதுதான் என்பது.

         புகழ் ஏற்படும்படி மனிதன் செய்த செயல் யாரால் செய்யப்பட்டது.  அந்தச் செயலை செய்யும் சூழல் யாரால் ஏற்படுத்தப்பட்டது? அந்தச்செயல் புரிந்ததில் அவனது உடலாற்றலும், மனமும், அறிவும், ஒன்று சேர்ந்தது யாரால்?  எல்லாமே இறையினால்தானே!  இது சம்பிரதாய பதில் இல்லை.  இதுதானே உண்மை. இந்த உண்மையறிந்து விழிப்போடு இருப்பதுதானே பேரின்பம்.

        அஃதன்றி புகழ் தன்னுடையது என்று நினைத்தால் என்ன பொருள்? நினைப்பது ஒன்று, செய்வது வேறு.  தன்முனைப்புதான் மனிதனையும் இறையையும் பிரித்து வைக்கும் திரை.  தன்முனைப்பு என்கின்ற திரையை நீக்கவேண்டிய பயிற்சியில்,  புகழுக்கு ஆசைப்படுவது தன்முனைப்பு என்கின்ற திரைக்கு மேலும் மேலும் திரையை போர்த்துவதாகும்.  ஏற்கனவே விலங்கினப் பண்பான பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கருமையத் தொடர்பாக நீடித்துக் கொண்டிருப்பதால் பிறருடைய புகழையும் மனிதன் அபகரிக்கத் தயங்குவதில்லை.

          புகழ் இறையுணர் நோக்கத்தையே மறைத்துவிடும். மறக்கச்செய்துவிடும்.

          புகழை விரும்புவதுபிறவியின் நோக்கத்தை உறுதியும் செய்யாது, உறுதி செய்தாலும் பிறவியின் நோக்கத்தை அடையவும் விடாது.

    புகழ் தன்முனைப்பை ஊக்குவிக்கும்

    புகழ், ‘இன்முகத்தையும், எளிமையையும்’ தனது செல்வமாக மகரிஷி அவர்கள் அனுபவித்ததை, ஒரு ஆன்மீக சாதகனைஅனுபவிக்க முடியாதபடி  செய்துவிடும்..

    புகழ் ஆன்மீகத்தின் உச்ச நிலையானத் தெளிவினை ஏற்படுத்தாது.

    புகழ் ஏகவெளியான வீடு பேற்றினை அடையவிடாது.

      பொருளையும், புலன் இன்பத்தையும் இழப்பதற்கு வேண்டுமென்றாலும்கூட தயாராக இருக்கும் மனிதன், புகழையும், செல்வாக்கையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை.

        மகரிஷி அவர்கள், மனிதனுக்கு வேண்டிய வளங்களில் ‘உயர்புகழை’ ஒன்றாகக் கருதி, அதனை மெய்ஞ்ஞானத்திற்கு முன்னா் நான்காவது வரிசையில் இணைத்துள்ளார்.  காரணம் என்ன?  புகழ் மனிதனுக்கு அவசியம் என்றுகருதியா சோ்த்துள்ளார்?  பிறவியின் நோக்கம் மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை அடைவது.   அந்த மெய்ஞ்ஞானத்திற்கு முன்னர் உயர்புகழை இணைத்துள்ளார்,

        மனிதன் சமுதாயத்தால் வளர்க்கவும், காக்கவும் படுகிறான்.  எனவே அந்த சமுதாயம் வளமாக இருக்க வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய ’கடன்’ உள்ளது.(Man has due to the society. Due to the society becomes duty).  அந்த கடன்தான் ’கடமை’ எனப்படுகின்றது. அந்த வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் என்ன புகழ் உள்ளது?  அதனை புகழ் எனக்கருதினால் அங்கே தன்முனைப்பு வந்துவிடுகின்றது.  ஆனால் மனிதன் செய்யும் கடமையினால் பயன் பெறும் மக்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவது தான் உயர்புகழ் என்கிறார் மகரிஷி அவர்கள்.

       புகழ் என்பது விரும்பிப் பெறுவதோ, ஏதேனும் ஒன்றைச்செய்து பெறுவதோ என்று நினைப்பதோ அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். சமுதாயத்திற்கு நன்மையான காரியங்களைச் செய்து, அதனாலே மக்களின் துன்பங்கள் நீங்கி, அந்த மக்கள் பெறும் மனநிறைவுதான் புகழ்.  மனநிறைவால் வரும் வாழ்த்தே உயர் புகழ் என்கிறார்.   உதாரணம் மகரிஷி அவர்கள் செய்துள்ள அறிவுத் தொண்டேயாகும்.

      ஆகவே மனிதனுக்கு புகழ் அவசியம் எனக்கருதி  உயர் புகழை  சங்கல்பங்களில் ஒன்றாக இணைக்கப்படவில்லை.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் எனக்கருதி. நேரிடையாக கடமையை ஆற்றுங்கள் எனவற்புறுத்தாமல் சொன்னது தான் உயர்புகழ்.

       மகான்கள் வரலாற்றில் தெளிவடைந்து இறையை உணர்ந்த பெரியோர்கள் அனைவருமே சமுதாயத்திற்கு சேவையைச் செய்ய முடியவில்லை.   அவ்வாறே மகரிஷி அவர்கள் இறையை உணர்ந்து விட்ட நிலையிலேயே இருந்து விட்டிருந்தால் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்காது இன்று.  கல்விநிலையங்களில் ஒழுக்கப்பழக்க அறிவையும், இயற்கைத்தத்துவ அறிவையும் கொண்டுசென்றிருக்க முடியாது.   இப்போது செய்யப்பட்டுவரும் அறிவுத்தொண்டே இல்லாமல் போயிருக்கும்.    “சிலர் இறையுணர்வால் பேரின்பம் பெறுகிறார்கள்,  வேறுசிலர் தொண்டால்  மனநிறைவு பெறுகிறார்கள்.  ஒரு சிலர்  இறையுணர்வாலும், தொண்டாலும்  மனநிறைவு பெறுகிறார்கள்” என்று கூறும் மகரிஷி, தான் இறையுணர்வாலும், தொண்டாலும் சரிசமமாக மனநிறைவு பெற்றதாகக் கூறியுள்ளார்கள். மகரிஷி அவர்கள் தான் சமுதாயத்திற்கு இயற்கையயைப்பற்றி கூறும் உண்மைகள் எல்லாம் இயற்கை தனக்கு அறிவித்தது.  எனவே அவர் அதனை சமுதாயத்திற்கு தெரிவித்து விடுவது தனது கடமையாகக் கருதினார்கள்.  இயற்கை தனக்கு தெரிவிக்கின்றது என்பதில் மனிதனுக்கு எங்கே புகழ்?

       இயற்கை தெரிவிப்பதை எடுத்துச் சொல்வதால் மக்கள் பயன் அடைவதால் வரும் மனநிறைவும், அதைக் கண்டு தான் மனநிறைவு பெறுவது தான் உயர் புகழாகும்.  ஆகவே இயற்கை சமுதாயத்திற்கு  தெரிவிக்க மகரிஷி அவர்களை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.  எல்லோரையும் கருவியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.  அதற்குரிய தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது. ஆனால் மகரிஷி அவர்கள், தன்னுடைய மாணவர்களை இயற்கை கருவியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.  ஆகவே இன்று சமுதாயம் உள்ள நிலையில் அறிவை மேம்படுத்தக் கூடிய அறிவுத்தொண்டு மிக, மிக அவசியமாக உள்ளது.  அந்த அறிவுத் தொண்டை செய்யவல்லவர்கள் வேதாத்திரி எண்ணப்பள்ளி மாணவர்கள்(Students of Vethathiri school of thoughts)  இவர்களை  ‘இறைத் தூதுவா்கள்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

       தூதுவர் என்றால் என்ன?  தூது என்றால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செய்தி அறிவிக்கும் பணி.  தூதுவர் என்றால் செய்தி அறிவிக்கும் பணியைச் செய்பவர்.  அப்படியானால் இறைத்தூதர் என்பவர்,  சிந்திப்பதன் மூலம், இறையிடமிருந்து செய்திகளை வாங்கி, விளங்கி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க அதனை சமுதாயத்திற்கு அறிவிப்பவராவார். இதன் மூலம் அறிவுத் தொண்டாற்றி, அதனால் சமுதாயம் பயன் பெற்று வாழ்வதை கண்ணுறும் நிகழ்ச்சியே உயர்புகழுக்கான செயலாகும்.

      பாராட்டு என்கின்ற சொல்லுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கமாவது: ஒருவரது செயலால் பாரே (உலகமே) பயனடைந்து மகிழ்ச்சியால் ஆடி குலுங்குவதால் (பார்+ ஆடுவது = பாராட்டு) வரும் சொற்களே பாராட்டு என்பார்.

       ஆகவே இன்றைய சமுதாயச் சூழலில்  சமுதாயத்திற்கு தேவைப்படுவது அறிவுத் தொண்டு.  ஆகவே அறிவுத் தொண்டாற்ற இறைத்தூதுவர்களாக செயலாற்ற வேண்டியே மகரிஷி அவர்கள் பயிற்சி அளித்து  ‘அருள்நிதி’ என்கின்ற பட்டத்தை அளித்துள்ளார்கள்.  எனவே உயர்புகழ் என்கின்ற சங்கல்பம் நிறைவேறுவதற்கேற்றவாறு அறிவில்  நாளும், நாளும் மேம்பட்டு அறிவுத் தொண்டாற்றி இன்புற்று வாழ்வோம்.  வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம். முற்றும்.

     

    *****

     

     

    Loading

  • புகழும் உயர்புகழும் – 5 / ?

     

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 5 / ?

    அ.வி. 52  

    01-02-2015 ஞாயிறு

    மீண்டும் காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

                                                       FFC-52-png

    காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடல் எட்டு வரிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் காந்த தத்துவ நூலில் மகரிஷி அவர்கள் அதற்காக அளித்துள்ள விளக்கவுரை 86 வரிகளில் அமைந்துள்ளது. இங்கே சுருக்கமாக அவ்விரிவுரையை அறிந்துகொள்வோம். இருப்பினும் அன்பர்கள் மீண்டும் மகரிஷி அவர்களின் விரிவுரையை வாசித்து பயன் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மனிதப் பிறவியின் நோக்கம் அறியாததால், அறிவை இறையோடு இணைத்து, விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளைக் கொண்ட அறநெறியை பழகிக் கொள்வதில்லை. ஆகவே பல பிறவிகளாக, கருத்தொடராக வந்துள்ள விலங்கினப் பதிவாகிய ‘பிறர் வளம் பறித்துண்டு வாழும் தன்மை’ சஞ்சித கா்மாவாக வந்துவிட்டது. அது பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம் (செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகிவிட்டது.

    ஆசை பெருகுவதால்,

    1) எவ்வளவு இருந்தாலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கின்ற மனநிலை பேராசையாகின்றது.
    2) அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு விடுகின்றது. உள்ளமும் கெடுகின்றது. அதற்கும் மேலாக மனித உறவில் இனிமை கெடுகின்றது.
    3) தன்னுடைய செயல்களைத் தொடரவும் முடிவதில்லை. நிறுத்தவும் முடிவதில்லை. தேக்கம் ஏற்படுகின்றது.
    4) விளைவு, மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    அவ்வாறு மனம் புண்பட்டு அமைதியிழந்து தவிப்பவர்களுக்கு தனது அனுவங்களைக் கொண்ட விளக்கங்ளைக் கூறுவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார் அப்பாடலின் விரிவுரையில்.
    பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகியவைகளில் புகுந்தழுந்தி மனித மனத்தைப் புண்ணாக்கிக் கொண்டவர்கள் இருள் வாழ்க்கையில் வாழ்கின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே புகுந்து, அழுந்தி, புண்ணாகுதல், மனித மனம் ஆகிய நான்கு சொற்களைக் கவனிக்க வேண்டும்.

    1) புகுந்து — தடையில்லாமல், யோசனை இல்லாமல், உள்ளே நுழைதல்

    2) அழுந்தி – உள்ளிறங்குதல், புதைதல், ஒட்டிக் கொள்ளுதல், நிலை கொள்ளுதல்.
    எனவே புகுந்து, அழுந்தி என்கின்ற இருசொற்களின் பொருளை உற்று நோக்கினால், ‘புகுந்தழுந்தி” என்று மகரிஷி அவர்கள் கூறும் உட்பொருளை புரிந்து கொள்ள முடியும். யோசனை இல்லாததால், நுண்மாண் நுழைபுலனறிவு, இல்லாது – விளைவறியாது, பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புதைந்து கொள்ளுதலை, புதைகுழியில் விழுந்து தானாகவே எழுந்து வரமுடியாத நிலையோடு ஒப்பிடுவதாகத் தெரிகின்றது.. புதைகுழியில் விழுந்தவர் வேறொருவரின் உதவியின்றி எழுந்து வர முடியாது. அதுபோல் இருளிலுள்ள இந்த சமுதாயம் மருள் என்கின்ற மயக்க நிலையில் ஏற்ற ஆசை, அதனால் வருகின்ற பழிச்செயல்களிலிருந்து மீள்வதற்கு புதைகுழியில் விழுந்தவருக்கு உதவும் வேறொருவர் போல், மகரிஷி அவர்கள் விளக்கம் தந்து உதவுகிறார்.
    3) புண்ணாகுதல் –
    உடல் உறுப்புகளில் புண் உண்டாவதை அறிவோம். உறுப்புகளில் சதை, இரத்தம் இருக்கும். அங்கே புண் உண்டாகும். புண் சரியாகவில்லையென்றால் சீழ் வரும். ஆனால் அரூபமாக இருக்கின்ற மனதில் எவ்வாறு புண் வரும்? புண்ணாகும் என்று கூறிச் சிந்திக்கச் செய்கிறார் இங்கே மகரிஷி.

    4) மனித மனம் –
    ‘மனித மனம்’ என்று கூறியிருப்பதனை கவனிக்க வேண்டும்.மனம் என்றே சொல்லியிருக்கலாம். ஆனால் மனித மனம் என்கிறார். மனம் இதமாக இருப்பவன் மனிதன் (மனம்+இதம்=மனிதன்). மனிதனுக்கு மனம் இதமாக இருக்கவேண்டும். மனம் ‘புண்ணாகி’ என்பது இதமாக இருக்க வேண்டிய மனம், இதமிழந்து இருப்பதனைக் குறிப்பிடுகின்றது.
    ‘இதம்’ என்பது சுகத்தைக் குறிக்கின்றது? எப்போது சுகம் கிடைக்கும் மனதிற்கு?

    மனம் இசைவாக இருக்கும்போது சுகம் கிடைக்கும். இசைவு என்பது ஒத்துப்போகுதல். அதாவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் தராமல் இருப்பதும், முடிந்தால் நன்மை செய்வதும் தான் இசைவும், ஒத்துப் போகுதலுமாகும். இதுவே இயற்கையின் நோ்மறை(positiveness) யாகும். ஆகவே மனதிற்கு சுகமளிக்கும்.

    அளவாகவும், அனுபவிக்கத் தகுந்த கட்டுப்பாட்டிலும் இருக்கும் மனம், இதமாக இருக்கும்.. மனம் எந்த ஒன்றையும் அனுபவித்தாலும், இன்பவியல் சூத்திரமான(formula) அளவையும், முறையையும் கடைபிக்க வேண்டும். இல்லையெனில் இன்பமே துன்பமாகும் விந்தையினை சந்திக்க வேண்டிவரும்.
    ஆகவே உருவமில்லாத மனம் புண்ணாகுதல் என்பது, இசைவில்லாமலும், அளவையும், முறையையும் முறையே மீறுதலும், மாற்றுதலாகும்.

    பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் ஆகிய நான்கில் புகுந்து அழுந்தி மனித மனம் புண்ணாகி, இருளடைந்துவிட்ட வாழ்க்கையில் ஒளியைக்கொண்டு வர தனது விளக்கத்தினைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். புகுந்து அழுந்தி அனுபவிக்கும்போது இன்பவியல் (இன்பம்+இயல்) மறக்கப்படுவதால், இயற்கையின் இனிமை கெட்டு வாழ்வில் துன்பங்களே விளைகின்றன. இன்பவியல் என்பது என்ன? இன்பதுன்ப நிகழ்ச்சியினை வேதாத்திரியம் அறிவியல் அடிப்படையில் விளக்குவதால் இன்பதுன்ப நிகழ்ச்சியினை இயல் என்கிறோம்.

    மனிதனின் உறுப்புகள் இயங்குவதனை மருத்துவ இயலாகக் கொள்கின்ற போது,
    உறுப்புகள் இயங்குவதே இன்பம் அனுபவிப்பதற்கே என்றிருக்கும் போது,
    அந்த இன்பம் என்பது என்ன என்று இதுவரை மருத்துவ விஞ்ஞானம் கூறாத நிலையில்
    வேதாத்திரியம் இன்ப துன்ப நிகழ்ச்சியினை அறிவுபூர்வமாகக் கூறுவதால்
    இன்பதுன்ப நிகழ்ச்சியினை அறிவியலாகக் கருத வேண்டியுள்ளது
    வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களால்.

    இன்பவியலின் சூத்திரத்தை மட்டும் இங்கே நினைவு கொள்வோம். இன்பவியலை முழுவதுமாக வேறொரு விருந்தில் விரிவாக அறிவோம். இன்பவியலின் சூத்திரம் என்ன?
    ஒன்று அளவை (limit) மீறக்கூடாது; மற்றொன்று முறையை (method) மாற்றக்கூடாது என்பதாகும்.
    துன்பத்திற்குக் காரணமான அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.
    இன்பம் அனுபவிப்பதில், இன்பவியல் முன்னரே தெரிந்திருந்தாலும் பழக்கத்தால் அலட்சியப்படுத்தினாலும், தெரியாதிருந்தால் அது அறியாமையாகி, இரண்டுமே மனிதஅறிவின் குறைபாடுகளாக இருப்பதால் இயற்கையின் இனிமை கெடுகின்றது. விளைவு – வாழ்வில் துன்பங்களாக விளைகின்றது.
    அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை அறிந்து கொள்வோம்.

    Loading

  • புகழும் உயர்புகழும் – 4 / ?

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 4 / ?

    அ.வி. 51

    28-01-2015 புதன்

    இன்றைய விருந்தில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்துவது எவ்வாறு பேரின்பம் அடைவதை இழக்கவைக்கின்றது என்று அறிவோம். அதற்கு காந்த தத்துவத்தில் உள்ள இரண்டு பாடல்களையும் கவனிக்க வேண்டும்.

    காந்த தத்துவம்

      FFC_51-Phi_mag_songs

    ‘28-06-1990 அன்று கலிபோர்னியா மாநிலத்தில் யக்காவேலி நகரத்தின் வனஆசிரமத்தில்’ இருந்தபோது வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதியவை காந்தத் தத்துவப் பாடல்கள். பன்னிரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார். பன்னிரண்டு பாடல்களுக்கும் மகரிஷி அவர்களே விரிவுரையையும் எழுதியுள்ளார். இது போன்று உலக சமாதான நூலிலும் பாடல்களுக்கு மகரிஷி அவர்களே விளக்க உரை எழுதியுள்ளார். மற்றுமொரு நூலான ‘அருட்பேராற்றலின் அன்புக் குரல்’ எனும் நூலிலும் பாடல்களுக்கு அவரே விரிவுரை எழுதியுள்ளார்.

    மெய்ஞானிகள் கவிகளை அருளுகிறார்கள். ஆனால் இது வரை கவிகள் அருளியவரே அதற்கான விளக்கவுரை எழுதியதில்லை என்றே பொதுவாகத் தெரிகின்றது. பல நூற்றாண்டுகள் சென்ற பிறகுதான், பிறரால் விளக்கவுரை எழுதப்படுகின்றது. அந்த மெய்ஞ்ஞானி எந்த உள்நோக்கத்துடன் அந்தக்கவியினை எழுதினாரோ அந்த உள் நோக்கம் முழுவதும் பிறரால் எழுதப்படும் விளக்கவுரையில் வெளிப்பட்டுள்ளதா என்றால் சந்தேகமே. ஆனால் மகரிஷி அவர்கள் மட்டும் உலக சமாதானப் பாடல்களுக்கும், காந்தத் தத்துவப் பாடல்களுக்கும், அருட்பேராற்றலின் அன்புக்குரல் என்னும் நூலில் உள்ள பாடல்களுக்கும் விளக்கவுரையையும் அருளியுள்ளார்.

    உலக சமாதானம் எனும் நூலுக்கு விரிவுரை எழுதும் போது தானே விளக்கவுரை எழுதியதற்கானக் காரணத்தையும் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். பாடல்களை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், எந்த உள்நோக்கத்திலிருந்து அந்தக் கவிகள் உதித்தன என்பதைத் தெளிவுபடுத்தவும் விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். மகரிஷி அவர்களின் நோக்கம் உலகில் அமைதி நிலவ வேண்டும். எனவே உலக சமாதானத்திற்கான திட்டங்களைப் பாடல்களாக இயற்றியுள்ளார்.

    விஞ்ஞானத்தின் நோக்கம் என்பது இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றி அனுபவித்தலே. மெய்ஞ்ஞானத்தின் நோக்கம் அவ்வாறு இயற்கை வளங்களிலிருந்து மாற்றப்படும் வாழ்வின் வளங்கள் எல்லோருக்கும், எல்லாவற்றையும் போதுமான அளவில் கிடைக்கச் செய்து, எல்லோரும் இன்புற்று, உலகில், ‘அமைதி பூத்துக்குலுங்க’ வழி செய்வதே. அதற்கு மெய்ப்பொருள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் தெளிவாகிட வேண்டும். மெய்ஞ்ஞானம் அடைவதற்கான பயிற்சிகள் மட்டுமே உலகில் அமைதியினை ஏற்படுத்திவிடாது.

    720 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில். தனிநபர்கள் வெகு சிலர் மேற்கொள்ளும் மெய்ஞ்ஞானப் பயிற்சிகளால் மட்டுமே உலகில் அமைதி வந்துவிடாது. அப்பயிற்சிகளை செய்பவர்களுக்கு மட்டுமே அமைதி கிடைக்கும். மெய்ஞ்ஞானப் பயிற்சிகளை மக்கள் அனைவருமே மேற்கொள்வதில்லை. மேற்கொள்ளவும் இயலாது. ஆனால் உலகில் அமைதி நிலவிடவேண்டும். ஆகவே உலகில் அமைதி நிலவிட, மெய்ஞ்ஞானப் பயிற்சியின் நோக்கத்தையும் அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவையும் கருத்தில் கொண்டு சமுதாய வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு பலதிட்டங்களை தீட்டி ஒவ்வொன்றாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

    மகரிஷி அவர்களின் நோக்கம் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே. இதற்காக இரவு பகலாக சிந்தித்து மகரிஷி அவர்கள் உலக சமாதானத்திற்கான திட்டங்களைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இம்முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் உலக சமாதானப் பாடல்களுக்கு அவரே விரிவுரை அளிக்க விரும்பி முதலில் தமிழில் விளக்கவுரையும், உலக சமாதானம் என்பது உலகத்திற்கு பொதுவானது என்பதால், பிறகு இரண்டாம் பதிப்பில் விளக்கவுரையை மட்டும் உலகப் பொது மொழியான ஆங்கிலத்திலேயும் அளித்துள்ளார்.

    காந்த தத்துவ நூலின் முகவுரையில் மகரிஷி அவா்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். “எந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தால் அதன் மூலம் இந்தப் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும் அறிய முடியுமோ, அந்த அறிவை உங்களுக்கு இப்போது கொடுக்கப் போகிறேன்” எனக் கூறியுள்ளார். எனவே இவ்வளவு முக்கியமான கவிகளுக்கும் அவரே விளக்கவுரை நல்கியுள்ளார்.

    காந்த தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை’ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது? காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக, பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக் கூறும் ‘மனத்தூய்மை‘ என்கின்ற தலைப்பையுடைய பாடல் அமைந்துள்ளது.

    ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்கின்ற முதல் பாடலுக்கு மகரிஷி அவர்களே வழங்கியுள்ள விரிவான விளக்கவுரையை அவர் எழுதியுள்ள காந்த தத்துவம் என்கின்ற நூலினை படித்து விளங்கிக் கொள்வது அவசியமாகும். முதல் பாடல் எட்டு வரிகளைக் கொண்டதாக இருந்தாலும், மகரிஷி அவர்களே அவ்வரிகளுக்காகத் தந்துள்ள விரிவுரை 181 வரிகளில் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும். எனவே தத்துவ நூல்களையும், தத்துவக் கவிகளையும் படிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை (word to word) பொருள் கொள்ளக் கூடாது. வரிகளுக்கு வரி பொருள் கொள்ளக்கூடாது. வரிகளுக்கு இடையேயும் பொருள் கொள்ள வேண்டும் (We must read in-between lines)

    .அவ்விரிவுரையில் மகரிஷி அவர்கள், தான் இறையுணர்வு பெற்றதை படிப்படியாக விளக்குகிறார். நம்முடன் மகரிஷி அவர்கள் நேராக பேசுகின்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒருவேளை, வேறுயாராவது விளக்கவுரை தந்திருந்தால் மகரிஷி அவர்களின் சொந்த இறையுணர்வு அனுபவம் விடுபட்டே போயிருக்கும் ஆகவே முதல் பாடலுக்கான விளக்கவுரையை காந்ததத்துவ நூலில் கட்டாயமாக வாசித்துப் பயன் பெறவும்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(01-02-2015) காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடலில் ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மற்றும் சங்கல்பத்தில் கூறும் ‘உயர் புகழ்’ பற்றியும் அறிவோம்.

    Loading