March 2016

Monthly Archives

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 5/?

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    FFC – 172

    16-03-2016—புதன்.

    FFC-169-6-3-16-பகுத்துணர்வில்

     வாழ்க வளமுடன்!
    உலகநல வாழ்த்துப்பாவில் நான்காவது வாழ்த்து மந்திரமான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை ஆழ்ந்தும் விரிந்தும் கடந்த நான்கு சத்சங்கங்களில் சிந்தித்து வருகிறோம் ஆழ்ந்தும் விரிந்தும் சிந்தித்து வருவதால் வாழ்த்துக்கான நேரிடை பொருளுக்குள்(அர்த்தம்-meaning) செல்வதற்கு நான்கு சத்சங்கக் கூட்டம் தேவையாக இருந்தது. காரணம் அருட்பாக்கள், தெய்வீகத்தை வெளிப்படுத்துவதால், மற்ற பாக்களைவிட மிக மிக சிறப்புடையவை, செறிவுடையவை. எவ்வாறு அருட்பா தோன்றுகிறது என்று, அதனையும் ஒரு பாவின் வாயிலாகவே(ஞானக்களஞ்சியம்-பாடல் எண். 1227) நம்குருதேவர் மாமுனிவர் முழுமனிதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார். என்னே அவரின் அருள் நிலை! என்னே அவருடைய கவித்துவம்!!

    மனிதப் பிறவியின் சிறப்பறிந்து, உலகில் வாழ்ந்து, அறிவை அறிந்து, முடிவைக்கண்டவர்,
    தான் பெற்ற அனுபவத்தை,
    உலகத்தோர் அதனை சரியானபடி பயன்படுத்துவதற்கு,
    விரிந்த மனதால் ஆர்வம் கொண்டு,
    மழை பொழிந்து உலகத்தோர்க்கு உதவுவதுபோல்,
    வரிசையான வார்த்தைகளினால்,
    தான் ஆழ்ந்து விரிந்து சிந்தித்ததை சொல்வதற்காக
    மேன்மையுள்ள கவிகளாக வருகின்றன அருட்பாக்கள் என்கிறார் அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே அருட்கவிகளுக்குப் பொருள் சொல்ல வேண்டுமானால் உரைநடையில் அதற்கான விளக்கவரிகள் அதிகமாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற நான்கு வார்த்தைகளை உதித்தது ஒரே ஒரு நாளிலா?! பலநாட்கள், பல வாரங்கள், ஒரு சில அல்லது பல ஆண்டுகள் ஆழ்ந்து விரிந்து சிந்திக்கும்போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் திரண்டு வந்து க்ஷண நேரத்தில் உதித்து, துணை எண்ணங்களை எல்லாம் உள்ளடக்கிய சுருக்கப்பட்ட வரிகள்தான் அருட்கவி. அப்படிபட்ட அருட்பாவின் வரிதான் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதும்.

    அருட்பாவை கண்ணுறுபவர், வாசிப்பவர், மனனம் செய்பவர், உச்சாடனம் செய்பவர், அருட்பா அருளிய கவிஞரை நேரிடையாக பார்க்க பெரும்பாலும் வாய்ப்பு இருப்பதில்லை. ஆனால் சென்ற நூற்றாண்டில் அவதரித்த உலகத்தை உய்விக்க வந்த வேதாத்திரி மகரிஷி அவர்களை நேரிடையாக தரிசித்தவர்கள் அநேகர், அநேகர். லட்சோபலட்சம் மக்கள். அவருடைய பூதவுடல் சமாதியில் உறங்கிக்கொண்டிருப்பதால், அவரை நேரிடையாக பார்க்க முடியாததால், அம்மகானை நேரில் பார்த்தவர்களும், பார்க்காதவர்களும், அவருடைய சூக்கும உடலை(அறிவாற்றலை) இன்றும், அவர் விட்டுச்சென்ற அறநூல்கள் வழியாக அறிந்து மகிழலாம்.

    அருட்பாவை உச்சாடனம் செய்பவர், அருட்பாவை ஆழ்ந்த விரிந்த சிந்தனைக்கு உட்படுத்தும்போது, அருட்பாவை அருளியவற்கு உதவியாக இருந்த, எண்ணிய துணை எண்ணங்களை(Sub thoughts) எல்லாம் ஒன்றுகூட விடாமல் அறிந்துகொள்வதால், அவரைப்போன்றே அக்கருத்தில் ஆர்வம் மிகுந்து, அருட்பாவை உச்சாடனம் செய்யும்போது, அந்த மந்திரம் உருவேற்றப்பட்டு அம்மந்திரம் சக்தி பெற்று, சீக்கிரம் பலன்கள் கிடைக்கும். விஞ்ஞானப்படி பார்த்தால், மந்திரங்கள் உச்சாடனம் என்பதே எண்ண ஆற்றலைப் பரப்புவதே அல்லது சுயஆலோசனை (auto-suggesstion) தானே. (வான்காந்தத்திலும், ஜீவகாந்தத்திலும் நன்மை தரக்கூடிய மாற்றங்களை பெறுவதற்கே)

    எனவே  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வரிக்கு நேரிடையாக நான்கு வார்த்தைக்கு மட்டும் பொருள் சொல்லாமல், அவ்வரியில் உள்ள சொற்களுக்கு ‘வார்த்தை விளக்கம்’ காண்பது,

    சொல்லப்பட இருக்கின்ற பொருள் பற்றிய விளக்கம்,
    கேட்பவர்களை கேட்பதற்கு ஆயத்தப்படுத்தவும்,
    கேட்கின்ற உற்சாகத்தைத் தூண்டவும்,
    கேட்பவர்களுக்கு மிகத் தெளிவாக சென்றடையவும்,
    அடுத்த என்ன சொல்லப் போகிறார் பேசுபவர் என சரியாக யூகிக்கவும் பேருதவியாக இருக்கும்.

    அடுத்ததாக அவ்வாழ்த்தின் அவசியம் என்ன, அவ்வாழ்த்து எவ்வாறு, அதில் கூறும் பயனை நிறைவேற்றும் என்று சிந்தனையை விரித்தால்தான் அவ்வரிகளை அருளியவரே, அவ்வரிகளை உச்சாடனம் செய்வதால்/கூறிவருவதால் என்ன பயன் இருக்குமோ, அதே அளவிற்குச் சமமாக மற்றவர்களும் அவ்வாழ்த்தை உச்சாடனம் செய்யும்போது/கூறும்போது பலன் ஏற்படும். எனவே அதற்காகத்தான் ஆழ்ந்து விரிந்து சிந்திக்கிறோம்.

    சத்சங்கத்தில் எதனைச் சிந்தித்தாலும், நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அறிவின் சிறப்பை அறிந்து, அதனை பேரறிவின் நிலைக்கு/இறைநிலைக்கு உயர்த்தி பண்பேற்றத்தை பெறுவதற்காகத்தான். ஆகவே வரிசையாக இதுவரை நான்கு நாட்களாக ஒவ்வொரு நாளும் என்ன சிந்தித்தோம் என நினைவுபடுத்திக் கொண்டு நேரிடையாக பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற மந்திரத்துக்குள் செல்வோம்.

     table

        ஏற்கனவே இச்சிந்தனையின் முதல் நாளன்றே(02-03-2016—புதன்-FFC-168 Click here) பகுத்துணர்வு மற்றும் தொகுத்துணர்வு என்கின்ற சொற்களுக்கு வார்த்தை விளக்கத்தினை அறிந்துவிட்டோம். அதனை நினைவில் கொண்டு, இன்றைய சிந்தனையை நேரிடையாகவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதில் செலுத்துவோம்.

     ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்தில்,

    பண்பாட்டை உயர்த்தக் கூடியது தொகுத்துணர்வு என்று தெரிகின்றது.
     ஆனால் ‘தொகுத்துணர்வு’ என்று மட்டும் சொல்லாமல் ‘பகுத்துணர்வில்        தொகுத்துணர்வு’ என்பதால் இரண்டு வகையான உணர்வுகள் உள்ளது என்றாகின்றது.
     அதில் பகுத்துணர்வை விட தொகுத்துணர்வு மேலானது என்றும் தெரிகின்றது.
    அதே நேரத்தில் பகுத்துணர்வும் இல்லாமலும் இருக்க முடியாது என்றும் தெரிகின்றது.
     அதாவது பகுத்துணர்வை தவிர்க்காமலும் இருக்க முடியாது அறிவினால்.
     ஆனால் தொகுத்துணர்வுதான் மேலானதாக உள்ளது என்பதால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கிறார் மகரிஷி அவர்கள் என்று தெரியவருகின்றது.

    எனவே இரண்டு உணர்வுகளுக்குள்ள வித்தியாசத்தை அறிவது அவசியமாகின்றது.

    ஆகவே பொதுவாக ‘உணர்வு’ என்பது என்ன என்றும்,
     அது ஏன் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது என அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
    அவ்வாறு அறியும்போது
     பகுத்துணர்வும், தொகுத்துணர்வும் என்ன என்று தனித்தனியாக அறிவதோடு மட்டுமன்றி,
     பகுத்துணர்வையும், தொகுத்துணர்வையும் இணைத்து ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்றால் என்ன என்றும்,
     அது எவ்வாறு பண்பேற்றத்தைத் தர முடியும் என்பதனையும் அறியலாம்.

    உணர்வு என்றால் என்ன? – புலன் உணர்வு-ஐயுணர்வு, மெய் உணர்வு.

    அறிவு, உணர்ந்து கொள்வது உணர்வு. அறிவு புலன்களின் துணைகொண்டு உணர்ந்தால் அது புலன் உணர்வு எனப்படுகின்றது. புலன்கள் ஐந்து இருப்பதால் புலன் உணர்வை ஐயுணர்வு என்றும் கூறலாம்.
    அறிவு புலன்கள் வழியாக மட்டுமேதான் உணரமுடியும் என்றிருந்தால் அறிவு உணர்வதை, ‘புலன்’ என்கின்ற அடைமொழியைச் சேர்த்து ‘புலன் உணர்வு’ என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ‘உணர்வு’ என்றே சொல்லியிருக்கலாம். அறிவிற்கு வேறொரு உணர்வு உள்ளதால், அதிலிருந்து வித்தியாசப்படுத்துவதற்கு, புலன்கள் வழியாக உணர்வதை புலனுணர்வு, ஐயுணர்வு என்கிறோம்.

    ஆகவே அறிவு உணரும் கருவிகளாகிய புலன்களின் வழியாக உணர்வதோடு மட்டுமன்றி, வேறு வழியாகவும்/வகையாலும் உணரமுடியும் என்றாகின்றது. அது எவ்வாறு? உணரும் கருவிகள் புலன்கள். புலன்களில்லாமல் அறிவு உணரமுடியும் என்றால் அது எது? அந்த உணர்விற்கு என்ன பெயர்? அறிவு புலன்களில்லாமல் உணர்வதுதான் மெய்ப்பொருள். மெய்ப்பொருளுக்கு உருவமில்லை. அது அரூபம். ஆனால் அரூபம்தான் ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) காரணமாக உள்ளது என்பதனை நினைவில் கொண்டு ஆனந்தமடைய வேண்டும். அரூபமாகிய மெய்ப்பொருளை உணர்வது மெய்யுணர்வு. அறிவு மெய்ப்பொருளை உணர்வதற்கு புலன்கள் அவசியமே இல்லை.

    அறிவும் அரூபம். மெய்ப்பொருளும் அரூபம். அரூபத்தில் இரண்டிருக்க முடியாது. அப்படியானால் அரூபமாகிய மெய்ப்பொருளும், அரூபமாகிய அறிவும் ஒன்றே. எனவே அரூபம், அரூபத்தை, தானே உணர்ந்து கொள்ளும். அதாவது உணர்வதற்கு இன்னொரு ரூபமாகிய இடையீட்டுப்பொருளாக, சாதனமாக(medium) புலன் ஏதும் அவசியமில்லாமல் ஆகிவிடுகின்றது. எனவே அரூபத்தை உணர்வதற்கு புலன்கள் ஏதும் அவசியமில்லை.

    அறிவு, ரூபங்களையும்(உருவத்தோற்றங்ளையும்), அரூபா-ரூபங்களையும்(ஒலி. ஒளி, சுவை, மணம், அழுத்தம்) உணர்வதற்கு மட்டும் புலன்கள் அவசியம். அறிவு புலன்கள் இல்லாமல் உணர்வது எது என்கின்றபோது அறிவு தன்னையே உணர்வதாகும். அறிவு தன்னையே உணர்வதற்கு புலன்கள் எதற்காக அவசியம்? அவசியமே இல்லை. அறிவு தான் இருப்பதை உணர்வதற்கோ அல்லது ‘நான் இருக்கிறேன் — I exist) என்று சொல்வதற்கோ புலன் அவசியமில்லை.

    உணர்வு என்பது என்ன என்றும், அது இரண்டே இரண்டுதான், அது ஐயுணர்வு, மெய் உணர்வு என்றும் அறிந்தோம். அப்படி இருக்கும்போது உலக நல வாழ்த்தில் பகுத்துணர்வு. தொகுத்துணர்வு என்று இரண்டு புதிய உணர்வுகளாகச் சொல்லப்படுவது என்ன? ஐயுணர்வு, மெய்உணர்வு என்கின்ற இரண்டிற்கும், பகுத்துணர்வு, தொகுத்துணர்வு என்கின்ற இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு வேறா? அறிவது அறிவு என்றும், அது புலன்கள் வழியாக அறியும்போது அதனை ஐயுணர்வு என்கிறோம் புலன்களில்லாமல் அறிவு உணர்வது மெய் உணர்வு என்றும் தெளிவாக அறிந்துவிட்டோம். எனவே பகுத்துணர்வு, தொகுத்துணர்வு அறிவின் உணர்வுகளில் வேறு புதிதான உணர்வுகளாக இருக்க முடியாது. ஆகவே ஐயுணர்விற்கும், மெய்யுணர்விற்கும் ஆன மாற்று பெயர்கள்தான் பகுத்துணர்வு, மற்றும் தொகுத்துணர்வு. ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய்யுணர்வை தொகுத்துணர்வு என்றும் அழைக்கப்படுகின்றன இவ்வாழ்த்தில்.

    அப்படியானால் ‘ஐயுணர்வில் மெய்யுணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என வரிசைப்படுத்தி சொல்லியிருக்கலாமே மகரிஷி அவர்கள். அது கவிஞரின் உரிமையாகும். கவியில் வரிகள் இவ்வாறு அமைத்திருக்கலாமே என நாம் சொல்ல முடியாது. இது ஒரு பக்கம் இருந்தாலும், எதுவும் காரணமில்லாமல் நடக்காது என்பதால் ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் நம்முடைய குருதேவர் சொல்வதற்கானக் காரணம் அறிந்து, அவரது அறிவுக் கூர்மையையும், அறிவு விசாலத்தையும் நினைத்து, நினைத்து அவரை போற்றி போற்றி மகிழ்வோம்.

    இறையே வேதாத்திரி மகரிஷி வடிவில் வந்து உலக மக்களுக்கு கூறியுள்ளதுதான் திருவேதாத்திரியம். அரூபமான இறை எவ்வாறு உருவத்தில் வந்து சொல்ல முடியும்? ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவரே தெய்வத்துக்குச் சமம் என்று திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் வேதாத்திரி என்கின்ற மனித உருவில், பண்பட்டு உச்சத்தினை அடைந்த அவரது அறிவின்வாயிலாக பேரறிவே, இறையே சொன்னதுதான் அவ்வளவு வேதாத்திரிய எழுத்துக்களும். இப்படி சொல்வது அத்வைதம், இருப்பினும், வேதாத்திரிய அத்வைதம் சுத்த அத்வைதம்(Pure advaidic Science). வேதாத்திரியத்தை சுத்த அத்வைதம் என்று சொல்வதற்கான காரணங்களில் ஒன்று, ‘ஒன்றே பலவாகியது என்று சொல்வதனை’, ஒன்றே தன்மாற்றம்(self transformation) அடைந்துள்ளது என்று தைரியமாக, உறுதியாக, தெளிவாகச் சொல்வதே முதலாம் காரணமாகும்.

    ‘பகுத்தறிவில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற நேரிடையான விளக்கத்தனை இன்றே முடித்துக் கொள்ளலாம் என நினைத்துதான் சிந்தனையைத் தொடங்கினோம். ஆனால் அவ்விளக்கச் சிந்தனை இன்றோடு முடியவில்லை. காரணம் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற மந்திரம் 720 கோடி உலக மக்களையே வாழ்த்துகின்ற மந்திரமாவதால், அதற்கான பொருளை எப்படி ஒரு அறிவிற்கு விருந்திலேயே, 15-30 நிமிடங்களில் அறிந்து கொள்ள முடியும்?
    எனவே அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதற்கான நேரிடை விளக்கத்தை ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் நம்முடைய குருதேவர் சொல்வதற்கானக் காரணத்தை அறிந்து கொண்டு, அதற்கடுத்து வரும் இரண்டு அறிவிற்கு விருந்தில் முறையே மகான் மகா கவி பாரதியார் இது பற்றி என்ன கூறியிருக்கிறார் என்றும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ன கூறியிருக்கிறார் என தனித்தனியாக இரண்டு அறிவிற்கு விருந்தில் அறிய இருக்கிறோம்.
    மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. 28-03-2016 நம் குருதேவர் அவர்கள் பத்தாவது மகாசமாதி அடைந்த தினமாக இருப்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘தெளிவு’ என்கின்ற பொருள் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்திற்காக(20-03-2016 ஞாயிறு) சத்சங்கத்தில் கூடுவோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                          வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-159

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    14-03-2016 – திங்கள்.

    (அ) இறைவெளியில் ஒழுங்காற்றலாய் திகழ்வது எது?
    (ஆ) ஏன் அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது?
    (இ) அது மனிதனிடம் எவ்வாறு திகழ்கின்றது?
    (ஈ) ஒழுங்காற்றலாய் உள்ள அது, மனிதனிடம் எதுவாக இருக்கின்றதோ அது
    எவ்வாறிருக்க வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 4/?

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    FFC – 171
    13-03-2016—ஞாயிறு.

    FFC-171-மகரிஷி படம்without captionபகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும்,
    நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்,
    நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.
    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க வளமுடன்.

    உலகநல வாழ்த்தின் எட்டு வாழ்த்து-மந்திரங்களில் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை ஆழ்ந்தும், விரிந்தும் சிந்திக்க வேண்டி இருப்பதால் அதுபற்றி இன்று நான்காவது நாளாக சிந்திக்க இருக்கிறோம். இனி,

    இந்த வாழ்த்திற்கான அவசியம் என்ன என்று அறிய இருக்கிறோம்.

    விலங்கினத்திலிருந்து வந்த ஆதிமனிதனின் கருத்தொடர் வம்சாவளியாக வந்துள்ளதுதான் இன்றுள்ள மனிதகுலம். எனவே தற்போதைய மனித இனத்தின் பண்பாடு என்பது விலங்கினப்பண்பாட்டின் சுவட்டினைக்(trace-hereditary imprint) கொண்டுதான் உள்ளது.

    ‘சுவடு – trace’தானே என்று அலட்சியமாக இருந்து விடமுடியாது.

    ‘விலங்கினப்பண்பு’ என்பது விலங்கினத்திற்குள்ள குணத்தைக் குறிக்கின்ற சொல்லாகும். விலங்குகள் வெவ்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குணங்கள், திறமைகள் இருக்கின்றன. புலி, சிங்கம், சிறுத்தை, பாம்பு, கருடன், நரி இவ்வாறாக பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. எல்லாமே விலங்கினம்தான். இவை அத்தனைக்கும் தனித்தனி குணங்கள் இருந்தாலும், பொதுவான குணம் ஒன்று உண்டு. அந்த பொதுவான குணம் என்பது என்ன? ஒரு சில விலங்குகளைத்தவிர(உதாரணத்திற்கு பசு, மான்) மற்றவைகள் உணவிற்காக மற்ற உயிரினங்களைக் கொன்று உட்கொள்கின்றன. அந்த பொதுவான குணத்தைத்தான், பண்பைத்தான் விலங்கினத்தன்மை/விலங்கினப்பண்பு என்கிறோம். அந்த விலங்கினப்பண்பு, மனித இனத்திலும் சுவடாக இருப்பது பற்றித்தான் நாம் கவலை கொள்ள வேண்டியிருக்கின்றது.

    இந்த விலங்கிப்பண்புதான், விலங்கினத்திலிருந்து கருத்தொடராக வந்த மனித இனத்தில் சுவடுகளாக (trace-hereditary imprint) இருந்து கொண்டு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டு மனித இனம் மனிதத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் தடைசெய்து கொண்டிருக்கின்றது. அநேக நேரங்களில் மனிதம் வெளிப்படுத்தப்பட்டாலும், ஒரு சில நேரங்களில், சந்தர்ப்பம், சூழ்நிலை, இடம், நபரைப் பொருத்து வெளிப்படுத்தப்படும் விலங்கினப்பண்பால், ஏற்படுகின்ற மனிதம்—இழப்பால் அல்லது மனிதம்–குறைவால் தீமைகள் வருகின்றன. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்துவிட்டாலும் அக்குடத்தின் பால் முழுதும் விஷம் கலந்து உபயோகமற்றல்லவா போய்விடும்.

    ஆகவே ஒருசில நேரங்களில் மனிதன் விலங்கினப்பண்பை வெளிப்படுத்தாத நிலைதான் குறிப்பாக, இறை உணர்வு ஆன்மீகத்திற்குத் மிக மிகத் தேவை. ஆழ்ந்து விரிந்து, ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால்,

    சினங்கொள்வது பழக்கமாகி வழக்கமாகி விட்ட நிலையில்,
    மனித குலம் வாழ்ந்து வந்தாலும்,
    உண்மையை மறைக்காமல் உள்ளபடி,
    அப்படியே உண்மையையே சொல்வதென்றால்,
    சினம் மனிதனுக்கு அவசியமே இல்லை.

    எப்படி அவ்வாறு சொல்லமுடியும் என ஐயம் எழலாம். சினம் கொள்ளாமல் எப்படி மனிதன் இருக்க முடியும் என வினா எழுப்பலாம். சினம் மனிதனுக்கு அவசியமே இல்லை என்று சொன்னால் எந்த உயிரினத்திற்கு சினம் அவசியமாகின்றது? விலங்கினங்கள் சினம் கொள்கின்றன. ஏன்?

    ஒருவிலங்கு மற்றொரு விலங்கை துரத்திச் சென்று, கொன்று உணவாக உட்கொள்ள முயற்சிக்கும் போது, பாதிக்கப்படும் விலங்கினம், தான் வாழவேண்டும் என்கின்ற தன்னுடைய நியாயமான ஆசைக்கு, மற்றொரு வலிமையான விலங்கினம் தடையை ஏற்படுத்துவதால் கொல்லப்படவிருக்கின்ற விலங்கினத்திற்கு கொல்ல இருக்கின்ற விலங்கினத்தின் மீது சினம் வருவதற்கு நியாயம் இருக்கின்றது.

    துரத்திப்பிடித்துக் கொல்கின்ற வலிமையான விலங்கினத்தின் ஆசையான வலிமையற்ற விலங்கினத்தைக் கொன்று உண்ண வேண்டும் என்கின்ற ஆசைக்கு, கொல்லப்படவிருக்கின்ற விலங்கிடமிருந்தே தடை ஏற்படுவதால் அதற்கும் சினம் வருகின்றது.

    ஆனால் மனிதனுக்கு சினமே அவசியமில்லை. எப்படி?
    சினம் எப்போது எழுகின்றது?
    சினத்தின் விஞ்ஞானம் என்பது என்ன?
    ஆசைக்கு தடை ஏற்படும்போது சினம் எழுகின்றது.

    அப்படியானால் ஒரு மனிதனுக்கு சினம் வருகின்றது என்றால் அவனுடைய ஆசைக்கு மற்றொரு மனிதன் தடையை ஏற்படுத்துகிறான் என்றுதானே பொருள்?!
    எவ்வாறு ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் ஆசைக்கு தடையை ஏற்படுத்த முடியும்!
    அது அந்த மனிதனின் சுதந்திரத்தை அல்லவா பறிக்கின்றான்.
    இது எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்?
    இது இயற்கையின் நீதிக்கு முரணாகவல்லவா இருக்கின்றது!
    மேலும் ஒழுக்கத்திற்கும் முரணாகவல்லவா இருக்கின்றது!

    மகரிஷி அவர்களின் உலக சமாதானத்திட்டங்கள் அமுலாகி உலக அமைதியில் மனிதர்கள் வாழ்கின்ற நிலையில் மனிதனே விரும்பி சினம் கொள்வதாக இருந்தாலும். சினம் எழவே வாய்ப்பில்லை. கற்பனை செய்து அந்நிலைக்கு மானசீகமாக வரவேற்பு கொடுங்கள்.

    விலங்கினப்பண்பாட்டின் சுவடினால் மனிதனிடம் விலங்கினத்தின் தன்மை அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. உதாரணத்திற்கு சமையலறையில் பெருங்காயம் பாத்திரத்தில்(container) வைக்கப்பட்டுள்ளது. பெருங்காயம் தீர்ந்த பிறகும் பல நாட்கள் வரையில் அந்த காலிப்பாத்திரம் (container) பெருங்காயத்தின் வாசனையை வீசிக்கொண்டுதான் இருக்கும். அந்த காலி பெருங்காய container பாத்திரத்தில் வேறொரு புதிய பொருளை அடைத்து வைக்க வேண்டுமெனில் அந்த பெருங்காயப் பாத்திரத்தின் (டப்பாவின்) வாசனையை நீக்க அந்த பெட்டியை(container) நன்கு துலக்கி கழுவிய பிறகே அந்த பாத்திரத்தினுள்(டப்பாவினுள்) வேறோரு பொருளை அடைக்க முடியும்.

    அப்போதுதான் அந்த புதிய பொருள், பெருங்காய வாசனையின்றி புதிய பொருளின் தன்மையை பிரதிபலிக்கும். இல்லை எனில் பெருங்காய பெட்டியில் அடைக்கப்பட்ட புதிய பொருளும் தன்னுடைய வாசனையோடு பெருங்காய வாசனையும் சேர்த்தே வீசும். அந்த புதிய பொருளுக்கு பழைய பெருங்காய வாசனை ஒவ்வாததாக இருக்கும். அப்படியிருக்கும் போது அப்புதிய பொருளை உபயோகப்படுத்த முடியாமல் போகும்.

    அதேபோன்றுதான் பெருங்காயம் தீர்ந்துபோனாலும், காலி பெட்டி வாசனையை வீசிக்கொண்டிருப்பதுபோல், விலங்கினத்திலிருந்து வந்த பிறகு பல்லாயிரம் பிறவிகள் எடுத்தும், மனித இனம் விலங்கின வாசனையான விலங்கினப்பண்பை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

    விலங்கினப் பண்பு சுவடாகத்தானே உள்ளது என்று அலட்சியமாக இருந்து விடமுடியாது. விலங்கினப் பண்பு என்பதனை ‘பிறர் வளம் பறித்தல்’ எனலாம். எப்படி?

    ஒரு சில தவிர விலங்கினங்கள் பெரும்பாலானவை உணவிற்காக பிற உயிரினங்களை கொன்று உணவாகக் கொள்கின்றன. இந்த விலங்கினப்பண்பில் நான்கு வகையான கொடுஞ் செயல்களைக் காணமுடிகின்றது.

    1) சினம் கொள்ளுதல்(புலி மானை துரத்திப் பிடிக்கும் போது, மான் எளிதில் அகப்படாததால் புலி சினம் கொள்கின்றது. புலிமட்டும் சினங்கொள்ளவில்லை. மானும் தன்னுடைய கொம்பினால் முட்டி புலியை எதிர்கொள்ள முயற்சி செய்யும்போது சினத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால் பாவம் மானால் என்ன செய்ய முடியும்! பயனில்லாமல் போய்விடுகின்றது. இறையாகிவிடுகின்றது)

    2) பிற உயிரைப் பறித்தல்/உயிரைக் கொல்லுதல்.

    3) பிற உயிரைச் சித்திரவதை செய்வது(பிற உயிரைக் கொல்லும்போது சித்திரவதை செய்யப்படுகின்றது)

    4) அதன் வாழும் உரிமை பறிக்கப்படுகின்றது(பிற உயிரைக் கொல்வதால்).

    ஆதிமனிதனுக்குப் பிறகு, பல லட்சம் பிறவிகள் எடுத்த பிறகு இப்போது மனிதகுலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும், இன்னமும் விலங்கினப்பண்பின் சுவடு மனிதகுலத்தில் காணப்படுகின்றது.  இங்கே, 03-01-1959 அன்று ‘மனிதருள் உயர்ந்தோர்’ என்கின்ற தலைப்பில் மனிதகுலத்தின் நிலை ஐவகைகளாகக் காணப்படுவதை, அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கவியின் வழியாகக் கூறுவதனை நினைவு கூர்வோம்.

     மனிதருள் உயர்ந்தோர்

    மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

    மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

    மனமறிந்து மன இதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவன் முழுமனிதன்.

            . . . மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

       இக்கவியின் பொருள் தானாகவே விளக்கக் கூடடியதாக(Self explanatory) இருப்பதால் மேலும் விளக்கம் தேவையில்லை. எனினும் கவியின் முதல் வரி தெரிவிப்பது என்ன? மனித வடிவத்தில் உள்ள இரண்டு நிலைகளை ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார் மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். முதலில் சொல்லப்பட்டுள்ளது விலங்கு(மாக்களுண்டு) அடுத்ததாகத்தான் மனிதனைக் (மக்களுண்டு) குறிப்பிடுகிறார். எனவே மனிதனிடம் விலங்கினப்பண்பின் சுவடு இருப்பதால்தான் மனிதனென்ற உருவினிலே முதலில் தெரிவிப்பது விலங்கை. அடுத்ததாகத்தான் மனிதனைக் குறிப்பிடுகிறார்.

        சுவாமி விவேகானந்தரும் இதுபற்றி கூறுவதனைக் கவனிப்போம். மனிதன் என்பவன், விலங்கு, மனிதன், தெய்வம் ஆகிய மூன்றின் கலவையாக இருக்கிறான் என்கிறார்.

       எனவேதான் இயற்கையே/இறையே மனிதனாக தன்மாற்றமாகி இருந்தும் மனிதன் தெய்வீகத்தை வெளிப்படுத்த முடியாமல் அல்லலுறுகிறான்.   இயற்கைக்கும்/இறைக்கும் நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடைவதற்கு வாய்ப்பில்லை. வேறு வழியின்றி விலங்குகளாக தன்மாற்றம் அடைந்துதான் மனிதனாக தன்மாற்றம் அடைய முடிந்தது

         காரணம் பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளை உணர்வதற்காக, ஒன்று முதல் ஐந்து வரை ஐவகை உயிரினங்களாக தன்மாற்றம் அடைந்த பிறகேதான் மிகவும் சிறப்புடைய ‘ஆறாம் உணர்வான’ ‘இறை உணர்வு’ பெறக்கூடிய மனிதனாக தன்மாற்றம் அடைய முடிந்தது. இது இயற்கைக்கே/இறைக்கே உள்ள கட்டாய நிலை(constraint) என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

     

       மேலும் அன்பர்கள், அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப, மகரிஷி அவர்கள் பஞ்சபூதத்தை பற்றி ஆராய்ந்த போது “பஞ்சபூத பூங்காவிலே உலாவினேன்“ என்று கூறியுள்ளதுபோல் உயிரினப்பரிணாமத்தை ஆராய ‘உயிரினப் பரிணாமப் பூங்காவில்’ உலவி வந்து உயிரினப் பரிணாமத்தை மனக்கண்ணில் அறிந்து கொள்வார்களாக. அதற்கு நம்முடைய குருதேவர் அவர்கள் துணை செய்வார்களாக. இது பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ள இயற்கை/இறை வேறொரு சமயத்தில் சந்தர்பம் அளிக்குமாக.

        இன்னமும் விலங்கினப்பண்பின் சுவடு மனிதகுலத்தில் காணப்படுவதற்கான காரணத்தை ஆராயப்போனால்,

    விலங்கினப்பண்பை செயலற்றதாக்கக்கூடிய,
    முறையான,
    பொருத்தமான உளப்பயிற்சிகள்,
    ஒழுக்கப்பயிற்சிகள்
    ஏதும் முற்பிறவிகளில் நம்முன்னோர்கள் செய்யாததே காரணமாகத் தெரிகின்றது.
    எனவே தான் பலலட்சம் பிறவிகள் கடந்தும், இப்பிறவியிலும் விலங்கினப்பண்பாட்டின் ‘சுவடு – trace’ இருக்கின்றது.

    அந்த விலங்கினப்பண்பாட்டின் சுவடினால்தான்,
    சூழ்நிலை, சந்தர்ப்பம் வரும்போது மனிதன்
    விலங்கினப்பண்பாட்டின் சுவடின் ஆதிக்கத்தால்,
    சினம், வெறுப்பு, வஞ்சம் ஆகிய பல்வேறு குற்றங்களைச் செய்கிறான்.

    சினங் கொள்வது ஒரு குற்றமா என்று கூட ஐயம் எழலாம்.
    சினம் நீடித்தால் அது எவ்வாறாக வடிவமெடுக்கும்?
    சினத்தை இருப்பு கட்டிவருவதே வஞ்சம் எனப்படுகின்றது.

    ‘சினம் கொள்வது’ என்பது குற்றம் என specific law ஏதும் நேரிடையாக இல்லையாயினும், பல்வேறு வகையான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளை தண்டிக்க வெவ்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு அதன் கீழ் குற்றங்கள் செய்யும் மனிதன் தண்டிக்கப்படுகிறான்.

    அக்குற்றங்கள் வேறு பெயரால் அழைக்கப்படலாமே தவிர, அக்குற்றத்தின் அடிப்படை சினம், மற்றும் சினத்தை இருப்பு கட்டிய வஞ்சம் ஆகியவைகளாகத்தான் இருக்கும். பெரும்பாலும், மனிதனின் எல்லாவகை குற்றங்களும் இந்த விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்பதிலேயே அடங்கிவிடும். எனவே விலங்கினப்பண்பே சில நேரங்களில் சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றைப் பொருத்து பூதாகாரமாகவும் வெடிக்க காரணமாகின்றது மனிதனின் வாழ்வில்.

    விலங்கினத்திலிருந்து மனித இனம் வந்துள்ளதால், மனித மூளையில் ‘emotional area’ என ஒரு பகுதி உள்ளதால், மனிதன் அடிக்கடி உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு ஆளாகிறான் எனக்கூறப்படுகின்றது. பரிணாமத்தால் வந்துள்ள மூளையின் ‘emotional area’ வை செயலிழக்கச் செய்தே ஆக வேண்டிய காலகட்டத்தில் இன்று மனித குலம் இருக்கின்றது.

         அதனை செயலிழக்கச் செய்வதை அறிவிற்கான விளக்கம்(மெய்ஞ்ஞானம்) பெறச்செய்வதன் மூலமாகத்தான் முடியும். அறிவிற்கான விளக்கமாகிய ஒழுக்கவியல் என்கின்ற பாடமாக, பள்ளிக்கல்வியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களுடன், கட்டாயமாக்கி கொண்டுவருவதன் மூலமேதான் சாத்தியமாகும். அப்போது அறிவிற்கான விளக்கத்தை ஒவ்வொருவரும் பெறுவர்.

    இதுவரை ஆன்மீகம் எனத் தனியாக வளர்ந்து, அந்தப் பணியை செய்து கொண்டு வருகின்றது. ஆன்மீகம் என்பது மனித வாழ்வில் கட்டாயமாக இடம் பெறாததால், அது Optional ஆக இருப்பதால் மனிதப்பண்பில், விரும்பிய அளவிற்கு(to the desired extent) பயன் ஏற்படாதுபோகின்றது. உண்மையில் ஆன்மீகம் விஞ்ஞானத்தின் முக்கிய கிளையாக(First and primary Branch of Science namely Spiritual Science) திகழ்வதால், அதனைக் கல்வியில் இணைத்துவிட்டால் அப்போது அது அதன் பயனை விரைவில் மனிதகுலம் எளிதாகவும், விரைவிலும் பெற்றுவிடும்.

    எப்படி, விலங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியது, இயற்கைக்கு/இறைக்கு சடுதிமாற்றத்தால் சாத்தியமானதோ, அதுபோல் வளர்ந்து வரும் ஆன்மீகத்தில் திருப்பு முனையாகவும்(turning point), ஒரு மைல்கல்லாகவும்(mile stone), இயற்கையால்/இறையால் சடுதிமாற்றமாக அருளப்பட்டதுதான் திருவேதாத்திரியம் (Vethathriam is a sudden exposure to spirituallity).

    ஆகவே விலங்கினப்பண்பாட்டிலிருந்து மனிதஇனப் பண்பாட்டிற்கு உயரவேண்டும் என்பதற்காகத்தான் ‘பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற அந்த வாழ்த்து. அதற்கு வெறும் வாழ்த்து மட்டும் இருந்தால் போதாது. அதற்குக்காரணமான நிலையும் மாறினால் தான் இந்த வாழ்த்து செயலுக்கு வரும் என்பதால் ‘‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்” என்று இரண்டு வாழ்த்துக்களையும் இணைத்து ஒரே வாழ்த்து போல் அருளியுள்ளார். பண்பாடு உயர்வதற்கு பகுத்துணர்வில் தொகுத்துணர்வு வேண்டும் என்று வாழ்த்தச் சொல்கிறார். இன்றைய அறிவிற்கு விருந்தில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்திற்கான அவசியத்தை அறிந்தோம்.
    விலங்கினப்பண்பு—பிறர்வளம் பறித்தல் ஆகிய சுவடுகள் மனித வாழ்வில் எவ்வாறெல்லாம் வடிவமெடுக்கின்றன என்பது பற்றி வேறொரு சமயத்தில் இன்னும் விரிவாக அறியலாம். இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(16-03-2016–புதன்),
    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ பற்றியும்,
    அது வேதாத்திரிய இறை இயலின் சாராம்சம் என்றும்,
    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டை உயர்த்தும் எனவும் அறிய இருக்கிறோம்.

    அடுத்த சத்சங்கத்தில் சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்.

    Loading