இன்றைய விருந்து

  • புகழும் உயர்புகழும் – 3 / ?

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 3 / ?

    அ.வி. 50

    25-01-2015 ஞாயிறு

    பொருள் மெய்ப்பொருள் பற்றி திருவள்ளுவா் 2044 வருடங்களுக்கு முன்னர் கூறியதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்காலத்திற்கேற்ப விஞ்ஞானத்தின் துணை கொண்டு, எளிமையாக்கி தெளிவு படுத்தியிருக்கிறார். மகரிஷி அவர்கள் எழுதிய ‘திருக்குறள் உட்பொருள்’ விளக்கம் எனும் நூலில், குறள் எண் 351,355 மற்றும் 358 ஆகிய குறட்பாக்களுக்கு அவர் அருளியுள்ள உட்பொருள் விளக்கத்தைக் காண்க. இப்போது, மகரிஷி அவர்கள் இயற்றிய மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து எனும் நூலில் அருளியுள்ள பாடலுக்கு விளக்கம் காண்போம்.

    FFC-50-நிக-பொ-PNG-post-7-45am52-1-15

    இப்பாடலின் பொருள் என்ன?

    1) இல்லாததே இருப்பன – உருவமுள்ளதைத்தான் புலன்களால் உணரமுடியும். அரூபத்தை புலன்களால் உணர முடியாது. ஆகவே அரூபம் புலனறிவிற்கு இல்லாதது போல் இருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இருக்கின்ற அரூபமே இருப்பன என்கிறார், காரணம் அரூபமாக இருந்த பேராற்றலே தோற்றங்களாக மாற்றம் அடைந்துள்ளதால், தோற்றங்களான அரூபத்தை எவ்வாறு இல்லாதது எனக் கூறமுடியும்? எனவே “இல்லாததே இருப்பன” என்கிறார். ஆற்றலுக்கு ஏது உருவம்? இதனை யாவரும் அறிவர்.

    உதாரணத்திற்கு மின்சாரத்திற்கு ஏது உருவம்? ஆனால் மின்சாரத்தினால் இயங்கும் சாதனங்களுக்கு உருவம் உள்ளது. அதுபோல்தான் இறையாற்றல் அரூபமாகவும், இறையின் இயக்கம் உருவமாகத் தோற்றமளிக்கின்றது ஆகவே ஆற்றலாக உள்ளது அரூபமாக இருக்கின்றது. ஆனால் உருவமில்லா ஆற்றல்தான் எல்லாத் தோற்றங்களாக தன்மாற்றம் அடைந்துள்ளது. அது என்றும் நிரந்தரமானது; என்றும் இருப்பது. தோற்றம் இல்லாமல் இருந்தது இப்போது தோற்றங்களாக உள்ளது என்பதனைக் கூறவே “இல்லாததே இருப்பன” எனக்கூறுகிறார்.

    2) இருப்பன இல்லாது போம். – தோற்றமுள்ளது இல்லாமலும் போய்விடும். மாற்றமே நிரந்தரமானது. மனிதன் முதற்கொண்டு எல்லாமே மாற்றத்திற்குரியது. ஆண்டியாக இருந்தாலும். அல்லது அரசனாக இருந்தாலும், எல்லோருக்கும் தோற்றம்(பிறப்பு) இருப்பது போல் முடிவும்(மரணம்) என்பதுண்டு. இல்லாமல் ஒருநாள் போய்விடுவர். எனவே இருப்பன “இல்லாது போம்” என்கிறார்.

    3) நில்லாதவை நிகழ்ச்சியாம் – நில்லாதவை என்றால் என்ன பொருள்? தோற்றங்களெல்லாம் அணுக்களால் ஆனது என்பது தெரிந்ததே. அணுக்கள் யாவும் நிற்காமல் ஓய்வின்றி சுழன்று கொண்டேதான் இருக்கின்றது. அணுக்கள் ஓய்வெடுப்பதில்லை. அதாவது தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துவதில்லை. நின்றால் அது அணுவில்லை. அது வெளியாகிவிடும். தோற்றம் மறைந்துவிடும். அவ்வாறு நிற்காமல் இருப்பதனை “நில்லாதவை நிகழ்ச்சியாம்” என்கிறார் ஒருமை விஞ்ஞானம் தந்த (Explorer of Science of Oneness) மகரிஷி அவர்கள்.

    4) நின்ற மிச்சமே பொருள் — தன்னிறுக்கத்தால் (self compressive force) நொறுங்கி வெளி சுழன்றதால்நுண்ணியத்துகள் (infinitesimal particles)  உருவாகியது; நுண்ணியத் துகளின் சுழற்சி நின்று விட்டால் மீண்டும் அது வெளியாகிவிடும். சுழன்று கொண்டிருந்த நுண்ணியத்துகள் பொருளல்ல, ஆனால் சுழற்சி நின்றால் மீதமுள்ளது வெளி. சுழற்சி நின்று மீண்டும் ஏற்படும் ‘வெளியே’ பொருள் என்கிறார். இந்த வெளிதான் நிரந்தரமானது. அதற்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. எனவே ‘வெளி’ அனாதை. எனவே தான் வெளியாகிய இறையை ‘அனாதி’ என்கின்றனர் மெய்ஞ்ஞானிகள்.
    இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்” என்பதனை மேலும் அறிய, இணையதள ஆசிரியர் எழுதியுள்ள ‘நான் யார்?’ என்கின்ற நூலின் 10-ஆவது அத்தியாயத்தைக் காணலாம்..

    ஒன்றே பலவாகியது என்கின்ற உண்மையினை, விஞ்ஞானத்தின் துணை கொண்டு, சுத்த அத்வைத விஞ்ஞானமாக்கியுள்ளது (Pure Advaidhic Science) வேதாத்திரியம். புகழ், உயர்புகழ் என்றும் இரண்டாகப் பிரித்துள்ளது வேதாத்திரியம். ஒன்றே பலவாகியது என்கின்ற உண்மை தெரிவிப்பது யாதெனில், ஆதியில் இருந்த ஒன்றே நாம் காணும் எல்லாத் தோற்றங்களாகவும், எல்லா உயிரினங்களாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது. அப்படி இருக்கும் போது, ஆதியில் இருந்த அந்த ஒன்றே தான் நாம் எல்லோருமாக உள்ளோம். ஆகவே மனிதன் செய்யும் செயல்களுக்காக (நிகழ்ச்சிகள்) வரும் புகழ் யாரைச் சார்ந்ததாக இருக்க முடியும்?

    இந்த கோணத்தில் சிந்தித்தால் புகழ் யாருக்குரியது என்று தெரிய வரும். ஆதியில் இருந்த ஒன்றேயாகிய இறைக்கே உரியது எனத் தெளிவாகின்றது. அப்படி இருக்கும் அந்த புகழுக்கு மனிதன் சொந்தம் கொண்டாடுவது எவ்வாறு பொருந்தும். எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்? மனிதனின் நற்செயல்களுக்காக வரும் விளைவு புகழாக இருக்கும்போது, புகழ், எவ்வாறு இறைக்குரியதாகும் என ஐயம் எழலாம். “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்கின்றபோது மனிதனின் நற்செயல்களுக்கு விளைவாக வரும் புகழ் யாருடையதாக இருக்கும்?” இறைவனுடையதாகத்தான் இருக்கும். இதனை உறுதிபடுத்துகின்றது ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்கின்ற புனித வாக்கும்.

    இறையின் திருவிளையாடலில் மனிதன் ஒரு கருவிதான் என்கின்றனர், இறையை சரணாகதி தத்துவத்தின் வாயிலாக உணர்ந்த மெய்ஞ்ஞானிகள். ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத தத்துவத்தின்படியும் இறைதான் எல்லாமாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது என்கின்ற போது மனிதன் செய்யும் நற்செயல்களின் பலனான புகழும் இறைக்குத் தானே சொந்தமாக இருக்க முடியும்.

    இறைவனே மனிதனின் உடலாகவும், புலன்களாகவும், உயிராகவும், அறிவாகவும், நற்குணமாகவும், இருக்கும்போது, உடல், புலன்கள், அறிவு, நற்குணம் ஆகியவைகளைக் கொண்டு ஆற்றும் செயலினால் வரும் புகழ் யாருடையதாக இருக்க முடியும்? இறைவனுடையதாகத்தானே இருக்க முடியும். ‘அப்படியில்லை மனிதனுக்குத் தான் புகழ் உரித்தானது’ என்றால் மனிதன் இறையிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்வதாகிவிடும்.
    மனிதன் இறைக்குரிய புகழை தனது என்று சொன்னால் என்ன ஆகிவிடப் போகின்றது?  இறை என்ன கோபித்துக் கொள்ளுமா? இறையின் மகன் தானே மனிதன். அதனால் ஏன் பரமபிதாவாகிய இறையின் புகழை தனது என்று சொல்வதானால் என்ன தவறு? இது போன்று ஐயங்கள் மனித மனங்களில் இருக்கும்; எழும்.

    புகழ் தனக்குரியது என மனிதன் நினைக்கும்போது, அவன் இறையிடமிருந்து தன்னைப் பிரித்துப் பார்ப்பதால் தன்முனைப்பு வந்துவிடும். அத்வைதியாக மாற்றம் பெற வேண்டிய பயிற்சியில், இறைக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தன்முனைப்புத் திரையை நீ்க்க வேண்டியது கடைசி நிலை. “தன்முனைப்பு கரைந்துபோம். காணும் தெய்வம்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும். அத்வைதியாவதற்கு மட்டுமே தன்முனைப்பை அகற்ற வேண்டும் என்பதில்லை.

    தன்முனைப்பு (Ego—ஆணவம்) எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேராக இருப்பதால் வாழ்க்கையில் துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கு தன்முனைப்பை அகற்றியேத் தீர வேண்டும். தன்முனைப்பு என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்ற அமைதி வெடிகுண்டு (Silent Bomb.) இந்த தன்முனைப்பாகிய அமைதி வெடி குண்டு, அன்றாட வாழ்வில், சமுதாயத்தில், பழக வேண்டிய மனித உறவுகளுடன் சில நேரங்களில் வெடிப்பதுதான் சினம், வெறுப்பு, பொறாமை, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகளாகும். இவற்றின் அளவு அதிகமாகும் போது பஞ்ச மகாபாதகங்களாக உருவெடுக்கின்றன.

    ஆகவே இறையே நானாகவும் எல்லாமாகவும் இருக்கின்றது எனக் கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் உறுதி படுத்தும் செயலை விடவா இப்புவியில் வேறு புகழ் உள்ளது? ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயனின் ஆட்சியில் மனிதன் ஒரு கருவி மட்டும்தான். எனவே மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது ஒருவித மாயை வலையில் சிக்கிக் கொள்வதாகும். ஆகவே இவ்வுண்மையை சமுதாயத்திற்குத் தெரிவிக்க வேதாத்திரி மகரிஷி அவர்கள், இயற்றியுள்ள காந்த தத்துவப்பாடலில் ‘மனத்தூய்மை’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியினை நினைவிற்கு கொண்டு வருவோம்.

    காந்தத் தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை‘ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது? காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக்கூறும் ‘மனத்தூய்மை’ என்கின்ற தலைப்பையுடைய பாடலாக இருக்கின்றது.

    பொருள், மெய்ப்பொருள் பற்றியத் தெளிவு இருந்தால் அறிவிற்கு புகழின் மீது மோகம் ஏற்படாது, ஆகவே சிந்தனை விருந்தின் தலைப்பு புகழும் உயர்புகழும் என்றிருந்தாலும் பொருள், மெய்ப்பொருள் பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம்.

    இனி அடுத்த அறிவிற்கு விருந்தில் (28-01-2015 புதன்), ‘மனத்தூய்மை’ என்கின்ற பாடலையும் அதற்கான விளக்க உரையில் எவ்வாறு புகழ் மற்றும் செல்வாக்கு மனத்தூய்மையைக் கெடுக்கின்றது என்று மகரிஷி அவர்கள் கூறுவதையும் அறிவோம்.

    Loading

  • புகழும் உயர்புகழும் – 2 / ?

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 2 / ?

    அ.வி. 49

    21-01-2015 புதன்

    மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது? பொருள் என்பது புலன்களால் உணரப்படுவது. ஆனால், பொருட்கள் உண்மையில் பொருட்களல்ல என்கின்றது மெய்ஞானம். வேதாந்திகள் அவர்களுக்குத் தெளிவாகிய நிலையில் துணிந்து, இந்த உலகம் பொய்யானது (the world is unreal) என்று கூறுகின்றனர். காணும் உலகம் ஒரு கனவே என்கின்றனர். மாயை என்கின்றனர். இக்கூற்றை சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. காண்பது எவ்வாறு பொய்யாக முடியும் என நினைக்கத்தானே தோன்றும்!

    இதனை வேதாத்திரிய மெய்ஞ்ஞானமோ அறிவுப்பூர்வமாக விளக்குகின்றது. வேதாத்திரியமும் ‘பொருள் பொருளல்ல’ எனக்கூறுகின்றது. ஆனால் காரணம் கூறுகின்றது. எந்த தோற்றமே இல்லாத ஒன்றிலிருந்து பொருள் எனப்படும் தோற்றம் உருவானதோ, அந்த மூலமான, தோற்றமே இல்லாத ஒன்றுதான் (வெளி-இறைவெளி-Eternal Space) பொருள் என்றும், அதுவே உண்மையான பொருள் என்றும் கூறுகின்றது. அதற்கும் வேதாத்திரியம் கூறும் காரணத்தை அறிவோம்.

    பொருள் என்பது நிகழ்ச்சிதானே தவிர அவை பொருளல்ல என்கின்றது வேதாத்திரிய மெய்ஞானம். முதலில் பொருளை நிகழ்ச்சிதான் என ஏற்றுக்கொண்டால் ‘பொருள்’, ‘பொருளல்ல’, என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியும். பொதுவாக நிகழ்ச்சி என்பது நிகழ்வைக் குறிக்கும். நிகழ்ச்சி என்பது தொடங்கி முடிவுக்கு வரும். உதாரணத்திற்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம். நாடகம் என்பது நிகழ்ச்சி. ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும். அது போல் பொருள் நிகழ்ச்சி என்றால் காணப்படுகின்ற பொருள் முடிவுக்கு வந்து விடுகின்றதா?

    எந்தப் பொருளும் தோன்றி மறையக் கூடியதே. மாற்றமே நிலையானது என்கின்றது (Change alone is permanent) விஞ்ஞானம். அதாவது எதுவுமே இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் அல்ல. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே மாறிக்கொண்டிருப்பதுதான் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கின்றது இந்தப் பிரபஞ்சத்தில். மாறிக் கொண்டிருப்பதை நிகழ்ச்சி என்கின்ற பெயரால் கூறினால் என்ன? தோற்றத்திற்கு ஆரம்பம் இருப்பது போல் முடிவும் உண்டு. உதாரணத்திற்கு மலரை எடுத்துக் கொள்வோம், அது பொருளா, நிகழ்ச்சியா? மலரை நிகழ்ச்சி என்கிறார் மகரிஷி அவர்கள். பருப்பொருளாக இருக்கின்ற மலர் நிகழ்ச்சி என்றால் மலர் எங்கே நிகழ்ச்சியை ஆரம்பித்தது. அது எப்போது முடியும்? இதுபோன்ற வினாக்கள் எழலாம். அது தோற்றத்துடன் தானே இருக்கின்றது! காலையில் பூத்த மலர் மாலையில் வாடிவிடுகின்றதே! . மலர்ந்தது வாடியது நிகழ்ச்சியில்லையா? மலர்ந்த போது அது தோன்றி, நிகழ்ச்சியை ஆரம்பித்தது,. வாடியபோது மலர் என்கின்ற நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது.. வாடிய போது வாடி, மலர் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சருகாகி மலரே காணாமல் போய்விடுகின்றது. பருப்பொருளாக இருந்த மலர் என்னவாயிற்று?

    மலர் பருப்பொருளாக இருக்கும்போது அணுக்களின் கூட்டாக இருந்து தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது, மலர் வாடி காய்ந்து சருகாகி மறைந்ததும் அணுக்களின் அமைப்பே கலைந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் மேடையில் இருந்த நடிகர்கள் மேடையில் இல்லை. அவர்களெல்லாம் கலைந்து தங்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர். மேடை வெற்றிடமாகி விட்டது. எனவே இந்த மலர் என்கின்ற சரித்திரத்தை நாடகத்துடன் ஒப்பிட்டு மலர் வழியே விளங்கும் மறைபொருள் என்கின்ற தலைப்பில் 48 வரிகளில்  கவியினை இயற்றியுள்ளார் மகரிஷி அவர்கள். அதில் நாம் சில வரிகளை இங்கே நினைவிற்கு கொண்டு வருவோம்.

                                                                                              “பரம அணுக்கள் பலகோடி

                                                                                                        பண்பாய்க் கூடி ஒருகூத்து

                                                                                           கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்

      கட்டம் எந்த தோற்றமும்ஆம்”

    என்கிறார் மகரிஷி அவர்கள். 48 அடிகளைக் கொண்ட இப்பாடலின் வழியாக மலருக்கும் மனிதனுக்கும் இடையே உரையாடலாக ஆக்கி மலர் தன்னுடைய சரித்திரத்தை மனிதனுக்கு கூறுவதாக அமைத்து சுத்த அத்வைத தத்துவ விஞ்ஞானத்தை எளிமையாக்கி குழந்தைகள் பாடுவதற்கு எளிதாகவும், சிறுவர், சிறுமியர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியும், இயற்கையின்/இறையின் சரித்திரத்தை கூறி இயற்கையும் இறையையும் ஒன்றே எனவும் கூறுகிறார். இதைவிட வேறு எவ்வாறு எளிமையாக இறை தன்னுடைய சரித்திரத்தை மனிதன் வழியாகக் கூறமுடியும்?

    இறையின் தன்மாற்றத்தில் காலம் கனிந்து வந்துள்ளது. இறையின் குழந்தைகள்(சமுதாயம்) இறையின் தன்மாற்றத்தில் வளர்ந்து பரிபக்குவ நிலையை அடைந்துள்ளதையே இது எடுத்து இயம்புகின்றது. விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது போல் மெய்ஞ்ஞானமும் வளர்ந்து வருகின்றது. விஞ்ஞானம் வேறு மெய்ஞ்ஞானம் வேறு வேறா? இல்லையே. இரண்டுமே இறையின்/இயற்கையின் பெருமையையும், புகழையும் எடுத்துக் கூறுவதுதானே.

    இதுவரை உலக ஆன்மீக வரலாற்றில் ஏற்படாத திருப்புமுனை இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக இயற்கை/இறை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையே அல்ல.

    வருங்காலத்தில் இப்பாடலை குழந்தைகளெல்லாம் பாடிக்கொண்டிருப்பார்கள் எனக் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? இயற்கையின்/இறையின் சரித்திரத்தை மிக எளிதாக விளங்கிக்கொள்ளும் நிலையை சமுதாயம் விரைவில் பெற்றுவிடும் என்பதுதான் பொருள். இது தானாகவே நடந்திடாது. ‘Fraction demands, Totality supplies’. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்றெல்லாம் கூறுவது போல் இயற்கையின் சிகரமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் மனிதன் எண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

    ஏனெனில் ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்றிருக்கும் போது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியிலே மேலும், மேலும் அன்பர்கள் சேர்ந்து மாணவர்களாகி நீடித்து அறிவுத் தொண்டாற்றினால் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், தத்துவ ஞானியுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் விரும்பியது போல் பரிணாமம் பூர்த்தியாகும், அந்த பொன்னாள் நிறைவேறும் காலம் அருகிவிடும். எனவே மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே  மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது. இதற்கு என்ன பொருள்?

    வேதாத்திரியத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும், தானும் நடைமுறைக்கு கொண்டு வந்து, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கின்ற இயற்கை நீதியின்படி, தான் பெற்ற பயனைச் சமுதாயத்திற்கும் சோ்க்கின்ற கடமையை உணர்ந்து. உடலாலும் பொருளாலும், அறிவாலும், குறிப்பாக எண்ணத்தாலும்(இயற்கையின் சிகரம் எண்ணம்) அறிவுத்தொண்டாற்ற வேண்டும். இது இயற்கை திட்டமிட்டதாகும்.. இந்த விருந்தை முடித்தவுடன், ஞானக்களஞ்சியம் நூலை எடுத்து மேலே குறிப்பிட்டப் பாடலை ஒரிருமுறை வாசிப்பது விருந்திற்கு விருந்து சோ்க்கும்.
    மலரில் எத்தனை அணுக்கள் இருக்கும் என்று சொல்ல முடியுமா? விஞ்ஞானத்தாலும் சொல்ல முடியாது. எனவே மலரில் பல கோடி அணுக்கள் இருப்பதாகக் கூறுகிறார். அந்த அணுக்கள் எல்லாம் மலராக ஆவதற்கு முன்னர் எங்கே இருந்தன? தனித்தனியாக தோற்றமில்லாமல் அந்தச் செடியில் இருந்திருக்கும். மலராகும் போது அந்த அணுக்கள் எல்லாம், ஒழுங்காக(பண்பாய்க்கூடி) கூடி ஒருநாடகத்தை நடத்தும் போது அவை மலராகக் காட்சி அளிக்கின்றன.

    இதே போன்றுதான் எந்தத் தோற்றத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் அரூபமான இறையே அணுக்களாகி, பல கோடி அணுக்கள் பண்பாய்க் கூடி தோற்றம் அளிக்கின்றது. சுருங்கச் சொல்வதெனில் இறையின் நாடகம் இப்பிரபஞ்சத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. உலகமே ஒரு நாடக மேடை. அவ்வாறு நடக்கும் நாடகத்தில் ஒரு கட்டம்தான் மலருடைய தோற்றம். மனிதனும் அவ்வாறே நடித்து கொண்டிருக்கிறான் இறையின் இயக்கத்தில்(God is the Director of the Universe).
    மலரைப் போன்றுதான் மனிதனும். அணுவின் கூட்டுப்பக்குவமாக(கவனிக்கவும் வார்த்தையை. கவனித்து இறையின் புகழை நினைந்து மகிழவும்) உருவத்தை எடுத்து பிறக்கிறான்; அணுக்கள் பிரிந்து உருவத்தை இழந்து மறைகிறான். மனிதன் என்கின்ற நாடகம் முடிந்து விடுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை. மலர்மட்டும் நிகழ்ச்சி அல்ல. எல்லாத் தோற்றங்களும் நிகழ்ச்சிகள்தான் மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல.

    மனிதனும் நிகழ்ச்சிதான். இதில் தன்முனைப்பிற்கு எங்கே இடமிருக்கின்றது? புகழிற்கு எங்கே இடமிருக்கின்றது? ஆனால் உயர்புகழிற்கு இடமும் இருக்கின்றது. தேவையும் இருக்கின்றது. அதனை இனிவரும் பகுதியில் அறிவோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் (25-01-2015 ஞாயிறன்று) நிகழ்ச்சி — பொருள் பற்றி இன்னும் சற்று கூடுதலாக, மகரிஷி அவர்கள் கூறுவதை அறிந்துவிட்டு புகழ்- உயா்புகழ்பற்றி விரிவாக பார்க்க உள்ளோம்.

    Loading

  • புகழும் உயர்புகழும் – 1 / ?

      

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 1 / ?

    அ.வி. 48

    18-01-2015 ஞாயிறு

       புகழ் என்பது எதனைக்குறிக்கின்ற சொல்? புகழ் என்பது பலரும் அறிந்திருக்கின்ற, பலராலும் பேசப்படுகிற நிலையைக் (fame, renown) குறிக்கும் சொல்.  பெருமை (glory, praise) என்றும் பொருள்.  புகழ் என்ற வார்தையைப்போல் உயர்புகழ் என்கின்ற வார்த்தையும் நாம் சிந்திக்க இருக்கின்றோம்.

       புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயா்ந்தது என்றால், எதனைச் சொல்ல முடியும்?   அதிகாரி, உயர் அதிகாரி என்கின்ற இருவரில் யார் உயர்ந்தவர் என்றால், உயர்அதிகாரி உயர்ந்தவர் என்று சொல்வோம். அதுபோல், புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயர்ந்தது,  என்றால் பொதுவாக, உயர்புகழ் உயர்ந்தது என்போம்.  எப்படி? ‘உயர்’ என்பது பல நிலைகளாகப் பகுக்கக்கூடியதில் மேலாக (higher in grades or in hierarchical set up) உள்ளதைக்குறிக்கும் பெயரைடைச் சொல்.  உதாரணத்திற்கு உயா்படிப்பு. அதுபோல்,  ஒன்றின் உயர்ந்த நிலையயைத் தெரிவிக்க  ‘உயர்’ என்பதனைச் சேர்த்து சொல்வது போல் ‘புகழ்’ என்கின்ற சொல்லுடன் ‘உயர்’ என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ எனப்படுகின்றது.

       ஆனால் புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் புகழ்தான் உயர்ந்தது என்கின்றது மெய்ஞானம். எப்படி? உயர்புகழ்தானே புகழைவிட உயர்ந்ததாக இருக்கமுடியும். ஏனெனில் புகழ் என்பது இறைக்குரியது.  உயா்புகழ் என்பது மனிதனுக்குரியது என்கின்றபோது ‘புகழ்’ உயர்ந்ததாகி விடுகின்றது. ஏன் இந்த குழப்ப நிலை?   அப்படியானால் இறைக்குரியது உயர்புகழ் என்றும் புகழ் என்பது மனிதனுக்குரியது  என்று ஏன் வைத்திருக்கக்கூடாது.

       ‘புகழ்’ என்கின்ற சொல், ஏற்கனவே உள்ளதை எல்லோருமே அறிவர். அதாவது, ‘உயர்புகழ்‘ எனும் சொல் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ‘புகழ்’ எனும் சொல் உள்ளது. ‘புகழ்’ ‘உயா்புகழ்’ ஆகிய இரு சொற்களில் முதலில் தோன்றியது புகழ் எனும் சொல். எனவே முன்னரே இருந்த ‘புகழ்’ என்கின்ற சொல், மனிதனுக்கு முன்னரே  இருக்கின்ற  இறைக்குரியதாகிவிட்டது,  ஆனால் இறைக்குரிய புகழை மனிதன் அறியாமையில் தனதாக்கிக் கொள்கிறான்.  புகழ் என்பது எப்படி இறைக்குரியதாகும்?

       பல பிறவிகளாக  அறிவு (ஆன்மா) தன் மூலத்தை மறந்திருக்கின்றது.

       தன்மூலத்தினுடனான (இறையுடனான)  பிணப்பை மீண்டும் நிரந்தர நினைப்பிற்கு கொண்டு வருவதற்காக எடுத்த  இந்தப்பிறவியிலும்,

       அறியாமையில் புகழை தனதாக்கிக் கொள்ளும்போது, அறிவு (ஆன்மா,) தன்னை இறையிடமிருந்து  பிரித்துக்கொள்ளவே செய்கின்றது.

    இறையே நாமாக இருக்கின்றது என்கின்றபோது இறைக்கு புகழை உரித்ததாகக் கூறுவதில்(மனிதன் கூறினாலும் கூறாவிட்டாலும் புகழ் இறைக்குரியதுதான்.) நாம் என்ன குறைந்து விடவாப்போகின்றோம்? யாரிடம் குறைந்துவிடப் போகிறோம்? மனிதனிடமா குறைந்து விடப்போகிறோம்?  இல்லையே.. அருட்பேராற்றலிடம் தானே குறைந்து விடப்போகிறோம்.  ‘அருட்பேராற்றல் கருணையினால் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்” என்றுதானே தினமும் சங்கல்பம் செய்து வருகிறோம். புகழ் இறைக்குரியது என்று உள்ளம் அறிந்து செயல்படுவது  பேரானந்த நிலைக்கு செல்வதற்கான  திறவுகோல். சம்பிரதாயத்திற்காக புகழ் இறைக்குரியது என்று கூறப்படவில்லை.    எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கின்ற புனித வாசகம் ஏற்கனேவே உள்ளது.

       ஆகவே புகழ் என்கின்ற சொல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், வேதாத்திரியத்தில் மனிதனுக்காகவே உருவாக்கப்பட்டது ‘உயர்புகழ்’ எனும் சொல்.

       நடைமுறையில், இறைக்குரிய புகழை, அறியாமையில் மனிதன் தனது என நினைத்துக் கொண்டிருப்பதால், மனிதன் உடலளிவிலே எல்லைக் கட்டிக் கொண்டு ஆன்ம உணர்வோடு(soul consciousness) வாழ்வதைத் தவிர்த்துவிட்டு தேகாபிமானத்தோடே(body consciousnes) வாழ்கிறான். விளைவு இன்ப-துன்பக் கலவையைத்தான் அனுபவிக்கிறான்.  மனதின் மூன்றாவது மற்றும் நான்காம் படிகளான அமைதி, பேரின்ப நிலைக்கு செல்ல முடியாமல் சலிப்புள்ள வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே,   காரணத்தோடுதான் (என்ன என்று பின்னர் பார்ப்போம்) மனிதனுக்கும் புகழும்  அவசியம் எனக்கருதி, ஆனால் வேறுவடிவத்தில் அவசியம் எனக்கருதி ஆன்மீக உலகில் நீங்கா இடம் பெற்றுவிட்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘புகழ்’ என்கின்ற சொல்லோடு “உயா்” என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ என்கின்ற சொல்லை உருவாக்கியிருக்கிறார்.   காரணம், உயா்புகழை, மனிதனுக்கு அவசியமான ஐந்து வளங்களில் ஒன்றாகக் கருதி நான்காவது வளமாகச் சோ்த்து  உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன் என்கின்ற  சங்கல்பத்தை தினந்தோறும் தவத்தின் முடிவில் இயற்றச் சொல்லியிருக்கிறார்  வாழ்வியலாளரும், மெய்ஞானியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். மெய்ஞானத்தில் ‘மெய்ப்பொருள்’ ‘பொருள்’ என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல் வேதாத்திரிய மெய்ஞானத்தில் ‘புகழ்’ ‘உயர்புகழ்’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

       ‘புகழும் உயர்புகழும்’ என்கின்ற நம்சிந்தனையில் மெய்ப்பொருள், பொருள் ஆகிய இரண்டும் குறுக்கிட்டு விட்டதால்,  இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு இப்போது ‘பொருள்’ ‘மெய்பொருள்’ பற்றியும் சிறிதளவு சிந்தித்துவிடுவோம்.   பொருள், மெய்ப் பொருள் பற்றியத் தெளிவு மனிதனுக்கு மிக மிக அவசியம்.  ஏனெனில் மனிதன் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமலிருக்கும் அறியாமையேயாகும்.  அறிந்தாலும், அறிந்தபோது அறிந்ததோடு சரி,  அத்துடன் அறிந்தது மறக்கப்பட்டுவிடும்.  அறிந்தது செயலுக்கு கொண்டுவரும்போதுதான் பயன் கிட்டும்.  ‘பொருள்‘, ‘மெய்ப்பொருள்’  வித்தியாசம் எந்த  அளவிற்கு அறியப்படுகின்றதோ அந்த அளவிற்கு  பற்றுக்கள் நீங்கிவரும்.  பற்றற்றே கண்ணே பிறப்பறுக்கும்.

    பேரானந்தத்தின் திறவுகோல்கள் இரண்டு உள்ளன.

    1)  முதன்மையானது பிறவியின் நோக்கம் அறிதல்—அதனை அமுலுக்குக் கொண்டு வந்து வெற்றி பெறுதல்.

    2) இரண்டாமது  உறவு நிலையில் உண்மை நிலை அறிதல்—பிறகு அந்நிலை எய்துதலாகும்.

      இது பற்றி விரிவாக ஞானக்களஞ்சியத்தில்   ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவி எண். 1849 -ல் அறியலாம்.  அக்கவியில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்ததை நான்கு படிகளில் கூறியுள்ளார்,

       பொதுவாக அறிவிற்கு விருந்து என்பது,  பேரறிவிலிருந்து பின்னப்பட்ட மனித அறிவுடன், பரிணாமக்கசடால் குறைகள் வந்து சேர்ந்து விட்டதால்  குறைகள் நீங்கி மனிதஅறிவு, முழுமை அடைவதற்கு, அது  அறிய வேண்டியதை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அறிந்து விட  வேண்டியதே.  அப்போதுதான், மனிதஅறிவில் தெளிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வரும்போது மனித குலத்தில் இப்போதுள்ள பெருந்துயர நிலை நீங்கி நிரந்தர அமைதி ஓங்குவதற்கான வழிகள் பிறக்கும்.

       அப்படியானால் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.  வாழ்க்கை என்பது,  ‘தான்’,  ‘சமுதாயம்’,  ‘இயற்கை’ ஆகிய மூன்றின் இணைப்பில் நடக்கின்றது.  எனவே அறிவிற்கு விருந்தாவது இந்த மூன்றைப்பற்றிய தகவல்களும் சிந்தனைகளுமேயாகும்.  ஆகவே இன்றைய சிந்தனைக்கான தலைப்பு ‘புகழும் உயர்புகழும்’ என்றிருந்தாலும் ‘பொருள் மெய்பொருள்’ என்பது  இயற்கையைப் பற்றியது என்பதால் அதனைச் சற்று சிந்தித்து விட்டு தலைப்பிற்குள் செல்வோம்.  தலைப்பை விட்டு வெளியே சென்றுவிடுவதாக நினைக்க வேண்டாம்.

    புதனன்று(21-01-2015)  மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று அறிந்துவிட்டு, புகழும் உயர் புகழும் என்கின்ற தலைப்பிற்குள் நேரிடையாகச் சென்றுவிடுவோம்.

     

     

     

    Loading

  • வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது- 2 / 2

    வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது- 2 / 2

    அ.வி. 47

    14-01-2015 புதன்

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த, நம்மிடையே அருட்தந்தையாக இருந்து உறவாடிய, இன்றும் அறிவாற்றலின் வாயிலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ‘வேதாத்திரி மகரிஷி’ அவா்கள் என்ன கூறுகிறார் என்றும் பார்ப்போம். உலக மக்களுக்கு 1970 ஆண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பு விடுத்து நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த அழைப்பைப் பற்றி நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இருந்த நிலையிலே, நாமெல்லோரையும் அவரிடம் கொண்டு வந்து சீடராக்கியுள்ளது இயற்கை/இறை. இது இறையின் புனித திட்டமும், ஏற்பாடும் ஆகும்.

    anbargale vaareer-Explo

    அழைப்புக் கவி

    வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஊனுடம்பு ஆலயத்தில் பத்து வருடங்கள் தங்கி, அவா் (வள்ளலார்) சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவிட்டதை முடித்துக் கொண்ட அருட்சோதி இராமலிங்க வள்ளலார் கூறியதையும் நினைவு கூர்வோம்.

    அருட் பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தது.

    “இது வரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ……………………… இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்தி விடுவோம். அஞ்சவேண்டாம்.” என்றார்.
    1823 ல் அவதரித்த அருளாளர் “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர் *.” என்றார்.
    1911ல் அவதரித்த அருளாளர் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்!*” என்கிறார்.
    முதலில் அவதரித்த அருளாளர் கூறுவதை சற்று சிந்தித்து பார்ப்போம். ஒருவர் கூட தான் கூறுவதை நம்பி எழுந்து திறத்தில் திகழ்வதற்கு ஒருவர் கூட தேர்சி பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
    எழுந்து என்றால் ‘விழித்தல்‘ என்று பொருள் கொள்ள வேண்டும்.

    திறம் என்பதற்கு பொருளாக, “மனிதனில் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவது” என்று கொள்ள வேண்டும்.

    ‘திகழ்தல்’ என்றால் பிரகாசித்தல், பொலிவுடன் இருத்தல், சிறப்புடன் இருத்தல், விளங்குதல் என்று பொருள். விளங்குதல் என்றால் புரிதல், தெரிதல் என்று பொருள். ஆகவே “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்றால், மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றல் விழிப்புற்று, சிறப்புடன் அந்த தெய்வீகத்தை விளங்கச் செய்பவர் யாரும் இல்லை என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அத்துடன் இருந்து விடாமல், “அஞ்ச வேண்டாம்” என ஆறுதலுடனும், “அனைவரையும் திருத்தி விடுவோம்” என நம்பிக்கைடனும் சொல்கின்றார்.
    பின்னர், 1911ல் அவதரித்த அருளாளரும், “அறிந் தனுபவிக்க இன்றேனும் விரைந்து எழுச்சிபெற்றுய்வீர் !” என்று அது போன்றே கூறுகிறார்.

    “இன்றேனும் விரைந்து எழுச்சிபெற்றுய்வீர்” என்றால், ‘அறியாமையில் இது வரை மனிதனுள் உறங்கிக் கொண்டிருந்த தெய்வீக ஆற்றல் எழுச்சி பெறாமல் இருந்தது. நான் அன்புடன் அழைக்கிறேன்-இப்போதாவது விழிப்பு பெற்று உய்வீர்’ என்று கூறுவதாக பொருள்.

    1874-ல் வள்ளலார் எண்ணியது, 1953ல் (1911+42=1953) நிறைவேறியது. இராமலிங்க சுவாமிகள் எண்ணிய, மக்களைத் திருத்தி விடும் படலத்தை, இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, அரிய கலையாக இருந்து வந்த அகத்தவத்தை பரவலாக்கியும், மனிதனை திருத்தி, தனக்கும், தன்னால் சமுதாயத்திற்கும், நன்மையே தரத்தக்க, ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு, அகத்தாய்வு பயிற்சியினையும் உருவாக்கி கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது.

    “ஐயப்படாது அகத்தை உணர்ந்தவரை தெய்வத்திற்கு சமம்” என திருவள்ளுவர் மொழிந்துள்ளபடி, அகத்தை உணர்ந்த இராமலிங்க சுவாமிகள் எண்ணியது, இறையே எண்ணியதுதானே! ஆக மொத்தத்தில் அறிவை அறிந்தவர்கள் ‘இவ்வுலக மக்கள் திருந்தி உய்வதற்கு வழியே இல்லையா’ என எண்ணியதற்கிணங்க, “Fraction demands. Totality supplies” என்கின்ற தன்னுடைய நியதிப்படி, இயற்கை/இறை தன் திரு விளையாடலை வேதாத்திரியத்தின் வழியாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்த தெரிந்து கொண்ட மனிதகுலம் அறிவாற்றலான ஒழுங்காற்றலை பயன்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்நாளில் அறிய வேண்டியதை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிறவியினை அளி்க்கின்றது இயற்கை. இதனை ஓர் அறிஞர் “வினைப்பயனே தேகம் கண்டாய்” என்கிறார்.
    மனிதன் அறிய வேண்டியதை எல்லாம் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை கிடைக்கும் போது அறியப்பட்டுவிடும்.

    அவையாவன:

    1) இறை அரூபம். அளப்பரிய ஆற்றல்
    2) இறை பேராற்றலாக, தூய அறிவாக(பேரறிவாக), வற்றா இருப்பாக, காலமாகவும்(Time), இருக்கின்றது.
    3) தன்முனைப்பில்லா நான் (Egoless I ) அதாவது அறிவுடைமையுள்ள நான் கண்டுபிடிக்கப்படும். மனிதனிடமுள்ள (நானில்) உடல், உயிர், அறிவு ஆகிய மூன்றில் நானாக இருப்பது அறிவே என்றும், அதே அறிவு இறையாகும் என்றும், அறிவை அறிந்த ‘நானே’, ‘தன்முனைப்பு அற்ற நானாகும்’.
    இந்தவிளக்கத்தைப் பெறாத, பெற்று நடைமுறைக்கு கொண்டு வராத நான்கள் தன் முனைப்புள்ள நான்களாகும்.
    4) பிற மனிதர்களிடமும் உள்ள அறிவும், இறையே. 720 கோடி உலகமக்களும் வெவ்வேறு நான்கள் இல்லை. ஒரே, ஆனால், உடலளவில் தனித்தனியாகவுள்ள நான்கள். உலக மக்கள் ஒரு மாபெரும் குடும்பம். ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிகளே.
    5) பிற உயிர்களிடம் உள்ள (தாவரங்கள் முதல் விலங்கினங்கள் வரை) உயிரும் சரி, அறிவும் சரி இறையே. இறையே உயிர்களுக்கெல்லாம் உயிராக திகழ்கிறான்.
    6) சடப் பொருட்களிலும் அணுவாக இருப்பதும், அணுவின் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதும் ஒழுங்காற்றலாகிய அறிவாகிய இறையே.
    7) அத்வைதம் தெளிவாக விளங்கிவிடும். ஒன்றே எவ்வாறு பலவாறாக இருக்கின்றது, இருக்க முடியும் என்கின்ற சந்தேகமும் விளங்கிவிடும்.
    8) வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பது அறியப்படும்.
    9) கோடனு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு அப்பால் எல்லையில்லாத அளவிற்கு விரிந்து உள்ள வெளியே (அப்பாலுக்கு அப்பாலாய்) இறையே என அறியப்படும். அது அறிவாக இருப்பதால்அது வெளியாகத் தெரிகின்றது என்கின்ற விளக்கமும் கிடைக்கப் பெறும்.
    10) ‘பிரக்ஞானம் பிரம்மம்’ ‘ அகம் பிரம்மாஸ்மி’, ‘தத்துவமஸி‘ ‘அயம் ஆத்மா பிரம்மம்‘ என்கின்ற மகா வாக்கியங்கள் விளங்கும்.
    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அறிவாக உள்ள அரூபமான இறையை, மனிதன் அறிவைக் கொண்டுதான் உணர முடியும். அறிவைக் கொண்டு பேரறிவை அறியும் பேற்றினையே தமிழ் இலக்கியங்களில் வீடுபேறு எனப்படுகின்றது.
    வீட்டிற்கெல்லாம் வீடு அது. அந்த வீட்டினை அடைவது பேறாகக் கருதப்படுகின்றது. எனவே வீடு பேறு எனப்படுகின்றது.
    அறம் காத்து, பொருள் ஈட்டி, அளவு முறையோடு இன்பம் துய்த்து, வீடு பேற்றை அடைவதே மனிப்பிறவியின் நோக்கம் அல்லது பயன் என்கின்றது தமிழ் இலக்கியங்கள்.
    ஆறறிவாக வாழ்கின்ற மனிதர்களெல்லாம், அதற்கு ஏற்ப பொருத்தமாக, உண்மைப் பொருளுணா்தல் பேறு என்றும், அதுவே பிறவிப்பயனைப் பெறுவதாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அடுத்த ஞாயிறு (18-01-2015) அன்று ‘புகழ்’, ‘உயா் புகழ்‘ பற்றி சிந்திப்போம்.

    Loading