அயரா விழிப்புணர்வு – 6 / 7
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
அயரா விழிப்புணர்வு – 6 / 7
FFC – 39
21-12-2014—ஞாயிறு
(Constant Awareness)
அயரா விழிப்புணர்வின் மேன்மையினைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். சமையல் அறையில் பணிபுரிவது, மகிழுந்து ஓட்டுவது, புலன் இன்பத்தைத் துய்ப்பது ஆகியனவற்றில் எல்லாம் விழிப்புணர்வு தேவை என்று பார்த்தோம். கண்கள் விழித்திருக்கும் போது, அதாவது விழிப்பு நிலையிலேயே அயராத விழிப்பு நிலை தேவை என்று பார்த்தோம். இது உலகியல் வாழ்க்கை வாழ்வதற்கு மட்டும் தேவையானது போல் தெரியலாம். ஆன்மீக வாழ்விற்கென்று அயரா விழிப்பு நிலை பற்றி ஒன்றும் சொல்லாதது போல் இருக்கலாம்.
உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்றுத் தனித்தனியாகக் கிடையாது. ஆன்மா தன் பழிச்செயல்களைத் தூய்மை செய்து பிறவிப்பயனை எய்துவதற்காக இவ்வுலகில் பிறவி எடுத்துள்ளது. ஆகவே அயரா விழிப்புநிலை என்பது, அதன் இறுதியான பொருளில்(Ultimate sense) “மயக்கம் நீங்கி தன்னுடைய மூலநிலையை மறவாது இருத்தலேயாகும்.”
ஆன்மா தன் மூல நிலையை உணரும் போது என்ன உணரும்? அதனை இப்போதே வேதாத்திரியம் கருத்தியலாகக் கூறிவிட்டது. அதனை உறுதி படுத்த செய்முறையில் (தவத்தில்)வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் மனிதனின் பண்பேற்றம் முழுமையடைந்து நிரந்தரமாக நிலைக்கும். ஆகவே மனிதன் கருத்தியலாக பெற்ற இறைஞானத்தை நினைவில் கொண்டு பழகி வர வேண்டும். இறைஞானம் என்ன கூறுகின்றது?
எல்லாம் வல்ல ‘இறை’ என்கின்ற மெய்ப்பொருளே எழுச்சி பெற்று பிரஞ்சமாகி, அதில் இவ்வுலகமாக. உயிர்களாக தன்மாற்றத்தால் காட்சி அளிக்கின்றது. அந்தக் காட்சியில் இறையின் தன்மையான அறிவு வெளிப்படுகின்றது. சுத்தவெளி அணுவாக இயங்கி பஞ்சபூதங்களாகி, பிரபஞ்சமாகி உலகமாக, உயிர்களாக, உயிரின் அலையான மனமாக, ஐயறிவாக தன்மாற்றம் அடையும் வரை இறையின் தன்மை வெளிப்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஆனால் ஆறாம் அறிவாக மலர்ந்த போது இறையின் தன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
இறையுணர் ஆன்மீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்போதும் விழிப்பு நிலை கொண்டு பிறருக்குத் துன்பம் தராத செயல்களையே எக்கணமும் செய்து கொண்டிருக்கின்ற விழிப்பு நிலையே தான் மெய்ஞானம் ஆகும். இறையே நானாகவும், சமுதாயமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்றது இறைஞானம். இந்த நினைப்பை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அயரா விழிப்பினால்தான், அறிவுமுழுமையின் ஐந்து நலப் பேறுகளான நுண்மான நுழைபுலன், ஏற்புத்திறன், தக அமைதல், பெருந்தன்மை, ஆக்கத்திறன் ஆகியவைகளை அடையமுடியும். மேலும் ஐந்து பயன்களான இசைவு, நிறைவு, மகிழ்வு, மெய்யறிவு, அமைதி ஆகியவைகளும் பெறமுடியும். இந்த ஐந்து நலப் பேறுகள் மற்றும் பயன்களுக்கும், அயரா விழிப்புணர்விற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்று பயிற்சியாகச் சிந்தனை செய்து பார்க்கலாமே.
மனவளக்கலையின் ஐந்து நலப் பேறுகள் எப்போது கிட்டும்?
மனவளக்கலையின் வடிவமைப்பில் மூன்று நிலைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று செய்முறை பயிற்சிகள். இரண்டாவது நிலை மூன்று வளர் நிலைகள் உள்ளன. அதில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ள எண்ணம், சொல், செயலில் விழிப்புடன் இருத்தலுக்குப் பிறகு தான் ஐந்து நலப்பேறுகள் இடம் பெற்றுள்ளன. எனவே அயராவிழிப்பு நிலையை எட்டாது அறிவு ஐந்துநலப் பேறுகளையும் அடைய முடியாது. எனவேதான் அயரா விழிப்பு நிலை அறிவின் உச்சநிலையான ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள்.
1) நுண்மான் நுழை புலன்(Perspicacity)—– இதற்கு அயரா விழிப்பு நிலைத் தேவையில்லையா? இல்லையென்றால் நுண்மாண் நுழை புலன் என்கின்ற பேறு கிட்டுமா? இந்நிலை வேண்டாமா அன்றாட வாழ்க்கைக்கு? நுண்மாண் நுழை புலன், அயரா விழிப்புநிலை வேறு வேறா?
2) ஏற்புத்திறன்(Receptivity) —-அயரா விழிப்பு நிலை இல்லையெனில் ஏற்புத்திறன் எப்படி கிட்டும்?
3) தக அமைதல்(Adaptibilty) — அயரா விழிப்பு நிலை இல்லையெனில் தக அமைதல் எவ்வாறு கிட்டும்?
4) பெருந்தன்மை(Magnanimity—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் பெருந்தன்மை எவ்வாறு கிட்டும்?
5) ஆக்கத்திறன்(Creativity) —— அயரா விழிப்பு நிலை இல்லையெனில் ஆக்கத்திறன் எவ்வாறு கிட்டும்?
மனவளக் கலையின் ஐந்து நலப் பயன்கள் எவ்விதத்தில் கிட்டும்?
அயரா விழிப்பு நிலை எய்தி, ஐந்து நலப்பேறுகள் பெற்ற பின்னர்தான் ஐந்து பயன்களையும் பெற முடியும்.
1) இசைவு(Harmony)—– அயரா விழிப்பு நிலை இல்லையெனில் இசைவு எப்படி கிட்டும்?
2) நிறைவு (Satisfaction)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் நிறைவு எப்படி கிட்டும்?
3) மகிழ்வு(Happiness)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் மகிழ்வு எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே மகிழ்வு தானே!
4) மெய்யறிவுWisdom)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் மெய்யறிவு எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே அறிவின் இறுதியான உயர்ந்த நிலைதானே ! அறிவின் இறுதியான உயர்ந்த நிலையே மெய்யறிவுதானே!
5) அமைதி(Peace) —— அயரா விழிப்பு நிலை இல்லையெனில் அமைதி எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே அறிவின் இறுதியான உயர்ந்த நிலை என்கின்றபோது அதுதானே பூர்வீக நிலை. அதுதானே அமைதி நிலை !
குறிப்பு:- ஒவ்வொரு பேறு, பயன் ஆகியவற்றின் வரையறையை அயரா விழிப்பு நிலை வரையறையுடன் ஒத்துப் (Mapping) பார்த்து அயரா விழிப்பு நிலையின் தேவையை உணர்ந்து, அதன் மேன்மையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
”திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்று உறுதி அளித்த வள்லளார் தான் தன் பூதவுடலை விட்ட பின்னர் வேதாத்திரி மகரிஷியைத் தேர்ந்தெடுத்து, அவரது உடலில் பத்து வருடங்கள் தங்கி உலக மக்களை திருந்திட அஞ்சாமல் சொல்ல வேண்டியதை மகரிஷியின் வழியாக தெரிவித்து உலக மக்களைத் திருத்தி உய்யவைக்க திட்டமிட்டது இயற்கை என்பதனை நினைவு கூர்வோம். ஒருவருடைய அயரா விழிப்பு நிலையை, தானே, சரிபார்த்துக் கொள்ள ஒரு யுக்தியைக் கையாளலாம்.
அஃதாவது:
”காலையில் உறக்கத்திலிருந்து எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை யார் எங்கிருந்தாலும், எப்பணியில் ஈடுபட்டிருந்தாலும் ஒரு மணிக்கு ஒரு முறை ”நான் இந்த ஒரு மணிநேரமும் இறையினுடைய அருளுக்குப் பாத்திரமாக இருந்தேனா? ” என நம்மையே சோதித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அறிவு அயரா விழிப்பு நிலையிலேயே இருக்க பேருதவியாக இருக்கும். இறையருளுக்கு பாத்திரமாகுதல் வேறு, அயரா விழிப்பு நிலை வேறன்று. இரண்டுமே ஒன்றுதான்.
புதனன்று (24-12-2014) தொடர்வோம். வாழ்க வளமுடன்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.