இன்றைய விருந்து

  • 27-மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 6/7

     

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 6/7

    FFC  – 27

     

    நேற்றையத் தொடர்ச்சி

     

    24-11-2014

        

    இன்று மூன்றாவது வினாவான “இறைவன் என்பவர் யார்?” என்றும் ”அவர் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார்?” என்கின்ற வினாவினை சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். மகரிஷி அவர்கள், அவருடைய தந்தையார் பழக்கியபடி கடவுளிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார். கடவுள் இருக்கிறார் என்கின்ற நம்பிக்கை மகரிஷி அவர்களுக்கு இருந்தாலும், மற்றவர்களைப்போல் நம்பிக்கையோடு இருந்து விடாமல் அவருடைய உள்ளம் கடவுள் என்பவர் யார். என்கின்ற வினாவை சிறு வயதிலேயே எழுப்பிக் கொண்டிருந்தது,

    ஒரு சிலரைத் தவிர கடவுள் நம்பிக்கையுள்ள மற்றவர்களுக்கு நம்பிக்கையை உறுதி படுத்தாமலேயே, அதாவதுக் கடவுளைக் காணாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பக்தியிலேயே திளைத்து ஒரு சிலர் கடவுளைக் கண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. காட்டிற்குச் சென்றுக் கடுந்தவம் புரிந்ததன் பயனாக கடவுள் காட்சி கொடுத்தார் என்றும் ஆன்மீக வரலாறுகள் செப்புகின்றன. கடவுளைச் சிலை வடிவில் வணங்கி கடவுளைக் கண்டவர்கள் கடவுளை உருவகப்படுத்தி பாடல்கள் அருளியுள்ளனர், சித்தா்கள், மனதை ஒரு முகப்படுத்தி கடும் தவம் புரிந்து கடவுளைக் கண்டார்கள் எனவும் செய்திகள் உள்ளன. சித்தர்கள் கடவுள் நிலையை அரூபம் என்றனர்.

    பக்தியின் வழியாக கடவுளைத் தரிசித்தவர்களும் அல்லது அரூப வழிபாட்டில் கடவுளைத் உணர்ந்தவர்களும் வாழ்க்கையில் ஒழுக்கச் சீலர்களாக இருந்தனர் என்பது அவர்களது வாழ்க்கை வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதுதானே சமுதாயத்திற்கு அவசியம். அறவாழ்வு வாழ்ந்துள்ளனர். கடவுள் அன்பும் கருணையுமானவன் என்கின்றனர் இருதரப்பினருமே. இரு தரப்பினருமே கடவுள் நிலையைப் பற்றியும், மனிதன் எவ்வாறு அறவாழ்வு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி அறநூல்கள் எழுதியுள்ளனர், இருப்பினும் சாதாரண மனிதனுக்கும் விளங்குகின்ற அளவில் கடவுள் நிலைவிளக்கம் இல்லை.

    தந்தை யார்? தாய் யார்? என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிவதுபோல் கடவுள் யார்? என்கின்ற கடவுள் நிலை விளக்கம் இல்லை. கடவுள் நிலையைப்பற்றி குழப்பம் தான் உள்ளது. சமுதாயச் சிக்கல்களுக்கானப் பல காரணங்களில் ஒன்று கடவுள் நிலையைப் பற்றியக் குழப்பம். இதனை மகரிஷி அவர்கள் சமுதாயச் சிக்கல்களும் அதற்கானத் தீா்வுகளும் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    மெய்ஞானமும் விஞ்ஞானும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணமும் எழுந்து விட்டது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். முன்னவர் விரும்பினார். அதனையே பின்னவரான உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் மெய்ஞானமில்லாத விஞ்ஞானம் நொண்டி, விஞ்ஞானமில்லாத மெய்ஞானம் குருடு (Science without Religion is lame and religion without Science is blind) என்று கூறியுள்ளார். அடுத்த பின்னவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்துவிட்டார்.

    எல்லோரும் கடவுளைக் காண முடியவில்லை. நம்பிக்கையில்தான் கடவுள் வணங்கப்படுகிறார். அதுவும் இணக்கமில்லாத வணக்கம்தான் நடைபெறுகின்றது. மூட நம்பிக்கைகள் பெருகிவிட்டன. ஆகவே கடவுளை விஞ்ஞான ரீதியாக உறுதி படுத்த வேண்டும் என்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆதிமூலம் என்று கடவுளுக்குப் பெயா் வைத்திருந்தாலும் அதனை வைத்து கடவுள் ஏன் ஆதிமூலம் என அழைக்கப்படுகிறார் என்று கேள்வி கேட்டு கடவுள் நிலையை உறுதி படுத்தப்படுவதில்லை.

    கட+உள்=கடவுள் என்றும். இப்பிரபஞ்சத்தை (ஆட்சியின்றி என்பது கவனிக்கத்தக்கது) ஆண்டு கொண்டிருப்பதால் ஆண்டவன் என்றும், கடவுள் எங்கும் நீக்கமற இருக்கிறான் என்று கூறி, அதாவது இறைந்து கிடப்பதால் கடவுளுக்கு இறைவன் என்கின்ற பெயரும் உள்ளன. ஆனால் கடவுள் நிலை அறுதியிட்டுக் கூறப்படவில்லை. கடவுள் எல்லாவற்றையும் விட வலிமையானவன் அதாவது mightiier than all என்பதால் Almighty என்றும், G(generation)+O(opeation)+D(destruction)=GOD என்கின்ற உருவாக்கிய சொல்லாக கடவுளை ‘GOD’ என்றும் ஆங்கிலத்தில் கடவுளை அழைக்கின்றனர்.

    இந்த நிலையிலே கடவுள் என்பவர் யார் என்றும், அவர் ஏன் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவைினை அரூபமான இயற்கேயே / இறையே

    சிறுவர் வேதாத்திரியிடம் கேள்வியாக வந்து,

    அதுவே தன் நிலையை அப்பட்டமாக தெளிவாக விடையாகத் தந்து

    வேதாத்திரியை மகானாக்கி, மகாத்மாவாக்கி.

    அறிவினரைச் சேர்தல் மூன்றாம் இனிதாக அவ்வையார் கூறும் அறிவினராக்கி(குருவாக்கி),

    மனிதன்(துவைத நிலையில்) ஏற்படுத்திய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று குருவைப்பற்றிக்      கூறுவதற்கிணங்க தானே வேதாத்திரிய வடிவில் குருவாகி, உலகிற்கு அறிவொளியைத் தந்துள்ளது..   இதுதான் ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத விஞ்ஞானம்.

     

    சுருக்கமாக, இயற்கை வேதாத்திரியத்தின் வாயிலாக இறையைப்பற்றி்க் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

     

    வெட்டவெளியேத் தெய்வம்

    வெட்ட வெளியை பாழ்நிலை, அது ஒன்றுமில்லாதது என்று கூறப்பட்டு வந்ததற்கு, மாற்றாக, அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகிய நான்கு தரங்களை(quailties as adjectives)யும், அது மட்டுமல்லாது தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கின்ற மூன்று திறன்களையும் கொண்டுள்ளது என்கின்றது வேதாத்திரியம்.

     

    தெய்வம் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை. வெட்டவெளியே தெய்வம் என்கின்றபோது அது எப்படி படைக்கமுடியும்?. வெளியாகிய தெய்வமே தானே பிரபஞ்சமாக மாற்றம் அடைந்துள்ளது. தானே மாற்றம் அடைந்துள்ளதால் வேதாத்திரியம் அதனை தன்மாற்றம் (self transformation) என்கின்றது.

     

    மேலும் உருவமில்லாத வெட்டவெளி எவ்வாறு உருவமுள்ளதாக முடிந்தது என்பதனை விளக்குவதற்குக் காரணம் அதற்கு தன்னிருக்க ஆற்றல் (self compressive force)இருந்தது என்கின்றது வேதாத்திரியம்.

    அதற்கு மேலும் தனித்தனியே வெளியிலிருந்து துகளானது எவ்வாறு சுழற்சி பெற்று, எவ்வாறு அவைகள் ஒன்று கூடி தொகுப்பாகி விண்ணாகவும் மற்ற பஞ்ச பூதங்களாக முடிந்தது என்பதற்கு காரணமாக இருந்தது சூழ்ந்தழுத்தும் ஆற்றல் surrounding pressure force என்கின்றது வேதாத்திரியம். நேரமின்மையைக் கருதி சிந்தனையை வேதாத்திரியம் அருளியுள்ள ஒரு கவியுடன் இன்றையச் சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    வெட்டவெளியே பேராற்றல்(08-07-2001)

     

              வெட்டவெளி சக்தியென்பது இல்லை ஆனால்,

    வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?

    தொட. தொடப்பட்ட இருசீவர்களுக்குக் குள்ளே,

    தொட, தொட்டதாய் எண்ணும் அறிவு யாது? வெளிதான்!

    பட்டப்பகலில் வானில் விண்மீன் தோன்றா,

    பார்வை இல்லார்க்கு அவை எப்போதும் காணா

    எட்டவில்லை அறிவுக்கு என்றால் , அந்த

    இயற்கைத் தத்துவம்எங்கே ஒளிந்து கொள்ளும்?   அறிவோம்!

    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இவ்வளவு திட்டவட்டமாக, அறுதியிட்டு, தெளிவாக இதுவரை காணமுடியதிருந்த தெய்வத்தை கருத்தியலாக அறிந்து கொண்டு. அதனை அவரவர்களே செய்முறையாகவும் உணரச் செய்துள்ளது வேதாத்திரியம். இது காலத்தின் கட்டாயமும் அவசியமும். இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொண்டு நாளைக் கூடுவோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.  

                                                                            ……..நாளைத் தொடரும்.

     

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 5/?

     

     

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 5/?

    FFC  – 26

                                                                  நேற்றையத் தொடர்ச்சி

    23-11-2014

         இன்று உயிர் என்பது என்ன என்கின்ற இரண்டாவது வினாவினைச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். இது வரை உயிரைப் பற்றிய விளக்கம் விஞ்ஞானத்தில் இல்லை. ஆனால் உயிர் என்பது என்ன என்கின்ற வினா எழுந்து அதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு இயற்கை விளக்கம் அளித்துள்ளது. உயிர் கண்களுக்குத் தெரியாது. ஆனால் இருக்கின்றது. இல்லை என மறுக்க முடியாது. உயிர் இருப்பதை உணரலாம். அப்படியானால் உயிர் எவ்வாறு உள்ளது?

       இப்பிரபஞ்சத்தில் கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய, ஆனால் இருக்கின்ற பொருள் என்ன? பஞ்சபூத தன்மாற்றத்திற்குப் பிறகுதான் உயிர் தோன்றியுள்ளது. பஞ்சபூதங்களில் மிகச் சிறியதும் கண்களுக்குத் தெரியாததும் எது? விண் தான் பஞ்சபூதங்களில் கண்களுக்குத் தெரியாத ஒன்று. பஞ்சபூதங்கள் தோன்றிய பிறகு, பஞ்சபூதக் கலவைகளால்தான் உயிர்கள் தோன்றியுள்ளன. பஞ்ச பூதங்களிலிருந்துதான் உயிர் வந்துள்ளது என்கின்றபோது கண்களுக்குத் தெரியாத ஆனால் இருக்கின்ற விண்தான் உயிராக வந்துள்ளது.

       இப்போது உயிர் என்பது என்ன, அது எவ்வாறு உடலில் இயங்குகின்றது என்கின்ற வினா எழுந்ததால் இயற்கை அருளிய விடைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

    1)   இயற்கை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்குப் பஞ்சபூதங்கள் உருவான வரலாற்றினைத் தெரிவித்துள்ளது. பஞ்ச பூதங்கள் உற்பத்திப் பற்றியச் சிந்தனையில் மகரிஷி அவர்கள் ஈடுபட்டிருந்த போது, மகரிஷி அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை ”பஞ்சபூதப் பூங்காவிலே உலாவினேன்” என அவரைச் சொல்ல வைத்து இயற்கையும் மகிழ முடிந்தது.

    2)   உயிர் ஒரு மறை பொருளாக இதுவரை இருந்ததை, இப்போது விரும்பியவர்களுக்கு உணரச்செய்கின்றது.

     

    3)   மனமும் ஒரு மறைபொருளாக இருந்ததை இப்போது விளக்கப் பொருளாக மாற்றியுள்ளது. மகரிஷி அவர்கள் ஒரு முறை ஆங்கிலத்தில் மனம் என்கின்ற தலைப்பில் அருளுரை ஆற்றும்போது கூறியதை இப்போது நினைவு கொள்வோம். மகரிஷி. அவா்கள் கூறியதாவது: ”I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind.” இவ்வாறு அவர் கூறியது எவ்வளவு சரி என்று,   மனதைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளேக் கூறும்.

    4)   உயிர் இருக்கும் வரை தான் மனம் செயல்படுகின்றது. இதனை யாவருமே அறிவர். ஆகவே மனதிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு தான் என்ன? அந்த தொடர்பினை எளிய வாக்கியமாகிய “உயிரின் படர்க்கை நிலைதான் மனம்- The extended activity of life force is mind” என்பதன் மூலம் மிகத் தெளிவாக அறிய முடிகின்றதல்லவா? இதுவே மனதிற்கான எளிய வரையறையாக அமைந்து விட்டது. இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்ட மனதிற்கான வரையறை விளக்குவதற்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதப்பட்டுள்ளன மகரிஷி அவர்களால். இது மட்டுமா முடிந்தது இயற்கைக்கு? மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ளத் தொடர்பை,, சுத்த அத்வைத உண்மையை, முன்று வார்த்தைகளால் ஒரு வரையறையாகவே சொல்ல முடிந்துள்ளது. அது இதோ!

     

    5)   மனதின் மறு முனை தெய்வம்(The other end of mind is God) என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் மானசீக குருவான திருமூலர் அருளிய ”உள்ளம் பொருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற உண்மை இதன் மூலம் விளக்கப்பட்டுவிட்டது.

    6)   ஆன்மீக நூல்கள் ”நீ உடலல்ல, நீ ஆத்மாவே என்கின்றது..” ஆத்மா என்ன என்று தெரிந்தால்தானே ஆத்மாவாகிய நான் யார் என்றும் நான் எவ்வளவு சிறப்புடையவன் என்றும் விளங்கும். ஆகவே ஆத்மா என்ன என்றும், அது தெய்வீக நீதி மன்றம் என்றும் தெரிவித்துள்ளது. ”Fraction demands. Totality supplies.” என்பார்கள் மகரிஷி அவர்கள். பின்னமான வேதாத்திரிய சிறுவர் பன்னிரண்டு வயதிற்குள் எழுப்பிய வினாக்களுக்கு முழுமையாகிய இயற்கை/இறை (Totality) கொடுத்ததுதான் இவ்வளவு அறிவு பூர்வமான வேதாத்திரிய விளக்கங்களும்.

    இன்றைய விருந்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறோம். உண்மையில் இறைவனே குரு என்று ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பாயசமாக அருந்தி விருந்தினை முடித்துக் கொள்வோம்..

                              Guru Brahma Gurur Vishnu                                                    Guru Devo Maheshwaraha                                                     Guru Saakshat Para Brahma                                                     Tasmai Sree Gurave Namaha

    இவ்வாறு குருவைப்பற்றிக் கூறினாலும், அது, அந்த ஸ்லோகத்தை உருவாக்கியவரின் அனுபவமாகவேத்தான் இருந்து வருகின்றது. அதனால் பயன்பெற்றவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். இருப்பினும் மக்கள் தொகையோடு கணக்கிடும் போது அந்த எண்ணிக்கை என்பது விரல் விட்டு எண்ணும் அளவிலேதான் இருக்கின்றது என்பது வருத்தமாக உள்ளது.. ஆனால் வேதாத்திரியத்தின் பயனைப் மேலும் மேலும் பெற்று வரும் போது அந்த ஸ்லோகம் எவ்வளவு உண்மை என உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. இயற்கையே/இறையே வேதாத்திரி சிறுவரின் வாயிலாக நான்கு வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளாக தன்னுடைய சரித்திரத்தை எதுவும் விடுபடாமல் அப்பட்டமாகத் தெரிவித்ததுதான் வேதாத்திரியம்.

          தெய்வம் அரூபமானது என்றாலும் தெய்வம் மனிதர்கள் வடிவில் உருவமாக உலவுவதால், அந்த மனிதர்களில் யாரொருவர் ஐயமின்றி அகத்தை உணா்ந்தவா்களோ அவா்களும் தெய்வமும் ஒன்றே என்கின்றது திருவள்ளுவரின் வாக்கு. தெய்வம் அந்த மாமனிதர்கள் வழியாகத்தானே, மனிதசமுதாயத்திற்குச் சொல்ல முடியும். தெய்வத்திற்கு வடிவம் இல்லை என்பதால், சில நேரங்களில் தோன்றாத் துணைவனாகவும், சில நேரங்களில் தோன்றியத் துணைவனாகவும் செயல்படும். இதனை ஆறாம் அறிவு புரிந்து கொள்ளவில்லை எனில் சுத்த அத்வைதத்தை மறந்து விடுகிறோம் என்றுதான் பொருள்.

       மாமனிதர்கள் தானே அவ்வையார் கூறும் அறிவினர்கள். அவர்களைச் சோ்தலும், அவா்களைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே இனிதிலும் இனிதான முடிவான இனிதாக இருக்க முடியும். அறிவினருடன் எதற்காகச் சேர வேண்டும்? மனிதனுக்கான பண்பு மாற்றம் பெறுவதற்காகச் சேர வேண்டும். அவா்கள் கூறும் அறவுரைகளை மதித்து நடக்க வேண்டும். அப்போதுதான் அவ்வையார் கூறும் இனிதிலும் முடிவான இனிதை அனுபவிக்க முடியும்.

       அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த ஆன்ம செழிப்புறு இணைய தளம் சத்சங்கம்.   இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, எண்ணமே இயற்கையயின் சிகரமாக இருப்பதால் இணைய தள சத்சங்ம் மேலும் மேலும் வளர்ந்து சிறப்புற உங்கள் மேலான எண்ணங்களைத் தாருங்கள். சமுதாய அக்கறையில் அக்கறைக் கொள்வோம். வாழ்க வளமுடன்.

       நாளை கடவுள் என்பவர் யார் என்றும், எதற்காக அவர் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவிற்கான விடையைச் சுருக்கமாக நாளைப் பார்ப்போம்.

                                                                 நாளைத் தொடரும்.

     

     

     

     

     

     

    Loading

  • 25-மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 4/?

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

     

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 4/?FFC  – 25

     

    நேற்றைக்கு முந்திய நாள் தொடர்ச்சி

     

    22-11-2014

        மகரிஷி அவா்களின் உள்ளத்தில் எழுந்த மகோன்னத வினாக்களுக்கு இயற்கை அளித்த  விடைகளைப்பற்றி ஆராய்வோம். அவரது உள்ளம் பன்னிரண்டு வயதிற்குள் எப்போதும் எழுப்பிக்கொண்டயிருக்கத் தொடங்கிய வினாக்களை மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்வோம்.

    1)    இன்பம் துன்பம் என்பது என்ன? இவற்றின் ஆரம்பமும். இறுதியும் என்ன?

    2)    உயிர் என்பது என்ன? அதனுடைய இயக்கம் உடலில் எவ்வாறு நடக்கின்றது?

    புத்தருக்கு வினாக்கள் எழுந்தது போல், நோயும். முதுமையும் ஏன் வருகின்றன என்கின்ற வினாக்கள் எழுந்தன?

    3)    தெய்வம் என்பது யார்? அவர் ஏன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார்?

    4)    வறுமை ஏன் வருகின்றது? அதைப் போக்குவதற்கு வழி என்ன?

    அவரது முதல் வினாவிற்கு, இயற்கை அளித்த விடையினை இன்றைய விருந்திற்கு எடுத்துக் கொள்வோம்.

    இன்பம் துன்பம் என்பது என்ன?

       எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்போம்(life is to enjoy) .காரணம், இன்பம் மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு. மகிழ்ச்சியைத் தரும். ஆனால் துன்பம் என்பது இன்பம் என்கின்ற சொல்லின் எதிர்ச்சொல். எனவே துன்பம் என்பது மனதுக்கு மகிழ்வைத் தராத உணர்வு. மனதை வருந்தச் செய்யும் உணர்வு. இன்மை என்றால் இல்லாதிருக்கும் என்று பொருள். ஆகவே துன்பம் இன்மையை இன்பம் என்கிறோம்.

       எல்லோரும் இன்பத்தையே விரும்பினாலும் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து மூன்று வரை (1911+12=1923)எவருமே  இன்ப-துன்பம் ஏன், எவ்வாறு வருகின்றன என்கின்ற வினாவை எழுப்பியதில்லை. ஆனால் மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்குள் இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினா எழுந்துவிட்டது,

       இன்பம் துன்பம் என்பது என்பது பற்றி இப்போது சிந்தித்துப்போம்.   இன்பம், துன்பம் என்பது விளைவுகள். அதாவது இன்பம் துன்பம் என்பது செயல்கள் அல்ல. செயல் என்று ஒன்று இருந்தால் அதற்கு விளைவு நிச்சயம் உண்டு. அந்த விளைவின் தன்மை செயலைப் பொருத்து இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ இருக்கும். செயல் மனிதனுடையது. விளைவைத் தருவது இயற்கை அல்லது இறை. இது இயற்கை நீதி. விளைவு இல்லாது செயல் இல்லை. இது ஒரு விளக்கம் இன்ப துன்பத்தைப் பற்றி. இன்னொரு விளக்கம் இன்ப துன்பத்தின் விஞ்ஞானத்தைக் கூறுகின்றது.

       வேதங்களில் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றன. இதனை விளக்குவதற்காகக் கூறப்படும் உதாரணத்தைப் பார்ப்போம். நாய் தெருவில் உள்ள காய்ந்த எலும்பைக் கடிக்கும் போது, எலும்பு நாயின் ஈறைக்(gum of the teeth)குத்தி, ஈறிலிருந்து வரும் இரத்தத்தை காய்ந்த எலும்பிலிருந்து இரத்தம் வருவதாக நினைத்துச் சுவைக்கும்.. அது போல் மனிதன் இன்பம் புறப் பொருட்களில் உள்ளதாக நினைத்துக் கொண்டு புறப் பொருட்களை நோக்கி அலைகிறான், தேடுகிறான், சொந்தமாக்கிக் கொள்கிறான். அனுபவிக்க நாட்டம் கொள்கிறான்.

       ஆனால் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தது இறுதியில் துன்பமாகிவிடுவதனை அனுபவத்தில் பார்க்கிறோம். காரணம் என்ன என்று வினவவில்லை. வினவியிருந்தால், காரணம் அச்செயல் அளவுமீறியும், முறைமாறியும் இருப்பதால் துன்பம் வருகின்றது என்கின்ற விடை கிடைத்திருக்கும்.. இதில் சில மறைந்திருந்த உண்மைகள் வெளியாகின்றன. இயற்கையில் என்றும் எப்போதும் இருப்பது இன்பம் தான். இயற்கையில் துன்பம் இருக்குமேயானால் அது இயற்கையின் எதிர்மறைத்தன்மையாகிவிடுமே((negative aspect). இயற்கையில் குற்றம் இருக்க முடியுமா? இருக்கவே முடியாது. இயற்கையில் குற்றம் இருக்குமானால் அதனை மனிதன் எவ்வாறு சரி செய்யமுடியும்? முடியாது. இது ஏதோ இயற்கைக்காக வாதாடுவதில்லை. .

       இன்பம் துய்ப்பதில் அளவும். முறையும் காக்கப்படவேண்டும். மற்றொன்று புறப்பொருட்களைத் துய்க்கும் போது, தன் உடலில் உள்ள சீவகாந்த ஆற்றலே எழுச்சி பெற்று செலவாகும்போது, புலன் செல்கள் தாங்கும் வரை இருந்தால், அத்துய்த்தலில் இன்பம் இருக்கும். சீவகாந்தம் எழுச்சி பெற்று செலவாகுதல் புலன் செல்கள் தாங்கும் அளவினைக் கடந்து, பொருந்தா உணர்வு தான் துன்பம். முதலில் இன்பமாக இருந்தது பிறகு துன்பமாகிவிடுகின்றது. எனவே இன்பம் என்பது தனது சீவகாந்தமே செலவேதான்தான்   என்பதால், வேதங்கள் கூறும் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பது நிரூபணம் ஆகின்றது. இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினாவிற்குக் கிடைத்த உண்மைகள்:

    1)   செயலுக்கேற்ற விளைவு உண்டு என்றும், நல்ல செயலுக்கான விளைவு இன்பமாக இருக்கும் என்றும் தீய செயலுக்கான விளைவு துன்பமாக இருக்கும் என்கின்ற உண்மை இது வரை தெரிந்திருந்து அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது, இவ்வினாவிற்குகிடைத்த விடையால் செயல்விளைவுத் தத்துவமாக உறுதி படுத்தப்பட்டது

    .

    2)   புலன் வழி இன்பம் என்பது தன்சொந்த சீவகாந்தமே எழுச்சி பெற்று அந்த புலனின் செல்கள் தாங்கும் அளவு இருக்கும் வரை அது இன்பமாக உணரப்படும். தாங்கும் அளவை மீறும்போது செல்களின் பொருந்தா உணர்வு துன்பமாக உணரப்படும். இதுவரை மறைந்திருந்த உண்மை வெளியாகியது.

     

    3)   இன்பம் அனுபவிக்க ஒரு சாம்யம் உருவாகியுள்ளது. அது அளவு மீறவும் கூடாது, முறை மாறவும் கூடாது.

     

    4)   இன்பம் துன்பம் என்கின்ற அருட்கவி உருவாகிற்று அவ்வினாவிற்கு கிடைத்த விடையால்.

     

                                 இன்பம் துன்பம்

               ”இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

                எங்கிருந்து தோன்றுகின்ற தெனவராய்ந்தேன்

              இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

                  எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு

             இன்பத்தின் அளவுமுறை மாறும்போது

                  ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்

             இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்

                   இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.” ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     இத்துடன் இன்பம் துன்பம் பற்றியச் சிந்தனையை முடித்துக் கொள்வோம். நாளை உயிர் என்பது என்ன என்கின்ற வினாவிற்கு இயற்கை அளித்த விடையை சிந்திப்போம்.

                            , . . . . நாளைத் தொடரும்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                          வளர்க அறிவுச் செல்வம்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Loading

  • அறிவிற்கு விருந்திற்கு பதிலாக சிந்தனைப் பயிற்சி

    வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு

     

    21-11-2014

     

    வாழ்கவளமுடன்

    நேற்றையைத் தொடர்ச்சியினை நாளைத் தொடர்வோமே, இன்று அறிவிற்கு விருந்திற்குப் பதிலாக சிந்தனைப் பயிற்சிக்குள் செல்வோமே.

    வாழ்கவளமுடன்.

     

    *****

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள் – 3/?

    வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு

    FFC  – 24

    20-11-2014

         கடந்த இரண்டு நாட்களாக ”மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்கின்ற தலைப்பிலே அறிவிற்கான விருந்தை அருந்தி வருகிறோம்.   ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது. எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஏன். எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுப்பி அறிவுப் பூர்வமான விடைகளைப் பெற்று வாழ்க்கையை அவ்வாறு வாழ்ந்திட வேண்டும் எனப் பார்த்தோம்.  ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம், ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்றில்லாமல் மனித அறிவு வாழ்ந்ததற்கு அர்த்தம் இருக்க வேண்டும். எண்ணிலடங்கா முறைகள் இப் புவியில் வந்து போயிருந்தாலும்(பிறவிகள்) இந்த முறையாவது(பிறவியலாவது), வந்ததற்கான அடையாளம் பதிக்க வேண்டும்.

           குறைந்த பட்சம் முக்கிய நான்கு வினாக்களையாவதுக் கேட்டு விடைகளை அறிவுபூர்வமாகப் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பார்த்தோம். இன்று அந்த நான்கு வினாக்களும் மகானாக்கும் வினாக்கள்தானா, அவைகளுக்கான விடைகள் என்ன, அவ்வாறு அவ்வினாக்களைக் கேட்டு அறிவுபூர்வமாக விடைகளைப் பெற்று வாழ்ந்து யாராவது மகானாக ஆகியிருக்கிறார்களா என அறிய இருக்கிறோம்.

         இந்த நான்கு வினாக்கள்தான் வேதாத்திரி என்கின்ற சிறுவரை பின்னர் வேதாத்திரி மகானாக்கியது. இந்த நான்கு வினாக்களை பன்னிரண்டு வயதிற்குள் உள்ளம் எழுப்பிக் கொண்டேயிருக்கத் தொடங்கியது வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு. அவ்வினாக்களுக்கு மகரிஷி அவர்கள் கண்ட விடைகள்தான் வேதாத்திரியம் என்கின்ற பெயரில் ஆன்மீகத்தில் பாரிஜாத மரமாகி(கற்பனை), தேவலோகத்தில் விரும்பியதைத் தரும் பாரிஜாத மலர்களைப் பூக்க வைத்துக் கொண்டு, அதனுள் சுரக்கும் தேனை அருந்த உலகெங்கும் உள்ள அறிவுத் தேனீக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரை மொய்த்த வண்ணம் இருக்கின்றன.

         மகரிஷி அவர்களின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்பு வரைதான் என்றாலும், அவர் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்த படிப்பு ஏராளம், ஏராளம், ஏராளம். Though he did not study in any University in the world, He studied in the city of Universe in which the world is located. After his third standard study in school, His further study took place in the Universe, the Kingdom of Mother Nature). பிரபஞ்சக் கல்வியில் அவர் அடைந்த உன்னதத் தேர்ச்சியினை வைத்து, இயற்கை, பள்ளியில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை, யோகமும் மனித மாண்பும் என்கின்ற பாடமாக எடுத்துச் சென்றுள்ளது.

         சுருங்கச் சொல்வதென்றால் சிந்தனையாளர்களுக்கு ஆசான் இயற்கையே. எனவே இயற்கை–ஆசான் முற்றிலும் கீழ்படிதல் உள்ள மாணவருக்கு (implicit obedient studnt) தன்னுடைய, இதுவரைத் தெளிவாக அறியாதிருந்த இரகசியங்களையெல்லாம் தெளிவாக்கிவிட்டது, அவ்வாறு கருணையோடு மனித சமுதாயத்திற்கு வேதாத்திரி மகரிஷி வழியாகக் கொடுத்தது தான் வேதாத்திரியம்.

            இயற்கை எல்லோருக்கும் இவ்வாறாக ஆசானக இருக்கத் தயாராக இருக்கின்றது.. மனிதன் தான் தயாராக இல்லை. புலன்வழி வாழ்க்கையையே மேலானதாகவும், அதுவே வாழ்க்கையாகவும் நினைத்துக் கொண்டு மாயையில் வாழ்கிறான். உயிர் வாழ்வதற்கு, புலன் வழி வாழ்க்கை தேவை என்பதால், அதனை அளவுடனும், முறையுடனும் வாழ்ந்து கொண்டு, அறவோனாக வாழ்வதற்கு அறிவுவழி வாழ்க்கை வாழ வேண்டும். அறவோனாக வாழும் போதுதான் துன்பம் இராது. இருப்பினும் துன்பம் வந்தாலும்., வந்த துன்பத்தைப் போக்கவும், எதிர்கொள்ளத் துணிச்சலும் இருக்கும். மனதின் உணர்வுகளான நான்கு படிகளில் இறுதிப் படியான பேரின்பத்தை அடைய முடியும்.

          எவ்வாறு வாழ வேண்டும் எனத் தெரியாமல் இருந்த மனித குலத்திற்கு வாழ்வியல் கல்வியைத் தந்து அறவொளி வீசச் செய்துள்ள இந்த நான்கு வினாக்களை மகோன்னதக் கேள்விகள் என அழைக்கக் கூடாதா? மொழி மனிதனுடையக் கருத்துக்களைத் தெரிவிக்கின்ற ஊடகம்.   ஆன்மீகத்தில் மறை பொருட்களான இறை, உயிர். மனம், அறிவு ஆகியவைகளைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரவா்கள் உணா்ந்த அனுபவங்களின் மூலமாகத்தான் வாழ்க்கையோடு இணைத்துப் பொதுப்படையாக்கித் தெரிவிக்க வேண்டியுள்ளது. உணர்ந்தது உணர்ந்தவருக்குத் தெளிவாக இருந்தாலும், அதனை எளிமையாக்கி பிறர்க்குப் விளங்குமாறுத் தெரிவிப்பதற்கு மொழிவளம் அவசியம். ஆகவே ஆன்மீகக் கல்விக்கெனத் தனிமொழித் தேவை. அந்த மொழித் தேவையைப் பூர்த்தி செய்கின்றது வேதாத்திரிய ஆன்மீக மொழி. ஆன்மீக வரலாற்றில் வேதாத்திரியத்தின் தோற்றம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது இவ்வளவுச் சிறப்புகளை ஏற்படுத்தியது அந்த நான்கு வினாக்கள் தானே ! வேதாத்திரிய எண்ணப் பள்ளியில்(Vethahiri’s school of thoughts) ஆர்வமுள்ள மாணவனாக ஆறு மாதம் இருந்து வந்தாலே அம்மாணவர் இயற்கை அன்னையின் வரலாற்றையும், அதன் குழந்தைகளின் மனித சமுதாயம் உய்வதற்கான வழிகளையும் அறிந்து பிறர்க்கும் எடுத்துச் சொல்லும் அளவிற்கு அறிவு வளர்ச்சி பெறும் என்பது உறுதி.

         எனவே இந்நான்கு வினாக்களையும் மகோன்னத வினாக்கள் எனக் கூறி அறிவு மகிழக் கூடாதா? மகோன்னதம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டச் சொல்(coined word). உன்னதம் என்றாலே தன்மையில், பண்பில், இயல்பில் மிக உயர்வானது என்று பொருள். மேன்மையானது என்று பொருள். பயன்பாட்டில் மிகச்சிறந்தது என்றும் பொருள். மகா என்கின்ற சொல் சிறப்பு அல்லது கீர்த்திவாய்ந்த என்று பொருள். ஒன்றின் தன்மையை மிகுவித்துக் காட்டும் அடைமொழியான மகா என்னும் சொல்லை உன்னதமான என்கின்ற சொல்லுக்கு முன்னர் சோ்த்து ”மகோன்னதமான” எனப்படுகின்றது.

          மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்கு முன்னரே உள்ளத்தில் எழத் தொடங்கியது அந்நான்கு வினாக்கள்.   அந்த நான்கு வினாக்கள்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வேதாத்திரியக் குழந்தையை பின்னர் மகானாக்கியதால் அந்த நான்கு வினாக்களையும் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று போற்றிப் பேரானந்தம் அடைகிறோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். இதுவரை எந்த வினாக்கள் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று பார்த்தோம். நாளை அந்த மகோன்னத வினாக்களுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்த விடைகளைச் சுருக்கமாக நாளைய விருந்தாக அருந்துவோம். நாளைத் தொடரும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading