இன்றைய விருந்து

  • இறை அருள் பெற…….3 / ?

    வாழ்க மனித அறிவு                                                                              வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….3 / ?FFC  – 31

     02-12-2014

         நிறுவனங்களில் பல ஊழியா்கள் பணியாற்றுகிறார்கள்.   அவர்களில் ஒரு சிலருக்குப்   பிறருடைய புகழை தன்னுடையதாக்கிக் கொள்ளும் எண்ணம் எங்கிருந்து வந்தது?  பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்து வந்தது.  கொலை செய்வதுதான் விலங்கினப் பண்பு என்பது கிடையாது. பிறருக்குரியதைத் தான் அபகரிப்பது கூட பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்துதான் வந்துள்ளது,  மகரிஷி அவர்கள் காந்த தத்துவம் என்கின்ற நூலில், மனத்தூய்மை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியின் எட்டு வரிகளைில் முதல் மூன்று  வரிகளைக் கவனிப்போம்.

                                   மனத்தூய்மை

                 பொருள் புகழ் செல்வாக்கு புலன் இன்பம் நான்கிலே

                   புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்

                 இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்   என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

        பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவைகளைக் கவர்ந்து கொள்ளும் ஆசை பெருகியதற்கானக் காரணம் மனிதருக்குள் பிறவி தோறும் சேர்ந்து, சேர்ந்து மூட்டையாக வந்திருக்கின்ற சஞ்சித வினைகளாக வந்திருக்கும் விலங்கினப் பதிவுகளாகிய பறித்துண்டு வாழும் தன்மைதான் என்கிறார்.  ஆகவே  இறை அருள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை ஆராய்வோம்.

        

         பொதுவாக எதற்காக இறைவழிபாடு செய்யப்படுகின்றது? இறைவன் தனக்குத்  தேவையானவைகளைக் கொடுக்கிறான் என்பதற்காக, நன்றி உணர்வாக இறைவழிபாடு செய்யப்படுகின்றது.  இறைவனிடம் வேண்டுதல் வைத்து இறைவழிபாடு நடத்தப்படுகின்றது.  வேண்டுதல் நிறைவேறும்போது காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.  ஆனால் இணக்கத்துடன் கூடிய இறைவழிபாடு நடப்பதில்லை.  இணக்கத்துடன் என்றால் யாரிடம் இணக்கம் வேண்டும்?  இறையுடன் இணக்கம் வேண்டும்.   அன்பும் கருணையுமான இறையுடன் இணக்கம் என்பது மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும்  அன்பும் கருணையுமாக இருக்க வேண்டும்.  அன்பும் கருணையுமான முத்தொழில்களால் தானாகிய இறையே, மற்றும் மற்ற உயிர்களான இறையே  பயன் அடைவதால் அதுவேதான் பேரிறைக்கு(இறைக்கு) இணக்கமான வழிபாடாகும் என்பதனை சிந்தித்துப்பா்த்து செயல்படவேண்டும்.

          பக்திமான்கள்  இறையிடம்  அருளை வேண்டுகின்றனர்.  மற்றவர்கள்  அருளைத்தவிர மற்றவைகளை வேண்டுகின்றனா்?   அருள் என்றால் இறைவனின் கருணை என்று பொருள்.  கருணை என்றால்  சிலைவடிவிலே இறையை வணங்கும்  பக்திமான்கள் இறைவனின் நேரிடைத் தரிசனத்திற்காக இறை அருளை வேண்டுகின்றனா்.

            அருள் என்றால் உயிர்களுக்கு இரங்கும் பண்பு என்று பொருள்.  துன்பம் முதலியவற்றைத் தீர்க்க வல்ல இறைவனின் அருள் என்று பொருள். அருள் என்பது இறைவன் கருணையுடன் தருதல்.  எப்போது இறைவன் தருவான்?  ”செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்றிருக்கும் போது, மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவினைத் தருவான்.  செயல் இல்லாமல் விளைவு இல்லை. ஆகவே மனிதனின் நல்ல செயல்களுக்கு உடனேயும் அல்லது காலத்தாலும் விளைவைத் தருவான்.  இறையாகிய  பிற உயிர்களிடம் ஒருவன் அன்பும் கருணையுமில்லாத போது, இவனுக்கு எவ்வாறு இறையிடமிருந்து, இவனுடைய செயல்களுக்கான விளைவுகளாக அன்பும் கருணையும்(அருள்) வருவதற்கு  வாய்ப்பு  கிடைக்கும்?  .இங்கே மகரிஷி அவா்களின் வினாவினைக் கவனிப்போம்.

    சொல்லெங்கே?  செயலெங்கே?

               பல்லாயிரம் புழுக்கள்

                       பதைபதைக்க வதைத்தெடுத்தப்

                       பட்டு என்னும் பாப குறிப்பை உடுத்தி

               சொல்லாயிரம் கோர்த்துத்

                       துதிபாடி தெய்வத்தை

                       சொர்க்கலோகம் வேண்ட

                       சொல்லெங்கே?  செயலெங்கே?  என வினவுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

          எப்போது நல்ல செயல்கள் மனிதனிடமிருந்து வெளிப்படும்?  மனிதனின் அறிவு பரிணாமக் கசடுகளுடன் இருக்கும் வரை முழுவதுமாக நல்லசெயல்கள் வெளிவராது.  தங்கம் என்றால் எப்போதுமே பிரகாசிக்க  வேண்டும்.  சில நேரங்களில் பிரகாசிப்பது, சில நேரங்களில் மங்கலாக இருப்பது என்றிருக்காது. அதுபோல்   எப்போதும் மனிதனிடமிருந்து நல்ல செயல்கள் வெளிவரவேண்டும்.  இது இயலாத காரியம் என நினைத்தால்(practically/ideally impossible), தீய செயல்கள் செய்தால் தீய விளைவுகள் துன்பமாகவும் வரும்.  ஏற்கனவே ஊழின் காரணமாக துன்பங்களை அனுபவிப்பவா்களாவது இதனைக் கருத்தில் கொண்டு விழிப்போடு செயல்படுவார்களேயானால், அங்கே அவா்களுக்கு இறை அருள் வாயில் (ஞானம் பெறுவதற்கான) வாயில் திறந்து விட்டது என்று பொருள்.

        இறையே உயிரினங்களாகி பிறகு மனித அறிவாக வந்தபோது அதனுடன் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பரித்துண்ணல் என்கின்ற பரிணாமக் கசடு வந்து விட்டது. பின்னர் அது பல கசடுகளாக மாறியுள்ளது.  எனவே தான் ஸ்கந்த குரு கவசத்தில் அதனை இயற்றிய மகான் ”காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்” என அருளியுள்ளார்.  பரிணாமக் கசடுகளான தன்முனைப்பு, தான், தனது என்கின்ற மாயக்கருத்து, அதானல் உருவான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை. வஞ்சம் ஆகியக் கசடுகள் மனிதனிடம் உருவாகிவிட்டன.

        இதனால் பொய், களவு, சூது. கற்பழிப்பு, கொலை ஆகிய ஐந்து பழிச் செயல்கள் உருவாகிவிட்டன.  பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி புண்ணாகிவிட்ட மனம் எவ்வாறு இறை அருளைப் பெறமுடியும்? இறையையே தன்னுடைய அறிவாக மனிதன் வைத்துக் கொண்டு இறை அருள் இல்லாமலும், இறைக்காப்பு இல்லாமலும் ஏன் துன்பப்படவேண்டும்?  ஆகவே மனிதன் தன்னுடைய பரிணாமக்  கசடுகளை நீக்கி அறிவை முழுமைப்படுத்த வேண்டும்( to perfect the consciousness).  நாளைத் தொடர்வோம். …….

    Loading

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                                                                                      வளர்க மனித அறிவு

     

    28-11-2014

    வாழ்க வளமுடன். தவிர்க்க முடியாத காரணங்களால் 28-11-2014 லிருந்து 01-12-2014 வரை சந்திக்க

    இயலாமையைத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. பொருத்தருள்க. வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • இறை அருள் பெற……

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற……

    FFC – 30

    27-11-2014

     

    நேற்று பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவுடன் பரிணாமக் கசடு வந்து விட்டது என்று பார்த்தோம். இன்று அதிலிருந்து தொடர்வோம். பரிணாமக் கசடு என்றால் என்ன? பரிணாமக் கசடு வந்து விட்டது என்பது, விலங்கினப் பண்பும் மனிதனிடம் வந்துவிட்டது என்பதனைக் குறிக்கின்றது. விலங்கினப் பண்பு என்பது பிறர் வளம் பறித்துண்ணலாகும். புலி மானைக் கொன்று தின்பது பிறா் வளம் பறித்துண்பதாகும். பிறர் வளம் பறித்தலில், மூன்று கொடூரச் செயல்கள் நடக்கின்றன. அவையாவன,

    பிற உயிர் வாழும் சுதந்திரத்தை அழித்தல்

    பிற உயிரைச் சித்திரவதைச் செய்தல்,

    கொலைசெய்தல்,

    ஆகிய மூன்று செயல்கள் நடை பெறுகின்றன. விலங்கினத்தில் அது செயல்களாக் கருதப்படுகின்றன. ஆனால் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் மனிதனிடம் காணப்பட்டால் அது மூவகைக் குற்றங்களாகி விடுகின்றன.. புலி மானைக் கொன்று உணவாகக் கொள்வது இயற்கையால் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மனித அறிவிற்கு பிறா்வளம் பறித்தல் என்பது அநீதியானது. எனவே இவ்வகைக் குற்றம் புரிந்தவா்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. இருப்பினும் சட்டத்தின் கண்களுக்குத் தெரியாமலும் பிறர்வளம் பறித்தல் அடிப்படையாகக் கொண்டக் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்தவகைக் குற்றங்களாக இருந்தாலும் பெரும்பாலானக் குற்றங்கள் விலங்கினப் பண்பை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.
    புலி மானைக் கொள்ளும் நிகழ்ச்சியில் புலிக்கு மானின் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்கத் தெரியாது. ஒரு வேளைத் தெரிவதாக வைத்துக் கொண்டால் புலி மானைக் கொல்லாது. இது சாத்தியமில்லை புலிக்கு. புலி புல்லைத்தான் தின்ன வேண்டியிருக்கும். ஆகவே விலங்கினப் பண்பில் பிறா் உணர்வை தன்னுணர்வு போல் மதிக்கும் பண்பு கிடையாது. அந்த விலங்கினப் பண்பே மனிதனிடம் இன்னமும் அதாவது மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் மறைய வில்லை. மனிதனின் தரம் மனித அளவிற்கு உயரவில்லை. ஆகவேதான் முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டா். இரதாகிருஷ்ணனுக்கு ”இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை-Evolution is still not complete) என்கின்ற உண்மையை பதியவைக்க வேண்டிய அவசியம் வந்தது.
    புலி மானைக் கொன்று உணவாகக் கொள்கின்ற உதாரணத்தின் மூலம் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்பதனை விளக்கி, அந்த பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கசடாக உள்ளது என்பதால். ”எல்லா மனிதர்களும் அவ்வாறு பிறர் வளம் பறித்தலாகிய கொலை செய்வதில்லை, எனவே விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் உள்ளது என்பது சரியில்லை” என ஒரு சிலர் நினைக்கலாம்.
    குடும்பங்களிலேயேகூட பிறர்வளம் பறித்தலைக் காணமுடியும். மாமியார் மருமகளை தன்மகள் போல் பார்க்க வேண்டியவள் மருமகளை சொல்லால் கடிவது விலங்கினப் பண்பையேச் சாரும். எப்படி? விலங்கினப் பண்பில் உள்ள, பிறர் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிக்காமை மாமியாரிடமும் உள்ளது. அதாவது மாமியார் கடிவதால் மருமகள் துன்புறுவாளே என்பதனை தன்னுணர்வு போல் கருதாமை தான் காணப்படுகின்றது. தெரிந்திருந்தால் அன்பாகச் சொல்லியிருக்கலாம். இது மருமகளுக்கும் பொருந்தும். மருமகள் மாமியாரை தாய் போல் கருதுகின்ற பெருந்தன்மை இருக்க வேண்டும். இச்சூழலில் பிறக்கும் வருங்கால சமுதாயச் செல்வங்களான குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?
    நிறுவனத்தில் வேளலச் செய்பவர்களுக்கு பதவி உயா்வு அளிக்கும் போது, அந்த உயர் பதவிக்கானத் தகுதியும் திறமையும் உள்ளவர்தான் தோ்ந்தெடுக்கப்படுவார். எப்படி பதவி உயர்விற்கு அப்பதவிக்கான தகுதியும் திறமையும் அவசியமோ, அதுபோல் வாழ்க்கையில், மகளாக இருந்து மருமகளாக உயரும் போது அதற்கானத் நற்குணத் தகுதிகளையும், நற்குணத் திறமைகளையும் பெற்று குணவதியாக, மகளாக இருக்கும் போதே பெற்றிருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் துணை புரிய வேண்டும். அம்மாவாக இருந்து மாமியாராக உயர இருக்கும் குடும்பத்தலைவிக்கும், மகளாக இருந்து மருமகளாக உயர இருக்கும் பெண்ணிற்கும் ஆலோசனைக் கூறும் பயிற்சி (counselling course) தேவையாக உள்ளது. அந்தத் தேவையினை ஏற்கனவே மனவளக்கலைப் பூர்த்தி செய்து வருகின்றது என்றால் மிகையாகாது. மனிதனை மாண்புடையவனாக்கும் பயிற்சியான மனவளக்கலையை திருமணத்திற்கு முன்பே, அதாவது பதினைந்து வயதிலிருந்து பத்து வருடங்கள் முறைப்படிக் கற்றுப் பயிற்சியும் செய்து வந்தால் இது போன்ற குடும்பச் சிக்கல்கள் தீர்ந்து மாண்புடையக் குழந்தைகள் பிறக்க ஏதுவான சூழ்நிலை நிலவும்.

    . . . . .நாளைத் தொடர்வோம்

    Loading

  • இறை அருள் பெற …….

    வாழ்க மனித அறிவு                                                                                    வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற …….

    FFC – 29

    26-11-2014

    இறையே அறிவாக மனிதனிடம் உள்ளது. இறையையே மனிதன் தன்னிடம் வைத்துக் கொண்டு ஏன் துன்பத்துக்குள்ளாக வேண்டும்? .மனிதனின் செயலில் விளைவாக வருவது இறை என்கின்ற நியதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறையே மனிதனிடம் அறிவாக இருந்தாலும், மனிதனுடையச் செயலைப் பொருத்து விளைவுகள் துன்பமாக வரும். இறையே, முதல் மனுநீதிச் சோழன்.

    அறிவிற்கு விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் முன்னரே அதன் விளைவைக் கணித்து அச்செயலைச் செய்ய வேண்டும். ஏற்கனவே அச்செயலைச் செய்து அதன் விளைவை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அனுபவித்திருக்கலாம். மீண்டும் அச்செயலை செய்ய வேண்டிய சூழல் இப்போது வருமானால், ஏற்கனவே அச்செயலை செய்து அனுபவித்த அனுபவம் கவனத்திற்கு வந்து அச்செயலை செய்வதா செய்ய வேண்டாமா என்கின்ற முடிவை அந்த நொடியிலேயே அறிவு எடுக்க வேண்டும்(Quick insight of the mind). நுண்மாண் நுழைபுலன் (விரைந்துணர் அறிவாற்றல், அறிவின் தெளிவும் விரைவும் கூடிய தன்மை = perspicacity) வேண்டும். நுண்மாண் நுழைபுலன் மூன்று சொற்களை கொண்டது.
    1) நுண்: – நுண் என்றால் நுட்பம் அல்லது நுண்ணியது, கூர்மையானது என்று பொருள்.
    2) மாண்: – மாண் என்றால் மாண்புடையது என்று பொருள். அதாவது நுண்மாண் என்பது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்தன்மை எனலாம்.
    3) நுழைபுலன்: – நுழைபுலன் என்றால் ஊடுருவி அறியும் திறன்.

    தவறு செய்வது. நாணத்தை(வெட்கத்தை) ஏற்படுத்த வேண்டும். திருவள்ளுவர் மனிதனுக்கு இருக்க வேண்டிய உடைமைகளை(சொத்து, உரிமையடையது) வலியுறுத்திக் கூற வந்தவர் அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை, அறிவு உடைமை, அருள் உடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, பண்பு உடைமை, ஆகிய ஒன்பது உடைமைகளைக் கூறி கடைசியாக நாண் உடைமை என்கின்ற உடைமையையும் சோ்த்து பத்து அதிகாரங்களை ஏற்படுத்தியுள்ளார். மனிதனுக்கு இருக்க வேண்டிய மற்றவைகளைக் கூறிவிட்டு கடைசியாக நாணம் இருக்க வேண்டும் என்கிறார்.
    அப்போதுதான் மனிதன் முழுமை அடையமுடியும். எப்படி? தவறு செய்ய மாட்டான். ஆகவேதான் தவறுகளே செய்யாத சான்றோர்களுக்கு நாணம் என்பது அணிகலன் என்கிறார், நாணமுடைமையில்லை என்பதால்தான் குடும்பத்திலிருந்து சமுதாயம் வரைக் குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.. ஆகவே, வெட்கப்படவேண்டியிருக்கச் செய்கின்ற செயல்களாகிய தவறுகளைச் செய்யக் கூடாது,
    அந்த சான்றோன்மையாகிய பெருந்தன்மை இருந்தால், அறிவு எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நுணுகி ஊடுருவி அறிந்து முடிவு எடுக்கும். இதற்கு நினைவாற்றல் மிக மிகத் தேவை. அநேகர் நினைவாற்றல் குறைவுடையோர்களாக இருப்பதால் அவர்களுக்கு நுண்மாண் நுழைபுலன் என்கின்ற அறிவின் திறன் எவ்வாறு இருக்க முடியும்? அவா்களிடம் இறையே அறிவாக இருந்தும் என்ன பயன்? எவ்வாறு காப்பையும், இறையருளையும் பெறமுடியும்?
    ஆறாம் அறிவு அறியும் திறனுடையது. எனவே ஆறாம் அறிவு தன்னுடைய எல்லாத்திறன்களையும் அறிந்து பயிற்சி செய்ய வேண்டும். வெறும் புலன்வழி வாழ்க்கையையே முக்கியமாகக் கருதி வாழ்ந்தால், அதாவது வெறும் அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே மனிதனின் எண்ணம் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அறிவு தன்னுடைய முக்கியமான, தன்னிடம் மறைந்து இருக்கின்ற புதையலாக உள்ள திறன்களைப் பயன்படுத்த முடியாது. அதற்கு, புதையல்கள் என்னென்ன என்று தெரிந்து அவைகளைப் பயிற்சி செய்து பழைய பழக்கத்தை வென்று அறிவை முழுமைப் படுத்த வேண்டும். மனவளக்கலையின் நோக்கமே பேரறிவின் பின்னமாக மனித அறிவு இருந்தாலும் பரிணாமக் கசடுகளால் அது குறையுடையதாக இருப்பதால் அதனை முழுமையாக்கி முக்தி நிலையை அடையச்செய்வதாகும்.
    ”அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்,
    அறிவு முழுமை அது முக்தி.” என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவிற்கு பரிணாமக் கசடு வந்து விட்டது. (கசடு என்றால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் கழிவு). பரிணாமக் கசடுகள் என்றால் என்ன என்று நாளைய விருந்தில் பார்ப்போம். . . . . .நாளைத் தொடரும்
    வாழ்க அறிவுச் செல்வம்.                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்7/7

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள்7/7

    FFC  – 27

     நேற்றையத் தொடர்ச்சி

                          25-11-2014

    வறுமை ஏன் வருகின்றது?

                                                                        

                               கொடிது ! கொடிது ! வறுமை கொடிது !

                       அதனினும் கொடிது இளமையில் வறுமை? …….அவ்வையார்

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளளார்.

    தனியொருவனுக் குணவிலை யெனில்  ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறார் மகாகவி பாரதி மகான்

     

    நேற்று முன்றாவது வினாவான கடவுள் என்பவர் யார் என்று பார்த்தோம். இன்று வறுமை ஏன் வருகின்றது என்கின்ற வினாவிற்கானக் காரணத்தைப் பார்ப்போம்.

       மகரிஷி அவர்கள் பத்து வயதிலேயே வறுமையின் பிடியில் சிக்கியவர்.. சிறுவனாக இருந்தபோதே தறியில் உழைப்பார் மகரிஷி அவர்கள். ஒரு நாள் காலையிலிருந்து தறியில் வேலை செய்துவிட்டு வந்தவருக்கு நண்பகல் உணவாக கஞ்சிகூட பெற்றோர்களால் கொடுக்கமுடியாத வறுமை நிலையை அனுபவித்தவர். அவ்வையார் கூறியுள்ளது போல் இளமையில் வறுமை என்கின்ற மிகக் கொடிய நிலையை. அனுபவித்தவர்.

       ஏன் இளமையில் வருமை கொடியது என்கிறார் அவ்வையார்? இளமையில் பசியினைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் இளமை என்பது வளரும் பருவம். வளரும் நிலையிலேயே வறுமை இருந்தால் உடலளவில் எவ்வாறு வளர முடியும்? பிறகு குணத்திலேயும் வளர வேண்டியதுள்ளது. எனவேதான் அவ்வையார் இளமையில் வறுமை கொடியதிலும் கொடியது என்கிறார்.

       எதனையும் அதன் போக்கிலே விட்டுவிடாமல் ஏழ்மை ஏன் வருகின்றது என வினாவினைக் கேட்டார் மகரிஷி அவர்கள். இன்பம்,துன்பம் ஏன் வருகின்றன என வினாவினார். தன்குடும்ப வறுமையைப் போக்க. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்வதன் மூலம் போக்க முடியும் எனக்கண்டறிந்தார். அதுபோலவே வறுமையை ஒரு அளவிற்கு சமாளித்தார். வறுமை இருப்பினும் தன்னுடைய நான்கு வினாக்களுக்கான விடைகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியோடு இருந்து வந்தார்.

    தனக்குள்ள வறுமையை மட்டும் தீர்வு காணாமல், சமுதாயத்தில் உள்ள வறுமையையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்.   பொருள் வறுமை இல்லை, அறிவின் வறுமைதான் உள்ளது எனக் கண்டு பிடித்தார். பகிர்ந்துண்ணும் நிலைக்கு அறிவு நிலை பண்படாததை அறிவின் வறுமை என்கிறார்.  வறுமை என்கின்ற துன்ப அலை வீசும் போது மற்றவர்கள் எவ்வாறு நலமாக வாழ முடியும்?

     இயற்கை அன்னை ஒவ்வொரு உயிரையும் படைக்கும் முன்னரே அது வாழ்வதற்கான வளங்களை வைத்து விட்டுத்தான் படைக்கிறாள். ஏழ்மையில் சிலர் வாழ வேண்டும் என்றா படைத்திருப்பாள்? ஆகவே ஏழ்மை என்பது மனிதனால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. ஆகவே சமுதாயம் நினைத்தால் ஏழ்மையை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

       பொருளாதார ஏற்றத்தாழ்விற்குக் காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். பொருள்துறையில் சமநீதி தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

         ”பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி

           பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்

         சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த” வாழ்வு காண்போம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ,     ” உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்

           பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்” என்று உலகைத் தினந்தோறும் அவரது மாணவர்களையெல்லாம் வாழ்த்தச் செய்திருக்கிறார்.

    உலகநல வேட்பில்.

         மக்கள் உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும் ” என்கிறார்.

    சமூகச்சிக்கல்களுக்கான காரணங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் என்று கூறி தீர்வுகளைக் கூறியிருக்கிறார்.

         மனித வாழ்க்கை அறநெறியாக இருக்கவேண்டும் என்று எண்ணி., ஒழுக்கம். கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டது அறம் என்று, இது வரை துல்லியமாக வரையறுக்கப்படாத இருந்து வந்த அறத்தை வரையறுத்திருக்கிறார்.

         ”குலமுதலாய் பேதங்கள் கொள்ளும் நிலைமாற்றி

       பலரும் கூடி உழைத்துப் பங்கிட்டு வாழ்ந்திடுவோம்

       உலகில் பிறந்து விட்ட ஒவ்வொர் மனிதனுக்கும்

         நில உலகம் சொந்தமென்ற நீதிநிலை நாட்டிடுவோம்.”  ……. என்கிறார் மகரிஷி அவர்கள்.

       இந்த நான்கு வினாக்களும் தனிமனித மற்றும் சமுதாய நலனைக் கருதியதாகின்றன. இந்த வினாக்களுக்கான விடைகள் இன்றுள்ள சமுதாயத்தை உய்விக்கச் செய்யவல்லன.    ஏழு நாட்களாக மகானாக்கும் மகோன்னத வினாக்கள் என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.

       இந்த மகோன்னத வினாக்கள் வேதாத்திரிய சிறுவனை பின்னர் மகானாக்கியது என்பதால், அவரைப் பற்றி மட்டும் சிந்திப்பதற்காக ”மகானாக்கிய மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து சிந்தித்திருக்கலாம். ஆனால் மகானாகுதல் எனும் வாழ்வின் நிகழ்ச்சி முடிந்து விட்டதாகக் கருதாமல், மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்று தலைப்பை வைத்து மகானாகுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே மனித குலத்தில் அவசியமாகின்றது என வலியுறுத்தப்படுகின்றது..  

       இதனை எண்ணித்தான் மகரிஷி அவர்கள் “Vision”என்கின்ற ஆன்மீக கல்வி நிறுவனத்தை நிறுவி அதன்வழியாக யோகமும் மனித மாண்பும்” என்கின்ற கல்வியினை பள்ளியிலிருந்து பல்கலைக்கழங்கள் வரை கொண்டுசென்று மனிதர்களையெல்லாம் பண்பேற்றம் பெறுவதற்காக வழிவகைகள் செய்துள்ளார்.

       ஆகவே இந்த நான்கு வினாக்களுக்கும் விடைகள் தெரிந்து விட்டது இனிமேல் இந்த வினாக்களை எழுப்பி விடைகாண வேண்டிய அவசியம் இல்லை எனக்கருதவே முடியாது. இந்த நான்கு வினாக்களுக்கான விடைகள் சரியா, எவ்வாறு சரி, அறிவுபூர்வமாக உள்ளனவா என ஆராய வேண்டும். அவ்வாறு ஒவ்வொரும் ஆராய்ந்து சரி என ஒப்புதல் வழங்கும் போதுதான் வேதாத்திரியம் மேலும் மேலும் பூத்து காய்த்து கனிகளாகிப் பயன்படுவதற்கு மக்களின் ஆத்மார்த்த எண்ண ஆதரவு திரண்டு உலக மக்களால் ஏற்கப்பட்டு, பாரதியாரின் இளைய சகோதரரான மகரிஷி அவர்கள் கனவு கண்ட உலக சமாதானம் விரைவில் மலரும்.

         ” எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”

           என்றுரைத்தான் கண்ண பெருமான்;

         எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

           இந்தியா உலகிற் களிக்கும் ஆம்

         இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

           இந்தியா உலகிற் களிக்கும்”

    என்கின்ற பாரதி மகானின் சத்திய வாக்கினை, அவரது தம்பியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக நிஜமாக்குவதற்காக இயற்கை அன்னை, தன்னுடைய தன்மாற்றத்தில் உறுதியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அவளுடைய குழந்தைகளான நாம் துணை நிற்போம். பேரறிவில் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை மகான்களின் அறிவாற்றலும் இவ்வுலகத்தை உய்விக்கட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

                     இச்சிந்தனை இப்போதைக்கு முற்றிற்று.. ஆனாலும் இது பற்றிய சிந்தனை மேலும் உள்ளது.

    வாழ்க உலக சமாதானம். வருக உலக சமாதானம் விரைவில் என 

                                                         வாழ்த்துகிறோம்.

     

     

     

     

     

    Loading